துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
தஸ்தயெவ்ஸ்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தஸ்தயெவ்ஸ்கி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22.3.22

கனலி- நேர்காணல், தஸ்தயெவ்ஸ்கி சிறப்பிதழ்

 கனலி    ( https://kanali.in/category/special-editions/special-editions_200/ )ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி (200 ஆம் ஆண்டு) சிறப்பிதழில் என் நேர்காணல்


முதல் கேள்வியாக ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியை எப்படிக் கண்டுகொண்டீர்கள். அவரை தமிழில் மொழியாக்கம் செய்திட வேண்டும் என்கிற மன உந்துதல் எப்படி உங்களுக்குள் வந்து சேர்ந்தது என்று சொல்லிட இயலுமா.


சிறுவயது முதலே வாசிப்பில் நாட்டம் கொண்டிருந்தவள் நான். புனைவு , அபுனைவு, மொழிபெயர்ப்பு என்று எதையும் புறந்தள்ளாத கலவையான பல நூல்களின் வாசிப்பு. பேராசிரியப்பணியில் சேர்ந்தபின்பு அந்த வாசிப்புக்கான வாய்ப்புக்கள் மேலும் கூடுதலாயின. பொறுப்புக்களும் அவ்வாறே. மற்றொரு புறம் எழுத்திலும் ஆர்வம் இருந்ததால் ‘79 முதல் சிறுகதைகளும் வெளிவரத்தொடங்கியிருந்தன. இந்த மும்முனைப்பயணத்தில் தஸ்தயெவ்ஸ்கி என்ற எழுத்தாளரை நான் எதிர்ப்படாமல் போயிருக்க உறுதியாக வாய்ப்பில்லை. ஆனாலும் பலவகைப்பட்ட பணிகளுக்கு இடையில் அவரது எழுத்தின் மீது மட்டுமே தீவிர கவனம் செலுத்தும் வாசகியாய், அவரை நான் கண்டுகொண்ட தருணமாக, அவர் என்னை வந்தடைந்த கணமாக அதை எடுத்துக்கொள்ள முடியாது. பேராசிரியப்பணி ஓய்வுக்குப்பின் , என் 56 ஆவது வயதில் ‘குற்றமும் தண்டனையும்’ மொழியாக்கப்பணியை என்னிடம் ஒப்புவிக்க முன் வந்த மதுரை பாரதி புக் ஹவுஸ் பதிப்பாளர் வழியாகவே என்னிடம் தஸ்தயெவ்ஸ்கி முறைப்படி வந்து சேர்ந்தார் ( இப்போது அந்தப்பதிப்பகம் இல்லை. நற்றிணை பதிப்பகமே என் தஸ்தயெவ்ஸ்கி நூல்களின் செம்பதிப்புக்களையும், அவரது பிற மொழிபெயர்ப்புக்களையும் வெளியிட்டு வருகிறது).  நான் அதுவரை ஈடுபட்டிராத மொழிபெயர்ப்புப்பணியும், தஸ்தயெவ்ஸ்கியும் ஒருசேர என்னை வந்தடைந்த கணம் அதுவே. தீமையிலும் நன்மை என்பது போல இது இத்தனை தாமதமாக நேர்ந்ததிலும் ஒரு நன்மை இருப்பதையே என்னால் பார்க்க முடிகிறது. முன்பு வாசித்திருந்தால் வேறு நூல்களோடு பத்தோடு பதினொன்றாக நான் இவரையும் வாசித்து விட்டுப்போயிருக்கலாம், ஆனால், குறிப்பிட்ட காலகட்டத்தில் முழு நேர ஓய்வும் மொழிபெயர்ப்புப்பணியும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டதால் ஒரு சொல், ஒரு வரி என்று எதையும் இம்மியும் தவற விடாமல் - திரும்பத்திரும்ப தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்துக்களுக்குள் , அவர் படைத்துக்காட்டும் அக உலகத்துக்குள் ஆழமான விரிவான பயணம் செய்யும் வாய்ப்பு கைகூடியது இந்தத்தாமதத்தாலேதான். அதில் எனக்கு மகிழ்ச்சியே.


தமிழ்தமிழ்ப்பேராசிரியராக மட்டுமல்லாமல் 1979 தொடங்கி ஒரு சிறுகதை எழுத்தாளராகவும் இருந்து
உங்களுக்குப் பிடித்த ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகள் எவையெவை? அவை பிடிப்பதற்கான காரணங்கள் சிலவற்றைப் பட்டியலிட்டுச் சொல்ல இயலுமா.

குற்றமும் தண்டனையும் மொழிபெயர்த்து முடித்ததுமே தஸ்தயெவ்ஸ்கி என் நெஞ்சுக்கு நெருக்கமான கதைசொல்லியாகி விட்டார்,அதனால் அவரது படைப்புக்களில் இது பிடிக்கும் இது பிடிக்காது என்று இனம்பிரித்துச் சொல்ல முடியாதபடி அவரது படைப்புலகோடு நான் ஒன்றிக்கலந்து விட்டிருப்பது போன்ற உணர்வுதான் என்னை ஆட்கொண்டிருக்கிறது. எந்தஒரு படைப்பாளியும் தன் படைப்புக்களில் உயர்வு தாழ்வு என்று பேதம் பாராட்டுவதில்லை. தஸ்தயெவ்ஸ்கியைத் தமிழ் வழி மறு ஆக்கம் செய்யும் நானும் அப்படித்தான். நான் ஒரு வாசகராக,விமரிசகராக,ஆய்வாளராக இருந்து பார்த்தால், இந்தக்கேள்விக்கு என் பதில் வேறாக இருக்கலாம். இப்போது தஸ்தயெவ்ஸ்கியுடன் மனரீதியாக ஒரு அபேத நிலையில் நான் இருந்து கொண்டிருப்பதால்,அவருடையவற்றில் பிடித்தது பிடிக்காதது என்று இனம் பிரித்துப்பார்க்க நான் துணியவில்லை . ‘நவில்தொறும் நூல்நயம்’ என்பது போலப் படைப்புக்குப் படைப்பு அவர் காட்டியிருக்கும் ரகம்ரகமான மன உணர்வுகளை, வாழ்வியல் சிக்கல்களை, அவற்றை அவர் தொடுத்துக்கதை பின்னிக்கொண்டு போகும் நேர்த்தியை,கதைக்கூற்று முறைகளில்,பாத்திர வார்ப்புக்களில் காட்டியிருக்கும் மாறுபாடுகளைப் பார்த்து வியந்து மட்டுமே நிற்கிறேன். அந்த மேதையின் எழுத்துச் சன்னதியில் என்னால் இப்போது செய்யக்கூடியது அது மட்டுமே.



ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி படைப்புகளை மொழியாக்கம் செய்யும் போது தங்களுக்கு அகம் சார்ந்து எப்படிப்பட்ட மாறுதல்கள் கிடைக்கிறது தஸ்தயெவ்ஸ்கி அகம் சார்ந்து அதிகம் எழுதியிருக்கிறார் அதனால் இக் கேள்வியை முன் வைக்கிறோம்.

வாழ்க்கைப் பயணத்தில் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகளுடன் அதிகம் பயணம் செய்துள்ளீர்கள். இதன் வழியாக உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிச் சொல்லிட இயலுமா.


இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒன்றாகவே பதில் சொல்லி விடலாமென்று நினைக்கிறேன்.
என் வாழ்க்கைப்பயணத்தில் எழுத்தும் வாசிப்பும் சார்ந்த காலகட்டத்தை தஸ்தயெவ்ஸ்கிக்கு முன்- தஸ்தயெவ்ஸ்கிக்குப் பின் என்று பிரித்துக்கொள்ளும் அளவுக்கு வேறெந்த நாவல் எழுத்தாளரையும் விட அவர் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் மகத்தானது.
‘குற்றமும் தண்டனையும்’ மற்றும் ‘அசடன்’ நாவல்களில் அவர்  அமைக்கும் மிகப்பெரிய ‘கான்வாஸ்’..பிரம்மாண்டப்பின்னணி…,
அதில்தான் எத்தனை விதம் விதமான மனிதர்கள்..அவர்களின் வாழ்க்கைப்போராட்டங்கள்? அத்தனை மனித மனங்களின் ஆழம் காண முடியாத இருட்டு மூலைகளுக்குள்ளேயும் இலாவகமாய் சஞ்சாரம் செய்து அங்கே உறைந்திருக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புக்களை சொல் வழி கடத்துவதென்பது சாமானியமல்ல. அது கலை என்பதையும் மீறி சக மனிதர்கள் குறித்து நமக்கு அவர் புகட்டும் ஒரு பாடமாகவே பல நேரங்களில் அமைந்து விடுகிறது. மனிதர்களின் பலம்,பலவீனங்களை மட்டுமே வைத்து இவன் நல்லவன்,இவன் தீயவன் என்று வரையறுத்துக் கோடு கிழிக்க தஸ்தயெவ்ஸ்கி என்றுமே முற்பட்டதில்லை. அவரவர் வாழ்வை,அவரவர் குணங்களை அவரவர் வாழ்க்கைப்பின்னணியோடு பொருத்திக் கொடுப்பதை மட்டுமே செய்து விட்டு அவர் நகர்ந்து கொள்ள.., நாமும் நல்லவன்,தீயவன் என்று எந்த ஒருவரைப்பற்றியும் தீர்ப்பு வழங்க , இனம்பிரிக்க மனம் வராமல் தடுமாறிப்போகிறோம். அதுவே அவரது எல்லையற்ற காருண்யம். அது அவர் படைக்கும் எல்லா சிருஷ்டிகளிலும் வெள்ளமாய்ப் பெருகிக் ததும்ப அதில் நீராடி நாமும் அகத்தூய்மை கொள்கிறோம். குறுகிய அபிப்பிராயங்களைக் களைந்து நீக்கி விட்டு விசாலமான விரிந்த பார்வையோடு கதை மாந்தர்களை மட்டுமன்றி நம்மைச் சுற்றி இயங்கும் உலகையும் காணப்பழகிக்கொள்கிறோம். அடுத்தவரின் அக உலகத்துக்குள் போக முனைவதற்குள் நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளவும் உந்துதல் அளிப்பவை அவரது எழுத்துக்கள். அகத்தைத் தூய்மை செய்துகொள்ளும் முயற்சியில் அடியெடுத்தாவது வைக்க வேண்டும் என்ற உந்துதலைக் கிளர்த்த நிச்சயம் தஸ்தயெவ்ஸ்கி எனக்குத் துணை வந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். 

