துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

22.1.13

தப்பவிடக்கூடாத தமிழ்ச்சிறுகதைகள்-5


பிரபஞ்சனின் பிரும்மம்
‘'தன் அழிவிலிருந்தே ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் முருங்கை எனும் பிரும்மம் உணர்த்தும் பாடம் இது.’’


தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான பிரபஞ்சன். தமிழ் வரலாற்று நாவல்களின் வழக்கமான பாணியைத் தன் வானம் வசப்படும்’,’மானுடம் வெல்லும்ஆகிய வேறுபட்ட படைப்புக்களால் மாற்றியமைத்தவர்.சாகித்திய அகாதமி விருது, இலக்கியச்சிந்தனை போன அமைப்புக்களிலிருந்து விருதை வென்றிருக்கும் பிரபஞ்சன், முறையான தமிழ்க்கல்வி பயின்றிருப்பதோடு சமஸ்கிருதமும் அறிந்தவர். முழுநேர எழுத்துப்பணியையே தன்  வாழ்வாக அமைத்துக் கொண்டிருக்கும் பிரபஞ்சன்,அற்புதமான பல சிறுகதைளையும் எழுதியிருக்கிறார் அவற்றில் ஒன்றான பிரும்மம் பற்றி

புது வீட்டுக்குக் குடி வரும் ஒரு குடும்பத்து இளைஞனின் மன ஓட்டமாக விரிகிறது பிரும்மம். வீட்டின் முன்னாலுள்ள வெற்றிடத்தை எவ்வாறு பயன் கொள்ளலாம் என்பதில் வீட்டு நபர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை சொல்கிறார்கள். மாடு வளர்க்கலாம் என்கிறாள் பாட்டி; அம்மா காய்கறித் தோட்டத்தையும்,சகோதரி பூந்தோட்டத்தையும் பரிந்துரைக்க,அப்பாவின் ஆசைப்படி முருங்கைக்கன்று கொண்டுவந்து நடப்பட,அது துளிர்த்துச் செழித்து வீட்டாரின் விருப்பத்துக்குரியதாகிறது.
சமஸ்கிருதம் படித்திருக்கும் இளைஞன் அதை பிரும்ம விருட்சமாகப் பார்க்கிறான். கீரை,காய் என முருங்கையின் அனைத்தும் சிருஷ்டிக்கு உரமாவதால் படைப்புத் தொழில் செய்யும் பிரம்மனுக்கு நிகரான விருட்சம் அது என்கிறார் அவனது சமஸ்கிருத வாத்தியார்.

‘’அதன் வளர்ச்சியின் ஒவ்வொரு கணுவும் எங்களுக்குத் தெரிந்தே நிகழ்ந்தது;உளுத்தம்பொட்டின் அளவான தளிர்,மெல்லிய நரம்பு போல அது விடும் கிளை,பச்சைபட்டாணி போல அதன் இலை,ஊடே ஊடே தோன்றும் அதன் புதிய புதிய தளிர்கள் எல்லாம் எங்கள் கண் முன்பாகவே நிகழ்ந்தன’’என்று படிப்படியான அதன் வளர்ச்சியை விவரித்துக்கொண்டு போகிறான் கதை சொல்லியான அந்த இளைஞன்.
முளை விட்ட பருவம் தொட்டு அந்த முருங்கையை தரிசித்து வருவது போலக் குழவிப்பரும் தொட்டுத் தான் பார்த்து வளர்ந்து வருபவளான  தன் சகோதரியின் வளர்ச்சியையும், அந்த முருங்கையின் வளர்ச்சியையும் சேர்த்து ஒப்பிட்டபடி, வியந்து போகிறது அவன் மனம்.

