துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
திரைப்பார்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைப்பார்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6.7.20

’தப்ப’டும்(Thappad-Hindi movie) தப்பான அடிகளும்


கால மாற்றங்களால் நம் அணுகுமுறைகளும் மாறியிருந்தாலும் ’’புருஷன் பொண்ட்டியை அடிக்கறதிலே என்ன பெரிய தப்பு இருக்கு’’ என்று அந்தச் செயல்,சர்வ சகஜமான- இயல்பான ஒரு நிகழ்வாகவே இன்னமும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது. அவ்வாறான ஒரு சமுதாய அமைப்புக்குள் வாழ்ந்து வரும் நம்மால் ’தப்பட்’ போன்ற படங்களின் உள்ளுறையாகப் பொதிந்திருக்கும் பெண் உளவியலைப் புரிந்து கொள்வது கடினம்தான்.
அமு என்னும் அம்ரிதா , தான் காதலித்து மணந்த விக்ரமை,அவன் குடும்பத்தை, மாமியாரை நேசித்து வாழும் துடிப்பும் மகிழ்ச்சியுமான ஒரு பெண். பள்ளிப்பருவக்கனவுகள் கலைந்து போனதைக்கூடப் பொருட்படுத்தாமல் அது குறித்த எந்தப் புகாரும்,ஏக்கமும் இல்லாமல் ஒரு நல்ல இல்லத்தரசியாக மட்டுமே தன்னை உருவாக்கிக்கொள்ள விரும்புபவள். ஒரு சிந்தனாவாதி என்றோ, பெண்ணியவாதி, ’ஆக்டிவிஸ்ட்’ என்றோ எந்த முத்திரைகளும் இல்லாதவள். குரோட்டன்ஸ் இலைகளைச் சீராக வெட்டுவது, தேநீர் போடுவது,கணவனை தினமும் வழியனுப்பி வைப்பது என்று அன்றாட வாழ்வின் இனிமைகளுக்குள் கடமைகளுக்குள் மட்டுமே சந்தோஷ லயிப்போடு கரைந்து போகிற ஒரு சராசரிப் பெண்.
கணவனின் பதவி உயர்வுக்காக நிகழும் பகட்டான விருந்தில் விருந்தினர் முன்னிலையில் அவள் கன்னத்தில் விழும் ஒரே ஒரு அறை அவள் வாழ்வையே புரட்டிப்போடுகிறது. இத்தனைக்கும் - தான்,தன் பதவி வெறி என்று மட்டுமே இருந்தாலும் –அதுவரை அவன் அவளை எந்த வன்முறைக்கும் ஆளாக்கியதில்லை. அந்தக் குறிப்பிட்ட சம்பவத்திலும் அதை அவன் வேண்டுமென்று செய்திருக்கவில்லை; எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைத்திருக்கவில்லை என்று விருந்து நேரத்தில் கிடைக்கும் செய்தியால் பதட்டமாகி, அது குறித்த வாக்குவாதத்தில் ஈடுபடும் அவனை அந்தப் பேச்சு வார்த்தை தடித்து விடாமல் தடுப்பதற்கு அவள் முயல்கிறாள்; அப்போது தன்னிச்சையாக அத்தனை பேர் முன்னிலையிலும் அவளை அறைந்து விடுகிறான் அவன்.
அமுவை அது அதிர வைக்கிறது; அவள் நிலை குலைந்து போகிறாள். உருகி உருகிக்காதலித்தவன்தான் என்றாலும் அதன் பிறகு அவனை அவளால் அன்பு செய்ய முடியாமல் போகிறது. அந்தக் கணத்தோடு மனதின் மெல்லிய, நுட்பமான பிரிய இழை ஒன்று அவளுக்குள் அறுந்து போகிறது. காதல் இல்லாமல் ஒப்புக்காகக் கூடி வாழும் போலி வாழ்க்கையில் தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்ள அவளுக்கு விருப்பமில்லை. ஆனால் சுற்றியுள்ள உறவும் உலகமும் அதையே அவளிடம் எதிர்பார்க்கிறது. தன் வேலை சார்ந்த பதட்டங்களால் தற்செயலாய் நிகழ்ந்து விட்டஅந்த செயலை அவள் தேவையில்லாமல் ஊதிப்பெருக்குவதாகவே அவனுக்குத் தோன்றுகிறது. அலுவலகத்தோடு ஒன்றிக்கலந்து தன் மூளையையும் உழைப்பையும் மூலதனமாக்கி வேலை செய்தும் அங்கே தனக்கு உரிய மதிப்பில்லை என்றும், அவள் தன்னைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் திரும்பத் திரும்பச்சொல்கிறானே தவிர அவள் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குத் தோன்றுவதே இல்லை; அலுவலகத்தில் அவன் செய்தது போல -அதே மாதிரியில்- குடும்பத்துக்குள் மட்டுமே தன் உணர்வுகளையும் உழைப்பையும் முதலீடு செய்திருக்கும் தனக்குக் கிடைத்திருக்கும் மதிப்பு என்ன என்று அவள் எழுப்பும் நியாயமான கேள்விக்கு எவரிடமும் பதில் இல்லை
அமு தாய் வீட்டுக்குப்போகிறாள். தாய் சகோதரன் என்று உறவு வட்டங்கள் எல்லாமே அதை அவள் அதை மிகைப்படுத்துவதாகவே சொல்லும் நிலையில்…அவள் தந்தை மட்டும் அவள் மனக்காயத்தையும் அதிர்ச்சியையும் உள்ளபடி புரிந்து கொள்கிறார் ஆனாலும் எந்தத் தீர்வையும் ஆலோசனையையும் வழங்காமல்,தன் மனம் சொல்லும் வழியில் அவளாகவே முடிவெடுக்க ஆதவாய் நிற்கிறார்.

