துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

8.4.16

காளையும் காளை சார்ந்ததும்…..[மொழியாக்க சிறுகதை]

காளையும் காளை சார்ந்ததும்…..[அஸ்ஸாமிய சிறுகதை]

[நன்றி;சொல்வனம் இணைய இதழ்]
மூலம்: பிபுல் கடானியர்
ஆங்கில வழி தமிழில்: எம் ஏ சுசீலா

அடித்துப் பெய்த ஆலங்கட்டி மழையில் பூஜைக்காகப் போடப்பட்டிருந்த பந்தலிலிருந்த விளக்குகளெல்லாம் வெடிச் சத்தத்தை எழுப்பியபடி அணைந்து போயின. முதியவளான சரோஜாவின் கண் முன்னாலேதான் எல்லாம் நடந்தது. அந்த இடம் முழுவதையும் இனம்புரியாத சோகமும் இருட்டும் சூழ்ந்து கொண்டது.
இருள்….இருள்…எங்கும் இருள்..! நதுமல் கேயாவின் இரும்புக் கடையில் சிவப்பு நீல நிறங்களில் மின்னிக்கொண்டிருந்த நியான் விளக்குகளும் திடீரென்று அணைந்தன.
அன்று காலை முதலே அங்கே மழை தூறிக்கொண்டுதான் இருந்தது. கிழக்கு வானம் படிப்படியாக மெல்லத்தான் பிரகாசமடைந்தது, தெளிவாயிற்று.
பொதுவாகவே மஹெல்லா கிராமவாசிகள் கொஞ்சம் தாமதமாகத் துயிலெழுவதுதான் வழக்கம். ஒரு சிலர் இருப்புப் பாதை ஓரமாகப்போய்க் காலைக்கடன்களைக் கழித்து விட்டு போக்தோய் ஆற்றில் தங்களை சுத்தம் செய்து கொள்வதைப்பார்க்கலாம்; அவர்கள் கொஞ்சம் சீக்கிரமாகவே இந்த வேலைகளையெல்லாம் முடித்து விட்டு சூரியன் உதிக்கும் நேரத்தில் தங்கள் அன்றாட வேலைக்கு ஆயத்தமாகி விடுவார்கள்.
அந்த வட்டாரத்தில் படுக்கையிலிருந்து முதலில் எழுந்து கொள்ளும் ஆள் நதுமல் கேயாதான். சிறு வயதிலிருந்தே அது அவருக்குப்பழக்கமாகி விட்டிருந்தது. எழுபது வயதைத் தாண்டியிருந்த அவர் உற்சாகமும் இளமையுமாய் முன்பிருந்த தோற்றம் மாறி இப்போது 145 கிலோ எடையும் மிகவும் பருத்துப்போன தொந்தியுமாய் ராட்சத வடிவுடன் காட்சி தந்தார்.
அவருக்குப் பார்வைக்குறைவு ஏற்பட்டிருந்ததால் வெறும் கண்களால் எதையும் சரிவரப்பார்க்க இயலாத நிலை. கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகவே தன் தொப்புளின் அடிப்பாகத்தை அவரால் தொட முடிந்ததில்லை; ஆனால்… தன் பணியாள் எண்ணெயைப் போட்டு மஸாஜ் செய்யும்போது அதன் ஆழத்தை அவரால் உணர்ந்து கொண்டுவிட முடியும். தனது உடநலத்தைப் பராமரிப்பதற்காக இன்றுவரை அவர் பல விதிமுறைகளைக் கடைப்பிடித்து வருகிறார். அவற்றில் ஒன்று சீக்கிரமாகத் தூங்கி விரைவாக விழித்தல் என்பது.
உறக்கத்திலிருந்து எழுந்ததும் ஒருமணி நேரத்துக்குள் குளித்து முழுகித் தயாராகி விடும் அவர், சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும் பரமசிவனின் படத்துக்கு முன்பாக சாஷ்டாங்கமாகத் தரையில் விழுந்து கும்பிடுவார். பிறகு ரொட்டிகளால் நிரம்பி இருக்கும் பிரசாதக் கிண்ணத்தைப் படத்துக்கு நேரே நீட்டி நைவேத்தியம் செய்த பின் தனது கடை வாசலுக்கு வந்து விடுவார். கோடைகாலமோ, குளிர் காலமோ…வழக்கமாகிப்போன இந்தப் புனித சம்பிரதாயங்களைசெய்து முடிக்காமல் தனது அன்றாட வேலையைஅவர் தொடங்குவதே இல்லை.
