துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1.10.12

ஈழத்தமிழ் இந்தியில்....


ஓய்வுக்கே ஓய்வைத் தருவர்களாய் -ஊக்கமான மன எழுச்சியோடு ஆக்க பூர்வமான செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்களைக் காணும்போது மனம் சொல்ல இயலாத மகிழ்ச்சியில் மிதக்கும்; நாமும் அதை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும் என்னும் ஆர்வம் பெருகும்.
அண்மையில் அந்த மகிழ்ச்சியையும் பிரமிப்பையும் அளித்தவர்...80 வயதுக்கு மேலாகியும் தொடர்ந்து பல இலக்கிய முயற்சிகளில் ஈடுபட்டு வரும் புதுதில்லியைச் சேர்ந்த [ஓய்வு பெற்ற என்று அவரை எப்படிச் சொல்வது?] இந்திப்பேராசிரியர் டாக்டர் எச்.பாலசுப்பிரமணியம் அவர்கள்.

17.7.12

மொழி உறவுகள்-தில்லிகை

ஜூலை 14ஆம் நாளன்று நிகழ்ந்த தில்லிகை இலக்கிய வட்டக் கூட்டம் குறைவான பார்வையாளர்களோடு தொடங்கினாலும் நிறைவான மகிழ்வை அளிப்பதாக அமைந்திருந்தது.

இந்தி-தமிழ் உறவு பற்றிப் பேசிய திரு ஷாஜகான் அவர்களின் உரை வங்கம்,மராத்தி,மலையாளம் ஆகிய மொழிகளோடு தமிழுக்கு நேர்ந்திருக்கும் விரிவான தொடர்புகளையும் முன் வைத்தது.
திரு ஷாஜகான்(புதியவன்)

வங்கத்திலிருந்து தமிழுக்கு அரிய பல நூல்களைக் கொணர்ந்த தொடக்க காலகட்டத்தைச் சேர்ந்த த.நா.சேனாபதி,த.நா.குமாரசுவாமி தொடங்கி இன்று அப்பணியை முழு மூச்சாகச் செய்து வரும் கல்கத்தா கிருஷ்ணமூர்த்தி வரை பல மொழிபெயர்ப்பாளர்களையும் சுட்டிக் காட்டிய ஷாஜகான், காண்டேகர் மராத்தியில் பெற்ற புகழை விடவும் அவரது மொழிபெயர்ப்பாளராக வாய்த்த கா.ஸ்ரீ.ஸ்ரீயால் தமிழில் பெரிதும் அறியப்பட்டதையும் எடுத்துக் காட்டினார்.இந்தியில் சரஸ்வதி ராம்நாத்தில் தொடங்கி இன்று தொல்காப்பியத்தை இந்தியில் கொணர அரிய முயற்சி மேற்கொண்டுவரும் சாகித்திய அகாதமி விருது பெற்ற எச்.பாலசுப்பிரமணியம் வரை பலரின் செயல்பாடுகளும் அவரது உரையில் விரிவாகக் காட்டப்பட்டன.இன்றைய தலைமுறை இலக்கிய ஆர்வலர்களுக்கு அவரது உரை பெரிதும் முன்மாதிரியாக,பயனுள்ளதாக அமைந்திருந்தது.
[முழுஉரையினையும் திரு ஷாஜகானின் தளத்தில் காணலாம்]

கொங்கணி-தமிழ் உறவு குறித்துப் பேசியவர் ஜே என் யூ பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ்ச்செல்வன்.
தமிழ்ச்செல்வன்..
கொங்கணி சார்ந்தே தன் முனைவர் பட்டத்தையும் தொடர்ந்து வரும் அந்த மாணவர் முன் வைத்த செய்திகள் அதிகம் அறியப்படாதவை;பரவலான தளத்தில் இன்னும் அறிமுகமாகாதவை.பெரு முயற்சி மேற்கொண்டு கொங்கணி மொழியைக் கற்று அம்மொழியிலிருந்து நேரடியாகவே தமிழுக்கு இரு சிறுகதைகளை மொழிபெயர்த்தும் அளித்திருப்பவர் தமிழ்ச்செல்வன்.அக்கதைகள் அவரது எம் ஃபில்பட்ட ஆய்வேட்டில் இடம் பெறிருப்பதோடு அண்மையில் அவற்றில் ஒரு படைப்பான ’சிடுமூஞ்சி’ என்னும் சிறுகதை ‘திசை எட்டும்’ இதழிலும் வெளிவந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க ஒரு செய்தி.
பார்வையாளர்களில் நான்,பேராசிரியர் நாச்சிமுத்து
ஷாஜகான்,பதிவர் வெங்கட்
’’வெளிச்சத்தைப் பற்றி ஏன் விரிவுரை ஆற்றுகிறாய்..விளக்கை ஏற்று’’என்கிறது அப்துல் ரஹ்மானின் கவிதை ஒன்று...
அத்தகைய சிற்றகல்களை ஏற்றி இளம் நெஞ்சங்களில் இலக்கிய ஆர்வத்துக்கான பொறிகளைப் பதிய வைக்கும் உள்ளார்ந்த ஈடுபாட்டுடனான இத்தகைய நிகழ்ச்சிகளும்  இன்றில்லை எனினும் என்றோ...எப்பொழுதோ...எவருக்கோ பலனளிக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றனஎன்று நானும் ஜே என் யூ பேராசிரியர் திரு நாச்சிமுத்துவும் சொல்லிக் கொண்டோம்...