வீட்டிலுள்ள ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையில் அந்த முருங்கை ஈர்க்கிறது. பிறரோடு அதிகம் பழகாமல் இருந்த அம்மாவுக்கு அதன்  கீரையையும்,காயையும் வேண்டி அவளை நாடி வரும் தோழியர் கூட்டம் அதிகரிக்கிறது. தேனாக இனிக்கும் முருங்கைக் கீரையையும்,மதுரமாய்ச்சுவைக்கும் காயையும் பாராட்டி விட்டுச் செல்ல அவர்கள் தவறுவதே இல்லை. அப்பாவும் மகனும் மர நிழலில் சைக்கிளை நிறுத்தி வைக்கிறார்கள். மகன் எழுதுவதும்,படிப்பதும்,ராம சப்தம் பயில்வதும் மரத்தடியிலேதான் நிகழ்கிறது. அவனது எழுத்தின் சிருஷ்டி நிகழ்வதும் கூட பிரம்ம விருட்சமான அதன் நிழலிலேதான். கூடிழந்து திரியும் பறவைகளுக்கு அது புகலிடம் ஆகிறது.

ஒரு நாள் சட்டென்று வீசிய மழைக்காற்றின் சூறாவளியில் மரம் சரிந்து அந்த இடம் சூனியமாகிறது. முருங்கை மரம் அவ்வாறு அழிந்து போனது, குடும்பத்தாரைக் கடுமையாகத் தாக்குகிறது. சில நாட்களுக்குப் பிறகு...
கதை சொல்லி, காப்பி தம்ளரோடு சென்று தன் வழக்கப்படி முருங்கை இருந்த இடத்தருகே நிற்க அவனை ஆச்சரியப்படுத்தும் வகையில் துண்டாகி நின்ற மரத்திலிருந்து ஒரு இடத்தில் சின்னதாய்க் கிளைத்திருக்கிறது.
‘’உயிர்தான்!
என ஒற்றைச்சொல்லோடு கதை முடிகிறது. 

உயிர் என்னும் ஆத்மாவுக்கு என்றும் அழிவில்லை என்னும் மிகப் பெரிய தத்துவத்தை- மானுட வாழ்வில் எதுவானாலும் அதற்கு ஒரு புத்துயிர்ப்பு உண்டு என்னும் நம்பிக்கையூட்டும் மாபெரும் உண்மை ஒன்றை ஜீவவிருட்சமான முருங்கையை முன்வைத்துச் சொல்லும் இந்தக்கதையை,
‘’கடந்த பல வருஷங்களில் இது போன்ற கதை மலர்ந்ததே இல்லை’’என்று 1983இல் மதிப்பிட்டிருக்கிறார் எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு [தி ஜாவின் நெருங்கிய நண்பர் இவர்].
‘’பாஸிட்டிவான எதோடும் பொருத்திப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ள வைக்கிற கம்பீரமான முடிவு
என்கிறார் திருப்பூர் கிருஷ்ணன்

மானுட வாழ்வில் சோர்ந்து விடச்செய்யும் தருணங்கள் வந்தாலும் புதிய நம்பிக்கை கொள்ள வைக்கும் சாத்தியங்களும் கூடவே உண்டு
’’என்னைப்புதிய உயிர் ஆக்கி..’’என்று பாரதி சொல்வது போலத் தன் சாம்பலிலிருந்து தன்னை உயிர்ப்பித்துக்கொள்ளும் ஃபீனிக்ஸ் பறவையைப்  போலத் தன் அழிவிலிருந்தே ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் முருங்கை எனும் பிரும்மம் உணர்த்தும் பாடம் இது.
இணைப்புக்கள்;

பின் குறிப்பாக...ஒரு கூடுதல் தகவல்...
ஜேடி-ஜெர்ரி  அறக்கட்டளை சார்பில், இலக்கியப்படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சாரல் விருதை  இந்த ஆண்டு  பெறவிருக்கும் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு மனமார்ந்த  வாழ்த்துக்கள்.
(விழா ஜனவரி 26 சனிக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது).