தாய் வீடு தற்காலிகப் புகலாகாமல் பிரிவு நீண்டுகொண்டு செல்லும் நிலையில் தாம்பத்திய உரிமை கோரி வழக்குத் தொடுக்கிறான் விக்ரம். அவளும் நேத்ரா என்ற பெண் வழக்கறிஞரிடம் போகிறாள். நீதிமன்றப் படி ஏறினால் எதிர்ப்பட வேண்டியிருக்கும் கேவலங்களைச் சுட்டிக்காட்டி இப்படிப்பட்ட நிகழ்வுகளோடு சமரசம் செய்து கொண்டு கடந்து போவதுதான் குடும்ப வாழ்வில்…நடைமுறைக்கு உகந்தது என்று தொடக்கத்தில் ஆலோசனை கூறும் அந்தப் பெண் வழக்கறிஞரையே பிறகு தன் உறுதியான நிலைப்பாட்டால் மாற்றிப் போட்டு விடுகிறாள் அமு.
’’எனக்கு வாழ்க்கையில் வேண்டியது இரண்டு மட்டும்தான் – ஒண்ணு சுய மதிப்பு, இன்னொனாண்ணு உறுத்தல் இல்லாத சந்தோஷம்.. இதை இப்படியே ஒத்துக்கிட்டு சமரசமாப் போயிட்டா… அப்புறம் என் மேலேயே எனக்கு மதிப்பிருக்காது, மகிழ்ச்சியும் இருக்காது ’’ என்ற சுருக்கமான சொற்களால் அதைத் திடமாக நிராகரித்து விடுகிறாள் அமு. வக்கீல் பரிந்துரைக்கும் குடும்ப வன்முறைக் காரணத்தையோ , ஜீவனாம்சம் கோருவதையோ கூட அவள் உடன்படவில்லை.
சட்டப்போராட்டம் ஒரு புறம் தொடர்ந்து கொண்டிருக்க அவள் கருவுற்றிருக்கும் செய்தி கிடைக்கிறது; அவனுக்கும் அதுவரை அவன் எதிர்பார்த்த லண்டன் பதவி உயர்வு கிடைக்கிறது. எல்லாம் சுபம்தானே..’ALL FINE..JUST MOVE ON’ …இதற்கு மேலும் ஏன் இதை வளர்த்துக்கொண்டு செல்ல வேண்டும் என்று அவன் உட்பட எல்லாரும் நினைக்க ALL FINE எப்படி ஆகும் என்ற வினாவோடு அவள் உறுதியாய் நிற்கிறாள். வாழ்க்கை இப்போது இனிமைகளைக் கொண்டு வந்தாலும் தனக்கு அன்று நடந்ததை அத்தனை லகுவாய் ஒதுக்கிப்போட்டு விட்டு அன்றாட வாழ்க்கையோடு சமரசம் செய்து கொள்ள- அது எத்தனை லாபங்களைத் தந்தாலும் கூட- அவளுக்கு விருப்பமில்லை.
அதே வேளையில் அவளது அன்பும் கரிசனமும் அவளைச்சார்ந்த மற்றவர்களுக்குக் குறைவில்லாமல் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. அவள் பிரிந்து வாழ்ந்தாலும் கணவன் அலுவலகம் சென்று விடும் பகல் வேளைகளில் சர்க்கரை நோயாளியான மாமியாரை வந்து கவனித்துக்கொள்கிறாள்; குழந்தைப் பேற்றுக்காக அந்தக்குடும்பம் நடத்தும் பூஜையிலும் கூட!..

