கனலி இணைய இதழ் வெளியிட்ட தஸ்தயெவ்ஸ்கி சிறப்பிதழில் வெளியான என் மொழியாக்கச் சிறுகதை.
Amma
மரேய்* என்னும் குடியானவன்
[The Peasant Marey]
ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கி
ஆங்கில வழி தமிழாக்கம்; எம் ஏ சுசீலா
அது ஈஸ்டர் வாரத்தின்
இரண்டாம் நாள்; திங்கட்கிழமை. இதமான வெம்மையுடன் கூடிய காற்று, தெளிவான நீல வானம்,
உச்சி வெயிலின் பளிச்சிடும் ஒளி, இதமளிக்கும் வெப்பம் என்று எல்லாம் இருந்தபோதும் என்
ஆன்மா மட்டும் இருளில் மூழ்கிக்கிடந்தது. சிறை வளாகத்துக்குள்,அங்கிருந்த சிறைக்கூடங்களுக்குப்
பின்னால் இலக்கற்று வளைய வந்து கொண்டிருந்தேன். சிறையின் உறுதியான தடுப்பு வேலியைப்
பார்த்தபடி அதன் முட்கம்பிகளை இயந்திரத்தனமாக எண்ணிக்கொண்டிருந்தேன். அப்படி அதை எண்ண
வேண்டும் என்ற குறிப்பான தூண்டுதல் எதுவும் இல்லையென்றாலும் அது ஏனோ என்னிடம் ஒரு வழக்கமாகி
விட்டிருந்தது. அன்று ,சிறை விடுமுறைக் காலத்தின் இரண்டாவது தினம். கைதிகள் எந்த வேலைக்காகவும்
வெளியே அனுப்பப்படவில்லை; நிறையப்பேர் குடிபோதையில் இருந்தார்கள்;ஒருவரோடொருவர் சண்டை
போட்டுக்கொண்டும் ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்டும் இருந்தார்கள். சிறையின் பல மூலைகளிலிருந்தும்
அந்த சத்தம் எழுந்தபடி இருந்தது. வெறுப்பூட்டும் அருவருக்கத்தக்க பாடல்கள், கல்திண்ணைப்
படுக்கைகளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்தபடி
சீட்டாடிக்கொண்டிருந்த கைதிகள், மூர்க்கமாக நடந்து கொண்டதால் தங்கள் சக கைதிகளாலேயே
பயங்கரமான தாக்குதல்களுக்கும் அடிதடிகளுக்கும் ஆளாகிப் பாதி உயிர் போன நிலையில் ஆட்டுத்தோல்
போர்வை போர்த்தியபடி நினைவு திரும்பும் வரை கல்திண்ணைப் படுக்கையில் குற்றுயிராய்ப்
படுத்துக்கிடக்கும் சில கைதிகள்..- ஏற்கனவே பல முறை உள்ளே செலுத்தி உருவப்பட்டிருக்கும்
கத்திகள்*. கடந்த இரண்டு நாட்களாக என்னைச் சித்திரவதை செய்து
கொண்டிருந்த இவற்றின் பாதிப்பால் நான் கிட்டத்தட்ட நோயுற்றிருந்தேன் என்றே சொல்லலாம்.
குறிப்பாக இந்த இடத்தில் இந்தக் குடிகாரர்கள் போடும் சத்தத்தையும் ஒழுங்கீனமான அவர்களின்
செயல்களையும் அருவருப்பில்லாமல் சகித்துக்கொள்ள என்னால் கொஞ்சமும் முடியவில்லை. அவை
எனக்கு வெறுப்பேற்றுவனவாக இருந்தன. இப்படிப்பட்ட நாட்களில் சிறை அதிகாரிகளும் கூட அவர்களை
அதிகம் சோதனை போடுவதோ கண்காணிப்பதோ வோட்கா அருந்துகிறார்களா என்பதைக் கண்டுகொள்வதோ
இல்லை. ஒதுக்கப்பட்டவர்களான இவர்களை வருடத்தில் ஒரு முறையாவது இப்படிக் களியாட்டம்
போட விட வேண்டும் என்பதையும் இல்லையென்றால் நிலைமை இன்னும் மோசமாகி விடலாம் என்பதையும்
அவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள்.
