துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

26.10.11

’அசடன்’- நூல்வெளியீடு

வலை வாசகர்களுக்கு இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்..
என் மொழிபெயர்ப்பில் உருவான உலகப் பேரிலக்கிய மாமேதை தஸ்தயெவ்ஸ்கியின் ‘அசடன்’தமிழாக்க நூல் அக்டோபர் இறுதியில் வெளிவரவிருக்கும் நற்செய்தியை வலையுலக நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதில் பெரு மகிழ்வடைகிறேன்...அசடன்’என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் தஸ்தயேவ்ஸ்கியின் இந்நாவல், தஸ்தயேவ்ஸ்கியின் நாவல்களில் மிகவும் பாவியல்பு கொண்டது .சுவிட்சர்லாந்தில் மனநல விடுதியில் இருந்து ருஷ்யாவிற்குத் திரும்பி வந்து ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்கொள்ள முயலும் பிரின்ஸ் மிஷ்கின் ,அவன் சந்திக்கும் மனிதர்கள் வழியாக மானுட உறவுகளின் சிக்கலான நெசவைக் கண்டுகொள்கிறான். அந்த உக்கிரமான வேட்டை விளையாட்டில் தன்னுடைய நல்லியல்புடன் ஒரு புனிதனாக அவன்கடந்துசெல்கிறான்.-ஜெயமோகன்முன்னுரையிலிருந்து


இடியட் நாவல் அன்பின் பிரகாசத்தை ஒளிரச்செய்யும் அற்புதப்படைப்பு, இதிகாசத்தைப் போல வாழ்வின் மேன்மைகளைச் சொல்லும் ஒரு உயர்ந்த நாவல்.தமிழில் இந்த நாவல் வெளிவர இருப்பது ஒரு மிக முக்கிய நிகழ்வு.நாம் அதை வரவேற்றுக் கொண்டாட வேண்டும்-எஸ்.ராமகிருஷ்ணன்


மொழிபெயர்ப்பாளரின் மு(எ)ன்னுரை

தஸ்தயெவ்ஸ்கியின் இடியட் நாவலை ‘அசடனா’க மொழிமாற்றிய அற்புதமான கணங்கள்,என்றென்றும் நினைவு கூரத்தக்க வாழ்நாள் அனுபவமாக எனக்கு வாய்த்ததால் இந்நூல் வெளியாகும் இத் தருணம் என் மனதுக்கு மிகவும் நிறைவளிக்கிறது.

முழுமையான தீமை என்றோ...முழுக்க முழுக்கத் தீயவர்கள் என்றோ உலகில் எதையும் யாரையும் வரையறுக்க முடியாது என்பதை எப்போதுமே தன் படைப்புக்களில் முன்னிறுத்துபவர் தஸ்தயெவ்ஸ்கி என்பது அவரைப் பற்றி ஓரளவேனும் அறிமுகமுடைய வாசகர்கள் அறிந்திருப்பதுதான்.


காமுகனான சுவிட்ரிகைலோவ்,கண்டிப்பான கடுமை காட்ட வேண்டிய நிலையில் இருக்கும் நீதிபதி போர்ஃபிரி பெத்ரோவிச் ஆகியோரிடமும் கூட வற்றாமல் சுரக்கும் மானுடக் கருணையின் தெறிப்புக்களைக் குற்றமும் தண்டனையும் நாவலிலும் கூட மிக இயல்பாகச் சித்திரித்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.  அவரது இடியட்/அசடன் நாவலும் அதிலிருந்து விலக்குப் பெற்றதில்லை என்பதோடு கூடுதலான ஒரு பரிமாணமும் அதில் சேர்ந்திருப்பதே அவரது பிற படைப்புக்களிலிருந்து தனித்து நிற்கும் தகுதியை அசடனுக்கு அளிக்கிறது.அசடனாகச் சொல்லப்படும் இளவரசன் மிஷ்கினின் பாத்திரத்தை அப்போதுதான் மண்ணில் ஜனித்த ஒரு குழந்தையைப் போன்ற பரிசுத்தத்துடன் - கபடுகளும் சூது வாதுகளும் வன்மங்களும் வஞ்சனை எண்ணங்களும் கிஞ்சித்தும் தலை காட்டாத ஒரு பாத்திரமாக மட்டுமே - மிகப் பெரிய இந்த ஆக்கத்தின் எல்லாக் கட்டங்களிலும் முழுக்க முழுக்கக் காட்ட முயற்சி மேற்கொண்டு அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.பிறரைப் பற்றிய தவறான எண்ணம் தற்செயலாக மனதில் தோன்றும் தருணங்களிலும் - அந்த எண்ணம் அல்லது கணிப்பு உண்மையாகவே இருந்தாலும் கூட- அப்படி நினைத்து விட்டதற்காகவே தன்னைத் தானே கடிந்து கொள்ளும் ஓர் உன்னத மாமனிதன் மிஷ்கின்.பிறர் துயர் கண்டு இரங்கி நெகிழ்வதோடு நின்று விடாமல்,அந்தத் துயர் தீர்க்கத் தன்னையே ஒப்புக் கொடுத்துக் களபலியாக்கத் துணியும் உள்ளம் மிஷ்கினைப் போல அத்தனை எளிதாக எவருக்கும் வாய்த்து விடுவதில்லை.இயேசுவை மனதில் கொண்டுதான் மிஷ்கினின் பாத்திரத்தை தஸ்தயெவ்ஸ்கி உருவாக்கியிருக்கக் கூடும் எனத் திறனாய்வாளர்கள் கூறுவது இது பற்றியே.

