துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

10.6.24

மேபெல்-மொழியாக்கச் சிறுகதை

 

மேபெல்


மூலம் : சாமர்செட்மாம்

ஆங்கில வழி தமிழாக்கம்: எம் ஏ சுசீலா


https://solvanam.com/2024/06/09/%e0%ae%ae%e0%af%87%e0%ae%aa%e0%af%86%e0%ae%b2%e0%af%8d/ 

சொல்வனம் 320 ஆம் இதழில் வெளிவந்திருக்கும் என் மொழியாக்கச் சிறுகதை.


நான் பர்மாவிலுள்ள பேகன் நகரத்தில் இருந்து மேண்டலே செல்வதற்காக நீராவிக்கப்பலில் பயணித்தேன்.  அங்கே சென்று சேர இரண்டு நாட்கள் இருக்கும்போது இரவு நேர ஓய்வுக்காக  ஆற்றங்கரை ஓரமாக இருக்கும் ஒரு கிராமத்தில் கப்பலை நிறுத்தி வைத்திருந்தார்கள். அப்போது  நானும் கரையில் இறங்கிப் பார்க்கத் தீர்மானித்தேன்.

அங்கே ஒரு நல்ல கிளப் இருப்பதாகவும், அங்கே உள்ளவர்கள் இப்படிக்கப்பலில் இருந்து இறங்கி வரும் முகமறியாத மனிதர்களோடு அடிக்கடி பழகிப்போனவர்கள் என்பதால் நான் வீட்டில் இருப்பது போல் அங்கே உணர முடியும் என்றும் கப்பல் கேப்டன் சொன்னார். ஒருக்கால் அங்கே என்னால் ப்ரிட்ஜ் (சீட்டு விளையாட்டு)விளையாடக்கூட முடியலாம்.

எனக்கு வேறு வேலை எதுவும் இல்லாததால் கரையில் காத்துக்கொண்டிருந்த மாட்டு வண்டி ஒன்றில் ஏறிக்கொண்டு கிளப்பை நோக்கி சென்றேன்.வராந்தாவில் அமர்ந்திருந்த ஒரு மனிதன் என்னை வரவேற்றுத் தலையசைத்தான். விஸ்கி, சோடா ,ஜின் போன்ற மது வகைகளில் எனக்கு எது வேண்டும் என்று கேட்டான். ஒருவேளை எனக்கு இவை எதுவுமே தேவைப்படாமலும்  போகலாம் என்பது மட்டும் அவனுக்கு தோன்றவில்லை.

நான் உயரமான கிளாசில் சற்று நீண்ட நேரம் பருகக்கூடிய பானம் ஒன்றைத் தேர்ந்து எடுத்துக்கொண்டு அங்கே அமர்ந்து கொண்டேன்.

அந்த மனிதன் பழுப்பு நிறத்தோலுடனும் பெரிய மீசையுடனும் மெலிவாக உயரமாக இருந்தான். காக்கிச் சட்டையும் அதே நிறக்கால் சட்டையும் அணிந்திருந்தான். அவன் பெயர் எனக்குத் தெரியவில்லை. நாங்கள் இருவரும் சற்று நேரம் உரையாடிக்கொண்டிருந்தோம். 

அப்போது அங்கே வந்த இன்னொரு மனிதர் தன்னை கிளப்பின் செயலாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். என்னோடு ஏற்கனவே என்னோடு பேசிக்கொண்டிருந்த நபரை ஜார்ஜ் என்று அழைத்தார்.

“ உன் மனைவியிடமிருந்து எதுவும் செய்தி வந்ததா” என்று அவனைக் கேட்டார்.

அவன் கண்கள் அதைக்கேட்டதும் பிரகாசம் அடைந்தன. 

“ ஆமாம். எனக்கு அஞ்சலில் கடிதங்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அதை அவள் விடாமல் செய்துகொண்டுதான் இருக்கிறாள்”

“ நீங்கள் வருத்தப்பட வேண்டாம் என்று அதில் சொல்லவில்லையா”

ஜார்ஜ் அதைக் கேட்டு அமைதியாக சிரித்துக்கொண்டான், அதில் மிக இலேசான துயரத்தின் நிழல் தென்படுவது போல் எனக்குத் தோன்றியது..அல்லது ஒருக்கால் நான்தான் அப்படித் தவறாகப் புரிந்து கொண்டு விட்டேனோ? 

