துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
கனலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கனலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

26.3.22

மரேய் என்னும் குடியானவன் - ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி,மொழிபெயர்ப்புச் சிறுகதை

கனலி இணைய இதழ் வெளியிட்ட தஸ்தயெவ்ஸ்கி சிறப்பிதழில் வெளியான என் மொழியாக்கச் சிறுகதை.



Amma

 

                   மரேய்* என்னும் குடியானவன்

                     [The Peasant Marey]

                   ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி

                ஆங்கில வழி தமிழாக்கம்; எம் ஏ சுசீலா

 

   அது ஈஸ்டர் வாரத்தின் இரண்டாம் நாள்; திங்கட்கிழமை. இதமான வெம்மையுடன் கூடிய காற்று, தெளிவான நீல வானம், உச்சி வெயிலின் பளிச்சிடும் ஒளி, இதமளிக்கும் வெப்பம் என்று எல்லாம் இருந்தபோதும் என் ஆன்மா மட்டும் இருளில் மூழ்கிக்கிடந்தது. சிறை வளாகத்துக்குள்,அங்கிருந்த சிறைக்கூடங்களுக்குப் பின்னால் இலக்கற்று வளைய வந்து கொண்டிருந்தேன். சிறையின் உறுதியான தடுப்பு வேலியைப் பார்த்தபடி அதன் முட்கம்பிகளை இயந்திரத்தனமாக எண்ணிக்கொண்டிருந்தேன். அப்படி அதை எண்ண வேண்டும் என்ற குறிப்பான தூண்டுதல் எதுவும் இல்லையென்றாலும் அது ஏனோ என்னிடம் ஒரு வழக்கமாகி விட்டிருந்தது. அன்று ,சிறை விடுமுறைக் காலத்தின் இரண்டாவது தினம். கைதிகள் எந்த வேலைக்காகவும் வெளியே அனுப்பப்படவில்லை; நிறையப்பேர் குடிபோதையில் இருந்தார்கள்;ஒருவரோடொருவர் சண்டை போட்டுக்கொண்டும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும் இருந்தார்கள். சிறையின் பல மூலைகளிலிருந்தும் அந்த சத்தம் எழுந்தபடி இருந்தது. வெறுப்பூட்டும் அருவருக்கத்தக்க பாடல்கள், கல்திண்ணைப்  படுக்கைகளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தபடி சீட்டாடிக்கொண்டிருந்த கைதிகள், மூர்க்கமாக நடந்து கொண்டதால் தங்கள் சக கைதிகளாலேயே பயங்கரமான தாக்குதல்களுக்கும் அடிதடிகளுக்கும் ஆளாகிப் பாதி உயிர் போன நிலையில் ஆட்டுத்தோல் போர்வை போர்த்தியபடி நினைவு திரும்பும் வரை கல்திண்ணைப் படுக்கையில் குற்றுயிராய்ப் படுத்துக்கிடக்கும் சில கைதிகள்..- ஏற்கனவே பல முறை உள்ளே செலுத்தி உருவப்பட்டிருக்கும் கத்திகள்*.  கடந்த இரண்டு நாட்களாக என்னைச் சித்திரவதை செய்து கொண்டிருந்த இவற்றின் பாதிப்பால் நான் கிட்டத்தட்ட நோயுற்றிருந்தேன் என்றே சொல்லலாம். குறிப்பாக இந்த இடத்தில் இந்தக் குடிகாரர்கள் போடும் சத்தத்தையும் ஒழுங்கீனமான அவர்களின் செயல்களையும் அருவருப்பில்லாமல் சகித்துக்கொள்ள என்னால் கொஞ்சமும் முடியவில்லை. அவை எனக்கு வெறுப்பேற்றுவனவாக இருந்தன. இப்படிப்பட்ட நாட்களில் சிறை அதிகாரிகளும் கூட அவர்களை அதிகம் சோதனை போடுவதோ கண்காணிப்பதோ வோட்கா அருந்துகிறார்களா என்பதைக் கண்டுகொள்வதோ இல்லை. ஒதுக்கப்பட்டவர்களான இவர்களை வருடத்தில் ஒரு முறையாவது இப்படிக் களியாட்டம் போட விட வேண்டும் என்பதையும் இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகி விடலாம் என்பதையும் அவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள்.

  திடீரென்று கையாலாகாத ஒரு சினம் குபீரென்று என்னுள் மூண்டெழுந்தது. அரசியல் கைதியும் போலிஷ்நாட்டவருமான மிட்…..ஸ்கி* யை நான் வழியில் எதிர்ப்பட நேர்ந்தது.. இருண்ட பார்வையோடும் கோபம் கனலும் விழிகளோடும் துடிக்கும் உதடுகளோடும் ‘நான் இந்தத் திருட்டுப்பயல்களை வெறுக்கிறேன்’ என்று தணிந்த குரலில் என்னிடம் கிசுகிசுப்பாய்ச் சொன்னபடி கடந்து சென்றார் அவர். நான் சிறைக்குள் திரும்பி வந்தேன். கால் மணி நேரம் முன்புதான் பைத்தியம் பிடித்தது போல அங்கிருந்து வேகமாக வெளியேறி இருந்தேன் நான். அப்போது ஆஜானுபாகுவான ஆறு மனிதர்கள், குடிபோதையில் இருந்த டார்டார்* ஜேஸின்  மீது பாய்ந்து அவனைத் தாறுமாறாக அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தார்கள். காட்டுமிராண்டித்தனமாக அவர்கள் அடித்த அடியில் அங்கே ஓர் ஒட்டகம் இருந்தால் அதற்குக்கூட உயிர் போயிருக்கும், ஆனால் ஹெர்குலிஸ் போல இருந்த அவனைக் கொல்வது அத்தனை சுலபம் இல்லை என்று அவர்களுக்குத் தெரிந்திருந்ததால் எந்தத் தயக்கமும் இல்லாமல் அவனை அடி வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார்கள். இப்போது நான் அறைக்குத் திரும்பி வந்து பார்க்கும்போது மூலையில் இருந்த ஒரு படுக்கையில் மூர்ச்சையாய்க் கிடந்தான் ஜேஸின். அவன் உயிரோடு இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை. அவனது உடல் ஆட்டுத்தோலால் மூடியிருந்தது; அவனைச் சுற்றிலும் பலரும் மௌனமாகப் பலரும் நடமாடிக்கொண்டிருந்தார்கள்; ஒருவேளை மறுநாள் காலையிலேயே அவனுக்கு நினைவு திரும்பி வந்து விடக்கூடும் என்ற உறுதியான நம்பிக்கை அவர்களுக்கு இருந்திருக்கலாம், அல்லது அதிருஷ்டம் அவனுக்கு சாதகமாக இல்லையென்றால் இந்த அளவுக்கு அடி வாங்கியதில் அவன் இறந்தும் போய் விடலாம்.

  நான் இரும்புக்கிராதி போட்ட ஜன்னலுக்கு எதிர்ப்புறம் எனக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த இடத்துக்கு நகர்ந்து சென்று மல்லாந்து படுத்தபடி என் கைகளைத் தலைக்குக் கீழே கோர்த்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டேன். அப்படிப் படுத்திருக்கவே நான் விரும்பினேன்.

  தூங்கிக்கொண்டிருக்கும் மனிதனை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்,மேலும் அப்போது கனவு காணலாம்,சிந்திக்கலாம். ஆனால் எனக்குக் கனவு காண்பது கடினமாக இருந்தது. என் இதயம் அமைதியின்றிப் படபடத்துக்கொண்டிருந்தது. ‘நான் இந்தத் திருட்டுப்பயல்களை வெறுக்கிறேன்’ என்ற மிட்..…..ஸ்கியின் சொற்கள் காதுக்குள் எதிரொலித்துக்கொண்டிருந்தன ஆனால் அதைப்பற்றியெல்லாம் விவரிப்பானேன்? இப்போதும் கூட சில சமயங்களில் அந்த நாட்களைக் குறித்த கனவுகளை நான் கண்டுகொண்டுதான் இருக்கிறேன், இரவு வேளைகளில். நான் காணும் வேறெந்தக் கனவும் அப்படிப்பட்ட தாங்கொணாத துயர் தருவதாய் இருந்ததே இல்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் என் சிறை வாழ்க்கையைப் பற்றி இதுவரை. ஒரே ஒரு முறை தவிர நான் எழுத்தில் பதிவு செய்ததே இல்லை பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய ‘இறந்தவர்களின் வீடு’ [The House of the Dead -1860] என்ற நாவலில் தன் மனைவியைக் கொலை செய்த கற்பனையான ஒரு பாத்திரம் இடம் பெற்றிருந்தது.  என் புத்தகம் வெளிவந்த அன்று முதல் இன்றுவரை மனைவியைக் கொலை செய்த அந்தக் குற்றவாளி நான்தான் என்றும், சைபீரியக்கடுங்காவல் தண்டனையில் நான் அனுப்பப்பட்டது கூட அதற்காகத்தான் என்றும் இன்னும் கூட சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது ஒரு சுவாரசியமான தகவல்.

  படிப்படியாக என் சுற்றுப்புறத்தை மறந்து என் ஞாபங்களுக்குள் மூழ்கிப்போகத் தொடங்கி விட்டேன். நான்காண்டு சிறைவாசத்தில் தொடர்ச்சியாக என் இறந்த காலங்களைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்த நான் அந்த  நினவுகள் வழியாக என் கடந்த காலத்திலேயே வாழத் தொடங்கி விட்டது போலக்கூடத் தோன்றியது. அப்படிப்பட்ட ஞாபகங்கள் தாமாகவே என்னுள் கிளர்ந்தெழும்; நானாக பிரக்ஞைபூர்வமாக அவற்றை எழுப்ப முயன்றதில்லை. ஏதாவது ஒரு புள்ளியில்…, கவனத்திலேயே தங்கியிருக்காத ஏதேனும் ஒரு அற்ப விஷயத்தில் அது தொடங்கும், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அது விரிவடைந்து கொண்டே சென்று தெளிவான முழுமையான ஒரு சித்திரமாகப் புலனாகி விடும். அவற்றை நான் எனக்குள் பல விதமாக அலசிப் பார்ப்பேன், எத்தனையோ காலத்துக்கு முன்பு நிகழ்ந்த ஒரு விஷயத்துக்குப் புதிது புதிதாய் மெருகேற்றிப் பார்ப்பேன்,.

  அதற்கெல்லாம் மேலாக சில சமயம் நான் அவற்றைத் திருத்தவும் கூடச்செய்வேன், சொல்லப்போனால். இடைவிடாமல் திருத்துவேன், அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.

    இப்போது..ஏனோ எந்தக்காரணத்தாலோ நான் ஒன்பது வயதுச் சிறுவனாக இருந்த அந்த பாலிய பருவத்தின் கண்டுகொள்ளாத ஒரு நொடி.., மின்னலடிக்கும் ஒரு கணம் சட்டென்று என் நினைவில் எழுந்தது. முழுக்க முழுக்க மறந்து போய் விட்டதாக நான் நினைத்துக்கொண்டிருந்த ஒரு கணம் அது. ஆனால்..அப்போது அந்த சிறைவாச நாட்களில் – என்றோ.., எந்தக் காலத்திலோ நடந்த என் குழந்தைப்பிராய நினைவுகளை மீட்டெடுத்துப் பார்ப்பதில் எனக்குத் தனிப்பட்ட பிரியம் இருந்தது.

   எங்கள் கிராமத்தின் ஒரு ஆகஸ்ட் மாதத்து நாள் என் நினைவில் எழுந்தது. காற்றும் குளிரும் ஒரு பக்கம் இருந்தாலும் மழை இல்லாத வெளிச்சமான நாள்தான் அது. கோடைகாலம் முடியும் சமயம் நெருங்கிக்கொண்டிருந்தது. சீக்கிரமே நாங்கள் மாஸ்கோ போயாக வேண்டும், சலிப்பூட்டும் ஃபிரெஞ்சுப் பாடங்களுக்குள் குளிர்காலம் முழுவதையும் கழிக்க வேண்டும்.

   எனக்கு கிராமத்தை விட்டுச் செல்ல நேர்வது வருத்தமாக இருந்தது. கதிரடித்துக்கொண்டிருந்த சமநில வயல் பகுதிகளைத் தாண்டி ஒரு பள்ளத்தாக்கிற்குள் இறங்கி சரிவில் இருந்த அடர்த்தியான புதர்கள் வழி மேலேறிச்சென்றேன். பள்ளத்தாக்கின் மறுபகுதியில் அந்தப் புதர்கள் முடியும் இடத்தில் ஒரு குறுங்காடு இருந்தது. காட்டுப்புதர்களுக்கு நடுவே நான் இறங்கியபோது எனக்கு மிக அண்மையில் - முப்பது தப்படியில் ஒரு குடியானவன் சிறிய நிலப்பரப்பொன்றைத் தனியாக உழுது கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.