இக்கூட்டத்துக்கான முன் முயற்சிகளில் முழு வீச்சுடன் இயங்கி வரும் திரு ஸ்ரீதரன் ஐ எஃப் எஸ் அவர்களும் விஜய்ராஜ்மோகன் மற்றும் துணை நிற்கும் நண்பர்கள் அனைவரும் நம் பாரட்டுக்குரியவர்கள்...


11.7.12

‘தில்லிகை’ -ஜூலை நிகழ்வு

புதுதில்லி இலக்கிய ஆர்வலர்களின் முயற்சியால் தொடங்கப்பட்டிருக்கும் ‘தில்லிகை’ இலக்கிய வட்டத்தின் ஜூலை மாதக் கூட்டம் 14 ஜூலை 2012, இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு நிகழவிருக்கிறது.

இடம்;தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புது தில்லி. [பாரதிஅரங்கம்]





7.6.12

தில்லிகை-ஜூன் நிகழ்வு


புதுதில்லி இலக்கிய ஆர்வலர்களின் முயற்சியால் தொடங்கப்பட்டிருக்கும் ‘தில்லிகை’ இலக்கிய வட்டத்தின் ஜூன் மாதக் கூட்டம் 9 ஜூன் 2012. இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு நிகழவிருக்கிறது.
இடம்;தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புது தில்லி. [பாரதிஅரங்கம்]

இலக்கியச் சந்திப்பின் கருப்பொருள் ; தில்லியும் தமிழ் இலக்கியமும்

15.3.12

அம்பையுடன் ஒரு மாலை-2

’’சந்திக்கும்போது மகிழ்வைத் தருவதாகவும்…பிரியும்போது அதையே எண்ணி அசை போட வைப்பதாகவுமே சில சந்திப்புக்கள் அமைந்து விடுகின்றன.அம்பையுடனான சந்திப்பும் அப்படித்தான் எனக்குள் சுழன்று கொண்டே இருக்கிறது...’’
…அம்பையுடன் ஒரு மாலை--1..இன் தொடர்ச்சி.
கல்லூரிப் படிப்பு முடிந்ததும் கடலூர் அருகிலிருந்த ஒரு சிற்றூரில் தான் ஆசிரியப்பணி ஆற்றியபோது நிர்வாகத்தின் தவறான போக்குகளோடு சமரசம் செய்து கொள்ள உடன்படாததால் தனக்கு நேர்ந்த சில அனுபவங்களையும்,அவற்றின் விளைவாக அந்தப் பணியிலிருந்து விலகி உயர்கல்வியைத் தொடரத் தான் சென்றதையும் தன் உரையில் தொடர்ந்து விவரித்தார் அம்பை.
அதிகம் எழுதிக் குவித்தாக வேண்டும் என்னும் எண்ணம் தனக்கு எப்போதுமே இருந்ததில்லை என்ற அம்பை , அவ்வப்போது ஏற்படும் மன உந்துதல்களே தன் கதைகளுக்குக் காரணமாவதால், சில வேளைகளில் தன் கதைகள் வெளிவருவதில் அவ்வப்போது தவிர்க்க முடியாமல் இடைவெளிகள் நேர்ந்து விடுகின்றன என்றார்.

13.3.12

’தில்லிகை’யில் மதுரை

ராம் மோகன் ,                 நான் ,                                                     விஜய்ராஜ்மோகன்
மல்லிகைக்குப் பெயர் பெற்ற மதுரையைக் கருப்பொருளாகக் கொண்டே தில்லியில் தொடங்கிய தில்லிகை இலக்கிய வட்டத்தின் முதல் கூட்டமும் நிகழ்ந்ததும் அதில் நானும் உரையாற்ற வாய்த்ததும் ஓர் இனிய பொருத்தம்.