“உண்மையில் அவள் அப்படித்தான் எழுதியிருக்கிறாள். ஆனால், செய்வதை விட சொல்வது எப்போதுமே சுலபம்தானே? அவள் ஒரு  விடுமுறையை விரும்புவது எனக்குத் தெரியும். அவளுக்கு அது தேவை என்பதையும் நான் அறிந்திருக்கிறேன். ஆனாலும் எனக்கு மிகவும் கடினமாகத்தான் இருக்கிறது” என்றபடி என் பக்கம் திரும்பினான் அவன். “ உங்களுக்கு ஒன்று தெரியுமா, முதல் முறையாக இப்போதுதான் என் மனைவியை விட்டுப் பிரிந்திருக்கிறேன். அவள் என் கூட இல்லாததால் தொலைந்து போன நாய்க்குட்டியைப் போல  உணர்கிறேன்”

“ உங்களுக்குத் திருமணம் ஆகி எத்தனை காலமாயிற்று?”

“ ஐந்து நிமிடங்கள்..”

கிளப் செயலாளர் அதைக்கேட்டுவிட்டுச் சிரித்தார்.

“ ஜார்ஜ், முட்டாள்தனமாய் உளறாதே. உனக்குக் கல்யாணமாகி எட்டு வருடங்கள் ஓடி விட்டன”

அதன்பிறகு நாங்கள் தொடர்ந்து சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். தன் கைக்கடிகாரத்தைப் பார்த்த ஜார்ஜ் தான் போய் உடை மாற்றி இரவுச்சாப்பாட்டுக்கு ஆயத்தமாக வேண்டும் என்று சொல்லியபடி எங்களிடமிருந்து விடை பெற்றுக்கொண்டான்.

“ இப்போது அவன் தனியாக இருப்பதால் நாம் அவனிடம் என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்” என்றார் செயலர். 

“ மனைவி ஊருக்குப் போனதிலிருந்தே அவன் மிகவும் வருத்தமாய், சுரத்தில்லாமல்தான் இருக்கிறான்” 

“கணவன் தன் மீது இவ்வளவு அன்பாய் இருக்கிறான் என்பது தெரிந்தால் அந்த மனைவிக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும்”

“ அந்த மேபெல் இருக்கிறாளே அவள் ஒரு அபாரமான  பெண்மணி”

அவர் பரிமாறுபவனை அழைத்து இன்னும் சில மதுபானங்களுக்கு ஆர்டர் கொடுத்தார். விருந்து உபசாரம் சிறப்பாக இருக்கும் இந்த மாதிரி இடத்தில் உங்களுக்கு என்ன வேண்டும் என்றெல்லாம் அவர்கள் கேட்டுக்கொண்டிருப்பதில்லை. அவர்களாகவே அதைத்தீர்மானித்து விடுகிறார்கள். தனது நீளமான நாற்காலியில் உட்கார்ந்து சுருட்டு ஒன்றைப்பற்ற வைத்துக்கொண்டார் அவர். பிறகு, ஜார்ஜ்- மேபெல் கதையை எனக்கு சொல்லத் தொடங்கினார்.

