துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

25.2.15

சிக்கிமை நோக்கி....-3[கொல்கத்தா]

  • சிக்கிமை நோக்கி-2 [கொல்கத்தா]இன் தொடர்ச்சி

  • கொல்கத்தாவின் அடையாளமாகக் கருதப்படும் விக்டோரியா [மெமோரியல்] நினைவகமான அருங்காட்சியகத்தில் மாலை 5 மணிக்கு மேல் அனுமதி இல்லையென்பதால் முதலில் அங்கே சென்றேன்.


புல்வெளிகளும் பூந்தோட்டங்களும் செயற்கை ஏரிகளுமாய்ப் பரந்து விரிந்து கிடக்கும் மிகப்பெரிய வளாகம். நடுவே தாஜ்மகாலை உருவாக்கிய அதே வகையான சலவைக்கல்லால் ஆன விக்டோரியா மெமோரியல் கட்டிடம். இந்தியாவின் வைசிராயாக இருந்த கர்சன் பிரபுவின் எண்ணத்தில் உருவானது. இந்திய அரசியாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த ராணி விக்டோரியாவின் மறைவுக்குப்பின் அவருக்காக எழுப்பப்பட்ட நினைவுச்சின்னம். இந்தோ - சாரசெனிக் பாணியில் பிரித்தானிய மொகலாயக்கட்டிடக்கலைகளின் கலவையாய் உருப்பெற்றிருக்கும் இந்த நினைவகம் ஓரளவு தாஜ்மகாலின் ஒரு சில கூறுகளைக்கொண்டிருந்தபோதும் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டுத்தான் இருக்கிறது.

சிங்க முகப்புத் தாங்கிய பெரிய நுழைவாயிலிலிருந்து நினைவகம் செல்லும்  நடைபாதையை மட்டும் விட்டு விட்டு இடைப்பட்ட  பிற இடங்களையெல்லாம் சிறிதும் பெரிதுமான கூழாங்கற்களால் நிரப்பி வைத்திருந்ததால்  குறுக்கு வழியில் விரைந்து செல்ல நினைத்தால் அதற்கு வாய்ப்பில்லை.


கட்டிடத்தின் முன் பகுதியில் விக்டோரியா அரசியின் உருவச்சிலை,உள்ளே உள்ள காட்சிக்கூடங்களில்,ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், கர்சன், ராபர்கிளைவ், வெல்லெஸ்லி ஆகியயோரின் மார்பளவுச்சிலைகள்,பிரிட்டிஷார் பயன்படுத்திய ஆயுதங்கள்,சில புத்தகங்கள் சுவடிகள் என வழக்கமான பாணியில் அமைந்திருந்த‌ அந்த அருங்காட்சியகம் என்னை அதிகம் சுவாரசியப்படுத்தவில்லை; ஓவியக்கூடத்திலிருந்த ஓவியங்கள் மட்டும் ஃப்ரான்சிலிருக்கும் லூவ் காட்சியகத்தை இலேசாகநினைவூட்டின.

கூம்பு வடிவ மேற்கூரை கொண்ட அந்தக்கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் மட்டுமே காட்சிக்கூடங்கள்; மிகுந்த பிரயாசையோடு அடுத்த தளத்துக்குச் செல்லும் படிகளில் ஏறிச்சென்றால் ஒரு வட்ட உப்பரிகைப்பாதையாகக் கீழே உள்ள காட்சிகளையும் மேல் விதானத்து வடிவங்களையும் கண்டு ரசிக்கலாம் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.


நினைவகத்தின் பலபகுதிகளில் பராமரிப்பு வேலை நடந்து கொண்டிருந்தது.


பிரிட்டிஷ் ஆட்சி முடிந்து இத்தனை காலமான பின்னும்  நகரின் மையப்பகுதியில் இட நெருக்கடி மிகுந்த பெருநகரில்....வீடில்லாத மக்கள் அதிகம் வாழும் கொல்கத்தாவில் அருங்காட்சியகம் நீங்கலாகப்பிற இடங்களைக்கூடப்பயன்பாட்டுக்குக் கொள்ளாமல் இத்தனை இடத்தை விட்டு வைத்திருப்பது ஏனென்பதுதான் தெரியவில்லை, அதிலும் தொடர்ச்சியாகப்பல ஆண்டுகள் ஆண்டிருப்பவை கம்யூனிச அரசாங்கங்கள்!

நினைவகத்தின் முன்னுள்ள விசாலமான பகுதி சுற்றுலா மையங்களுக்கே உரிய குப்பையும் அழுக்கும் மண்டியதாய்…….’சாட்’ ,ஐஸ்கிரீம் விற்பனைகளுடனும் வாடகைக்கு எடுக்கும் சாரட் வண்டி சவாரிகளுடனும் களை கட்டி இருந்தது. 

அலங்கார சாரட் வண்டிகள்



சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு காலச்சக்கரவர்த்தினியின் நினைவுச்சின்னப்பின்னணியில் அந்திச்சூரியன் முழுகி மறையும் காட்சியைப்பார்த்தபடி 

அடுத்த இடமான ஹௌரா பாலம் நோக்கி விரைந்தேன். 

கொல்கத்தாவின் அடுத்த அடையாளம், மிகப்  பிரம்மாண்டமான தாங்கு விட்டங்களைக்கொண்டிருப்பதும் அவ்வாறான பாலங்களில் உலகின் ஆறாவது நீண்ட பாலமாகக் கருதப்படுவதுமான ஹௌரா பாலம் .

ஹௌராநகரத்தையும் கொல்கத்தாவையும் இணைக்கும் இந்தப்பாலம் ஹூப்ளிஆற்றின் மீது அமைந்திருக்கிறது; 

உலகின் போக்குவரத்து மிகுந்த பாலங்களில் ஒன்றான இதை தினந்தோறும் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் வாகனங்களும் ஒன்றரை இலட்சம் பாதசாரிகளும் கடந்து செல்வதாகப் புள்ளிவிவரங்கள் கணிக்கின்றன.

மேற்கு வங்கத்தின் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றான ஹௌரா ரயில் நிலையம் இந்தப்பாலத்துக்கு மிக அருகிலேதான் இருக்கிறது; அதைக் கொல்கத்தாவுடன் இணைக்க உதவுவதால் ஒருவகையில் கொல்கத்தாவின் நுழைவாயிலாகவும் ஹௌரா பாலம் சுட்டப்படுகிறது.