      செங்குத்தான மலைப்பகுதியில் அவன் உழுது கொண்டிருக்கிறான் என்பதும் அவனது குதிரை அதற்காக மிகவும் கடினமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறது என்பதும் எனக்குப் புரிந்தது. அவ்வப்போது..’’ம்..மேலே போ…! ம்…ம்..மேலே…மேலே..இன்னும் மேலே போ..’’ என்று அதை அவன் தூண்டி விடும் சத்தமும் மிதந்து வந்து என்னை அடைந்தது. கிட்டத்தட்ட எங்கள் குடியானவர்கள் எல்லோரையுமே எனக்குத் தெரியும்; ஆனால் இப்போது இங்கே உழுது கொண்டிருப்பவன் யார் என்று எனக்குத் தெரியவில்லை. மேலும் என்னுடைய வேலைகளில் மும்முரமாக இருந்ததால் அது யார் என்பதைப்பற்றி நான் கவலைப்படவும் இல்லை.’ஹேஸல்நட்’ மரங்களிலிருந்து சின்னச்சின்னக் குச்சிகளை ஒடித்துச் சாட்டையாக்கி அவற்றால் தவளைகளைச் சுண்டி விடுவதில் நான் ஈடுபட்டிருந்தேன். ’ஹேஸல்’ மரத்தின் குச்சிகள் சாட்டைகளாகச் சொடுக்க மிகவும் ஏற்றவை, ஆனால் அவை ’.பிர்ச்’ மரக்குச்சிகளை விட மிகவும் மெலிதானவை என்பதால் எளிதில் உடைந்து போய்விடக்கூடியவைகளாகவும் இருந்தன.

    அங்கே இருந்த வண்டுகளையும் பூச்சிகளையும் ஆர்வமாய்ப் பார்த்தபடி அவற்றையும் நான் சேகரித்துக்கொண்டிருந்தேன். அவைகளில் சில மிக மிக அழகாக இருந்தன. கறுப்பு நிறப்புள்ளிகளோடு சிவப்பு மஞ்சள் நிறங்களில் சுறுசுறு என்று நகரும் சிறிய பச்சோந்திகளையும்,பல்லிகளையும், ஓணான்களையும் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் பாம்புகளுக்கு மட்டும் நான் பயந்தேன். ஆனால் பல்லிகளையும் ஓணான்களையும் விட பாம்புகள் குறைவாகவே இருந்தன. அங்கே காளான்குடைகளும் அதிகம் தென்படவில்லை. காளான் வேண்டுமென்றால் ’பிர்ச்’ மரங்களுக்குப் பக்கத்தில் போக வேண்டும். நான் அங்கே போகலாமென்று நினைத்தேன். காளான்களும் காட்டு ’பெரி’களும் வண்டுகளும் தட்டாம்பூச்சிகளும் பறவைகளும் நிறைந்திருக்க,  முள்ளம்பன்றிகளும் அணில்களும் ஓடிக்கொண்டிருக்கும் காட்டை விட - மக்கிப்போன இலைகளின் வாசம் வீசும் காட்டை விட- இந்த  உலகத்தில் நான் வேறெதையுமே அதிகமாக நேசிக்கவில்லை.

   இதை எழுதிக்கொண்டிருக்கும் இப்போதும் கூட எங்கள் ’பிர்ச்’ மரக்காட்டின் வாசத்தை என்னால் நுகர முடிகிறது. இப்படிப்பட்ட அனுபவங்கள் வாழ்க்கை முழுவதும் உங்களுடனேயே தங்கியிருப்பவை. மரண அமைதி நிலவிய அந்த இடத்தில் திடீரென்று ‘’ஓநாய்..ஓநாய்’’ என்று ஒரு கூச்சல் மிகத் தெளிவாக,துல்லியமாகக்கேட்டது. நானும் பயந்து போய்க் கூச்சலிட்டேன். உச்சபட்சக் குரலில் அலறியபடி குடியானவன் உழுது கொண்டிருந்த பகுதியை நோக்கி வேகமாக ஓடினேன்.

    அங்கே இருந்தது எங்கள் குடியானவன் மரேய். அப்படி ஒரு பெயர் இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது.ஆனால் எல்லோருமே அவனை மரேய் என்றுதான் கூப்பிடுவது வழக்கம்.கிட்டத்தட்ட ஐம்பது வயது நிரம்பிய அந்தக் குடியானவன் நல்ல பருமனும் சராசரிக்கு மேற்பட்ட உயரமும் உடையவன். அடர்த்தியான அவனது செம்பழுப்பு நிறத் தாடியில் ஆங்காங்கே சில நரை முடிகள் தெரிந்தன. எனக்கு அவனைத் தெரிந்திருந்தபோதும் இதுவரை நான் அவனோடு பேசியதே இல்லை.

    என் கூச்சலைக்கேட்டதும் அவன் தன் கிழட்டுக் குதிரையை ஓட்டுவதைக்கூட நிறுத்தி விட்டான். என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முடியாமல் அவனது மரக்கலப்பையை ஒரு கையாலும் மற்றொரு கையால் அவனது சட்டையையும் பிடித்துக்கொண்டபோதுதான் நான் எந்த அளவுக்கு மிரண்டு போயிருக்கிறேன் என்பதை அவன் தெரிந்து கொண்டான்.

‘’அங்கே ஒரு ஓநாய் இருக்கு’’ என்று மூச்சு வாங்கிக்கொண்டே கதறினேன்.

அவன் தலை தன்னிச்சையாக உயர்ந்தது. என்னை நம்புபவன் போல ஒரு கணம் சுற்றுமுற்றும் பார்த்தான்.

‘’ஓநாயா? எங்கே இருக்கு?’’

‘’யாரோ கத்தினாங்க…இப்பதான் ஓநாய் ஓநாய்னு கத்தினாங்க’’ என்றபடி திக்கித் திணறினேன்.

‘’சே சே அதெல்லாம் எதுவுமே இங்கே இல்லை, இதோ பாரு குட்டிப்பையா…, என்னைக் கொஞ்சம் பாரேன்…இங்கே அந்தமாதிரி  ஓநாயெல்லாம் ஏதும் இல்லை,சரியா’’ என்று மெள்ளச் சொல்லியபடி என்னை அமைதிப்படுத்த முயன்றான். ‘’நீ ஏதோ கனவு கண்டிருக்கே பையா, இங்கே ஓநாய் இருக்குன்னு  யாருமே கேள்விப்பட்டதில்லை’’

ஆனால் என் உடல் முழுவதும் வெடவெடத்துக்கொண்டிருக்க நான் அவனது அங்கியை இன்னும் இறுகப் பிடித்துக்கொண்டிருந்தேன். அப்போது நான் மிகவும் வெளிறிப்போயிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. அவன் என்னைக் கவலை தோய்ந்த புன்னகையோடு பார்த்தான். என்னைப்பற்றி அவனுக்கும் கவலை ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதை அது வெளிக்காட்டியது.

‘’இதோ பாரு கண்ணு , என் கண்ணில்லே நீ! அட, என் செல்லம்? நீதான் எப்படி பயந்து போயிருக்கே? ! ஐயோ? பாவம் என்னோட சின்னப் பையன்!…..நீ அப்படியெல்லாம் பயப்படவே வேண்டியதில்லை, நான் இருக்கேன் பார்த்தியா, இதோ பாரு,,இங்கே கொஞ்சம் பாரேன்’’

என்றபடி அவன் தன் கையை நீட்டி சட்டென்று என் கன்னத்தில் வருடித் தந்தான்.

‘’இதோ பாரு…, கிறிஸ்து உன்னோடயே இருப்பார்,சரியா? சிலுவை போட்டுக்கோ.நல்ல பையனில்லையா நீ’’

ஆனால் நான் சிலுவைக்குறி போட்டுக்கொள்ளவில்லை. பயத்தில் என் உதட்டோரம் இன்னும் துடித்துக்கொண்டுதான் இருந்தது. குறிப்பாக அது அவனைப் பாதித்திருக்க வேண்டும். கறுத்துப்போன நகத்தோடு கூடிய சேறு படிந்த தடிமனான தன் விரலால் நடுங்கிக்கொண்டிருந்த என் உதடுகளை அவன் மெள்ளத் தொட்டான்.

‘’என் கண்ணில்லே… என் கண்ணுப் பிள்ளையில்லே’’ என்று என்னைப்பார்த்துப் புன்னகைத்தான். அந்தப் புன்னகையில்  தாய்மை உணர்வின் சாயல் இலேசாகத் தென்பட்டது.

‘’கடவுளே, பாவப்பட்ட இந்தப் பிள்ளைதான் எப்படி பயந்து போயிருக்கான்’’

இறுதியில் அங்கே ஓநாய் எதுவும் இல்லை என்பதும் ‘ஓநாய் ஓநாய்’ என்று யாரோ கத்துவதாக நானாகக் கற்பனை செய்து கொண்டிருக்கிறேன் என்பதும் எனக்குப் புரிந்து விட்டது. ஆனால் அந்த சத்தம் என்னவோ தெளிவாக துல்லியமாகத்தான் இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட சத்தங்கள் (ஓநாயைப் பற்றியதாக மட்டும் இல்லையென்றாலும்) இதற்கு முன்னாலும் ஓரிரு முறை நான் கற்பனை செய்து கொண்டவையே என்பதை நான் அறிந்திருந்தேன்.( பிறகு சில ஆண்டுகள் கழித்து அப்படிப்பட்ட பிரமைகளிலிருந்து நான் விடுபட்டு விட்டேன்)

‘’சரி, நான் போய்ட்டு வரேன்’’ என்று அவனைப்பார்த்துத் தயக்கத்தோடும் கூச்சத்தோடும் கேட்டேன்.

‘’சரி வேகமா ஓடு.., ஒரே ஓட்டமா ஓடிடு பையா..நான் உன்னை கவனிச்சுக்கறேன்’’என்றான் அவன்.

‘’எதுக்கும் பயப்படாதே. அந்த ஓநாய் உன்கிட்டே எப்படி வருதுன்னு நான் பார்த்திடறேன்’’ என்றும் சொல்லிவிட்டு அதே தாய்மை கலந்த புன்னகையோடு என்னைப்பார்த்து சிரித்தான்.

‘’சரி..! கிறிஸ்து உன் கூடவே இருப்பார். வேகமா ஓடிடு. ஓடிப்போயிடு  சின்னப் பையா ’’ என்று சொல்லியபடி எனக்கு சிலுவைக்குறி போட்டு விட்டுத் தனக்கும் அவ்வாறே போட்டுக்கொண்டான். பத்தடிக்கு ஒரு முறை அவனைத் திரும்பிப்பார்த்தபடியே நான் நடந்தேன். நான் நடந்து சென்றபோது –தன் இடத்தை விட்டு சற்றும் நகராமல் - தன் பெண்குதிரையோடு அசையாமல் நின்றபடி என்னைப்பார்த்துக்கொண்டிருந்தான் மாரி. ஒவ்வொரு முறை நான் அவனைத் திரும்பிப் பார்த்தபோதும் என்னைப் பார்த்துத் தலை அசைத்துக்கொண்டும் இருந்தான். நான் பயந்து போனதை இந்த அளவுக்கு அவனிடம் வெளிப்படுத்தி விட்டோமே என்று  எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்ததை நான் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். ஆனாலும் நடந்து சென்றபோது ஓநாயைப் பற்றிய பயம் எனக்குள் தொடர்ந்து இருக்கத்தான் செய்தது. பள்ளத்தாக்கின் பாதியில் இருந்த முதல் கதிரடிக்கும் இடத்தையும் நெல் சேமிக்கும் ’குதி’ரையும் நெருங்கும் வரை அது நீடித்தது. அதற்குப் பிறகு அது மறைந்தே போய் விட்டது. எங்கள் வளர்ப்பு நாயான வோல்ட்சாக் திடீரென்று என்னை நோக்கி ஓடி வருவதைப்பார்த்ததும் அது போயே போய் விட்டது. வோல்ட்சாக்கைப் பார்த்ததும் நான் மிகவும் பாதுகாப்பாய் இருப்பதாய் உணர்ந்தபடி கடைசி முறையாக மாரியைத் திரும்பிப் பார்த்தேன். அவன் முகம் தெளிவாகப் புலப்படாவிட்டாலும் அவன் இன்னும் என்னைப்பார்த்துத் தலையசைத்துக்கொண்டும் பாசத்தோடு புன்னகை செய்து கொண்டும் இருப்பதை என்னால் உணர முடிந்தது. நான் அவனை நோக்கிக் கை அசைத்தேன். அவனும் திரும்பக் கை அசைத்து விட்டுத் தன் குதிரையை செலுத்த ஆரம்பித்தான். ‘’ம்..போ போ..மேலே போ’’ என்ற அவனது குரல் தூரத்தில் மறுபடியும் கேட்கத் தொடங்கியிருந்தது. மீண்டும் அந்தச் சிறிய குதிரை நிலத்தை உழ ஆரம்பித்து விட்டது.

   இவை எல்லாமே, மிகத் தெளிவாக, நுட்பமான எல்லாத் தகவல்களோடும் - ஆச்சரியப்படத்தக்க வகையில் சட்டென்று எனக்கு நினைவுக்கு வந்து விட்டது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.

     நான் சட்டென்று எழுந்து என் கல்திண்ணைப் படுக்கை மீது அமர்ந்து கொண்டேன். அப்போது அந்த ஞாபகத்தால் என் உதட்டில் அரும்பிய அந்த மென்மையான புன்னகையைக்கூட இப்போது என்னால் நினைவுகூர முடிகிறது. அடுத்த ஒரு நிமிடமும் என் பிள்ளைப் பிராயத்தில் நடந்த அந்த சம்பவத்தைப் பற்றியே அசை போட்டுக்கொண்டிருந்தேன்.

