படைப்பாக்க முயற்சிகள் பலவற்றுள்,மொழிபெயர்ப்புச்செய்வதும் ஒரு கலை என்று அறிந்திருந்தாலும்,ஒரு சில கவிதைகளையும்,நாடகங்களையுமே இது வரை முயன்று பார்த்திருந்த எனக்கு நீண்டதொரு நாவலை மொழிபெயர்க்கும் அனுபவம் மிகவும் புதுமையானது.அதிலும் குறிப்பாக உலகப்பேரிலக்கியங்களில் ஒன்றான பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் "குற்றமும் தண்டனையும்"என்னும் இப்படைப்பைமொழிபெயர்த்தபோது எனக்குக்கிட்டிய அனுபவம் வார்த்தைகளால் விண்டுரைக்க முடியாத அளவுக்கு மிக மிகப்பரவசமானது.மதுரை,பாரதி புத்தக உரிமையாளரான திரு துரைப்பாண்டியன் அவர்கள் எனக்களித்த இவ்வாய்ப்பு,அப்போதுதான் 36 ஆண்டுக்கால பேராசிரியப்பணியை நிறைவு செய்திருந்த எனக்கு,அப்பணியிலிருந்து விலகியிருக்க நேர்ந்ததால் விளைந்திருந்த வெறுமை உணர்வைப்புறம் தள்ளி விரட்டியதோடு, தஸ்தயெவ்ஸ்கி என்ற மாமேதையின் வரிகளுக்குள் -அவரது எழுத்துக்களுக்குள்,உருகி,உட்கலந்து,கசிந்து.கண்ணீர் மல்கி என்னையே காணாமல் போகவும் செய்து விட்டது. மொழிபெயர்ப்பின் தெளிவுக்காகப்பல முறை,-பல பதிப்புக்களை ஒப்பிட்டுப்படித்தபோது,"நவில்தொறும் நூல் நயமாக " இந்நாவல்,தன்னுள் பொதிந்தது வைத்திருந்த மர்ம முடிச்சுக்களை ஒவ்வொன்றாக அவிழ்த்துக்கொண்டே வந்தது.ஒரு கட்டத்தில் தஸ்தயெவ்ஸ்கி என்னுள் புகுந்து கொண்டு-தமிழில் தன்னைத்தானே எழுதிக்கொண்டு போவது போன்ற மனமயக்கம் கூட என்னுள் ஏற்பட்டதுண்டு.தஸ்தயெவ்ஸ்கி சொல்ல விரும்பிய கதையை,உணர்வுகளைத்தமிழில் முன் வைக்க நானும்,என் எழுத்தும் கருவிகள் மட்டுமே என்ற உண்மையை அப்போது நான் விளங்கிக்கொண்டேன். மொழி இனம்,நாடு என்று செயற்கையான எல்லைக்கோடுகள் பலவற்றை வகுத்துக்கொண்டாலும்-தனி மனித உணர்வுப்போராட்டங்களும்,அவற்றோடு பின்னிப்பிணைந்திருக்கும் உறவுச்சிக்கல்களும் உலகின் எந்த இடத்திலும்,எந்தக்காலகட்டத்திலும் சாஸ்வதமாகக்காணக்கூடியவை என்னும் வாழ்வியல் உண்மையை "குற்றமும் தண்டனையும்"நாவல் தெளிவாக முன் வைக்கிறது.தஸ்தயெவ்ஸ்கியின் கண்களுக்கு முழுமையான நல்லவர் என்றோ,...முழுமையான தீயவர் என்றோ எவருமில்லை.காமுகனாகச்சித்தரிக்கப்படும் ச்விட்ரிகைலோவிடமும் கூட மர்மேலோதோவின் அநாதரவான குழந்தைகளின் பால் அன்பு சுரக்கிறது.கண்டிப்பாக செயல்பட வேண்டிய நிலையிலிருக்கும் நீதிபதி போர்பிரி பெத்ரோவிச்சிடமும் கூட ரஸ்கொல்நிகொவ் மீதுதோழமை ஜனிக்கிறது. ரஸ்கொல்நிகொவ் ,ரசுமிகின் ஆகிய அறிவுஜீவிகளின் உரையாடல் படம் பிடிக்கப்பட்டிருப்பதில் வியப்பில்லை.