துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
சிறுகதைவாசிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுகதைவாசிப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1.4.14

பொதிகை தொலைக்காட்சியில் என் உரை....

தமிழ்ச்சிறுகதைகள் சிலவற்றை அறிமுகம் செய்து நான் ஆற்றியுள்ள உரை இன்று தொடங்கி ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை மதியமும்-3 15 மணி அளவில்-பொதிகை தொலைக்காட்சி இலக்கிய நயம் பகுதியில் ஒளிபரப்பாகிறது. சங்க இலக்கியம்,காப்பிய இலக்கியம் ஆகிய பகுதிகளில் வேறு சிலர் வழங்கும் உரைகளைத் தொடர்ந்து தற்கால இலக்கியம் பகுதியில் என் உரை ஒளிபரப்பாகும்.
கு அழகிரிசாமியின் ‘ராஜா வந்திருக்கிறா’ரில் தொடங்கி ஜெயகாந்தன்,நாஞ்சில்நாடன்,ஆர் சூடாமணி,ஜெயமோகன்[சோற்றுக்கணக்கு],வாஸந்தி,சுஜாதா,காவேரி லட்சுமி கண்ணன் ஆகியோரின் எட்டுசிறுகதைகள் குறித்து சிறிய அறிமுகம் தந்திருக்கிறேன்.இலக்கிய ஆர்வலர்களும் வாசகர்களும் நிகழ்ச்சியைக் கண்டும் கேட்டும் கருத்துப்பதிவு செய்தால் அது என்னை மேலும் மேம்படுத்த உதவும்.
நவ,2013இலேயே மதுரை பொதிகையில் உரைகள் பதிவு செய்யப்பட்டு விட்டன;ஒளிபரப்பு தற்போது; இன்று ஏப்.1 முதல்...ஒவ்வொரு செவ்வாய் மதியமும் தொடர்ந்து 8 வாரங்கள்...
தமிழ்ச்சிறுகதையை அடுத்த தளத்துக்கு உயர்த்திச்சென்று படைப்பிலக்கியத்தில் சமூக உணர்வோடு அழகியலையும் இணைக்க முயன்ற இயக்கம் மணிக்கொடி இயக்கம்.அந்த இயக்கத்தின் வழி வந்த படைப்பாளிகளின் வரிசையில் தவிர்க்க இயலாத ஓர் எழுத்தாளர் கு அழகிரிசாமி.
‘ராஜா வந்திருக்கிறார்’சிறுகதையை அறிமுகம் செய்து நான் வழங்கியிருக்கும் உரை இன்று மதியம் 3 15 மணி அளவில் பொதிகை தொலைக்காட்சியில் வேறு சில இலக்கிய உரைகளைத் தொடர்ந்து - இக்கால இலக்கிய உரைத்தொடரில் ஒளிபரப்பாகிறது.கேட்டுக்கருத்துப்பதிவு செய்ய அழைக்கிறேன்....
ராஜா வந்திருக்கிறார் குறித்த என் வலைப்பதிவு
http://www.masusila.com/2012/08/2.html

