துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

20.2.15

சிக்கிமில் ஒரு சிறுகதைக்கூடுகை


இந்திய வடகிழக்குப்பகுதியின் எல்லை மாநிலமான சிக்கிம் தலைநகர் காங்டாக்கில்-பிப் 7,8 ஆகிய இரு நாட்களும்-மைய சாகித்திய அகாதமி  ஏற்பாடு செய்திருந்த அனைத்திந்திய சிறுகதைத் திருவிழாவில் பங்கேற்று தமிழ்மொழியின் சார்பில் என் சிறுகதை ஒன்றை இந்தியில் அளிக்கும் வாய்ப்பை நான் பெற்றிருந்தேன்.வெவ்வேறு இந்திய மொழி எழுத்தாளர்கள் பலரும் அதில் கலந்து கொண்டு தங்கள் சிறுகதைகளை ஆங்கிலம் அல்லது இந்தியில் வாசித்தளித்தனர்.

தொடக்க விழா நீங்கலாக மொத்தம் ஆறு அமர்வுகள்,
ஒவ்வொரு அமர்வுக்கும் நான்கு கதைகள். எல்லா அமர்வுகளிலுமே  சிறுகதை வாசிப்புக்கு  முன்பு , குறிப்பிட்ட ஏதேனும் ஒரு இந்தியமொழிக்கதைகளின் போக்கு குறித்த [இந்தி,வங்காளம்,கன்னடம்,குஜராத்தி,பஞ்சாபி,நேபாளி என]ஒரு ஆய்வுரை .

இந்திய நாட்டின் வேறுபட்ட பல  பகுதிகளிலிருந்து வந்திருந்த எழுத்தாளர்களின்  சிறுகதைகளைக் கேட்பதும், அவர்களோடு உரையாடுவதுமான அனுபவம் ,  இந்த விழாவில் பங்கேற்றுக் கதை வாசிப்பதை விடவும் எனக்குக்கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது.

6ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவே பங்கேற்பாளர்கள் பெரும்பாலோர் வந்துவிட்டபோதும் புது இடத்தின் சூழல்....நடுக்கும் மலைக்குளிர் இவற்றோடு எங்களை சமனப்படுத்தி ஒருங்கியைத்துக்கொள்ள நேரம் தேவைப்பட்டதால் 7ஆம் தேதி காலை 9 மணிக்குத்துவங்க வேண்டிய விழா, சற்றுத் தாமதமாகப் பத்து மணிக்குத் தொடங்கியது.


சாகித்திய அகாதமி செயலர் கே ஸ்ரீனிவாசராவ் , தலைவர் விஸ்வனாத் ப்ரசாத் திவாரி, ஆகியோர் ஆற்றிய உரைகளோடும் கேரளத்தைச்சேர்ந்த மிகச்சிறந்த அறிஞர்  திரு இ.வி ராமகிருஷ்ணனின் சிறப்புச்சொற்பொழிவுடனும்  விழாவின் தொடக்கம் நிகழ்ந்தது.

சாகித்திய  அகாதமி தன் 60 ஆண்டுப்பயணத்தை நிறைவு செய்திருக்கும் இந்த நேரத்தில்  இது போன்றதொரு அனைத்திந்தியச்சிறுகதை வாசிப்புக்கூடுகை நிகழ்வது இதுவே முதல்முறை என்று தன் வரவேற்புரையில் கே ஸ்ரீனிவாசராவ் குறிப்பிட்டது வியப்பூட்டினாலும் அத்தகையதொரு நிகழ்வில் பங்கேற்க வாய்த்தது மகிழ்வும் அளித்தது. .
செயலர் கே ஸ்ரீனிவாசராவ்

