துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

12.7.14

எண்களின் உலகில்....


’’சராசரி மனித வாழ்விலிருந்து மேதைகளின் அறிகுறிகளோடு சிலர் எழுந்து வருகையில் அவர்களை உரிய முறையில் அங்கீகரிக்க வேண்டுமென்பதே ’ராமானுஜ’னும் ‘பாரதி’யும்  அளிக்க எண்ணும் மெய்யான தூண்டுதல்.’’

ஒற்றை இலக்கை மட்டுமே குறியாய்க்கொண்டு அதிலேயே முழுவதுமாய்ச் சஞ்சாரம் செய்து…… அதன் உச்சபட்ச சாத்தியங்களை எட்டத் தவிக்கும் மனித மேதைகள் எங்கோ…..எப்பொழுதோ சுயம்புவாய் ஜனிக்கிறார்கள்; ஆனால் நடப்பியல் வாழ்க்கை அவர்களையும் மண்ணுக்கிழுத்து சராசரிகளில் ஒருவராக்கிவிடத் துடிக்கிறது,அந்த நேரத்தில் அவர்களுக்குள் விளையும் சீற்றமும் சலிப்பும் ஆயாசமும் சொல்லுக்கடங்காதவை.

உப்புக்கும் புளிக்குமாய் அன்றாட வாழ்வு தன்னை அலைக்கழிக்கிறதே என்றும் ’’என்னைக் கவலைகள் தின்னத் தகாதெ’’ன்றும் பாரதி துடித்தது அதனாலேதான். அவனுக்குத் தன்னிடமிருந்த மேன்மை, தன்னுள் குடி கொண்டிருந்த கனல் இன்னவென்று புரிந்திருந்தது. அது, தன்னகங்காரமில்லை; தன்னைப்பற்றிய புரிதல். தன்னிடமிருந்து வர வேண்டிய கூடுதல் விளைச்சலைக் கொட்ட முடியாதபடி அன்றாட வாழ்க்கை நடைமுறைகள் போடும் தடைகளை விலக்கவே பராசக்தியை நோக்கி அவ்வாறு அவன் கதறினான்…

பாரதி போலவே தன்னிடமிருந்து பீறிடத் துடிக்கும் அளப்பரிய ஆற்றலின் வீச்சை…அதன் முழுப் பரிமாணத்தோடு புரிந்து வைத்திருந்த மற்றொரு மனிதர் கணித மேதை ராமானுஜம். அதை உரிய முறையில் வெளிப்படுத்தும் வாய்ப்புக் கிடைக்கும் வரை அவர் பித்தாகிப்போகிறார். வாய்ப்புக் கிட்டுகிற தருணத்திலோ மனம் வேண்டியபடி செல்லும் உடல் வாய்க்காமல் போகிறது. வறுமையும் வளமான ஆகாரமின்மையும் நோயின் பிடியில் சிக்க வைத்து அவரைக்காவு கொள்கின்றன. 

கணிதத்தையும் கவிதையையும் பாரதியும்,ராமானுஜமும் - அவரவர் வாழ்வில் எதிர்முனையில் நிறுத்தியிருந்தாலும் அவர்களின் வாழ்க்கைப் போக்கை ஒரு சரட்டில் இணைப்பது இந்த ஒற்றுமைக்கூறுதான். தங்கள் மேதமைக்கு உரிய இடத்தில் - சரியான வேளையில் அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பில்லாத ஒரு சமூக அமைப்பின் குரூரமான போக்குக்குக் கள பலிகளாய் நம் முன் நிற்பவர்களும் அவர்கள்தான்.

தான் விரும்பும் எண்களின் உலகத்தில் மட்டுமே வாழ வேண்டுமென்ற தீராத ஏக்கம் - அதை நிறைவேற்றிக்கொள்ள முடியாமல் விளையும் நடப்பியல் வாழ்க்கைச் சிக்கல்கள், அதனால் விளையும் மன உளைச்சல்கள் இவற்றை மட்டுமே மிகுதியாக முன்னிலைப்படுத்தி ராமானுஜத்தின் வாழ்வைப் படமாக்கியிருப்பதற்காகவே திரு ஞான ராஜசேகரன் அவர்களைப் பாராட்டலாம். ஒரு கணித விற்பன்னரின் வாழ்வைத் திரையில் காட்டுகையில் அவர் வழங்கிவிட்டுப்போயிருக்கும் சிக்கலான கணிதத் தேற்றங்களாலும் சூத்திரங்களாலும் பார்வையாளர்களை அலுப்படையச்செய்து விடாமல் அவரது வாழ்விலிருந்து பெற்றாக வேண்டிய மையச்செய்தியை மட்டுமே இலக்காக்கியபடி திரைப்படம் பயணிப்பது மிகவும் பொருத்தமானது. கணிதம் தெரியாத..அல்லது கணிதத்தில் ஆர்வமில்லாத ஒரு பார்வையாளனும் கூட ராமானுஜத்தின் வாழ்விலிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய செய்தியும் சாரமும் அதுவாக மட்டுமே இருக்க முடியும்.[படம் முடிந்தபின் ராமானுஜ கணிதம் குறித்த பொதுவான ஆர்வமூட்டும் செய்திகள் சிறு குறிப்புக்களாக வந்து செல்கின்றன]

ராமானுஜத்தின் மேதைக்கிறுக்குகளையும்,மன உளைச்சல்களையும் உள்வாங்கிச்செய்திருக்கிறார் அபிநவ்; குட்டி ராமானுஜமும் பாராட்டுக்குரியவர்.


தேசிய விருது பெற்றிருக்கும் சுகாசினி மிகை நடிப்பை நோக்கிச்செல்கிறாரோ என்ற உணர்வை இந்தப்படத்தின் வழி தோற்றுவித்திருப்பது வருத்தமளிக்கிறது.


எல்லாக் கல்விநிலையங்களிலும் இந்தத் திரைப்படம் திரையிடப்பட வேண்டுமென்பதோ, இதற்கு வரிவிலக்கும் விருதும் அளிக்கப்பட வேண்டுமென்பதோ இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட வேண்டியவை. சராசரி மனித வாழ்விலிருந்து இத்தகைய மேதைகளின் அறிகுறிகளோடு சிலர் எழுந்து வருகையில் அவர்களை உரிய முறையில் அங்கீகரிக்க வேண்டுமென்பதே ’ராமானுஜ’னும் ‘பாரதி’யும்  அளிக்க எண்ணும் மெய்யான தூண்டுதல்.


1 கருத்து :

devarajvittalanbooks சொன்னது…

மீண்டும் தங்கள் பதிவுகளைப் படிப்பதில் மகிழ்ச்சி .

தேவராஜ் விட்டலன் .

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....