அவரது மிகப்பெரும் படைப்புக்களான ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’ ஆகியவற்றையும் ‘நிலவறைக்குறிப்புகள்’, ‘இரட்டையர்’, ‘வெண் இரவுகள் ‘ போன்ற குறுநாவல்களையும் அவரது பல சிறுகதைகளையும் மொழிபெயர்த்து முடித்த பின் ஒரு படைப்பாளி என்ற வகையில் நான் படைப்பை அணுகும் கோணங்களுமே சற்று மாறிப்போய் நான் பக்குவமடைந்திருப்பதை, என் எழுத்து சற்றே கூர்தீட்டப்பட்டிருப்பதை என்னால் நன்றாகவே உணர முடிகிறது.  ஒரு மகத்தான கதைசொல்லியின் நிழலில் இளைப்பாறும் கணங்களில் என் ஆன்மாவும், எழுத்தும் இரண்டுமே தொடர்ந்து பட்டை தீட்டப்பட்டு வருவதாகவே என் அகத்தில் உணர்கிறேன்.

….

உங்களுக்குப் பிடித்த தஸ்தயெவ்ஸ்கியின் கதாபாத்திரங்கள் எவையெவை. முக்கியமாகப் பெண் கதாபாத்திரங்கள்.
…..
குற்றமும் தண்டனையும் சோனியாவை யாரால்தான் விரும்பாமல் இருக்க முடியும்? ரஸ்கோல்னிகோவின் தாயும்( பல்கேரியா அலெக்ஸேண்ட்ரோவ்னா) , மர்மலேதோவின் மனைவியும் ( காதரீனா இவானோவ்னா) துணைப்பாத்திரங்கள் என்றாலும் நாவலாசிரியரின்படைப்புத் திறமையால் நெஞ்சுக்குள் பதிந்து நின்று விடுபவர்கள். உண்மையில் நாவலின் தொடக்கத்தில் ரஸ்கோல்னிகோவின் தாய், பல்கலைக்கழகமாணவனான அவனுக்கு எழுதும் கடிதமே -நாவல் முழுவதையும் படித்து முடிக்காத கட்டத்திலும், மொழியாக்கத்தை உடனே தொடங்கி விடும் தூண்டுதலை எனக்கு அளித்தது என்றே சொல்லலாம். அசடன் நாவலில் மனதளவில் மிஷ்கின் மீது எல்லையற்ற பிரேமை இருந்தாலும் தான் அதற்குத்தகுதி கொண்டவள்தானா என்ற தீராத கேள்வியோடு நாவலின் இறுதி வரை ஊசலாடும் நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னா, சில நேரங்களில் சில மனிதர்கள் கங்காவை நினைவூட்டி அவளுக்காக …, அவள் கடந்து வந்த வாழ்க்கைப்பின்னணிக்காக என்னை நெகிழ வைக்கிறாள். வீட்டு வேலைகள்,பொறுப்புக்களுக்கிடையே உழலும் நடுத்தர வயதுப்பெண்ணானாலும்..காதல் ஊசலாட்டத்தில் சிக்கியிருக்கும் இளம் வயதுப்பெண்ணானாலும்( ‘வெண் இரவுகள்’-  நஸ்டெங்கா)  அவர்களது உளவியலுக்குள் புகுந்து புறப்பட்டபடி குறிப்பிட்ட பெண்பாத்திரப்படைப்பைக் கச்சிதமாக முன் நிறுத்தும் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புத் திறன் அபாரமானது.

………..

ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி மற்றும் லியோ டால்ஸ்டாய் இருவரில் யாரை முதன்மையாக வைப்பீர்கள்?
……
ரஷ்ய இலக்கியத்துக்குப் பெரும் பங்களிப்புச் செய்த இந்த இரு மேதைகளை அப்படி வேறுபடுத்திப்பார்ப்பது தேவையில்லை என்பதே என் கருத்து. தமிழுக்குக் கம்பன் எவ்வளவு தேவையோ அதே அளவுக்கு இளங்கோவும் தேவை. மிக உன்னதமான உயரிய இடத்தில் இருக்கும் இரு இலக்கியகர்த்தாக்களின் படைப்புப் பார்வைகள்,அணுகுமுறைகள், கதை சொல்லும் போக்கு, சொல் ஆளுமை என்று பல கூறுகளை ஒப்பிட்டும் உறழ்ந்தும் பார்க்கலாமே தவிர எவருக்கு முதன்மை தருவது என்பது அவரவர் அந்தரங்க வாசிப்பு சார்ந்தது. அதைப்பொதுவில் வைத்துப் புதிய வாசகர்களை ஒரு சார்பான நிலைப்பாடு கொள்ள வைக்க நான் விரும்பவில்லை.
………..


நவீன இலக்கியச் சூழலில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து தஸ்தயெவ்ஸ்கி வாசிக்கப்படுகிறார். அதே நேரத்தில் நவீனத்துவம் பேசும் நிறைய இலக்கியவாதிகளிடம் தஸ்தயெவ்ஸ்கி மீது வெறுப்பு என்றும் இருந்து கொண்டிருக்கிறது. நமது இலக்கியச் சூழலுக்கு ஏன் தஸ்தயெவ்ஸ்கி தேவை என்பதைச் சொல்லத் தகுதியான ஒரு ஆளுமை என்பதால் தான் இதை உங்களிடம் கேட்கிறோம்.
ஏன் நமக்கு உண்மையில் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி தேவை.?
……..

புனைவிலக்கியக்கித்தின் மீது தீராத பெரு விருப்பம் கொண்ட எந்த ஒரு வாசகராலும் புறந்தள்ளி விட்டுப்போய் விட முடியாத ஓர் ஆளுமைதஸ்தயெவ்ஸ்கி. ஒரு சில இலக்கியக்குழுக்கள் முன் வைக்கும் காழ்ப்புணர்வு சார்ந்த விமரிசனங்களை நாம் அதிகம் பெரிது படுத்தவோ கருத்தில் கொள்ளவோ தேவை இல்லை என்றே நான் எண்ணுகிறேன். ஒரு படைப்பாளியின் படைப்புக்களைப் படிக்காமல்- அவற்றின் வழி அவனது அகத்தை ஆன்மாவை அறிய முற்படாமல், இத்தகைய எதிர்மறை விமரிசனங்களை மட்டுமே எதிர்ப்பட்டு அவற்றின் வழி எழுத்தாளரைப் புறமொதுக்கும் ஓர் இளம் வாசகன் , புதிய வாசகன் , இதன் வழி இலக்கிய ரீதியான பேரிழப்பையே சந்திக்கிறான். அரிய மகத்தான செய்திகளை,தரிசனங்களைத்தவற விட்டு விட்டு இத்தகைய சில்லறை விவாதங்களில் ஈடுபடுவது தன் இலக்கியப் பயணத்துக்கு 
(எழுத்து ,வாசிப்புஎதுவானாலும்) எப்படிப்பட்ட ஒரு தடை என்பது காலப்போக்கில் உணர்வாகும்போது காலம் அவனைக்கடந்து போயிருக்கும்.

(உங்கள் கேள்வியின் அடுத்த பகுதி, தஸ்தயெவ்ஸ்கி இன்றைய இலக்கியச்சூழலுக்கு ஏன் தேவை என்பது. )
இன்றைய நவீனத்துவ பின் நவீனத்துவ சூழலில் புனைவு என்பது பெரும்பாலும் இருண்மையின் பிடியில் சிக்கியிருப்பதாகவே நான் கருதுகிறேன். காலப்போக்கில் புனைவின் உத்திகள் மாறிக்கொண்டே செல்வது தவிர்க்க முடியாதது என்றாலும் படைப்பாளி முன் வைப்பது என்னவென்பதையே உள்வாங்கிக்கொள்ள முடியாத புனைவுகளே நவீனம் என்ற பெயரில் இன்று மலிந்து கொண்டு செல்வதைக்காண முடிகிறது. கலை, வாழ்க்கைக்கு மட்டுமே என்று நான் கோடுகிழித்துச் சொல்ல விரும்பவில்லையென்றாலும் பரிசோதனை என்ற பெயரில் கலைத்தன்மையும் கை கூடாமல், வாழ்க்கைக்கும் பயன் தராமல் எழுதப்படும் எழுத்துக்களை ஒரு தட்டில் வைத்து நிறுத்துப்பார்த்தால் மட்டுமே இன்றைய இலக்கிய சூழலுக்கு தஸ்தயெவ்ஸ்கி ஏன் தேவை என்ற கேள்விக்குப் பாசாங்கில்லாத விடை கிடைக்கும். 
முதல் பகுதி முழுவதும் ஒரே ஒரு மனிதனின் அகத்தனிமொழியாக ஒலிக்கும் ‘நிலவறைக்குறிப்புகள்’ உட்பட, நுண் அங்கதத்தோடு கூடியதாய் உலகப்புகழ்பெற்ற திறனாய்வாளர்களுக்குக் கூடப் பொருள் மயக்கம் ஏற்படுத்தும் ‘இரட்டையர்’ வரை- பலவகையான  இலக்கியப்பரிசோதனைகளை செய்ய அவரும் தவறவில்லை. 
அதே வேளையில் மானுடத்தைக் கீழ் நோக்கித்தரம் தாழ்த்தும் எதையும் தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்து ஒருபோதும் செய்ததில்லை.