நோபல்பரிசு பெற்ற வங்கப்பெருங்கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பெயரால் ’ரபீந்திர சேது’ {சேது என்றால் அணை} என்று ஹௌரா பாலத்தின் பெயர் அதிகார பூர்வமாக மாற்றப்பட்டு விட்டதென்றாலும் பெரும்பான்மை வழக்கில் பழைய பெயரே நிலைத்துப்போயிருக்கிறது.[விக்கிபீடியாவிலிருந்து நான் அறிந்து கொண்டிருந்த இந்தத் தகவலைக் கார் ஓட்டியாக மட்டுமல்லாமல் எனக்கு வழிகாட்டியாகவும் அமைந்து போன வந்த ராஜ்குமார் தாகுரும் சொல்லிக்கொண்டு வந்தார். அதே போல ஹூக்ளி ஆற்றின்மீது கட்டப்பட்டிருக்கும் அடுத்தடுத்த பாலங்கள் [ஈஸ்வர் சந்திர] வித்யாசாகர் சேது, விவேகானந்த சேது, நிவேதிதா சேது என்று பெயர் சூட்டப்பட்டிருக்கின்றன என்பதையும் அவர் சொல்லத் தவறவில்லை.

கொல்கத்தா காளியின் பூமி. 
மகாலட்சுமியின் உறைவிடமாய் மும்பை எண்ணப்படுவதைப்போல கொல்கத்தாவின் சகலஅடிப்படையும் துர்க்கை அன்னை வழிபாடுதான். தெருவோரங்களிலுள்ள நம்மூர் மரத்தடிகளில் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகளைப்போல அங்கே காளியின் சிறிய உருவங்களையே பரவலாகக்காண முடியும்.
சாலை மரத்தடிகளில் காளி

கொல்கத்தாவை சுற்றிப்பார்க்க வேண்டுமென்று நாம் சொன்னதுமே அங்குள்ளோர் நாவில் முதலில் எழுவது ’காளிகாட்’ எனப்படும் புராதனமான காளி கோயில்தான்.

நான் செல்ல வேண்டிய அடுத்த இலக்கும் அதுவாகத்தான் இருந்தது; திடீரென்று வங்கப்படைப்பாளி ஆஷாபூர்ணாதேவியின் கதையான 'ரீஃபில் தீர்ந்து போன பால்பேனா' என் மண்டைக்குள் ஏறிக்கொண்டது.
வீட்டிலிருக்கும் எல்லோரும் காலை முதல் காணவில்லையே என்று பரபரப்பாகத் தேடிக்கொண்டிருக்கும் மூதாட்டி ஒருவர் மாலையானதும் தக்ஷிணேஸ்வரம் சென்று வந்ததாகச் சொன்னபடி எந்தப்பதட்டமும் இல்லாமல் ரிக்‌ஷாவிலிருந்து இறங்குவார். முதுமையின் வெறுமை...பெண்ணின் தனிமை...முதிய பெண்ணின் வெறுமையும்,தனிமையும் என மூன்று அம்சங்களையும் முன் வைக்கும் அற்புதமான அந்தச்சிறுகதை 
[அதைப்பற்றி நான் எழுதியிருக்கும் தனிப்பதிவின் இணைப்பு-http://www.masusila.com/2009/10/blog-post_13.html ]

உள்ளூர் காளி கோயிலை விட்டு விட்டு தக்ஷிணேஸ்வரக்காளியை தரிசிக்கும் ஆசையை அந்தக்கதை என்னுள் கிளர்த்தி விட்டது. ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு அந்தக்காளியோடு உள்ள நெருக்கத்தைப்பற்றி அறிந்து வைத்திருந்ததாலும்  என் ஆவல் அதிகமாகிக்கொண்டே சென்றது.
என் விருப்பத்தைத் தட்டாமல் ஏற்றுக்கொண்டதோடு –சின்னதொரு மனக்கோணல் கூட இல்லாமல்- சந்து பொந்து நிரம்பிய பல குறுகலான தெருக்கள் வழியே வண்டியை ஓட்டிச்சென்றார் ஓட்டுநர் தாக்குர்.
தக்ஷிணேஸ்வரம் 

ஹூக்ளி ஆற்றின் கிழக்குக்கரையில் அமைந்திருக்கும் தக்ஷிணேஸ்வரத்தில் குடி கொண்டிருக்கும் காளி, பவதாரிணி [பிறவிப்பெருங்கடலிலிருந்து தன் பக்தர்களை விடுவிப்பவள்] என்னும் பெயர் கொண்டவள்; மனிதனின் காம குரோத லோப மோக மத மாச்சரிய அறுகுணத் தீங்குகளை அரிபவளைப் போலக் கையில் சூலம் ஏந்தியபடி, அக்குணங்களின் தூல வடிவமாய்க் கீழே கிடக்கும் மனித உருவத்தை சம்ஹாரம் செய்யும் தோற்றம் கொண்ட அம்மையின் உருவத்தைக்காணக்கண் கோடி வேண்டும்.
o

ஒருபுறத்தில் காளியின் சன்னதியையும் எதிர்ப்புறத்தில் ஆற்றை ஒட்டி 12 சிவ சன்னதிகளையும் கொண்டிருக்கும் தக்ஷிணேஸ்வரத்தில் சிவ லிங்கங்களை  அடுத்து வட மேற்கு மூலையில் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை ராமகிருஷ்ணர் செலவிட்ட சிறிய அறையும் அமைந்திருக்கிறது. சாமானியனான மனிதன் ஒருவன் தெய்விக சித்தி அடைந்த இடம் இது என ராமகிருஷ்ணரின் வாழிடம் குறிக்கப்பட்டிருந்தது.



சன்னதிகளுக்குப் பின்புறம் அமைதியாக ஓடிக்கொண்டிருந்த ஆற்றை இரவின் மோனத்தில் லயித்துப்  பார்த்தபடி அதற்குள் அரிதான பல ஆன்மீக வரலாற்றுத் தருணங்கள் பொதிந்திருக்கக்கூடும் என எண்ணியபடி நின்றிருந்தேன்… 

கொல்கத்தா நகரின் பெயர்க் காரணங்களில் முக்கியமான ஒன்று அது காளியின் நிலம் என்பது. தெற்கு கொல்கத்தாவின் நெருக்கடியான சூழலில் காளிகாட்டில் வீற்றிருக்கும் காளிகா தேவியின் வழிபாட்டையே வங்காள மக்கள் முதன்மையானதாக நினைக்கிறார்கள்.
                                           காளிகாட்

5ஆம் தேதிமாலை 4 மணிக்குக்கிளம்பிக் கொல்கத்தாவின் பல இடங்களையும் பார்த்துவிட்டு தக்ஷிணேஸ்வரமும் சென்றுவந்த பிறகு நேரம் இடம் தராததால் அன்று அந்தக்கோயிலுக்குச் செல்வதை ஒத்தி வைத்து விட்டு காங்க்டாக்கிலிருந்து திரும்பி வரும் வழியில் கொல்கத்தாவில் மீண்டும் தங்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தபடி உணவை முடித்துக்கொண்டு இரவு 8 மணி அளவில் விடுதி அறைக்குத் திரும்பினேன்.