திடீரென்று கையாலாகாத
ஒரு சினம் குபீரென்று என்னுள் மூண்டெழுந்தது. அரசியல் கைதியும் போலிஷ்நாட்டவருமான மிட்…..ஸ்கி* யை நான் வழியில் எதிர்ப்பட நேர்ந்தது.. இருண்ட பார்வையோடும்
கோபம் கனலும் விழிகளோடும் துடிக்கும் உதடுகளோடும் ‘நான் இந்தத் திருட்டுப்பயல்களை வெறுக்கிறேன்’
என்று தணிந்த குரலில் என்னிடம் கிசுகிசுப்பாய்ச் சொன்னபடி கடந்து சென்றார் அவர். நான்
சிறைக்குள் திரும்பி வந்தேன். கால் மணி நேரம் முன்புதான் பைத்தியம் பிடித்தது போல அங்கிருந்து
வேகமாக வெளியேறி இருந்தேன் நான். அப்போது ஆஜானுபாகுவான ஆறு மனிதர்கள், குடிபோதையில்
இருந்த டார்டார்* ஜேஸின் மீது பாய்ந்து அவனைத் தாறுமாறாக அடித்து நொறுக்கிக்
கொண்டிருந்தார்கள். காட்டுமிராண்டித்தனமாக அவர்கள் அடித்த அடியில் அங்கே ஓர் ஒட்டகம்
இருந்தால் அதற்குக்கூட உயிர் போயிருக்கும், ஆனால் ஹெர்குலிஸ் போல இருந்த அவனைக் கொல்வது
அத்தனை சுலபம் இல்லை என்று அவர்களுக்குத் தெரிந்திருந்ததால் எந்தத் தயக்கமும் இல்லாமல்
அவனை அடி வெளுத்து வாங்கிக்கொண்டிருந்தார்கள். இப்போது நான் அறைக்குத் திரும்பி வந்து
பார்க்கும்போது மூலையில் இருந்த ஒரு படுக்கையில் மூர்ச்சையாய்க் கிடந்தான் ஜேஸின்.
அவன் உயிரோடு இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லை. அவனது உடல் ஆட்டுத்தோலால் மூடியிருந்தது;
அவனைச் சுற்றிலும் பலரும் மௌனமாகப் பலரும் நடமாடிக்கொண்டிருந்தார்கள்; ஒருவேளை மறுநாள்
காலையிலேயே அவனுக்கு நினைவு திரும்பி வந்து விடக்கூடும் என்ற உறுதியான நம்பிக்கை அவர்களுக்கு
இருந்திருக்கலாம், அல்லது அதிருஷ்டம் அவனுக்கு சாதகமாக இல்லையென்றால் இந்த அளவுக்கு
அடி வாங்கியதில் அவன் இறந்தும் போய் விடலாம்.
நான் இரும்புக்கிராதி
போட்ட ஜன்னலுக்கு எதிர்ப்புறம் எனக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த இடத்துக்கு நகர்ந்து
சென்று மல்லாந்து படுத்தபடி என் கைகளைத் தலைக்குக் கீழே கோர்த்துக்கொண்டு கண்களை மூடிக்கொண்டேன்.
அப்படிப் படுத்திருக்கவே நான் விரும்பினேன்.
தூங்கிக்கொண்டிருக்கும்
மனிதனை யாரும் தொந்தரவு செய்ய மாட்டார்கள்,மேலும் அப்போது கனவு காணலாம்,சிந்திக்கலாம்.
ஆனால் எனக்குக் கனவு காண்பது கடினமாக இருந்தது. என் இதயம் அமைதியின்றிப் படபடத்துக்கொண்டிருந்தது.
‘நான் இந்தத் திருட்டுப்பயல்களை வெறுக்கிறேன்’ என்ற மிட்..…..ஸ்கியின் சொற்கள் காதுக்குள்
எதிரொலித்துக்கொண்டிருந்தன ஆனால் அதைப்பற்றியெல்லாம் விவரிப்பானேன்? இப்போதும் கூட
சில சமயங்களில் அந்த நாட்களைக் குறித்த கனவுகளை நான் கண்டுகொண்டுதான் இருக்கிறேன்,
இரவு வேளைகளில். நான் காணும் வேறெந்தக் கனவும் அப்படிப்பட்ட தாங்கொணாத துயர் தருவதாய்
இருந்ததே இல்லை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் என் சிறை வாழ்க்கையைப் பற்றி இதுவரை.
ஒரே ஒரு முறை தவிர நான் எழுத்தில் பதிவு செய்ததே இல்லை பதினைந்து ஆண்டுகளுக்கு முன்
நான் எழுதிய ‘இறந்தவர்களின் வீடு’ [The House of the Dead -1860] என்ற
நாவலில் தன் மனைவியைக் கொலை செய்த கற்பனையான ஒரு பாத்திரம் இடம் பெற்றிருந்தது. என் புத்தகம் வெளிவந்த அன்று முதல் இன்றுவரை மனைவியைக்
கொலை செய்த அந்தக் குற்றவாளி நான்தான் என்றும், சைபீரியக்கடுங்காவல் தண்டனையில் நான்
அனுப்பப்பட்டது கூட அதற்காகத்தான் என்றும் இன்னும் கூட சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்
என்பது ஒரு சுவாரசியமான தகவல்.