15.2.13

தப்பவிடக்கூடாத தமிழ்ச்சிறுகதைகள்-6

சுஜாதாவின் நிபந்தனை

நவீன தமிழின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவர் சுஜாதா. தமிழ் உரைநடையில் ஒரு புதிய -வேகமான பாணி எழுத்து நடை உருப்பெறுவதற்கான வாயிலைத் திறந்து வைத்தவர். சிறுகதைகள்,சமூக/மற்றும் துப்பறியும் நாவல்கள்,வரலாற்று,விஞ்ஞானப்புனைவுகள் எனப் பல வகையான படைப்புக்களையும் உருவாக்கியிருக்கும்  சுஜாதா ,நாடகங்கள்,மற்றும் திரைக்கதை உருவாக்கலிலும் விற்பன்னர். தனக்கு வசப்பட்ட எழுத்துக் கலையைப் பிறருக்கு எளிதாக ஆக்கித் தருவதிலும் ஆர்வம் காட்டியவர் .கணையாழி போன்ற சிற்றிதழ்களிலும் தன் முத்திரையைப் பதித்திருந்தாலும்  எல்லா வகையான எழுத்துக்களையும் எழுதிப்பார்க்க வேண்டும் என்று எண்ணிய அளவுக்குத் தீவிர இலக்கியம் மட்டுமே படைக்க வேண்டும் என்பதில் சுஜாதா ஏனோ முனைப்புக் காட்டவில்லை; அவ்வாறான முனைப்பு மட்டும் அவருக்கு நேர்ந்திருந்தால்....வணிக இதழ்களாலும்,வணிகப்படங்களாலும் அவர் கபளீகரம் செய்யப்படாமல் இருந்திருந்தால் சாகித்திய விருது போன்ற பல இலக்கிய விருதுகளைப்பெறுவது அவருக்குக் கடினமாக இருந்திருக்காது. இருந்தாலும் இன்றும் கூட சுஜாதாவின் எழுத்துக்கள் புதுமையாகவும்,இளமையாகவும் இருப்பதும்- தேர்ந்த பல இலக்கிய விமரிசகர்களும் கூட சுஜாதாவின் பல சிறுகதைகளைத் தரமானவையாக இனம் காட்டுவதும் [நகரம்,நிபந்தனை,ஒரு லட்சம் புத்தகங்கள்] தமிழ் எழுத்தில் சுஜாதாவுக்கென்று ஓரிடம் என்றும் நிலையாக இருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டிருப்பவை.


சுஜாதாவின் நினைவு நாள் 27 ஃபெப்ரவரி
இனி நிபந்தனை பற்றி...

திருவனந்தபுரத்துக்குச் சென்றிருக்கும் சோமசுந்தரம்-ஈஸ்வரி தம்பதியர் கோயிலருகே பிச்சையெடுக்கும் நடுத்தர வயது அந்தணப்பெண் ஒருத்தியைப் பார்க்கிறார்கள்.அவளது நிலையைக் கண்டு இரக்கம் கொள்ளும் ஈஸ்வரி அவளைத் தங்களுடன் அழைத்துச் சென்று வீட்டு வேலைக்கு அமர்த்திக்கொள்ள விரும்புகிறாள்.தடுத்துப்பேசும் கணவனிடம் நியாயம் பேசித் தர்க்கம் செய்கிறாள்.பிற்பகலில் தன் மகளையும் அழைத்துவந்து அவர்களுடன் சேர்ந்து கொள்வதாகச்சொல்லி விட்டு விடை பெற்றுச் செல்கிறாள் அந்தப்பெண்.

இடையே அவர்களைத் தவறான வழியில் செலுத்தியபடி ஆதாயம் தேடிக் கொண்டிருக்கும் தாடி வைத்த கடைக்காரன் ஒருவன் அவர்களிடம் வந்து அந்தப்பெண்ணின் நடத்தை மோசமானதென்று சொல்ல,அதைக்கேட்ட ஈஸ்வரியின் உள்ளம் மாறி விடுகிறது.

’’என்னை உங்காத்திலே சேத்துக்க வேண்டாம்.பட்டணத்திலேஅழைச்சுண்டு போய் ஏதாவது ஒரு ஆச்ரமத்திலே ரெண்டு பேரையும் சேத்துடுங்கோ புண்ணியம் உண்டு’’என்று அந்தப்பெண் அவர்களிடம் கெஞ்சிக்கதறி மன்றாடியபோதும் அவள் மனம் நெகிழவில்லை.ஆனால் முதலில் ஈஸ்வரியின் கருணக்கு மறுப்புத் தெரிவித்த அவள் கணவன் சோமசுந்தரம் இப்போது சற்று நிதானித்து உண்மை எது பொய் எது என்று அறிய நாட்டம் கொள்கிறான்.ஈஸ்வரியின் பலமான எதிர்ப்பில் அது அடிபட்டுப்போக அவர்களின் கார் சென்னையை நோக்கிப் பறக்கிறது.
கார் கண்ணாடி வழி ஈஸ்வரி பார்க்க
‘’புடவைத் தலைப்பில் அழுது கொண்டு அலமேலு,சங்கிலியைக்கடித்துக் கொண்டு காலால் தரையில் கோடிட்டுக்கொண்டு கோமதி,சற்று தூரத்தில் அவர்களை வா என்று கூப்பிடும் அந்த சைக்கிள் தாடி’’என்று முடியும் கதை கருணைக்கும் சில நிபந்தனைகள் உண்டு என்பதை முன்வைக்கிறது.

