துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

25.2.15

சிக்கிமை நோக்கி....-3[கொல்கத்தா]

  • சிக்கிமை நோக்கி-2 [கொல்கத்தா]இன் தொடர்ச்சி

  • கொல்கத்தாவின் அடையாளமாகக் கருதப்படும் விக்டோரியா [மெமோரியல்] நினைவகமான அருங்காட்சியகத்தில் மாலை 5 மணிக்கு மேல் அனுமதி இல்லையென்பதால் முதலில் அங்கே சென்றேன்.


புல்வெளிகளும் பூந்தோட்டங்களும் செயற்கை ஏரிகளுமாய்ப் பரந்து விரிந்து கிடக்கும் மிகப்பெரிய வளாகம். நடுவே தாஜ்மகாலை உருவாக்கிய அதே வகையான சலவைக்கல்லால் ஆன விக்டோரியா மெமோரியல் கட்டிடம். இந்தியாவின் வைசிராயாக இருந்த கர்சன் பிரபுவின் எண்ணத்தில் உருவானது. இந்திய அரசியாகப் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த ராணி விக்டோரியாவின் மறைவுக்குப்பின் அவருக்காக எழுப்பப்பட்ட நினைவுச்சின்னம். இந்தோ - சாரசெனிக் பாணியில் பிரித்தானிய மொகலாயக்கட்டிடக்கலைகளின் கலவையாய் உருப்பெற்றிருக்கும் இந்த நினைவகம் ஓரளவு தாஜ்மகாலின் ஒரு சில கூறுகளைக்கொண்டிருந்தபோதும் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டுத்தான் இருக்கிறது.

சிங்க முகப்புத் தாங்கிய பெரிய நுழைவாயிலிலிருந்து நினைவகம் செல்லும்  நடைபாதையை மட்டும் விட்டு விட்டு இடைப்பட்ட  பிற இடங்களையெல்லாம் சிறிதும் பெரிதுமான கூழாங்கற்களால் நிரப்பி வைத்திருந்ததால்  குறுக்கு வழியில் விரைந்து செல்ல நினைத்தால் அதற்கு வாய்ப்பில்லை.


கட்டிடத்தின் முன் பகுதியில் விக்டோரியா அரசியின் உருவச்சிலை,உள்ளே உள்ள காட்சிக்கூடங்களில்,ஐந்தாம் ஜார்ஜ் மன்னர், கர்சன், ராபர்கிளைவ், வெல்லெஸ்லி ஆகியயோரின் மார்பளவுச்சிலைகள்,பிரிட்டிஷார் பயன்படுத்திய ஆயுதங்கள்,சில புத்தகங்கள் சுவடிகள் என வழக்கமான பாணியில் அமைந்திருந்த‌ அந்த அருங்காட்சியகம் என்னை அதிகம் சுவாரசியப்படுத்தவில்லை; ஓவியக்கூடத்திலிருந்த ஓவியங்கள் மட்டும் ஃப்ரான்சிலிருக்கும் லூவ் காட்சியகத்தை இலேசாகநினைவூட்டின.

கூம்பு வடிவ மேற்கூரை கொண்ட அந்தக்கட்டிடத்தின் கீழ்த்தளத்தில் மட்டுமே காட்சிக்கூடங்கள்; மிகுந்த பிரயாசையோடு அடுத்த தளத்துக்குச் செல்லும் படிகளில் ஏறிச்சென்றால் ஒரு வட்ட உப்பரிகைப்பாதையாகக் கீழே உள்ள காட்சிகளையும் மேல் விதானத்து வடிவங்களையும் கண்டு ரசிக்கலாம் என்பதைத் தவிர வேறொன்றும் இல்லை.


நினைவகத்தின் பலபகுதிகளில் பராமரிப்பு வேலை நடந்து கொண்டிருந்தது.


