துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.7.10

’’மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்....’’லண்டன்,சிங்கப்பூர்,பாரீஸ் ஆகிய பெரு நகரங்களில் நகரத்தின் மையத்தில் ஆற்று சவாரி செய்து அந்தந்த ஊர்களைச் சுற்றிப் பார்த்த கணங்களிலெல்லாம் சென்னையின் கூவமும்
அப்படி இருந்தால் ...என்ற கனவு எழுவதுண்டு.

சென்னையும் கூவமும் அப்படித்தான் இருந்திருக்கின்றன என்பதைச் சுட்டிக் காட்டியிருக்கிறது ’மதராசபட்டினம்’.

எமியின் காதல், பரிதியின் வீரம் ஆகியவற்றை விடப் படத்தில் விஞ்சி நிற்பது அன்றைய சென்னையின் நிலக் காட்சிகளும்,கொச்சின் ஹனீபாவின் மிக நுட்பமான நகைச்சுவையும்தான்.
ஆள் புழக்கம் அதிகமில்லாத மெரீனாக் கடற்கரை....
வாகனப் போக்குவரத்துக்கள் அதிகமின்றித் துடைத்து விட்டது போலிருக்கும் மவுண்ட் ரோட்....
உல்லாசப் படகுப் பயணம் செய்ய ஏற்றதாய் நாற்றமில்லாத கூவம்
(எமி , மூதாட்டியாய்த் திரும்ப வருகையில் அதே நதிக் கரை அவளை மூக்கைப் பொத்திக் கொள்ள வைக்கிறது)
கை வண்டி மற்றும் கை ரிக்‌ஷாக்கள்,அந்தக் காலத்துக் கார்கள்
கவர்னர் மாளிகையாய்க் காட்டப்படும் ரிப்பன் கட்டிடம்....
ஸ்பென்ஸர்....செண்ட்ரல் ஸ்டேஷன்.....

இவற்றையெல்லாம் ........பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றிய என் தாத்தாவும்(’20களில்),
ராணி மேரி கல்லூரியில் பயின்ற என் அம்மாவும்(’30களில்)
நிஜமாய்க் கண்டிருக்கக் கூடும்...
நான் ....நிழலாய்த் திரைப்பட வழி மட்டுமே....!
ஆனாலும் ஒரு காலகட்டத்தில் நிஜமாக இருந்ததை இன்றைய சூழலின் நெருக்கடியான சென்னையில் நிழலாக்கிக் காட்ட எத்தனை உழைப்பு உட்செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது வியக்க வைக்கிறது;படக் குழுவைப் பாராட்ட வைக்கிறது.

மதராச பட்டினத்தின் மற்றுமொரு மைய ஈர்ப்பு , காலம் சென்ற திரு ஹனீபா அவர்கள்.
எமி தன்னைப் புகைப்படம் எடுக்க முயலும்போதெல்லாம் முகத்தில் தெரியும் குழந்தைத்தனமான ஆர்வம்,
பிரிட்டிஷ் காலத்து துபாஷிகளை(மொழிபெயர்ப்பாளர்கள்) அப்பட்டமாகப் பிரதி எடுத்தது போன்ற மிகையற்ற சித்தரிப்பு,
ஆங்கிலேயனிடம் வாலைக் காட்டிக் குழையும் அடிமைப் புத்தி,
தேவையற்ற அங்க சேட்டை எதுவுமின்றிக் குரல் உயர்த்தாத நுண்ணிய நகைச்சுவையால் பார்வையாளர்களை வசப்படுத்தும் திறம்
என்று ஹனீபா படத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறார்.
படங்களில் அவரை இனிமேல் சந்திக்க முடியாத ஏக்கத்தையும் கிளர்த்துகிறார்.

தமிழ்ப் பட உலகில் இது வரவேற்கத்தக்க காலங்களின் மாற்றம்.
அதில் மதராசப்பட்டினத்துக்கும் குறிப்பிடத்தக்க ஓரிடம் உண்டு


மேலும் படங்கள் ;
http://www.kollywoodzone.com/img-madharasapattinam-01-83898.htm

http://www.kollywoodzone.com/img-madharasapattinam-02-83899.htm.