தலைவர் விஸ்வனாத் ப்ரசாத் திவாரி
கதை கவிதை ஆகியவை மானுட வாழ்வுடன் பின்னிப்பிணைந்திருப்பவை என்பதைத் தன் தலைமை உரையில்குறிப்பிட்ட  சாகித்திய அகாதமியின் தலைவர் விஸ்வனாத் ப்ரசாத் திவாரி ,நோபல்பரிசு பெற்றிருக்கும்  மிகப்பெரும் எழுத்தாளர்களும் கூடத் தங்கள் தாத்தா பாட்டியிடமிருந்து கதைசொல்லிகளாக உருப்பெற்றவர்கள்தான் என்றார். நாட்டுப்புறப்பகுதிகள் ,சிற்றூர்கள், நகர்ப்புறப்பகுதிகள் எனப்பல களங்களிலிருந்தும் - பலவகைக்கருத்துப்பின்புலங்களிலிருந்தும் உருவாகி வரும் பன்முகக்கலாசாரம் கொண்ட இந்தியக்கதைகளை இந்திய எழுத்தாளர்களே அறிந்து கொள்ள இந்த நிகழ்வு ஒரு வாய்ப்பு என்ற அவர் , அவரவர் எந்தக்கருத்தை எந்தநோக்கில் அணுகி எப்படி உள்வாங்கிக்கொள்கிறார்களோ அதைப்பொறுத்ததாகவே அந்தச்சிறுகதையின் வடிவமும் உள்ளடக்கமும் அமைந்திருக்கும் என்றார்.


இன்றைய இந்தியச்சிறுகதைகளின் போக்கைக்குறித்து சிறப்புரையாற்றிய திரு இ வி ராமகிருஷ்ணன் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் இந்திய மொழிக்கதைகள் பலவற்றையும் சாகித்திய அகாதமி வெளியீட்டுக்காகப்பல தொகுதிகளில் தொகுத்துத் தந்திருப்பவர். இந்தியமொழியின் மிகச்சிறந்த சிறுகதைகள் சிலவற்றைக்கோடிட்டு அவற்றின் தனித்துவமான தன்மைகளைச்சுட்டி அவர் ஆற்றிய உரை மிகச்செழுமையானது.

அகாதமியின் துணைச்செயலாளரும் இந்த நிகழ்வின் ஒருங்கிணைப்பாளருமான கீதாஞ்சலி சட்டர்ஜியின் நன்றியுரையோடு
 தொடக்க விழா முடிந்து அமர்வுகள் தொடங்கின.

முதல் கதையான காளையை மையமிட்ட -மனிதநேயத் தன்மை கொண்ட  அஸ்ஸாம் மொழிக்கதை.அசர அடித்து உறையச்செய்த ஒரு படைப்பு. தொடர்ச்சியாக இரண்டு நாட்களும் விடாமல் கொட்டிய கதைகளின் மழையில் நனைந்து குளிர்ந்தாலும் [வெளியில் உண்மையிலேயே ந...டு....க்...கும் குளிர்] பல அடிப்படைகளில் என்னை அந்தக்கதை மிகவும் ஈர்த்தது என்றே சொல்ல வேண்டும்.
’’பட மாடக்கோயில் பகவர்க்கு ஒன்று ஈயில்
நடமாடக்கோயில் நம்பர்க்கு அது ஆகா
நடமாடக்கோயில் நம்பர்க்கொன்று ஈயில்
பட மாடக்கோயில் பகவர்க்கு அது ஆமே’’
என்னும் திருமூலர் வாக்கை [இறைவனுக்குப்படைக்கும் நிவேதனங்கள் பசித்த மனிதனைச்சென்று சேர்வதில்லை;மாறாக ஓர் ஏழைக்கு அளிப்பது கடவுளைச்சேருகிறது] அஸ்ஸாம் மொழியில் யதார்த்தத் தளத்தில் கேட்பது மிகுந்த ஆனந்தத்தை அளித்தது.மேடைக்கே விரைந்து சென்று அதை வழங்கிய எழுத்தாளர் பிபுல் கட்டாரியாவை நான் மனம் நெகிழப்பாராட்டியதும், தொடர்ந்த இரண்டு நாள் பழக்கத்தில் என்னைத் தன் சகோதரியாகவே ஏற்ற  அவர்,தான் எழுதிய அஸ்ஸாம் மொழிச்சிறுகதைகளின் தொகுப்பொன்றை (தமிழ்நாட்டுச்சகோதரி சுசீலாவுக்கு அஸ்ஸாமிய சகோதரனிடமிருந்து...அன்புடன் என்று கையெழுத்திட்டு) எனக்குப்பரிசாக அளித்ததும் ஒரு தனிக்கதை. அதில் ஒரு அட்சரம் வாசிப்பது கூட என்னால் முடியாது என்பது அவரோ நானோ அறியாததல்ல. ஆனாலும் அதன் அடிநாதமாக உறைந்திருந்த ஏதோ ஒரு பிணைப்பு ,பிரெயிலி எழுத்துக்களைத் தடவி உணர்வதைப் போல அந்தச்சொற்களையும் அவர் இட்டுத் தந்த கையெழுத்தையும் வருடிப்பார்த்து மனம் கசிய வைத்துக்கொண்டிருக்கும் ..என்றென்றைக்குமாய்!
[விரைவில் அந்த அஸ்ஸாமியக்கதையின் தமிழாக்கத்தை வலைத்தளத்தில் அளிக்க அவரிடம் ஒப்புதலும் பெற்று விட்டேன்].