ஆயின் அதற்க்கு நேர் மாறான தளத்தில் இயங்கும் -வீடே உலகமென வாழும்-பல்கேரியா அலெக்சென்றோவ்னா,கத்தரீனா இவாநோவ்நா ஆகிய பெண்களின் மன உணர்வுகளையும் துல்லியமாகச்சித்தரிப்பதிலேயே நமக்கு படைப்பாளியின் மீது வியப்பு விளைகிறது. தானும் கூட கற்றுக் கொள்வதற்கான உளவியல் செய்திகள் தஸ் தயெவ்ஸ்கி படைப்புக்களில் மட்டுமே இருப்பதாக நீட்ஷே ஒருமுறை குறிப்பிட்டார்.மனித மனங்களின் இருள் படர்ந்த மூலைகளில் எல்லாம் பயணம் செய்து,இண்டு இடுக்குகளை எல்லாம் கூடத்துழாவி,அங்கே மண்டிக்கிடக்கும் சபலங்களை,சலனங்களை,அழுக்குகளை,ஆசாபாசங்களை,அன்பை,அளவற்ற மனித நேயத்தை வெளிச்சத்திற்கு இட்டு வந்து விடும் அவரது எழுத்தை முழுமையாக வாசிக்கும்போதுதான் நீட்ஷேயின் கூற்றிலுள்ள உண்மை துலங்கும். -------------------------------------------------------------------------மூலத்தைப்படிக்கும்போது கிடைக்கும் பேரனுபவத்தில் ஒரு சிறு பகுதி அனுபவமாவது இம்மொழிபெயர்ப்பால் கிட்டுமெனில் அதுவே இச்சிறு முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக அமையும். ----- குற்றமும்தண்டனையும் நாவல் மொழிபெயர்ப்பின் முன்னுரையிலிருந்து--- , BHARATHI BOOK HOUSE , D-28-மாநகராட்சி வணிக வளாகம்,பெரியார் பேருந்து நிலையம்,மதுரை-625001 மொழிபெயர்ப்பு:எம்.ஏ.சுசீலா------ ----------------------------------------------------------------------------------------------------------------------------------எழுத்தாளர் ஜெயமோகனின் மதிப்பீடு.............................
இப்போது தமிழில் ‘குற்றமும் தண்டனையும்’ மிக நேர்த்தியான மொழியாக்கத்தில் மிக அழகிய படைப்பாக பாரதி புத்தக நிலையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இது தமிழ் இலக்கியத்தின் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று.
மொழிபெயர்ப்பாலரான எம்.ஏ.சுசீலா எனக்கு வாசகியாக அறிமுகமானவர். மதுரை ·பாத்திமா பெண்கள் கல்லூரியில் தமிழாசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். அறுபதுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் பெண்ணிய நோக்கிலான இலக்கிய ஆய்வுக்கட்டுரைகளும் எழுதியிருக்கிறார். பருவங்கள் மாறும், புதிய பிரவேசங்கள், தடை ஓட்டங்கள் ஆகிய சிறுகதைதொகுதிகளும் விடுதலைக்கு முந்தைய தமிழ்நாவல்களில் பெண்கள், பெண் இலக்கியம் வாசிப்பு, இலக்கிய இலக்குகள் போன்ற கட்டுரை நூல்களும் வெளிவந்துள்ளன..உமாமகேஸ்வரி போன்ற படைப்பாளிகளின் உருவாக்கத்திலும் அவருக்கு பெரும்பங்களிப்பு உண்டு.அவரது முதல் மொழிபெயர்ப்பு முயற்சி இந்நாவல்.