   மரேயை சந்தித்து விட்டு வீடு திரும்பிய அன்று எனக்கு ஏற்பட்ட அந்த ‘சாகச’ சம்பவத்தைப்பற்றி நான் யாரிடமுமே சொல்லவில்லை. அது ஒன்றும் அப்படிப்பட்ட பெரிய சாகசம் இல்லைதான். இன்னும் சொல்லப்போனால் சீக்கிரத்திலேயே நான் மரேயையும் மறந்து போனேன். எப்போதாவது அவனை எதிர்ப்பட நேரும்போதும் ஓநாயைப் பற்றியோ, வேறு எதைப்பற்றியுமோ கூட நான் ஒருபோதும் பேசியதில்லை. இருபது ஆண்டுகள் கழித்து இப்போது சைபீரியாவில் இருக்கும் இந்த நேரத்தில் திடீரென்று அந்த நிகழ்ச்சி அசாதாரணமான துல்லியத்தோடு – ஒரு சின்னத் தகவல் கூட விடுபட்டுப்போகாமல் ஞாபகம் வருகிறதென்றால் என்னை அறியாமலேயே என் உள்ளத்தின் ஆழத்தில் அது தானாகவே மறைந்திருந்திருக்க வேண்டும். தேவைப்படும் வேளையில் அது இப்போது திடீரென்று நினைவு வந்திருக்கிறது. அந்த அடிமைக் குடியானவன் என்னைப் பார்த்துத் தாய்மைக்குரிய பரிவோடு புன்னகை செய்தது, என் மீதும் தன் மீதும் அவன் சிலுவைக்குறி போட்டுக்கொண்ட விதம், அவன் என்னைப்பார்த்துத் தலையசைத்தது என்று எல்லாவற்றையுமே நான் நினைவு கூர்ந்தேன்.

‘’கடவுளே, பாவம் இந்தப்பிள்ளைதான் எப்படி பயந்து போயிருக்கான்’’ என்று அவன் சொன்னது, குறிப்பாக…, கறுத்துப்போன நகத்தோடு கூடிய சேறுபடிந்த தடிமனான தன் விரலால் நடுங்கிக்கொண்டிருந்த என் உதடுகளைக்  கூச்சத்தோடும் தயக்கத்தோடும் அவன் தொட்டது என்று எல்லாமே..!

    ஒரு குழந்தையை சமாதானப்படுத்துவதற்காக, இப்படி ஒரு செயலை யார் வேண்டுமானாலும் நிச்சயமாக செய்திருக்கலாம், அதில் சந்தேகமே இல்லை. ஆனால் எவருமற்ற தனிமையில் நிகழ்ந்து முடிந்த அந்த சந்திப்பில் முற்றிலும் வேறான ஒன்றும் நடந்திருந்ததைப் போலிருந்தது. ஒருவேளை நான் அவனது மகனாகவே இருந்திருந்தால் அளவற்ற அன்பு சுடர்விடும் விழிகளோடு அவன் என்னை இப்படிப்  பார்த்திருக்க மாட்டான். அப்படிப் பார்க்குமாறு அவனை வற்புறுத்தியது எது ? அவன் எங்கள் எண்ணற்ற அடிமைகளில் ஒருவன், எங்கள் உடைமைகளில், எங்கள் சொத்து*க் கணக்கில் ஒருவனாகக் கருதப்படும் ஒரு குடியானவன் ; நான்…, அவனது எஜமானரின் மகன் அவ்வளவுதான். அவன் என்னிடம் இவ்வளவு பிரியமாக இருந்தான் என்பது யாருக்குமே தெரிந்திருக்கப்போவதில்லை, அப்படியே தெரிய வந்தாலும், அதற்காக அவனுக்கு யாரும் எந்த வெகுமதியும் தரப்போவதும் இல்லை. உண்மையாகவே சின்னக்குழந்தைகளிடம் அவனுக்கு அளவற்ற அன்பு இருக்கக் கூடுமோ? அப்படியும் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதில் சந்தேகம் இல்லை.

     எங்கள் சந்திப்பு மிக மிக ஒதுக்குப்புறமான ஓர் இடத்தில், யாருமே இல்லாமல் வெறிச்சென்று கிடந்த தனிமையான நிலப்பகுதி ஒன்றில் நிகழ்ந்தது. நாகரிகம் அறியாத முரட்டுத்தனமான காட்டுமிராண்டி போன்ற ஒரு ரஷ்ய அடிமை…, தனது விடுதலையைக் குறித்தோ தனது ஈடேற்றம் குறித்தோ ஒருபோதும் கனவு கூடக் கண்டிராதவனும், அதை எதிர்பார்த்திராதவனுமான ஓர் அடிமை…, அவனுக்குள் அபரிமிதமாய்ப் பொங்கித் ததும்பிய மனிதநேய உணர்வு, பண்படாத முரட்டுத்தனமான அந்த இதயத்திலிருந்து ஒரு பெண்ணைப் போன்ற பரிவோடு, மென்மையாக, நுட்பமாக வெளிப்பட்ட காருண்யம்…இவற்றையெல்லாம்..- ஒருவேளை அந்தக் கடவுள் மட்டுமே மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம்.

   ஒருக்கால் நம் நாட்டுப்புற மக்களுக்கு இருப்பதாக கான்ஸ்டாண்டின் அக்ஸகோவ்* குறிப்பிடும் மிக உச்சபட்சமான பண்பாடு என்பது இதுவாகத்தான் இருக்குமோ?

    கல்திண்ணைப் படுக்கையிலிருந்து எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தபோது துரதிருஷ்டசாலிகளான அந்த ஜீவன்களை முழுக்க முழுக்க வேறுவகையான கண்ணோட்டத்துடன் என்னால் திடீரென்று பார்க்க முடிந்தது என்பது, எனக்கு நினைவிருக்கிறது. நான் கொண்டிருந்த கோபமும் வெறுப்பும் ஏதோ ஒரு அற்புதத்தால் சட்டென்று என் இதயத்திலிருந்து விலகிப்போனது போலிருந்தது. சிறையைச் சுற்றி நடந்தபடி நான் அதுவரை எதிர்ப்பட்ட முகங்களைத் துருவிப் பார்த்தேன். அதோ அங்கே மழிக்கப்பட்ட தலையோடு, முகத்தில் தெரியும் குற்றவாளி என்ற முத்திரையோடு ,குடிபோதையில் உச்ச ஸ்தாயியில் ஏதோ கரகரப்பான குரலில் பாடிக்கொண்டிருக்கிறானே அவனும் கூட மரேயைப் போன்ற அதே மாதிரியான ஒரு குடியானவனாக இருக்கக்கூடும். என்னால் அவனது இதயத்துக்குள் புகுந்து பார்க்க முடியப்போகிறதா என்ன? அன்று மாலை நான் மறுபடியும் மிட்......ஸ்கியைப் பார்த்தேன். பாவம் அந்த மனிதர்,  மாரியையோ அவனைப்போன்ற வேறு குடியானவர்களைப் பற்றியோ குறித்த எந்தப் பழைய  ஞாபகங்களும் அவருக்கு இருக்காது. என்பதால், '‘நான் இந்தத் திருட்டுப்பயல்களை வெறுக்கிறேன்’’ என்பதைத்தவிர அந்த மக்களைப்பற்றிய வேறு எந்த அபிப்பிராயமும் அவருக்கு இருக்கவும்.முடியாது. ஆமாம்.. நம்மை விட… அவரைப்போன்ற போலிஷ் நாட்டவர்களுக்கு அது மிகவும் கடினமானதுதான்! 

            ***************************************************************

குறிப்புகள்;

;* பல முறை உள்ளே செலுத்தி உருவப்பட்டிருக்கும் கத்திகள்*!:  சிலுவையில் ஏசு இறந்தபோது சுற்றியிருந்த ரோமானியக் காவலர்கள் நடந்து கொண்ட முறையைக் குறிப்பாக உணர்த்துகிறது.

*‘இறந்தவர்களின் வீடு’ ; தஸ்தயெவ்ஸ்கி எழுதிய The House of the Dead நாவலைக்குறிப்பிடுகிறது.

*மிட்..ஸ்கி; ஓ.மிர்ட்ஸ்கி - O.Miretski என்பவர் தஸ்தயெவ்ஸ்கியுடன் சிறை  

*டார்டார்; ரஷ்யாவில் இருக்கும் துருக்கி மொழி பேசும் சிறுபான்மை இனத்தினர்

*அடிமை-serf- ரஷ்ய நிலக்கிழார்களின் சொத்து மதிப்பு அவர்கள் எத்தனை அடிமைகளைத் தங்கள் உடைமைகளாக வைத்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்ததாகவும்.இருந்தது.

* கான்ஸ்டாண்டின் அக்ஸகோவ்; ரஷ்ய எழுத்தாளர்,திறனாய்வாளர்.- (1817–1860)

             >>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

 

 

 


22.3.22

கனலி- நேர்காணல், தஸ்தயெவ்ஸ்கி சிறப்பிதழ்

 கனலி    ( https://kanali.in/category/special-editions/special-editions_200/ )ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி (200 ஆம் ஆண்டு) சிறப்பிதழில் என் நேர்காணல்


முதல் கேள்வியாக ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியை எப்படிக் கண்டுகொண்டீர்கள். அவரை தமிழில் மொழியாக்கம் செய்திட வேண்டும் என்கிற மன உந்துதல் எப்படி உங்களுக்குள் வந்து சேர்ந்தது என்று சொல்லிட இயலுமா.


சிறுவயது முதலே வாசிப்பில் நாட்டம் கொண்டிருந்தவள் நான். புனைவு , அபுனைவு, மொழிபெயர்ப்பு என்று எதையும் புறந்தள்ளாத கலவையான பல நூல்களின் வாசிப்பு. பேராசிரியப்பணியில் சேர்ந்தபின்பு அந்த வாசிப்புக்கான வாய்ப்புக்கள் மேலும் கூடுதலாயின. பொறுப்புக்களும் அவ்வாறே. மற்றொரு புறம் எழுத்திலும் ஆர்வம் இருந்ததால் ‘79 முதல் சிறுகதைகளும் வெளிவரத்தொடங்கியிருந்தன. இந்த மும்முனைப்பயணத்தில் தஸ்தயெவ்ஸ்கி என்ற எழுத்தாளரை நான் எதிர்ப்படாமல் போயிருக்க உறுதியாக வாய்ப்பில்லை. ஆனாலும் பலவகைப்பட்ட பணிகளுக்கு இடையில் அவரது எழுத்தின் மீது மட்டுமே தீவிர கவனம் செலுத்தும் வாசகியாய், அவரை நான் கண்டுகொண்ட தருணமாக, அவர் என்னை வந்தடைந்த கணமாக அதை எடுத்துக்கொள்ள முடியாது. பேராசிரியப்பணி ஓய்வுக்குப்பின் , என் 56 ஆவது வயதில் ‘குற்றமும் தண்டனையும்’ மொழியாக்கப்பணியை என்னிடம் ஒப்புவிக்க முன் வந்த மதுரை பாரதி புக் ஹவுஸ் பதிப்பாளர் வழியாகவே என்னிடம் தஸ்தயெவ்ஸ்கி முறைப்படி வந்து சேர்ந்தார் ( இப்போது அந்தப்பதிப்பகம் இல்லை. நற்றிணை பதிப்பகமே என் தஸ்தயெவ்ஸ்கி நூல்களின் செம்பதிப்புக்களையும், அவரது பிற மொழிபெயர்ப்புக்களையும் வெளியிட்டு வருகிறது).  நான் அதுவரை ஈடுபட்டிராத மொழிபெயர்ப்புப்பணியும், தஸ்தயெவ்ஸ்கியும் ஒருசேர என்னை வந்தடைந்த கணம் அதுவே. தீமையிலும் நன்மை என்பது போல இது இத்தனை தாமதமாக நேர்ந்ததிலும் ஒரு நன்மை இருப்பதையே என்னால் பார்க்க முடிகிறது. முன்பு வாசித்திருந்தால் வேறு நூல்களோடு பத்தோடு பதினொன்றாக நான் இவரையும் வாசித்து விட்டுப்போயிருக்கலாம், ஆனால், குறிப்பிட்ட காலகட்டத்தில் முழு நேர ஓய்வும் மொழிபெயர்ப்புப்பணியும் ஒன்றாகச் சேர்ந்து கொண்டதால் ஒரு சொல், ஒரு வரி என்று எதையும் இம்மியும் தவற விடாமல் - திரும்பத்திரும்ப தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்துக்களுக்குள் , அவர் படைத்துக்காட்டும் அக உலகத்துக்குள் ஆழமான விரிவான பயணம் செய்யும் வாய்ப்பு கைகூடியது இந்தத்தாமதத்தாலேதான். அதில் எனக்கு மகிழ்ச்சியே.


தமிழ்தமிழ்ப்பேராசிரியராக மட்டுமல்லாமல் 1979 தொடங்கி ஒரு சிறுகதை எழுத்தாளராகவும் இருந்து
உங்களுக்குப் பிடித்த ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகள் எவையெவை? அவை பிடிப்பதற்கான காரணங்கள் சிலவற்றைப் பட்டியலிட்டுச் சொல்ல இயலுமா.