[இது வரை இவ் விருதைப் பெற்றிருப்பவர்கள்: 
2009- திலீப்குமார் 
2010- ஞானக்கூத்தன் 
2011-அசோகமித்திரன் 
2012-வண்ணநிலவன், வண்ணதாசன்]


18.1.13

‘ஒழிமுறி’ - உறவெனும் புதிர்-3




[ஒழிமுறி-உறவெனும் புதிர்-2-தொடர்ச்சி]
பெரிதும்
வசனங்களின் வலுவிலேயே ஆன இந்தத் திரைப்படம் அவரவர் வாழ்வின் சில தருணங்களையாவது நினைவுகூர வைத்து விடுவதால்....மொழியையும்,உரையாடல்களையும் வார்த்தைக்கு வார்த்தை புரிந்து கொள்ள முடியாதவர்களுக்கும் கூட அந்த உணர்வுகளைக் கொண்டுபோய்ச் சேர்த்து விடுகிறது.


நடுநிலையான பெண்ணிய நோக்கை மிக இயல்பாக முன் வைத்திருக்கும் நோக்கிலும் கவனம் பெறும் படமாகிறது ஒழிமுறி.
படத்தின் தொடக்கத்தில்,தன்னிடம் சவரம் செய்து கொண்டிருக்கும் ஒரு கிழவரிடம் உங்களுக்கு எத்தனை குழந்தைகள்என்று பேச்சுவாக்கில் அந்த நாவிதர் கேட்க,
மொத்தம் 12, இப்ப உள்ளது 4’ என்கிறார் கிழவர்.
உங்கள் தொழில் என்னஎன்று நாவிதர் அடுத்த கேள்வியைப்போட,
உரையாடலை ஜன்னல் வழியாகக் கேட்டுக்கொண்டிருக்கும் பாலாவின் தந்தை
வேறென்ன...இப்ப சொன்ன அதேதான்..என்று கிண்டலடிக்கிறார்;
அந்த இழையையே‘’பெண்ணின் முக்கியமான வேலையே குழந்தை பெறுவதும்,கறி வைப்பதும், தோசை சுடுவதும்...,வீடு சுத்தமாக்குவதும்
சுமங்கலி என்கிற அந்தஸ்தை நிலை நாட்டிக் கொள்வதுமாகத்தான் இருந்தது’’ என்று தன் வசனத்தால் தொடர்ந்து கொண்டு போகிறாள் பாலா .
அதே நேரத்தில் அதை வழி மொழிவதைப் போல..
’’பசுவும் பெண்ணும் கறவை வத்தினாக் கசாப்பு’’ என்று பாலாவின் விதவைப்பாட்டி வேதம் ஒரு சிறு குழந்தைக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறாள்.
பெண் சார்ந்த தீவிரக்கருத்து நிலைப்பாடுகளைப் படத்தில் எதிர்பார்க்க முடியும் என்பதை இந்த ஆரம்பக்கட்டத்திலேயே தோற்றுவித்து விடுகிறார் ஜெ.

திரைப்படம் தொடங்கும்போது,அந்தண இனத்தைச் சேர்ந்த பாலா வீட்டிலிருக்கும் ஆண் முதன்மை தெய்வங்களின் பழங்கால ஓவியங்களும்,ஆண் நின்று கொண்டிருக்க அவன் காலடியில் மனைவி ஒடுங்கி அமர்ந்திருப்பது போலவும், கணவன் இரு மனைவியரோடு காட்சி தருவது போலவுமான பழுப்பேறிய  பழைய குடும்பப்படங்கள் திரையில் விரிகின்றன;ஆண் முதன்மை பெற்றிருந்த அந்தக் குடும்ப அமைப்பைக் குறியீட்டால் அவை சுட்டுகின்றன.