கருணை காட்டவும் இரக்கம் கொள்ளவும் தயாராக இருந்தாலும் அவற்றுக்கும் கூட சில வரையறுக்கப்பட்ட எல்லைகளை நிபந்தனைகளை வைத்துக் கொள்ளும்  மனிதப்பொது இயல்பைக் கலையழகு குன்றாமல் எடுத்துக்காட்டியிருக்கும் சுஜாதாவின் கதை இது.

‘’எவ்வளவோ தடவை சாமி கும்பிடறோம்,என்ன பிரயோசனம்,நடைமுறையிலே ஏதாவது நல்ல காரியம் செய்ய வேண்டாம்?....வேற யாராவது பாத்துப்பாங்கன்னு எல்லாருமே விட்டுட்டா யாரு அந்த வேற யாராவது....கோயிலுக்குக்கூடப்போக வேண்டாம்.இந்த மாதிரி ஒரு நல்ல காரியம் செஞ்சா அதுவே பெரிய தபஸ்’’என்று முதலில் ஒரு குட்டிச் சொற்பொழிவே ஆற்றுகிறாள் ஈஸ்வரி.அவள் கணவன் அப்போது தயங்குகிறான்.முன் பின் தெரியாத பெண்களை உடனழைத்துச்செல்வதில் அவனுக்கு விருப்பமில்லை.ஆனால் தாடிக்காரன் வந்து அவர்கள் மீது புகார் சொன்னதுமே ‘ஈஸ்வரியின் முகத்தில் தீர்மானமின்மை தெரி’ய ஆரம்பிக்கிறது.

அந்தப்பெண்களைப்பற்றிய தகவல் தாடிக்காரன் வழி வெளியாகும் முன்னரும் பின்னரும் தம்பதியருக்குள் வெளியாகும் முரணைக்காட்சிப்படுத்தும் வகையில் கதையை சுவாரசியப்படுத்துகிறார் சுஜாதா.

முதலில் தன் மனைவி அவர்களை உடனழைத்துச்செல்ல எடுத்த முடிவை சோமசுந்தரம் எதிர்த்தாலும் தாடிக்காரன் சொன்னதைக்கேட்டபின் கொஞ்சம் யோசிக்கிறான்.அவன் சொல்வது உண்மைதானா என்று சோதித்துப்பார்க்க விரும்புகிறான்.
‘’இரு ஈஸ்வரி...இதைச் சரியா விசாரிச்சுறலாம்.யார் பொய் சொல்றான்னு பாத்துடலாம்’’
என்கிறான்.
ஆனால் கணவனின் அந்தப்பார்வைக்கு ஈஸ்வரியின் மனம் இப்போது சபல முலாம் பூசிப்பார்க்கத் தொடங்குகிறது.தன் கருணை, இரக்கத்தின் அடிப்படையில் பிறந்ததென்றும் அவனது கருணைக்கு வேறு உள்நோக்கம் இருக்கலாமென்றும் தனக்குத்தானே கற்பித்துக் கொள்கிறாள்.அதனாலேயே அவர்களை உடனடியாகத் தவிர்ப்பதில் முனைப்புக்காட்டுகிறாள்.