வாழ்வின் இருள் மண்டிய பக்கங்களை- அழுக்கும், அசிங்கமும்,அவலமும் நிறைந்த மூலைமுடுக்குகளைச் சித்தரித்தாலும் அவற்றின் வழி எவரையும் கொச்சைப்படுத்தவோ, தன் எழுத்தைக்கொச்சைப்படுத்திக்கொள்ளவோ தஸ்தயெவ்ஸ்கியின் எழுதுகோல் ஒருபோதும் துணிந்ததில்லை என்பதை ஐயத்துக்கு இடமில்லாமல் சொல்லிவிட முடியும். மானுடத்தின் எல்லாத் துன்பங்களுக்கும் சிக்கல்களுக்கும் இடையே ஊடாடியபடி அவற்றுக்கிடையில் உறைந்திருக்கும் மானுடத்தின் மாண்பைக் காட்டவே அவர்  எப்போதும்  முயன்று வந்திருக்கிறார். ‘குற்றமும் தண்டனையும் நாவலில் பெண்பித்தனாக ஏமாற்றுக்காரனாக வரும் ஸ்விட்ரிகைலோவிடமும்  கூட மர்மேலோதோவின் அநாதரவான குழந்தைகளின் பால் அன்பு சுரக்கிறது. கண்டிப்பாக செயல்பட வேண்டிய நிலையிலிருக்கும் நீதிபதி போர்பிரி பெத்ரோவிச்சிடமும் கூட ரஸ்கோல்னிகோவ் மீதுதோழமை ஜனிக்கிறது. ‘அசடனில்’ நஸ்டாஸ்யாவைக்கவர்ந்து கொண்டு சென்று இறுதியில் அவளைக்கொன்று விட்டுப்பித்துப்பிடித்தவன் போலப்புலம்பும் ரோகோஸின் மீதும் கூட மிஷ்கினுக்குக் கருணையும் இரக்கமும் சுரக்கிறது.

மனித வாழ்வு துயரமும் தீமையும் பிரச்சினைகளும் மலிந்ததுதான், ஆனால் அவற்றுக்கு நடுவிலும் கூட ஒளிந்திருக்கும் மானுட நல்லியல்புக்கு முதன்மை தந்து அதற்குத் தன் எழுத்தின் வழி வெளிச்சம் பாய்ச்சி வாழ்க்கை மீதான நம்பிக்கை வறண்டு விடாமல் காக்கின்றன தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்துக்கள்.  அந்த நம்பிக்கை இன்றைய காலத்தின் தேவையென்றால் தஸ்தயெவ்ஸ்கியும் இன்று தேவை என்றே சொல்வேன்.

பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் கடவுள் ஏற்பு அல்லது மறுப்பு என்கிற விடயத்தை எப்படிப் பார்க்கிறீர்கள். அவர் படைப்புகளில் அவருக்குத் தொடர்ந்து சிக்கல் தரும் விடயமாக இது இருந்துள்ளது. இது ஒரு மொழிபெயர்ப்பாளராக உங்களை அது எப்படிச் சிந்திக்க வைத்தது.?

தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புலகத்துக்குள் கடந்த 16 ஆண்டுகளாக மொழிபெயர்ப்பு வழியே தொடர்ந்து பயணப்பட்டு வரும் நான் , டால்ஸ்டாய் போலத்தன்னை வெளிப்படையாகக்காட்டிக்கொள்ளாவிட்டாலும் அவர் ஒரு நம்பிக்கையாளர் என்றே உணர்கிறேன். தான் பிறந்து வளர்ந்த சமயநெறிகளின் தாக்கத்தால், கிறித்தவக்கோட்பாடுகளையும், விவிலிய வாசகங்களையும் தன் படைப்புக்களில் ஆங்காங்கே முன்வைத்தாலும், மரபு சார்ந்த- நிறுவனமாக்கப்பட்ட,வழி வழி வந்த பாதையின்பாற் பட்டதல்ல அவர் முன் வைக்கும் ஆன்மீகம்.
அவற்றில் அவருக்கு நிறைய ஐயங்களும்,தேடல்களும்,விமரிசனங்களும்,விவாதங்களும் உண்டு,அவற்றையே அவரது பாத்திரங்களும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் மீறியதாய் ஏதோ ஒரு பிரபஞ்ச சக்தியின் வழிகாட்டுதலும்,நெறிப்படுத்தலும் மனித குலத்தை இயக்கிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தவராகவே தன் ஆக்கங்களில் வெளிப்படுகிறார் அவர். அந்த வழிகாட்டலை ஸோனியா வழி ரஸ்கோல்நிகோவ் கண்டடைகிறான். ஒரு விலைமகளும் கொலைகாரனும் ஒன்றாகச்சேர்ந்து மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் புதிய ஏற்பாடு படிக்கும் அந்தக்கட்டத்தை மறந்து விட முடியுமா என்ன? அது ஒரு சமய போதனை.., அது அவளது இறைப்பற்று என்பது போன்ற வரையறைகளையெல்லாம் கடந்த ஒரு தாக்கத்தை - அந்த எளிமையான பெண்ணுக்குள் இருக்கும் எல்லையற்றமானுட நேயமும் பரிவும் அவனுக்குள் கிளர்ந்தெழ வைக்கின்றன. அவனது மனச்சான்றில் சிறியதொரு அசைவை ஏற்படுத்தும் குறிப்பிடத்தகுந்த திருப்புமுனைக்கட்டமாகிறது அது. தன் இரட்டைக் கொலைகளால் மானுடத்தைக் கறைபடுத்தி விட்ட அவனை முச்சந்திக்குப் போய் மனிதத்தை மண்டியிட்டு வணங்குமாறு அவள் சொல்லும்போது தஸ்தயெவ்ஸ்கியின் ஆன்மீகம் மானுடம் நோக்கிய தஸ்தயெவ்ஸ்கியின் ஆன்மீகப்பார்வையென்பது புலப்பட்டுப்போய் விடுகிறது. ‘அசடன்’ நாவலில் கள்ளம் கபடு,சூது வாது அற்றவனாய், குழந்தை உள்ளத்தோடு, எவரிடமும் குறை காணாதவனாய், எல்லோரையும் நேசிக்க முடிகிற மிஷ்கின் என்னும் அசடனை, உலோகாயதத்தை முன்னிலை பெற்றிருக்கும் உலகியல் வாழ்வில் தான் காண விரும்பிய நிறைஆன்மீக மனிதனின் பிரதிபலிப்பாகவே உருவாக்கியிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி. சமயச் சிமிழ்களுக்குள் அடங்காததும், மனிதனின் அகத்தைத் துலக்குவதுமான ஓர் ஆன்மீக அனுபவமாகவே தஸ்தயெவ்ஸ்கியின் இறைக்கோட்பாட்டை என்னால் காண முடிகிறது

இன்றைய இளைய தலைமுறையினருக்கு முக்கியமாக தஸ்தயெவ்ஸ்கியை முதன் முதலில் வாசிக்க முயலும் ஒரு வாசகனுக்கு அவரின் எந்த படைப்பை முதலில் பரிந்துரை செய்வீர்கள்.?

உறுதியாக ‘குற்றமும் தண்டனையும்’ நாவலைத்தான்.
விறுவிறுப்பான கதைப்போக்கோடு கூடிய உணர்ச்சிகரமான கட்டங்களும்,திருப்பங்களும் கொண்டது என்பதற்காக மட்டுமல்ல. உன்னதமான ஒரு தரிசனத்தை மிகச்சாதாரண மனிதர்களின் வாழ்வியல் வழி காட்சிப்படுத்தும் மகத்துவம் கொண்டது அது என்பதாலும்தான். அதில் தொடங்கி தஸ்தயெவ்ஸ்கியின் கதை உலகுக்குள் நுழைபவர்களுக்கு அவரது பிற நாவல்களைத்தேடிப் போகும் தூண்டுதல்தன்னிச்சையாகவே பிறப்பது தவிர்க்க இயலாதது. ‘ குற்றமும் தண்டனையும்’ நாவலை மொழிபெயர்த்து விட்டு இன்று வரை தொடர்ச்சியாக அவரது நாவல்களைப் பின் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கும் என் தனிப்பட்ட அனுபவமே அதற்கு சாட்சி.

தஸ்தயெவ்ஸ்கியின் இரட்டையர்கள் ஒரு சிக்கலான நாவல். இருத்தலியல் கூறுகள் அதிகம் கொண்ட நாவலும், அதை மொழியாக்கம் செய்யும் போது கடினமாக உணர்ந்தீர்களா?