விடுமுறைக்காக ஜார்ஜ் சொந்த ஊருக்குப் போயிருந்தபோது அவனுக்குத் திருமணம் நிச்சமாயிற்று. அவன் பர்மா திரும்பி வந்தபின்- அடுத்த ஆறுமாதங்களுக்குள் அவள் அவனிடம் வந்து சேர்ந்து விட வேண்டும் என்று ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அடுத்தடுத்து ஏதோ ஒரு சிக்கல் முளைத்துக்கொண்டே இருந்தது. மேபெலின் தந்தை காலமானார், போர் வந்து விட்டது.., ஒரு வெள்ளைக்காரப் பெண்மணிக்கு ஒத்து வராத  ஏதோ ஒரு தொலைதூர மாகாணத்துக்கு ஜார்ஜ் அனுப்பப்பட்டான், இப்படி ஏதேதோ பிரச்சினைகள். அதனால், தான் இருந்த இடத்திலிருந்து கிளம்ப மேபெலுக்கு ஏழு வருடங்கள் ஆகி விட்டன. அவள் வந்து இறங்கிய நாளன்றே திருமணம் நடப்பதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்து விட்டு அவளை அழைத்து வருவதற்காக ரங்கூனுக்குக் கிளம்பினான் ஜார்ஜ். கப்பல் வந்து சேரும் நாளில் ஒரு மோட்டார் காரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு துறைமுகத்துக்குச் சென்றான், கரையைக் காலால் அளந்தபடி அங்கே நடந்து கொண்டிருந்தான். அப்போது திடீரென்று எந்த முன்னெச்சரிக்கையும் இல்லாமல் அவனது  துணிச்சல் அவனிடமிருந்து கை நழுவிப்போயிற்று. அவன் மேபெலைப் பார்த்து ஏழு ஆண்டுகள் ஆகி விட்டன. அவள் எப்படி இருப்பாள் என்பதே அவனுக்கு மறந்து போயிருந்தது. அவள் இப்போது முழுக்க முழுக்க அவன் அறிந்திராத வேறொருத்தியாகத்தான் இருப்பாள். அடி வயிற்றில் இனம் புரியாத பயங்கரமான ஏதோ ஒரு சங்கடம் பிசைவது போல இருந்தது. கால்கள் துவண்டன. அவனால் அதைச்செய்ய முடியாது…அதற்காக மேபெலிடம் அவன் மன்னிப்புக் கேட்க வேண்டும்தான். ஆனால் , அவளைத் திருமணம் செய்து கொள்வது  மட்டும் அவனால் நிச்சயம் முடியாது. ஆமாம்… கட்டாயம் அது முடியாது. ஆனால் ஏழு வருடத்துக்கு முன்பே தனக்காக நிச்சயிக்கப்பட்டுக் காத்திருந்த ஒரு பெண்ணிடம், தன்னைத் தேடிக்கொண்டு ஆறாயிரம் மைல்கள் பயணம் மேற்கொண்டு வரும் ஒரு பெண்ணிடம் ஒரு மனிதனால் அதை எப்படிச்சொல்ல முடியும்? அதற்கான தைரியமும் அவனிடம் இல்லை. விரக்தி மேலீட்டால் எழுந்த ஏதோ ஒரு அசட்டுத் துணிச்சல் அவனை ஆட்கொண்டது. கப்பல் துறையில் சிங்கப்பூர் கிளம்புவதற்கான படகு ஒன்று ஆயத்த நிலையில் நின்று கொண்டிருந்தது. மேபெலுக்கு வேகவேகமாக ஒரு கடிதம் எழுதிப்போட்டு விட்டு ஒரு துரும்பைக்கூடக் கையில் எடுத்துக்கொள்ளாமல் அப்படியே உடுத்திய துணியோடு சிங்கப்பூர் செல்லும் படகில் ஏறிக்கொண்டான் அவன். 

மேபெலுக்குக் கிடைத்த கடிதத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது.

‘ அன்புள்ள மேபெல், வியாபார நிமித்தமாய் அவசரமாய் ஓர் அழைப்பு என்பதால் செல்கிறேன், எப்போது திரும்பி வருவேன் என்று சொல்ல முடியாது. நீ இங்கிலாந்துக்குத் திரும்பிச்செல்வதே நல்லதென்று நினைக்கிறேன். என்னுடைய திட்டங்கள் மிகவும் நிச்சயமில்லாமல் இருப்பதால் தீர்மானமாக எதையும்  சொல்ல முடியவில்லை. 

உன் அன்புக்குரிய ஜார்ஜ்.

ஆனால் ஜார்ஜ் சிங்கப்பூரை அடைந்தபோது அவனுக்காக அங்கே ஒரு தந்தி காத்துக்கொண்டிருந்தது. 