ரஸ்கால்நிகா·ப் என்ற இளைஞன் செய்யும் கொலைதான் இந்த புகழ்பெற்ற நாவலின் கரு. வாழ்வின் இக்கட்டுகளில் சிக்கி செயலற்று நிற்கும் நிலையில் ‘உதவாக்கரையான’ ஒரு கிழவியை பணத்துக்காகக் கொலைசெய்கிறான். அந்த குற்றத்திலிருந்து தப்பியும் விடுகிறான். ஆனால் அவனில் அந்தக் கொலை உருவாக்கும் ஆழமான உளப்போராட்டம் நாவல் முழுக்க நீள்கிறது. கடைசியில் அவன் தன் பாவங்களை அறிக்கையிடும் ஒரு சன்னிதியைக் கண்டடைகிறான். தன் குடும்பத்துக்காக பெரும் துயரத்தை தாங்கி நிற்கும் சோனியா என்ற விபச்சாரியில். அவள் முன் மண்டியிடுகிறான். ஏனென்றால் அவள் துயரம் சுமக்கும் மானுடக்குலத்தின் பிரதிநிதி. அவள் மனித இனத்தின் வலிமிக்க இதயம்போல
சோனியா ரஸ்கால்நிகா·பிடம் சொல்லும் சொற்கள்தான் இந்த நாவலின் உச்சம் ”நான்கு வீதிகளும் சந்திக்கும் அந்தச் சதுக்கத்துக்கு உடனே செல்லுங்கள். நாற்சந்தியிலே சதுக்கத்தின் மத்தியிலே சென்று நில்லுங்கள். மனிதர்களுக்கு முன்னால் மண்டியிடுங்கள். மண்ணைக் களங்கபப்டுத்திவிட்ட நீங்கள் அதை முத்தமிடுங்கள். இந்த உலகம் முழுக்க கேட்கும்வண்ணம் ‘நான் ஒரு கொலைகாரன்! நான் ஒரு கொலைகாரன்! ‘ என்று உரக்கச் சொல்லுங்கள்” சோனியாவின் கருத்தில் குற்றங்கள் என்பவை தனிமனிதர்களுக்கு எதிரானவை அல்ல. சமூகத்துக்கு எதிரானவையும் அல்ல. அவை மனிதகுலத்துக்கு எதிரானவை. ஆகவே அவற்றைச் செய்பவனுக்கு எதிரானவை. அவன் மண்டியிட வேண்டியது அதன் சன்னிதியில்தான்.
சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இன நீதிகளே அறமாக எண்ணப்பட்ட ஒரு காலகட்டத்தில்– ருட்யார்ட் கிப்ளிங் போன்ற எழுத்தாளர்கள் கூட அதற்குள் நின்ற காலகட்டத்தில் - அழிவிலாத மானுட நீதி ஒன்றை தன் தரிசனமாக முன்வைத்தது தஸ்தயேவ்ஸ்கியின் பெரும் நாவல். அந்த ஒளி எப்போதும் மானுடகுலத்துக்கு வழிகாட்டக்கூடுவது. இலக்கியம் என்ற இயக்கத்தின் சாரமென்ன என்று காட்டும் பெரும் படைப்பு இது
உணர்ச்சிவேகம் நிறைந்த அக ஓட்டங்களும் சுழன்று சுழன்று செல்லும் சொற்றொடர்களும் கொண்ட இந்த நாவலை அற்புதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார் சுசீலா. தமிழின் இலக்கிய மொழிபெயர்ப்பில் இது ஒரு சாதனை.