குற்றமும் தண்டனையும் மொழிபெயர்த்து முடித்ததுமே தஸ்தயெவ்ஸ்கி என் நெஞ்சுக்கு நெருக்கமான கதைசொல்லியாகி விட்டார்,அதனால் அவரது படைப்புக்களில் இது பிடிக்கும் இது பிடிக்காது என்று இனம்பிரித்துச் சொல்ல முடியாதபடி அவரது படைப்புலகோடு நான் ஒன்றிக்கலந்து விட்டிருப்பது போன்ற உணர்வுதான் என்னை ஆட்கொண்டிருக்கிறது. எந்தஒரு படைப்பாளியும் தன் படைப்புக்களில் உயர்வு தாழ்வு என்று பேதம் பாராட்டுவதில்லை. தஸ்தயெவ்ஸ்கியைத் தமிழ் வழி மறு ஆக்கம் செய்யும் நானும் அப்படித்தான். நான் ஒரு வாசகராக,விமரிசகராக,ஆய்வாளராக இருந்து பார்த்தால், இந்தக்கேள்விக்கு என் பதில் வேறாக இருக்கலாம். இப்போது தஸ்தயெவ்ஸ்கியுடன் மனரீதியாக ஒரு அபேத நிலையில் நான் இருந்து கொண்டிருப்பதால்,அவருடையவற்றில் பிடித்தது பிடிக்காதது என்று இனம் பிரித்துப்பார்க்க நான் துணியவில்லை . ‘நவில்தொறும் நூல்நயம்’ என்பது போலப் படைப்புக்குப் படைப்பு அவர் காட்டியிருக்கும் ரகம்ரகமான மன உணர்வுகளை, வாழ்வியல் சிக்கல்களை, அவற்றை அவர் தொடுத்துக்கதை பின்னிக்கொண்டு போகும் நேர்த்தியை,கதைக்கூற்று முறைகளில்,பாத்திர வார்ப்புக்களில் காட்டியிருக்கும் மாறுபாடுகளைப் பார்த்து வியந்து மட்டுமே நிற்கிறேன். அந்த மேதையின் எழுத்துச் சன்னதியில் என்னால் இப்போது செய்யக்கூடியது அது மட்டுமே.



ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி படைப்புகளை மொழியாக்கம் செய்யும் போது தங்களுக்கு அகம் சார்ந்து எப்படிப்பட்ட மாறுதல்கள் கிடைக்கிறது தஸ்தயெவ்ஸ்கி அகம் சார்ந்து அதிகம் எழுதியிருக்கிறார் அதனால் இக் கேள்வியை முன் வைக்கிறோம்.

வாழ்க்கைப் பயணத்தில் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகளுடன் அதிகம் பயணம் செய்துள்ளீர்கள். இதன் வழியாக உங்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் பற்றிச் சொல்லிட இயலுமா.


இந்த இரண்டு கேள்விகளுக்கும் ஒன்றாகவே பதில் சொல்லி விடலாமென்று நினைக்கிறேன்.
என் வாழ்க்கைப்பயணத்தில் எழுத்தும் வாசிப்பும் சார்ந்த காலகட்டத்தை தஸ்தயெவ்ஸ்கிக்கு முன்- தஸ்தயெவ்ஸ்கிக்குப் பின் என்று பிரித்துக்கொள்ளும் அளவுக்கு வேறெந்த நாவல் எழுத்தாளரையும் விட அவர் என்னுள் ஏற்படுத்திய தாக்கம் மகத்தானது.
‘குற்றமும் தண்டனையும்’ மற்றும் ‘அசடன்’ நாவல்களில் அவர்  அமைக்கும் மிகப்பெரிய ‘கான்வாஸ்’..பிரம்மாண்டப்பின்னணி…,
அதில்தான் எத்தனை விதம் விதமான மனிதர்கள்..அவர்களின் வாழ்க்கைப்போராட்டங்கள்? அத்தனை மனித மனங்களின் ஆழம் காண முடியாத இருட்டு மூலைகளுக்குள்ளேயும் இலாவகமாய் சஞ்சாரம் செய்து அங்கே உறைந்திருக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புக்களை சொல் வழி கடத்துவதென்பது சாமானியமல்ல. அது கலை என்பதையும் மீறி சக மனிதர்கள் குறித்து நமக்கு அவர் புகட்டும் ஒரு பாடமாகவே பல நேரங்களில் அமைந்து விடுகிறது. மனிதர்களின் பலம்,பலவீனங்களை மட்டுமே வைத்து இவன் நல்லவன்,இவன் தீயவன் என்று வரையறுத்துக் கோடு கிழிக்க தஸ்தயெவ்ஸ்கி என்றுமே முற்பட்டதில்லை. அவரவர் வாழ்வை,அவரவர் குணங்களை அவரவர் வாழ்க்கைப்பின்னணியோடு பொருத்திக் கொடுப்பதை மட்டுமே செய்து விட்டு அவர் நகர்ந்து கொள்ள.., நாமும் நல்லவன்,தீயவன் என்று எந்த ஒருவரைப்பற்றியும் தீர்ப்பு வழங்க , இனம்பிரிக்க மனம் வராமல் தடுமாறிப்போகிறோம். அதுவே அவரது எல்லையற்ற காருண்யம். அது அவர் படைக்கும் எல்லா சிருஷ்டிகளிலும் வெள்ளமாய்ப் பெருகிக் ததும்ப அதில் நீராடி நாமும் அகத்தூய்மை கொள்கிறோம். குறுகிய அபிப்பிராயங்களைக் களைந்து நீக்கி விட்டு விசாலமான விரிந்த பார்வையோடு கதை மாந்தர்களை மட்டுமன்றி நம்மைச் சுற்றி இயங்கும் உலகையும் காணப்பழகிக்கொள்கிறோம். அடுத்தவரின் அக உலகத்துக்குள் போக முனைவதற்குள் நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ளவும் உந்துதல் அளிப்பவை அவரது எழுத்துக்கள். அகத்தைத் தூய்மை செய்துகொள்ளும் முயற்சியில் அடியெடுத்தாவது வைக்க வேண்டும் என்ற உந்துதலைக் கிளர்த்த நிச்சயம் தஸ்தயெவ்ஸ்கி எனக்குத் துணை வந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். 

அவரது மிகப்பெரும் படைப்புக்களான ‘குற்றமும் தண்டனையும்’, ‘அசடன்’ ஆகியவற்றையும் ‘நிலவறைக்குறிப்புகள்’, ‘இரட்டையர்’, ‘வெண் இரவுகள் ‘ போன்ற குறுநாவல்களையும் அவரது பல சிறுகதைகளையும் மொழிபெயர்த்து முடித்த பின் ஒரு படைப்பாளி என்ற வகையில் நான் படைப்பை அணுகும் கோணங்களுமே சற்று மாறிப்போய் நான் பக்குவமடைந்திருப்பதை, என் எழுத்து சற்றே கூர்தீட்டப்பட்டிருப்பதை என்னால் நன்றாகவே உணர முடிகிறது.  ஒரு மகத்தான கதைசொல்லியின் நிழலில் இளைப்பாறும் கணங்களில் என் ஆன்மாவும், எழுத்தும் இரண்டுமே தொடர்ந்து பட்டை தீட்டப்பட்டு வருவதாகவே என் அகத்தில் உணர்கிறேன்.

….

உங்களுக்குப் பிடித்த தஸ்தயெவ்ஸ்கியின் கதாபாத்திரங்கள் எவையெவை. முக்கியமாகப் பெண் கதாபாத்திரங்கள்.
…..
குற்றமும் தண்டனையும் சோனியாவை யாரால்தான் விரும்பாமல் இருக்க முடியும்? ரஸ்கோல்னிகோவின் தாயும்( பல்கேரியா அலெக்ஸேண்ட்ரோவ்னா) , மர்மலேதோவின் மனைவியும் ( காதரீனா இவானோவ்னா) துணைப்பாத்திரங்கள் என்றாலும் நாவலாசிரியரின்படைப்புத் திறமையால் நெஞ்சுக்குள் பதிந்து நின்று விடுபவர்கள். உண்மையில் நாவலின் தொடக்கத்தில் ரஸ்கோல்னிகோவின் தாய், பல்கலைக்கழகமாணவனான அவனுக்கு எழுதும் கடிதமே -நாவல் முழுவதையும் படித்து முடிக்காத கட்டத்திலும், மொழியாக்கத்தை உடனே தொடங்கி விடும் தூண்டுதலை எனக்கு அளித்தது என்றே சொல்லலாம். அசடன் நாவலில் மனதளவில் மிஷ்கின் மீது எல்லையற்ற பிரேமை இருந்தாலும் தான் அதற்குத்தகுதி கொண்டவள்தானா என்ற தீராத கேள்வியோடு நாவலின் இறுதி வரை ஊசலாடும் நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னா, சில நேரங்களில் சில மனிதர்கள் கங்காவை நினைவூட்டி அவளுக்காக …, அவள் கடந்து வந்த வாழ்க்கைப்பின்னணிக்காக என்னை நெகிழ வைக்கிறாள். வீட்டு வேலைகள்,பொறுப்புக்களுக்கிடையே உழலும் நடுத்தர வயதுப்பெண்ணானாலும்..காதல் ஊசலாட்டத்தில் சிக்கியிருக்கும் இளம் வயதுப்பெண்ணானாலும்( ‘வெண் இரவுகள்’-  நஸ்டெங்கா)  அவர்களது உளவியலுக்குள் புகுந்து புறப்பட்டபடி குறிப்பிட்ட பெண்பாத்திரப்படைப்பைக் கச்சிதமாக முன் நிறுத்தும் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புத் திறன் அபாரமானது.

………..

ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி மற்றும் லியோ டால்ஸ்டாய் இருவரில் யாரை முதன்மையாக வைப்பீர்கள்?
……
ரஷ்ய இலக்கியத்துக்குப் பெரும் பங்களிப்புச் செய்த இந்த இரு மேதைகளை அப்படி வேறுபடுத்திப்பார்ப்பது தேவையில்லை என்பதே என் கருத்து. தமிழுக்குக் கம்பன் எவ்வளவு தேவையோ அதே அளவுக்கு இளங்கோவும் தேவை. மிக உன்னதமான உயரிய இடத்தில் இருக்கும் இரு இலக்கியகர்த்தாக்களின் படைப்புப் பார்வைகள்,அணுகுமுறைகள், கதை சொல்லும் போக்கு, சொல் ஆளுமை என்று பல கூறுகளை ஒப்பிட்டும் உறழ்ந்தும் பார்க்கலாமே தவிர எவருக்கு முதன்மை தருவது என்பது அவரவர் அந்தரங்க வாசிப்பு சார்ந்தது. அதைப்பொதுவில் வைத்துப் புதிய வாசகர்களை ஒரு சார்பான நிலைப்பாடு கொள்ள வைக்க நான் விரும்பவில்லை.
………..


நவீன இலக்கியச் சூழலில் மீண்டும் மீண்டும் தொடர்ந்து தஸ்தயெவ்ஸ்கி வாசிக்கப்படுகிறார். அதே நேரத்தில் நவீனத்துவம் பேசும் நிறைய இலக்கியவாதிகளிடம் தஸ்தயெவ்ஸ்கி மீது வெறுப்பு என்றும் இருந்து கொண்டிருக்கிறது. நமது இலக்கியச் சூழலுக்கு ஏன் தஸ்தயெவ்ஸ்கி தேவை என்பதைச் சொல்லத் தகுதியான ஒரு ஆளுமை என்பதால் தான் இதை உங்களிடம் கேட்கிறோம்.
ஏன் நமக்கு உண்மையில் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி தேவை.?
……..

புனைவிலக்கியக்கித்தின் மீது தீராத பெரு விருப்பம் கொண்ட எந்த ஒரு வாசகராலும் புறந்தள்ளி விட்டுப்போய் விட முடியாத ஓர் ஆளுமைதஸ்தயெவ்ஸ்கி. ஒரு சில இலக்கியக்குழுக்கள் முன் வைக்கும் காழ்ப்புணர்வு சார்ந்த விமரிசனங்களை நாம் அதிகம் பெரிது படுத்தவோ கருத்தில் கொள்ளவோ தேவை இல்லை என்றே நான் எண்ணுகிறேன். ஒரு படைப்பாளியின் படைப்புக்களைப் படிக்காமல்- அவற்றின் வழி அவனது அகத்தை ஆன்மாவை அறிய முற்படாமல், இத்தகைய எதிர்மறை விமரிசனங்களை மட்டுமே எதிர்ப்பட்டு அவற்றின் வழி எழுத்தாளரைப் புறமொதுக்கும் ஓர் இளம் வாசகன் , புதிய வாசகன் , இதன் வழி இலக்கிய ரீதியான பேரிழப்பையே சந்திக்கிறான். அரிய மகத்தான செய்திகளை,தரிசனங்களைத்தவற விட்டு விட்டு இத்தகைய சில்லறை விவாதங்களில் ஈடுபடுவது தன் இலக்கியப் பயணத்துக்கு 
(எழுத்து ,வாசிப்புஎதுவானாலும்) எப்படிப்பட்ட ஒரு தடை என்பது காலப்போக்கில் உணர்வாகும்போது காலம் அவனைக்கடந்து போயிருக்கும்.