பி கு

ஆனால்....காங்க்டாக் நிகழ்ச்சி முடிந்து 10ஆம் தேதி,கொல்கத்தாவிலிருந்து கோவை திரும்பும் முன் கிடைத்த மிகச்சிறு இடைவெளியில்‍ விமானநிலையம் சென்று சேர்ந்தாக வேண்டிய நெருக்கடியில் - கார் ஓட்டுநரும் தாமதம் செய்து பதட்டத்தை ஏற்படுத்திவிட்ட நிலையிலேதான் காளிகாட் செல்ல முடிந்தது.

தக்ஷிணேஸ்வரம் போலப்பெரிய ஆலயமாக இல்லையென்றாலும் கோயில் உள்ளூர்க் கோயில்  என்பதாலும்  செவ்வாய்க்கிழமை ஆகி விட்டதாலும் பயங்கரக்கூட்டநெரிசல்; 


பண்டாக்களின் சகாயமின்றி அம்மையின் கடைக்கண் பார்வைகிடைத்து நான் விமானம் ஏறுவது கடினம் என்று ஓட்டுநர் கூறிவிட,அவர் ஏற்பாடுசெய்து தந்த பண்டாவுடன் மின்னல் வேக தரிசனம் செய்து காளியின் அருட்பார்வையை அரை நொடி பெற்றேன்;  

காளிகா தேவி
அதற்குள் பண்டாக்களின் ஆதிக்கமும் காசு பறிப்பும் காசியில் பார்த்ததை விட மிகக் கொடுமையாக இருந்தது. பணப்பையே பறிபோய் விடுமோ என்ற அச்சம் கூட ஏற்பட்டு விட,ஒரு வழியாக ''அரை மொட்டை'' நிலையில் காருக்குள் ஏறினேன். காளி தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியை விட பூசாரிகள் உண்டாக்கிய பதற்றம் மட்டுமே சிறிது நேரம் நீடித்திருந்தது; அந்தக்கோயில்தானே அவர்களின் மூலதனம்..அதைச் சார்ந்து மட்டும்தானே அவர்களின் பிழைப்பு என்ற எண்ணம் உடனே எழுந்து விட,கொல்கத்தா அளித்த இனிய நினைவுகள் மட்டுமே என்னில் சேமிப்பாயின.
[சிக்கிமை நோக்கி....வளரும்..]

24.2.15

சிக்கிமை நோக்கி-2 [கொல்கத்தா]


சிக்கிமை நோக்கி-1 இன் தொடர்ச்சி


விக்டோரியா நினைவகத்தின் முன்பு
பயணம் என்றாலே மகிழ்ச்சியும் கிளர்ச்சியும் ஒருசேர அளிப்பதுதான்.
இம்முறை சிக்கிம் பயணத்தில் அது சற்றுக்கூடுதலாகவே இருந்தது;காரணம் என் மனதுக்கு மிகவும் அணுக்கமான இலக்கியம்,பயணம் என இரண்டும் ஒருசேரப்பொருந்தி- இலக்கியத்துக்கான பயணமாக இது அமைந்து விட்டதுதான்.

பொதுவாகப் பயணம் என்பது அதன் ஆயத்தத்துக்கான பரபரப்பையும் கொண்டிருக்கும்; ஆனால் இம்முறை இது சாகித்திய அகாதமி ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சி என்பதால் -போக,வர என இருவழிப்பயணங்களுக்குமான விமானச் சீட்டுக்கள்,இடையே கொல்கத்தாவில் இருமுறை இறங்கும்போதும் தங்குவதற்கான விருந்தினர் விடுதி குறித்த தகவல் எல்லாம் 10 நாட்களுக்கு முன்பே கச்சிதமாக வந்து சேர்ந்து விட்டதால் பெட்டி அடுக்குவதையும் இணையத்தில் சிக்கிம்-காங்டாக் பற்றிய தகவல் சேகரிப்பதும் என் கதையை இந்தியில் வழங்க ஒத்திகை பார்த்துக்கொள்வதையும்  தவிர வேறு முன்னேற்பாடு எதுவும் தேவையாக இல்லை.

பயணநாள் -ஃபிப்.5 காலை பத்து மணிக்கு கோவையிலிருந்து கொல்கத்தா செல்லும் விமானம். 8 மணிக்கே விமானநிலையம் வந்து சேர்ந்து விட்டதாலும், கூட்டம் அதிகம் இல்லாததாலும் பயணச்சோதனை பிறசோதனை அனைத்தும் முடிந்து 8 30க்கே  இலகுவாகி விட்ட நான் சும்மா வலம் வந்து கொண்டிருந்தேன்; சிற்றுண்டி வழங்காத [தண்ணீரும் கூடத்தான்!!] கருமி விமான சேவையில் செல்வதால் நான் கொண்டு வந்திருந்த சிற்றுண்டி[இட்டலிப்பொட்டலம்]கொஞ்சம் கொஞ்சமாய்க் காலியாகிக் கொண்டிருந்தது.

காலை 10 மணிக்குச்சரியாகக்கிளம்பி விட்ட அந்த இண்டிகோ விமானம், 10 45க்குச் சென்னையை அடைந்து அங்கே இறக்குமதி,ஏற்றுமதி செய்தபின் 11 15க்குக்கிளம்பி மதியம் 1 45 மணிக்குக் கொல்கத்தாவின் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பன்னாட்டு விமான நிலையத்தில் தரை இறங்கியது.
இந்தியாவின் வடபகுதிகளில் பலமுறை விரிவான பயணங்கள் பலவற்றை மேற்கொண்டிருந்தாலும் வடகிழக்குப்பகுதிக்கு நான் செல்வது இதுவே முதல் முறை.

மேற்கு வங்கம் செல்வதும் முதல் முறைதான்.
கொல்கத்தாவில் கால் பதித்தபோது அதன் கலை,இலக்கிய,ஆன்மீக, மற்றும் நாட்டுவிடுதலைப்போராட்டப்பங்களிப்புக்கள்  ஒவ்வொன்றாய் நினைவில் எழுந்து உடலுக்குள் ஒரு சிலிர்ப்பு ஓடியது.

இது ரவீந்திர நாத் தாகூரின் .....சரத் சந்திரரின் ...ஆஷாபூர்ணாதேவியின் மஹாஸ்வேதா தேவியின் மண்.

அரவிந்தரும் இராமகிருஷ்ண பரமஹம்சரும் விவேகானந்தரும் நிவேதிதாவும் ஆன்மீகப்புரட்சி நிகழ்த்திய நிலம்.

சத்யஜித்ரேயும்..மிருணாள்சென்னும் முத்திரை பதித்த பூமி.

அன்னைதெரசாவின் அன்பில் நனைந்த ஊர்.