8.3.12

’தில்லிகை’இலக்கிய வட்டம்

புதுதில்லியின் இலக்கிய ஆர்வலர்கள் சிலரது சீரிய முயற்சியால்‘தில்லிகை’என்னும் இலக்கிய வட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.திரு மா. அண்ணாதுரை, திரு விஜய் ராஜ்மோகன், திருமதி சாய் அமுதா தேவி,திரு எம்.ஸ்ரீதரன்[சீன இலக்கியத்தின் நேரடித்தமிழ் மொழிபெயர்ப்பாக-’வாரிச் சூடினும் பார்ப்பவர் இல்லை’என்னும் தலைப்பில் அண்மையில் கவித்தொகை நூலை வெளியிட்டவர்]ஆகியோர் இதனை உருவாக்கி முன்னெடுத்துச் செல்வதற்கான முயற்சியில் ஆர்வத்துடன் முனைந்து செயலாற்றி வருகின்றனர்.


’தில்லிகை’யின் முதல் இலக்கியக் கூட்டமும் தொடர்ந்து கலந்துரையாடலும் வரும் சனிக்கிழமை 10/3/12-பிற்பகல் மூன்று மணியளவில் தில்லி தமிழ்ச்சங்க பாரதி அரங்கில் மதுரையை மையப்பொருளாகக் கொண்டு நிகழவிருக்கிறது.நானும் இக்கூட்டத்தில் பங்கேற்றுச்’சிலப்பதிகாரத்தில் மதுரை’என்ற தலைப்பில் உரையாற்றவிருக்கிறேன்.தில்லி வாழ் தமிழ் அன்பர்கள் இதையே அழைப்பாக ஏற்றுக் கூட்டத்தில்கலந்து கொள்ள வேண்டுமென ’தில்லிகை’யின் சார்பாக நானும் அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்.
மேலும் தொடர்புக்கு..


அம்பையுடன் ஒரு மாலை-1

சர்வதேச மகளிர் தினத்தின் நேற்றைய முன் மாலைப் பொழுதில்[7/3/12] நான் மதிக்கும் மிகச் சிறந்த நபர்களில் ஒருவரான எழுத்தாளர் அம்பையோடு- இனிமையான தற்செயலாக  ஒரு சந்திப்பு எனக்கு வாய்த்தது. அவர்களும் அதை அவ்வாறே குறிப்பிட்டதும்,முந்தைய நட்பின் எளிமையோடு என்னை ஆரத் தழுவி அன்பு பாராட்டியதும் என் வாழ்வின் பேறுகளில் ஒன்று. 
2010இல் அம்பை தில்லி வந்தபோது...
’80களிலேயே எனக்கு அறிமுகமாகிப் பின் பழக்கமுமான அம்பை தமிழ்ப் பெண் எழுத்துக்களில் மிகப் புதிதான பரிமாணத்தைத் தன் எழுத்துக்களால் கொணர்ந்தவர்;’80களுக்குப் பின் எழுதப்பட்ட தீவிரமான பெண்ணிய எழுத்துக்கள் பலவும் அம்பையின் தாக்கத்தில் வேர் கொண்டவையே.

15.2.12

காவல் கோட்டம்’-சில பகிர்வுகள்-2

காவல் கோட்டம் நாவல் குறித்த பகிர்வுகளைத் தொடரும் முன் தில்லி தமிழ்ச்சங்கம் நிகழ்த்திய பாராட்டு விழா குறித்த சில செய்திகள்..
தில்லி தமிழ்ச்சங்கம் நிகழ்த்திய பாராட்டு விழாவில்
சு வெங்கடேசனுடன்..
.

என் வாழ்த்துரை..
சு வெங்கடேசனின் ஏற்புரை..
டி கே ரங்கராஜன் எம்.பி.உரையாற்றுகிறார்..
.தில்லியின் மூத்த பத்திரிகையாளரும் இதழாளருமான காலம் சென்ற 
எழுத்தாளர் திரு ஏ ஆர் ராஜாமணி அவர்களது நினைவுக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் முடிந்த பின்பு துவங்கியதாலும் புதன்கிழமை வேலை நாள் என்பதாலும் சாகித்திய அகாதமி விருது பெற்ற வெங்கடேசனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பாராட்டு விழா சற்றுத் தாமதமாகவே தொடங்கியது; என்றாலும் மனதுக்கு நிறைவளிக்கும் ஒரு விழாவாக அது அமைந்து விட்டதற்கு முதன்மைக் காரணம் அரங்கிலிருந்த பார்வையாளர்கள். வந்தவர்களின் எண்ணிக்கை குறைவுதான்; அவர்களிலும் நூலைப் படித்தவர்கள் இன்னும் கூடக் குறைவுதான் என்றபோதும் நாவல் பற்றிய உரைகளைக் கூட்டத்தினர் ஆர்வத்தோடு உள்வாங்கிக் கொண்டதும் நாவலைப் படிக்க வேண்டும் என்னும் ஆர்வத்தை இந்தக் கூட்டத்தின் மூலம் பெற்றதாக நிகழ்ச்சியின் இறுதியில் பகிர்ந்து கொண்டதும் மகிழ்ச்சியளித்தது. 