உண்மையில் ‘நிலவறைக்குறிப்புகள்’ நாவலை மொழிபெயர்க்கும்போது நான் உணர்ந்து அனுபவித்துக்கடந்த மிகக்கடினமான மனநிலைக்கு ஒரு மாற்றாக இருக்கக்கூடும் என்று எண்ணியே, ‘இரட்டையர் ‘ மொழிபெயர்ப்பையும் அதோடு கூடவே செய்யத்தொடங்கினேன். முதல் பார்வைக்கு நகைச்சுவையும், அங்கதமும் கலந்ததாக- மிக இலகுவாகத்தோன்றிய ‘இரட்டையர்’ அப்படிப்பட்ட எளிதான பிரதி இல்லை என்பது போகப்போகப் புரியத்தொடங்கியது. அதை மூடி வைத்து விட்டு ‘ நிலவறைக்குறிப்புக’ளை முடித்த பிறகே மீண்டும் ‘ இரட்டையர்’ மொழிபெயர்ப்பைத் தொடர ஆரம்பித்தேன். ஆங்கில மொழியாக்கங்களில் இந்த இரண்டு படைப்புகளும் பெரும்பாலும் சேர்த்தே பதிப்பிக்கப்பட்டிருப்பதில் பொருள் இல்லாமல் இல்லை. நிலவறைக்குள் இருக்கும் மனிதனின் தனிமொழி, முதல் நாவல் என்றால்..,அதே நிலவறை மனிதன் தன் நிலவறைக்குள்ளிருந்து வெளிப்பட்டு சமூகத்தோடு ஊடாடும்போது எப்படிப்பட்ட மனநிலைகளை எதிர்கொள்வான் என்று காட்டுவது ‘இரட்டையர்’. அந்த வகையில் இருப்பியல்வாத அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் இந்த இரு நாவல்களும் தம்முள் தொடர்பு கொண்டிருப்பவையே. நிலவறையின் நீட்சியே ‘இரட்டையர்’ என்று கூடச் சொல்லி விட முடியும். “ துயரத்துடன் தனித்திருக்கும் மனித ஆத்மா,தனிமைப்பட்டிருக்கும் அகப்பிரக்ஞை,நிலவறைக்குள் தப்பித்து முடங்குதல்” ஆகிய சிக்கல்களையே ‘ இரட்டையர்’ நாவலிலும் எதிர்ப்படுகிறோம்” என்கிறார் ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் வாழ்வையும் படைப்பையும் விரிவாக ஆராய்ந்து நூலெழுதி இருக்கும் காண்ஸ்டாண்டின் மோசுல்ஸ்கி. கதையின் பின்புலமாக வரும் காலகட்டத்தில் ரஷ்யாவில் நிலவிய கெடுபிடிகள் நிறைந்த மிகுந்த இறுக்கமான சமூக அமைப்பும்,அதன் அதிகாரப்படி நிலைகளும் பல நெருக்கடிகளை உருவாக்கியிருந்தன. அவற்றுக்கு இடையே சிக்கிச் சிதறுண்டு போன மனிதர்களின் ஒரு ‘மாதிரி’ (sample) யாகவே கோலியாட்கின் என்னும் பாத்திரம் உருப்பெற்றிருக்கிறது. ரஷ்ய இலக்கியவாதிகளிடமும் கூட இந்த நாவலை சரியாக உள்வாங்கும் முயற்சி கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேல் இன்னும்கூடத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. குழப்பமான மனப்பிரமைகளுக்கு ஆட்பட்டுத் தன் சுய அடையாளம் குறித்த தேடலால் தன்னையே தொலைத்துக்கொள்ளத் துணிந்து விடும் ஒரு மனிதனின் கதை இது. நாவலில் நடக்கும் சம்பவங்களில் உணமை எது, கற்பிதம் எது என்று எதையும் வரையறுத்துச் சொல்லாமல் வாசக மயக்கம் ஏற்படும் வகையில்
உள்ளடங்கியதாகவே இந்த நாவலின் தொனியை அமைத்துக்கொண்டிருக்கிறார் நாவலாசிரியர். வாசக ஊகத்துக்கு உரியதாக - நுணுக்கமான மறை பொருளாக சிலவற்றை சொல்லியும் சொல்லாமலும் விட்டிருக்கிறார். இதை மொழிபெயர்த்தபோது எனக்கு ஏற்பட்ட ஐயங்களும் நான் எதிர்கொண்ட சவால்களும் எந்த வகையிலும்’நிலவறைக்குறிப்புகள்’ மொழியாக்க அனுபவத்துக்குக்குறைவானவை அல்ல, சொல்லப்போனால் கூடுதலானவை என்றே கூடச்சொல்லி விடலாம். தஸ்தயெவ்ஸ்கியின் பேரிலக்கியங்களான ‘ குற்றமும் தண்டனையும்’ , ‘ அசடன்’ ஆகியவற்றை விட மொழிபெயர்ப்பில் என்னைக்கடுமையாக உழைக்க வைத்து அதிக நேரம் எடுத்துக்கொள்ளவும் வைத்தவை இந்த இரு குறுநாவல்களுமே.


ஆங்கிலத்திலிருந்து தமிழில் தஸ்தயெவ்ஸ்கியை மொழியாக்கம் செய்யும் போது யாருடைய ஆங்கில மொழியாக்கத்தை எடுத்துக் கொள்கிறீர்கள்? அதற்கான  தனிப்பட்ட காரணங்கள் என்னவென்று  கூற இயலுமா? 

தஸ்தயெவ்ஸ்கியின் ஆங்கில மொழிபெயர்ப்புக்களைப்பொறுத்தவரை Constance Garnett இன் மொழிபெயர்ப்பு பெரிதும் நம்பகத்தன்மையுடையது என்று சொல்லப்படுவதால் அதை அடிப்படையாக வைத்துக்கொள்கிறேன்; ஆனால் அது அடிப்படை மட்டும்தான். அதில் தெளிவு ஏற்படாத ஆங்கிலப்பகுதிகளில் வேறு பல ஆங்கில மொழியாக்கங்களை ஒப்புநோக்கி , அந்தக் குறிப்பிட்ட கட்டத்தையும் சூழலையும் குறித்த முழுமையான திருப்தி என்னுள் ஏற்பட்ட பிறகுதான் அதைத்தமிழில் வைக்கிறேன். பொதுவாக ஒவ்வொரு தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கத்துக்கும் குறைந்த பட்சம் 3 ஆங்கில மொழியாக்கங்களையேனும் ஒப்பு நோக்குவது என் வழக்கம். மொழிபெயர்ப்பாளர் பெயர் குறிப்பிடாமல் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம்( Progress publishers, Moscow )வெளியிட்டிருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் ‘அசடன்’ நாவலிலும் இப்போது நான் செய்து வரும் அவரது வேறொரு பெரும் படைப்பிலும் எனக்கு மிகவும் துணையாகவும் புரிதலை எளிமைப்படுத்துவனவாகவும் உள்ளன.


கடைசிக் கேள்வி 
ஒருவேளை ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியை நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால். அந்த சந்திப்பை எப்படி எதிர்கொள்வீர்கள்.?

தமிழ் வாசகர்கள் அவரை எப்படிக்கொண்டாடித்தீர்க்கிறார்கள் என்பதையும் அவரது எழுத்துக்கள் வழி நான் பெற்ற அக அனுபவங்களையும் அவரோடு பகிர்ந்து மகிழ்வேன்.
……………….

1.2.20

தஸ்தயெவ்ஸ்கி - மனங்களின் வித்தகர்

தஸ்தயெவ்ஸ்கி - மனங்களின் வித்தகர்
கனலி [http://kanali.in/] இணைய இதழில் என் கட்டுரை

’’உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவல் டால்ஸ்டாயின்போரும் அமைதியும்என்று கூறப்பட்டாலும் கூட உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவலாசிரியர் யார் என்று கேட்டால் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கிதான் என்று விமர்சகர்கள் சந்தேகத்துக்கிடமின்றிச் சொல்லி விடுவார்கள்’’ என்கிறார் எம்..அப்பாஸ் [என்றென்றும் வாழும் படைப்புகளும்,படைப்பாளர்களும்].

ரஷ்ய சமூகத்தில் 19 ஆம் நூற்றாண்டில் நிலவிய சமூக பொருளாதார ஆன்மீகப் பின்புலச் சூழலை மனதில் கொண்டு மனித மன அமைப்பை, அதன் வினோதங்களைக் கண்டறிய முயன்ற ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி உலக இலக்கியத் தளத்தில் மிகச் சிறந்த ஒரு மனோதத்துவ அறிஞராக விமரிசகர்களால் அங்கீகரிக்கப்பட்டவர். தானும் கூடக் கற்றுக் கொள்வதற்கான உளவியல் செய்திகள் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புக்களில் மட்டுமே இருப்பதாக நீட்ஷே ஒருமுறை குறிப்பிட்டார். மனித மனங்களின் இருள் படர்ந்த மூலைகளை - இண்டு இடுக்குகளைக் கூடத்துழாவி, அங்கே நிறைந்து வழியும் சபலங்களை, சலனங்களை, அன்பை, அளவற்ற மனித நேயத்தை வெளிச்சத்திற்கு இட்டு வந்து மின் வெட்டுப்போல தரிசனப்படுத்தி விடும் அவரது எழுத்தை முழுமையாக வாசிக்கும்போதுதான் நீட்ஷேயின் கூற்றிலுள்ள உண்மை துலங்கும்.

வறுமையிலும் வாழ்க்கைப் போராட்டத்திலும் ஊடாடிய ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் வாழ்வும் கூட அவரது நாவல்களைப் போலவே துயர் கப்பிய, திருப்பங்கள் மலிந்த தருணங்களைக் கொண்டிருப்பதுதான்.

லிதுவேனியாவைச் சேர்ந்த பிரபுக்கள் வம்சத்தில், இராணுவ மருத்துவரின் மகனாக 1821 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி அன்று பிறந்த தஸ்தயெவ்ஸ்கிக்கு - காசநோயாளியான அன்னை, முன் கோபியான தந்தை என அமைந்த குடும்பச் சூழல் காரணமாக இளம் வயதிலேயே ஏழ்மை துன்பம் மரணம் இவற்றோடான பரிச்சயமே வாய்த்தது. இவற்றின் நடுவே அவருக்குக்கிட்டியது, மகிழ்ச்சியும் உற்சாகமும் அற்ற இளமைப் பருவமே. வறுமை, கண்ணீர்,அச்சம் இவற்றில் ஊடாடியபடியே தஸ்தயெவ்ஸ்கியின் வாழ்வு நகர்ந்தது. தந்தையின் கொடூர நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத அவரது சொந்த வேலையாட்களே அவரைக் கொன்றுவிட அன்று முதல் தஸ்தயெவ்ஸ்கியைக் காக்காய் வலிப்பு நோய் தாக்கத் தொடங்கியது. காலம் முழுவதும் அந்த வலிப்பு நோய் அவரை வாட்டியும் வதைத்தும் வந்தது.

.கடனும் வறுமையும், மனைவியின் காச நோயும்,தொடர்ந்து அவளது மரணமும் , சூதாடும் பழக்கமும் அவரை அலைக்கழித்தன.கடன் தொல்லையிலிருந்து காத்துக் கொள்ள அவருக்குக் கிடைத்த ஒரே ஆயுதம் அவரது எழுத்து மட்டுமேகுற்றமும் தண்டனையும் 1866, அசடன் 1868-69, கரமஸோவ் சகோதரர்கள் 1879-80 ஆகிய உலகப் பேரிலக்கியங்களை உருவாக்கக் கடனாலும் சூதாட்டத்தாலும் விளைந்த வாழ்க்கை நெருக்குதல்களும் பணத் தேவையுமே அவருக்குக் களம் அமைத்தன.

‘’கொலைக் குற்றத்திற்காக மரண தண்டனை தருவதென்பது அந்தக் குற்றத்தை விடவும் மோசமானது. சட்டபூர்வமான ஆணையின்படி நடந்தேறும் அந்தக் கொலை..வழிப்பறிக்காரர்களாக் கழுத்தறுபட்டுக் கொல்லப்படுவதையும் விடக் கொடூரமானது... ஒரு வேளை மரண தண்டனை விதிக்கப்பட்டு -தனக்கு மரணம் நெருங்கி விட்டது என்ற மன வேதனை தரும் சித்திரவதைகளையெல்லாம் அனுபவித்தபிறகுநீ இனிமேல் போகலாம்.உன்னை மன்னித்தாயிற்றுஎன்று யாராவது ஒரு மனிதனிடம் சொல்லப்பட்டிருந்தால், அப்படிப்பட்ட ஒரு மனிதன் மட்டும்தான் அவன் அந்தக் கணத்தில் அனுபவித்த வேதனைகளையும் சித்திரவதைகளையும் விரிவாகச் சொல்ல முடியும்’’
என்று தன் பாத்திரத்தின் வழியே வாக்குமூலம் தரும் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி மரணத்தின் வாயிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிப் பிழைத்த இருபது அரசியல் கைதிகளில் ஒருவர். 