அடுத்த காட்சி ,பாலா எடுத்திருக்கும் வழக்கின் வழியாக அவள் அறியாத பிறிதொரு உலகமான பெண்மலையாளத்திற்குள் நுழைகிறபோது அதற்கேற்றபடி சிம்மவாகினியாக... ,காளி அசுரனை வதம் செய்வதாக விரிந்து கொண்டு போகும் காளிப்பிள்ளை வீட்டின் ஓவியங்கள் பெண் முதன்மை பெற்றிருந்த காலகட்டத்தின் குறியீடுகளை மனதிற்குள் பதிக்கின்றன.

தொடக்கக் காட்சியில்  குடும்பம் என்ற அமைப்பின் கதவை என்றென்றக்குமாய் அடைத்து விடுவதன் குறியீடாகத் தன் வீட்டின் கதவைத் மூடுகிறாள் மீனாட்சி,
இறுதிக் காட்சியில் தனது தன்மதிப்புக்கான பாதை திறந்து விட்டதை உணர்த்தும் குறியீடாகக் கதவை விரியத் திறக்கிறாள்.
படம் தொடங்கும்போது குழந்தைகள் பெறுவதும்,வீட்டைப்பேணுவதும்,சுமங்கலி அந்தஸ்தை நிலை நாட்டிக் கொள்வதுமே பெண்ணின் வாழ்வாக இருக்கிறது என்ற யதார்த்தத்தை முன்வைக்கிறாள் பாலா. ‘’நான் இனி எவருக்கும் மனைவியில்லை’’என்ற பிரகடனத்தோடு படத்தை முடித்து வைக்கிறாள் மீனாட்சி.

மீனாட்சியின் எதிர்த்தரப்பு வழக்கறிஞராக பாலா இருந்தபோதும் வழக்கை நீதிமன்றத்துக்கு வெளியிலேயே சமரசமாகத் தீர்த்துக்கொண்டு விடுமாறு சரத்திடம் சொல்வதற்கு அவள் ஒரு பெண்ணாக இருப்பதே காரணமாக இருக்கிறது. நீதிமன்றப்படியை மிதித்து விட்டாலே பெண்ணின் நடத்தை குறித்த சேற்றை வாரி இறைக்க அங்கிருக்கும் எல்லோரும் எப்போதும் ஆயத்தமாக இருப்பார்கள் என்னும் யதார்த்தத்தை அவள் வாயிலாகவே அறிந்து திடுக்கிடுகிறான் சரத். அப்பாவியான தன் தாய்க்கு அவ்வாறான இழிசொற்களும் அபவாதங்களும் தேவையா என்ற எண்ணமே அவளது பின்புலத்தைத் தேடிச் செல்ல அவனுக்கு உந்து சக்தியாகின்றன.

யானைக்குத் தன் பலம் தெரியாததாலேயே மனிதன் அதை அடக்கி ஆள்கிறான், பெண்ணும் கூட அப்படித்தான் என்று சொல்லப்படும் உலகியல் வாக்கு தாணுப்பிள்ளையின் யானைப்பாசம் வழி படத்தில் காட்டப்படுகிறது.யானை தன் கட்டுக்குள் இருப்பதில் அவர் குதூகலித்துப் பாட்டுப்பாடிக் கொண்டாடிக் களிக்கிறார். தன் தாயின் காலத்தில் ஆணின் வசத்துக்குள் அகப்படாமல் இருந்த பெண்ணைத் தன் கட்டுக்குள் கொணர்ந்து விட்ட ஆனந்தமும் கூட அதனுடன் சேர்ந்தே வெளிப்பாடு கொள்கிறது.

திரைப்படம் காட்டும் முதன்மையான மூன்று பெண்களும் வேறான மூன்று தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல; வெவ்வேறு காலகட்டங்களின் வேறுபட்ட வாழ்க்கை முறைகளுக்குப் பழகிப்போன பெண்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாதிரிகள் அவர்கள். 