கலவையான இந்த உணர்வுகள் தந்த பரவசத்தோடு எனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சௌத்ரி விருந்தினர் விடுதி நோக்கி வாடகைக்காரில் விரைந்து கொண்டிருந்தேன்.

விமானநிலையப் பகுதியிலிருந்து கொல்கத்தாவின் மையப்பகுதிக்கு வந்து சேர்வது வரை வழக்கமான பெருநகர விரிவாக்கம்தான்....
நவீன கட்டிடடங்கள்,அடுக்குமாடிக்குடியிருப்புக்கள்,கணினித் தொழிற்கூடங்கள்.

தொன்மையான உள்நகரத்துக்கு வந்ததும் காட்சிகள் மாறத் தொடங்கின.
எந்த ஒரு மாநகரத்திலும் பெருநகரத்திலும் முதன்மையான பெரிய தெருக்களில் அதிகம் பார்க்க முடியாத ஒருகாட்சி அது.

ஒன்றோடொன்றுஒட்டிக்கொண்டிருக்கும் கடைகள்,வணிக வளாகங்கள், வீடுகள் என எதுவானாலும் அவற்றுக்கு இடையே இடைச்செருகல் போலத் தலையை நீட்டியபடி காரை பூச்சு எல்லாம் உதிர்ந்து சில பாகங்களும்கூட சிதிலமடைந்து இடிந்து விழுவதற்குத் தயார் நிலையில் இருப்பது போலப் பயமுறுத்தும் கரிப்புகை அப்பியிருக்கும் மிகப்பழைய கட்டிடங்கள்.


கீழே நவீனம்
மேலே!?
இங்கே புகைப்படத்திலிருக்கும் கட்டிடங்களிலாவது மரங்கள் ஒட்டி உரசிக்கொண்டு நிற்பதைத்தான் பார்க்க முடிகிறது. உள்ளிருந்து மரங்களே முளைத்து வரும் கட்டிடங்களைக்கூட சென்னை அண்ணாசாலை போன்ற பிரதானமான மைய வீதிகளிலும் கூட  வெகு சாதாரணமாகப்பார்க்க முடியும். நான் காங்க்டாக் செல்லும்போது வழியில் என்னோடு உடன் பயணம் செய்த கொல்கத்தாவைச்சேர்ந்த எழுத்தாளர் ஒருவரிடம் இந்தக்கட்டிடங்கள் ஏன் புதுப்பிக்கப்படாமலும் அகற்றப்படாமலும் இருகின்றன என்று கேட்டபோது’கொல்கத்தா 300,350 ஆண்டு பழமையானநகரம்;அந்தப் பழமையைப்பேணுவதற்காக அவற்றை அப்படியே விட்டு வைத்திருக்கலாம்’’என்றார் அவர்.
ஆனால்..எனக்கென்னவோ குறிப்பிட்ட இந்தக்கட்டிடங்களைப்பொறுத்தவரை அவரது கூற்றுபொருத்தமானதாகப்படவில்லை. சரி..

மேடம் மம்தாதான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்!


கொல்கத்தாவில் அகற்றப்படாமல் ஆங்காங்கே குவிந்து கிடக்கும் குப்பை கூளங்கள் கொல்கத்தாவின் புகழை மாசுபடுத்தும் அடுத்த முக்கியமான அம்சம்; உ பி மாநிலப்பயணங்களில் காசி,மதுரா,விருந்தாவன் எனப் புகழ்பெற்ற புண்ணியத் தலங்களும் கூடக் குப்பை மண்டிக் கிடக்கும் காட்சியைக்கண்டிருக்கிறேன் என்றபோதும் கொல்கத்தா போன்ற ஒரு பெருநகரின் இதயம் போன்ற இடங்களையும் கூட இத்தனை மோசமாக விட்டு வைத்திருக்கும் அவலம் நெஞ்சை நெருடியது. பெருமைக்காக இல்லையென்றாலும் தமிழ்நாட்டின் ஒரு சிற்றூர் அல்லது ஒரு சிறுநகரத்தைக்கூட இத்தனை மோசமான குப்பைக்கிடங்காகக்காண முடியாது என்பதென்னவோ உண்மைதான்.

இது ஒரு பக்கம் என்றால் மற்றொரு புறம் அரசு மற்றும் தனியார் துறைகளால் வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப்பலகைகள் ‘இது தாகூரின் நிவேதிதாவின் சரத் சந்திரரின் ஊர்.இதைச்சுத்தமாய் வையுங்கள்’என அறைகூவிக்கொண்டிருந்தது வேடிக்கைக்காகக்கிச்சு கிச்சு மூட்டுவதைப்போலிருந்தது.





முதன்மையான தெருக்களின் நிலையே இப்பாடி என்றால் அதிலிருந்து கிளை பிரியும் தெருக்கள்,சந்துகள்,சேரிகள் இவற்றின் நிலை பற்றிச்சொல்லாமலே தெரிந்து கொள்ளலாம்.அந்த இடங்களில்புழுப்போல நெளியும் மனிதர்களைப்பார்க்கப்பொறுக்காமல் அல்லவா இந்த மண்ணுக்கென்றே தன்னை அர்ப்பணித்துக்கொண்டார் அன்னை தெரஸா!

ஆனாலும் ஆயிரம்தான் இருந்தாலும் கொல்கத்தாவை வெறுக்கத் தோன்றவில்லை; இது கல்வியின் இலக்கியத்தில் இணையற்ற உறைவிடம்;அதை இங்கே வாழும் மக்களும் ஒவ்வொரு நொடியும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

கொல்கத்தா விமான நிலையத்தின் உட்கூரை விதானம் முழுக்க வங்க மொழி எழுத்துக்களாலேயே அழகுபடுத்தப்பட்டிருப்பதும்



பேருந்து நிறுத்த நிழல்குடைத் தட்டியில் சரத் சந்திரரின் படத்தோடு கூடிய குறிப்பு இடம் பெற்றிருப்பதும் 


திரை நிழல்களை மட்டுமே கொண்டாடிப் பூப்போடும் நம்மால்கற்பனை செய்து கூடப்பார்க்க முடியாதவை.

வாடகைக்கார் விடுதியை நோக்கிச்சென்றபோது கொல்கத்தாவின் மிகப்பெரிய விளையாட்டு மைதானமான ஈடன் கார்டனுடன் ரைட்டர்ஸ் பில்டிங் என்ற பெயர் கொண்ட எழுத்தாளர்களுக்கான கட்டிடமும் கண்ணில் பட்டது.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரக்கார்ப்பயணத்தில் சௌரங்கி தெருவில் அமைந்திருந்த சௌத்ரி விடுதிக்கு சென்றுகொண்டிருந்தபோது  [  எண் 36 சௌரங்கி சந்து என்னும் அபர்ணாசென்னின் வங்கப்படம் [36 Chowringhee Lane - 1981 film written and directed by Aparna Sen] நினைவில் எழுந்தது 

சௌத்ரி விடுதியும் ஒரு பழங்காலக் கட்டிடம்தான். 