பேச்சாளர்களின் உரைகளும் கூட,மேலெழுந்தவாரியான வெறும் பாராட்டுரைகளாகப் போய் விடாமல்,நாவலை ஒட்டிய பலவகையான தகவல்களை விரித்துரைப்பதாக அமைந்தது பொதுவாக இந்தவகையான கூட்டங்களில் அரிதாகவே வாய்க்கக் கூடிய ஒன்று.


திரு முத்து இருளன், நான், விஜய் ராஜ்மோகன் ஆகிய மூவரும் நாவல் குறித்த பலவகையான பார்வைகளை முன் வைத்த பிறகு மார்க்ஸிஸ்ட் கட்சியின் எம் பி திரு டி கே ரங்கராஜன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.அந்த உரை சற்று நாவலுக்கு வெளியில் சஞ்சரித்தாலும் கூடச் சூழலுக்குப் பொருத்தமானதாகவும் தமிழ் சாகித்திய அகாதமி உருவாக வேண்டும் என்பது போன்ற ஆக்க பூர்வமான யோசனைகளை முன் வைப்பதாகவுமே அமைந்திருந்தது.சாகித்திய அகாதமியின் தலைவராகப் பண்டித நேரு பொறுப்பேற்றிருந்தபோது அவர் போட்ட முதல் ஆணை தன் எந்தப் படைப்புக்கும் அந்தவிருது வழங்கப்படக் கூடாது என்பதுதான் என்னும் செய்தியை அவையில் அவர் பகிர்ந்து கொண்டபோது முந்தைய தலைவர்களின் நேர்மைத் திறனையும்,இன்றைய சூழலின் அவலத்தையும் ஒரு கணம் ஒப்பு நோக்கிப் பார்க்காமல் இருக்க இயலவில்லை.


நிகழ்ச்சியின் உச்சம் சு வெங்கடேசனின் ஏற்புரை. நாவல் உருவாக்கத்தில் தனது பத்தாண்டுக் காலஉழைப்பை - முயற்சியை தேடல்களை அவையில் விரிவாக முன் வைத்த அவர் தமிழ்நாட்டில் ஒரு எழுத்தாளனாக உருப்பெறுவதும்,அங்கீகாரம் பெறுவதும் அத்தனை எளிதான காரியம் ஒன்றும் இல்லை என்பதைத் தன் உரையில் நிறுவ முற்பட்டார்.


எங்கோ மூலையில் கிடைத்த ஒரு சிறு ஆவணம் நாவலுக்கான சிறு பொறியைத் தன் உள்ளத்தில் விதைத்ததையும், அதைத் துரத்தித் தேடிப் பிடிக்கச் செய்த முயற்சியே இத்தனை பக்க நாவலாக உருப்பெற்றதையும் விவரித்த அவர் இந்த நாவல் குறித்த சர்ச்சைகளும்,விவாதங்களும் பெருகப் பெருக இதைத் தேடிப் படிப்பவர்களின் எண்ணிக்கையும் கூடியது என்பதையும் குறிப்பிடத் தவறவில்லை. கி ராஜநாராயணனின் கோபல்ல கிராமம்[வாய்மொழிக் கதைகளை மட்டும் சார்ந்த இனக்குழு வரலாற்றுப் பதிவு], பிரபஞ்சனின் வானம் வசப்படும்[ஆனந்தரங்கம் பிள்ளையின் டயரிக் குறிப்புக்களை வரலாற்று நிகழ்வுகளாகக் காட்சிப்படுத்தல்] ஆகிய இரு நாவல்களும் வித்தியாசமான முறையில் இந்த நாவலை எழுதவும் அணுகவும் தனக்கு முன்னோடியாக இருந்தன என்பதைச் சுட்டிக் காட்டிய அவர்  இந்த இரு அணுகு முறைகளையும் ஒருங்கிணைத்தபடி,தன் முன்னோடிகளின் தோள் மீது ஏறி அடுத்த கட்டத்தை நோக்கிய பயணத்தைத் தன் நாவலில் தொடர்ந்திருப்பதாகவும் விவரித்தார்.