‘ நன்றி:ஜெயமோகனின் வலைப்பதிவு.wwwjeyamohan.in----- குற்றமும் தண்டனையும் குறித்த எழுத்தாளர் ராமகிருஷ்ணனின் மதிப்பீடு: தஸ்தாயெவ்ஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள் நாவலை நான், சி.மோகன், சா. தேவதாஸ் மூவரும் இணைந்து மொழியாக்கம் செய்வது என்று ஒரு விளம்பரத்தை பல வருடங்களுக்கு முன்பு கல்குதிரை வெளியிட்டது. நாங்களும் ஆர்வத்துடன் அந்தப் பணியைத் துவங்கினோம். அப்போது கி.அ. சச்சிதானந்தம் அந்த நாவலை முழுமையாக மொழி பெயர்த்து வைத்திருக்கிறார் என்ற தகவலை அறிந்தவுடன் எங்கள் மொழியாக்கபணி சற்றே சோர்வடைந்தது. நான் அறிந்தவரை சச்சிதானந்தம் மொழிபெயர்த்த கரமசோவ் சகோதரர்களின் சில பகுதிகள் இணைய இதழ் ஒன்றில் வெளியிடப்பட்டு அப்படியே நின்று போனது. ஏன் இன்னும் அது வெளிவர வில்லை என்று தெரியவில்லை.
கிருஷ்ணையா மொழியாக்கத்தில் தஸ்தாயெவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகளை என் கல்லூரி நாட்களில் கூடவே வைத்திருந்து பலமுறை வாசித்திருக்கிறேன். தஸ்தாயெவ்கியின் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. பலவீனமான இதயம், அருவருப்பான விவகாரம், சூதாடி போன்ற கதைகள் அதில் உள்ளன. தஸ்தாயெவ்ஸ்கியை வாசிக்க துவங்கும் எவரும் இந்த புத்தகத்தில் இருந்தே துவங்க வேண்டும் என்று சிபாரிசு செய்வேன்.
குற்றமும் தண்டனை நாவலின் சுருக்கம் 1950களில் தமிழில் வெளியாகியிருக்கிறது. இந்த நாவலின் காமிக்ஸ் புத்தகம் கூட ஆங்கிலத்தில் வெளியாகி உள்ளது. அதை நான் வைத்திருக்கிறேன். நான்கு வேறுபட்ட இயக்குனர்களால் திரைப்படமாக்கபட்டிருக்கிறது
ஆங்கிலத்தில் கான்ஸ்டாட் கார்நாட் உள்ளிட்ட இரண்டு மூன்று பிரபலமான மொழிபெயர்ப்புகள் உள்ளன. தற்போது பேராசிரியர் சுசிலா அதை தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். நூலை சிறப்பாக பாரதி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது.
பாரதி புக் ஹவுசை நடத்தும் துரைப்பாண்டியன் நூல் பதிப்பதிலும் விற்பனையும் பல வருடம் அனுபவம் பெற்றவர். முன்னதாக டால்ஸ்டாயின் அன்னாகரீனனாவை தமிழில் வெளியிட்டிருக்கிறார்கள். அத்தோடு டால்ஸ்டாயின் சிறுகதை தொகுதிகள் மூன்றை பதிப்பித்து உள்ளார். மதுரை பேருந்து நிலையத்தின் உள்ளே இவரது புத்தககடை உள்ளது.
எம்.ஏ. சுசிலா எனக்கு பேராசிரியராக அறிமுகமானார். பாத்திமா கல்லூரியின் தமிழ் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்தார். மதுரையில் நடந்த ஒரு இலக்கிய கூட்டத்தில் அவரை சந்தித்தேன். புதுமைபித்தன் துவங்கி சுந்தர ராமசாமி, ஜி. நாகராஜன், கோணங்கி, நான் உள்ளிட்ட அத்தனை எழுத்தாளர்களையும் வாசித்திருக்கிறார். அதைப் பற்றி பெரியதாக காட்டிக் கொள்ளாதவர்.