23.7.10

வலைச்சரத்தில்.....

வாரம் ஒரு ஆசிரியர் என்ற முறையில் பதிவுகளை இட்டுப்
 புதிய வலைத் தளங்களையும் ,வலை ஆர்வலர்களையும் அறிமுகம் செய்து வைக்கும் ’வலைச் சரம்’ இணைய வலைத் தொகுப்பு இதழில்,
இந்த வார ஆசிரியர் திரு ஜோதிகணேசன் அவர்கள் 
மொழி வளர்க்கும் தமிழ் மனங்கள்  
http://blogintamil.blogspot.com/2010/07/3.html
என்ற தலைப்பில் ஜூலை 21 தேதியில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார்.
மேற்குறித்த அக் கட்டுரையில் இந்த வலைப் பூவும் இடம் பெற்றிருக்கிறது.
வலைச் சரத்துக்கு நன்றி.

22.7.10

தீராக் காதலன்

முல்லை நிலக் காட்டுப் பகுதி.
போர் நிமித்தம் மாதக் கணக்கில் பாசறையில் தங்கியிருந்த தலைவன் தலைவியைக் காணும் தீராத தாகத்துடன் தேரில் விரைவாக ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறான்.
தேர்ப் பாகன் எவ்வளவு வேகமாகத் தேரைச் செலுத்தினாலும் காதல் பித்தேறியிருக்கும் தலைவனுக்கு அது போதுமானதாக இல்லை.

தேரையும்,
அது கடந்துபோக வேண்டிய தொலைவையும் தாண்டிக் கொண்டு,அவற்றின் வேகத்தையெல்லாம் மிஞ்சிக் கொண்டு அவன் உள்ளம் எப்போதோ தலைவியிடம்...அவள் புழங்கும் வீட்டு முற்றத்திடம் சென்று சேர்ந்து விட்டது.
ஆனாலும் கண்குளிர அவளை நேரில் காணும் ஆர்வத்தில் தேரை விரைவாக முடுக்குமாறு தேர்ப்பாகனைப் பணிக்கிறான் அவன்.

மோடி கிறுக்கி மோகம் தலைக்கேறிய அந்த மன நிலையிலும் கூடச் சமநிலை தடுமாறாமல்
சக ஜீவ ராசிகளைப்பற்றி ,
கானுயிர்களைப் பற்றி ,
அவற்றின் காதலைப் பற்றிக் கவலையும்,கரிசனமும் கொள்கிறது அந்தக்காதலனின் உள்ளம்.

தேரோட்டத்தின் வீரியமான வேகத்தில் அதில் கட்டப்பட்டுள்ள மணிகள் ஓசையுடன் சப்திக்கும் ;
புதர்களிலும்,பொந்துகளிலும்,மரக் கிளைகளிலும் கிடந்தபடி காட்டுயிர்கள் உறங்கிக் கொண்டிருக்கலாம் ;
இரை தேடுவதில் அவை மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கலாம்;
தாய்ப் பறவைகள் குஞ்சுகளுக்கு இரையூட்டிக் கொண்டிருக்கலாம்;
காட்டுப் பறவைகளும்,விலங்குகளும் தங்கள் ஜோடிகளுடன் இணைந்து காதல் விளையாட்டிலும் கூட ஈடுபட்டிருக்கலாம்.
தனது தேரின் உரத்த மணியோசை அவற்றின் ஏகாந்த இனிமைக்கு இடைஞ்சலாக இருப்பதை உயிர் நேயம் கொண்ட அந்த உன்னத மனிதனால்.., காமவெறி தவிர்த்த மெய்யான அந்தக் காதலனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

தேரைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு மணியின் நாவை இறுகக் கட்டிவிட்டுப் பிறகு தேரைச் செலுத்துமாறு பாகனைப் பணிக்கிறான் அவன்.

தன்னுடைய காதலியை விரைவாகச் சென்று காணவும் வேண்டும் ;
ஆனால் அதற்காகக் காட்டின் அமைதியான நிசப்த சௌந்தரியத்தைக் குலைத்துப் போடவும் தனக்கு உரிமையில்லை என்ற உள்ளார்ந்த உணர்வே இச் செயலைச் செய்யுமாறு அவனைத் தூண்டுகிறது.

‘’தாது உண் பறவை பேதுறல் அஞ்சி
  மணி நா ஆர்த்த மாண்வினைத் தேரன்....’’


(பூக்களின் மகரந்தத் தேனை நுகர்ந்து கொண்டிருக்கும் சிற்றுயிர்கள் மணியோசையின் உரத்த ஒலி கேட்டு ப் பயந்து ஒடுங்கிவிடும் பாவச் செயலைப் புரிவதற்கு அஞ்சித் தன் தேர் மணியின் நாவை இறுகக் கட்டச் செய்த மாட்சிமை படைத்த தலைவன்)
என மாண் வினைத் தேரனாக .....செயற்கரிய செயலைச் செய்ததொரு உன்னத மனிதனாக அவனை உச்சத்தில் தூக்கி வைக்கிறது....மெய்யாகவே இயற்கையைக் கொண்டாடும் சங்க இலக்கியம்.

சங்க காலம் வெறும் இலக்கிய அழகியலுக்காக இயற்கையை நேசிப்பது போலக் காட்டிக்கொண்ட இலக்கியமில்லை.
சங்க மனிதர்கள்...சங்கக் கவிகள் இயற்கையோடு பின்னிப் பிணைந்து இயற்கையையே சுவாசித்து வாழ்ந்தவர்கள்.

இன்று....இயற்கை ஆர்வலர்கள் பெருகியிருக்கிறார்கள்;
’இயற்கையைக் காப்போம்’என்ற கோஷங்களும் வலுவாக முழங்கிக் கொண்டிருக்கின்றன.
ஆனாலும் மற்றொரு புறத்திலோ....,
செல்பேசிக் கோபுரங்களுக்காகவும்...,.
பிற கட்டுமானங்களுக்காகவும்....
திரைப்படப் படப் பிடிப்புக்களின் ’இராவண சம்ஹாரங்க’ளுக்காகவும்....
யுத்தப் பதுங்கிடங்களுக்காகவும்....
தீவிரவாதத் திட்டங்களுக்காகவும்..
கடத்தல் தொழில் கேவலங்களுக்காகவும்
காட்டின் இயற்கைச் சமன்பாட்டை..,
கோடி கொடுத்தும்பெற முடியாத அதன் எழிலான தவ மோனத்தை.....
நாம் எப்படியெல்லாம் நாசப் படுத்திக் காவு கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை ஒரு கணம் ....ஒரே ஒரு கணம் நினைவுபடுத்திக் கொண்டால்.....
உச்சி முதல் உள்ளங்கால்வரை ஆட்டிப் படைத்த காதலின் ஆளுகையின்போதும் உயிரக்கத்தோடு செயல்பட்டுத் தன் தேர் மணியை ஒலிக்காமல் இறுகக் கட்டி வைத்த அந்தச் சங்கக் காதலனின் முன்
 அற்ப மானுடர்களாக நாமெல்லாம் சிறுத்துப் போய்க் குன்றிக் கிடக்கும் வீழ்ச்சியின் அவலம் விளங்கும்.

’’மணி நா ஆர்த்த’’ அந்த ‘’மாண்வினைத் தேரன்’’ தன் மனைவியின் காதலன் மட்டுமல்ல.
ஒட்டு மொத்த உயிர்க் குலத்தின் தீராக் காதலன் அவன்.


 புகைப்படம்
 நன்றி ;
குமரன் குடில் http://www.saravanakumaran.com/2010/05/blog-post_17.html

12.7.10

காலாட்படை

’’வரலாற்றின் பக்கங்களில் தானைத் தலைவர்களின் பெயர்கள் பொன் எழுத்துக்களில் எழுதப்பட்டு ஜொலிக்கும்.
அவர்களது வீரத்தையும்,நாட்டுப் பற்றையும் போற்றிப் பக்கம் பக்கமாக எழுதப்படும்.
ஆனால் வாழ்க்கைப் போரில் பங்கு பெற்ற காலாட்படைக்கு  வாழ்க்கைப்போரில்  தோல்விதான் மிச்சம்’’......

தான் பணி புரியும்  அலுவலகச் சங்க ஊழியர்களுக்கிடையே உரை நிகழ்த்த இவ்வாறானதொரு ஆக்ரோஷமான உரையைத் தயார் செய்து கொண்டிருக்கிறாள் ஜெயந்தி.
அந்த எண்ண ஓட்டத்தில் தொடர்ந்து பயணிக்க இயலாமல்,...அந்த இழையைப் பிடித்தபடி கருத்தைக் கோவையாகக் கொண்டு செல்ல முடியாமல் வீட்டுச் சூழலின் இரைச்சலும் குழப்பமும் அவளைத் தடுக்கிறது.

வீட்டு வேலைச் சுமையின் பளுவைத் தாங்க மாட்டாமல் அம்மா சாவித்திரி முழுநேரமும் புலம்பிக் கொண்டே இருப்பது அவளுக்குக் கடுமையான எரிச்சலையும், சில வேளைகளில் ஆச்சரியத்தையும் தோற்றுவிக்கிறது.

‘ஒரு சிறிய குடும்பத்தைச் சமாளிப்பது , அதிலுள்ளவர்களுக்குச் சாப்பாடு தயாரித்துப் போடுவது அவ்வளவு கஷ்டமான விஷயமா’ என்று நினைக்கும் அவளுக்குத் தானும் தந்தையும் வெளிவேலைக்குப் போய்ப் பொருளீட்டி வருவது மட்டும்தான்  மிகவும்  சிரமமான வேலை என்று தோன்றுகிறது.

ஒரு சோறும் பருப்பும் வைக்க இந்த அம்மா ரொம்பவும்தான் அலட்டிக் கொள்கிறாள் என்றே அவளுக்குத் தோன்றுகிறது.
’’ஒழைக்காம யாரு சோறு திங்கிறாங்க . அனத்தலுக்கும் புலம்பலுக்கும் எல்லை கிடையாதா ? அம்மா என்ன பைத்தியமா’’என்கிறாள் அவள்.

’தன்னை அழைத்துச் செல்ல எமன் வர மாட்டானா’ என்று எப்பொழுது பார்த்தாலும் கத்திக் கொண்டே இருந்த சாவித்திரி அம்மா  திடீரென்று மயக்கம் போட்டு விழ , அவளுக்கு ரத்த அழுத்தம் அதிகமாகி மண்டையிலுள்ள ரத்தக் குழாய் வெடித்து விட்டதாகவும் இனி சாவுக்குக் காத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றும்  தீர்ப்பு எழுதிவிட்டுப் போகிறார் மருத்துவர்.

வீட்டுப் பொறுப்புக்கள் இப்போது ஜெயந்தியின் தோளில்...

அடுப்புக்குள் குவிந்து கிடக்கும் சாம்பல் ......
(கதை நிகழ் காலம் சற்றுப் பின்னோக்கியது என்பதால் கீழ் மத்தியதர வர்க்கம் கூட இன்று பயன்படுத்தும் எரிவாயு அடுப்பு இல்லை)
இரைந்து கிடக்கும் முதல்நாள் பாத்திரங்கள் ....
குவிந்து கிடக்கும் துணி மூட்டைகள்......

டீ போட அடுப்புப் பற்ற வைக்கக் கூட முடியாமல் தவிக்கும் ஜெயந்தி..,மற்றும் அவள் சகோதரி மீனா.....
அவர்கள் படும் பாட்டைப் பொறுக்க முடியாமல் கடையில் தேநீர் அருந்தி விட்டு ரொட்டியும் பலகாரமும் வாங்கி வரும் தந்தை..

எலும்பும் தோலுமாய் உணர்ச்சியற்றுக் கிடக்கும் தாயையே பார்த்துக் கொண்டு நிற்கிறாள் ஜெயந்தி.
இந்த உடம்போடு இரவும் பகலும் அந்த வீட்டுச் சுமையை அவள் ஏற்று வந்திருக்கிறாள்.....
அவள் இயங்கிக் கொண்டிருந்தவரை ஒருநாள் கூட அவர்கள் ரொட்டி சாப்பிட்டு இரவைக் கழிக்க நேர்ந்ததில்லை.
குழாய்க் கிணற்றிலிருந்து தண்ணீர் கொண்டு வர நேர்ந்ததில்லை.
அப்பா சமையலறைப் பக்கம் உதவிக்காகப் போக நேர்ந்ததில்லை.

இரவில் எல்லோரும் உறங்கிய பிறகும் வெகுநேரம் சமையலறையில் வேலை செய்து கொண்டிருப்பாள் அம்மா.
அடுப்பைச் சுத்தம் செய்து, பாத்திரம் கழுவி ,அறையைக் கழுவி அடுக்கடுக்காய் ஆயிரம் வேலைகள்..
மண்ணெண்ணையை மிச்சப்படுத்த விளக்கைச் சிறிதாய் எரிய விட்டபடி , சத்தம் போட்டுப் பிறர் தூக்கம் கெடுக்காதபடி, மறுநாள் சமையலுக்கானவற்றை அமைதியாய் ஆயத்தம் செய்து வைத்து....

அம்மா படுக்கப் போவதைப் பற்றி ,அவளும் தூங்கவேண்டுமென்பதைப்  பற்றி அப்போதெல்லாம் ஒரு நாளும் நினைத்துப் பார்த்ததில்லை ஜெயந்தி.

இப்போது அம்மாவைப் பற்றி நினைத்துப் பிரயோசனமில்லை...
‘அம்மா குடும்பத்திலிருந்து முகத்தைத் திருப்பிக் கொண்டு படுத்துக் கிடக்கிறாள்’

தினமும் சோறும் பருப்பும்தானா என்று அம்மா இருக்கும்போது அலுத்துக் கொண்ட அவளுக்கு அதை மட்டும் தயார் செய்து அந்தச் சிறிய குடும்பத்துக்குப் பரிமாறவே மதியம் மணி இரண்டாகி விடுகிறது.

நாளை...நாளை மறு நாள்....அதற்கும் மறு நாள்.....
இனி என்றுமே இந்த வேலைகளை அம்மா செய்யப் போவதில்லை.
ஒரு நாள் , ஒரு வேளைப் பாட்டைச் சமாளிக்கவே திணறித் திண்டாடி விட்ட அவளுக்கு எங்காவது ஓடிப் போய் விடலாமா என்று தோன்ற ஆரம்பிக்கையில் ,மணி ஐந்தடிக்கிறது.

 அலுவலகச் சங்கக் கூட்டத்தில் அவள்  பேசுவதற்கான நேரம் அது.

காலாட்படை வீரர்கள் அலட்சியப் படுத்தப் படுவதைப் பற்றித்தானே அவள் பேச இருந்தாள் ?

‘’காலாட்படை வீரர்கள் யார் ?
தொழிற்சாலையில் பணி புரியும் தொழிலாளர்கள் மட்டும்தானா...?’’
 என்ற கேள்வியைப் பூடகமாக  முன் வைத்தபடி  முடிகிறது
வங்க எழுத்தாளர் ஆஷா பூர்ணிமா தேவியின் ’காலாட்படை ’ என்னும் மேற்குறித்த சிறுகதை.
(மொழியாக்கம்; திரு சு.கிருஷ்ணமூர்த்தி - தொகுப்பு; கருப்பு சூரியன்)

அலுவலகத்தில் பணி ஓய்வு கிடைத்தாலும் வீட்டுப்பணியிலிருந்து பெண்ணுக்கு ஒரு நாளும் ஓய்வு கிடைப்பதில்லை.

பெயர் தெரியாத ஒரு கன்னடப் படம்...(கதையைப் படிக்கும் வாசகர்கள் எவருக்காவது பெயர் தெரிந்தால் சொன்னால் உதவியாக இருக்கும்.தமிழ் நடிகை லட்சுமி நடித்ததாக நினைவு)

அலுவலக வேலையிலிருந்து ஓய்வு பெற்று வீடு திரும்பும் கணவர் தன் மனைவியை அழைக்கிறார்.
’இனிமேல்தான் என் உடம்பை நீ பக்குவமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் பெண்ணே... குறிப்பிட்ட நேரங்களில்  ஆரோக்கிய பானங்கள் , பழச்சாறுகள்,காய்கறிச் சாறு என்று எந்தெந்த நேரத்தில் என்னென்ன என்பதற்கு ஒரு பட்டியல் தயார் செய்து வைத்துவிடப் போகிறேன்...
அதன்படி அனுசரித்து நடப்பது உன் கடமை ’ என்கிறார்....
55 ஐக் கடந்த அவள் உடலும் மனமும் கூட ஓய்வுக்காகக் கெஞ்சும் என்பது அவரது புத்திக்குப் புலனாவதில்லை.
தனக்கும் ஒரு ரிடையர்மெண்ட் - பணி ஓய்வு வேண்டுமென்றபடி அவரை நீங்கிச் செல்கிறாள் அவள்.

சில வருடங்களுக்கு  முன் என் தோழி பேராசிரியை அனுராதா எழுதிய
 ‘ சும்மாத்தான் இருக்கா’  என்ற சிறுகதை இதே கருத்தை மிகச் சுவையாக முன் வைக்கிறது.
வீட்டுக்கு வரும் நண்பர்களிடம்
 ‘அவ வேலைக்கெல்லாம் போகலை சும்மாதான் வீட்டில இருக்கா’என்று தன் மனைவியை அறிமுகப்படுத்தி வைக்கிறான்  கணவன்.
ஆனால் அவள் ஒரு நொடி...ஒரு நிமிடம் சும்மா இருப்பதில்லை என்பதையே கதை நிகழ்வுகள் எடுத்துக் காட்டுகின்றன.
வீட்டிலிருக்கும் பெண்  சும்மாதான்  இருப்பாள் என்ற  மாயையைப் பகடி செய்கிறது இந்தக் கதை.


பரீக்‌ஷா ஞாநி அவர்கள் நிகழ்த்திய ஒரு நாடகமும் கூட இந்தக் கருப் பொருள் சார்ந்தது.
அதிபுனைவு கொண்ட அப்படைப்பில்  எப்போதும் எரிச்சலூட்டும் தன் மனைவியைப் பயப்படுத்துவதற்காகவே  எலி வடிவம் எடுத்து வீட்டுக்குள் ஒளிந்து கொள்கிறான் கணவன்.
ஒரு நாள் முழுக்க மறைந்திருந்து அவளை ....
அடுக்கடுக்கான அவள் வேலைகளைப் பார்க்கும்போதுதான் இதுநாள்வரை அவன் காணத் தவறிய காட்சிகள் அவனுக்குத் தரிசனமாகி
அவளது மகத்துவத்தைப் புரிய வைக்கின்றன.

அசட்டுத்தனமான தொலைக் காட்சி உரையாடல்களில்
’‘ஒண்ணும் வேலை பாக்கலை...சும்மா வீட்டிலதான் இருக்கேன்...’’
என்று தங்களுக்கே தங்களைப் பற்றித் தெரியாத பேதமையோடு பெண்கள் யாரேனும் சொன்னால் தயவு செய்து யாரும் நம்ப வேண்டாம்..

அவர்கள் சும்மா இல்லை என்பது மட்டுமே நிதரிசன நிஜம்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....