இளம் வயதில் சாகித்திய அகாதமி பெறுபவர் என்னும் கருத்து தன்னைப் பற்றி முன் வைக்கப்படுவது பற்றிப் பேசுகையில் ஜெயகாந்தன் தனது 38ஆம் வயதில் ’சிலநேரங்களில் சில மனிதர்க’ளுக்கான விருதைப் பெற்றபோது இதை விடப் பலமான சர்ச்சைகள் எழுந்தததை நினைவு கூர்ந்தார். கேரளத்தில் 30 வயதுக்கு உட்பட்ட படைப்பாளிக்குக் கூட இந்த விருது கிடைத்து வருகையில் தமிழகத்தில் மட்டுமே வயது விருதுக்கு ஒரு பிரச்சினையாகக் கொள்ளப்படுவதை எடுத்துக் காட்டிய வெங்கடேசன், அந்த அடிப்படையிலேயே இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’ விருதுக்குத் தப்பிப் போன அவலத்தையும் சுட்டிக் காட்டினார்.கடந்த பத்தாண்டுக் காலத்தில் தமிழ்ப் புனைவுலகில் இளம் படைப்பாளிகளின் எண்ணிக்கையும்,எழுத்துத் தரமும் மிகச் சிறப்பாகத் துலங்குவதைப் பல சான்றுகளுடன் [ஜோ டி குரூஸின் ‘ஆழி சூழ் உலகு’,சு வேணுகோபாலின் ‘வெண்ணிலை’,ஃபிரான்சிஸ் கிருபா போன்றோரின் ஆக்கங்கள்] விவரித்த வெங்கடேசன் அந்த இளைஞர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான ஒரு குறியீடாகவே இந்த விருதைக் கொள்வதாகவும் -அதிலும் விருது தனக்கு என்பதை விடவும் ‘காவல் கோட்டம்’என்னும் படைப்புக்கு என்பதிலேயே தான் பெருமிதம் கொள்வதாகவும் கூறித் தன் உரையை நிறைவு செய்தார்.

(காவல் கோட்டம் நாவல் குறித்த பகிர்வுகள் மேலும் அடுத்த பதிவில்...)
காவல் கோட்டம்’-சில பகிர்வுகள்-1

30.7.11

’தேவந்தி’யின் கணம்...


திரு ஒய்.எஸ்.ராஜன்,சி.டி.சனத்குமார்,தமிழ்ச்சங்கத் தலைவர் 
ஆகியோருடன் மேதகு அப்துல் கலாம்

வாழ்வின் சில கணங்கள் ..என்றென்றும் நினைவுகூரத்தக்க அபூர்வமான வினாடிகளாக வாய்த்து மனதுக்குள் நிலைத்து விடுகின்றன.
அவ்வாறான ஒரு தருணம்...வெள்ளி( 29/7/11) மாலை மேதகு அப்துல் கலாம் அவர்கள் ‘தேவந்தி’ நூலை வெளியிட்ட கணம்...!


சுப்புடு நினைவாய் வடக்கு வாசல் நிகழ்த்திய இசை விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இசை விமரிசகர் சுப்புடு பற்றிய தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட திரு அப்துல் கலாம் அவர்கள்,அதே அரங்கில் வடக்கு வாசல் பதிப்பக நூல்களை வெளியிட்டதோடு ஒவ்வொரு நூல் குறித்தும் சில குறிப்புக்களைத் தன் உரையில் சேர்த்துப் பேசியது, ஒவ்வொரு நிகழ்வுக்கும் முக்கியத்துவம் அளித்துக் குறிப்பிட்ட நபர்களைக் கௌரவிக்க வேண்டும் என எண்ணும் அந்த அந்த மாமனிதரின் பெருந்தன்மைக்கு ஒரு சான்றாக அமைந்தது.


எனது ‘தேவந்தி’தொகுப்பை வெளியிட்ட அவரிடம் அருகில் சென்று பிரதியைப் பெற்றபோது...
‘இராமனைப் பத்தி ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்கம்மா...’
என்று இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார் அவர்..
தேவந்தி நூல் பற்றி என்னிடம் பகிர்ந்து கொள்ளும் திரு அப்துல் கலாம் .
அருகில் வடக்கு வாசல் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன்