‘நன்றாகப்புரிந்து கொள்கிறேன்,கவலை வேண்டாம்.அன்புடன் மேபெல்.

திகில் , அவனது புலன்களைக்கூர்மையாக்கியது.

“ அட கடவுளே, அவள் என்னைத்துரத்திக்கொண்டே வருகிறாள் போலிருக்கிறதே”

ரங்கூனில் உள்ள அஞ்சலகத்துக்கு அவன் தந்தி கொடுத்தான். அங்கிருந்து சிங்கப்பூர் செல்லும் கப்பலில் உள்ள பயணிகளின் பட்டியலில் அவள் பெயரும் இருக்கக்கூடும் என்று அவன் உறுதியாக நம்பினான் . இனி ஒரு நொடியைக் கூட வீணாக்க முடியாது. அவன் பாங்காக்குச் செல்லும் ரயிலில் தாவி ஏறிக்கொண்டான். ஆனாலும் கூட அவனுக்குப் பதட்டமாகத்தான் இருந்தது. அவன் பாங்காக் சென்றிருப்பான் என்று கண்டுபிடிப்பதில் அவளுக்கு எந்தச்சிக்கலும் இருக்காது; அவனைப்போலவே ஒரு ரயில் பிடித்துப் பின்னாலேயே  வருவதும் அவளுக்கு சுலபம்தான்.

அதிருஷ்டவசமாக மறுநாள் ஒரு ஃபிரெஞ்சுக் கப்பல்  சைகோனுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தது. அவன் அதில் ஏறிக்கொண்டான். சைகோனில் பத்திரமாக இருக்கலாம்; அவன் அங்கே போகக்கூடும் என்று அவளுக்கு ஒருபோதும் தோன்றாது. அப்படித் தோன்றியிருந்தால் நிச்சயமாக இதற்குள் மோப்பம் பிடித்திருப்பாள். பாங்காக்கிலிருந்து சைகோன் செல்ல ஐந்து நாட்கள் பயணம் செய்தாக வேண்டும். செல்வதற்கான படகுகளும் அழுக்காகவும் கூட்ட நெரிசலோடும் அசௌகரியமாகவும்தான் இருக்கும். 

 சைகோன் வந்து சேர்ந்து விட்டதில் சந்தோஷமாக இருந்த அவன் ஒரு ரிக்‌ஷாவை அமர்த்திக்கொண்டு விடுதிக்குச் சென்றான். அங்கே வைக்கப்பட்டிருந்த  வருகைப்பதிவேட்டில்   தன் பெயரை எழுதிக் கையொப்பம் இட்டான். உடனடியாக அவனுக்கு வந்திருந்த தந்தி ஒன்று அவன் கையில் தரப்பட்டது. அதில் ‘ அன்புடன், மேபெல்’ என்ற இரண்டு வார்த்தைகள் மட்டுமே இருந்தன. அவனுக்குச் சில்லென்ற வியர்வையை வருவிக்க அவை மட்டுமே போதுமானவையாக இருந்தன. 

“ ஹாங்காங் செல்லும் அடுத்த படகு எப்போது கிளம்புகிறது” என்று விசாரித்துக்கொண்டான் அவன்.

இப்போது அவன் இன்னும் தீவிரமாகப் பறந்து தப்பிக்க வேண்டியதாக இருந்தது. அவன் படகில் ஹாங்காங் சென்றான், ஆனால் அங்கே தங்க அவனுக்கு தைரியம் இல்லை. பிறகு மணிலாவுக்குப் போனான். மணிலா அவனை அச்சுறுத்துவது போல் இருந்தது. பிறகு ஷாங்காய் சென்றான். அதுவும் அவனைப் பெரிதும் பதட்டப்படுத்தியது. ஒவ்வொரு முறை ஹோட்டலில் இருந்து வெளியே வரும்போதும் நேரே போய் மேபெலின் கரங்களில் சிக்கிக்கொண்டுவிடப்போகிறோம் என்றே அவனுக்கு தோன்றியது. இல்லை, ஷாங்காய் சரிவராது.  யோகோஹாமா போவதுதான் ஒரே வழி. யோகோஹாமாவின் க்ரேண்ட் ஹோட்டலில் அவனுக்காக ஒரு தந்தி காத்திருந்தது. 