ஆனாலும் அவள் போராட்டம் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.
அருவருப்பான குற்றச்சாட்டுக்களை அவள் மீது சுமத்தியபடி விக்ரமின் வழக்கறிஞர் கீழிறங்கும்போது அவளும் குடும்ப வன்முறை என்று தன் மனுவில் குறிப்பிட வேண்டியதாகிவிடுகிறது.
பரஸ்பர ஒப்புதலின் பேரில் இருவரும் விவாகரத்து பெறும் அந்தத் தருணத்தில் தன் தவறை மட்டுமல்லாமல் அவள் இல்லாத தன் வாழ்வின் வெறுமையையும் உணர்ந்து தன் வேலையைக்கூடத் துறந்து வரும் அவன், தன் செயலுக்காக இதுவரை அவளிடம் தான் மன்னிப்பு கோரவேயில்லை என்பதை வெளிப்படையாக ஒத்துக் கொள்கிறான்.
’இது நடந்திருக்க வேண்டாம்’ என்று எண்ணியபடி இருவரும் பாரமாய் மனம் கனத்துப்போய்ப் பிரியும் அந்தத் தருணத்தை - ஓடும் ரயிலில் மூச்சிரைக்க வந்து ஒன்று சேர்வதாக.-.மௌன ராகம் போன்ற செயற்கையான நாடகீயக் கணங்களாகக் காட்டாமல் ’’இந்தச்செயலின் விளவு இதுமட்டுமே’’ என்று - அவளது நிலைப்பாட்டுக்கு அழுத்தம் சேர்க்கும் வண்ணம் படத்தை நிறைவு செய்திருப்பதே இதன் உள்ளடக்கத்துக்கு நியாயம் சேர்க்கிறது.
ஒரு முறையோ , பல முறையோ …எப்படியானாலும்…ஒருவரை அடிப்பதற்கு.., அவரது தன்மதிப்பைக் காயப்படுத்துவதற்கு [கணவன் என்றாலும் கூட ] அடுத்தவருக்கு உரிமை இல்லை, வெளிப்பார்வைக்கு மென்மையானவளாக, குடும்பத்தை உயிராக நேசிப்பவளாக இருக்கும் ஒரு பெண்ணும் கூட அப்படி taken for granted ஆக நடத்தப்படும் வேளையில் - தன்னையும் அறியாத ஓர் உந்துதலால் இப்படிப்பட்ட முடிவை நோக்கி நகர்ந்து விடக்கூடும் என்பதை ஓர் எச்சரிக்கையாக DON’T EVER TAKE WOMEN FOR GRANTED! என்று சொல்லியிருக்கிறது தப்பட்.
இது, இந்தத் திரைக்கதையின் மைய இழை என்றபோதும், அதை முன்வைத்து ஒடுக்கப்பட்ட பெண் உணர்வுகளை வேறுபட்ட தர நிலையிலுள்ள பல பெண்கள் வழியாக நுட்பமாகத் தொட்டுக்காட்டிக்கொண்டே போகிறது படம்.
தினந்தோறும் கணவனிடம் அடி வாங்கும் பணிப்பெண், ’சந்தியாஜி’ என்று அமுவின் தந்தை அவள் தாயை மதிப்போடு அழைத்தாலும் அவளுக்குள்ளும் ஒளிந்து கிடக்கும் ஆசாபாசங்கள், பிரபுத்துவ மனப்பான்மை கொண்ட அமுவின் மாமனாரால் ஒரு அலங்காரப்பொருள் போல,அந்தஸ்தின் சின்னம் போல மட்டுமே நோக்கப்படும் அமுவின் மாமியார், அமுவின் விடாப்பிடியான போர்க்குணத்தால் தன் சுயத்தை மீட்டுக்கொள்ளும் வழக்குரைஞர் நேத்ரா என்று பல பெண் மாதிரிகளுக்கு- அதுவரை தோன்றியே இராத தன்மதிப்பு உணர்வை மீட்டெடுத்துத் தரும் ஒரு முன்னோடியாய் இருந்தபடி ஒரு புதிய பாடத்தையே கற்றுத்தருகிறாள் அமு என்னும் அம்ருதா.
புகுந்த வீட்டாரை இறுதியாகப் பிரியும்போது அமுவும் மாமியாரும் உரையாடும் கட்டம் படத்தின் சிகரம்...!’’ நீங்க என் மேலே அன்பைப் பொழிஞ்சீங்க, ஆனா அந்த விருந்து நடந்த ராத்திரிதான் என்னை அமுவா நெனக்காம விக்ரமோட மனைவியா மட்டுமே நெனச்சிருக்கீங்கன்னு தெரிஞ்சுக்கிட்டேன். உங்க எல்லார் மேலேயும் நான் அன்பு செலுத்தினேன்…ஆனா அவர் செஞ்சது தப்புதான்னு நீங்க யாருமே சொல்லலை அதுக்கு உங்களை என்னாலே மன்னிக்கவே முடியாது’’என்று ஆவேசமே காட்டாமல் பாசத்தின் நெகிழ்வோடு மட்டுமே சொல்கிறாள் அமு. அப்போது மாமியாரும் மனம் திறக்கிறார்… ’’நடந்ததுக்கு உன்னைக் குறை சொல்ல முடியாது. ஒரு மனைவி எது நடந்தாலும் ஏத்துக்கிட்டுதான் போகணும்னு சொல்லிக்கொடுக்கிற/நெனக்கிற அம்மாக்கள், மாமியார்கள், பெண்டாட்டியை அடிக்கக்கூடாதுன்னு சொல்லிக்கொடுத்து வளர்க்காத அப்பா அம்மா…தப்பு இவங்க எல்லார் மேலேயும்தான்’ ’என்கிறாள்.
ஆனால் அமுவுக்குக் கிடைத்தது போல் அவளைப் புகுந்த வீட்டுக்குப் போகச் சொல்லிக் கட்டாயப்படுத்தாத பெற்றோரும் அவளைப்புரிந்து கொள்ளும் மாமியாரும் பாதிப்புக்குள்ளாகும் எல்லாப் பெண்களுக்கும் வாய்ப்பது சந்தேகம்தான்.
அழுகையும் புலம்பலும் ஆவேசப்பிரகடனமும் இல்லாமல் ஆழ்ந்த மனக் காயத்தின் கொடுந்துயரை முகத்தில் மட்டும் தேக்கி, மெதுவான குரலிலும் செயலிலும் மட்டுமே உள்ளத் திண்மையை வெளிக் காட்டிக்கொண்டபடி… எல்லோரிடமும் பிரியம் செலுத்தும் பெண்ணாக ’தப்பட்’ படத்தில் அமுவாகவே வாழ்ந்திருக்கிறார் தாப்சி. பிற பாத்திரத் தேர்வுகளும் கச்சிதமானவை. வசனங்கள் ஆழ்ந்த கவனிப்புக்கு உரியவை என்பதோடு தீட்டிய வாள் நுனி போலக் கூர்மையாக இதயத்தில் இறங்குபவை. கருத்துக்களின் அடர்த்தியால், கனத்தால்.. படத்தின் விறுவிறுப்பு குறைந்து விடாமல், அதே வேளையில் பிரச்சாரமாக.. over dramatic melodrama வாகவும் மாற்றி விடாமல் மிகை நடிப்போ மிகைக்காட்சிகளோ பாவனைகளோ இல்லாமல் யதார்த்தமாக எடுக்கப்பட்ட திரைப்படமாகப் பெண்ணின் ஒடுக்கப்பட்ட உளவியலை முன் வைத்திருக்கிறது ’தப்பட்’.
குடும்ப அமைப்பில் பெண்ணுக்கு நேரும் சுயகௌரவச் சிதைவு, அவளது தனிப்பட்ட உணர்வுகள்,விருப்பு வெறுப்புக்கள் ஆகியவை புரிந்து கொள்ளப்படாமல் போதல்… ஆகியவற்றின் குறியீடே’தப்பட்’! அதையெல்லாமல் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல் எல்லாரோடும், எல்லாவற்றோடும் அவள் இணங்கிப்போக வேண்டும் என்று எண்ணும் சமூக எதிர்பார்ப்பின் கன்னத்தில் சுளீரென்று அறை விட்டிருக்கிறது ’தப்பட்’ திரைப்படம்.
’தப்பட்’ என்றாலே அறைவிடுவதுதான் இல்லையா?..
ஒரு பின் குறிப்பு:
இப்படியும் சில ’தப்பட்’கள்..தப்படிகள்!
பல ஆண்டுகளுக்கு முன்பு படித்த வேறொரு தமிழ்ச்சிறுகதை ‘அடி’ (அய்க்கண் என்று நினைவு) : நோய்வாய்ப்பட்டுக்கிடக்கும் மனைவியின் உயிர் பிரிந்து போகாமல் இழுத்துக்கொண்டே கிடக்க, ஏதோ நிறைவேறாத ஆசை போலிருக்கிறது என்று ஊரார் முடிவு செய்கிறார்கள். முன்கோபக்காரரான அவள் கணவருக்கு எல்லோரையும் அறைந்தே பழக்கம். திருமணம் ஆகும்போது மனைவியை மட்டும் அடிக்கக்கூடாதென்று அவர் உறுதி எடுத்துக்கொண்டாராம். அவர் தன்னை மட்டும் அடிக்கவில்லையே என்பதுதான் மனைவியின் நிறைவேறாத ஆசை என்றும் அவர் ஒரு அறை விட்டதும் அவள் உயிர் போய் விடுவதாகவும் அந்தக் கதை முடியும்…
’உயர்ந்த மனிதன்’ திரைப்படத்தில் தன்னை அதுவரை இலட்சியம் செய்யாமலிருந்த கணவர் அறை விட்டதும் அதை லேடீஸ்கிளப்பில் அவள் பகிர்ந்து கொள்ள அதுதான் அவர் காட்டும் அன்பின் தொடக்கம் என்று மற்ற பெண்கள் அடியெடுத்துக்கொடுக்க ..அந்த வேடத்தில் வரும் சௌகார் ஜானகி உடனே சிலிர்த்துப்போய்ப் பியானோ வாசித்தபடி அந்த அடிகளை ’அத்தானின் முத்தங்கள்’ என்று பாட ஆரம்பித்து விடுவார்..
2020இல் வந்திருக்கும் ’தப்பட்’தான் இப்படிப்பட்ட தப்புத் தாளங்களை மாற்ற வேண்டும்.

28.6.17

தவறவிடக்கூடாத ஒரு குறும்படம்

கர்நாடக மாநிலம் உடுப்பியருகே உள்ள ஒரு கிராமத்தில் நிகழ்ந்த [2015]
ஒரு மிகச்சிறிய உண்மைச்சம்பவத்தைத் துளு மொழியில்  சுவாரசியமான குறும்படமாக்கியிருக்கிறது கணேஷ் ஷெட்டியின் ’’பரோக்‌ஷ்’.

தென்னை மரங்கள் அடர்ந்த தோப்பை ஒட்டி அதையே வாழ்வாதாரமாய்க்கொண்டு வாழும் ஒரு சின்னக்குடும்பம்.
குறிப்பிட்ட ஒரு மரத்திலிருந்து அவ்வப்போதுகேட்கும் சின்னஞ்சிறு குழந்தையின்  அழுகுரலால் முதலில் திகிலாகிறாள் அதன் குடும்பத் தலைவி.