1849 ஆம் ஆண்டு,டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி; நேரம் அதிகாலை. இருபது அரசியல் கைதிகள் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள ஸெமனோவ் சதுக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த தூக்கு மரங்களைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தனர்.அவர்களில் முதல் மூன்று பேரின் கண்களைக் கறுப்புத் துணியால் கட்டித் தூக்கு மேடையில் நிறுத்திச் சுற்றிலும் துப்பாக்கி வீரர்கள் சுடுவதற்குத் தயாராக நின்றனர்..அந்த பயங்கரமான காட்சியைப் பிற பதினேழு கைதிகளும் குலைநடுங்கப் பார்த்தபடி இருந்தனர்.அடுத்து வரவிருப்பது அவர்களின் முறை.

’’சுடுங்கள்’’என ஓர் அதிகாரி ஆணையிட வாய் திறந்த மிகச் சரியான அந்தத் தருணத்தில்,மற்றுமொரு அதிகாரி வெள்ளை நிறக் கைக்குட்டை ஒன்றை வெள்ளைக் கொடி போல ஆட்டிக் கொண்டே அங்கே ஓடோடி வந்தார். ரஷியச் சக்கரவர்த்தியான முதலாம் நிக்கலஸ் அந்த மரண தண்டனையை ரத்து செய்து சிறைத் தண்டனையாக மாற்றி விட்ட மகிழ்ச்சியான செய்தியைச் சுமந்தபடி வந்திருந்தார் அவர்...

மரண.தண்டனை நிறைவேற்றத்தின் கடைசிக் கணத்தில் அதிலிருந்து விடுவிக்கப்பட்ட தஸ்தயெவ்ஸ்கிகை விலங்குடன் சைபீரியப்பனிச்சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் இலக்கியப் படைப்பில் சற்றுத் தேக்கம் ஏற்பட்டாலும் அவரது மனம் உறுதி பெற்றது அப்போதுதான். பிராயச்சித்தம்,பாவம்,தவறு,மன்னிப்பு முதலிய மனிதாபிமானப் பண்புகள் அவரது உள்ளத்தில் மேலோங்கி எழுச்சி பெற்றது அந்தக் காலகட்டத்திலேதான். 

ஒரு சமூகப் போராளி போராட்டத்தைத் தன் ஆயுதமாக முன்னெடுக்கிறான். ஓர் எழுத்தாளனுக்கு அவனது எழுதுகோலே ஆயுதமாகிறது. மரணத்தின் விளிம்பைத் தான் எதிர்கொண்ட அந்தத் தருணத்தில் தன்னுள் ஓடிய உணர்வுகள்..எண்ண ஓட்டங்கள் ஆகியவற்றைத் தனது இடியட்/அசடன் நாவலில் இளவரசன் மிஷ்கினின் கூற்றாகப் பல இடங்களில் இடம்பெறச் செய்தபடி, தானே அனுபவிக்க நேர்ந்த கோரமான அந்த நிகழ்வைத் தன் படைப்புக்களில் முன் வைத்து-தார்மீக அறத்துடன்,சமூகப் பொறுப்புணர்வுடன் மரண தண்டனை மீதான தனது கடுமையான பார்வையைப் பதிவு செய்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி 

அசடன் நாவலில் தான் சந்தித்த மரண தண்டனை பெற்ற மனிதனைப் பற்றி இவ்வாறு விவரித்துக்கொண்டு போகிறான் மிஷ்கின்.
.
’’அந்த மனிதன் ஒரு முறை வேறு சிலருடன் சேர்த்துத் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டான். அவன் மீது குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனைக்கான தீர்ப்பும் வாசிக்கப்பட்டு விட்டது. தண்டனை நிறைவேற்றத்துக்காக அவர்கள் காத்து நின்ற இருபது நிமிடங்கள் கழிந்த பின் அவர்களுக்கு மரணதண்டனையை நிறுத்தி வைக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டு வேறொரு தண்டனை விதிக்கப்பட்டது.

மரணத்திலிருந்து அவர்கள் தப்பினாலும்....அந்த இரண்டு உத்தரவுகளுக்கும் இடைப்பட்ட நேரமான அந்த 20 நிமிட்ங்கள் எப்படிக் கழிந்திருக்கும்...?
இன்னும் ஒரு சில நிமிடங்களில் தான் இறக்கப்போவது உறுதி என்ற திகிலான நினைப்பில் மட்டுமே அந்த மணித்துளி கடந்திருக்குமல்லவா...?

அவன் உயிரோடு வாழ்வதற்குக் கிடைத்த 5 நிமிடங்களும் முடிவற்று நீண்டு கொண்டே போவதைப் போல அவனுக்குத் தோன்றியது...தனக்கு முன் பாக்கியிருந்த அந்த ஐந்து நிமிடங்களை அவன் மிகச் சரிவரப் பங்கிட்டுக் கொண்டான்.
தன் சக தோழர்களிடமிருந்து விடைபெற 2 நிமிடங்கள்......
தனது கடைசித் தருணத்தில் நினைத்துப் பார்ப்பதற்காக 2 நிமிடங்கள்.......
தன்னைச் சுற்றி இருப்பவைகளை இறுதியாகப் பார்ப்பதற்காக 1 நிமிடம்.......

இவற்றுள் தனக்குத்தானே சிந்தித்துக் கொள்வதற்காக ஒதுக்கியிருந்த 2 நிமிடங்களில் தான் சிந்திக்கப் போவது எதைப் பற்றி என்று கூட அவன் முன்னரே அறிந்து வைத்திருந்தான். இதோ..இப்போது அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்...ஆனால் இன்னும் மூன்றே நிமிடங்களில் அவன் வேறு ஏதோ ஒன்றாக வேறு என்னவோ ஒன்றாக மாறி விடப் போகிறான். அதையெல்லாம் தெளிவாய்த் தெரிந்து கொண்டு விட வேண்டுமென அவன் நினைத்தான்.

அங்கிருந்து சிறிதுதொலைவில் ஒரு மாதா கோவில் இருந்தது. பிரகாசமான சூரிய ஒளியில் மாதா கோவிலின் மெருகிட்ட பொற்கூரை ஜ்லித்துக் கொண்டிருந்தது. அந்தக் கூரையையும் அதன் வெளிச்சத்தையும் தான் தொடர்ந்து வெறித்துக் கொண்டிருந்தது அவனுக்கு நினைவிருக்கிறது. அந்த ஒளிக் கற்றைகளோடு இன்னும் மூன்று நிமிடங்களில் தான் ஒன்றிக் கலந்து விடப் போவது போலவும் அவனுக்குத் தோன்றியது.. நிச்சயமில்லாத அந்தக் கணம் அவனுக்கு மிகவும் வெறுப்பூட்டுவதாகவும்,கொடூரமானதாகவும் இருந்தது. இப்படிப்பட்ட தொடர்ச்சியான சிந்தனைகள் அவனை மிக அதிகமாக மிரட்டியபடி மூர்க்கமான ஒரு ஆவேசத்தைத் தன்னில் கிளர்த்தி விட...இறுதியில் ஒரு கட்டத்தில் தன்னைச் சீக்கிரமாகச் சுட்டு விட்டால் போதும் என்று அவன் ஏங்கத் தொடங்கி விட்டான்..’’

ஓவியம் வரைவதில் ஆர்வம் கொண்டிருக்கும் இபான்சின் குடும்பத்துப் பெண் ஒருத்தி மிஷ்கினிடம் அதற்கான கருப் பொருள் ஒன்றைக் கூறுமாறு கேட்க, அப்போதும் அவன் மனத்தில் எழுவது மரணதண்டனைக் காட்சிதான்...

‘’தூக்கு மேடையில் நின்று கொண்டிருக்கும் சபிக்கப்பட்ட அந்த மனிதனின் முகத்தை நீங்கள் வரைய வேண்டும்...அவன் அந்த மேடையில் நின்று கொண்டிருக்கும்போது -பலகையில் அவன் கிடத்தப்படுவதற்கு முன் அவன் நின்று கொண்டிருக்கும் அந்தக் குறிப்பிட்ட தருணத்தில் காணும் அவன் முகத்தை நீங்கள் ஓவியமாகத் தீட்ட வேண்டும்தூக்கு மேடைக்கு ஏறிச் செல்லும் படிக்கட்டின் கடைசிப்படி தெளிவாகத் தெரியும் வண்ணம் ஓவியத்தை வரைய வேண்டும்.குற்றவாளி அப்போதுதான் அதில் கால் வைத்திருக்க வேண்டும். அவனது முகம் வெளிறிப் போயிருக்க வேண்டும்..பாதிரியார் சிலுவையைப் படித்தபடி இருக்க அந்த மனிதன் பேராசையோடு தன் நீலம் பாரித்த உதடுகளை அதில் அழுத்தமாகப் பதித்தபடி, எல்லோரையும் பார்த்துக் கொண்டும் நடப்பது எல்லாவற்றையும் உணர்ந்து கொண்டும் இருப்பவனைப் போல காட்சியளிக்க வேண்டும். சிலுவையும் அந்த முகமும் -இவைதான் அந்தப் படமாக இருக்க வேண்டும். பாதிரியாரின் முகம்,பிற 2 பணியாட்கள்,இன்னும் சில தலைகள் கீழே இருந்து பார்த்துக் கொண்டிருக்கும் கண்கள் முதலானவை அரை வெளிச்சத்தோடும் அந்த நிகழ்ச்சிக்கு ஒரு பின்னணி போலவும் மட்டுமே தீட்டப்பட வேண்டும்..ஆம்..அப்படித்தான் அந்த ஓவியம் இருக்க வேண்டும்’’
என்று கூறியபடி மரண தண்டனைக்கு இட்டுச் செல்லப்படும் அந்தக் காட்சியை விவரிக்கிறான் மிஷ்கின்.