படிப்படியாக என் சுற்றுப்புறத்தை
மறந்து என் ஞாபங்களுக்குள் மூழ்கிப்போகத் தொடங்கி விட்டேன். நான்காண்டு சிறைவாசத்தில்
தொடர்ச்சியாக என் இறந்த காலங்களைப் பற்றியே எண்ணிக்கொண்டிருந்த நான் அந்த நினவுகள் வழியாக என் கடந்த காலத்திலேயே வாழத் தொடங்கி
விட்டது போலக்கூடத் தோன்றியது. அப்படிப்பட்ட ஞாபகங்கள் தாமாகவே என்னுள் கிளர்ந்தெழும்;
நானாக பிரக்ஞைபூர்வமாக அவற்றை எழுப்ப முயன்றதில்லை. ஏதாவது ஒரு புள்ளியில்…, கவனத்திலேயே
தங்கியிருக்காத ஏதேனும் ஒரு அற்ப விஷயத்தில் அது தொடங்கும், பிறகு கொஞ்சம் கொஞ்சமாக
அது விரிவடைந்து கொண்டே சென்று தெளிவான முழுமையான ஒரு சித்திரமாகப் புலனாகி விடும்.
அவற்றை நான் எனக்குள் பல விதமாக அலசிப் பார்ப்பேன், எத்தனையோ காலத்துக்கு முன்பு நிகழ்ந்த
ஒரு விஷயத்துக்குப் புதிது புதிதாய் மெருகேற்றிப் பார்ப்பேன்,.
அதற்கெல்லாம் மேலாக சில
சமயம் நான் அவற்றைத் திருத்தவும் கூடச்செய்வேன், சொல்லப்போனால். இடைவிடாமல் திருத்துவேன்,
அது எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.
இப்போது..ஏனோ எந்தக்காரணத்தாலோ
நான் ஒன்பது வயதுச் சிறுவனாக இருந்த அந்த பாலிய பருவத்தின் கண்டுகொள்ளாத ஒரு நொடி..,
மின்னலடிக்கும் ஒரு கணம் சட்டென்று என் நினைவில் எழுந்தது. முழுக்க முழுக்க மறந்து
போய் விட்டதாக நான் நினைத்துக்கொண்டிருந்த ஒரு கணம் அது. ஆனால்..அப்போது அந்த சிறைவாச
நாட்களில் – என்றோ.., எந்தக் காலத்திலோ நடந்த என் குழந்தைப்பிராய நினைவுகளை மீட்டெடுத்துப்
பார்ப்பதில் எனக்குத் தனிப்பட்ட பிரியம் இருந்தது.
எங்கள் கிராமத்தின்
ஒரு ஆகஸ்ட் மாதத்து நாள் என் நினைவில் எழுந்தது. காற்றும் குளிரும் ஒரு பக்கம் இருந்தாலும்
மழை இல்லாத வெளிச்சமான நாள்தான் அது. கோடைகாலம் முடியும் சமயம் நெருங்கிக்கொண்டிருந்தது.
சீக்கிரமே நாங்கள் மாஸ்கோ போயாக வேண்டும், சலிப்பூட்டும் ஃபிரெஞ்சுப் பாடங்களுக்குள்
குளிர்காலம் முழுவதையும் கழிக்க வேண்டும்.
எனக்கு கிராமத்தை விட்டுச்
செல்ல நேர்வது வருத்தமாக இருந்தது. கதிரடித்துக்கொண்டிருந்த சமநில வயல் பகுதிகளைத்
தாண்டி ஒரு பள்ளத்தாக்கிற்குள் இறங்கி சரிவில் இருந்த அடர்த்தியான புதர்கள் வழி மேலேறிச்சென்றேன்.
பள்ளத்தாக்கின் மறுபகுதியில் அந்தப் புதர்கள் முடியும் இடத்தில் ஒரு குறுங்காடு இருந்தது.
காட்டுப்புதர்களுக்கு நடுவே நான் இறங்கியபோது எனக்கு மிக அண்மையில் - முப்பது தப்படியில்
ஒரு குடியானவன் சிறிய நிலப்பரப்பொன்றைத் தனியாக உழுது கொண்டிருக்கும் சத்தம் கேட்டது.
செங்குத்தான மலைப்பகுதியில்
அவன் உழுது கொண்டிருக்கிறான் என்பதும் அவனது குதிரை அதற்காக மிகவும் கடினமாக முயற்சி
செய்து கொண்டிருக்கிறது என்பதும் எனக்குப் புரிந்தது. அவ்வப்போது..’’ம்..மேலே போ…!