தமிழ் பயிலும் மாணவிகளிடம் நவீன தமிழ் இலக்கியத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் அதிக ஆர்வம் காட்டியவர். அதற்காக வகுப்பறைகளில் நவீன தமிழ் இலக்கியத்தையும் புதிய விமர்சன கோட்பாடுகளையும், போர்ஹே, மார்க்வெஸ், காப்கா, காம்யூ என்று உலக இலக்கியங்களையும் அறிமுகம் செய்த பெருமை இவருக்குண்டு.
நான் ஒருமுறை இவர்கள் கல்லூரியில் உரையாற்றியிருக்கிறேன். மாணவிகள் போர்ஹேயின் படைப்புலகம் பற்றி நிறைய கேள்விகேட்டார்கள். ஆச்சரியமாக இருந்தது.
குற்றமும் தண்டனை நாவலை சுசிலா சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இந்த நாவலை தமிழ்படுத்துவதில் உள்ள பெரிய சிக்கல் உரையாடல்கள் மிக எளிமையாக துவங்கி அப்படியே தத்துவார்த்த தளத்திற்கு உயர்ந்துவிடும். நுட்பமான விவரணைகள். ருஷ்ய கலாச்சாரம் சார்ந்த உணவுவகைள் மற்றும் அன்றாட குறிப்புகள் , அது போலவே மனநிலையின் தீவிரத்தை வெளிப்படுத்துவற்காக சிறிய வாசகங்கள், திரும்ப திரும்ப வரும் சில சொற்கள் நாவலில் இடம் பெற்றுள்ளது. பலநேரங்களில் கதைசொல்பவனின் குரல் பதற்றத்தின் உச்சத்திற்கே சென்றுவிடும். சுசிலா அதை மிக சிறப்பாக மொழியாக்கம் செய்திருக்கிறார்.
நாவல் வெளியாகி நூறு வருடங்களை கடந்துவிட்ட போதும் வாசிக்கையில் இன்று காலை எழுதப்பட்டது போன்ற ஈரமும் நெருக்கமும் இருப்பதே நாவலின் சிறப்பம்சம். நாவல் வாசிப்பிற்கு தடையில்லாமல் சுசிலா கவனம் எடுத்து செய்துள்ள மொழியாக்கம் நன்றாகவே வந்திருக்கிறது. அவருக்கு என் மனம் நிறைந்த பாராட்டுகள்.
வெளியிடு. பாரதி புக் ஹவுஸ். டி.28 மாநகராட்சி வணிக வளாகம். பெரியார் பேருந்து நிலையம். மதுரை.நன்றி.ராமகிருஷ்ணனின் வலைப்பதிவு :www.s.ramakrishnan.com
31.10.08
29.10.08
வலைப்பூவின் இலக்கு
"தேடிச்சோறு நிதம் தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி-மனம்
வாடித்துன்பம்மிக உழன்று பிறர்வாடப்பல செயல்கள் செய்து -நரை
கூடிக்கிழப்பருவம் எய்திக்கொடும் கூற்றுக்கு இரைஎனப்பின் மாயும்-பல
வேடிக்கை மனிதரைப்போல நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?"