பிரிட்டிஷ் ஆட்சி முடிந்து இத்தனை காலமான பின்னும்  நகரின் மையப்பகுதியில் இட நெருக்கடி மிகுந்த பெருநகரில்....வீடில்லாத மக்கள் அதிகம் வாழும் கொல்கத்தாவில் அருங்காட்சியகம் நீங்கலாகப்பிற இடங்களைக்கூடப்பயன்பாட்டுக்குக் கொள்ளாமல் இத்தனை இடத்தை விட்டு வைத்திருப்பது ஏனென்பதுதான் தெரியவில்லை, அதிலும் தொடர்ச்சியாகப்பல ஆண்டுகள் ஆண்டிருப்பவை கம்யூனிச அரசாங்கங்கள்!

நினைவகத்தின் முன்னுள்ள விசாலமான பகுதி சுற்றுலா மையங்களுக்கே உரிய குப்பையும் அழுக்கும் மண்டியதாய்…….’சாட்’ ,ஐஸ்கிரீம் விற்பனைகளுடனும் வாடகைக்கு எடுக்கும் சாரட் வண்டி சவாரிகளுடனும் களை கட்டி இருந்தது. 

அலங்கார சாரட் வண்டிகள்



சூரியன் மறையாத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஒரு காலச்சக்கரவர்த்தினியின் நினைவுச்சின்னப்பின்னணியில் அந்திச்சூரியன் முழுகி மறையும் காட்சியைப்பார்த்தபடி 

அடுத்த இடமான ஹௌரா பாலம் நோக்கி விரைந்தேன். 

கொல்கத்தாவின் அடுத்த அடையாளம், மிகப்  பிரம்மாண்டமான தாங்கு விட்டங்களைக்கொண்டிருப்பதும் அவ்வாறான பாலங்களில் உலகின் ஆறாவது நீண்ட பாலமாகக் கருதப்படுவதுமான ஹௌரா பாலம் .

ஹௌராநகரத்தையும் கொல்கத்தாவையும் இணைக்கும் இந்தப்பாலம் ஹூப்ளிஆற்றின் மீது அமைந்திருக்கிறது; 

உலகின் போக்குவரத்து மிகுந்த பாலங்களில் ஒன்றான இதை தினந்தோறும் கிட்டத்தட்ட ஒரு இலட்சம் வாகனங்களும் ஒன்றரை இலட்சம் பாதசாரிகளும் கடந்து செல்வதாகப் புள்ளிவிவரங்கள் கணிக்கின்றன.

மேற்கு வங்கத்தின் பெரிய ரயில் நிலையங்களில் ஒன்றான ஹௌரா ரயில் நிலையம் இந்தப்பாலத்துக்கு மிக அருகிலேதான் இருக்கிறது; அதைக் கொல்கத்தாவுடன் இணைக்க உதவுவதால் ஒருவகையில் கொல்கத்தாவின் நுழைவாயிலாகவும் ஹௌரா பாலம் சுட்டப்படுகிறது.


நோபல்பரிசு பெற்ற வங்கப்பெருங்கவிஞர் ரவீந்திரநாத் தாகூரின் பெயரால் ’ரபீந்திர சேது’ {சேது என்றால் அணை} என்று ஹௌரா பாலத்தின் பெயர் அதிகார பூர்வமாக மாற்றப்பட்டு விட்டதென்றாலும் பெரும்பான்மை வழக்கில் பழைய பெயரே நிலைத்துப்போயிருக்கிறது.[விக்கிபீடியாவிலிருந்து நான் அறிந்து கொண்டிருந்த இந்தத் தகவலைக் கார் ஓட்டியாக மட்டுமல்லாமல் எனக்கு வழிகாட்டியாகவும் அமைந்து போன வந்த ராஜ்குமார் தாகுரும் சொல்லிக்கொண்டு வந்தார். அதே போல ஹூக்ளி ஆற்றின்மீது கட்டப்பட்டிருக்கும் அடுத்தடுத்த பாலங்கள் [ஈஸ்வர் சந்திர] வித்யாசாகர் சேது, விவேகானந்த சேது, நிவேதிதா சேது என்று பெயர் சூட்டப்பட்டிருக்கின்றன என்பதையும் அவர் சொல்லத் தவறவில்லை.