ம்…ம்..மேலே…மேலே..இன்னும் மேலே போ..’’ என்று அதை அவன் தூண்டி விடும் சத்தமும் மிதந்து
வந்து என்னை அடைந்தது. கிட்டத்தட்ட எங்கள் குடியானவர்கள் எல்லோரையுமே எனக்குத் தெரியும்;
ஆனால் இப்போது இங்கே உழுது கொண்டிருப்பவன் யார் என்று எனக்குத் தெரியவில்லை. மேலும்
என்னுடைய வேலைகளில் மும்முரமாக இருந்ததால் அது யார் என்பதைப்பற்றி நான் கவலைப்படவும்
இல்லை.’ஹேஸல்நட்’ மரங்களிலிருந்து சின்னச்சின்னக் குச்சிகளை ஒடித்துச் சாட்டையாக்கி
அவற்றால் தவளைகளைச் சுண்டி விடுவதில் நான் ஈடுபட்டிருந்தேன். ’ஹேஸல்’ மரத்தின் குச்சிகள்
சாட்டைகளாகச் சொடுக்க மிகவும் ஏற்றவை, ஆனால் அவை ’.பிர்ச்’ மரக்குச்சிகளை விட மிகவும்
மெலிதானவை என்பதால் எளிதில் உடைந்து போய்விடக்கூடியவைகளாகவும் இருந்தன.
அங்கே இருந்த வண்டுகளையும்
பூச்சிகளையும் ஆர்வமாய்ப் பார்த்தபடி அவற்றையும் நான் சேகரித்துக்கொண்டிருந்தேன். அவைகளில்
சில மிக மிக அழகாக இருந்தன. கறுப்பு நிறப்புள்ளிகளோடு சிவப்பு மஞ்சள் நிறங்களில் சுறுசுறு
என்று நகரும் சிறிய பச்சோந்திகளையும்,பல்லிகளையும், ஓணான்களையும் எனக்குப் பிடித்திருந்தது.
ஆனால் பாம்புகளுக்கு மட்டும் நான் பயந்தேன். ஆனால் பல்லிகளையும் ஓணான்களையும் விட பாம்புகள்
குறைவாகவே இருந்தன. அங்கே காளான்குடைகளும் அதிகம் தென்படவில்லை. காளான் வேண்டுமென்றால்
’பிர்ச்’ மரங்களுக்குப் பக்கத்தில் போக வேண்டும். நான் அங்கே போகலாமென்று நினைத்தேன்.
காளான்களும் காட்டு ’பெரி’களும் வண்டுகளும் தட்டாம்பூச்சிகளும் பறவைகளும் நிறைந்திருக்க, முள்ளம்பன்றிகளும் அணில்களும் ஓடிக்கொண்டிருக்கும்
காட்டை விட - மக்கிப்போன இலைகளின் வாசம் வீசும் காட்டை விட- இந்த உலகத்தில் நான் வேறெதையுமே அதிகமாக நேசிக்கவில்லை.
இதை எழுதிக்கொண்டிருக்கும்
இப்போதும் கூட எங்கள் ’பிர்ச்’ மரக்காட்டின் வாசத்தை என்னால் நுகர முடிகிறது. இப்படிப்பட்ட
அனுபவங்கள் வாழ்க்கை முழுவதும் உங்களுடனேயே தங்கியிருப்பவை. மரண அமைதி நிலவிய அந்த
இடத்தில் திடீரென்று ‘’ஓநாய்..ஓநாய்’’ என்று ஒரு கூச்சல் மிகத் தெளிவாக,துல்லியமாகக்கேட்டது.
நானும் பயந்து போய்க் கூச்சலிட்டேன். உச்சபட்சக் குரலில் அலறியபடி குடியானவன் உழுது
கொண்டிருந்த பகுதியை நோக்கி வேகமாக ஓடினேன்.
அங்கே இருந்தது எங்கள்
குடியானவன் மரேய். அப்படி ஒரு பெயர் இருக்கிறதா என்று எனக்குத் தெரியாது.ஆனால் எல்லோருமே
அவனை மரேய் என்றுதான் கூப்பிடுவது வழக்கம்.கிட்டத்தட்ட ஐம்பது வயது நிரம்பிய அந்தக்
குடியானவன் நல்ல பருமனும் சராசரிக்கு மேற்பட்ட உயரமும் உடையவன். அடர்த்தியான அவனது
செம்பழுப்பு நிறத் தாடியில் ஆங்காங்கே சில நரை முடிகள் தெரிந்தன. எனக்கு அவனைத் தெரிந்திருந்தபோதும்
இதுவரை நான் அவனோடு பேசியதே இல்லை.