’’மனிதச் செயல்பாட்டுக்கான காரணங்கள் இன்னதுதான் என்று கூறிவிட முடியாத அளவுக்குச் சிண்டும் சிடுக்குமானவை; மிகவும் சிக்கலானவையும் வெவ்வேறு வகைப்பட்டவைகளுமான அவை, நாம் தரும் விளக்கங்களுக்குள் எளிதாக அடங்கக் கூடியவை அல்ல. அவற்றை மிகத் தெளிவாக வரையறுத்துச் சொல்வது கடினம்’’ என்று கூறும் தஸ்தயெவ்ஸ்கியின் பாத்திரங்கள், நன்மை / தீமை என்று வரையறுக்கப்பட்ட இருமைகளுக்குள் ஒருபோதும் அடங்காதவை.

தஸ்தயெவ்ஸ்கியின் கண்களுக்கு முழுமையான நல்லவர் என்றோ,முழுமையான தீயவர் என்றோ எவருமில்லை. காமுகனாகச் சித்தரிக்கப்படும் ஸ்விட்ரிகைலோவிடமும் கூட மர்மேலோதோவின் அநாதரவான குழந்தைகளின் பால் அன்பு சுரக்கிறது. கண்டிப்பாகச் செயல்பட வேண்டிய நிலையிலிருக்கும் நீதிபதி போர்ஃபிரி பெத்ரோவிச்சிடமும் கூட ரஸ்கொல்நிகோவ் மீதுதோழமை ஜனிக்கிறது. ரஸ்கொல்நிகோவ் , ரசுமிகின் ஆகிய அறிவுஜீவிகளின் உரையாடல் படம் பிடிக்கப்பட்டிருப்பதில் வியப்பில்லை. ஆயின் அதற்கு நேர் மாறான தளத்தில் வீடே உலகமென வாழும் பல்கேரியா அலெக்ஸேண்ட்ரோவ்னா, கத்தரீனா இவாநோவ்நா ஆகிய பெண்களின் மன உணர்வுகளையும் துல்லியமாகச் சித்தரிப்பதிலேயே   படைப்பாளியின் மீது வியப்பு விளைகிறது

அசடன் நாவலில் இளவரசன் மிஷ்கினின் பாத்திரத்தை  கபடுகளும் சூதுவாதுகளும் வன்மங்களும் வஞ்சனை எண்ணங்களும் கிஞ்சித்தும் தலை காட்டாத ஒரு பாத்திரமாக..அப்போதுதான் மண்ணில் ஜனித்த ஒரு குழந்தையைப் போன்ற பரிசுத்தத்துடன் மட்டுமேமிகப் பெரிய இந்த ஆக்கத்தின் எல்லாக் கட்டங்களிலும் காட்ட முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி. .பிறரைப் பற்றிய தவறான எண்ணம் தற்செயலாக மனதில் தோன்றும் தருணங்களிலும் - அந்த எண்ணம் அல்லது கணிப்பு உண்மையாகவே இருந்தாலும் கூட- அப்படி நினைத்து விட்டதற்காகவே தன்னைத் தானே கடிந்து கொள்ளும் ஓர் உன்னத மாமனிதன் மிஷ்கின். பிறர் துயர் கண்டு இரங்கி நெகிழ்வதோடு நின்று விடாமல், அந்தத் துயர் தீர்க்கத் தன்னையே ஒப்புக் கொடுத்துக் களபலியாக்கத் துணியும் உள்ளம் மிஷ்கினைப் போல அத்தனை எளிதாக எவருக்கும் வாய்த்து விடுவதில்லை. தன்னை வேடிக்கைப் பொருளாக்கி அலைக்கழிக்கும் பெண்களாகட்டும்..வன்மத்தோடும்,பொருளாசையால் தூண்டப்பட்ட சுரண்டல் விருப்பங்களோடும்,கொலை வெறியோடும் தன்னை அணுகும் மனிதர்களாகட்டும்..இவர்களில் எவருமே எப்போதுமே அவனது வெறுப்புக்கும் கசப்புக்கும் உரியவர்களாவதில்லை; மாறாக அவர்களின் நிலை கண்டே அவன் கசிந்து உருகுகிறான்; அவர்களது எதிர்காலம் குறித்தே அவன் கவலை கொள்கிறான்
''எனக்கு இருபத்தேழு வயதாகிறது..
ஆனாலும் கூட நான் ஒரு குழந்தையைப் போலத்தான் இருக்கிறேன்...
என்னுடைய பாவனைகள் எல்லாமே...எப்போதுமே இடத்துக்குப் பொருத்தமற்றவையாகவே இருக்கின்றன.
நான் சொல்ல நினைத்த கருத்துக்கு எதிரான கருத்தையே அவை வெளிப்படுத்தி விடுகின்றன.
அதனாலேயே நகைப்புக்கு இடமாகி நான் சொல்ல வந்த கருத்துக்களைத் தரம் தாழ்த்தியும் விடுகின்றன..
எதை..எப்படி..எந்த அளவுக்குச் சொல்வது என்ற அறிவு என்னிடம் சுத்தமாகவே இல்லை.அதுதான் முக்கியமான விஷயம்..! ’
என்றபடி தன் நடத்தை மீதான ஒப்புதல் வாக்கு மூலத்தை அவனே அளித்தபோதும்ஒரு புறம் அவனை அசடனாக்கிப் பரிகசிக்கும் உலகம் அவன் ஒரு தூய ஆன்மா என்பதை மட்டும் மறுதலிப்பதே இல்லை.

ஆளுக்கொரு புறமாக அவனை அலைக்கழித்து ஆட்டிப் படைக்கும் இரு பெண்பாத்திரங்களுமே அவனது இதயத்தின் பரிசுத்தத்தை வியக்கிறார்கள்.
அன்பான நல்லிதயம் படைத்த நேர்மையான வெகுளித்தனம் கொண்ட ஒரு மனிதனாக அவனைக் காணும் நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னா,பலதரப்பட்ட ஆண்களின் வஞ்சகங்களுக்கு ஆளாகி வாழ்வில் நொந்து போனவள்.மிஷ்கினின் தன்னலம் துறந்த அன்பும் காருண்யமும் அவளுக்கு வியப்பூட்ட,‘’என் வாழ்க்கையில் சந்தித்த முதல் மனிதர் நீங்கள்தான்!’’
என்கிறாள் .

மிஷ்கினின் வாழ்வில் குறுக்கிட்டுக் குறும்பு செய்யும் இன்னொரு பெண்ணான அக்லேயா இவானோவ்னா,
’’உங்களுடைய சுண்டுவிரல் அளவுக்குக் கூடத் தகுதியானவர்கள் இங்கே இல்லை.உங்களுடைய மனம்,உங்களுடைய இதயம் ஆகியவற்றுக்கு ஈடு கொடுக்கும் இணையான தகுதி படைத்தவர்கள் இங்கே யாருமே இல்லை.
என்று அவனுக்கு நற்சான்று வழங்குகிறாள்
அவனுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருக்கும் கன்யா,ரோகோஸின் போன்றவர்களும் கூட அவன் தூயவன் என்னும் உண்மையை ஆமோதிக்கவும் அங்கீகரிக்கவும் தயங்குவதில்லை என்பதிலேயே இந்த நாவலின் அழகு பொதிந்திருக்கிறது.

குறைகளும்,தன்னலமும்,வஞ்சக மாசுகளும் மண்டிக் கிடக்கும் மானுடர்களுக்கு நடுவே தான் காண விரும்பிய நவீன ஏசுவின் வடிவமாகவே அசடனாகிய மிஷ்கினின் பாத்திரத்தை தஸ்தயெவ்ஸ்கி சித்தரித்திருக்கிறார் என்று மேலைநாட்டு இலக்கியவிமர்சகர்கள் கூறுவதற்கான ஆதாரங்களை நாவல் ஓட்டத்தின் பல கட்டங்களில் காண முடிந்தாலும் அதன் உச்சமாக அமைவது நஸ்டாஸ்யா கொலைப்பட்டுக் கிடக்கும் இறுதிக் கட்டம்.
நாவல் முழுவதும் யார் மீது செலுத்திய கருணைக்காகத் தன் காதலையும் வாழ்வையுமே கூடத் தொலைத்துக் கொண்டானோ அந்த நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னா,ரோகோஸினால் கொலையுண்டு கிடக்கிறாள்.ஏதோ ஒரு பொறாமை உணர்ச்சியின் மூர்க்கமான ஆவேசத்தால் அவளைக் கத்தியால் குத்திச் சாகடித்த ரோகோஸின் ஜுர வேகத்தில் சித்தப் பிரமை பிடித்தவனைப் போல இருக்கிறான். இது இப்படித்தான் நடக்கப் போகிறது என்பதை வழக்கமான தன் உள்ளுணர்வின் தூண்டுதலால் ஓரளவு ஊகிக்க முடிந்து விட்டிருந்தபோதும் அந்த எழில் வடிவம்...வாழ்வில் நிம்மதி என்பதையே சற்றும் நுகர்ந்திராத பாவப்பட்ட அந்தப் பெண் அவ்வாறு இறந்து கிடப்பது அவனுள் பெரும் துயரத்தைக் கிளர்த்துகிறது.
’’நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னாவின் அருகில் அவளையே பார்த்தபடி உட்கார்ந்திருந்தான் மிஷ்கின்; அவளை ஒரு குழந்தையைப் போலக் கருதிக் கொண்டு அவள் தலையைத் தட்டிக் கொடுத்துக் கொண்டும்,அவள் கன்னங்களைத் தன் கைகளால் வருடிக் கொடுத்தும் அவளை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான் அவன்அவள் மீது அவன் காட்டிய நேசத்தில் மென்மையான பரிவுணர்ச்சியும் கூட ஓடிக் கொண்டிருந்தது.சுயமாக நகர்ந்து செல்ல முடியாத நோயுற்ற சந்தோஷமற்ற ஒரு குழந்தையின் பால் காட்டும் பரிவைப் போன்றதே அது.ஆனால் அவள் மீதான அந்த உணர்வை ஒருபோதும் எவரிடமும் விளக்கிக் கூற அவன் முற்படவே இல்லை’’என்கிறது நாவல்...