தொகுப்பில் இரு கதைகள் இராமன் சார்ந்தவை என்பதால் எந்தக் கதை பற்றி அவர் குறிப்பிடுகிறார் என்பதில் எனக்கு ஏற்பட்ட குழப்பம்,
அவர் உரை நிகழ்த்தியபோதுதான் தீர்ந்தது..
அரச பதவி கையில் இருந்தும் சமூகச்சமநீதி வழங்க அதைப் பயன்படுத்தத் தவறிய இராமனைக் குறித்து 
‘சாத்திரம் அன்று சதி!’’(செம்மலர் இதழில் வெளிவந்த சிறுகதை)
என்ற கதையில் நான் சுட்டிக் காட்டியிருந்தேன்..
நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்த திரு கலாம் குறிப்பாக அதை மேற்கோள் காட்டிச் சற்று விரிவாகவே பேசியபோது...
’அந்தத் தொகுப்பில் எத்தனையோ கதைகள் இருக்கும்போது மிகச் சரியாக அந்தக் குறிப்பிட்ட கதை அவர் கண்ணில் பட்டது எப்படி ’என்ற வியப்பு என்னில் ஒட்டிக் கொண்டது.
மனம் எந்த திசையில் செல்கிறதோ..அதை ஒட்டிய பார்வைதானே முதன்மை பெற முடியும்!
அவரது கவனம் நாட்டு நலன்..சமூக மேன்மை...!
அதைச் சார்ந்த கதைக்கு அவர் சிறப்பிடம் தந்து பேசியது நான் பெற்ற பெரும்பேறு.
(விரைவில் அந்தக் கதையை வலையேற்றம் செய்கிறேன்)


தமிழை எழுதப் படிக்கத் தொடங்கிய நாள் தொடங்கி என் கதைகளை முதன்முதலாகப் படித்து ,விமரித்து,விவாதித்து அதை மேலும் செழுமையாக்க-செம்மையாக்க ஆலோசனைகளைத் தந்து ஊக்குவித்து வரும் வரும் முதல் வாசகியான என் மகள் மீனு பிரமோதுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.
ஆனால்...தற்செயலாக விழாவன்று காலையில் வடக்கு வாசல் ஆசிரியர் என்னைத் தொலைபேசியில் அழைத்து என் நூலின் முதல் பிரதியைத் 
திரு அப்துல் கலாமின் கரங்களிலிருந்து என் மகளே பெற வேண்டும் எனக் கூறியபோது இன்னுமொரு இனிய அதிர்ச்சி..மகிழ்ச்சி..
நூலின் முதல் பிரதியைப் பெறும் என் மகள் மீனு பிரமோத்
புதுதில்லியின் வலைப் பதிவர்களில் ஒருவரும்,கவிதை,கதை,கட்டுரை முதலிய ஆக்கங்களை உருவாக்கும் ஆர்வத் தேடலும் செயல்துடிப்பும் கொண்டவரும்,என்னிடத்தில் ஒரு மகனைப் போன்ற பிரியம் கொண்டிருப்பவருமான திரு தேவராஜ் விட்டலன் என் தொகுப்பின் இன்னொரு பிரதியைத் திரு கலாம் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டது மற்றுமொரு மகிழ்வான கணம்..
நூலின் பிரதியைப் பெறும் திரு தேவராஜ் விட்டலன்
‘70 களில் மதுரை பாத்திமாக் கல்லூரியில் என்னிடம் பயின்று,தற்போது தில்லியில் வசிக்கும் என் அன்பு மாணவி மீனாஷி இந் நிகழ்வுகளைப் புகைப்படமாக்கி உடன் எனக்கு அஞ்சலிட்டது ..அதுவும் ஒரு பேரின்பம்..
(என் மாணவி மீனாஷி அனுப்பி வைத்த புகைப்படம்)
இத்தனை மகிழ்வான கணங்களை ஒருசேர அளித்து வாழ்வில் மறக்க முடியாத ஒரு நாளைத் தந்த வடக்கு வாசலுக்கும் அதன் ஆசிரியருக்கும் என் வந்தனம்.







28.7.11

’தேவந்தி’சிறுகதைத் தொகுப்பு வெளியீடு...

1979ஆம் ஆண்டு முதல் 2009 வரை நான் எழுதிப் பல இதழ்களில் வெளிவந்துள்ள சிறுகதைகளில் தேர்ந்தெடுத்த 36 சிறுகதைகளின் தொகுப்பான
                                                 ‘தேவந்தி’
இன்று- வெள்ளிக்கிழமை 29.7.11 மாலை வெளியாகவிருக்கிறது.