பிறகு மற்றவர்களையும் அது தொற்றிக்கொள்ள மாயம், மற்றும் மாந்திரீகத்துக்காகத் தன் சொத்து முழுவதையும் கூட  அவர்கள் செலவழிக்கத் தயாரான நிலையில் முடிவு என்ன என்பதை இயல்பான- யதார்த்தமான பாணியில் சொல்லும் இந்தப்படம்  இணையத்தின் மூலம் கிட்டத்தட்ட இரண்டு லட்சத்துக்கும் மேலான பார்வையாளர்களை சென்றடைந்திருக்கிறது. பாலிவுட்டில் நுழைவதற்கான பொற்கதவுகளையும் இயக்குநருக்குத் திறந்து விட்டிருக்கிறது இந்த 13 நிமிடக்குறும்படம்.

 மிகை ஆரவாரங்கள் அற்ற அடங்கிய தொனியும்  கச்சிதமான சுருக்கென்ற முடிவும் தவற விடக்கூடாத குறும்படங்களில் ஒன்றாக  ’’பரோக்‌’’ஷை [PAROKSH / परोक्ष] ஆக்கி விடுகின்றன.













12.7.14

எண்களின் உலகில்....


’’சராசரி மனித வாழ்விலிருந்து மேதைகளின் அறிகுறிகளோடு சிலர் எழுந்து வருகையில் அவர்களை உரிய முறையில் அங்கீகரிக்க வேண்டுமென்பதே ’ராமானுஜ’னும் ‘பாரதி’யும்  அளிக்க எண்ணும் மெய்யான தூண்டுதல்.’’

ஒற்றை இலக்கை மட்டுமே குறியாய்க்கொண்டு அதிலேயே முழுவதுமாய்ச் சஞ்சாரம் செய்து…… அதன் உச்சபட்ச சாத்தியங்களை எட்டத் தவிக்கும் மனித மேதைகள் எங்கோ…..எப்பொழுதோ சுயம்புவாய் ஜனிக்கிறார்கள்; ஆனால் நடப்பியல் வாழ்க்கை அவர்களையும் மண்ணுக்கிழுத்து சராசரிகளில் ஒருவராக்கிவிடத் துடிக்கிறது,அந்த நேரத்தில் அவர்களுக்குள் விளையும் சீற்றமும் சலிப்பும் ஆயாசமும் சொல்லுக்கடங்காதவை.

உப்புக்கும் புளிக்குமாய் அன்றாட வாழ்வு தன்னை அலைக்கழிக்கிறதே என்றும் ’’என்னைக் கவலைகள் தின்னத் தகாதெ’’ன்றும் பாரதி துடித்தது அதனாலேதான். அவனுக்குத் தன்னிடமிருந்த மேன்மை, தன்னுள் குடி கொண்டிருந்த கனல் இன்னவென்று புரிந்திருந்தது. அது, தன்னகங்காரமில்லை; தன்னைப்பற்றிய புரிதல். தன்னிடமிருந்து வர வேண்டிய கூடுதல் விளைச்சலைக் கொட்ட முடியாதபடி அன்றாட வாழ்க்கை நடைமுறைகள் போடும் தடைகளை விலக்கவே பராசக்தியை நோக்கி அவ்வாறு அவன் கதறினான்…

பாரதி போலவே தன்னிடமிருந்து பீறிடத் துடிக்கும் அளப்பரிய ஆற்றலின் வீச்சை…அதன் முழுப் பரிமாணத்தோடு புரிந்து வைத்திருந்த மற்றொரு மனிதர் கணித மேதை ராமானுஜம். அதை உரிய முறையில் வெளிப்படுத்தும் வாய்ப்புக் கிடைக்கும் வரை அவர் பித்தாகிப்போகிறார். வாய்ப்புக் கிட்டுகிற தருணத்திலோ மனம் வேண்டியபடி செல்லும் உடல் வாய்க்காமல் போகிறது. வறுமையும் வளமான ஆகாரமின்மையும் நோயின் பிடியில் சிக்க வைத்து அவரைக்காவு கொள்கின்றன. 

கணிதத்தையும் கவிதையையும் பாரதியும்,ராமானுஜமும் - அவரவர் வாழ்வில் எதிர்முனையில் நிறுத்தியிருந்தாலும் அவர்களின் வாழ்க்கைப் போக்கை ஒரு சரட்டில் இணைப்பது இந்த ஒற்றுமைக்கூறுதான். தங்கள் மேதமைக்கு உரிய இடத்தில் - சரியான வேளையில் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பில்லாத ஒரு சமூக அமைப்பின் குரூரமான போக்குக்குக் கள பலிகளாய் நம் முன் நிற்பவர்களும் அவர்கள்தான்.

தான் விரும்பும் எண்களின் உலகத்தில் மட்டுமே வாழ வேண்டுமென்ற தீராத ஏக்கம் - அதை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் விளையும் நடப்பியல் வாழ்க்கைச் சிக்கல்கள், அதனால் விளையும் மன உளைச்சல்கள் இவற்றை மட்டுமே மிகுதியாக முன்னிலைப்படுத்தி ராமானுஜத்தின் வாழ்வைப் படமாக்கியிருப்பதற்காகவே திரு ஞான ராஜசேகரன் அவர்களைப் பாராட்டலாம். ஒரு கணித விற்பன்னரின் வாழ்வைத் திரையில் காட்டுகையில் அவர் வழங்கிவிட்டுப்போயிருக்கும் சிக்கலான கணிதத் தேற்றங்களாலும் சூத்திரங்களாலும் பார்வையாளர்களை அலுப்படையச்செய்து விடாமல் அவரது வாழ்விலிருந்து பெற்றாக வேண்டிய மையச்செய்தியை மட்டுமே இலக்காக்கியபடி திரைப்படம் பயணிப்பது மிகவும் பொருத்தமானது. கணிதம் தெரியாத..அல்லது கணிதத்தில் ஆர்வமில்லாத ஒரு பார்வையாளனும் கூட ராமானுஜத்தின் வாழ்விலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய செய்தியும் சாரமும் அதுவாக மட்டுமே இருக்க முடியும்.[படம் முடிந்தபின் ராமானுஜ கணிதம் குறித்த பொதுவான ஆர்வமூட்டும் செய்திகள் சிறு குறிப்புக்களாக வந்து செல்கின்றன]

ராமானுஜத்தின் மேதைக்கிறுக்குகளையும்,மன உளைச்சல்களையும் உள்வாங்கிச்செய்திருக்கிறார் அபிநவ்; குட்டி ராமானுஜமும் பாராட்டுக்குரியவர்.


தேசிய விருது பெற்றிருக்கும் சுகாசினி மிகை நடிப்பை நோக்கிச்செல்கிறாரோ என்ற உணர்வை இந்தப்படத்தின் வழி தோற்றுவித்திருப்பது வருத்தமளிக்கிறது.


எல்லாக் கல்விநிலையங்களிலும் இந்தத் திரைப்படம் திரையிடப்பட வேண்டுமென்பதோ, இதற்கு வரிவிலக்கும் விருதும் அளிக்கப்பட வேண்டுமென்பதோ இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட வேண்டியவை. சராசரி மனித வாழ்விலிருந்து இத்தகைய மேதைகளின் அறிகுறிகளோடு சிலர் எழுந்து வருகையில் அவர்களை உரிய முறையில் அங்கீகரிக்க வேண்டுமென்பதே ’ராமானுஜ’னும் ‘பாரதி’யும்  அளிக்க எண்ணும் மெய்யான தூண்டுதல்.