-பாரதி
இந்த வலைப்பூ என் இலக்கிய ரசனைக்கு ஒரு வடிகால்;என்சிந்தனைகள் , வெறும் மன ஓட்டங்களாக மடிந்து போய் விடாமல் பாதுகாக்கும் பெட்டகம்;சிறுகதைகளாகவும்,கட்டுரைகளாகவும் நான் எழுதும் ஆக்கங்களை சேமிக்க உதவும் கருவூலம்;ஒத்த மனம் படைத்தோரையும்,முரண்பட்ட கருத்துக்கொண்டோரையும் என்னுடன் உரையாடவைக்கும் களம்;பகிர்வுகளின் வழியே நட்புக்களை ஏற்படுத்தும் பாலம்;இன்னும்..இன்னும்..எவ்வளவோ!! கடந்து போகும் ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு கணமும் நமக்குள் ஏதோ ஒரு பதிவை,பாதிப்பை ஏற்படுத்தியபடிதான் நகர்ந்து செல்கின்றன..அவற்றுள் எல்லாமே பொருட்படுத்தக்கூடியவையாக இருப்பதில்லை என்ற போதும்,ஒரு சில கணங்கள் அழியாத சுவடுகளை நெஞ்சில் பதித்து விட்டுப்போகிறவை. லா.ச.ராவின் வார்த்தைகளில் சொல்லப்போனால் "நித்தியத்துவம்"பெறத்துடிப்பவை. அந்தத்தருணத்தில் தவற விட்டு விட்டால் பின் எப்பொழுதுமே மீட்டெடுத்துக்கொள்ள முடியாதவை.அத்தகையஅபூர்வமான கணங்களை உடனுக்குடன் பதியவும்,பகிரவும் முடிகிற அற்புத வாய்ப்பை இந்த வலைப்பூவில் நன்கு பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே என் விழைவு..சமூக அக்கறையும் ,தரமான வாசிப்பு,நுகர்வு ரசனைகளுமே நான் முதன்மை தந்து வலியுறுத்த விரும்பும் செய்திகள்.கல்லூரியில் பேராசிரியராக இருந்தபோது,இவற்றைஎல்லாம் அவ்வப்போது மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டபடியே நாட்கள் நகர்ந்துவிட்டதால் ,சிறுகதைகள்,திறனாய்வுக்கட்டுரைகள் ஆகியவற்றை எழுதியதோடு நிறைவு கொள்ள முடிந்து விட்டது.இலக்கியப்பகிர்வுகளுக்கும் தோழிகள் உடனிருந்ததால் பேசித்தீர்த்து விட முடிந்தது.தமிழ் நாட்டிலிருந்து வெகு தொலைவில்,புதுதில்லியின் புரியாத பாஷைகளுக்கு நடுவே,சிந்தனைகளை பரிமாறிக்கொள்ள "சக ஹிருதயர்"(நன்றி;ஜெயகாந்தன்)களைத்தேடித்தவிக்கும் நெஞ்சு,இவ்வலைப்பூவால் தேறுதல் கொள்ளும் என்ற நம்பிக்கையுடன் இதைத்துவங்குகிறேன். எழுத்தை,எழுதும் முயற்சியைக்கை விட்டு விடாமல் அதை ஒரு சாதகமாக்கிக்க்கொண்டு பயிலவும் இந்தக்களம் வழியமைத்துத்தரக்கூடும்.எல்லாவற்றுக்கும் மேலாக ,பணி நிறைவு பெற்ற பின், வாழ்வே நிறைவுற்று விட்டதாக எண்ணி,நான் சோர்ந்து போய்விடாதபடி என்னை என்றென்றும் புதிய உயிராக இயங்க வைத்து ,உற்சாகம் கொள்ள வைக்கும் ஒருமா மருந்தாக,எனது அடுத்த இன்னிங்க்ஸ் ஆக இந்த வலையிடலைத்தொடங்கி, ,இணைய வாசகர்களின் பார்வைக்கு உரித்தாக்குகிறேன்.நன்றி.

நுழைவாயில்
"எடுத்த காரியம் யாவினும் வெற்றி","எண்ணத்து இருக்கும் எரியேசக்தி " பாரதி .
வணக்கம்.