26.7.11

கட்டியம்


(29.7.11 வெள்ளியன்று வெளியிடப்படவிருக்கும் ‘தேவந்தி’ சிறுகதைத் தொகுப்பிற்கு  வடக்கு வாசல் இலக்கிய இதழின் ஆசிரியர் திரு யதார்த்தா கி.பென்னேஸ்வரன் அவர்கள் எழுதிய பதிப்புரை)

கட்டியம்
சுசீலாம்மா என்று இங்கு எங்களால் அன்புடன் அழைக்கப்படும் எம்.ஏ.சுசீலா, தன்னை முனைவர் என்று அழைக்கப்படுவதையும் ஓய்வு பெற்ற பேராசிரியர் என்று விளிப்பதையும் அறவே தவிர்க்க விழைபவர்.   தலைநகர் வாழ்க்கையில் அவருக்குக் கிட்டும் மிகக் குறைந்த அவகாசத்தில்,  தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கங்கள், யோகக் கலை, தியானம், தீவிர வாசிப்பு, வலைத்தளத்தில் எழுதுதல் எனப் பல்வேறு பணிகளில் தீவிரத்துடன் இயங்கி வருகின்றவர்.  நம்மை அயரவைக்கும் உழைப்பு அவருடையது.

24.7.11

வடக்கு வாசலும், நானும்....

’’மொழி சார்ந்து எழுப்பப்படும் வெற்றுக் கோஷங்களை விட இவ்வாறான தனி மனிதத் தியாகங்களும் - முனைப்பான செயல்பாடுகளுமே தமிழைத் தூக்கி நிறுத்த இன்று தேவையானவை.’’


என் கல்லூரிப் பணி நிறைவு பெற்றதும் புது தில்லிக்குத்தான் வர வேண்டியிருக்கும் என்பது முடிவான அந்த மார்ச் 2006 இல்...எனக்கு முதன்முதலாக ‘வடக்கு வாசல்’ இலக்கிய -மாத இதழின் பெயரை அறிமுகம் செய்து வைத்தவர் என் மதிப்பிற்குரிய நண்பர்,பேராசிரியர் முனைவர் தொ.பரமசிவன் அவர்கள்(மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக் கழகப் பேராசிரியராகப் பணியாற்றியவர்)......
திரு கி.பென்னேஸ்வரன்
அபாரமான வாசிப்பு ஞானமும்,தமிழ் சார்ந்த தகவல் கலைக்களஞ்சியம் என்று சொல்லக்கூடியவருமான பரமசிவன் அவர்கள்,நான் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ் முதுகலை பயின்றபோது என்னைத் தொடர்ந்து அதே கல்லூரியில் தமிழ் கற்றவர்.

நான் பணியாற்றிய பாத்திமா கல்லூரிப் பாடத் திட்டக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த அவர்,நான் தில்லி செல்லவிருப்பதைத் தற்செயலாக அறிந்தவுடன் வடக்கு வாசலின் பெயரை ஓர் இலக்கியப்புகலாக என்னிடம் பரிந்துரைத்தார்.அப்போதைக்கு அவர் சொன்ன அந்தக் குறிப்பை என் நெஞ்சின் மூலையிலும்,குறிப்பேட்டிலும் பதிந்து கொண்டேன்..

தில்லி வந்து இந்தச் சூழலும் ஓரளவு பழகிப் போகத் தொடங்கிய பிறகே எனது அறிமுகம் வடக்கு வாசலுடனும் அதன் ஆசிரியர் கி.பென்னேஸ்வரன் (ராகவன் தம்பி)அவர்களுடனும் நேர்ந்தது.

வடக்கு வாசல் இசை விழா,நூல் வெளியீடு

புது தில்லியிலிருந்து வெளியாகும் வடக்கு வாசல் இலக்கிய இதழ் சார்பில் எதிர்வரும் 29,30,31(ஜூலை) ஆகிய மூன்று நாட்களும் 
இசை விமரிசகர் அமரர் திரு சுப்புடு அவர்களின் நினைவாக மாபெரும் இசை விழா நிகழவிருக்கிறது.

முதல்நாள் 29.7.11.7.11-வெள்ளி மாலையன்று...
இசை விழாவின் தொடக்கத்தில் கீழ்க்காணும் ஐந்து நூல்கள்,முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு அப்துல் கலாம் அவர்களால் வெளியிடப்படவிருக்கின்றன.
எனது சிறுகதைத் தொகுப்பான ‘தேவந்தி’யும் அவற்றில் ஒன்று..
இதையே அழைப்பாக ஏற்று அனைவரும் வருகை புரிந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்..

30.5.11

தில்லியிலிருந்து ’தினமணி..’

’தினமணி’ நாளிதழ் ஜூன் மாதத்திலிருந்து புதுதில்லிப் பதிப்பாகவும் வெளிவரவிருக்கிறது.
தில்லி வாழ் தமிழர்கள் அனைவரும் வரவேற்றுப் போற்றவேண்டிய நற்செய்தி இது.
ஜூன் 3ஆம் தேதி நிகழவிருக்கும் வெளியீட்டு விழாவில்
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு குரேஷி அவர்கள் முதல் இதழை வெளியிட்டுச் சிறப்பிக்கவிருக்கிறார்.