21.4.13

’பரதேசி’-விமரிசனக்காணொளி



இந்த ஆண்டு 2013இல் நான் இதுவரை பார்த்த தமிழ்த் திரைப்படங்களில் நெஞ்சைப்பிழிந்து உலுக்கிப்போட்ட படம் பாலாவின் பரதேசி.


 ‘ரெட் டீ’ என்னும் நாவலின் தூண்டுதலால் இப்படம் உருவானதாக பாலா சொன்னபோதும் படம் முழுவதும்  வெளிப்படிருப்பது அவரது உழைப்பும், தனித்துவமான ஆளுமையுமே. சேது, நந்தா,பிதாமகன்,நான்கடவுள் ஆகிய தன் படங்கள் வழியே தமிழ்த் திரையை அதற்குப் பரிச்சயமில்லாத ஒரு தளத்துக்கு முன்னகர்த்திச் சென்ற பாலா ‘அவன் - இவ’னில் சற்றே சறுக்கி விட்டதில் வருத்தம் கொண்டிருந்த நான்
’’பாலா காட்டும் நல்லுணர்வுகள் அவரிடமிருந்து நிறையவே எதிர்பார்க்க வைக்கின்றன.வக்கிரங்களைக் குறைத்து மனித மேன்மைகளைக் கலை மெருகோடு பாலா சொல்லப்போகும் அந்த நாளுக்காகக் காத்திருப்பதைத் தவிர இப்போதைக்கு வேறு வழியில்லை.’’’என்றும் அந்தப்பதிவில் குறிப்பிட்டிருந்தேன். 

இப்போது அந்த நல்ல நாளின் உதயத்தில்...
தன் ‘பரதேசி’யின் மூலம் தமிழ்த் திரைக்கு அவர் புதிய பரிமாணம் சேர்த்திருப்பதில் மிகுந்த பெருமை கொள்கிறேன்.



தில்லியில் அது வெளியிடப்பட்ட முதல்நாளே அதைப்பார்த்து மனம் கசிந்து, அதில் வசனப் பங்களிப்பாற்றிய எழுத்தாளர் திரு நாஞ்சில்நாடனுடன் தொடர்பு கொண்டு என் கருத்துக்களைப்பகிர்ந்து கொண்டு பாராட்டும் தெரிவித்தேன்.விரிவான விமரிசனத்தை உடன் எழுத முடியாமல் வேறு ஏதேதோ வேலைகள். நான் அதை எழுத முனைவதற்குள் பல விமரிசனங்கள் இணையத்தில் குவிந்து விட்டதால் கூறியது கூறலைத் தவிர்க்க எண்ணி எழுதாமலிருந்து விட்டேன்.

தற்போது பாலாவின் ‘பரதேசி’ பற்றி மதுரை நிஜநாடக இயக்க நிறுவனரும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் நாடகத் துறைப்பேராசிரியருமான மதிப்பிற்குரிய திரு மு.ராமசுவாமி அவர்களது உரையடங்கிய காணொளியை என் தளத்தில் பகிர விரும்பி அவரிடம் ஒப்புதல் கேட்டபோது மகிழ்வோடு  அனுமதியளித்த திரு மு.ரா.,வுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
காணொளிக்கான இணைப்பு;


குறிப்பு;
பேராசிரியர் முனைவர் திரு மு.ராமசுவாமி அவர்கள், தமிழ் நாடகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றதில் தன் நிஜ நாடக ஆக்கங்களின் வழி கணிசமான பங்காற்றியிருப்பவர். 

dramaswamy.com யில் தன் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து வரும் ராமசுவாமி, கணையாழி இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவிலும் இடம் பெற்றிருக்கிறார். பிதாமகன்,பருத்தி வீரன்,சண்டைக்கோழி,கன்னத்தில் முத்தமிட்டால் முதலிய சில திரைப்படங்களிலும் நண்பர் மு ராவை வாசகர்கள் பார்த்திருக்கலாம்.

அண்மையில் தன் திரை அனுபவங்களைத் தொகுத்து
 ‘திரை வளர்த்தநான்,நான் வளர்த்த திரை’ என்ற பெயரில் நூலாக்கியுள்ள திரு மு ரா , மிகச்சிறந்த திரை விமரிசகரும் கூட.
அவரது வழக்குஎண் 18/9 பற்றிய ஒரு விமரிசனக் காணொளியை இந்தத் தளத்தில் முன்பு பகிர்ந்திருக்கிறேன்.

இணைப்புகள்;
ஏழாம் உலகமும் நான்கடவுளும்







1.2.13

கடல்-சாத்தானும் தேவதையும்

கடல்-நீண்ட இடைவெளிக்குப்பிறகு வெளிவந்திருக்கும் மணிரத்னத்தின் படம். இடைவெளி கூடிப்போனதாலும் ஜெயமோகனின் கதை வசனப்பங்களிப்பாலும் எதிர்பார்ப்பைக்கூட்டிய படம்.

வணிகப்படத்துக்கே உரிய வழக்கமான தன் பாணி மசாலாக்களை -பிரம்மாண்டமான காட்சி அமைப்பு,சம்பந்தமே இல்லாத உடை அலங்காரத்துடன் கடல்வெளி மக்கள் ஆடும் குழு நடனம்- 

என்று மணிரத்னம் ஆங்காங்கே தூவியிருந்தாலும் கூட கதையின் அடிநாதச்செய்தியின் அற்புதத்தாலும்,பின் களத்துக்கு ஏற்றபடி அமையும் ஜெயமோகனின் மிகப்பொருத்தமான உரையாடல்களாலும்,அர்விந்த்சாமி,அர்ஜுனின் பண்பட்ட நடிப்பாலும் கடல் தன் கம்பீரம் குன்றாமல் முழக்கம் செய்யத் தவறவில்லை என்றே சொல்லலாம்.

அர்விந்த்சாமியின் மிகையற்ற நடிப்பும் சற்றும் அலட்டிக்கொள்ளாத அர்ஜுனின் லாவகமும் படத்தின் பலம்.நாயக நாயகியரை விடவும் படத்தை நிமிர்த்துவதும்,கட்டிப்போடுவதும் இவ்விருவரின் நடிப்பும் பாத்திர முரண்களை மிகச்சரியாக உள் வாங்கி வெளிப்படுத்தியிருக்கும் அனுபவத் தெளிவுமே.

உண்மையான கிறித்தவ இறையியல் இந்தப்படத்தைப்போல வேறெதிலும் சரியாக வெளிப்பட்டதில்லை. சாத்தானாக இருந்து மனித நிலைக்குத் திரும்பியவன் ஒருபோதும் -அவன் நினைத்தாலும் கூட மீண்டும் சாத்தான் நிலைக்குத் திரும்ப முடியாது என்ற செய்தி படத்தில் தாமஸின் பாத்திரத்தில் [கௌதம்] மட்டுமல்லாமல் அர்ஜுனின் பாத்திர அமைப்பின் வழியாகவும் மிகத் தெளிவாக அதன் அழகியலோடு-கதைப்போக்கோடு இணைந்தபடி கிடைக்கிறது.ஜெயமோகனின் பங்களிப்பை அதன் வழி உணர முடிகிறது.