‘ மணிலாவில் எப்படியோ உங்களை சந்திக்க முடியாமல் தவற விட்டுவிட்டேன்,அன்புடன்,மேபெல்’

அவன் காய்ச்சல் வந்தவன் போலக் கப்பல்துறைப் புலனாய்வுப்பிரிவினரிடம் துருவினான்.

அவள் எங்கேதான் இருக்கிறாள்? 

அவன் ஷாங்காய்க்கே திரும்பிச் சென்றான். இம்முறை நேரடியாக கிளப்புக்கே சென்று தனக்குத் தந்தி ஏதும் உண்டா என்று கேட்டான். 

அது அவன் கையில் தரப்பட்டது. 

‘ விரைவில் வருகிறேன்,அன்புடன்,மேபெல்’

இல்லை இல்லை, அவனை ஒன்றும் அப்படி எளிதாகக்கண்டுபிடித்து விட முடியாது. அவன் ஏற்கனவே திட்டம் போட்டு வைத்து விட்டான். யாங்ட்ஸே நதி மிக மிக நீளமானது. சரிந்து அருவி போலச் செல்வது. சங்கிங் வரை செல்லும் கடைசி நீராவிப்படகில் மட்டும்  அவன் ஏறிவிட்டால் போதும், அடுத்த வசந்த காலம் வரை அந்த வழியில் கரடுமுரடான நாட்டுப்படகுகள்  தவிர வேறு எதிலுமே  பயணம் செய்ய முடியாது. ஒரு பெண் தனியே பயணம் செய்வது என்பது அந்த இடத்தைப்பொறுத்தவரை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதது. அவன் ஹான்கோ சென்று அங்கிருந்து இச்சாங்க் சென்றான். அங்கே படகை மாற்றிக்கொண்டு இச்சாங்கிலிருந்து நதியின் வேகச்சுழலில் பயணம் செய்து சங்கிங் வந்து சேர்ந்தான். 

ஆனாலும் கூட இப்போதும் அவனுக்குக்கலவரமாகத்தான் இருந்தது. ஆபத்தை ஏற்படுத்தும் எந்த ஒன்றுக்கும்  அவன் துணியப் போவதில்லை. ஸெஷுவானின் தலைநகரமான செங்டு அங்கிருந்து நானூறு மைல் தொலைவில் இருந்தது. அதற்கு சாலை மார்க்கமாகத்தான் செல்ல முடியும். சாலையும்  வழிப்பறிக்கொள்ளையர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட ஒன்று.  

ஆனாலும் ஒரு ஆணால் அங்கே பாதுகாப்பாக இருக்க முடியும்.

நாற்காலி சுமக்கும் கூலிக்காரர்களை ஏற்பாடு செய்து கொண்டு கிளம்பினான் ஜார்ஜ்.  இடையிடையே இடைவெளி விட்டு ,மதில் போல அமைந்திருந்த  தனிமையான அந்தச்சீன நகரத்தின் சுவர்களைக் கண்டதும் அவன் நிம்மதியாகப்பெருமூச்சு விட்டான். 

மாலை சூரிய அஸ்தமனத்தின்போது அந்தச்சுவர்கள் வழியாகப் பனி போர்த்திய திபெத்தின் மலைகளை அவனால் பார்க்க முடியும். ஒரு வழியாக அவனால் அங்கே ஓய்வெடுக்க முடியும். மேபெலால் அவனை அங்கே ஒருபோதும் கண்டுபிடிக்க முடியாது. 