பெரிய வீதியிலிருந்து சற்று உள்ளடங்கினாற்போல இருந்த அதன்முன்புறம் மகாராஜா உணவகம் என்ற நவீன பாணி உணவு விடுதி ஒன்று இருந்தது. பிற்பகல் 3 45க்கு விடுதியை அடைந்து எனக்கு அறை முன்பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்த சாகித்திய அகாதமி கடிதத்தைக்காட்டியபோது வரவேற்பிலிருந்தவர்களின் தர்மசங்கடப்பார்வையிலிருந்தே தகவல் பரிமாற்றத்தில் ஏதோ குளறுபடி நேர்ந்து விட்டது என்பதைப்புரிந்துகொண்டேன்; கொல்கத்தாவில் தங்குவதற்கான வேறு மாற்று ஏற்பாடு கூட செய்யவில்லையே என்று எண்ணி முடிப்பதற்குள் எனக்கான  அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கிருந்த சிப்பந்தி ஒருவர் என் உடைமைகளைத் தூக்கிக்கொண்டு என்னை வழிநடத்திச்சென்றார். வயதில் மூத்தவர்களை…பெண்களை சிக்கலில்லாமல் எதிர்கொண்டு வங்காளிகள் அளித்த விருந்தோம்பலும் வரவேற்பும் என்னை நெகிழச்செய்தன.[ என்னை அறைக்கு அனுப்பிய பிறகு சாகித்திய அகாதமி அலுவலகத்தோடு தொடர்பு கொண்டு என்னைப்பற்றிய விவரங்களை அவர்கள் உறுதிப்படுத்திக்கொண்டார்கள் என்ற நயத்தக்க நாகரிகப்பண்பைப் பின்புஅறிந்து கொண்டேன்]


மாலை 4 மணிதான் ஆகியிருந்தது. கொல்கத்தாவைச்சுற்றிப்பார்க்க நிறைய நேரம் மிச்சமிருந்ததது. மறுநாள் காலை 10 45க்கு விமானம் என்பதால் காலை 8 மணிக்கே சென்றாக வேண்டும்; அதனால் அன்று மாலையே ஊர்சுற்றலாம் என்ற எண்ணத்தில் என்னை அழைத்து வந்த வாடகைக்கார் ஓட்டுநரிடம் கொல்கத்தாவின் ஒரு சில இடங்களை மட்டும் 3, 4 மணி நேரம் காட்ட முடியுமா என்று விமானநிலையத்திலிருந்து வரும் வழியிலேயே கேட்டிருந்தேன். நம்பிக்கைக்குரியவராகவும்,இனிமையான இயல்புகள் கொண்டவராகவும் தோன்றிய ராஜ்குமார் தாகுர் என்ற அந்த இளைஞர் என் கோரிக்கையை உடனே ஏற்றுக்கொண்டார்;அறையில் பயண மூட்டையைப்போட்டு விட்டு முகம் மட்டும் கழுவிக்கொண்டு கைப்பையுடன் வண்டியில் ஏறினேன். விக்டோரியா நினைவகம்,ஹௌரா பாலம்,காளி கோயில் ஆகிய இடங்களுக்குச்செல்வதாய்த் திட்டம்

முதலில் விக்டோரியா நினைவகம்....



20.2.15

சிக்கிமில் ஒரு சிறுகதைக்கூடுகை


இந்திய வடகிழக்குப்பகுதியின் எல்லை மாநிலமான சிக்கிம் தலைநகர் காங்டாக்கில்-பிப் 7,8 ஆகிய இரு நாட்களும்-மைய சாகித்திய அகாதமி  ஏற்பாடு செய்திருந்த அனைத்திந்திய சிறுகதைத் திருவிழாவில் பங்கேற்று தமிழ்மொழியின் சார்பில் என் சிறுகதை ஒன்றை இந்தியில் அளிக்கும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன்.வெவ்வேறு இந்திய மொழி எழுத்தாளர்கள் பலரும் அதில் கலந்து கொண்டு தங்கள் சிறுகதைகளை ஆங்கிலம் அல்லது இந்தியில் வாசித்தளித்தனர்.

தொடக்க விழா நீங்கலாக மொத்தம் ஆறு அமர்வுகள்,
ஒவ்வொரு அமர்வுக்கும் நான்கு கதைகள். எல்லா அமர்வுகளிலுமே  சிறுகதை வாசிப்புக்கு  முன்பு , குறிப்பிட்ட ஏதேனும் ஒரு இந்தியமொழிக்கதைகளின் போக்கு குறித்த [இந்தி,வங்காளம்,கன்னடம்,குஜராத்தி,பஞ்சாபி,நேபாளி என]ஒரு ஆய்வுரை .

இந்திய நாட்டின் வேறுபட்ட பல  பகுதிகளிலிருந்து வந்திருந்த எழுத்தாளர்களின்  சிறுகதைகளைக் கேட்பதும், அவர்களோடு உரையாடுவதுமான அனுபவம் ,  இந்த விழாவில் பங்கேற்றுக் கதை வாசிப்பதை விடவும் எனக்குக்கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது.

6ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவே பங்கேற்பாளர்கள் பெரும்பாலோர் வந்துவிட்டபோதும் புது இடத்தின் சூழல்....நடுக்கும் மலைக்குளிர் இவற்றோடு எங்களை சமனப்படுத்தி ஒருங்கியைத்துக்கொள்ள நேரம் தேவைப்பட்டதால் 7ஆம் தேதி காலை 9 மணிக்குத்துவங்க வேண்டிய விழா, சற்றுத் தாமதமாகப் பத்து மணிக்குத் தொடங்கியது.


சாகித்திய அகாதமி செயலர் கே ஸ்ரீனிவாசராவ் , தலைவர் விஸ்வனாத் ப்ரசாத் திவாரி, ஆகியோர் ஆற்றிய உரைகளோடும் கேரளத்தைச்சேர்ந்த மிகச்சிறந்த அறிஞர்  திரு இ.வி ராமகிருஷ்ணனின் சிறப்புச்சொற்பொழிவுடனும்  விழாவின் தொடக்கம் நிகழ்ந்தது.