(உங்கள் கேள்வியின் அடுத்த பகுதி, தஸ்தயெவ்ஸ்கி இன்றைய இலக்கியச்சூழலுக்கு ஏன் தேவை என்பது. )
இன்றைய நவீனத்துவ பின் நவீனத்துவ சூழலில் புனைவு என்பது பெரும்பாலும் இருண்மையின் பிடியில் சிக்கியிருப்பதாகவே நான் கருதுகிறேன். காலப்போக்கில் புனைவின் உத்திகள் மாறிக்கொண்டே செல்வது தவிர்க்க முடியாதது என்றாலும் படைப்பாளி முன் வைப்பது என்னவென்பதையே உள்வாங்கிக்கொள்ள முடியாத புனைவுகளே நவீனம் என்ற பெயரில் இன்று மலிந்து கொண்டு செல்வதைக்காண முடிகிறது. கலை, வாழ்க்கைக்கு மட்டுமே என்று நான் கோடுகிழித்துச் சொல்ல விரும்பவில்லையென்றாலும் பரிசோதனை என்ற பெயரில் கலைத்தன்மையும் கை கூடாமல், வாழ்க்கைக்கும் பயன் தராமல் எழுதப்படும் எழுத்துக்களை ஒரு தட்டில் வைத்து நிறுத்துப்பார்த்தால் மட்டுமே இன்றைய இலக்கிய சூழலுக்கு தஸ்தயெவ்ஸ்கி ஏன் தேவை என்ற கேள்விக்குப் பாசாங்கில்லாத விடை கிடைக்கும். 
முதல் பகுதி முழுவதும் ஒரே ஒரு மனிதனின் அகத்தனிமொழியாக ஒலிக்கும் ‘நிலவறைக்குறிப்புகள்’ உட்பட, நுண் அங்கதத்தோடு கூடியதாய் உலகப்புகழ்பெற்ற திறனாய்வாளர்களுக்குக் கூடப் பொருள் மயக்கம் ஏற்படுத்தும் ‘இரட்டையர்’ வரை- பலவகையான  இலக்கியப்பரிசோதனைகளை செய்ய அவரும் தவறவில்லை. 
அதே வேளையில் மானுடத்தைக் கீழ் நோக்கித்தரம் தாழ்த்தும் எதையும் தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்து ஒருபோதும் செய்ததில்லை.

வாழ்வின் இருள் மண்டிய பக்கங்களை- அழுக்கும், அசிங்கமும்,அவலமும் நிறைந்த மூலைமுடுக்குகளைச் சித்தரித்தாலும் அவற்றின் வழி எவரையும் கொச்சைப்படுத்தவோ, தன் எழுத்தைக்கொச்சைப்படுத்திக்கொள்ளவோ தஸ்தயெவ்ஸ்கியின் எழுதுகோல் ஒருபோதும் துணிந்ததில்லை என்பதை ஐயத்துக்கு இடமில்லாமல் சொல்லிவிட முடியும். மானுடத்தின் எல்லாத் துன்பங்களுக்கும் சிக்கல்களுக்கும் இடையே ஊடாடியபடி அவற்றுக்கிடையில் உறைந்திருக்கும் மானுடத்தின் மாண்பைக் காட்டவே அவர்  எப்போதும்  முயன்று வந்திருக்கிறார். ‘குற்றமும் தண்டனையும் நாவலில் பெண்பித்தனாக ஏமாற்றுக்காரனாக வரும் ஸ்விட்ரிகைலோவிடமும்  கூட மர்மேலோதோவின் அநாதரவான குழந்தைகளின் பால் அன்பு சுரக்கிறது. கண்டிப்பாக செயல்பட வேண்டிய நிலையிலிருக்கும் நீதிபதி போர்பிரி பெத்ரோவிச்சிடமும் கூட ரஸ்கோல்னிகோவ் மீதுதோழமை ஜனிக்கிறது. ‘அசடனில்’ நஸ்டாஸ்யாவைக்கவர்ந்து கொண்டு சென்று இறுதியில் அவளைக்கொன்று விட்டுப்பித்துப்பிடித்தவன் போலப்புலம்பும் ரோகோஸின் மீதும் கூட மிஷ்கினுக்குக் கருணையும் இரக்கமும் சுரக்கிறது.

மனித வாழ்வு துயரமும் தீமையும் பிரச்சினைகளும் மலிந்ததுதான், ஆனால் அவற்றுக்கு நடுவிலும் கூட ஒளிந்திருக்கும் மானுட நல்லியல்புக்கு முதன்மை தந்து அதற்குத் தன் எழுத்தின் வழி வெளிச்சம் பாய்ச்சி வாழ்க்கை மீதான நம்பிக்கை வறண்டு விடாமல் காக்கின்றன தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்துக்கள்.  அந்த நம்பிக்கை இன்றைய காலத்தின் தேவையென்றால் தஸ்தயெவ்ஸ்கியும் இன்று தேவை என்றே சொல்வேன்.

பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் கடவுள் ஏற்பு அல்லது மறுப்பு என்கிற விடயத்தை எப்படிப் பார்க்கிறீர்கள். அவர் படைப்புகளில் அவருக்குத் தொடர்ந்து சிக்கல் தரும் விடயமாக இது இருந்துள்ளது. இது ஒரு மொழிபெயர்ப்பாளராக உங்களை அது எப்படிச் சிந்திக்க வைத்தது.?

தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புலகத்துக்குள் கடந்த 16 ஆண்டுகளாக மொழிபெயர்ப்பு வழியே தொடர்ந்து பயணப்பட்டு வரும் நான் , டால்ஸ்டாய் போலத்தன்னை வெளிப்படையாகக்காட்டிக்கொள்ளாவிட்டாலும் அவர் ஒரு நம்பிக்கையாளர் என்றே உணர்கிறேன். தான் பிறந்து வளர்ந்த சமயநெறிகளின் தாக்கத்தால், கிறித்தவக்கோட்பாடுகளையும், விவிலிய வாசகங்களையும் தன் படைப்புக்களில் ஆங்காங்கே முன்வைத்தாலும், மரபு சார்ந்த- நிறுவனமாக்கப்பட்ட,வழி வழி வந்த பாதையின்பாற் பட்டதல்ல அவர் முன் வைக்கும் ஆன்மீகம்.
அவற்றில் அவருக்கு நிறைய ஐயங்களும்,தேடல்களும்,விமரிசனங்களும்,விவாதங்களும் உண்டு,அவற்றையே அவரது பாத்திரங்களும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் மீறியதாய் ஏதோ ஒரு பிரபஞ்ச சக்தியின் வழிகாட்டுதலும்,நெறிப்படுத்தலும் மனித குலத்தை இயக்கிக்கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்தவராகவே தன் ஆக்கங்களில் வெளிப்படுகிறார் அவர். அந்த வழிகாட்டலை ஸோனியா வழி ரஸ்கோல்நிகோவ் கண்டடைகிறான். ஒரு விலைமகளும் கொலைகாரனும் ஒன்றாகச்சேர்ந்து மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் புதிய ஏற்பாடு படிக்கும் அந்தக்கட்டத்தை மறந்து விட முடியுமா என்ன? அது ஒரு சமய போதனை.., அது அவளது இறைப்பற்று என்பது போன்ற வரையறைகளையெல்லாம் கடந்த ஒரு தாக்கத்தை - அந்த எளிமையான பெண்ணுக்குள் இருக்கும் எல்லையற்றமானுட நேயமும் பரிவும் அவனுக்குள் கிளர்ந்தெழ வைக்கின்றன. அவனது மனச்சான்றில் சிறியதொரு அசைவை ஏற்படுத்தும் குறிப்பிடத்தகுந்த திருப்புமுனைக்கட்டமாகிறது அது. தன் இரட்டைக் கொலைகளால் மானுடத்தைக் கறைபடுத்தி விட்ட அவனை முச்சந்திக்குப் போய் மனிதத்தை மண்டியிட்டு வணங்குமாறு அவள் சொல்லும்போது தஸ்தயெவ்ஸ்கியின் ஆன்மீகம் மானுடம் நோக்கிய தஸ்தயெவ்ஸ்கியின் ஆன்மீகப்பார்வையென்பது புலப்பட்டுப்போய் விடுகிறது. ‘அசடன்’ நாவலில் கள்ளம் கபடு,சூது வாது அற்றவனாய், குழந்தை உள்ளத்தோடு, எவரிடமும் குறை காணாதவனாய், எல்லோரையும் நேசிக்க முடிகிற மிஷ்கின் என்னும் அசடனை, உலோகாயதத்தை முன்னிலை பெற்றிருக்கும் உலகியல் வாழ்வில் தான் காண விரும்பிய நிறைஆன்மீக மனிதனின் பிரதிபலிப்பாகவே உருவாக்கியிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி. சமயச் சிமிழ்களுக்குள் அடங்காததும், மனிதனின் அகத்தைத் துலக்குவதுமான ஓர் ஆன்மீக அனுபவமாகவே தஸ்தயெவ்ஸ்கியின் இறைக்கோட்பாட்டை என்னால் காண முடிகிறது

இன்றைய இளைய தலைமுறையினருக்கு முக்கியமாக தஸ்தயெவ்ஸ்கியை முதன் முதலில் வாசிக்க முயலும் ஒரு வாசகனுக்கு அவரின் எந்த படைப்பை முதலில் பரிந்துரை செய்வீர்கள்.?

உறுதியாக ‘குற்றமும் தண்டனையும்’ நாவலைத்தான்.
விறுவிறுப்பான கதைப்போக்கோடு கூடிய உணர்ச்சிகரமான கட்டங்களும்,திருப்பங்களும் கொண்டது என்பதற்காக மட்டுமல்ல. உன்னதமான ஒரு தரிசனத்தை மிகச்சாதாரண மனிதர்களின் வாழ்வியல் வழி காட்சிப்படுத்தும் மகத்துவம் கொண்டது அது என்பதாலும்தான். அதில் தொடங்கி தஸ்தயெவ்ஸ்கியின் கதை உலகுக்குள் நுழைபவர்களுக்கு அவரது பிற நாவல்களைத்தேடிப் போகும் தூண்டுதல்தன்னிச்சையாகவே பிறப்பது தவிர்க்க இயலாதது. ‘ குற்றமும் தண்டனையும்’ நாவலை மொழிபெயர்த்து விட்டு இன்று வரை தொடர்ச்சியாக அவரது நாவல்களைப் பின் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கும் என் தனிப்பட்ட அனுபவமே அதற்கு சாட்சி.

தஸ்தயெவ்ஸ்கியின் இரட்டையர்கள் ஒரு சிக்கலான நாவல். இருத்தலியல் கூறுகள் அதிகம் கொண்ட நாவலும், அதை மொழியாக்கம் செய்யும் போது கடினமாக உணர்ந்தீர்களா?

உண்மையில் ‘நிலவறைக்குறிப்புகள்’ நாவலை மொழிபெயர்க்கும்போது நான் உணர்ந்து அனுபவித்துக்கடந்த மிகக்கடினமான மனநிலைக்கு ஒரு மாற்றாக இருக்கக்கூடும் என்று எண்ணியே, ‘இரட்டையர் ‘ மொழிபெயர்ப்பையும் அதோடு கூடவே செய்யத்தொடங்கினேன். முதல் பார்வைக்கு நகைச்சுவையும், அங்கதமும் கலந்ததாக- மிக இலகுவாகத்தோன்றிய ‘இரட்டையர்’ அப்படிப்பட்ட எளிதான பிரதி இல்லை என்பது போகப்போகப் புரியத்தொடங்கியது. அதை மூடி வைத்து விட்டு ‘ நிலவறைக்குறிப்புக’ளை முடித்த பிறகே மீண்டும் ‘ இரட்டையர்’ மொழிபெயர்ப்பைத் தொடர ஆரம்பித்தேன். ஆங்கில மொழியாக்கங்களில் இந்த இரண்டு படைப்புகளும் பெரும்பாலும் சேர்த்தே பதிப்பிக்கப்பட்டிருப்பதில் பொருள் இல்லாமல் இல்லை. நிலவறைக்குள் இருக்கும் மனிதனின் தனிமொழி, முதல் நாவல் என்றால்..,அதே நிலவறை மனிதன் தன் நிலவறைக்குள்ளிருந்து வெளிப்பட்டு சமூகத்தோடு ஊடாடும்போது எப்படிப்பட்ட மனநிலைகளை எதிர்கொள்வான் என்று காட்டுவது ‘இரட்டையர்’. அந்த வகையில் இருப்பியல்வாத அடிப்படையில் எழுதப்பட்டிருக்கும் இந்த இரு நாவல்களும் தம்முள் தொடர்பு கொண்டிருப்பவையே. நிலவறையின் நீட்சியே ‘இரட்டையர்’ என்று கூடச் சொல்லி விட முடியும். “ துயரத்துடன் தனித்திருக்கும் மனித ஆத்மா,தனிமைப்பட்டிருக்கும் அகப்பிரக்ஞை,நிலவறைக்குள் தப்பித்து முடங்குதல்” ஆகிய சிக்கல்களையே ‘ இரட்டையர்’ நாவலிலும் எதிர்ப்படுகிறோம்” என்கிறார் ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் வாழ்வையும் படைப்பையும் விரிவாக ஆராய்ந்து நூலெழுதி இருக்கும் காண்ஸ்டாண்டின் மோசுல்ஸ்கி. கதையின் பின்புலமாக வரும் காலகட்டத்தில் ரஷ்யாவில் நிலவிய கெடுபிடிகள் நிறைந்த மிகுந்த இறுக்கமான சமூக அமைப்பும்,அதன் அதிகாரப்படி நிலைகளும் பல நெருக்கடிகளை உருவாக்கியிருந்தன. அவற்றுக்கு இடையே சிக்கிச் சிதறுண்டு போன மனிதர்களின் ஒரு ‘மாதிரி’ (sample) யாகவே கோலியாட்கின் என்னும் பாத்திரம் உருப்பெற்றிருக்கிறது. ரஷ்ய இலக்கியவாதிகளிடமும் கூட இந்த நாவலை சரியாக உள்வாங்கும் முயற்சி கடந்த 150 ஆண்டுகளுக்கும் மேல் இன்னும்கூடத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. குழப்பமான மனப்பிரமைகளுக்கு ஆட்பட்டுத் தன் சுய அடையாளம் குறித்த தேடலால் தன்னையே தொலைத்துக்கொள்ளத் துணிந்து விடும் ஒரு மனிதனின் கதை இது. நாவலில் நடக்கும் சம்பவங்களில் உணமை எது, கற்பிதம் எது என்று எதையும் வரையறுத்துச் சொல்லாமல் வாசக மயக்கம் ஏற்படும் வகையில்
உள்ளடங்கியதாகவே இந்த நாவலின் தொனியை அமைத்துக்கொண்டிருக்கிறார் நாவலாசிரியர். வாசக ஊகத்துக்கு உரியதாக - நுணுக்கமான மறை பொருளாக சிலவற்றை சொல்லியும் சொல்லாமலும் விட்டிருக்கிறார். இதை மொழிபெயர்த்தபோது எனக்கு ஏற்பட்ட ஐயங்களும் நான் எதிர்கொண்ட சவால்களும் எந்த வகையிலும்’நிலவறைக்குறிப்புகள்’ மொழியாக்க அனுபவத்துக்குக்குறைவானவை அல்ல, சொல்லப்போனால் கூடுதலானவை என்றே கூடச்சொல்லி விடலாம். தஸ்தயெவ்ஸ்கியின் பேரிலக்கியங்களான ‘ குற்றமும் தண்டனையும்’ , ‘ அசடன்’ ஆகியவற்றை விட மொழிபெயர்ப்பில் என்னைக்கடுமையாக உழைக்க வைத்து அதிக நேரம் எடுத்துக்கொள்ளவும் வைத்தவை இந்த இரு குறுநாவல்களுமே.