பிரசாதக் கிண்ணத்தோடு அவர் வெளியே வருவதற்கு முன்பே அதைப் பெற்றுக்கொள்வதற்காக அந்த நகரத்தின் புனிதமான மிருகமும்,மகாதேவ ஈசுவரனின் வாகனமுமாகிய அந்தக் காளை அங்கே வந்து சேர்ந்து விடும். கடந்த நான்கைந்து ஆண்டுகளாகவே அந்தப்பிரசாதத்தை வாங்கிக்கொள்வதற்காக –சிவபெருமானின் ஆசிகளை சுமந்தபடி மூன்று நான்கு கிலோ மீட்டர் வந்து போய்க்கொண்டிருக்கிறது அந்தக்காளை. புனித மிருகமான அதைத் திருப்திப்படுத்துவதில் நதுமல் எப்போதுமே கஞ்சத்தனம் காட்டுவதில்லை. தன்னுடைய ஒரு நாள் உணவின் இரண்டு மடங்கை அதற்கு அவர் அளித்து வந்தார். ஐந்து கிலோ எடையுள்ள மிகப்பெரிய ரொட்டிகளைத் தயார் செய்யச்சொல்லி அவற்றை ஒரு பெரிய பித்தளைப்பாத்திரத்தில் தயாராக வைத்திருக்குமாறு தன் பணியாட்களுக்கு உத்தரவிடுவார் அவர். அதுதான் அந்தப்புனிதக் காளைக்கு அளிக்கப்படும் தினசரி பிரசாதம்; காளையும் தன் முரட்டு நாக்கால் அவற்றை சுவைத்து அசை போட்டபடி, ஒவ்வொரு ரொட்டியாய்த் தன் அகன்ற வயிற்றுக்குள் மெல்லக் கடத்தும்.
புனிதமான அந்தக்காளைக்கு நகரத்தில் பல வேலைகள் இருந்தன. சிருஷ்டியை உண்டாக்கும் தெய்வீகத்தகுதி பெற்ற ஒரே ஒரு ஜீவனாக அது மட்டுமே இருந்ததால் ஊரில் பசு வளர்ப்பவர்களுக்கெல்லாம் அந்தக்காளையே கண்கண்ட தெய்வமாக விளங்கி வந்தது. தன் நீண்ட கொம்புகளால் எதையாவது குத்திக்கொண்டும், எதன் மீதாவது முட்டிக்கொண்டும் உடலெல்லாம் புழுதி படிய அது ஓடுவதைப் பார்க்கும்போது ஊர்க்காரர்களுக்கு சங்கடமாக இருக்கும்.ஆனால் இப்போதெல்லாம் அப்படி அலைந்து கொண்டிருக்க வேண்டிய தேவை அதற்கு இல்லாமலாகி விட்டது.. குறுகலான ஒரு சந்துக்கு நேர் எதிரில் இருக்கும் பெரிய ஆலமரம் ஒன்றை அது தன் இருப்பிடமாக்கிக்கொண்டு விட்டது; மரத்தடியில் அது பாட்டுக்குப் படுத்துக்கொண்டிருக்கும். தன்னிடம் அழைத்து வரப்படும் பசுக்களுக்கெல்லாம் தன் ஆசிகளைக் கொஞ்சமும் வஞ்சகமில்லாமல் இலவசமாக வழங்கும். ஆண்களும் பெண்களுமாய்ப் பல பக்தர்கள் அங்கே அதன் அருகே வந்து அதன் காலையும் கொம்பையும் தொட்டு வணங்குவார்கள். அந்தக்காளை தங்களையும் புனிதப்படுத்தி விடும் என்ற நம்பிக்கையில் அதன் முன் நெற்றியில் சந்தனம் குங்குமம் மஞ்சள் ஆகியவற்றைப் பூசிவிடுவார்கள். நதுலின் கடை வாசலுக்கும் அந்தக்காளை தானாகவே செல்லும்; அவர் பக்தி சிரத்தையோடு செய்யும் பூசனைகளையெல்லாம் அங்கீகரிப்பதைப்போல அது ஏற்றுக்கொள்ளும்.