பியாட்ரிஸின் பாத்திரம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக இடம் பெற்றிந்தால்- அவர் பங்கு பெறும் காட்சிகள் இன்னும் சற்று அதிகம் இடம் பெற்றிருந்தால் கௌதமின் மன மாற்றத்துக்குப் போதிய அழுத்தம் கிடைத்திருக்கலாம்.குழந்தைத்தனமான பாத்திரத்தைக்குழந்தையாகவே மாறிச் செய்திருக்கும் துளசி பாராட்டப்பட வேண்டியவர்.

கௌதமும் முதல் படம் என்ற உணர்வு தோன்றாதபடி தன் பாத்திரத்தை சிறப்பாகச் செய்திருக்கிறார்.

ராஜீவ் மேனனின் காமரா கடலின் பல்வேறு முகங்களை,பரிமாணங்களை,அழகுகளை,ஆவேசத்தைக் காட்சிகளுக்குத் தகுந்தபடி கொண்டு வந்து கொட்டியிருக்கிறது.

ரஹ்மானின் இசையில் ’’நெஞ்சுக்குள்ளே’’ இனிமேல் பெரும் கவனம் பெறக்கூடும்.படத்தின் இறுதிக்காட்சியில் ஒலிக்கும் பாடல்வரிகள் ரசிக்கக்கூடியதாக இருந்தபோதும் படம் முடிந்த பிறகு நீண்டு கொண்டு போகும் காட்சிகள் அலுப்பூட்டுவது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

கன்னத்தில் முத்தமிட்டாலுடன் தொலைந்து போயிருந்த மணிரத்னத்தைக் கடல் சற்றே வெளிக்கொணர்ந்திருந்தாலும் இந்தப்படத்தைப் பொறுத்த வரையில் ஒட்டுமொத்தமாக மனதில் இடம் பிடிப்பது நேர்மையான கிறித்தவ போதகராக வரும் அர்விந்த்சாமியே ...






18.1.13

‘ஒழிமுறி’ - உறவெனும் புதிர்-3




[ஒழிமுறி-உறவெனும் புதிர்-2-தொடர்ச்சி]
பெரிதும்
வசனங்களின் வலுவிலேயே ஆன இந்தத் திரைப்படம் அவரவர் வாழ்வின் சில தருணங்களையாவது நினைவுகூர வைத்து விடுவதால்....மொழியையும்,உரையாடல்களையும் வார்த்தைக்கு வார்த்தை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கும் கூட அந்த உணர்வுகளைக் கொண்டுபோய்ச் சேர்த்து விடுகிறது.


நடுநிலையான பெண்ணிய நோக்கை மிக இயல்பாக முன் வைத்திருக்கும் நோக்கிலும் கவனம் பெறும் படமாகிறது ஒழிமுறி.
படத்தின் தொடக்கத்தில்,தன்னிடம் சவரம் செய்து கொண்டிருக்கும் ஒரு கிழவரிடம் உங்களுக்கு எத்தனை குழந்தைகள்என்று பேச்சுவாக்கில் அந்த நாவிதர் கேட்க,
மொத்தம் 12, இப்ப உள்ளது 4’ என்கிறார் கிழவர்.
உங்கள் தொழில் என்னஎன்று நாவிதர் அடுத்த கேள்வியைப்போட,
உரையாடலை ஜன்னல் வழியாகக் கேட்டுக்கொண்டிருக்கும் பாலாவின் தந்தை
வேறென்ன...இப்ப சொன்ன அதேதான்..என்று கிண்டலடிக்கிறார்;
அந்த இழையையே‘’பெண்ணின் முக்கியமான வேலையே குழந்தை பெறுவதும்,கறி வைப்பதும், தோசை சுடுவதும்...,வீடு சுத்தமாக்குவதும்
சுமங்கலி என்கிற அந்தஸ்தை நிலை நாட்டிக் கொள்வதுமாகத்தான் இருந்தது’’ என்று தன் வசனத்தால் தொடர்ந்து கொண்டு போகிறாள் பாலா .
அதே நேரத்தில் அதை வழி மொழிவதைப் போல..
’’பசுவும் பெண்ணும் கறவை வத்தினாக் கசாப்பு’’ என்று பாலாவின் விதவைப்பாட்டி வேதம் ஒரு சிறு குழந்தைக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.
பெண் சார்ந்த தீவிரக்கருத்து நிலைப்பாடுகளைப் படத்தில் எதிர்பார்க்க முடியும் என்பதை இந்த ஆரம்பக்கட்டத்திலேயே தோற்றுவித்து விடுகிறார் ஜெ.

திரைப்படம் தொடங்கும்போது,அந்தண இனத்தைச் சேர்ந்த பாலா வீட்டிலிருக்கும் ஆண் முதன்மை தெய்வங்களின் பழங்கால ஓவியங்களும்,ஆண் நின்று கொண்டிருக்க அவன் காலடியில் மனைவி ஒடுங்கி அமர்ந்திருப்பது போலவும், கணவன் இரு மனைவியரோடு காட்சி தருவது போலவுமான பழுப்பேறிய  பழைய குடும்பப்படங்கள் திரையில் விரிகின்றன;ஆண் முதன்மை பெற்றிருந்த அந்தக் குடும்ப அமைப்பைக் குறியீட்டால் அவை சுட்டுகின்றன.

அடுத்த காட்சி ,பாலா எடுத்திருக்கும் வழக்கின் வழியாக அவள் அறியாத பிறிதொரு உலகமான பெண்மலையாளத்திற்குள் நுழைகிறபோது அதற்கேற்றபடி சிம்மவாகினியாக... ,காளி அசுரனை வதம் செய்வதாக விரிந்து கொண்டு போகும் காளிப்பிள்ளை வீட்டின் ஓவியங்கள் பெண் முதன்மை பெற்றிருந்த காலகட்டத்தின் குறியீடுகளை மனதிற்குள் பதிக்கின்றன.

தொடக்கக் காட்சியில்  குடும்பம் என்ற அமைப்பின் கதவை என்றென்றக்குமாய் அடைத்து விடுவதன் குறியீடாகத் தன் வீட்டின் கதவைத் மூடுகிறாள் மீனாட்சி,
இறுதிக் காட்சியில் தனது தன்மதிப்புக்கான பாதை திறந்து விட்டதை உணர்த்தும் குறியீடாகக் கதவை விரியத் திறக்கிறாள்.
படம் தொடங்கும்போது குழந்தைகள் பெறுவதும்,வீட்டைப்பேணுவதும்,சுமங்கலி அந்தஸ்தை நிலை நாட்டிக் கொள்வதுமே பெண்ணின் வாழ்வாக இருக்கிறது என்ற யதார்த்தத்தை முன்வைக்கிறாள் பாலா. ‘’நான் இனி எவருக்கும் மனைவியில்லை’’என்ற பிரகடனத்தோடு படத்தை முடித்து வைக்கிறாள் மீனாட்சி.