என் கூச்சலைக்கேட்டதும்
அவன் தன் கிழட்டுக் குதிரையை ஓட்டுவதைக்கூட நிறுத்தி விட்டான். என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள
முடியாமல் அவனது மரக்கலப்பையை ஒரு கையாலும் மற்றொரு கையால் அவனது சட்டையையும் பிடித்துக்கொண்டபோதுதான்
நான் எந்த அளவுக்கு மிரண்டு போயிருக்கிறேன் என்பதை அவன் தெரிந்து கொண்டான்.
‘’அங்கே ஒரு ஓநாய் இருக்கு’’ என்று மூச்சு வாங்கிக்கொண்டே கதறினேன்.
அவன் தலை தன்னிச்சையாக உயர்ந்தது. என்னை நம்புபவன் போல ஒரு கணம்
சுற்றுமுற்றும் பார்த்தான்.
‘’ஓநாயா? எங்கே இருக்கு?’’
‘’யாரோ கத்தினாங்க…இப்பதான் ஓநாய் ஓநாய்னு கத்தினாங்க’’ என்றபடி
திக்கித் திணறினேன்.
‘’சே சே அதெல்லாம் எதுவுமே இங்கே இல்லை, இதோ பாரு குட்டிப்பையா…,
என்னைக் கொஞ்சம் பாரேன்…இங்கே அந்தமாதிரி ஓநாயெல்லாம்
ஏதும் இல்லை,சரியா’’ என்று மெள்ளச் சொல்லியபடி என்னை அமைதிப்படுத்த முயன்றான். ‘’நீ
ஏதோ கனவு கண்டிருக்கே பையா, இங்கே ஓநாய் இருக்குன்னு யாருமே கேள்விப்பட்டதில்லை’’
ஆனால் என் உடல் முழுவதும் வெடவெடத்துக்கொண்டிருக்க நான் அவனது
அங்கியை இன்னும் இறுகப் பிடித்துக்கொண்டிருந்தேன். அப்போது நான் மிகவும் வெளிறிப்போயிருக்க
வேண்டும் என்று தோன்றுகிறது. அவன் என்னைக் கவலை தோய்ந்த புன்னகையோடு பார்த்தான். என்னைப்பற்றி
அவனுக்கும் கவலை ஏற்பட்டிருக்க வேண்டும் என்பதை அது வெளிக்காட்டியது.
‘’இதோ பாரு கண்ணு , என் கண்ணில்லே நீ! அட, என் செல்லம்? நீதான்
எப்படி பயந்து போயிருக்கே? ! ஐயோ? பாவம் என்னோட சின்னப் பையன்!…..நீ அப்படியெல்லாம்
பயப்படவே வேண்டியதில்லை, நான் இருக்கேன் பார்த்தியா, இதோ பாரு,,இங்கே கொஞ்சம் பாரேன்’’
என்றபடி அவன் தன் கையை நீட்டி சட்டென்று என் கன்னத்தில் வருடித்
தந்தான்.
‘’இதோ பாரு…, கிறிஸ்து உன்னோடயே இருப்பார்,சரியா? சிலுவை போட்டுக்கோ.நல்ல
பையனில்லையா நீ’’
ஆனால் நான் சிலுவைக்குறி போட்டுக்கொள்ளவில்லை. பயத்தில் என் உதட்டோரம்
இன்னும் துடித்துக்கொண்டுதான் இருந்தது. குறிப்பாக அது அவனைப் பாதித்திருக்க வேண்டும்.
கறுத்துப்போன நகத்தோடு கூடிய சேறு படிந்த தடிமனான தன் விரலால் நடுங்கிக்கொண்டிருந்த
என் உதடுகளை அவன் மெள்ளத் தொட்டான்.
‘’என் கண்ணில்லே… என் கண்ணுப் பிள்ளையில்லே’’ என்று என்னைப்பார்த்துப்
புன்னகைத்தான். அந்தப் புன்னகையில் தாய்மை
உணர்வின் சாயல் இலேசாகத் தென்பட்டது.
‘’கடவுளே, பாவப்பட்ட இந்தப் பிள்ளைதான் எப்படி பயந்து போயிருக்கான்’’
இறுதியில் அங்கே ஓநாய் எதுவும் இல்லை என்பதும் ‘ஓநாய் ஓநாய்’ என்று
யாரோ கத்துவதாக நானாகக் கற்பனை செய்து கொண்டிருக்கிறேன் என்பதும் எனக்குப் புரிந்து
விட்டது. ஆனால் அந்த சத்தம் என்னவோ தெளிவாக துல்லியமாகத்தான் இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட
சத்தங்கள் (ஓநாயைப் பற்றியதாக மட்டும் இல்லையென்றாலும்) இதற்கு முன்னாலும் ஓரிரு முறை
நான் கற்பனை செய்து கொண்டவையே என்பதை நான் அறிந்திருந்தேன்.( பிறகு சில ஆண்டுகள் கழித்து
அப்படிப்பட்ட பிரமைகளிலிருந்து நான் விடுபட்டு விட்டேன்)
‘’சரி, நான் போய்ட்டு வரேன்’’ என்று அவனைப்பார்த்துத் தயக்கத்தோடும்
கூச்சத்தோடும் கேட்டேன்.