ஆணையிடும் இடத்தில்-அதிகாரம் செலுத்தும் இடத்தில் பெண் இருக்க வேண்டும்,அதை ஆண் கேட்க வேண்டும் என்ற வாழ்முறைக்குப் பழகிப்போயிருப்பவள் காளிப்பிள்ளை.
கதகளிக்காரர்களும்,மல்யுத்தக்காரர்களும் அவள் வீட்டு முற்றத்துக்கு வந்து ஆட்டம் நிகழ்த்தி விட்டு அவள் தரும் சன்மானத்தைப் பெற்றுக்கொண்டு போகிறவர்கள். காலி செய்யாமல் காலம் நீட்டித்துக் கொண்டு போகும் தன் நிலத்துக் குத்தகைக்காரனைத் தாக்கி விட்டுக்  காவல்நிலையத்தில் இன்ஸ்பெக்டரிடம் அவள் பேசும் தோரணை...,அங்கே அவள் அமர்ந்திருக்கும் அந்த கம்பீரம்..இங்கே இருந்த இந்திரா காந்தி படம் எங்கேடா....அவ இந்த நாட்டுக்கே ராணிடா..என்று சொல்லும் வார்த்தை - நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையுடனேயே பெண் நடக்கவேண்டும் என்று சாகும்கணம் வரை நம்பும் உள்ளம் இவை காளிப்பிள்ளையின் தனித்துவங்கள்.

மீனாட்சியம்மாவின் பாத்திரப்படைப்பு காளிப்பிள்ளையிடமிருந்து முற்றிலும் வேறானது. தாய்வழிச் சமூக அமைப்பின் சரிவில், ஆண் மேலாண்மை பெற்று விட்ட சூழலில் தன் இருப்பையும் குரலையும் தொலைத்து விட்டு  வீட்டு அடிமையாகி-எதற்கும் எதிர்வினையாற்றாமல் அடங்கியே பழகிப்போன பெண் குலத்தின் பிரதிநிதி அவள்.


பாலாகல்வி வழியாகச் சுதந்திரம் பெற்ற இன்றைய புது யுகத்தின் பெண். ஆணின் ஆதிக்கத்துக்கு அவள் கட்டுப்படுவதுமில்லை; அவனைத் தன் ஆதிக்கத்துக்குள் கொண்டு வர எண்ணுவதுமில்லை. அவனைத் தன் சம தோழனாக-கூட்டாளியாகக் கருதியபடி தன் நினைப்புக்கள்,நிலைப்பாடுகள்,சமூகத்தின் மீதான விமரிசனங்கள் என சகலத்தையும் அவளால் எந்த மனத்தடையுமின்றிப் பகிர்ந்து கொள்ளமுடிகிறது. பாலா-சரத்தின் தோழமை வழியே ஆண் -பெண்ணுக்கு இடையேயான ஆரோக்கியமான இத்தகைய உறவு மேம்பட வேண்டுமென்பதையே படம் முன்வைக்கிறது.

பாலாவை மணக்கப்போவதாகத் தாணுப்பிள்ளையிடம் சரத் தெரிவித்ததும் அவள் தன்மதிப்புள்ள ஒரு பெண்என்கிறார் அவர். தன்மதிப்புள்ள தாயைக்கண்டு அஞ்சி தன்மதிப்புள்ள ஒரு மனைவியை ஏற்கத் தயங்கிய அவரிடமிருந்து வரும் இந்தச் சான்றிதழ் மெய்யாகவே மிகவும் முக்கியமானது. உண்மையிலேயே ஓர் ஆணின் மதிப்புக்கு உரியவளாக இருப்பவள்  சுயகௌரவம் கொண்டிருக்கும் ஒரு பெண்ணே; ஆனாலும் தன் தாயின் ஆளுமையில் அது வரம்புகளை உடைத்துக்கொண்டு,கட்டற்றுப் பீறிடுவது கண்டும், தான் நேசித்த தந்தையிடமிருந்தே அது தன்னை அந்நியப்படுத்தி விடுவதைப்பார்த்தும் அச்சம் கொண்டே  மனைவி மீது தன் அடக்கு முறைகளை ஏவிவிடத் தொடங்குகிறார் தாணுப்பிள்ளை.’பெண் மீது உள்ள அச்சத்தினாலேயே ஆண் அவளை ஆக்கிரமிக்கிறான்என்று படத்தின் இறுதிக்கட்டத்தில் தன் வருங்கால மருமகளிடம் ஒப்புதல் வாக்குமூலமும் அளிக்கிறார் அவர். வெளிப்பார்வைக்கு முரடனாகவும் முன் கோபியாகவும் தோற்றமளித்தாலும் தாணுப்பிள்ளை ஒரு கோழை என்பதை நிறுவும் காட்சிகளே படமெங்கும் நிறைந்திருக்கின்றன.