மீனாட்சியின் எதிர்த்தரப்பு வழக்கறிஞராக பாலா இருந்தபோதும் வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியிலேயே சமரசமாகத் தீர்த்துக்கொண்டு விடுமாறு சரத்திடம் சொல்வதற்கு அவள் ஒரு பெண்ணாக இருப்பதே காரணமாக இருக்கிறது. நீதிமன்றப்படியை மிதித்து விட்டாலே பெண்ணின் நடத்தை குறித்த சேற்றை வாரி இறைக்க அங்கிருக்கும் எல்லோரும் எப்போதும் ஆயத்தமாக இருப்பார்கள் என்னும் யதார்த்தத்தை அவள் வாயிலாகவே அறிந்து திடுக்கிடுகிறான் சரத். அப்பாவியான தன் தாய்க்கு அவ்வாறான இழிசொற்களும் அபவாதங்களும் தேவையா என்ற எண்ணமே அவளது பின்புலத்தைத் தேடிச் செல்ல அவனுக்கு உந்து சக்தியாகின்றன.

யானைக்குத் தன் பலம் தெரியாததாலேயே மனிதன் அதை அடக்கி ஆள்கிறான், பெண்ணும் கூட அப்படித்தான் என்று சொல்லப்படும் உலகியல் வாக்கு தாணுப்பிள்ளையின் யானைப்பாசம் வழி படத்தில் காட்டப்படுகிறது.யானை தன் கட்டுக்குள் இருப்பதில் அவர் குதூகலித்துப் பாட்டுப்பாடிக் கொண்டாடிக் களிக்கிறார். தன் தாயின் காலத்தில் ஆணின் வசத்துக்குள் அகப்படாமல் இருந்த பெண்ணைத் தன் கட்டுக்குள் கொணர்ந்து விட்ட ஆனந்தமும் கூட அதனுடன் சேர்ந்தே வெளிப்பாடு கொள்கிறது.

திரைப்படம் காட்டும் முதன்மையான மூன்று பெண்களும் வேறான மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல; வெவ்வேறு காலகட்டங்களின் வேறுபட்ட வாழ்க்கை முறைகளுக்குப் பழகிப்போன பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாதிரிகள் அவர்கள். 

ஆணையிடும் இடத்தில்-அதிகாரம் செலுத்தும் இடத்தில் பெண் இருக்க வேண்டும்,அதை ஆண் கேட்க வேண்டும் என்ற வாழ்முறைக்குப் பழகிப்போயிருப்பவள் காளிப்பிள்ளை.
கதகளிக்காரர்களும்,மல்யுத்தக்காரர்களும் அவள் வீட்டு முற்றத்துக்கு வந்து ஆட்டம் நிகழ்த்தி விட்டு அவள் தரும் சன்மானத்தைப் பெற்றுக்கொண்டு போகிறவர்கள். காலி செய்யாமல் காலம் நீட்டித்துக் கொண்டு போகும் தன் நிலத்துக் குத்தகைக்காரனைத் தாக்கி விட்டுக்  காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டரிடம் அவள் பேசும் தோரணை...,அங்கே அவள் அமர்ந்திருக்கும் அந்த கம்பீரம்..இங்கே இருந்த இந்திரா காந்தி படம் எங்கேடா....அவ இந்த நாட்டுக்கே ராணிடா..என்று சொல்லும் வார்த்தை - நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையுடனேயே பெண் நடக்கவேண்டும் என்று சாகும்கணம் வரை நம்பும் உள்ளம் இவை காளிப்பிள்ளையின் தனித்துவங்கள்.

மீனாட்சியம்மாவின் பாத்திரப்படைப்பு காளிப்பிள்ளையிடமிருந்து முற்றிலும் வேறானது. தாய்வழிச் சமூக அமைப்பின் சரிவில், ஆண் மேலாண்மை பெற்று விட்ட சூழலில் தன் இருப்பையும் குரலையும் தொலைத்து விட்டு  வீட்டு அடிமையாகி-எதற்கும் எதிர்வினையாற்றாமல் அடங்கியே பழகிப்போன பெண் குலத்தின் பிரதிநிதி அவள்.


பாலாகல்வி வழியாகச் சுதந்திரம் பெற்ற இன்றைய புது யுகத்தின் பெண். ஆணின் ஆதிக்கத்துக்கு அவள் கட்டுப்படுவதுமில்லை; அவனைத் தன் ஆதிக்கத்துக்குள் கொண்டு வர எண்ணுவதுமில்லை. அவனைத் தன் சம தோழனாக-கூட்டாளியாகக் கருதியபடி தன் நினைப்புக்கள்,நிலைப்பாடுகள்,சமூகத்தின் மீதான விமரிசனங்கள் என சகலத்தையும் அவளால் எந்த மனத்தடையுமின்றிப் பகிர்ந்து கொள்ளமுடிகிறது. பாலா-சரத்தின் தோழமை வழியே ஆண் -பெண்ணுக்கு இடையேயான ஆரோக்கியமான இத்தகைய உறவு மேம்பட வேண்டுமென்பதையே படம் முன்வைக்கிறது.

பாலாவை மணக்கப்போவதாகத் தாணுப்பிள்ளையிடம் சரத் தெரிவித்ததும் அவள் தன்மதிப்புள்ள ஒரு பெண்என்கிறார் அவர். தன்மதிப்புள்ள தாயைக்கண்டு அஞ்சி தன்மதிப்புள்ள ஒரு மனைவியை ஏற்கத் தயங்கிய அவரிடமிருந்து வரும் இந்தச் சான்றிதழ் மெய்யாகவே மிகவும் முக்கியமானது. உண்மையிலேயே ஓர் ஆணின் மதிப்புக்கு உரியவளாக இருப்பவள்  சுயகௌரவம் கொண்டிருக்கும் ஒரு பெண்ணே; ஆனாலும் தன் தாயின் ஆளுமையில் அது வரம்புகளை உடைத்துக்கொண்டு,கட்டற்றுப் பீறிடுவது கண்டும், தான் நேசித்த தந்தையிடமிருந்தே அது தன்னை அந்நியப்படுத்தி விடுவதைப்பார்த்தும் அச்சம் கொண்டே  மனைவி மீது தன் அடக்கு முறைகளை ஏவிவிடத் தொடங்குகிறார் தாணுப்பிள்ளை.’பெண் மீது உள்ள அச்சத்தினாலேயே ஆண் அவளை ஆக்கிரமிக்கிறான்என்று படத்தின் இறுதிக்கட்டத்தில் தன் வருங்கால மருமகளிடம் ஒப்புதல் வாக்குமூலமும் அளிக்கிறார் அவர். வெளிப்பார்வைக்கு முரடனாகவும் முன் கோபியாகவும் தோற்றமளித்தாலும் தாணுப்பிள்ளை ஒரு கோழை என்பதை நிறுவும் காட்சிகளே படமெங்கும் நிறைந்திருக்கின்றன.