அசடன் நாவலின் நாயகன் மிஷ்கின் குறிப்பிட்ட ஒரு வகைப்பாட்டைச் சேர்ந்தவன் என்றால் சாகசச்செயல் புரியும் நெப்போலியனைப்போல தன்னை பாவித்துக்கொண்டு முற்போக்குக் கட்டுரைகள் எழுதி வந்ததோடு நிறுத்திக்கொள்ளாமல், பேனை நசுக்குவது போல வட்டிக்கடைக்கிழவியைக் கொலை செய்ய வேண்டுமென்று கிளம்பிப்போய் சூழ்நிலை காஎரணத்தால் இரட்டைக் கொலைகள் செய்ய நேர்ந்து…..அங்கிருந்து திருடிய பணத்தையும் பயன்படுத்திக்கொள்ள மனம் வராத ’குற்றமும் தண்டனையும்’ நாவலின் ரஸ்கோல்நிகோவ் இன்னொரு வகைப்பாட்டைச் சேர்ந்தவன். 

அவன் செய்த குற்றங்களுக்கு எவ்வகை சாட்சியமே இல்லாமல் போனாலும்…. 
‘’பண்டைக்காலத்திலிருந்து தொடங்கி லிகர்ஸ், ஸோலான்.முகமது, நெப்போலியன் என்று ஒருவர் பாக்கியில்லாமல் எல்லோருமே விதிகளை மீறியவர்கள்தான். ஏன் தெரியுமா இவர்கள் ஒரு விதியையோ  நெறிமுறையையோ புதிதாக உருவாக்கும்போது அதன் வழியாகத் தங்களையும் அறியாமல் காலங்காலமாகத் தங்கள் முன்னோரிடமிருந்து தாங்கள் பெற்றுக்கொண்டவைகளை..இதுவரை புனிதமாகப் போற்றப்பட்டு வந்தவைகளை உடைத்து நொறுக்கி விடுகிறார்கள். அப்படிச் செய்யும்போது ரத்தக்களரி உண்டாக்குவதற்கும் அவர்கள் தயங்குவதில்லை என்பது உண்மைதான்..ஆனால்..அப்படிப்பட்ட ரத்தக்களரிகள்தான் நன்மை தருபவை என்று அவர்கள் நினைக்கிறார்கள்,அவ்வளவுதான்..’’ என்ற உறுதியான நிலைப்பாடு கொண்டவனாய் அவன் இருந்தபோதும்  
அவனது குற்றமே தண்டனையாக மாறி அவனை வதை செய்து அமைதியிழக்க வைக்கிறது… ஊசலாட்ட மனநிலையிலேயே இருக்கும் அவன் இறுதியில் ஒரு கட்டத்தில் தன் அன்புக்குரிய சோனியாவின் ஆணையால் குற்றத்தை ஒத்துக்கொண்டு சரணடைந்தாலும் சைபீரியாவில் இருக்கும்போதும் கூடத் தான் செய்தது குற்றமில்லை என்னும் இரட்டை மனநிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறான்.
‘’வெளித் தோற்றத்திற்கு அவன் தன்னை கடுமையாக தண்டித்துக்கொண்டிருப்பதைப்போல் தோன்றினாலும் கூட அவனது அந்தராத்மாவின் குரல் வேறாகத்தான் இருந்தது…ஆமாம் உண்மையில் இப்போதும் கூட அவன் தன் செயலைக்குற்றம் என்றே ஒப்புக்கொள்ளவுமில்லை, அதற்காக வருந்தவும் இல்லை…ஏதோ ஒரு வகையில் மன அமைதியைத் தேடிக்கொள்ள வேண்டுமென்பதற்காக..அபத்தமான அந்த விதியின் கட்டளையால் இந்தச்செயலைக் குற்றம் என்று ஏற்றுக்கொண்டு அதற்கு முன்னால் தன்னைத் தாழ்த்திக்கொண்டு விட்டதைப்போலவே அவனுக்குத் தோன்றியது’’
என்கிறது நாவலின் முடிவுப்பகுதி.

’’தனிப்பட்ட குணாதிசயங்கள் கொண்ட பாத்திரங்களால் மட்டுமே ஒரு நாவலை நிரப்புவதோ அல்லது அந்தக் கதையைச் சுவாரசியமாக ஆக்குவதற்காகவே வினோதமான நம்ப முடியாத பாத்திரங்களை அதிகமாகச் சித்தரித்துக் கொண்டிருப்பதோ அந்தப் படைப்பை மேலும் கூட நம்ப முடியாததாகவும் சுவையற்றதாகவும் ஆக்கி விடும்’’ 
என்ற எண்ணம் கொண்டவரான தஸ்தயெவ்ஸ்கி
ரஸ்கோல்நிகோவ், மிஷ்கின் போன்ற முதன்மைப்பாத்திரங்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தியதோடு 
’’சராசரி மனிதர்களிடமிருந்தும் கூடச் சுவையான சாரமுள்ள தன்மைகளை ஒரு படைப்பாளி தேடிக் கண்டடைய வேண்டும்’’ என்று முனைப்புக் காட்டியவர்..

இரட்டையர் [THE DOUBLE] குறுநாவலின் மையப்பாத்திரமான யாகோவ் பெத்ரோவிச் கோலியாட்கின்,மிகச்சாதாரண மட்டத்தில் ஓர் அரசு அலுவலக குமாஸ்தாவாகப் பணி புரிபவர்; தனக்கென எந்தத் தனி அடையாளமும்அற்ற சராசரிகளில் ஒருவர்சமூக வாழ்க்கையிலோ,காதலிலோ,அலுவல் களத்திலோ சொல்லிக்கொள்ளக் கூடிய அளவுக்கு எதையுமே சாதித்திராதவர்தன்நிழலை ஒத்த இரட்டை மனிதன் ஒருவனை அவர் எதிர்ப்படுவதும் அதைத் தொடர்ந்த சம்பவங்களுமே அந்தக் 
குறுநாவலின் உள்ளடக்கம்.

''இரண்டும் இரண்டும் நான்கு என்று கணக்குப்போட்டு வாழ்வது ஒரு வாழ்க்கை ஆகாது. இரண்டும் இரண்டும் நான்கு என்பதைப் போன்ற கணிதவிதிக்கும், அட்டவணைகளுக்கும் உட்பட்டதாக ஒரு சுயவிருப்பம் எப்படித்தான் எஞ்சி இருக்க முடியும்? இரண்டும் இரண்டும் நான்கு என்று போடும் கணக்கையெல்லாம் விட – அளவிட முடியாதபடி உயர்வானது தன்னுணர்வு…’’
என்று ஓரிடத்திலும்..
’’ஒருமனிதன் முழுமையான தன்னுணர்வுடன் இருப்பதும் கூட ஒரு நோய்தான்.. சுற்றியுள்ள மனிதர்கள் எல்லாரையும் விட நான் அறிவாளியாக இருப்பதுதான் என் முதல் குற்றம். என் வாழ்நாள் முழுவதும் பிறரிடமிருந்து என் பார்வையை அகற்றியே வைத்திருப்பவன் நான்; மனிதர்களை முகத்துக்கு முகம் நேரடியாகப் பார்ப்பதென்பது என்னால் ஒருபோதும்முடியாது’’
என்று பிறிதோரிடத்திலுமாக - எதிரும் புதிருமான தர்க்கங்களில் சஞ்சரித்தபடி- தன்னைத்தானே முரணிக்கொண்டும்,பழித்துக்கொண்டும்,சுய பலங்கள்-பலவீனங்கள் சார்ந்த உள்ளுணர்வைத் தட்டி எழுப்பிக்கொண்டு ஓயாமல் உள்ளுலைந்து கொண்டிருக்கும் மனிதமன விசித்திரங்களை ஒரு தனிமனிதமனச்சான்றின் குரலாக்கி வாசகப் பார்வைக்கு அப்பட்டமாக முன்னிறுத்தியிருக்கும் நிலவறைக்குறிப்புக்களின் [Notes from Underground] நாயகனும் பெயரே சுட்டப்படாத ஒரு சராசரி மனிதனே....
’’நம்மைக் கடந்து போகும் ஒரு சாதனை மனிதனை..வேறுபட்ட ஒரு ஆளுமையைக் கவனிப்பது போல அன்றாட வாழ்வில் நாம் எதிர்ப்பட நேரும் ஆயிரக்கணக்கான சராசரி மனிதர்களின் மீது நம் பார்வை குவிவதில்லை; அவர்களைப் பொருட்படுத்தாதபடி பெரும்பாலும் புறந்தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறோம் நாம். ஆனால் படைப்பாளிகளின் பார்வை, கவனம், அவதானிப்பு அவர்களின் மீதும் மையம் கொள்வதே ஒரு படைப்பை நம்பகத்தன்மையுடையதாக்கும். மனிதர்களின் அன்றாட நடப்பியல் செயல்பாடுகளில் ஒவ்வொரு கணமும் மிகவும் முக்கியமான மிகவும் அவசியமான கண்ணிகளாக விளங்கி அவறை ஒருங்கிணைத்துக் கொண்டிருப்பவர்கள் சராசரி மனிதர்கள்தான்...அவர்களை ஒட்டுமொத்தமாக விட்டு விட்டால் கதை தன் நம்பகத் தன்மையை இழந்து விட நேரிடும்’’ என்று தானே குறிப்பிடும் அத்தகைய  எச்சரிக்கை உணர்வோடு செயல்பட்டதாலேயே அவரது எழுத்து, அன்றாட வாழ்வில் காணும் வெகு சாமானிய சராசரி மக்களையும் நாவல் நாயகர்களாக முன்னிறுத்தியிருக்கிறது.