‘’சரி வேகமா ஓடு.., ஒரே ஓட்டமா ஓடிடு பையா..நான் உன்னை கவனிச்சுக்கறேன்’’என்றான்
அவன்.
‘’எதுக்கும் பயப்படாதே. அந்த ஓநாய் உன்கிட்டே எப்படி வருதுன்னு
நான் பார்த்திடறேன்’’ என்றும் சொல்லிவிட்டு அதே தாய்மை கலந்த புன்னகையோடு என்னைப்பார்த்து
சிரித்தான்.
‘’சரி..! கிறிஸ்து உன் கூடவே இருப்பார். வேகமா ஓடிடு. ஓடிப்போயிடு
சின்னப் பையா ’’ என்று சொல்லியபடி எனக்கு சிலுவைக்குறி
போட்டு விட்டுத் தனக்கும் அவ்வாறே போட்டுக்கொண்டான். பத்தடிக்கு ஒரு முறை அவனைத் திரும்பிப்பார்த்தபடியே
நான் நடந்தேன். நான் நடந்து சென்றபோது –தன் இடத்தை விட்டு சற்றும் நகராமல் - தன் பெண்குதிரையோடு
அசையாமல் நின்றபடி என்னைப்பார்த்துக்கொண்டிருந்தான் மாரி. ஒவ்வொரு முறை நான் அவனைத்
திரும்பிப் பார்த்தபோதும் என்னைப் பார்த்துத் தலை அசைத்துக்கொண்டும் இருந்தான். நான்
பயந்து போனதை இந்த அளவுக்கு அவனிடம் வெளிப்படுத்தி விட்டோமே என்று எனக்குக் கொஞ்சம் கூச்சமாக இருந்ததை நான் ஒப்புக்கொள்ளத்தான்
வேண்டும். ஆனாலும் நடந்து சென்றபோது ஓநாயைப் பற்றிய பயம் எனக்குள் தொடர்ந்து இருக்கத்தான்
செய்தது. பள்ளத்தாக்கின் பாதியில் இருந்த முதல் கதிரடிக்கும் இடத்தையும் நெல் சேமிக்கும்
’குதி’ரையும் நெருங்கும் வரை அது நீடித்தது. அதற்குப் பிறகு அது மறைந்தே போய் விட்டது.
எங்கள் வளர்ப்பு நாயான வோல்ட்சாக் திடீரென்று என்னை நோக்கி ஓடி வருவதைப்பார்த்ததும்
அது போயே போய் விட்டது. வோல்ட்சாக்கைப் பார்த்ததும் நான் மிகவும் பாதுகாப்பாய் இருப்பதாய்
உணர்ந்தபடி கடைசி முறையாக மாரியைத் திரும்பிப் பார்த்தேன். அவன் முகம் தெளிவாகப் புலப்படாவிட்டாலும்
அவன் இன்னும் என்னைப்பார்த்துத் தலையசைத்துக்கொண்டும் பாசத்தோடு புன்னகை செய்து கொண்டும்
இருப்பதை என்னால் உணர முடிந்தது. நான் அவனை நோக்கிக் கை அசைத்தேன். அவனும் திரும்பக்
கை அசைத்து விட்டுத் தன் குதிரையை செலுத்த ஆரம்பித்தான். ‘’ம்..போ போ..மேலே போ’’ என்ற
அவனது குரல் தூரத்தில் மறுபடியும் கேட்கத் தொடங்கியிருந்தது. மீண்டும் அந்தச் சிறிய
குதிரை நிலத்தை உழ ஆரம்பித்து விட்டது.
இவை எல்லாமே, மிகத்
தெளிவாக, நுட்பமான எல்லாத் தகவல்களோடும் - ஆச்சரியப்படத்தக்க வகையில் சட்டென்று எனக்கு
நினைவுக்கு வந்து விட்டது ஏன் என்று எனக்கு விளங்கவில்லை.
நான் சட்டென்று எழுந்து
என் கல்திண்ணைப் படுக்கை மீது அமர்ந்து கொண்டேன். அப்போது அந்த ஞாபகத்தால் என் உதட்டில்
அரும்பிய அந்த மென்மையான புன்னகையைக்கூட இப்போது என்னால் நினைவுகூர முடிகிறது. அடுத்த
ஒரு நிமிடமும் என் பிள்ளைப் பிராயத்தில் நடந்த அந்த சம்பவத்தைப் பற்றியே அசை போட்டுக்கொண்டிருந்தேன்.