பிபுல் கட்டாரியா 
[கொஞ்சமாய் பாலு மஹேந்திரா சாயல் தெரியவில்லை?!}

போடோ மொழிக்கதை-அர்பிந்தோ உசிர்
பொதுவாக இந்தி,கன்னடம்,மலையாளம்,தெலுங்கு,வங்காளம் ஆகிய பிறமொழி இந்தியக்கதைகள் சிலவற்றை ஆங்கில /அல்லது மூல மொழி மொழியாக்கத்திலிருந்து தமிழ் வழி நாம் படித்திருக்க வாய்ப்பிருக்கிறது;சில குஜராத்தி மராத்தி உருது கதைகளையும் கூடத்தான்.ஆனால் போடோ,டோகிரி,மைதிலி,சிந்தி,கொங்கணி,சந்தாலி,கஷ்மீரி,நேபாலி ஆகிய மொழிக்கதைகளைத் தமிழில் படிக்கும் வாய்ப்பு மிகவும் குறைவுதான்;இப்படி ஒரு கதைஅரங்கம் வாய்த்ததால் அவற்றை ஆங்கிலத்தில் கேட்டுப்புரிந்து கொள்வதும்,இந்திய மொழிக்கதைகளின் சமகாலப்போக்கை ஓரளவாவது அறிந்து கொள்வதும் சாத்தியமாயிற்று.

நிகழ்வுகளில் பங்கேற்ற புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் பால்சக்காரியா குறிப்பிட்டதைப்போல சாகித்திய அகாதமியைப்பற்றிப்பல வகையான விமரிசனங்கள்,குறைகள் சொல்லப்பட்டாலும் அவற்றில் சில வேளைகளில் உண்மையும் இருந்தாலும் - இப்படிப்பட்ட ஒரு அமைப்பு மட்டும் இல்லாமல் போயிருந்தால் இத்தனை இந்திய எழுத்தாளர்களின் ஒருமித்த கூடுகையும் அவர்களிடையேயான ஆக்கபூர்வமான அன்புப்பிணைப்போடு கூடிய உரையாடல்களும்  சாத்தியமாகியிருக்க உண்மையிலேயே வாய்பிருந்திருக்காதுதான்.