பெண் பாத்திரங்களைப் பொறுத்த வரை, தனது நாவல்களில் வரும் பெண்கள் - அவர்கள் காதல் வயப்பட்டிருப்பவர்களானாலும்,விலைமகளிராக ஆக நேர்ந்தவர்களாயினும்அந்தக் குறிப்பிட்ட சூழல்களை விரிவாக வருணிக்க கதைக்களமே இடம் அமைத்துத் தந்தாலும் - அந்த இடங்களிலும் கூடப் பெண் என்பவளை தஸ்தயெவ்ஸ்கி ஒரு சக உயிரியாக..ஒரு மானிட ஜீவனாக மட்டும்தான் அணுகியிருக்கிறாரே தவிர ஒரு சதைப்பிண்டமாக- நுகர்பொருளாக்கிக் கீழ்மைப்படுத்தியதில்லை; அதற்கு அவரது எழுதுகோல் ஒருநாளும் துணிந்ததில்லை. குற்றமும் தண்டனையும் நாவலில் மஞ்சள் சீட்டுடன் சஞ்சரிக்கும் சோனியா, உலகமே வேசியெனத் தூற்றும் நஸ்டாஸியா ஃபிலிப்போவ்னா (அசடன்) போன்ற பெண்களைக் கூட உரிய மானுட மதிப்புடன் மட்டுமே அவர் சித்திரித்திருக்கிறார்
‘’நான்கு வீதிகளும் சந்திக்கும் அந்தச்சதுக்கத்துக்கு உடனே செல்லுங்கள்,நாற்சந்தியிலே சதுக்கத்தின் நடுவிலே போய் நில்லுங்கள், மனிதர்களுக்கு முன்னால் மண்டியிடுங்கள், மண்ணைக் களங்கப்படுத்தி விட்ட நீங்கள் அதை முத்தமிடுங்கள். இந்த உலகம் முழுவதும் கேட்கும் வண்ணம் நான் ஒரு கொலைகாரன், நான் ஒரு கொலைகாரன் என்று உரக்கச் சொல்லுங்கள்’’
என்று ரஸ்கோல்நிகோவின் மனச்சான்றுக்கு அறைகூவல் விட்டபடி அவனது மனப்போக்கில் மிகப்பெரிய மாற்றத்தைக்கொண்டு வருபவள் 
குற்றமும் தண்டனையும் நாவலில் விலைமகளாக வரும் சோனியாவே 
அசடன் நாவலில் மிஷ்கினின் வாழ்க்கைப் போக்கையே மாற்றும் இரு பெண்களில் அக்லேயா, அவனது காதலுக்கு உரியவள்; மற்றொருத்தியான 
நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னா அவனது கருணைக்குப் பாத்திரமானவள்.
தாய் தந்தையரை இழந்த அனாதைப் பெண்ணாக டாட்ஸ்கி என்ற பணக்கார மனிதன் ஒருவனின் பராமரிப்பிலும்,பாதுகாவலிலும் வளர்ந்து அவனுக்குச் சில காலம் ஆசை நாயகியாகவும் வாழ நேரிட்டதை நினைந்து நினைத்தே கழிவிரக்கம் கொண்டவளாக மாறிப்போனவள்; முறையான திருமண வாழ்விற்கான தாபமும் ஏக்கமும் கொண்டிருந்தபோதும் - அதற்குத் தகுதியற்றவளாய்த் தன்னைக் கருதியபடி ஒவ்வொரு முறையும் மண மேடை வரை வந்து விட்டு ஓடிப் போகும் பாத்திரமான , நஸ்டாஸ்யா, ஜெயகாந்தனின் கங்காவை (சில நேரங்களில் சில மனிதர்கள்) நமக்குச் சில வேளைகளில் நினைவூட்டியபோதும் கங்காவிடம் இல்லாத சில இயல்புகளையும் கொண்டிருக்கிறாள். குறிப்பாகத் தன்னைப் பற்றிய ஒரு பெருமித உண்ர்வு அல்லது தன்முனைப்பு ஒருபுறமும்,தன்னைப் பற்றிய கீழ்மை உணர்வு மறு புறமுமாக அவளை அலைக்கழித்து ஆட்டி வைக்கின்றன.

சந்தர்ப்ப வசத்தாலும் மிகத் தீயவனான ஒருவனின் நடத்தையாலுமே தன் ஒழுக்கநெறி சீர்குலைந்து போயிருக்கிறது என்பதையும் அதில் தன் தவறு ஏதுமில்லை என்பதையும் அவள் உணர்ந்தே இருக்கிறாள்; என்றாலும் முறையான ஒரு வாழ்வைக் கைக்கொள்ளத் தனக்கு அருகதை இல்லை என்ற எண்ணமும் அதே நேரத்தில் அவளிடம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது.

மிஷ்கின் தன்னை மணக்க முன்வரும்போது 
‘’நான் ஒரு வெட்கம் கெட்ட முரட்டுப் பெண். டாட்ஸ்கியின் வைப்பாட்டியாக இருந்திருப்பவள்.இளவரசே! இந்த   நஸ்டாஸ்யாவுக்குப் பதிலாக நீங்கள் அக்லேயா இபான்சினைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும்...என்று அவனது கோரிக்கையை நிராகரிப்பதற்குத் அவளது நெஞ்சுக்குள் நெருடிக் கொண்டிருக்கும் கறை படிந்த இறந்தகாலமே  காரணமாகிறது. அதே வேளையில் அளப்பரிய தன்மான உணர்வு கொண்டவளாகவும் அவள் இருக்கிறாள். பணத்தைக் கொடுத்துத் தன்னை கன்யாவின் தலையில் கட்டத் துடிக்கும் டாட்ஸ்கி, பணத்தால் துரத்தியபடி,  ஏலத்தில் வாங்குவது போலத் தன்னை உடைமையாக்கிக் கொள்ள எண்ணும் ரோகோஸின்-இவ்விருவரின் போக்கும் தனது தன்மதிப்பை ஊறு செய்வதாக எண்ணி அவர்களை அருவருக்கிறாள் அவள். இவ்விருவரின் பிடியிலிருந்தும் தன்னை விடுவிக்க மிஷ்கின் முன் வருகையில் அந்த இரக்கமும் கருணையும் கூடத் தனது தன்மானத்தைக் காயப்படுத்துவதாகவே உணர்ந்து அதனாலேயே அதை ஏற்கவும் மறுக்கிறாள்

‘’கடைசியாக இப்படியும் ஒரு மனிதர்... உங்களைப் போன்ற அன்பான நல்லிதயம் படைத்த நேர்மையான வெகுளித்தனம் ஒரு மனிதரைப் பற்றி நான் எப்போதுமே கற்பனை செய்து கொண்டிருப்பேன். அப்படிப்பட்ட ஒரு மனிதர் என்னிடம் வந்து நீ எந்தத் தவறும் செய்யவில்லை நான் உன்னிடம் அன்பு செலுத்துகிறேன்..உன்னை ஆராதிக்கிறேன் என்றெல்லாம் சொல்லப் போகிறார் என்று என் மூளையே பிசகிப் போகும் அளவுக்குக் கற்பனை செய்து கொண்டே இருப்பேன்’’
என்று அதை வெளிப்படுத்தவும் செய்கிறாள். ஆனாலும் அவனை மணந்து கொள்வதில் அவளுக்கு உள்ளூர ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருப்பதனாலேயே ரோகோஸினுடன் ஓடுவதும், பிறகு சிறிது காலம் மிஷ்கினிடம் மீள்வதுமாய் அவனை அலைக்கழிக்கிறாள்.

’’அவள் என்னிடமிருந்து ஓடிப் போனது ஏன் தெரியுமா....தான் ஒரு இழிந்த பிறவி என்பதை எனக்கு வெளிப்படையாகக் காட்ட வேண்டுமென்பதற்காகத்தான்.அதை என்னிடம் நிரூபித்தாக வேண்டும் என்பதோடு அவளால் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத வேறொரு உள் மனத் தூண்டுதலும் கூட இருந்தது. உள்ளத்தின் ஆழத்தில் இப்படித் தொடர்ச்சியாக அவமானத்தைச் சுமந்து கொண்டே இருப்பதென்பது,அவளைப் பொறுத்த வரையில் இயற்கைக்கு விரோதமான-குரூரமான ஒரு சந்தோஷத்தை அவளுக்கு அளிப்பதாகக் கூட இருக்கலாம்.’’
என்றபடி மிகத் தெளிவாக நஸ்டாஸ்யாவின் இயல்புகளை அவளது நடவடிக்கைக்கான காரணங்களை- பின் புலங்களை 
அவளையும், அவளது மன அமைப்பை மிகச் சரியாகப் புரிந்து வைத்திருந்த ஒரே ஒரு மனிதன் மிஷ்கின் மட்டுமே.

‘’நான் எவ்வளவு கேவலமான விஷயங்களை மிகப் பரந்த அளவுக்குச் சித்தரிக்க எடுத்துக் கொண்டாலும், அதில் பொதிந்துள்ள சிறப்பானதும் உயர்வானதும், வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதுமான ஒரு மகத்தான மனிதப் பண்புக்கு வலுமிக்க அழுத்தம் கொடுத்து வாழ்க்கையின் புகழையே பாடுகிறேன்" என்று ஒரு முறை ஜெயகாந்தன் குறிப்பிட்டார். அது போல - வாழ்க்கையின் இருட்டு மூலைகளில் மண்டிக்கிடக்கும் அழுக்குகள் ஆபாசங்கள்...தனி மனிதக்கோணல்கள், விசித்திரமான பாத்திரங்களின் வித்தியாசமான செயல்பாடுகள் என்று எதை எடுத்துக்கொண்டாலும்- எந்தப்பாணியில் கதை சொல்லலை அமைத்துக்கொண்டாலும் பெண் குறித்த ஆபாச வருணனைகளோ உரையாடல்களோ சொற்பிரயோகங்களோ தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புக்களில் கிஞ்சித்தும் தலை காட்டியதில்லை. பாரதி உட்பட செவ்விலக்கிய கர்த்தாக்கள் பலரும் கைக்கொண்ட சீர்மை அதுரஷிய இலக்கியத்தில் மட்டுமன்றி உலக இலக்கிய மாமேதை உலக இலக்கியத்தின் பக்கங்களிலும் அமரத்துவம் வாய்ந்த வராய்க் கொண்டாடப்படும் தஸ்தயெவ்ஸ்கியிடமிருந்து சமகால இளைஞர்களும் எழுத்தாளர்களும் பெற வேண்டிய முக்கியமான செய்திகளில் இதுவும் ஒன்று.
                

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....