தமிழ் கூறும்நல்லுலகிற்கு என் சிறிய பங்களிப்பு இந்த வலைப்பூ . இதில் ஈடுபடுமாறு என்னை அறிவுறுத்தியதோடு ,தக்க வழிகாட்டுதல்களையும் நல்கி ஊக்கப்படுத்திய என் பிரியத்திற்குரிய எழுத்தாளர்கள்,திரு ஜெயமோகன்,திரு எஸ்.ராமகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் இதைத்தொடங்கும் வேளையில் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.தங்களது தொடர்ந்த எழுத்துப்பணிகளுக்கு இடையிலேயும் சகஆர்வலர்களை ஊக்குவிக்கும் அவர்களின் பெருந்தன்மை நெஞ்சை நெகிழ்விப்பது..அவர்களது வலைப்பதிவுகளைப்படித்து விட்டு,தமிங்க்ளிஷில் கடிதம் அனுப்பிக்கொண்டிருந்த நான்,தமிழில் மின் அஞ்சல் அனுப்பத்தொடங்கிய மறு கணமே அதிசயிக்கத்தக்க வகையில் இருவரும் ஒரே மாதிரியான பதிலை-நான் வலைப்பதிவு தொடங்கலாமே- என்ற எண்ணத்தை வெளியிட்டிருந்தனர்.இன்றைய நவீன தொழில் நுட்ப உலகின் புதிய எல்லைகளுக்குள் அடியெடுத்து வைக்க அவர்களின் வார்த்தைகள் நன்னிமித்தமாக அமைய, kasilingam.com/wiki/doku.php?id=Tamil blogging வழிகாட்டநானும் இணைய உலகில் முதலடி பதிக்கிறேன். தமிழ் வலைப்பதிவு பற்றி விரிவாக விளக்கி வழிகாட்டிய அந்த சுட்டிக்கும் என் நன்றி .
பணி நிறைவு பெற்று புது தில்லி வந்தபின் என் எழுத்தார்வத்திற்கு ஏற்ற வடிகால்களை ஏற்படுத்தித்தந்து என்னை ஊக்குவித்து வரும் வடக்கு வாசல் இதழுக்கும் அதன் ஆசிரியர் திரு.பென்னேஸ்வரன்அவர்களுக்கும் என் உளமார்ந்த நன்றி.
கணினியை என் கைக்கு வசப்படச்செய்து பயிற்சி அளித்த என் அன்பு மகள் மீனு பிரமோதையும்அவளது துணைவர் பிரமோத் பாசத்தோடு நினைவு கூர்கிறேன். தமிழில் எழுத முடிந்திருக்காவிட்டால், இந்த வலைப்பூவே சாத்தியப்பட்டிருக்காது; பலபல வழிகளிலும் முயன்று வெற்றி அடையாமல் தவித்துக்கொண்டிருந்த தருணத்தில்,மிக எளிய வழி ஒன்றைக்காட்டி, கணினித்தமிழை என்னருகே கொண்டுவந்து சேர்த்த வாசகர் சந்தோஷ்குமாருக்கு நான் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
பத்து வயதில் தொடங்கிய எழுத்தார்வம், ஒரு சில நூல்களைப்பதிப்பித்திருந்தாலும் கூட (பார்க்க-சுயவிவரம்),இன்னும் முழுமையான வெளிப்பாடு கொள்ளாத ஒரு தாகமாகவே நெஞ்சில் தங்கிப்போயிருக்கிறது.அந்த ஆற்றாமைக்கு இந்த வலைப்பதிவுகள் நல்ல வடிகால்களை ஏற்படுத்தித்தரும் என நம்பி அவ்வாறே விழைகிறேன்.படைப்பவை,படிப்பவை,பார்ப்பவை ஆகிய அனைத்தையும் வலைப்பூவில் ஏற்றம் செய்து இணைய வாசகர்களின் பார்வைக்கும்,விமரிசன வாதங்களுக்கும் முன் வைப்பதே என் விருப்பம்.இப்பதிவுக்கு வருகை புரிந்து கருத்துக்களைப்பகிர்ந்து கொள்ள அனைவருக்கும் அன்பு அழைப்புக்களை இதன் வழி விடுக்கிறேன்.
அன்னையாய், தந்தையாய், என்னை நானாக்கிய என் அன்புத்தாய் அமரர் திருமதி சோபனாதேவி அனந்தராம் அவர்களுக்கு இவ்வலைப்பதிவு சமர்ப்பணம்.

இதற்கு குழுசேர்:
இடுகைகள்
(
Atom
)