சாகித்திய  அகாதமி தன் 60 ஆண்டுப்பயணத்தை நிறைவு செய்திருக்கும் இந்த நேரத்தில்  இது போன்றதொரு அனைத்திந்தியச்சிறுகதை வாசிப்புக்கூடுகை நிகழ்வது இதுவே முதல்முறை என்று தன் வரவேற்புரையில் கே ஸ்ரீனிவாசராவ் குறிப்பிட்டது வியப்பூட்டினாலும் அத்தகையதொரு நிகழ்வில் பங்கேற்க வாய்த்தது மகிழ்வும் அளித்தது. .
செயலர் கே ஸ்ரீனிவாசராவ்

தலைவர் விஸ்வனாத் ப்ரசாத் திவாரி
கதை கவிதை ஆகியவை மானுட வாழ்வுடன் பின்னிப்பிணைந்திருப்பவை என்பதைத் தன் தலைமை உரையில்குறிப்பிட்ட  சாகித்திய அகாதமியின் தலைவர் விஸ்வனாத் ப்ரசாத் திவாரி ,நோபல்பரிசு பெற்றிருக்கும்  மிகப்பெரும் எழுத்தாளர்களும் கூடத் தங்கள் தாத்தா பாட்டியிடமிருந்து கதைசொல்லிகளாக உருப்பெற்றவர்கள்தான் என்றார். நாட்டுப்புறப்பகுதிகள் ,சிற்றூர்கள், நகர்ப்புறப்பகுதிகள் எனப்பல களங்களிலிருந்தும் - பலவகைக்கருத்துப்பின்புலங்களிலிருந்தும் உருவாகி வரும் பன்முகக்கலாசாரம் கொண்ட இந்தியக்கதைகளை இந்திய எழுத்தாளர்களே அறிந்து கொள்ள இந்த நிகழ்வு ஒரு வாய்ப்பு என்ற அவர் , அவரவர் எந்தக்கருத்தை எந்தநோக்கில் அணுகி எப்படி உள்வாங்கிக்கொள்கிறார்களோ அதைப்பொறுத்ததாகவே அந்தச்சிறுகதையின் வடிவமும் உள்ளடக்கமும் அமைந்திருக்கும் என்றார்.


இன்றைய இந்தியச்சிறுகதைகளின் போக்கைக்குறித்து சிறப்புரையாற்றிய திரு இ வி ராமகிருஷ்ணன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் இந்திய மொழிக்கதைகள் பலவற்றையும் சாகித்திய அகாதமி வெளியீட்டுக்காகப்பல தொகுதிகளில் தொகுத்துத் தந்திருப்பவர். இந்தியமொழியின் மிகச்சிறந்த சிறுகதைகள் சிலவற்றைக்கோடிட்டு அவற்றின் தனித்துவமான தன்மைகளைச்சுட்டி அவர் ஆற்றிய உரை மிகச்செழுமையானது.

அகாதமியின் துணைச்செயலாளரும் இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான கீதாஞ்சலி சட்டர்ஜியின் நன்றியுரையோடு
 தொடக்க விழா முடிந்து அமர்வுகள் தொடங்கின.

முதல் கதையான காளையை மையமிட்ட -மனிதநேயத் தன்மை கொண்ட  அஸ்ஸாம் மொழிக்கதை.அசர அடித்து உறையச்செய்த ஒரு படைப்பு. தொடர்ச்சியாக இரண்டு நாட்களும் விடாமல் கொட்டிய கதைகளின் மழையில் நனைந்து குளிர்ந்தாலும் [வெளியில் உண்மையிலேயே ந...டு....க்...கும் குளிர்] பல அடிப்படைகளில் என்னை அந்தக்கதை மிகவும் ஈர்த்தது என்றே சொல்ல வேண்டும்.
’’பட மாடக்கோயில் பகவர்க்கு ஒன்று ஈயில்
நடமாடக்கோயில் நம்பர்க்கு அது ஆகா
நடமாடக்கோயில் நம்பர்க்கொன்று ஈயில்
பட மாடக்கோயில் பகவர்க்கு அது ஆமே’’
என்னும் திருமூலர் வாக்கை [இறைவனுக்குப்படைக்கும் நிவேதனங்கள் பசித்த மனிதனைச்சென்று சேர்வதில்லை;மாறாக ஓர் ஏழைக்கு அளிப்பது கடவுளைச்சேருகிறது] அஸ்ஸாம் மொழியில் யதார்த்தத் தளத்தில் கேட்பது மிகுந்த ஆனந்தத்தை அளித்தது.மேடைக்கே விரைந்து சென்று அதை வழங்கிய எழுத்தாளர் பிபுல் கட்டாரியாவை நான் மனம் நெகிழப்பாராட்டியதும், தொடர்ந்த இரண்டு நாள் பழக்கத்தில் என்னைத் தன் சகோதரியாகவே ஏற்ற  அவர்,தான் எழுதிய அஸ்ஸாம் மொழிச்சிறுகதைகளின் தொகுப்பொன்றை (தமிழ்நாட்டுச்சகோதரி சுசீலாவுக்கு அஸ்ஸாமிய சகோதரனிடமிருந்து...அன்புடன் என்று கையெழுத்திட்டு) எனக்குப்பரிசாக அளித்ததும் ஒரு தனிக்கதை. அதில் ஒரு அட்சரம் வாசிப்பது கூட என்னால் முடியாது என்பது அவரோ நானோ அறியாததல்ல. ஆனாலும் அதன் அடிநாதமாக உறைந்திருந்த ஏதோ ஒரு பிணைப்பு ,பிரெயிலி எழுத்துக்களைத் தடவி உணர்வதைப் போல அந்தச்சொற்களையும் அவர் இட்டுத் தந்த கையெழுத்தையும் வருடிப்பார்த்து மனம் கசிய வைத்துக்கொண்டிருக்கும் ..என்றென்றைக்குமாய்!
[விரைவில் அந்த அஸ்ஸாமியக்கதையின் தமிழாக்கத்தை வலைத்தளத்தில் அளிக்க அவரிடம் ஒப்புதலும் பெற்று விட்டேன்].

பிபுல் கட்டாரியா 
[கொஞ்சமாய் பாலு மஹேந்திரா சாயல் தெரியவில்லை?!}

போடோ மொழிக்கதை-அர்பிந்தோ உசிர்
பொதுவாக இந்தி,கன்னடம்,மலையாளம்,தெலுங்கு,வங்காளம் ஆகிய பிறமொழி இந்தியக்கதைகள் சிலவற்றை ஆங்கில /அல்லது மூல மொழி மொழியாக்கத்திலிருந்து தமிழ் வழி நாம் படித்திருக்க வாய்ப்பிருக்கிறது;சில குஜராத்தி மராத்தி உருது கதைகளையும் கூடத்தான்.ஆனால் போடோ,டோகிரி,மைதிலி,சிந்தி,கொங்கணி,சந்தாலி,கஷ்மீரி,நேபாலி ஆகிய மொழிக்கதைகளைத் தமிழில் படிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவுதான்;இப்படி ஒரு கதைஅரங்கம் வாய்த்ததால் அவற்றை ஆங்கிலத்தில் கேட்டுப்புரிந்து கொள்வதும்,இந்திய மொழிக்கதைகளின் சமகாலப்போக்கை ஓரளவாவது அறிந்து கொள்வதும் சாத்தியமாயிற்று.