மரேயை சந்தித்து விட்டு
வீடு திரும்பிய அன்று எனக்கு ஏற்பட்ட அந்த ‘சாகச’ சம்பவத்தைப்பற்றி நான் யாரிடமுமே
சொல்லவில்லை. அது ஒன்றும் அப்படிப்பட்ட பெரிய சாகசம் இல்லைதான். இன்னும் சொல்லப்போனால்
சீக்கிரத்திலேயே நான் மரேயையும் மறந்து போனேன். எப்போதாவது அவனை எதிர்ப்பட நேரும்போதும்
ஓநாயைப் பற்றியோ, வேறு எதைப்பற்றியுமோ கூட நான் ஒருபோதும் பேசியதில்லை. இருபது ஆண்டுகள்
கழித்து இப்போது சைபீரியாவில் இருக்கும் இந்த நேரத்தில் திடீரென்று அந்த நிகழ்ச்சி
அசாதாரணமான துல்லியத்தோடு – ஒரு சின்னத் தகவல் கூட விடுபட்டுப்போகாமல் ஞாபகம் வருகிறதென்றால்
என்னை அறியாமலேயே என் உள்ளத்தின் ஆழத்தில் அது தானாகவே மறைந்திருந்திருக்க வேண்டும்.
தேவைப்படும் வேளையில் அது இப்போது திடீரென்று நினைவு வந்திருக்கிறது. அந்த அடிமைக்
குடியானவன் என்னைப் பார்த்துத் தாய்மைக்குரிய பரிவோடு புன்னகை செய்தது, என் மீதும்
தன் மீதும் அவன் சிலுவைக்குறி போட்டுக்கொண்ட விதம், அவன் என்னைப்பார்த்துத் தலையசைத்தது
என்று எல்லாவற்றையுமே நான் நினைவு கூர்ந்தேன்.
‘’கடவுளே, பாவம் இந்தப்பிள்ளைதான் எப்படி பயந்து போயிருக்கான்’’
என்று அவன் சொன்னது, குறிப்பாக…, கறுத்துப்போன நகத்தோடு கூடிய சேறுபடிந்த தடிமனான தன்
விரலால் நடுங்கிக்கொண்டிருந்த என் உதடுகளைக் கூச்சத்தோடும் தயக்கத்தோடும் அவன் தொட்டது என்று
எல்லாமே..!
ஒரு குழந்தையை சமாதானப்படுத்துவதற்காக,
இப்படி ஒரு செயலை யார் வேண்டுமானாலும் நிச்சயமாக செய்திருக்கலாம், அதில் சந்தேகமே இல்லை.
ஆனால் எவருமற்ற தனிமையில் நிகழ்ந்து முடிந்த அந்த சந்திப்பில் முற்றிலும் வேறான ஒன்றும்
நடந்திருந்ததைப் போலிருந்தது. ஒருவேளை நான் அவனது மகனாகவே இருந்திருந்தால் அளவற்ற அன்பு
சுடர்விடும் விழிகளோடு அவன் என்னை இப்படிப் பார்த்திருக்க மாட்டான். அப்படிப் பார்க்குமாறு அவனை
வற்புறுத்தியது எது ? அவன் எங்கள் எண்ணற்ற அடிமைகளில் ஒருவன், எங்கள் உடைமைகளில், எங்கள்
சொத்து*க் கணக்கில் ஒருவனாகக் கருதப்படும் ஒரு குடியானவன் ; நான்…, அவனது
எஜமானரின் மகன் அவ்வளவுதான். அவன் என்னிடம் இவ்வளவு பிரியமாக இருந்தான் என்பது யாருக்குமே
தெரிந்திருக்கப்போவதில்லை, அப்படியே தெரிய வந்தாலும், அதற்காக அவனுக்கு யாரும் எந்த
வெகுமதியும் தரப்போவதும் இல்லை. உண்மையாகவே சின்னக்குழந்தைகளிடம் அவனுக்கு அளவற்ற அன்பு
இருக்கக் கூடுமோ? அப்படியும் சில பேர் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதில் சந்தேகம்
இல்லை.