நம்மூர் கிராமங்களில்  பார்க்கக்கூடிய பேயோட்டும் சடங்கு போன்ற மாயமந்திரவாதத்தின் அபத்தத்தைச்சுட்டிய மணிபுரிக்கதை, நாட்டின் எல்லைப்பிரிவினையால்  மனிதர்களுக்குள் ஏற்படுத்தப்படும் செயற்கையான பிளவுகளையும் அவற்றின் விளைவாக நிகழும் சிக்கல்களையும்  எடுத்துக்காட்டிய கஷ்மீரி மற்றும் உருதுக்கதை,ஆழ்ந்த தத்துவ உட்பொருள் தோய்ந்த பதஞ்சலி சாஸ்திரியின் தெலுங்குக்கதை,பொட்டில் அறைவது போன்ற வீச்சுடன் வந்து விழுந்த பால் சக்காரியாவின் மலையாளக்கதை,எளிமையான உள்ளடக்கம் கொண்ட வங்காள,போடோ,சிந்திக்கதை எனப்பல கதைகளும் இந்தியாவின் பன்முகத் தன்மையை அறைகூவியபடி இந்தியப்பெருமித உணர்வைத் தோற்றுவித்துக்கொண்டே இருந்தன.கதை வரிசையில் இந்திய ஆங்கிலத்துக்கும் இடம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து அளிக்கப்பட்டதால் கதைகளை ஓரளவு புரிந்து கொள்ள முடிந்தாலும் நுட்பமும் இருண்மையும் பொதிந்த கதைகளை ஒரே ஒருமுறை மட்டும் - அதிலும் அவ்வப்போது விளையும் இலேசான கவனச்சிதறலுடனும், கூட்டச்சலசலப்பு,ஒலிபெருக்கி மின்தடை போன்ற சிக்கல்களோடும்  கேட்டு முழுமையாக உள்வாங்கிக்கொள்வதென்பது  கடினமாகவே இருந்தது; கதைப்பிரதிகளை நகலெடுத்து விநியோகிக்க அமைப்பாளர்கள் ஒழுங்கு செய்யவில்லை என்றபோதும் நானும் வேறு சிலரும் நாங்களாகவே 20,25 பிரதிகள் ஒளி நகல் எடுத்து விரும்பிக்கேட்டவர்களுக்கு வழங்கினோம்;அப்படி எனக்குக் கிடைத்த கதைகளும் வேறு சிலரிடமிருந்து நானே கேட்டு வாங்கிய பிரதிகளும் [ஆங்கில மொழியாக்கத்தில் அமைந்தவை] இன்னொரு முறை அறைக்குப்போய்  வாசித்த பின் நன்றாகத் தெளிவுபட்டன,

எனக்கு ஓரளவு இந்தியில் பழக்கமிருந்தாலும்,பெரும்பாலான வடமாநிலப்படைப்பாளிகளுக்குப்போய்ச்சேர வேண்டுமென்று என் கதையையும் கூடப் பெருமுயற்சி எடுத்து[ஒத்திகை பார்த்து]இந்தியிலேயே வாசித்தாலும் கூட ஆங்கில மொழியாக்கக்கதைகளே என்னைப்போல அங்கு வந்திருந்த தென்மாநில மக்களை மிகுதியாய்ச்சென்றடைந்தன;மாறாக இந்தியில் வாசிக்கப்பட்ட கதைகளே அரங்கின் பார்வையாளர்களாக வரவழைக்கப்பட்டிருந்த உள்ளூர் மாணவ மாணவிகளை மிகுதியாக எட்டியதென்பதை  அவர்களின் ஆரவார ஒலிகள் காட்டிக்கொடுத்துக்கொண்டிருந்தன.
மங்கோலிய முகம் கொண்ட
மாணவப்பார்வையாளர்கள்



30,40 ஆண்டுக்காலமாக எழுதி வரும் மூத்த படைப்பாளிகள், மிக அண்மைக்காலத்திலேயே எழுதுகோலை ஏந்தத் தொடங்கி வெகுவேகமாகவும் லாவகமாகவும் இன்றைய இலக்கியத்தின் உச்சத்தைத் தொட்டு விட்ட இளைஞர்கள் - முழுநேர எழுத்தாளர்கள், இலக்கியப்பேராசிரியர்கள்,ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், படைப்பிலக்கியம்,ஊடகத் துறை சார்ந்த கல்விப்பணி செய்வோர், பிற தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் எனப் பலரையும் கூடுகையில் காண முடிந்தது; இவர்களில் பலரும் வழங்கிய இயல்புவாத,கற்பனாவாத,நவீனத்துவக்கதைகளுக்கிடையே  அற்புதமான பின் நவீனக்கதை ஒன்று மராத்தியில் வந்து விழுந்தது. அதை அளித்த  பிரஷாந்த் பாகத் என்ற இளைஞர் தன் கதை கூறல் வழியாக மட்டுமல்லாமல் எளிமையான தன்னடக்கத்தின் மூலமாகவும்  உள்ளங்களைக்கவர்ந்து கொண்டார்; ஐ ஐ டியில் தத்துவப்பேராசிரியராகப்பணியாற்றும் இவரே நான் கலந்து கொண்ட அமர்வையும் ஒருங்கிணைத்தவர்.