நிகழ்வுகளில் பங்கேற்ற புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் பால்சக்காரியா குறிப்பிட்டதைப்போல சாகித்திய அகாதமியைப்பற்றிப்பல வகையான விமரிசனங்கள்,குறைகள் சொல்லப்பட்டாலும் அவற்றில் சில வேளைகளில் உண்மையும் இருந்தாலும் - இப்படிப்பட்ட ஒரு அமைப்பு மட்டும் இல்லாமல் போயிருந்தால் இத்தனை இந்திய எழுத்தாளர்களின் ஒருமித்த கூடுகையும் அவர்களிடையேயான ஆக்கபூர்வமான அன்புப்பிணைப்போடு கூடிய உரையாடல்களும்  சாத்தியமாகியிருக்க உண்மையிலேயே வாய்பிருந்திருக்காதுதான்.

நம்மூர் கிராமங்களில்  பார்க்கக்கூடிய பேயோட்டும் சடங்கு போன்ற மாயமந்திரவாதத்தின் அபத்தத்தைச்சுட்டிய மணிபுரிக்கதை, நாட்டின் எல்லைப்பிரிவினையால்  மனிதர்களுக்குள் ஏற்படுத்தப்படும் செயற்கையான பிளவுகளையும் அவற்றின் விளைவாக நிகழும் சிக்கல்களையும்  எடுத்துக்காட்டிய கஷ்மீரி மற்றும் உருதுக்கதை,ஆழ்ந்த தத்துவ உட்பொருள் தோய்ந்த பதஞ்சலி சாஸ்திரியின் தெலுங்குக்கதை,பொட்டில் அறைவது போன்ற வீச்சுடன் வந்து விழுந்த பால் சக்காரியாவின் மலையாளக்கதை,எளிமையான உள்ளடக்கம் கொண்ட வங்காள,போடோ,சிந்திக்கதை எனப்பல கதைகளும் இந்தியாவின் பன்முகத் தன்மையை அறைகூவியபடி இந்தியப்பெருமித உணர்வைத் தோற்றுவித்துக்கொண்டே இருந்தன.கதை வரிசையில் இந்திய ஆங்கிலத்துக்கும் இடம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அளிக்கப்பட்டதால் கதைகளை ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தாலும் நுட்பமும் இருண்மையும் பொதிந்த கதைகளை ஒரே ஒருமுறை மட்டும் - அதிலும் அவ்வப்போது விளையும் இலேசான கவனச்சிதறலுடனும், கூட்டச்சலசலப்பு,ஒலிபெருக்கி மின்தடை போன்ற சிக்கல்களோடும்  கேட்டு முழுமையாக உள்வாங்கிக்கொள்வதென்பது  கடினமாகவே இருந்தது; கதைப்பிரதிகளை நகலெடுத்து விநியோகிக்க அமைப்பாளர்கள் ஒழுங்கு செய்யவில்லை என்றபோதும் நானும் வேறு சிலரும் நாங்களாகவே 20,25 பிரதிகள் ஒளி நகல் எடுத்து விரும்பிக்கேட்டவர்களுக்கு வழங்கினோம்;அப்படி எனக்குக் கிடைத்த கதைகளும் வேறு சிலரிடமிருந்து நானே கேட்டு வாங்கிய பிரதிகளும் [ஆங்கில மொழியாக்கத்தில் அமைந்தவை] இன்னொரு முறை அறைக்குப்போய்  வாசித்த பின் நன்றாகத் தெளிவுபட்டன,

எனக்கு ஓரளவு இந்தியில் பழக்கமிருந்தாலும்,பெரும்பாலான வடமாநிலப்படைப்பாளிகளுக்குப்போய்ச்சேர வேண்டுமென்று என் கதையையும் கூடப் பெருமுயற்சி எடுத்து[ஒத்திகை பார்த்து]இந்தியிலேயே வாசித்தாலும் கூட ஆங்கில மொழியாக்கக்கதைகளே என்னைப்போல அங்கு வந்திருந்த தென்மாநில மக்களை மிகுதியாய்ச்சென்றடைந்தன;மாறாக இந்தியில் வாசிக்கப்பட்ட கதைகளே அரங்கின் பார்வையாளர்களாக வரவழைக்கப்பட்டிருந்த உள்ளூர் மாணவ மாணவிகளை மிகுதியாக எட்டியதென்பதை  அவர்களின் ஆரவார ஒலிகள் காட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தன.
மங்கோலிய முகம் கொண்ட
மாணவப்பார்வையாளர்கள்



30,40 ஆண்டுக்காலமாக எழுதி வரும் மூத்த படைப்பாளிகள், மிக அண்மைக்காலத்திலேயே எழுதுகோலை ஏந்தத் தொடங்கி வெகுவேகமாகவும் லாவகமாகவும் இன்றைய இலக்கியத்தின் உச்சத்தைத் தொட்டு விட்ட இளைஞர்கள் - முழுநேர எழுத்தாளர்கள், இலக்கியப்பேராசிரியர்கள்,ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், படைப்பிலக்கியம்,ஊடகத் துறை சார்ந்த கல்விப்பணி செய்வோர், பிற தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் எனப் பலரையும் கூடுகையில் காண முடிந்தது; இவர்களில் பலரும் வழங்கிய இயல்புவாத,கற்பனாவாத,நவீனத்துவக்கதைகளுக்கிடையே  அற்புதமான பின் நவீனக்கதை ஒன்று மராத்தியில் வந்து விழுந்தது. அதை அளித்த  பிரஷாந்த் பாகத் என்ற இளைஞர் தன் கதை கூறல் வழியாக மட்டுமல்லாமல் எளிமையான தன்னடக்கத்தின் மூலமாகவும்  உள்ளங்களைக்கவர்ந்து கொண்டார்; ஐ ஐ டியில் தத்துவப்பேராசிரியராகப்பணியாற்றும் இவரே நான் கலந்து கொண்ட அமர்வையும் ஒருங்கிணைத்தவர்.

கதை வழங்கும் நான்
இடது கோடியில் ஓவர்கோட்டுடன் இருப்பவர்- பிரஷாந்த் பாகத்


1979இல் வெளிவந்து சிறுகதைப்போட்டி ஒன்றில் முதற்பரிசு பெற்ற எனது முதல்கதையான ’ஓர் உயிர் விலை போகிறதுஎன்னும் ஆக்கத்தை தில்லியிலுள்ள இந்திப்பேராசிரியரும் என் மதிப்புக்குரிய நண்பரும் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமான டாக்டர் திரு எச் பாலசுப்பிரமணியம் அவர்கள் மிகவும் உயர்தரமான இந்திமொழிநடையில் பெயர்த்துத் தந்திருந்தார். என்னால் இயன்ற வரை அதை ஒழுங்காக அளிக்க முயற்சி எடுத்துக்கொண்டேன்;இந்தியில் அளித்ததாலேயே பலரின் ரசனையோடு கூடிய பாராட்டுக்களையும் பெற முடிந்தது.

கதைகள் ஆங்கிலத்திலோ இந்தியிலோ அளிக்கப்பட்டாலும் கூட ஒரு சில பகுதிகளை சொந்தமொழியிலேயே வாசிக்கலாம் என்றும் எல்லோருக்கும் எல்லா மொழிகளும் புரியாவிட்டாலும் கூட அதன்  இனிமையை இலேசாகவாவது  நுகரும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைப்பாளர்கள் எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததால் அவரவருக்குப்பிடித்த பத்தி ஒன்றைத் தங்கள் மொழியில் படித்த பிறகே மொழியாக்க வாசிப்பு நிகழ்ந்தது.நேபாளக்கதை வாசித்த எஸ் டி தகால் என்னும் எழுத்தாளர் ஆங்கிலத்தில் அதை அளிப்பதற்கு முன்பு அதன் சுருக்கம் முழுவதையும் ஏதோ ஒரு கவிதை ஒப்பிப்பதைப்போல வேகமாகச்சொல்லிக்கைதட்டல்களை அள்ளிக்கொண்டார்.

’’தேமதுரத் தமிழோசை சிக்கிமில் ஒலிக்க வழி செய்த சாகித்திய அகாதமிக்கு முதல் நன்றி’’என்று தமிழில் முன்னுரை அளித்தபடி என் கதை வாசிப்பைத் தொடங்கி அதன் முதல்பத்தியை மட்டும் தமிழில் படித்து விட்டு [பார்வையாளர்களின் 'திரு திரு!!' பார்வையை அதற்கு மேலும் நீடித்துக்கொண்டு போக விரும்பாமல்] இந்திக்குத் தாவினேன் நான்.
என்அமர்வில் கதைகள் வாசித்த
உருது சிந்தி படைப்பாளிகள்
ரஹ்மான் அப்பாஸ்,கிஷன் ரதானி

என் அமர்வில் உடன்பங்கேற்ற உருது எழுத்தாளர் அப்துல் ரஹ்மான் அப்பாஸைப்பற்றித் தனியே கொஞ்சம் சொல்லியே ஆக வேண்டும். காங்க்டாக் நகரில் நாங்கள் தங்கியிருந்த விடுதியை ஒட்டிய மகாத்மா காந்தி மார்க் பகுதியில் நான் வழக்கமான காலை நடை செல்லும்போதெல்லாம் எங்கிருந்தோ ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும் துடிப்பான இந்த இளைஞரைப்பற்றி அப்போது எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை; நிகழ்வின் இரண்டாவது நாள் காலையிலும் என்னை வழி மறித்தவர் ‘இனிமேல் இந்த சுசீலா மேடத்தைப்பார்க்க எப்போது வாய்ப்புக்கிடைக்கப்போகிறது’ என்றபடி தன்னோடு வந்திருந்த சக சமஸ்கிருத எழுத்தாளரிடம் தன் கைபேசியைத் தந்து என்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.அந்த நேரத்திலும் கூட அவரை நான் தெரிந்து வைத்திருக்கவில்லை என்பது இந்த விநாடி வரை என்னுள் குற்ற உணர்வைக்கிளர்த்திக்கொண்டே இருக்கிறது.


                             காங்க்டாக் மகாத்மா காந்தி மார்க் வீதியில் 
                   உருது எழுத்தாளர் அப்துல் ரஹ்மான் அப்பாஸுடன்.
அன்று மதியம் நாங்கள் ஒன்றாக ஒரேஅமர்வில் பங்கேற்றபோது வழங்கப்பட்ட அவரது அறிமுகக்குறிப்பே அவரது வாழ்க்கை மற்றும் இலக்கியப்பின்புலங்களை எனக்கு வெளிச்சமிட்டது.

நாற்பத்திரண்டு வயதிலேயே உருது இலக்கியத்துக்கான தேசிய விருதுகளுக்குச் சொந்தக்காரரான அப்துல் ரஹ்மான் அப்பாஸ் மதஅடிப்படைவாதத்துக்கு எதிரான கருத்துக்களைத் தன் மூன்று உருது நாவல்களிலும் ஒலித்திருக்கிறார்;அதற்கான பரிசாக இலக்கிய அங்கீகாரங்கள் மட்டும் இவரைத் தேடி வரவில்லை;சிறை வாசங்களும் கூடத்தான்.இன்னும் கூட நிலுவையில் இருக்கும் வழக்குகளோடு போராடியபடி மும்பையில் முழுமூச்சாகப் படைப்பிலக்கியம் கற்பித்து வரும் இந்த மனிதரின் நேசம் நெடுந்தொலைவுகள் பிரித்தாலும் என்றும் நெஞ்சில் உறைந்திருக்கும்.

கதை அரங்க மேடையில்
நேபாள மொழிக்கவிஞர்கள்,ரஹ்மான் அப்பாஸ்,நான்


இந்த இலக்கிய நிகழ்வு எனக்களித்த மறக்க முடியாத மற்றுமொரு நட்பு டார்ஜீலிங்கிலிருந்து வந்து என்னோடு அறையைப்பகிர்ந்து கொண்ட நேபாள மொழிக்கவிஞரும் திறனாய்வாளருமான மோனியா முகியாவுடையது. நேபாளை இனத்தைச்சேர்ந்தவராயினும் இந்தியப்பிரஜையாகவே வாழ்ந்து வரும் கத்தோலிக்கக்கிறித்தவரான அவர்,மிகத் தேர்ந்த ஆங்கிலப்புலமை கொண்டவர். காட்சிக்கு மட்டுமல்லாமல் பழகுவதற்கும் எளிமையும் இனிமையும் கொண்ட அவரோடு ஒரே அறையில் மூன்று இரவுகளை இலக்கிய விவாதங்களிலும் பரிமாற்றங்களிலும் கழித்த இனிய தருணங்கள் என்றென்றைக்கும்மறக்கமுடியாதவை.

மோனிகா முகியாவுடன்.
காங்க்டாக்கின் கதைக்கூடுகையும் தாஷி டேலிக் விடுதியின் விருந்தோம்பலும் மிகச்சீரான அறை ஏற்பாடுகளும் மனதில் நிறைவான அனுபவங்களாக நிரம்பி வழிய மூன்றாம் நாள் அதிகாலைக்குளிரோடு மலையை விட்டுக்கீழிறங்கியபோது புதிது புதிதான நட்புக்கதைகள்பலவும் என்னைப்போலவே பலர் நெஞ்சிலும் அரும்பிக்கொண்டிருக்கக்கூடும் என்று எண்ணிக்கொண்டேன்.....




LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....