அங்கே இருந்த தூதரக அதிகாரி அவனது நண்பர் என்பதால் அவருடனேயே அவன் தங்கிக்கொண்டான். வசதியான அந்த வீட்டிலிருந்த சௌகரியங்களையெல்லாம் மகிழ்ச்சியோடு அனுபவித்துத் தீர்த்தான், ஆசியா முழுவதும் சுற்றி அலைந்து தப்பித்து வந்த  கடுமையான பயணத்திற்குப்பிறகு தனக்குக் கிடைத்த ஓய்வை மனதார அனுபவித்தான். எல்லாவற்றுக்கும் மேலாகக் கடவுள் அருளால் தனக்குக் கிடைத்த பாதுகாப்பை ! வாரங்கள் சோம்பேறித்தனமாகக்கழிந்து கொண்டு சென்றன. ஒரு நாள் காலை வேளையில் அவனும் தூதரக அதிகாரியும் முற்றத்தில் அமர்ந்தபடி சீனன் ஒருவன் கொண்டு வந்திருந்த கலைப்பொருள் ஒன்றைப் பரிசீலித்துக் கொண்டிருந்தனர். அப்போது தூதரகத்தில் உள்ள பெரிய கதவை யாரோ பலமாகத் தட்டும் ஓசை கேட்க, காவலாளி விரைந்து சென்று அதைத் திறந்தான்.

நான்கு கூலியாட்கள் சுமந்து வந்த நாற்காலி ஒன்று அறைக்குள்  இறக்கி வைக்கப்பட்டது. அதிலிருந்து இறங்கி வந்தாள் மேபெல். மிகவும் சுத்தமாகவும் புத்துணர்ச்சியுடனும் பதட்டமில்லாமலும் இருந்தாள் அவள். ஒரு பகல் நேரம் முழுவதும் சாலையில் பயணம் செய்து அப்போதுதான் திரும்பி வந்திருக்கிறாள் என்பதற்கான அறிகுறி எதுவும்  அவள் தோற்றத்தில் சிறிதும் தென்படவில்லை. ஜார்ஜ் குழம்பிப்போயிருந்தான். முகத்தில் சவக்களை தட்டியிருந்தது. அவளை நோக்கிச் சென்றான்.

“ஹலோ ஜார்ஜ், எங்கே உங்களை மறுபடியும் தொலைத்து விடப்போகிறேனோ என்று கொஞ்சம் பயந்து விட்டேன்”

“ ஹலோ மேபெல்” என்றபடி தடுமாறினான் அவன்.

அவனுக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. வாசல் கதவுக்கும் அவனுக்கும் இடையே நின்று கொண்டிருந்தாள் அவள். நீலக்கண்களில் புன்னகை தேக்கியபடி அவனைப் பார்த்தாள்.

“நீங்கள் கொஞ்சம்  கூட மாறவே இல்லை” என்றாள் .

“ ஆண்களைப் பொறுத்தவரை ஏழு ஆண்டுகளில் எவ்வளவோ மாறிப்போய் விடுவார்கள்..நீங்களும் வழுக்கை விழுந்து குண்டாய்ப் போயிருப்பீர்களோ என்று  பயந்து கொண்டிருந்தேன். நான் எவ்வளவு பதட்டத்தோடு இருந்தேன் தெரியுமா? இத்தனை வருடம் கழித்தும் உங்களைக்கல்யாணம் செய்து கொள்ள முடியாமல் போயிருந்தால் எனக்கு மிகவும் கஷ்டமாக இருந்திருக்கும்”

ஜார்ஜுடன் அமர்ந்திருந்தவரைப் பார்த்தாள் அவள்.

“ நீங்கள் தூதரக அதிகாரிதானே”

“ஆமாம்”

“ நல்லதாய்ப் போயிற்று. இதோ , போய்க் குளித்து விட்டு வருகிறேன், உடனே அவரைத் திருமணம் செய்து கொள்ளத் தயாராகி விடுவேன்..”

அவள் அது போலவே செய்து முடித்தாள்.

18.5.24

‘அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்’ நாவல் விமரிசனம்

 இன்றைய இந்து தமிழ் திசை நாளிதழில் - 18.05.24- என் ‘அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும்’ நாவல் ( ஹெர் ஸ்டோரீஸ் வெளியீடு) பற்றிய விமரிசனக் குறிப்பு.



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....