ஆங்கிலத்திலிருந்து தமிழில் தஸ்தயெவ்ஸ்கியை மொழியாக்கம் செய்யும் போது யாருடைய ஆங்கில மொழியாக்கத்தை எடுத்துக் கொள்கிறீர்கள்? அதற்கான  தனிப்பட்ட காரணங்கள் என்னவென்று  கூற இயலுமா? 

தஸ்தயெவ்ஸ்கியின் ஆங்கில மொழிபெயர்ப்புக்களைப்பொறுத்தவரை Constance Garnett இன் மொழிபெயர்ப்பு பெரிதும் நம்பகத்தன்மையுடையது என்று சொல்லப்படுவதால் அதை அடிப்படையாக வைத்துக்கொள்கிறேன்; ஆனால் அது அடிப்படை மட்டும்தான். அதில் தெளிவு ஏற்படாத ஆங்கிலப்பகுதிகளில் வேறு பல ஆங்கில மொழியாக்கங்களை ஒப்புநோக்கி , அந்தக் குறிப்பிட்ட கட்டத்தையும் சூழலையும் குறித்த முழுமையான திருப்தி என்னுள் ஏற்பட்ட பிறகுதான் அதைத்தமிழில் வைக்கிறேன். பொதுவாக ஒவ்வொரு தஸ்தயெவ்ஸ்கி மொழியாக்கத்துக்கும் குறைந்த பட்சம் 3 ஆங்கில மொழியாக்கங்களையேனும் ஒப்பு நோக்குவது என் வழக்கம். மொழிபெயர்ப்பாளர் பெயர் குறிப்பிடாமல் மாஸ்கோ முன்னேற்றப் பதிப்பகம்( Progress publishers, Moscow )வெளியிட்டிருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்புக்கள் ‘அசடன்’ நாவலிலும் இப்போது நான் செய்து வரும் அவரது வேறொரு பெரும் படைப்பிலும் எனக்கு மிகவும் துணையாகவும் புரிதலை எளிமைப்படுத்துவனவாகவும் உள்ளன.


கடைசிக் கேள்வி 
ஒருவேளை ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியை நேரில் சந்திக்க ஒரு வாய்ப்பு கிடைத்தால். அந்த சந்திப்பை எப்படி எதிர்கொள்வீர்கள்.?

தமிழ் வாசகர்கள் அவரை எப்படிக்கொண்டாடித்தீர்க்கிறார்கள் என்பதையும் அவரது எழுத்துக்கள் வழி நான் பெற்ற அக அனுபவங்களையும் அவரோடு பகிர்ந்து மகிழ்வேன்.
……………….

1.9.21

விதியை நம்புபவன்,ஐஸக் பேஷவிஸ் சிங்கர்,மொழிபெயர்ப்புச் சிறுகதை

 கனலி அமெரிக்க சிறப்பிதழில் வெளியாகியிருக்கும் என் மொழிபெயர்ப்புச் சிறுகதை

விதியை நம்புபவன்,

மூலம்; ஐஸக் பேஷவிஸ் சிங்கர்*:  (யூத அமெரிக்கர்; நோபல் பரிசு பெற்றவர், யித்திஷ் மொழியில் இவர் எழுதிய The Fatalist என்ற சிறுகதையை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருப்பவர், ஜோசஃப் சிங்கர் 

தமிழில்; எம் ஏ சுசீலா


                                                      ஐஸக் பேஷவிஸ் சிங்கர்

                 சிற்றூர்களில் ’தொப்புள்’காரன் ஹேய்ம், ’கேக்’ புகழ் யெகெல் , ’வம்பு’க்கார சாரா, ’வாத்து’ப் பையன் கிட்டெல் என்று இவை போலச் சூட்டப்படும் செல்லப்பெயர்கள் நமக்குப் பழக்கமானவை, மிகவும் பரிச்சயமானவை. ஆனால் என் இளம் வயதில் போலந்தில் உள்ள ஒரு சிற்றூருக்கு ஆசிரியராக வந்தபோது ’விதியை நம்பும்’ பெஞ்சமின் என்று ஒரு ஆளைப் பற்றிக் கேள்விப்பட்டேன். உடனே எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. இப்படி ஒரு சின்ன ஊரில் போய் ’விதியை நம்புபவன்’ என்ற சொல்லை எப்படி இவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்? அப்படிப்பட்ட ஒரு பட்டப்பெயர் கிடைக்கும் வகையில் இவன் என்னதான் செய்தான்? நான் ஹீப்ரூ மொழி கற்பித்து வந்த இளம் சீயோன் அமைப்பின் செயலாளர் என்னிடம் அந்த விஷயத்தைச் சொன்னார்.

’குறிப்பிட்ட அந்த மனிதன் இந்தப்பகுதியைச் சேர்ந்தவனில்லை. கூர்லாந்தின் ஏதோ ஒரு இடத்திலிருந்து வந்தவன் அவன். 1916 இல் இந்தச் சிற்றூருக்கு வந்த அவன், தான் ஜெர்மன் மொழி கற்றுத் தரப்போவதாக ஆங்காங்கே அறிவிப்புக்களை ஒட்டி வைத்தான். அது ஆஸ்திரிய ஆக்கிரமிப்புக் காலம் என்பதால் எல்லோருமே ஜெர்மன் மொழியைக் கற்க விரும்பினர். கூர்லாந்தில் ஜெர்மன்மொழிதான் பேசப்பட்டு வந்தது. அதனால் அந்த மொழியை பெஞ்சமின் ஷ்வார்ட்ஸ் அறிந்திருந்தான். அவனது உண்மைப்பெயர் அதுதான். அவன் கற்பித்த வகுப்புக்களில் இரு பால் மாணவர்களும் அதிகமாகச் சேர்ந்து பயின்றனர்’

இவ்வாறு சொல்லிக்கொண்டே போன செயலாளர் சட்டென்று ஜன்னலைச் சுட்டிக்காட்டி ’இதோ அவனே போகிறான் பார்’ என்றார்.

நான் ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தபோது குள்ளமாய்க் கறுப்பாய்த் தொந்தி தொப்பையோடு - அப்போது காலாவதியாகிப் போயிருந்த முறுக்கு மீசை வைத்திருந்த மனிதன் ஒருவன் நடந்து போய்க்கொண்டிருந்தான் அவனிடம் ஒரு கைப்பெட்டி இருந்தது. ஆஸ்திரியர்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்த பின்பு ஜெர்மன் மொழி படிக்கும் ஆர்வம் அங்கே எவருக்கும் இல்லை, அதனால் போலந்துக்காரர்கள்,  பெஞ்சமின் ஷ்வார்ட்ஸுக்கு ஆவணக் காப்பகத்தில் ஒரு வேலை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்கள் எவருக்காவது பிறப்புச் சான்றிதழ் தேவைப்பட்டால் அவனைத்தான் நாடி வருவார்கள். அவனது கையெழுத்து வித்தியாசமான கவர்ச்சியோடு இருந்தது. போலிஷ் மொழியையும் அவன் கற்றுக்கொண்டிருந்தான். எல்லோருக்கும் அதிகார பூர்வமில்லாத ஒரு வக்கீலைப்போலவே அவன் ஆகிப்போயிருந்தான்.

 

செயலாளர் பேச்சைத் தொடர்ந்தார்.

 

‘ஏதோ சொர்க்கத்திலிருந்து நேரடியாக வந்து இறங்கியவனைப்போலத்தான் இங்கே அவன் வந்தான். அப்போது தன் ’இருபது’களில் இருந்த அவனுக்குத் திருமணமாகியிருக்கவில்லை, படித்த மனிதன் எவனாவது எங்கள் ஊருக்கு வந்தால் அதைக் காரணமாக வைத்து இளைஞர்களுக்கென்று  இருந்த ஒரு சங்கத்தில் அதைக்  கொண்டாடுவது எங்கள் வழக்கம். அந்தச் சங்கத்துக்கு அவனை அழைத்திருந்தோம்; அவனைப் பெருமைப்படுத்தும் வகையில்  ஒரு ’பாக்ஸ் - மாலை’க்கும் ஏற்பாடு செய்திருந்தோம். அங்கே வைக்கப்பட்டிருந்த பெட்டியில் கேள்விகள் போடப்படும்; அவற்றை வெளியிலெடுத்து அவன் பதில் தர வேண்டும்.

 

கடவுளால்  வகுக்கப்பட்டிருக்கும் ஊழ்வினைக்கோட்பாட்டில் அவனுக்கு நம்பிக்கை உண்டா என்று ஒரு பெண் கேட்டாள். அதற்கு ஒரு சில சொற்களில் பதில் தராமல் அவன் ஒரு மணி நேரம் அதைப் பற்றிப் பேசினான். அற்ப விஷயங்கள் உட்பட எல்லாமே முன் கூட்டியே தீர்மானிக்கப்பட்டிருப்பவைதான் என்றான் அவன். இரவுச்சாப்பாட்டில் ஒருவன் வெங்காயம் சாப்பிடுகிறானென்றால் அதற்குக் காரணம் அப்போது வெங்காயம்  சாப்பிட வேண்டுமென்று அவனுக்கு விதிக்கப்பட்டிருப்பதுதான்; எத்தனையோ கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே அது அவ்வாறு விதிக்கப்பட்டு விட்டது. சாலையில் போகும்போது ஒரு கூழாங்கல் தடுக்கி நீங்கள் விழ நேர்ந்தால் நீங்கள் அப்படி விழுந்தாக வேண்டுமென்பது விதிக்கப்பட்டிருக்கிறது. ’விதியை நம்புபவன்’ என்று அவன் தன்னைப்பற்றிச் சொல்லிக்கொண்டான். எங்கள் ஊருக்கு அவன் வர நேர்ந்தது தற்செயல் போலத் தோன்றினாலும் அவன் இங்கே அவ்வாறு வந்தாக வேண்டுமென்பது முன்பே முடிவு செய்யப்பட்டு விட்டது என்றான்.

வெகுநேரம் நீளமாகப் பேசிக்கொண்டே இருந்தான் அவன். அதை ஒட்டி விவாதங்களும் தொடர்ந்தன.

‘’அப்படியென்றால் வாய்ப்பு என்ற ஒன்றே இல்லையா என்ன?’’ என்று யாரோ கேட்டார்கள்.

‘’இல்லை…! வாய்ப்பு என்ற ஒன்று இல்லவே இல்லை’’என்று பதிலளித்தான் அவன்.

‘’அப்படியென்றால் படிப்பதற்கு,வேலை செய்வதற்கு இதற்கெல்லாம் என்ன அர்த்தம்? வணிகம்..தொழில் என்று இவற்றையெல்லாம் ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்… பிள்ளைகளை ஏன் வளர்க்க வேண்டும்? அது இருக்கட்டும்..! அப்புறம் சீயோனிசத்தின் வளர்ச்சிக்கெல்லாம் ஏன் பாடுபட வேண்டும்..யூதர்களின் சொந்த நாட்டுக்காக ஏன் போராட வேண்டும்”

 

‘’விதியின் புத்தகங்களில் எவ்வாறு எழுதப்பட்டிருக்கிறதோ அவ்வாறுதான் நடக்கும்’’ என்று அவன் பதிலளித்தான்.