வயது முதிர்ந்த பிச்சைக்காரியான சரோஜா, வேறு யாருக்கும் தெரியாமல் சற்றுத் தொலைவில் இருந்தபடி இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
காலையிலேயே வயிறு முட்டச் சாப்பிட்டு விடுவதால் அதற்கப்புறம் அந்தக்காளைக்குப் பசியோ ருசியோ ஏற்படுவதே இல்லை. ஒரே நேரத்தில் ஐந்து கிலோ ரொட்டியை அல்லவா அது விழுங்கிக்கொண்டிருக்கிறது ? அதனால் மற்ற பக்தர்கள் வழங்கும் பிரசாதமெல்லாம் அந்தப் புனிதக்காளையின் காலுக்கடியில் சீண்டப்படாமல் அப்படியே கிடக்கும். சில சமயங்களில் பக்தர்களை ஒரேயடியாக மறுத்து விட மனமில்லாமல் ஒன்றிரண்டு வாழைப்பழங்களை மட்டும் அது ஏற்றுக்கொள்ளும். மீதமுள்ள படையல்களையெல்லாம் தனக்குப்பணிவிடை செய்யும் சரோஜாவுக்காக அது விட்டு வைத்து விடும். அவளும் அதற்கு நன்றிக்கடனாக அது போடும் சணத்தையெல்லாம் அகற்றி விட்டு மரத்தடியிலிருக்கும் அந்த இடத்தைத் தூய்மை செய்வாள். என்ன இருந்தாலும் காளை என்பது புனிதமானது இல்லையா..?
அந்த ஆலமர வேர்களுக்கு நடுவே மண்ணில் பாதி புதைந்து போயிருக்கும் ஒரு சிறிய கற்பாறை இருந்தது. அதன் மீதும் மனிதர்கள் பக்தி சிரத்தையோடு காசுகளை வீசிவிட்டுப் போவார்கள். அவையும் கூட சரோஜாவுக்குத்தான்….
வெயிலாலும் மழையாலும் அந்தப் புனிதக்காளை பாதிக்கப்படாமல் இருப்பதற்காக அதன் பக்தர்கள் ஒன்றுகூடி அந்தமரத்துக்கு அடியிலேயே அதற்கு ஒரு கொட்டிலை அமைத்துக் கொடுத்தார்கள். ஆனால் காளை அதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் சட்டை செய்யவில்லை; இப்படிப்பட்ட விஷயங்களில் அது எப்போதுமே அலட்டிக்கொள்வதில்லை. எப்படியோ…வயதான ஏழைப்பெண் ஒருத்திக்கும் கூட அந்தக்கொட்டில் இருப்பிடமாகி விட்டது. தனக்கென்று இருக்கும் ஒரு சில உடைமைகளுடன் அந்தக்கொட்டிலையே தன் இல்லமாக்கிக் கொண்டு அமைதியும் ஆறுதலும் தேடிக்கொண்ட அவள், அதற்குப் படைக்கும் பிரசாதத்தைப் பங்கிட்டுக்கொண்டபடி தன் காலத்தை நகர்த்திக்கொண்டிருந்தாள். ஒருநாள் தான் சேமித்து வந்த சிறிதளவு பணத்திலிருந்து பித்தளையில் ஒரு மணியை வாங்கிக் காளையின் கழுத்தில்கட்டி விட்டாள் அவள். அன்று முதல் தான் செல்லும் இடமெல்லாம் ‘டிங்’ டிங் என்று கழுத்து மணி ஒலி எழுப்பியபடி செல்லத் தொடங்கியது காளை. தினமும் மணியின் டிங் டிங் ஒலியைக்கேட்ட பிறகுதான் விழித்துக்கொள்வாள் அந்த மூதாட்டி. என்றாவது ஒரு நாள் அதன் தூக்கம் கலைவதற்கு முன் தான் விழித்துக்கொண்டு விட்டால் விரைந்து அதனருகே சென்று அதன் உடலை அழுத்தமாய்த் தட்டிக்கொண்டே இப்படிச்சொல்வாள். ’‘ஏ….புனிதக்காளையே எழுந்திரு….ம்…….சீக்கிரம் எழுந்து கொள் ……..நதுமல் கடைக்கதவைத் திறந்து விட்டார்’’
இன்று வானம் தெளிவாக இருந்தது. நதுமல் சாப்பின் கடை எப்போதோ திறக்கப்பட்டு விட்டிருந்தது. உறக்கத்திலிருந்து விழித்த சரோஜா தன் கண்களைக் கசக்கிக்கொண்டே கொட்டிலிலிருந்து வேகமாக வெளியே வந்தாள்; ஆனால் ஆலமரத்தின் அடியில் வெறிச்சோடிக்கிடந்தது. பொதுவாக அந்தக் காளை அங்கே இருந்து வெளியே போயிருந்தாலும் அதன் சாணமாவது கிடக்கும். ஆனால்…இன்றென்னவோ காளையும் இல்லை,சாணமும் கூட இல்லை. அந்தப்புனித விலங்கு காணாமல் போனதில் சரோஜாவுக்கு திடீரென்று கண்ணெல்லாம் இருட்டிக்கொண்டு வருவதைப்போல் இருந்தது. நெஞ்சுக்குள் பொறுக்க முடியாத ஒரு வலி. உண்மையிலேயே தான் தனிமையாகவும் நிராதரவாகவும் ஆகி விட்டதைப்போலிருந்தது அவளுக்கு.