 ஜெயமோகனின் தெளிவான திரைக்கதையைப் பழுதில்லாமல் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் செம்மையான பணியைத் தன் இயக்கத்தின் வழி செய்திருக்கிறார் மதுபால்.

பெரும்பாலும் கதையை நகர்த்திச் செல்லும் பார்வையாளர்களாகவே வருவதால் அதற்கேற்ற அளவான - மிகையற்ற நடிப்பை சரத்தாக வரும் ஆசிப் அலி,பாலாவாக வரும் பாவனா ஆகிய இருவருமே தந்திருக்கிறார்கள்.ஏதோ ஒரு ஐயத்தையும் குழப்பத்தையுமே சுமந்து திரியும் தொடக்க கட்ட சரத், குதூகலமான,கலகலப்பான வாலிபனாவது இலகுவான மனநிலை கொண்ட பாலாவுடனான பழக்கம் நேர்ந்த பின்பே. இந்த மாற்றத்தை ஆசிப் நன்றாக உள்வாங்கிப் பதிவு செய்திருக்கிறார்.

காளிப்பிள்ளையாக வரும் ஸ்வேதாமேனன், பெண் ஆதிக்கத்தின் அட்டகாசமானதொரு முகத்தைத் தன் நடிப்புப் பாணியின் மூலம்  தொட்டுக் காட்ட முற்பட்டிருந்தபோதும் ஒரு சில இடங்களில் மிகை என்ற கோட்டை அந்த நடிப்பு தொட்டு விடுகிறது...மாறாக மிகச்சிறந்த எதிர்வினையாற்ற வேண்டிய சில கட்டங்களிலும் கூட மல்லிகா மிகக்குறைவான நடிப்பையே தந்திருப்பது ஏமாற்றமளித்தாலும் மகனோடு உரையாடும் பல காட்சிகளில் தன் உச்சபட்சப் பங்களிப்பைத் தர அவர்  முயன்றிருக்கிறார்.
காளிப்பிள்ளையாக ஸ்வேதாமேனன்

இந்தத் திரைப்படத்தைப் பொறுத்தவரை ,தாணுப்பிள்ளை என்னும் மனிதனின் ஆளுமையை.., மன அவசத்தை..,அவன் படும் அக,புற உளைச்சல்களைத் தன் தன் நடிப்பால் வாழ்ந்தே காட்டியிருக்கும் லால்தான் நடிப்பில் முதலிடம் பெறுகிறார் ; அதிகம் பழகியிராத தந்தை மீது கொண்ட அபரிமிதமான ஸ்நேகம்பெற்ற பிள்ளை மீது  ஒரு தகப்பனுக்கே உரிய பாசத்தோடு கூடிய தவிப்பு, ஆதிக்க மனம் கொண்ட தாய் மீதான பாசம் கலந்த வெறுப்பு, மனைவி மீது செலுத்தும்  அன்புடன் கூடிய ஆதிக்கம் என்ற பலவகைப்பரிமாணங்களுக்கும் இடமளிக்கும் அந்தப்பாத்திரத்தோடு ஒன்றி உட்கலந்து தாணுப்பிள்ளை என்னும் எதிர்நிலைப்பாத்திரத்தையும் கூட நேசிக்க வைத்து விடும் மாயத்தை நிகழ்த்தி விடுகிறது லாலின்  நடிப்பு.