 ஜெயமோகனின் தெளிவான திரைக்கதையைப் பழுதில்லாமல் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் செம்மையான பணியைத் தன் இயக்கத்தின் வழி செய்திருக்கிறார் மதுபால்.

பெரும்பாலும் கதையை நகர்த்திச் செல்லும் பார்வையாளர்களாகவே வருவதால் அதற்கேற்ற அளவான - மிகையற்ற நடிப்பை சரத்தாக வரும் ஆசிப் அலி,பாலாவாக வரும் பாவனா ஆகிய இருவருமே தந்திருக்கிறார்கள்.ஏதோ ஒரு ஐயத்தையும் குழப்பத்தையுமே சுமந்து திரியும் தொடக்க கட்ட சரத், குதூகலமான,கலகலப்பான வாலிபனாவது இலகுவான மனநிலை கொண்ட பாலாவுடனான பழக்கம் நேர்ந்த பின்பே. இந்த மாற்றத்தை ஆசிப் நன்றாக உள்வாங்கிப் பதிவு செய்திருக்கிறார்.

காளிப்பிள்ளையாக வரும் ஸ்வேதாமேனன், பெண் ஆதிக்கத்தின் அட்டகாசமானதொரு முகத்தைத் தன் நடிப்புப் பாணியின் மூலம்  தொட்டுக் காட்ட முற்பட்டிருந்தபோதும் ஒரு சில இடங்களில் மிகை என்ற கோட்டை அந்த நடிப்பு தொட்டு விடுகிறது...மாறாக மிகச்சிறந்த எதிர்வினையாற்ற வேண்டிய சில கட்டங்களிலும் கூட மல்லிகா மிகக்குறைவான நடிப்பையே தந்திருப்பது ஏமாற்றமளித்தாலும் மகனோடு உரையாடும் பல காட்சிகளில் தன் உச்சபட்சப் பங்களிப்பைத் தர அவர்  முயன்றிருக்கிறார்.
காளிப்பிள்ளையாக ஸ்வேதாமேனன்

இந்தத் திரைப்படத்தைப் பொறுத்தவரை ,தாணுப்பிள்ளை என்னும் மனிதனின் ஆளுமையை.., மன அவசத்தை..,அவன் படும் அக,புற உளைச்சல்களைத் தன் தன் நடிப்பால் வாழ்ந்தே காட்டியிருக்கும் லால்தான் நடிப்பில் முதலிடம் பெறுகிறார் ; அதிகம் பழகியிராத தந்தை மீது கொண்ட அபரிமிதமான ஸ்நேகம்பெற்ற பிள்ளை மீது  ஒரு தகப்பனுக்கே உரிய பாசத்தோடு கூடிய தவிப்பு, ஆதிக்க மனம் கொண்ட தாய் மீதான பாசம் கலந்த வெறுப்பு, மனைவி மீது செலுத்தும்  அன்புடன் கூடிய ஆதிக்கம் என்ற பலவகைப்பரிமாணங்களுக்கும் இடமளிக்கும் அந்தப்பாத்திரத்தோடு ஒன்றி உட்கலந்து தாணுப்பிள்ளை என்னும் எதிர்நிலைப்பாத்திரத்தையும் கூட நேசிக்க வைத்து விடும் மாயத்தை நிகழ்த்தி விடுகிறது லாலின்  நடிப்பு.

வசனங்களின் அடித்தளத்திலேயே கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் குறிப்பிட்ட வசனம் என்று பிரித்துப்பார்க்க முடியாதபடி எல்லா உரையாடல்களுமே பாத்திரப்பண்புகளைப் படம் பிடித்துக்காட்டி மனித மனச் சிடுக்குகளை அவிழ்த்துக்காட்டுகின்றன என்றபோதும் ஒரு சிலவற்றையாவது குறிப்பிடாமல் கட்டுரையை நிறைவு செய்வது கடினம்.

தன் பெற்றோரின் முன்கதையை பாலாவிடம் சரத் சொல்லிச் செல்லும் ஒரு கட்டத்தில்,’’இந்த மனிதர்களால்  ஏன் சந்தோஷமாகவே வாழ முடிவதில்லை?’’என்று கேட்கிறாள் பாலா.
‘’சந்தோஷமா..? அது யாருக்கு வேண்டும்....ஒருவரை ஒருவர் ஜெயிப்பது எப்படி, முந்துவது எப்படி என்பதல்லவா மனித  வாழ்க்கையின் குறிக்கோள்’’என்கிறான் சரத். கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையின் அருகே இருந்தபடி அவர்கள் பேசும் அந்தக்கட்டத்தில் ’’மனிதனின் மிக முதன்மையான பிரச்சினை பயம் ஒன்றுதான்..அடுத்தவரை  வெல்ல அவன் துடிப்பதும் அந்த பயத்தினாலேதான்’’என்ற விவேகானந்தரின் வாக்கும் கூடவே வருகிறது. படத்தின் இறுதிக்கட்டத்தில் தாணுப்பிள்ளை அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலமும் இந்தக்கருத்தையே உறுதிப்படுத்துகிறது.

‘’நம் பார்வைகளும்,கோணங்களும் எல்லை கட்டியவைகளாக மட்டுமே இருப்பதால்...பல நேரங்களில் நம் அருகிலேயே இருப்பவர்களையே கூடச் சரியாகப் புரிந்து கொள்ள நாம் தவறி விடுகிறோம்....’’என்று தன் தந்தை பற்றிய சரத்தின் புரிதல் குறித்துப்  பாலா சொல்லும் கட்டம்,
‘’வெறுப்பினால் அல்ல மகனே...சிநேகத்தினாலேயே மனிதர்கள் கொடூரமானவர்களாக...குரூரமானவர்களாக ஆகிறார்கள்...
வெறுப்பு வேண்டாம் என்று புறக்கணிக்க முற்பட்டால் சிநேகமும் வேண்டாம் என்று துறந்தாக வேண்டும்..அது அத்தனை சுலபமானதல்ல’’
என்று மீனாட்சி சரத்திடம் பேசும் இடம்,
என்று பல இடங்களில் வசனகர்த்தாவாக மட்டுமன்றித் தேர்ந்த உளவியல் வல்லுநராகவும் வெளிப்படுகிறார் ஜெயமோகன்.

குடும்ப உறவுகளுக்கு இன்னும் கூட மேலதிக முக்கியத்துவத்தை அளித்து வரும் இந்தியப் பண்பாட்டுத் தளத்தில் உறவுகளின் அடியாழத்தில் மண்டிக்கிடக்கும் கலவையான உணர்வுகளை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கும் ஒழிமுறி தவிர்க்க முடியாத ஒரு வரலாற்று ஆவணமாகிறது.

இணைப்புக்கள்;

ஒழிமுறி’ - உறவெனும் புதிர்-2

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....