சில உல்லாசமான வேளைகளில் அந்தக்காளை தானாகவே ஊரைச்சுற்றிக்கொண்டு வருவதுண்டு. பிறகு மரத்தடியிலிருக்கும் வழக்கமான தன் தங்குமிடத்துக்குத் தானாகவே அது திரும்பி வந்து விடும். ஒரு தடவை தன்னைப்போலவே பெரிதாகவும் வலுவாகவும் இருக்கும் இன்னொரு காளையைப் பிரதானசாலையில் வைத்து அது நேருக்கு நேர் எதிர்கொண்டது. இளம் வயதுடைய முரட்டுத்தனமான புதிய காளை புனிதக்காளைக்கு அடங்க மறுத்து சண்டித்தனம் செய்ய, இரண்டுக்கும் இடையே மிகக்கடுமையான சண்டைநடந்தது. போக்குவரத்து நெரிசலில் சாலையே திணறிப்போய் விட பேருந்து கார்..ரிக்‌ஷா ஆகியவை நீண்ட வரிசையில் அணிவகுத்தன; கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரச்சண்டை..இறுதியில் ஜெயித்தததென்னவோ புனிதக்காளைதான்…என்ன இருந்தாலும் அதனிடம் இருப்பது தெய்வீக சக்தி இல்லையா? உடைந்த கொம்பும்,சிதைந்துபோய் இரத்தக்காயங்கள்செறிந்த முன் நெற்றியும் வியர்வையில் குளித்த உடலுமாய்ப்புதிதாய் வந்த இளம்காளை புறங்கொடுத்து ஓடிவிட்டது.[ குறிப்பிட்ட இந்தச் சண்டையைப்பற்றிய தகவல்கள் புகைப்படங்களோடு உள்ளூர் நாளிதழ்களிலும் வெளிவந்தன]. அன்றும் கூட அந்தப்புனிதக்காளை வெகுநேரம் திரும்பி வராமலேதான் இருந்தது. மிகப் பெரியதாக நடந்த அந்தசண்டையைப்பற்றி இப்போது நினைத்துப்பார்த்தாள் சரோஜா.
மாலைப் பொழுதாகி… நேரம் செல்லச்செல்ல அவளது சந்தேகமும் வலுத்துக்கொண்டே சென்றது.
முன்பொரு முறை அந்தப்புனிதக்காளை எதன் மீதோ மோதிக்கொண்டு விட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருக்கிறது.
அன்றைக்கும் கூட தொடர்ந்து மேலே செல்ல முடியாமல் பேருந்துகளும் கார்களும் சாலையில் அணிவகுத்து நின்றிருந்தன. மாவட்ட ஆணையரின் உத்தரவுப்படி தீயணைப்பு ஊழியர்கள் வந்து சேர்ந்த பிறகே சாலை நெருக்கடி குறையத் தொடங்கியது. தீயணைப்பு வண்டிகள் புனிதக்காளையின் மீது வெகுநேரம் நீரைப் பீய்ச்சிஅடித்த பின்பே அது கொஞ்சம் கொஞ்சமாய் ஆசுவாசமடைந்து தெரு நடுவிலிருந்து மெல்ல அகன்று சென்றது..