 

‘’ஒரு கடை நடத்த ஆரம்பித்து ஒருவன் திவாலாக வேண்டும் என்று எழுதப்பட்டிருந்தால் அதை அவன் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்’’

 

’மனித முயற்சிகள் எல்லாம் விதிவழிப்பட்டவை மட்டுமே ; சுயமாக அமையும் வாய்ப்பு என்பது ஒரு பிரமை மட்டும்தான் என்றான் அவன். இரவு முழுவதும் அந்த விவாதம் தொடர்ந்து நடந்தது. அப்போது முதல் அவன் ’விதியை நம்புபவன்’ என்று என்று எல்லோராலும் அழைக்கப்பட ஆரம்பித்தான். அந்தச் சிற்றூரின் பேச்சு வழக்கிலும் ’விதியை நம்புபவன்’ என்னும் வார்த்தை புதிதாகச்சேர்ந்து கொண்டது. வீட்டைக் காவல்காக்கும் பாவப்பட்ட சேவகனிலிருந்து தொடங்கி, மிகப்பெரிய யூதக்கோயிலின் காவலர் வரை ’விதியை நம்புபவன்’ என்று என்ற அந்தச் சொல்லை எல்லோருமே அறிந்து வைத்திருந்தார்கள்.

அன்றைய அந்த மாலைக்குப்பிறகு இப்படிப்பட்ட விவாதங்களில் களைத்துப்போனவர்களாய்த் தங்கள் கண் எதிரே இருக்கும் நிகழ்காலப் பிரச்சினைகளை நோக்கி மக்கள் திரும்பிச்சென்று விடுவார்கள் என்றே நாங்கள் நினைத்தோம். தர்க்கபூர்வமான விவாதங்களால் இதைத் தீர்மானித்து விட முடியாது என்று பெஞ்சமினும் கூடச் சொன்னான். நம்புகிறோமோ இல்லையோ.. இளைஞர்களான எங்கள் எல்லாரது உள்ளங்களையும் இந்தக்கேள்வி மட்டுமே ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. பாலஸ்தீனத்துக்கான சான்றிதழ்கள் குறித்தோ கல்வியைப் பற்றியோ பேச எண்ணி நாங்கள் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்வோம். ஆனால் விவாதம் அவற்றைச்சார்ந்ததாக மட்டுமே இல்லாமல் விதிக்கோட்பாட்டை நோக்கிப்போய் விடும்.

 

அப்போது எங்கள் நூலகத்தில் லெர்மெண்டோவ் எழுதிய  நம் காலத்தின்கதாநாயகன் என்ற புத்தகம் ஒன்று இருந்தது. யித்திஷ்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்த அந்த நூல்,பெட்கோரின் என்ற 

பெயர் கொண்ட விதியை நம்பும் ஒருவனைப்பற்றி விவரித்திருந்தது. எல்லோருமே 

அந்த நாவலைப் படித்தோம்; அவரவர் அதிருஷ்டம் எப்படி இருக்கிறதென்றுசோதித்துப் பார்க்கவும் ஒரு சிலர் ஆசைப்பட்டோம். ரஷ்ய ரூலெட்* குறித்து நாங்கள் முன்பே அறிந்திருந்தாலும் ஒரு துப்பாக்கி மட்டும் இருந்திருந்தால் எங்களில் ஒரு சிலர் அதை முயற்சி செய்து சோதித்துக்கூடப் பார்த்திருக்கலாம். ஆனால் எங்கள் ஒருவரிடமும் அது இல்லை.

 

சரி..இப்போது இந்த விஷயத்தைக் கொஞ்சம் கேட்டுக்கொள். 

எங்களோடு ஹெய்லி மின்ஸ் என்று ஒரு பெண்ணும் இருந்தாள். அவள்அழகானவள்,சுறுசுறுப்பு மிக்கவள்.  இயக்கத்தில் தீவிரமாகப்பங்காற்றிய அவள் ஒரு பணக்கார வீட்டுப்பெண். அவளது தந்தை உலர் பொருட்கள் விற்பனை செய்யும் மிகப்பெரிய அங்காடி ஒன்றை நகரத்தில் நடத்தி வந்தார். 

இளைஞர்கள் எல்லோருக்குமே அவள் மீது ஒரு கண் இருந்தது. ஆனால்ஹெய்லி தனக்கென்று தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள்  கொண்டிருப்பவள். ஒவ்வொருவரிடமும் தாவது ஒரு குற்றத்தைக் கண்டுபிடித்து விடுவாள் அவள்.  ஸ்க்லாக்ஃபெர்டிக் என்று ஜெர்மன் மொழியில் குறிப்பிடுவது போல அவளுக்கு நாத்துடுக்கு கொஞ்சம்  அதிகம். நீங்கள் ஏதாவது சொன்னால் போதும், உடனே அவள் அதற்கு நேரெதிராக வரிந்து கட்டிக்கொண்டு வெடுக்கென்று பதிலளிக்க ஆரம்பித்து விடுவாள். எவரையாவது கேலி செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டால் புத்திசாலித்தனத்தோடு நகைச்சுவை  கலந்து அவர்களைக் கிண்டலடித்து விடுவாள். இந்த ஊருக்கு வந்து சேர்ந்துமே ’விதியை நம்புபவன்’ அவள் மீது காதல் கொண்டு விட்டான். அது பற்றி அவனுக்கு எந்தக் கூச்சமும் இல்லை.

 

ஒரு நாள் நேரடியாகவே அவளிடம் வந்தவன்,

‘’ஹெய்லி, நீ என்னைத் திருமணம் செய்து கொண்டாக வேண்டும் என்பது விதிக்கப்பட்டிருக்கும் ஒன்று. அது எப்படியோ கட்டாயம் நடந்துதான் தீரப்போகிறது,  அதற்கு ஏன் காலம் தாழ்த்திக்கொண்டிருக்க வேண்டும்’’ என்றான்.

 

எல்லோரும் கேட்குமாறு இதை சத்தமாகவே சொன்னான்; அதனால் அது ஒரு சலசலப்பை உண்டாக்கியது.

 

‘’நீ ஒரு முட்டாள் என்றும், அதோடு கூடவே அதிகம் கொழுப்பெடுத்தவன் என்றும் உன்னிடம் சொல்ல வேண்டுமென்று எனக்கு விதிக்கப்பட்டிருக்கிறது, அதனாலேயே நான் இதைச் சொல்கிறேன். அதற்காக நீ என்னை மன்னித்தாக வேண்டும். கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இறை நூல்களில் இது முடிவு செய்யப்பட்டு விட்டது’’ என்று பதிலளித்தாள் ஹெய்லி.

 

சீக்கிரத்திலேயே ஹ்ரூபீஸோவைச்சேர்ந்த இளைஞனும், அங்குள்ள பவுல் சீயோன் அமைப்பின் தலவனுமான ஒரு இளைஞனோடு ஹெய்லியின் திருமணம் நிச்சயிக்கப்பட்டு விட்டது. மணமகனின் சகோதரிக்கு ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டிருந்த திருமணம் முதலில் நிகழ வேண்டுமென்பதால் இந்தத் திருமணம் ஓராண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்து. பையன்களெல்லாம் ’விதியை நம்புப’வனைக் கிண்டல் செய்ய அவனோ ‘’ஹெய்லி எனக்குரியவள் என்பது விதிக்கப்பட்டிருந்தால்  கட்டாயம் அவள் எனக்குத்தான் சொந்தமாவாள்’’ என்று பதில் தந்தான்.

‘’நான் ஓஸெர் ருபின்ஸ்டினுக்கு உரியவள், உனக்குரியவள் அல்ல,விதியின் விருப்பம் அதுதான்’’ என்று பதிலடி கொடுத்தாள் ஹெய்லி.

ஒரு குளிர்கால மாலைப் பொழுதில் மீண்டும் விதி குறித்த விவாதம் வெடித்தபோது

‘’ஐயா…ஷ்வார்ட்ஸ்…! விதியை நம்புபவரே..நீங்கள் சொல்வதில் உண்மையிலேயே உங்களுக்கு நம்பிக்கை இருந்தால்- உங்களிடம் துப்பாக்கி இருந்து ரஷ்ய ரூலெட்டை விளையாடக்கூட  நீங்கள் தயார் என்றால் நான் உங்களுக்காக இன்னும் கூட ஆபத்தான வேறொரு விளையாட்டை ஆயத்தமாக வைத்திருக்கிறேன்’’

என்று அவனிடம் சொன்னாள் ஹெய்லி.

’அந்தக்கால கட்டத்தில் நமது ஊர் வரை ரயில்பாதை போடப்பட்டிருக்கவில்லை. அது இங்கிருந்து இரண்டு மைல் தள்ளித்தான் இருந்து, அதிலும் அந்த இடத்தில் எந்த ரயிலும் நிற்காது. வார்ஸாவிலிருந்து லாவ் வரை செல்லும் ரயில்தான் அந்தப் பாதையில் போய்க்கொண்டிருந்தது.

’’புகைவண்டி அந்தப்பகுதியைக்கடந்து செல்வதற்குச் சற்று முன்பு நீ தண்டவாளத்தின் மீது படுத்துக்கொண்டு விட வேண்டும். உயிர் வாழ வேண்டும் என்பது உன் விதியானால் நீ பிழைத்துக்கொள்வாய்., அதில் பயப்பட எதுவுமில்லை. ஆனால் ஒருக்கால் உனக்கு விதியின் மீது நம்பிக்கை இல்லையென்றால்…’’

என்று இப்படி ஒரு திட்டத்தை விதியை நம்புபவனிடம் வைத்தாள் ஹெய்லி.

நாங்களெல்லாம் விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தோம். ஏதாவது ஒரு காரணத்தை முன்வைத்து இதிலிருந்து அவன் பின்வாங்கி விடக்கூடும் என்றே நாங்கள் உறுதியாக நினைத்தோம். தண்டவாளத்தின் மீது படுத்தால் மரணம் நிச்சயம்.

ஆனால் விதியை நம்பும் அவனோ இப்படிச் சொன்னான்.

‘’இதுவும் கூட ரஷ்ய ரூலெட் போல ஒரு விளையாட்டுத்தான். விளையாட்டு என்று வந்து விட்டால் சக போட்டியாளரும் கூடக் கட்டாயம் ஏதேனும் ஒன்றைப் பணயம் வைத்தே ஆக வேண்டும்.’’ என்றவன் மேலும் தொடர்ந்தான்.

‘’நான் தண்டவாளத்தின் மீது படுத்துக்கொள்ள சம்மதிக்கிறேன், ஆனால் நான் உயிர் பிழைத்து விட்டால் ஓஸெர் ருபின்ஸ்டனுடனான திருமண ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு என்னைத் திருமணம் செய்து கொள்வதாக நீயும் எனக்குப் புனிதமான ஒரு சத்தியத்தைச் செய்து தர வேண்டும்’’

நாங்கள் கூடியிருந்த இடத்தில் மயான அமைதி நிலவியது. வெளிறிப்போயிருந்த ஹெய்லி

‘’நல்லது,அப்படியே செய்யலாம். உன் நிபந்தனைகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்’’ என்றாள் அவள்.

‘’எங்கே எனக்கு சத்தியம் செய்து கொடு’’ என்றான் அவன்.

அவன் கைகளைப் பற்றிக்கொண்டு வாக்களித்த ஹெய்லி

’’எனக்குத் தாய் இல்லை,அவள் காலராவில் இறந்து விட்டாள். அவளது ஆத்மாவின் மீது சத்தியம் செய்து தருகிறேன். நீ உன் வாக்கைக் காப்பாற்றினால் நானும் அவ்வாறே செய்வேன். நான் அப்படிச் செய்யத் தவறினால் என் மதிப்பு குன்றிப்போகட்டும், என் கௌரவம் கறை படிந்ததாகட்டும்’’

எங்கள் எல்லோரையும் பார்த்தபடி அவள் மேலும் தொடர்ந்தாள்.

‘’நீங்கள் எல்லோரும் இதற்கு சாட்சி. நான் சொன்ன சொல் தவறினால் நீங்கள் என் மீது காறி உமிழலாம்’’

’சரி..மீதத்தை நான் சுருக்கமாகச்சொல்லி முடித்து விடுகிறேன்’ என்று என்னிடம் பேச்சைத் தொடர்ந்தார் செயலாளர்.

’எல்லாமே அன்று மாலை முடிவு செய்யப்பட்டு விட்டது. மதியம் இரண்டு மணி அளவில் ரயில் எங்கள் ஊரை ஒட்டிச்செல்லும்.  நாங்கள் எல்லோரும் தண்டவாளத்தின் அருகே ஒன்றரைமணிக்குக்  கூடி விட வேண்டுமென முடிவு செய்தோம், உண்மையிலேயே அவன் விதியை நம்புகிறவன்தானா அல்லது வீண் ஜம்பம் அடிக்கிறானா என்பது அப்போது வெளிப்பட்டு விடும். பெரியவர்களுக்குத் தெரிந்தால் மிகவும் பதட்டத்துக்கு ஆளாகி விடுவார்கள் என்பதால், இந்த விஷயத்தை எங்களுக்குள் மட்டுமே ரகசியமாக வைத்துக்கொள்ள முடிவு செய்தோம்.

அன்று இரவு முழுவதும் நான் விழி மூடித் தூங்கவே இல்லை; நான் அறிந்த வரை எவருமே தூங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கடைசி நிமித்தில் அவன் மனம் மாறிப்போய் எடுத்த முடிவில் பின்வாங்கி விடுவான் என்றே நாங்கள் உறுதியாக நினைத்துக் கொண்டிருந்தோம்.