இதுநாள்வரை தன் விருப்பத்தின்படி ஆட்டி வைத்துக் கொண்டிருந்த ‘பட்சிகள்’கையை விட்டுப்பறந்து விடுமே என்பதற்காகத்தான் தாடிக்காரனும் அவர்களைத் தேடி வருகிறானே தவிர அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கம் அவனிடம் இல்லை.கணவன்-மனைவி இருவருமே கதை முடிவில் அதை உணர்ந்து விட்டாலும் துணிச்சலாக ஒரு முடிவெடுத்து அவர்களுக்கு அவனிடமிருந்து மீட்சியளிக்க விரும்பாமல் சராசரித்தனமாகப்பிரச்சினையிலிருந்து நழுவிப்போகிறார்கள்.அவர்களின் கார் வேகமெடுத்துப் பறப்பது யதார்த்தத்திலிருந்து விரைவாக நழுவித் தப்பித்துக்கொள்ள விரும்பும் மனித இயல்பையே வெளிக்காட்டுகிறது.

தங்களுக்குப் பாதிப்பு ஏற்படாதவரை பிறர் மீது கருணையை வர்ஷிப்பவர்களைப் போல பாவனை செய்து கொள்ள ஆசைப்படும் மனித மன விகாரங்களை இந்தக்கதையில் எடுத்துக்காட்டியிருக்கும் சுஜாதா
‘’பத்மனாப சுவாமி கோவில் முன்னால் ஒரு சம்பவம் நடந்தது.அதுதான் கொஞ்சம் கற்பனை சேர்ந்த ‘நிபந்தனை’’’என்று இந்தக்கதையின் பின்னணி பற்றியும் எழுதியிருக்கிறார்.

சிறுகதையை இணையத்தில் படிப்பதற்கான இணைப்பு
நிபந்தனை









22.1.13

தப்பவிடக்கூடாத தமிழ்ச்சிறுகதைகள்-5


பிரபஞ்சனின் பிரும்மம்
‘'தன் அழிவிலிருந்தே ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் முருங்கை எனும் பிரும்மம் உணர்த்தும் பாடம் இது.’’


தமிழின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களில் ஒருவரான பிரபஞ்சன். தமிழ் வரலாற்று நாவல்களின் வழக்கமான பாணியைத் தன் வானம் வசப்படும்’,’மானுடம் வெல்லும்ஆகிய வேறுபட்ட படைப்புக்களால் மாற்றியமைத்தவர்.சாகித்திய அகாதமி விருது, இலக்கியச்சிந்தனை போன அமைப்புக்களிலிருந்து விருதை வென்றிருக்கும் பிரபஞ்சன், முறையான தமிழ்க்கல்வி பயின்றிருப்பதோடு சமஸ்கிருதமும் அறிந்தவர். முழுநேர எழுத்துப்பணியையே தன்  வாழ்வாக அமைத்துக் கொண்டிருக்கும் பிரபஞ்சன்,அற்புதமான பல சிறுகதைளையும் எழுதியிருக்கிறார் அவற்றில் ஒன்றான பிரும்மம் பற்றி

புது வீட்டுக்குக் குடி வரும் ஒரு குடும்பத்து இளைஞனின் மன ஓட்டமாக விரிகிறது பிரும்மம். வீட்டின் முன்னாலுள்ள வெற்றிடத்தை எவ்வாறு பயன் கொள்ளலாம் என்பதில் வீட்டு நபர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு யோசனை சொல்கிறார்கள். மாடு வளர்க்கலாம் என்கிறாள் பாட்டி; அம்மா காய்கறித் தோட்டத்தையும்,சகோதரி பூந்தோட்டத்தையும் பரிந்துரைக்க,அப்பாவின் ஆசைப்படி முருங்கைக்கன்று கொண்டுவந்து நடப்பட,அது துளிர்த்துச் செழித்து வீட்டாரின் விருப்பத்துக்குரியதாகிறது.
சமஸ்கிருதம் படித்திருக்கும் இளைஞன் அதை பிரும்ம விருட்சமாகப் பார்க்கிறான். கீரை,காய் என முருங்கையின் அனைத்தும் சிருஷ்டிக்கு உரமாவதால் படைப்புத் தொழில் செய்யும் பிரம்மனுக்கு நிகரான விருட்சம் அது என்கிறார் அவனது சமஸ்கிருத வாத்தியார்.

‘’அதன் வளர்ச்சியின் ஒவ்வொரு கணுவும் எங்களுக்குத் தெரிந்தே நிகழ்ந்தது;உளுத்தம்பொட்டின் அளவான தளிர்,மெல்லிய நரம்பு போல அது விடும் கிளை,பச்சைபட்டாணி போல அதன் இலை,ஊடே ஊடே தோன்றும் அதன் புதிய புதிய தளிர்கள் எல்லாம் எங்கள் கண் முன்பாகவே நிகழ்ந்தன’’என்று படிப்படியான அதன் வளர்ச்சியை விவரித்துக்கொண்டு போகிறான் கதை சொல்லியான அந்த இளைஞன்.
முளை விட்ட பருவம் தொட்டு அந்த முருங்கையை தரிசித்து வருவது போலக் குழவிப்பரும் தொட்டுத் தான் பார்த்து வளர்ந்து வருபவளான  தன் சகோதரியின் வளர்ச்சியையும், அந்த முருங்கையின் வளர்ச்சியையும் சேர்த்து ஒப்பிட்டபடி, வியந்து போகிறது அவன் மனம்.

வீட்டிலுள்ள ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வகையில் அந்த முருங்கை ஈர்க்கிறது. பிறரோடு அதிகம் பழகாமல் இருந்த அம்மாவுக்கு அதன்  கீரையையும்,காயையும் வேண்டி அவளை நாடி வரும் தோழியர் கூட்டம் அதிகரிக்கிறது. தேனாக இனிக்கும் முருங்கைக் கீரையையும்,மதுரமாய்ச்சுவைக்கும் காயையும் பாராட்டி விட்டுச் செல்ல அவர்கள் தவறுவதே இல்லை. அப்பாவும் மகனும் மர நிழலில் சைக்கிளை நிறுத்தி வைக்கிறார்கள். மகன் எழுதுவதும்,படிப்பதும்,ராம சப்தம் பயில்வதும் மரத்தடியிலேதான் நிகழ்கிறது. அவனது எழுத்தின் சிருஷ்டி நிகழ்வதும் கூட பிரம்ம விருட்சமான அதன் நிழலிலேதான். கூடிழந்து திரியும் பறவைகளுக்கு அது புகலிடம் ஆகிறது.

ஒரு நாள் சட்டென்று வீசிய மழைக்காற்றின் சூறாவளியில் மரம் சரிந்து அந்த இடம் சூனியமாகிறது. முருங்கை மரம் அவ்வாறு அழிந்து போனது, குடும்பத்தாரைக் கடுமையாகத் தாக்குகிறது. சில நாட்களுக்குப் பிறகு...
கதை சொல்லி, காப்பி தம்ளரோடு சென்று தன் வழக்கப்படி முருங்கை இருந்த இடத்தருகே நிற்க அவனை ஆச்சரியப்படுத்தும் வகையில் துண்டாகி நின்ற மரத்திலிருந்து ஒரு இடத்தில் சின்னதாய்க் கிளைத்திருக்கிறது.
‘’உயிர்தான்!
என ஒற்றைச்சொல்லோடு கதை முடிகிறது. 

உயிர் என்னும் ஆத்மாவுக்கு என்றும் அழிவில்லை என்னும் மிகப் பெரிய தத்துவத்தை- மானுட வாழ்வில் எதுவானாலும் அதற்கு ஒரு புத்துயிர்ப்பு உண்டு என்னும் நம்பிக்கையூட்டும் மாபெரும் உண்மை ஒன்றை ஜீவவிருட்சமான முருங்கையை முன்வைத்துச் சொல்லும் இந்தக்கதையை,
‘’கடந்த பல வருஷங்களில் இது போன்ற கதை மலர்ந்ததே இல்லை’’என்று 1983இல் மதிப்பிட்டிருக்கிறார் எழுத்தாளர் கரிச்சான் குஞ்சு [தி ஜாவின் நெருங்கிய நண்பர் இவர்].
‘’பாஸிட்டிவான எதோடும் பொருத்திப் பார்த்து சந்தோஷப்பட்டுக் கொள்ள வைக்கிற கம்பீரமான முடிவு
என்கிறார் திருப்பூர் கிருஷ்ணன்

மானுட வாழ்வில் சோர்ந்து விடச்செய்யும் தருணங்கள் வந்தாலும் புதிய நம்பிக்கை கொள்ள வைக்கும் சாத்தியங்களும் கூடவே உண்டு
’’என்னைப்புதிய உயிர் ஆக்கி..’’என்று பாரதி சொல்வது போலத் தன் சாம்பலிலிருந்து தன்னை உயிர்ப்பித்துக்கொள்ளும் ஃபீனிக்ஸ் பறவையைப்  போலத் தன் அழிவிலிருந்தே ஒரு புதிய தொடக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் முருங்கை எனும் பிரும்மம் உணர்த்தும் பாடம் இது.
இணைப்புக்கள்;

பின் குறிப்பாக...ஒரு கூடுதல் தகவல்...
ஜேடி-ஜெர்ரி  அறக்கட்டளை சார்பில், இலக்கியப்படைப்பாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சாரல் விருதை  இந்த ஆண்டு  பெறவிருக்கும் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு மனமார்ந்த  வாழ்த்துக்கள்.
(விழா ஜனவரி 26 சனிக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது).


[இது வரை இவ் விருதைப் பெற்றிருப்பவர்கள்: 
2009- திலீப்குமார் 
2010- ஞானக்கூத்தன் 
2011-அசோகமித்திரன் 
2012-வண்ணநிலவன், வண்ணதாசன்]


1.11.12

தப்பவிடக்கூடாத தமிழ்ச்சிறுகதைகள்-4

புதுமைப்பித்தனின் ‘இது மிஷின் யுகம்’
தமிழ்ச்சிறுகதையின் பிதாமகர் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தனுக்கு முன்பே தமிழ்ச்சிறுகதை தளர்நடை போடத் தொடங்கியிருந்தாலும் அதற்குத் தீர்மானமான  ஒரு உருவத்தை,கட்டுமானத்தை,வடிவ நேர்த்தியைத் தன் பன்முகப்படைப்புக்கள் வழி தந்திருக்கும் புதுமைப்பித்தன், தமிழ்ச்சிறுகதையின் உள்ளடக்கத்திலும் உருவத்திலும் பலவகைப்பரிசோதனைகளை செய்து பார்த்திருப்பவர் .

‘துன்பக்கேணி’போன்ற மிக நீண்ட கதைகளும் புதுமைப்பித்தனிடம் உண்டு;’பொன்னகரம்’,இது மிஷின் யுகம்’போன்ற மிகச் சிறிய கதைகளும் உண்டு.

புதுமைப்பித்தனின் பெரும்பாலான கதைகள் சமூகச்சித்தரிப்புக்கு முன்னுரிமை அளித்தபோதும் தனிமனித உணர்வுகளைக் காட்சிப்படுத்தும் நனவோடைக் கதைகள், ’அகல்யா’,’சாப விமோசனம்’ முதலிய மறுவாசிப்புக்கதைகள், இன்றைய மாய யதார்த்தப் போக்குக்கு வாயில் திறந்து விட்ட ’கபாடபுரம்’,’அன்று இரவு’போன்ற படைப்புக்கள் ஆகிய பலவும் இவரிடம் காணக்கிடைப்பது வியப்பூட்டுகிறது.அதனாலேதான் தமிழ்ச்சிறுகதை முன்னோடி என்னும் தகுதிக்கு சொல்லுக்குச் சொல் உரிமை உடையவராகிறார் இவர்.

இன்று புதிய போக்கில் எந்த ஒரு சிறுகதை எழுதப்பட்டாலும் அதற்கான முன்மாதிரி[precedence] ஒன்றைப் புதுமைப்பித்தனிடமிருந்து காட்டி விட முடியும் என்பது ஒன்றே எத்தனை ’வகைமாதிரி’களில்[varieties] அவரது படைப்புத் திறன் ஊற்றாய்ப் பெருகிப்ப் பாய்ந்திருக்கிறது என்பதற்கான சான்று.

‘’உரை கெட்டிருந்து உணர்வற்றிருந்து
     சிறையுற்றிறிருந்த தமிழில்
   கரை தத்தி வந்த பெருவெள்ளமென்ற
      கதை கொண்டு வந்த புலவன்’’
என்று புதுமைப்பித்தனைப்பற்றிக் கவி பாடுகிறார் தமிழ் ஒளி.

இனி....புதுமைப்பித்தனின் ’இது மிஷின் யுகம்’கதை பற்றி ...

சமகாலத்தைப்போன்ற ஆடம்பரமான உணவகங்களும்,மெனு கார்டுகளும்,விதம் விதமான உடை தரித்த வெயிட்டர்களும் புழக்கத்துக்கு அதிகம் வந்திராத ‘40களின் காலம். நடுத்தரமான சராசரியான ஓர் உணவகம். அங்கே உணவருந்த வந்திருக்கும் ஒரு மனிதர்,உணவு பரிமாறும் சர்வர் கிருஷ்ணன் மீது தன் பார்வையை ஓட விடுகிறார். ஒவ்வொருவர் கேட்கும்போதும் இட்லி,வடை,பொங்கல்,பூரி என உணவு வகைகளின் பெயர்களை அலுக்காமல் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டும்,அவர்கள் கேட்கும் உணவு வகைகளைப்பரிமாறிக்கொண்டும்,உண்டு முடித்தவர்களுக்கு பில் போட்டுக் கொண்டும்,தண்ணீர் வேண்டுபவர்களுக்கு அதை எடுத்துக் கொடுத்தபடியும் பம்பரம் போலப் பல மேசைகளுக்கும் சுற்றிச் சுழன்றபடி இருக்கும் அவன் அவருக்கு ஒரு மனிதனாகவே தோன்றாமல்,ஓர் இயந்திரமாக மட்டுமே காட்சிதருகிறான்.

உணவு மேசையில் உட்கார்ந்திருப்போரின் ஏவலை நிறைவேற்றிக் கொண்டிருப்பதைத் தவிர அவன் முகத்தில் வேறு எந்த பாவமுமே இல்லாமலிருப்பதையும்,எந்த உணர்ச்சியையுமே அந்த முகம் வெளிப்படுத்தவில்லை என்பதையும் கவனிக்கும்போது அவர் வியப்படைகிறார். இந்தக் காலத்து ரோபோக்கள் போல- அந்தக்காலத்தில் ஒரு மிஷினாகவே மாறி அவன் இயக்கப்பட்டுக்கொண்டிருக்கிறானோ என்று அவருக்குத் தோன்றுகிறது.

கதையின் இறுதிக்கட்டம்...! சாப்பிட்டு முடித்து அங்கிருந்து அவர் விடைபெறப்போகும் தருணம்;அப்போது அவரது கைக்குட்டை கீழே விழுந்து விட,அங்கே வரும் அவன் சட்டென்று அதை எடுத்து அவரிடம் தருகிறான்...இன்னும் அவன் முழுமையான இயந்திரமாகிவிடவில்லை என்பதையும் வாழ்வின் அன்றாட நடப்பியல்களுக்குள் அவனும் அவ்வப்போது வந்து போகிறவன்தான்..என்பதையும் அதன் வழி
உறுதிப்படுத்திக் கொண்டு ’அவன் மனிதன்தான்’என்பதை அவர் முடிவு செய்து கொள்கிறார்.

மீண்டும் ஒரு குரல் ‘’ஒரு ஐஸ்கிரீம் ‘’என்று அதிகாரம் செய்ய...
அவன் ’’திரும்பவும் மிஷினாகி விட்டான்’’என்று கதை முடிகிறது.

மிகச்சிறிய ஒரு சம்பவம்தான்...! ஆனாலும் அதை வைத்து மனித இயல்புகளையே தராசில் வைத்து நிறுத்து மதிப்பிட முயலும் ஒரு படைப்பு இது; மனிதத்தின் மீதான கரிசனத்தையும், இன்றைய மிஷின் யுகம்...,மனிதனை முற்றிலும் ஓர் இயந்திரமாகவே ஆக்கிவிடக்கூடுமோ என்ற பதற்றத்தையும் வெளிப்படுத்தும் அற்புதமான ஆக்கம் இது.

'இது மிஷின் யுகம் 'சிறுகதையை இணையத்தில் படிக்க...

தொடர்புள்ள இணைப்புக்கள்;
தப்ப விடக்கூடாத தமிழ்ச்சிறுகதைகள்’-அறிமுகம்





10.9.12

தப்பவிடக்கூடாத தமிழ்ச்சிறுகதைகள்-3

                                               பாரதியின் ‘அர்ஜுன சந்தேகம்’



’தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’-
 பஞ்ச தந்திரக்கதைப்பாணியில் அமைந்த ‘நவதந்திரக்கதைகள்’, ’சில வேடிக்கைக் கதைகள்’ஆகிய குறுங்கதைகளை எழுதியிருக்கும் மகாகவி பாரதி ஒரு அருமையான கதை சொல்லியும் கூட. தனது முற்றுப்பெறாத  நாவலான ‘சந்திரிகையின் கதை’யில் பெண்ணினத்தின் மீதான ஆவேசக் கரிசனத்தையும்,முழுமை பெறாத தன்வரலாற்றுக்கதை[autobiography]யான ‘சின்னச் சங்கரன் கதை’யில் தன் அங்கதப்புலமையையும் காட்டியிருப்பவன். தாகூரின் வங்கமொழிக்கதைகள் சிலவற்றை பாரதி மொழியாக்கம் செய்ததும் உண்டு. தமிழ்ச்சிறுகதை அரும்பு விடத் தொடங்கிய காலகட்டத்தில் அதன் முன்னோடி முயற்சிகளில் அவனும் பங்கு பெற்றிருக்கிறான் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.

11/9/12 பாரதியின் நினைவு நாள் என்பதால் அதை ஒட்டி அவனது கதை ஒன்று...

2.8.12

தப்பவிடக்கூடாத தமிழ்ச்சிறுகதைகள்-அறிமுகம்

சிறுகதை என்பது மிக இளம் வயதிலிருந்தே என்னை வசீகரித்த ஓர் இலக்கிய வடிவம்.’குறுகத் தரித்த குறள்’போல வளவளப்பே இல்லாத சிக்கனமான சொற்களில் வேண்டாத வருணனைகளைத் தவிர்த்தபடி- தேவையானதை மட்டுமே நறுக்கெனச் சொல்லி வாழ்வின் ஒரு பக்கத்தைக் காட்டி அதன் மூலம் முழு வாழ்க்கைத் தரிசனத்தின் ஒரு துளியை உணர வைக்கும் அற்புத வடிவம் சிறுகதை.ஒரு நல்ல படைப்பைப் படித்ததும் ‘இதை எங்கோ கண்டிருக்கிறோமே’என்றோ...’இதை உணர்ந்திருக்கிறோமே’என்றோ கணநேரம் எண்ண வைத்து விடுவதே அந்தப் படைப்பின் வெற்றி.

சிறுகதை எழுதும் ஆசை பலர் மனதிலும் நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டுதான் இருக்கிறது.ஒரு சிலரே அந்தக்கனலை ஊதிப்பெருக்கிக் கொழுந்து விட்டெரியச் செய்பவர்கள்.அதற்குத் தேவை இசையில் மேற்கொள்ளும் சாதகம் போன்ற இடை விடாத முயற்சியும் பயிற்சியும் என்றாலும் கூட -அதே நேரத்தில் அவற்றோடு கூடவே இன்னொன்றும் தேவையாக இருக்கிறது...அதுவே தொடர்ந்த வாசிப்பு.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....