வசனங்களின் அடித்தளத்திலேயே கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்தப்படத்தில் குறிப்பிட்ட வசனம் என்று பிரித்துப்பார்க்க முடியாதபடி எல்லா உரையாடல்களுமே பாத்திரப்பண்புகளைப் படம் பிடித்துக்காட்டி மனித மனச் சிடுக்குகளை அவிழ்த்துக்காட்டுகின்றன என்றபோதும் ஒரு சிலவற்றையாவது குறிப்பிடாமல் கட்டுரையை நிறைவு செய்வது கடினம்.

தன் பெற்றோரின் முன்கதையை பாலாவிடம் சரத் சொல்லிச் செல்லும் ஒரு கட்டத்தில்,’’இந்த மனிதர்களால்  ஏன் சந்தோஷமாகவே வாழ முடிவதில்லை?’’என்று கேட்கிறாள் பாலா.
‘’சந்தோஷமா..? அது யாருக்கு வேண்டும்....ஒருவரை ஒருவர் ஜெயிப்பது எப்படி, முந்துவது எப்படி என்பதல்லவா மனித  வாழ்க்கையின் குறிக்கோள்’’என்கிறான் சரத். கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையின் அருகே இருந்தபடி அவர்கள் பேசும் அந்தக்கட்டத்தில் ’’மனிதனின் மிக முதன்மையான பிரச்சினை பயம் ஒன்றுதான்..அடுத்தவரை  வெல்ல அவன் துடிப்பதும் அந்த பயத்தினாலேதான்’’என்ற விவேகானந்தரின் வாக்கும் கூடவே வருகிறது. படத்தின் இறுதிக்கட்டத்தில் தாணுப்பிள்ளை அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலமும் இந்தக்கருத்தையே உறுதிப்படுத்துகிறது.

‘’நம் பார்வைகளும்,கோணங்களும் எல்லை கட்டியவைகளாக மட்டுமே இருப்பதால்...பல நேரங்களில் நம் அருகிலேயே இருப்பவர்களையே கூடச் சரியாகப் புரிந்து கொள்ள நாம் தவறி விடுகிறோம்....’’என்று தன் தந்தை பற்றிய சரத்தின் புரிதல் குறித்துப்  பாலா சொல்லும் கட்டம்,
‘’வெறுப்பினால் அல்ல மகனே...சிநேகத்தினாலேயே மனிதர்கள் கொடூரமானவர்களாக...குரூரமானவர்களாக ஆகிறார்கள்...
வெறுப்பு வேண்டாம் என்று புறக்கணிக்க முற்பட்டால் சிநேகமும் வேண்டாம் என்று துறந்தாக வேண்டும்..அது அத்தனை சுலபமானதல்ல’’
என்று மீனாட்சி சரத்திடம் பேசும் இடம்,
என்று பல இடங்களில் வசனகர்த்தாவாக மட்டுமன்றித் தேர்ந்த உளவியல் வல்லுநராகவும் வெளிப்படுகிறார் ஜெயமோகன்.

குடும்ப உறவுகளுக்கு இன்னும் கூட மேலதிக முக்கியத்துவத்தை அளித்து வரும் இந்தியப் பண்பாட்டுத் தளத்தில் உறவுகளின் அடியாழத்தில் மண்டிக்கிடக்கும் கலவையான உணர்வுகளை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கும் ஒழிமுறி தவிர்க்க முடியாத ஒரு வரலாற்று ஆவணமாகிறது.

இணைப்புக்கள்;

ஒழிமுறி’ - உறவெனும் புதிர்-2

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....