கதை வழங்கும் நான்
இடது கோடியில் ஓவர்கோட்டுடன் இருப்பவர்- பிரஷாந்த் பாகத்


1979இல் வெளிவந்து சிறுகதைப்போட்டி ஒன்றில் முதற்பரிசு பெற்ற எனது முதல்கதையான ’ஓர் உயிர் விலை போகிறதுஎன்னும் ஆக்கத்தை தில்லியிலுள்ள இந்திப்பேராசிரியரும் என் மதிப்புக்குரிய நண்பரும் மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளருமான டாக்டர் திரு எச் பாலசுப்பிரமணியம் அவர்கள் மிகவும் உயர்தரமான இந்திமொழிநடையில் பெயர்த்துத் தந்திருந்தார். என்னால் இயன்ற வரை அதை ஒழுங்காக அளிக்க முயற்சி எடுத்துக்கொண்டேன்;இந்தியில் அளித்ததாலேயே பலரின் ரசனையோடு கூடிய பாராட்டுக்களையும் பெற முடிந்தது.

கதைகள் ஆங்கிலத்திலோ இந்தியிலோ அளிக்கப்பட்டாலும் கூட ஒரு சில பகுதிகளை சொந்தமொழியிலேயே வாசிக்கலாம் என்றும் எல்லோருக்கும் எல்லா மொழிகளும் புரியாவிட்டாலும் கூட அதன்  இனிமையை இலேசாகவாவது  நுகரும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைப்பாளர்கள் எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததால் அவரவருக்குப்பிடித்த பத்தி ஒன்றைத் தங்கள் மொழியில் படித்த பிறகே மொழியாக்க வாசிப்பு நிகழ்ந்தது.நேபாளக்கதை வாசித்த எஸ் டி தகால் என்னும் எழுத்தாளர் ஆங்கிலத்தில் அதை அளிப்பதற்கு முன்பு அதன் சுருக்கம் முழுவதையும் ஏதோ ஒரு கவிதை ஒப்பிப்பதைப்போல வேகமாகச்சொல்லிக்கைதட்டல்களை அள்ளிக்கொண்டார்.

’’தேமதுரத் தமிழோசை சிக்கிமில் ஒலிக்க வழி செய்த சாகித்திய அகாதமிக்கு முதல் நன்றி’’என்று தமிழில் முன்னுரை அளித்தபடி என் கதை வாசிப்பைத் தொடங்கி அதன் முதல்பத்தியை மட்டும் தமிழில் படித்து விட்டு [பார்வையாளர்களின் 'திரு திரு!!' பார்வையை அதற்கு மேலும் நீடித்துக்கொண்டு போக விரும்பாமல்] இந்திக்குத் தாவினேன் நான்.
என்அமர்வில் கதைகள் வாசித்த
உருது சிந்தி படைப்பாளிகள்
ரஹ்மான் அப்பாஸ்,கிஷன் ரதானி

என் அமர்வில் உடன்பங்கேற்ற உருது எழுத்தாளர் அப்துல் ரஹ்மான் அப்பாஸைப்பற்றித் தனியே கொஞ்சம் சொல்லியே ஆக வேண்டும். காங்க்டாக் நகரில் நாங்கள் தங்கியிருந்த விடுதியை ஒட்டிய மகாத்மா காந்தி மார்க் பகுதியில் நான் வழக்கமான காலை நடை செல்லும்போதெல்லாம் எங்கிருந்தோ ஓடி வந்து ஒட்டிக்கொள்ளும் துடிப்பான இந்த இளைஞரைப்பற்றி அப்போது எனக்கு அதிகம் தெரிந்திருக்கவில்லை; நிகழ்வின் இரண்டாவது நாள் காலையிலும் என்னை வழி மறித்தவர் ‘இனிமேல் இந்த சுசீலா மேடத்தைப்பார்க்க எப்போது வாய்ப்புக்கிடைக்கப்போகிறது’ என்றபடி தன்னோடு வந்திருந்த சக சமஸ்கிருத எழுத்தாளரிடம் தன் கைபேசியைத் தந்து என்னோடு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.அந்த நேரத்திலும் கூட அவரை நான் தெரிந்து வைத்திருக்கவில்லை என்பது இந்த விநாடி வரை என்னுள் குற்ற உணர்வைக்கிளர்த்திக்கொண்டே இருக்கிறது.