ரயில் கண் பார்வையில் பட்டவுடனோ அல்லது தண்டவாளம் அதிரத் தொடங்கியதுமோ உடனே நாங்கள் எல்லோரும் சேர்ந்து அந்த விதியை நம்புபவனை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அகற்றி விட வேண்டுமென்றும் கூட ஒரு சிலர் யோசனை தெரிவித்தார்கள். ஆனால் இப்படிப்பட்ட எல்லா விஷயங்களுமே திகிலூட்டக்கூடிய அளவுக்கு அபாயகரமாக இருந்தன. இப்போது இந்த நிமிடம் இதைப்பற்றிப்பேசும்போது கூட என் உடலுக்குள் ஒரு நடுக்கம் பரவுவதை உணர முடிகிறது.

மறுநாள் நாங்கள் சீக்கிரமே எழுந்து கொண்டோம். சிற்றுண்டியைத் தொண்டைக்குள் விழுங்கக்கூட முடியாதபடி நான் பயந்து போயிருந்தேன். லெர்மாண்டோவின் புத்தகத்தை நாங்கள் படிக்காமல் இருந்திருந்தால் இவ்வளவும் நடந்திருக்காது.

எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த எல்லோரும் அந்த இடத்துக்குப் போகவில்லை, ஹெய்லி மிண்ட்ஸ் உட்பட ஆறு பையன்களும் நான்கு பெண்களும் மட்டும்தான். வெளியே உறைய வைக்கும் குளிர். ’விதியை நம்புபவன்’ ஒரு மெல்லிய ஜாக்கெட்டும் தொப்பியும் அணிந்திருந்து எனக்கு நினைவிருக்கிறது.

ஊர்ப்புறத்தில் இருக்கும் ஸமோச்க் சாலையில் நாங்கள் சந்தித்தோம்.

‘’ஷ்வார்ட்ஸ், நேற்று இரவு எப்படித் தூங்கினாய்’’

என்று அவனிடம் கேட்டேன்.

‘’எல்லா இரவுகளையும் போலத்தான்’’

அவன் மனதில் என்ன எண்ணம் ஓடுகிறது என்பதை உள்ளபடி தெரிந்து கொள்ள எவராலும் முடியவில்லை. ஆனால் அப்போதுதான் டைஃபாய்ட் காய்ச்சலிலிருந்து குணமானவள் போல ஹெய்லி வெளுத்துப் போயிருந்தாள்.

‘’நீ ஒரு மனிதனை அவனது மரணத்தை நோக்கி அனுப்பிக்கொண்டிருக்கிறாய் என்பது உனக்குத் தெரிந்திருக்கிறதா’’என்று அவளிடம் கேட்டேன்.

‘’நான் ஒன்றும் அனுப்பவில்லை. மனத்தை மாற்றிக்கொள்ள அவனுக்கு நிறைய நேரம் இருக்கிறது’’என்றாள் அவள்.

’வாழும் வரை அந்த நாளை என்னால் ஒருபோதும் மறக்க முடியாது. எங்கள் எவராலுமே மறக்க முடியாது. நாங்கள் நடந்து சென்றபோது முழு நேரமும் எங்கள் மீது பனி பொழிந்து கொண்டே இருந்து.  தண்டவாளத்தின் அருகே நாங்கள் நெருங்கி விட்டோம். பனிப்பொழிவு காரணமாக ரயில் ஓடாமல் இருக்கலாமோ என்று நான் நினைத்தேன், ஆனால் யாரோ வேண்டுமென்றே அதை அப்புறப்படுத்தியிருந்தார்கள். ஒரு மணி நேரம் முன்பாகவே நாங்கள் அந்த இடத்துக்கு வந்து விட்டோம்; நான் செலவழித்த நேரங்களிலேயே எனக்கு மிக நீண்டதாகத் தோன்றியது அந்த ஒரு மணி நேரம்தான்.

 

‘ரயில் வந்து சேரக் குறிக்கப்பட்டிருந்த நேரத்துக்குப் பதினைந்து நிமிடம் முன்பு ஹெய்லி இவ்வாறு சொன்னாள்,

‘’ஷ்வார்ட்ஸ் , நான் எல்லாவற்றைப் பற்றியும் யோசித்துப்பார்த்து விட்டேன். எனக்காக நீ உயிர் விடுவதில் எனக்கு விருப்பமில்லை. தயவு செய்து எனக்கொரு உதவி செய், இந்த விஷயம் முழுவதையும் அப்படியே மறந்து விடு’’

 

அவன் அவளைப்பார்த்து இப்படிக்கேட்டான்

 

‘’ஓ அப்படியென்றால் நீ உன் மனதை மாற்றிக்கொண்டு விட்டாயா? ஏதாவது செய்து அந்த ஹ்ரூபீஸோக்காரனை  உன்னுடையவனாக்கிக் கொள்ள வேண்டுமென்று விரும்புகிறாய்....ஹ்ம்..அப்படித்தானே’’

 

‘’இல்லை, அந்த ஊர்க்காரனைப்பற்றி எனக்குக் கவலையில்லை. உன் உயிரைப் பற்றித்தான் கவலைப்படுகிறேன். உனக்கு ஒரு தாய் இருக்கிறார் என்று அறிந்து கொண்டேன். என்னை முன்னிட்டு அவர் தன் மகனை இழக்க நேருவதை நான் விரும்பவில்லை’’

என்றாள் அவள்.

 

இந்தச் சொற்களுமே பெரும் தடுமாற்றத்தோடுதான் அவளிடமிருந்து வெளிப்பட்டன. இதைச் சொல்லியபடி நடுங்கிக்கொண்டிருந்தாள் அவள்.

 

‘’இதோ பார், நீ சொன்ன சொல் தவறாமல் இருந்தால் நானும் என் வாக்கைக் காப்பாற்றுவேன், ஆனால் ஒரே ஒரு நிபந்தனை. சற்றுத் தள்ளி நின்றுகொள். கடைசி நிமித்தில் என்னைப் பின் வாங்கச்சொல்லி நீ வற்புறுத்தப் பார்த்தால் அவ்வளவுதான் விளையாட்டு அதோடு முடிந்தது’’ என்று சொல்லிக்கொண்டே வந்த ’விதியை நம்புபவன்’ திடீரென்று கூச்சலிட்டான்.

 

‘’எல்லோரும் இருபது தப்படி விலகிச்செல்லுங்கள்’’

 

அவனது வார்த்தைகள் மாய மந்திரம் போல எங்களைக் கட்டிப்போட்டன. நாங்களும் பின்வாங்கத் தொடங்கினோம்.

 

அவன் மீண்டும் இவ்வாறு குரலெழுப்பிக்கத்தினான்

‘’என்னை எவராவது தள்ளிவிட முயற்சித்தால் அவனுடைய கோட்டைப்பிடித்து இழுத்து என் பக்கம் தள்ளிக்கொண்டு விடுவேன், அப்புறம் அவனும் என் விதியில் பங்கு போட வேண்டியதாகி விடும்’’

அது எவ்வளவு அபாயகரமானதாக இருக்கும் என்பதை நாங்கள் உணர்ந்து கொண்டோம். தண்ணீரில் மூழ்குபவனைக் காப்பாற்றுவதாகச் சென்று கூடவே தானும் மூழ்கிப்போக நேர்வது பல முறை சம்பவித்திருப்பதுதான்.

 

நாங்கள் பின்புறம் நகர்ந்த அளவில் தண்டவாளம் இலேசான ஒலியோடுஅதிரத்தொடங்கியது. ரயிலின் விசில் சத்தத்தையும் நாங்கள் கேட்டோம். நாங்கள் எல்லோரும் ஒன்றாகக்குரல் கொடுத்தோம்.

 

 ஷ்வார்ட்ஸ், அப்படிச் செய்ய வேண்டாம். ஷ்வார்ட்ஸ் கொஞ்சம் தயவு செய்.”

 

ஆனால் நாங்கள் கத்திக்கொண்டிருக்கும்போதே அவன் 

தண்டவாளத்தின் குறுக்கே நீட்டிப்படுத்து விட்டான். அங்கே ஒரு ரயில் பாதை மட்டுமே 

இருந்தது. வந்திருந்த பெண்களில் ஒருத்தி மயக்கம் போட்டு 

விழுந்து விட்டாள். இன்னும் ஒரு நொடிக்குள் ஒரு மனித உடல் இரு கூறாக சிதைவதைப்பார்க்கப்போகிறோம் என்பது எங்களுக்கு உறுதியாகி இருந்தது. அந்தச் சில வினாடிகளில் நான் எப்படித் தவித்தேன்...என்ன பாடுபட்டேன்என்பதையெல்லாம் இப்போது உங்களிடம் என்னால் விவரிக்கக்கூட இயலாது. அளவுக்கு மீறிய உணர்ச்சிக் கொந்தளிப்பால் என் இரத்தம் கொதிக்கத் தொடங்கியிருந்தது. சரியாக அந்த நேரத்தில் கிறீச்சென்ற பலத்த சத்தம்கேட்டது. விதியை நம்புபவன் இருந்த இடத்துக்கு சரியாக ஒரு கஜ தூரத்துக்குமுன் ரயில் ஒரு பெரிய குலுக்கலோடு நின்றது.

 

பனி மூட்டத்துக்கு இடையே ரயில் ஓட்டும் பொறியாளரும், நெருப்புப் போடும்உதவியாளரும் இறங்கி வருவது என் கண்ணில் பட்டது. அவர்கள் இருவரும்அவனைப் பார்த்து சத்தம் போட்டுக்கொண்டே தண்டவாளத்திலிருந்து அவனை அங்கிருந்து இழுத்து வெளியேற்றினர். ரயில் பயணிகள் பலரும் கூடக் கீழேஇறங்கியிருந்தனர். எங்களில் சிலர் கைதாகி.விடுவோமோ  என்ற அச்சத்தில்  ஓடி விட்டனர்.  பெரிய கூச்சலும் குழப்பமுமாக இருந்தது.  நான்மட்டும் இருந்த இடத்தை விட்டு நகராமல் நடப்பதையெல்லாம்கவனித்துக்கொண்டிருந்தேன். ஹெய்லி என்னிடம் ஓடோடி வந்து தன்கைகளை என் தோளில் போட்டபடி கதறியழத் தொடங்கினாள். அது,

 வெறும்அழுகையாக இல்லை...ஒரு மிருகத்தின் 

உறுமலைப் போலத்தான் அது  இருந்தது...’

 

சரி..ஒரு சிகரெட் இருந்தால் கொடு, என்னால் இதற்கு மேல் அதைப்பற்றிப்பேச முடியவில்லை, மூச்சுத் திணறுவது போல்

இருக்கிறது...மன்னித்துக்கொள்

செயலாளரிடம் ஒரு சிகரெட்டைக் கொடுத்தேன். அதைப்பிடித்திருந்த அவரது விரல்களுக்கிடையே அது நடுங்கியதை என்னால் பார்க்க முடிந்து. புகையை வெளியில் விட்டுக்கொண்டே

‘’நடந்த கதை இதுதான்’’

என்றார் அவர்.

’’அவள் அவனைத் திருமணம் செய்து கொண்டாளா’’ என்று கேட்ட்டேன் நான்.

‘’அவர்களுக்கு இப்போது நான்கு குழந்தைகள்’’

’’சரியான சமயத்தில் ஓட்டுநர் வண்டியை நிறுத்தியிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ’’ என்றேன்.

’’ஆமாம்..ஆனால் ரயில் சக்கரங்கள் அவனிருந்த இடத்திலிருந்து  ஒரு கஜ தூரத்தில்தான் இருந்தன’’

‘’அப்படியென்றால் இது விதியின் செயல்தான் என்பதில் உங்களுக்கும் நம்பிக்கை ஏற்பட்டு விட்டதென்று சொல்லுங்கள்’’

’’இந்த உலகத்தின் செல்வ வளங்கள் எல்லாவற்றையும் நீங்கள் எனக்குத் தருவதாக இருந்தாலும் இப்படி ஒரு பந்தயத்துக்கு நான் துணிய மாட்டேன்’’

’’அவன் இன்னும் விதியை நம்பிக்கொண்டுதான் இருக்கிறானா’’

‘’ஆமாம்..இன்னும் அப்படித்தான்’’

’’மறுபடியும் இப்படி ஒரு காரியத்தைச் செய்ய அவன் துணிவானா’’

‘’ஹெய்லிக்காகச் செய்ய மாட்டான்’’ என்றபடியே புன்னகைத்தார் செயலாளர்.

                   ************************************

அடிக்குறிப்பு;

* ரஷ்ய ரூலெட்- இது ஒரு அபாயகரமான விளையாட்டு. துப்பாக்கியின் ஏதாவது ஒரு அறையில் மட்டுமே குண்டு வைக்கப்பட்டுத் துப்பாக்கியின் உருளை சுழற்றி விடப்படும். பிறகு துப்பாக்கி முனையைத் தன் தலைக்கு நேராக வைத்தபடி சுட்டுக்கொள்ள வேண்டும். குண்டு குறிப்பிட்ட இடத்திலிருந்தால் மரணம், அப்படி இல்லையென்றால் பிழைக்கலாம்.

 

              *#********************************************#*

 

 

 

 

 

 

 

 

 

 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....