எங்கள் சந்திப்பு
மிக மிக ஒதுக்குப்புறமான ஓர் இடத்தில், யாருமே இல்லாமல் வெறிச்சென்று கிடந்த தனிமையான
நிலப்பகுதி ஒன்றில் நிகழ்ந்தது. நாகரிகம் அறியாத முரட்டுத்தனமான காட்டுமிராண்டி போன்ற
ஒரு ரஷ்ய அடிமை…, தனது விடுதலையைக் குறித்தோ தனது ஈடேற்றம் குறித்தோ ஒருபோதும் கனவு
கூடக் கண்டிராதவனும், அதை எதிர்பார்த்திராதவனுமான ஓர் அடிமை…, அவனுக்குள் அபரிமிதமாய்ப்
பொங்கித் ததும்பிய மனிதநேய உணர்வு, பண்படாத முரட்டுத்தனமான அந்த இதயத்திலிருந்து ஒரு
பெண்ணைப் போன்ற பரிவோடு, மென்மையாக, நுட்பமாக வெளிப்பட்ட காருண்யம்…இவற்றையெல்லாம்..-
ஒருவேளை அந்தக் கடவுள் மட்டுமே மேலிருந்து பார்த்துக்கொண்டிருந்திருக்கலாம்.
ஒருக்கால் நம் நாட்டுப்புற
மக்களுக்கு இருப்பதாக கான்ஸ்டாண்டின் அக்ஸகோவ்* குறிப்பிடும்
மிக உச்சபட்சமான பண்பாடு என்பது இதுவாகத்தான் இருக்குமோ?
கல்திண்ணைப் படுக்கையிலிருந்து
எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தபோது துரதிருஷ்டசாலிகளான அந்த ஜீவன்களை முழுக்க முழுக்க
வேறுவகையான கண்ணோட்டத்துடன் என்னால் திடீரென்று பார்க்க முடிந்தது என்பது, எனக்கு நினைவிருக்கிறது.
நான் கொண்டிருந்த கோபமும் வெறுப்பும் ஏதோ ஒரு அற்புதத்தால் சட்டென்று என் இதயத்திலிருந்து
விலகிப்போனது போலிருந்தது. சிறையைச் சுற்றி நடந்தபடி நான் அதுவரை எதிர்ப்பட்ட முகங்களைத்
துருவிப் பார்த்தேன். அதோ அங்கே மழிக்கப்பட்ட தலையோடு, முகத்தில் தெரியும் குற்றவாளி
என்ற முத்திரையோடு ,குடிபோதையில் உச்ச ஸ்தாயியில் ஏதோ கரகரப்பான குரலில் பாடிக்கொண்டிருக்கிறானே
அவனும் கூட மரேயைப் போன்ற அதே மாதிரியான ஒரு குடியானவனாக இருக்கக்கூடும். என்னால் அவனது இதயத்துக்குள் புகுந்து பார்க்க முடியப்போகிறதா
என்ன? அன்று மாலை நான் மறுபடியும் மிட்......ஸ்கியைப் பார்த்தேன். பாவம் அந்த மனிதர்,
மாரியையோ அவனைப்போன்ற வேறு குடியானவர்களைப்
பற்றியோ குறித்த எந்தப் பழைய ஞாபகங்களும் அவருக்கு
இருக்காது. என்பதால், '‘நான் இந்தத் திருட்டுப்பயல்களை வெறுக்கிறேன்’’ என்பதைத்தவிர அந்த மக்களைப்பற்றிய வேறு எந்த
அபிப்பிராயமும் அவருக்கு இருக்கவும்.முடியாது. ஆமாம்.. நம்மை விட… அவரைப்போன்ற போலிஷ்
நாட்டவர்களுக்கு அது மிகவும் கடினமானதுதான்!
***************************************************************
குறிப்புகள்;
;* பல முறை
உள்ளே செலுத்தி உருவப்பட்டிருக்கும் கத்திகள்*!:
சிலுவையில் ஏசு இறந்தபோது சுற்றியிருந்த ரோமானியக் காவலர்கள் நடந்து கொண்ட முறையைக்
குறிப்பாக உணர்த்துகிறது.
*‘இறந்தவர்களின் வீடு’ ; தஸ்தயெவ்ஸ்கி எழுதிய The House
of the Dead நாவலைக்குறிப்பிடுகிறது.
*மிட்..ஸ்கி; ஓ.மிர்ட்ஸ்கி -
O.Miretski என்பவர் தஸ்தயெவ்ஸ்கியுடன் சிறை
*டார்டார்; ரஷ்யாவில் இருக்கும்
துருக்கி மொழி பேசும் சிறுபான்மை இனத்தினர்
*அடிமை-serf- ரஷ்ய நிலக்கிழார்களின்
சொத்து மதிப்பு அவர்கள் எத்தனை அடிமைகளைத் தங்கள் உடைமைகளாக வைத்திருக்கிறார்கள் என்பதைப்
பொறுத்ததாகவும்.இருந்தது.
* கான்ஸ்டாண்டின்
அக்ஸகோவ்; ரஷ்ய எழுத்தாளர்,திறனாய்வாளர்.- (1817–1860)
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக