துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

22.7.10

தீராக் காதலன்

முல்லை நிலக் காட்டுப் பகுதி.
போர் நிமித்தம் மாதக் கணக்கில் பாசறையில் தங்கியிருந்த தலைவன் தலைவியைக் காணும் தீராத தாகத்துடன் தேரில் விரைவாக ஊர் திரும்பிக் கொண்டிருக்கிறான்.
தேர்ப் பாகன் எவ்வளவு வேகமாகத் தேரைச் செலுத்தினாலும் காதல் பித்தேறியிருக்கும் தலைவனுக்கு அது போதுமானதாக இல்லை.

தேரையும்,
அது கடந்துபோக வேண்டிய தொலைவையும் தாண்டிக் கொண்டு,அவற்றின் வேகத்தையெல்லாம் மிஞ்சிக் கொண்டு அவன் உள்ளம் எப்போதோ தலைவியிடம்...அவள் புழங்கும் வீட்டு முற்றத்திடம் சென்று சேர்ந்து விட்டது.
ஆனாலும் கண்குளிர அவளை நேரில் காணும் ஆர்வத்தில் தேரை விரைவாக முடுக்குமாறு தேர்ப்பாகனைப் பணிக்கிறான் அவன்.

மோடி கிறுக்கி மோகம் தலைக்கேறிய அந்த மன நிலையிலும் கூடச் சமநிலை தடுமாறாமல்
சக ஜீவ ராசிகளைப்பற்றி ,
கானுயிர்களைப் பற்றி ,
அவற்றின் காதலைப் பற்றிக் கவலையும்,கரிசனமும் கொள்கிறது அந்தக்காதலனின் உள்ளம்.

தேரோட்டத்தின் வீரியமான வேகத்தில் அதில் கட்டப்பட்டுள்ள மணிகள் ஓசையுடன் சப்திக்கும் ;
புதர்களிலும்,பொந்துகளிலும்,மரக் கிளைகளிலும் கிடந்தபடி காட்டுயிர்கள் உறங்கிக் கொண்டிருக்கலாம் ;
இரை தேடுவதில் அவை மும்முரமாக இயங்கிக் கொண்டிருக்கலாம்;
தாய்ப் பறவைகள் குஞ்சுகளுக்கு இரையூட்டிக் கொண்டிருக்கலாம்;
காட்டுப் பறவைகளும்,விலங்குகளும் தங்கள் ஜோடிகளுடன் இணைந்து காதல் விளையாட்டிலும் கூட ஈடுபட்டிருக்கலாம்.
தனது தேரின் உரத்த மணியோசை அவற்றின் ஏகாந்த இனிமைக்கு இடைஞ்சலாக இருப்பதை உயிர் நேயம் கொண்ட அந்த உன்னத மனிதனால்.., காமவெறி தவிர்த்த மெய்யான அந்தக் காதலனால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

தேரைக் கொஞ்சம் நிறுத்திவிட்டு மணியின் நாவை இறுகக் கட்டிவிட்டுப் பிறகு தேரைச் செலுத்துமாறு பாகனைப் பணிக்கிறான் அவன்.

தன்னுடைய காதலியை விரைவாகச் சென்று காணவும் வேண்டும் ;
ஆனால் அதற்காகக் காட்டின் அமைதியான நிசப்த சௌந்தரியத்தைக் குலைத்துப் போடவும் தனக்கு உரிமையில்லை என்ற உள்ளார்ந்த உணர்வே இச் செயலைச் செய்யுமாறு அவனைத் தூண்டுகிறது.

‘’தாது உண் பறவை பேதுறல் அஞ்சி
  மணி நா ஆர்த்த மாண்வினைத் தேரன்....’’


(பூக்களின் மகரந்தத் தேனை நுகர்ந்து கொண்டிருக்கும் சிற்றுயிர்கள் மணியோசையின் உரத்த ஒலி கேட்டு ப் பயந்து ஒடுங்கிவிடும் பாவச் செயலைப் புரிவதற்கு அஞ்சித் தன் தேர் மணியின் நாவை இறுகக் கட்டச் செய்த மாட்சிமை படைத்த தலைவன்)
என மாண் வினைத் தேரனாக .....செயற்கரிய செயலைச் செய்ததொரு உன்னத மனிதனாக அவனை உச்சத்தில் தூக்கி வைக்கிறது....மெய்யாகவே இயற்கையைக் கொண்டாடும் சங்க இலக்கியம்.

சங்க காலம் வெறும் இலக்கிய அழகியலுக்காக இயற்கையை நேசிப்பது போலக் காட்டிக்கொண்ட இலக்கியமில்லை.
சங்க மனிதர்கள்...சங்கக் கவிகள் இயற்கையோடு பின்னிப் பிணைந்து இயற்கையையே சுவாசித்து வாழ்ந்தவர்கள்.

இன்று....இயற்கை ஆர்வலர்கள் பெருகியிருக்கிறார்கள்;
’இயற்கையைக் காப்போம்’என்ற கோஷங்களும் வலுவாக முழங்கிக் கொண்டிருக்கின்றன.
ஆனாலும் மற்றொரு புறத்திலோ....,
செல்பேசிக் கோபுரங்களுக்காகவும்...,.
பிற கட்டுமானங்களுக்காகவும்....
திரைப்படப் படப் பிடிப்புக்களின் ’இராவண சம்ஹாரங்க’ளுக்காகவும்....
யுத்தப் பதுங்கிடங்களுக்காகவும்....
தீவிரவாதத் திட்டங்களுக்காகவும்..
கடத்தல் தொழில் கேவலங்களுக்காகவும்
காட்டின் இயற்கைச் சமன்பாட்டை..,
கோடி கொடுத்தும்பெற முடியாத அதன் எழிலான தவ மோனத்தை.....
நாம் எப்படியெல்லாம் நாசப் படுத்திக் காவு கொடுத்துக் கொண்டிருக்கிறோம் என்பதை ஒரு கணம் ....ஒரே ஒரு கணம் நினைவுபடுத்திக் கொண்டால்.....
உச்சி முதல் உள்ளங்கால்வரை ஆட்டிப் படைத்த காதலின் ஆளுகையின்போதும் உயிரக்கத்தோடு செயல்பட்டுத் தன் தேர் மணியை ஒலிக்காமல் இறுகக் கட்டி வைத்த அந்தச் சங்கக் காதலனின் முன்
 அற்ப மானுடர்களாக நாமெல்லாம் சிறுத்துப் போய்க் குன்றிக் கிடக்கும் வீழ்ச்சியின் அவலம் விளங்கும்.

’’மணி நா ஆர்த்த’’ அந்த ‘’மாண்வினைத் தேரன்’’ தன் மனைவியின் காதலன் மட்டுமல்ல.
ஒட்டு மொத்த உயிர்க் குலத்தின் தீராக் காதலன் அவன்.


 புகைப்படம்
 நன்றி ;
குமரன் குடில் http://www.saravanakumaran.com/2010/05/blog-post_17.html

12 கருத்துகள் :

ஒன்று சேர் சொன்னது…

ஆஹா நல்ல தமிழ்ச்சுவையை பருகக் கொடுத்ததோடு மட்டும் நில்லாமல் அதில் சமூக சிந்தனையையும் உள்ளடக்கி காடுகள் அழிக்கப்படக் கூடாது என நயம் பட உரைத்த விதம் அருமை. நீங்கள் சொன்ன காரணங்களுக்காக மட்டுமன்றி இந்தியாவின் இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்கள் லாபத்திற்கு அள்ளிச்செல்ல வடக்கே முழுவதும் (கிரீன் ஹ‌ன்ட்) என்ற பெயரிரும், தீவிரவாத அழிப்பு என்ற பெயரிலும் காடுகள் பெரிய அளவில் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். உங்கள் தளத்தை அறிமுகம் செய்து வைத்த வலைச்சர இந்த வார ஆசிரியர் நண்பர் ஜோதிகணேசனுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி. தொடரட்டும் தமிழ்ச் சுவையோடு சமூக கருத்துக்களை விதைக்கும் பணி - சித்திரகுப்தன்

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அருமை , அருமை

பவள சங்கரி சொன்னது…

சகோதரி, மிக அருமையான, சங்கத்தமிழ். வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

வணக்கம். அற்புதமான ஒரு சங்க கால பாடலைச் சொல்லி அதன் மூலம் இயற்கையைக் காதல் செய்யச் சொன்ன உங்களது இடுகை கண்டு மகிழ்ச்சி. படமும் அழகாக இருந்தது.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

வலைக்கு வருகை புரிந்து கருத்துப் பகிர்வு செய்த நண்பர்களுக்கு மிக்க நன்றி.
உங்கள் எதிர்வினைகள் மேலும் ஊக்கமுடன் செயல்பட எனக்கு உற்சாகமளிக்கின்றன.
தான் எடுத்த தாராசுரச் சிற்பத்தின் புகைப்படத்தை என் வலையில் வெளியிடப் பெருந்தன்மையுடன் ஒப்புதலளித்த குமரன்குடில் சரவணகுமரனுக்கு என் குறிப்பான நன்றி.

சரவணகுமரன் சொன்னது…

உங்கள் பதிவு அருமையாக இருந்தது, மேடம். இனி தொடர்ந்து வாசிப்பேன். நன்றி.

முத்துலெட்சுமி/muthuletchumi சொன்னது…

அருமை அருமை..
பழமையைக் காட்டி இன்றைய சிறுமையை உணர்த்தினீர்கள்.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

வருகைக்கு நன்றி முத்துலட்சுமி.

Thamiz Priyan சொன்னது…

அழகான பதிவு! பகிர்வுக்கு நன்றி!

ராம்ஜி_யாஹூ சொன்னது…

many thanks for sharing

சதீஷ்குமார் சொன்னது…

அருமை

BD சொன்னது…

"ஓடுகின்ற மேகங்காள் ஓடாத தேரில்வேறும் கூடு வருகுதென்று சொல்லுங்கள்......." - வினை முடித்து மனை திரும்பும் தலைவன் தனது தேரின் வேகம் போதாது என எண்ணி (தலைவியைக்கான வேண்டும் என்ற ஆர்வம்) மேகதைத்தூது விடுவதாக அமைந்த பாடல்! இங்கு ஈண்டு பகரத்தக்கது!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....