பி.கு;
தில்லிப் பதிப்பை ஒட்டி வெளிவரவிருக்கும் தினமணி-சிறப்பு மலரில்
‘வைகையிலிருந்து யமுனைக்கு’என்ற என் கட்டுரையும் இடம் பெற்றிருக்கிறது.
மலர் வெளியான பின் என் வலைத் தளத்திலும் அது வெளியாகும்.

25.4.11

மொழியாக்கம் - கலந்துரையாடல்

மொழியாக்கத்தின் பொதுவான இயல்புகள் குறித்தும்,
தஸ்தயெவ்ஸ்கியின் இருபெரும் படைப்புக்களை (குற்றமும் தண்டனையும்,அசடன்) மொழிபெயர்ப்புச் செய்கையில் நான் பெற்ற அனுபவங்கள் மற்றும் எதிர்ப்பட நேர்ந்த சிக்கல்கள் குறித்தும் புதுதில்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் தமிழ்மொழிப் புலத்தில் ஆய்வு மேற்கொண்டிருக்கும் மாணவர்களோடு கலந்துரையாட வருமாறு, தமிழ் மொழிப்புலத்தின் துறைத் தலைவர் முனைவர் பேராசிரியர் கி.நாச்சிமுத்து அவர்கள் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

12.3.11

மீட்டுருவாக்கப் படைப்புக்கள்...


இன்றைய நவீனப்படைப்புலகிலும்,திறனாய்வுத் தளத்திலும் பரவலாகப் பேசப்படும் கருத்தியல்களுள் - மறுவாசிப்பு /மீட்டுருவாக்கம் என்பது, சிறப்பான கவனத்தைப் பெற்றிருக்கிறது.
ஒரு திறனாய்வாளன் மறுவாசிப்பு செய்கையில்

9.3.11

’கதா’வில் ஜெயகாந்தன் சிறுகதைகள் குறித்த கலந்துரையாடல்..

கீதா தர்மராஜன் என்பவரால் (1989ஆம் ஆண்டில்) புது தில்லியில் துவங்கப்பட்ட
  ’கதா’ என்னும் தன்னார்வ அமைப்பு,குழந்தைகள் நலனிலும் முன்னேற்றத்திலும் சமூக வளர்ச்சித் திட்டத்திலும் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வருகிறது.
’கதா’ என்னும் தனது பெயருக்கேற்ப,  நல்ல கதைகள் மற்றும் நூல் வாசிப்புக்களை அடித்தளமாகக் கொண்டு சிறுவர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தூண்டுகோல் அளிப்பது கதாவின் குறிப்பிடத்தக்க தனித்தன்மையாக விளங்கி வருகிறது.
வாசிப்பை ஓர் இயக்கமாக்கியபடி, பிற பொது வாசகர்களிடம் நல்ல இந்திய மொழிக் கதைகளைக் கொண்டு செல்லும் பணியினையும்,அவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடும் பணியினையும் கூட

17.2.11

நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து (3) நாஞ்சிலின் ஏற்புரை

ஏற்புரை வழங்கும்
நாஞ்சில் நாடன்
.பாராட்டு விழாவுக்கே உரிய வழக்கமான சம்பிரதாயங்கள்...மாலை,சால்வை மரியாதைகள் முடிவதற்குச் சிறிது நேரமாகி விட்டபோதும் -
ஊசி குத்தும் குளிரிலும் தனது நிறைவுரைக்காக ஆவலுடன் காத்துக் கிடந்த சிறு கூட்டத்தை ஏமாற்றத்துக்கு ஆளாக்கி விடாமல் அரியதொரு உரையை நிகழ்த்தினார் நாஞ்சில் நாடன்.

16.2.11

நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து (2)

சாகித்திய அகாதமி விருது பெற்ற திரு நாஞ்சில் நாடனுக்குத் தில்லி தமிழ்ச்சங்கம் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழா 16/02/11 மாலை மிகச் சிறப்பாகநடைபெற்றது.
தில்லித் தமிழ்ச்சங்கப் பாராட்டு விழாவில் நாஞ்சில் நாடன்

 பிப்ரவரி பிறந்ததிலிருந்து சிறிது அடங்கத் தொடங்கியிருந்த குளிர், சிறு மழை காரணமாகச் சீறிச் சிலிர்த்தெழுததால்,விழா தொடங்கச்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....