                             காங்க்டாக் மகாத்மா காந்தி மார்க் வீதியில் 
                   உருது எழுத்தாளர் அப்துல் ரஹ்மான் அப்பாஸுடன்.
அன்று மதியம் நாங்கள் ஒன்றாக ஒரேஅமர்வில் பங்கேற்றபோது வழங்கப்பட்ட அவரது அறிமுகக்குறிப்பே அவரது வாழ்க்கை மற்றும் இலக்கியப்பின்புலங்களை எனக்கு வெளிச்சமிட்டது.

நாற்பத்திரண்டு வயதிலேயே உருது இலக்கியத்துக்கான தேசிய விருதுகளுக்குச் சொந்தக்காரரான அப்துல் ரஹ்மான் அப்பாஸ் மதஅடிப்படைவாதத்துக்கு எதிரான கருத்துக்களைத் தன் மூன்று உருது நாவல்களிலும் ஒலித்திருக்கிறார்;அதற்கான பரிசாக இலக்கிய அங்கீகாரங்கள் மட்டும் இவரைத் தேடி வரவில்லை;சிறை வாசங்களும் கூடத்தான்.இன்னும் கூட நிலுவையில் இருக்கும் வழக்குகளோடு போராடியபடி மும்பையில் முழுமூச்சாகப் படைப்பிலக்கியம் கற்பித்து வரும் இந்த மனிதரின் நேசம் நெடுந்தொலைவுகள் பிரித்தாலும் என்றும் நெஞ்சில் உறைந்திருக்கும்.

கதை அரங்க மேடையில்
நேபாள மொழிக்கவிஞர்கள்,ரஹ்மான் அப்பாஸ்,நான்


இந்த இலக்கிய நிகழ்வு எனக்களித்த மறக்க முடியாத மற்றுமொரு நட்பு டார்ஜீலிங்கிலிருந்து வந்து என்னோடு அறையைப்பகிர்ந்து கொண்ட நேபாள மொழிக்கவிஞரும் திறனாய்வாளருமான மோனியா முகியாவுடையது. நேபாளை இனத்தைச்சேர்ந்தவராயினும் இந்தியப்பிரஜையாகவே வாழ்ந்து வரும் கத்தோலிக்கக்கிறித்தவரான அவர்,மிகத் தேர்ந்த ஆங்கிலப்புலமை கொண்டவர். காட்சிக்கு மட்டுமல்லாமல் பழகுவதற்கும் எளிமையும் இனிமையும் கொண்ட அவரோடு ஒரே அறையில் மூன்று இரவுகளை இலக்கிய விவாதங்களிலும் பரிமாற்றங்களிலும் கழித்த இனிய தருணங்கள் என்றென்றைக்கும்மறக்கமுடியாதவை.

மோனிகா முகியாவுடன்.
காங்க்டாக்கின் கதைக்கூடுகையும் தாஷி டேலிக் விடுதியின் விருந்தோம்பலும் மிகச்சீரான அறை ஏற்பாடுகளும் மனதில் நிறைவான அனுபவங்களாக நிரம்பி வழிய மூன்றாம் நாள் அதிகாலைக்குளிரோடு மலையை விட்டுக்கீழிறங்கியபோது புதிது புதிதான நட்புக்கதைகள்பலவும் என்னைப்போலவே பலர் நெஞ்சிலும் அரும்பிக்கொண்டிருக்கக்கூடும் என்று எண்ணிக்கொண்டேன்.....




கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....