சரோஜா பாட்டி , காளிபரி என்ற இடத்துக்கு முதலில் சென்று காளையைத் தேடிப்பார்த்தாள். நகரத்தின் அந்தப் பகுதியில் காளைக்கு நிறைய பக்தர்களும் ரசிகர்களும் இருந்தார்கள். அவர்கள் அதனிடம் மரியாதை கொண்டவர்கள்;அன்போடு உபசரிப்பவர்கள். அங்கே அதைக் காணாமல் பின்னும் தேடிக்கொண்டு ஆற்றங்கரைப்படித்துறைக்குச் சென்றாள் அவள். காளையின் கூட்டாளிகள் சில பேரை அங்கே பார்க்க முடிந்தது. ஆனால்….அந்தக்காளை மட்டும் எங்கும் தென்படவில்லை.
ஆனால்….’அந்தச்செய்தி’ அவள் காதுக்கு வந்து சேர அதிக நேரம் பிடிக்கவில்லை. அங்கிருந்து இருநூறு கஜ தூரத்தில் இருந்த கை-அலி லெவல் கிராஸிங் அருகே அந்தச் சம்பவம் நடந்திருந்தது. தண்டவாளத்தின் குறுக்கே அதை மறித்துக்கொண்டு அசையாமல் நின்றிருக்கிறது காளை; அப்போது எதிர்த்திசையில் ஃபோர்கேடிங்கிலிருந்து மோரியோனி செல்லும் ஷட்டில் ரயில் வெகு வேகமாக வந்திருக்கிறது. அந்தசமயம் அங்கே இருந்த கோலாபி என்ற ஒரு பிச்சைக்காரிதான் நடந்ததையெல்லாம் நேரில் கண்டவள். புகைவண்டியின் எஞ்சின் காளையைத் தூக்கி எறிந்ததையும் அது கீழே சாக்கடைப்பள்ளத்தில் போய் விழுந்ததையும் அவள் பார்த்திருக்கிறாள்.
பொதுவாக நகரத்தின் அந்தப்பகுதி ஊர்ப்பெரிய மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டிருந்த ஒன்று; அவர்கள் அங்கே அதிகம் புழங்குவதில்லை.கைவண்டி இழுப்பவர்கள் ரிக்‌ஷா ஓட்டிகள் முதலியவர்களே தங்கள் இயற்கை உபாதைகளுக்காக அந்த இடத்தைப் பயன்படுத்தி வந்தார்கள். மற்ற பெரும் புள்ளிகள் தப்பித்தவறி அங்கே செல்லநேர்ந்தால் கூடக் கண்ணையும் மூக்கையும் பொத்திக்கொண்டபடி வெகுவேகமாக அந்த இடத்தைக் கடந்து சென்று விடுவார்கள்.
தலையில் மிகப் பெரிய இடி ஒன்று இறங்கி விட்டதைப்போலிருந்தது சரோஜா பாட்டிக்கு.
மறு நாள் காலையில்,’’சாமி…கடவுளே..’’என்று கூவியபடி தன் கடை வாசலில் காளையின் வருகையை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டிருந்தார் நதுமல். அவர் போட்டுக்கொண்டிருந்த அந்த பலத்த சத்தம் சரோஜாவின் சுய உணர்வை மீட்டுக்கொண்டு வர, இனிமேல் தாமதிப்பதில் பயனில்லை என எண்ணியவளாய் சட்டென்று எழுந்திருந்து நதுமலின் கடையை நோக்கி விரைந்தாள் அவள்.
பார்வைக்குறைவான பலவீனமான கண்களுடன் விடியற்காலை அரையிருட்டைத் துழாவியபடி இருந்தார் நதுமல். தன் துணிவையெல்லாம் ஒன்று திரட்டிக்கொண்டு அடிமேல் அடி வைத்து முனேறிச்சென்ற சரோஜா காளையின் கழுத்திலிருந்து கழற்றி வைத்திருந்த அந்த மணியைச் சட்டென்று ஒலித்தாள்.
‘’டிங் டிங்..’’
‘’கடவுளே…எப்படியாவது இந்தக் கண்பார்வையை மட்டுமாவது எனக்கு மீட்டுத் தந்துவிட மாட்டாயா..’’ என்று கண்ணில்லாத அந்த மனிதர் திரும்பத் திரும்ப ஏதேதோ முனகிக்கொண்டிருந்தார். அந்த பக்தரின் கையில் இருந்த ரொட்டிகளை ஒரே நொடியில் பிடித்திழுத்துத் தன் கையிலிருந்த பையில் வைத்துக்கொண்டபடி அமைதியாகக் கடையை விட்டு இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தாள் சரோஜா.
: http://solvanam.com/?p=44017#sthash.RR4jIxdA.0Wh8X4AN.dpuf

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....