கொல்கத்தா காளியின் பூமி. 
மகாலட்சுமியின் உறைவிடமாய் மும்பை எண்ணப்படுவதைப்போல கொல்கத்தாவின் சகலஅடிப்படையும் துர்க்கை அன்னை வழிபாடுதான். தெருவோரங்களிலுள்ள நம்மூர் மரத்தடிகளில் வைக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிலைகளைப்போல அங்கே காளியின் சிறிய உருவங்களையே பரவலாகக்காண முடியும்.
சாலை மரத்தடிகளில் காளி

கொல்கத்தாவை சுற்றிப்பார்க்க வேண்டுமென்று நாம் சொன்னதுமே அங்குள்ளோர் நாவில் முதலில் எழுவது ’காளிகாட்’ எனப்படும் புராதனமான காளி கோயில்தான்.

நான் செல்ல வேண்டிய அடுத்த இலக்கும் அதுவாகத்தான் இருந்தது; திடீரென்று வங்கப்படைப்பாளி ஆஷாபூர்ணாதேவியின் கதையான 'ரீஃபில் தீர்ந்து போன பால்பேனா' என் மண்டைக்குள் ஏறிக்கொண்டது.
வீட்டிலிருக்கும் எல்லோரும் காலை முதல் காணவில்லையே என்று பரபரப்பாகத் தேடிக்கொண்டிருக்கும் மூதாட்டி ஒருவர் மாலையானதும் தக்ஷிணேஸ்வரம் சென்று வந்ததாகச் சொன்னபடி எந்தப்பதட்டமும் இல்லாமல் ரிக்‌ஷாவிலிருந்து இறங்குவார். முதுமையின் வெறுமை...பெண்ணின் தனிமை...முதிய பெண்ணின் வெறுமையும்,தனிமையும் என மூன்று அம்சங்களையும் முன் வைக்கும் அற்புதமான அந்தச்சிறுகதை 
[அதைப்பற்றி நான் எழுதியிருக்கும் தனிப்பதிவின் இணைப்பு-http://www.masusila.com/2009/10/blog-post_13.html ]

உள்ளூர் காளி கோயிலை விட்டு விட்டு தக்ஷிணேஸ்வரக்காளியை தரிசிக்கும் ஆசையை அந்தக்கதை என்னுள் கிளர்த்தி விட்டது. ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு அந்தக்காளியோடு உள்ள நெருக்கத்தைப்பற்றி அறிந்து வைத்திருந்ததாலும்  என் ஆவல் அதிகமாகிக்கொண்டே சென்றது.
என் விருப்பத்தைத் தட்டாமல் ஏற்றுக்கொண்டதோடு –சின்னதொரு மனக்கோணல் கூட இல்லாமல்- சந்து பொந்து நிரம்பிய பல குறுகலான தெருக்கள் வழியே வண்டியை ஓட்டிச்சென்றார் ஓட்டுநர் தாக்குர்.
தக்ஷிணேஸ்வரம் 

ஹூக்ளி ஆற்றின் கிழக்குக்கரையில் அமைந்திருக்கும் தக்ஷிணேஸ்வரத்தில் குடி கொண்டிருக்கும் காளி, பவதாரிணி [பிறவிப்பெருங்கடலிலிருந்து தன் பக்தர்களை விடுவிப்பவள்] என்னும் பெயர் கொண்டவள்; மனிதனின் காம குரோத லோப மோக மத மாச்சரிய அறுகுணத் தீங்குகளை அரிபவளைப் போலக் கையில் சூலம் ஏந்தியபடி, அக்குணங்களின் தூல வடிவமாய்க் கீழே கிடக்கும் மனித உருவத்தை சம்ஹாரம் செய்யும் தோற்றம் கொண்ட அம்மையின் உருவத்தைக்காணக்கண் கோடி வேண்டும்.
o

ஒருபுறத்தில் காளியின் சன்னதியையும் எதிர்ப்புறத்தில் ஆற்றை ஒட்டி 12 சிவ சன்னதிகளையும் கொண்டிருக்கும் தக்ஷிணேஸ்வரத்தில் சிவ லிங்கங்களை  அடுத்து வட மேற்கு மூலையில் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை ராமகிருஷ்ணர் செலவிட்ட சிறிய அறையும் அமைந்திருக்கிறது. சாமானியனான மனிதன் ஒருவன் தெய்விக சித்தி அடைந்த இடம் இது என ராமகிருஷ்ணரின் வாழிடம் குறிக்கப்பட்டிருந்தது.



சன்னதிகளுக்குப் பின்புறம் அமைதியாக ஓடிக்கொண்டிருந்த ஆற்றை இரவின் மோனத்தில் லயித்துப்  பார்த்தபடி அதற்குள் அரிதான பல ஆன்மீக வரலாற்றுத் தருணங்கள் பொதிந்திருக்கக்கூடும் என எண்ணியபடி நின்றிருந்தேன்… 

கொல்கத்தா நகரின் பெயர்க் காரணங்களில் முக்கியமான ஒன்று அது காளியின் நிலம் என்பது. தெற்கு கொல்கத்தாவின் நெருக்கடியான சூழலில் காளிகாட்டில் வீற்றிருக்கும் காளிகா தேவியின் வழிபாட்டையே வங்காள மக்கள் முதன்மையானதாக நினைக்கிறார்கள்.
                                           காளிகாட்

5ஆம் தேதிமாலை 4 மணிக்குக்கிளம்பிக் கொல்கத்தாவின் பல இடங்களையும் பார்த்துவிட்டு தக்ஷிணேஸ்வரமும் சென்றுவந்த பிறகு நேரம் இடம் தராததால் அன்று அந்தக்கோயிலுக்குச் செல்வதை ஒத்தி வைத்து விட்டு காங்க்டாக்கிலிருந்து திரும்பி வரும் வழியில் கொல்கத்தாவில் மீண்டும் தங்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்தபடி உணவை முடித்துக்கொண்டு இரவு 8 மணி அளவில் விடுதி அறைக்குத் திரும்பினேன்.

பி கு

ஆனால்....காங்க்டாக் நிகழ்ச்சி முடிந்து 10ஆம் தேதி,கொல்கத்தாவிலிருந்து கோவை திரும்பும் முன் கிடைத்த மிகச்சிறு இடைவெளியில்‍ விமானநிலையம் சென்று சேர்ந்தாக வேண்டிய நெருக்கடியில் - கார் ஓட்டுநரும் தாமதம் செய்து பதட்டத்தை ஏற்படுத்திவிட்ட நிலையிலேதான் காளிகாட் செல்ல முடிந்தது.

தக்ஷிணேஸ்வரம் போலப்பெரிய ஆலயமாக இல்லையென்றாலும் கோயில் உள்ளூர்க் கோயில்  என்பதாலும்  செவ்வாய்க்கிழமை ஆகி விட்டதாலும் பயங்கரக்கூட்டநெரிசல்; 


பண்டாக்களின் சகாயமின்றி அம்மையின் கடைக்கண் பார்வைகிடைத்து நான் விமானம் ஏறுவது கடினம் என்று ஓட்டுநர் கூறிவிட,அவர் ஏற்பாடுசெய்து தந்த பண்டாவுடன் மின்னல் வேக தரிசனம் செய்து காளியின் அருட்பார்வையை அரை நொடி பெற்றேன்;  

காளிகா தேவி
அதற்குள் பண்டாக்களின் ஆதிக்கமும் காசு பறிப்பும் காசியில் பார்த்ததை விட மிகக் கொடுமையாக இருந்தது. பணப்பையே பறிபோய் விடுமோ என்ற அச்சம் கூட ஏற்பட்டு விட,ஒரு வழியாக ''அரை மொட்டை'' நிலையில் காருக்குள் ஏறினேன். காளி தரிசனம் கிடைத்த மகிழ்ச்சியை விட பூசாரிகள் உண்டாக்கிய பதற்றம் மட்டுமே சிறிது நேரம் நீடித்திருந்தது; அந்தக்கோயில்தானே அவர்களின் மூலதனம்..அதைச் சார்ந்து மட்டும்தானே அவர்களின் பிழைப்பு என்ற எண்ணம் உடனே எழுந்து விட,கொல்கத்தா அளித்த இனிய நினைவுகள் மட்டுமே என்னில் சேமிப்பாயின.
[சிக்கிமை நோக்கி....வளரும்..]

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....