தன்னை வேடிக்கைப் பொருளாக்கி அலைக்கழிக்கும் பெண்களாகட்டும்..வன்மத்தோடும்,பொருளாசையால் தூண்டப்பட்ட சுரண்டல் விருப்பங்களோடும்,கொலை வெறியோடும் தன்னை அணுகும் மனிதர்களாகட்டும்..! இவர்களில் எவருமே எப்போதுமே அவனது வெறுப்புக்கும் கசப்புக்கும் உரியவர்களாவதில்லை; மாறாக அவர்களின் நிலை கண்டே அவன் கசிந்து உருகுகிறான் ; அவர்களது எதிர்காலம் குறித்தே அவன் கவலை கொள்கிறான்.உலகத்தின் லௌகீகப் பார்வையில் அவன் அசடனாகப் பார்க்கப்படுவதற்கான காரணம் அதுவே...


''எனக்கு இருபத்தேழு வயதாகிறது..
ஆனாலும் கூட நான் ஒரு குழந்தையைப் போலத்தான் இருக்கிறேன்...
என்னுடைய பாவனைகள் எல்லாமே...எப்போதுமே இடத்துக்குப் பொருத்தமற்றவையாகவே இருக்கின்றன.
நான் சொல்ல நினைத்த கருத்துக்கு எதிரான கருத்தையே அவை வெளிப்படுத்தி விடுகின்றன.
அதனாலேயே நகைப்புக்கு இடமாகி நான் சொல்ல வந்த கருத்துக்களைத் தரம் தாழ்த்தியும் விடுகின்றன..
எதை..எப்படி..எந்த அளவுக்குச் சொல்வது என்ற அறிவு என்னிடம் சுத்தமாகவே இல்லை.அதுதான் முக்கியமான விஷயம்..! ’’
என்றபடி தன் நடத்தை மீதான ஒப்புதல் வாக்கு மூலத்தை அவனே அளித்தபோதும் -ஒரு புறம் அவனை அசடனாக்கிப் பரிகசிக்கும் உலகம் அவன் ஒரு தூய ஆன்மா என்பதை மட்டும் மறுதலிப்பதே இல்லை.அவனுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டிருக்கும் கன்யா,ரோகோஸின் போன்றவர்களும் கூட அந்த உண்மையை ஆமோதிக்கவும் அங்கீகரிக்கவும் தயங்குவதில்லை என்பதிலேயே இந்த நாவலின் அழகு பொதிந்திருக்கிறது.

பொதுவாகவே பிறநாட்டு,பிற மாநிலப் பின்புலம் கொண்ட படைப்புக்கள் நம்மிடம் ஒரு அந்நியத் தன்மையை ஏற்படுத்திவிடுவது போல நமக்கு நாமே கற்பித்துக் கொண்டிருப்பதனாலேயே அவற்றின் மீது நாட்டம் செலுத்துவதில்,அவற்றை படிப்பதில் நமக்குள் நிரந்தரமான ஒரு தயக்கம் இருந்து கொண்டிருக்கிறது.மொழியாக்கங்கள் போதிய அளவு விற்பனை செய்யப்படாமலும், அவற்றுக்கான அங்கீகாரம் உரிய முறையில் கிடைக்காமலும் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என்ற கசப்பான உண்மையை இங்கே ஒத்துக் கொண்டுதான் ஆக வேண்டும்.
’விசித்திர விபரீத உடையுடன்,பாஷையுடன் காணப்பட்டாலும் - அதற்கும் அப்புறத்திலிருந்து துடிக்கும் மனித இயற்கையைக் காண்பிக்கவே’’மொழியாக்கம் முயல்கிறது(மணிக்கொடி,நவ.1937.) என்று புதுமைப்பித்தன் குறிப்பிடுவதைப்போலப் பிரபஞ்சமெங்கும் வியாபித்துக் கிடக்கும் மனித இயற்கையே அசடன் நாவலிலும் உயிர்த் துடிப்போடு நம் கண்முன் விரிகிறது; உறவு/நட்புக்களின் மோதல்கள் ,தனி மனித அவசங்கள், கொந்தளிப்பான உணர்வுப் போராட்டங்கள் ஆகியவை நாடு மொழி இனம் கடந்து சகலர்க்கும் பொதுவானவை என்பதாலேயே இப் படைப்பு உலகம் முழுமைக்கும் பொதுவான உலகப் பேரிலக்கியம் என்ற தகுதியையும் பெற்றிருக்கிறது.

பணக்கார மனிதன் ஒருவனின் பாதுகாப்பில் வளர்ந்து அவனுக்குச் சில காலம் ஆசை நாயகியாகவும் வாழ நேரிட்டதை நினைந்து நினைத்தே கழிவிரக்கம் கொண்டவளாகி - முறையான திருமண வாழ்விற்கான தாபமும் ஏக்கமும் கொண்டிருந்தபோதும் அதற்குத் தகுதியற்றவளாய்த் தன்னைக் கருதியபடி ஒவ்வொரு முறையும் மண மேடை வரை வந்து விட்டு ஓடிப் போகும் நஸ்டாஸியா ஃபிலிப்போவ்னா , ஜெயகாந்தனின் கங்காவை (சில நேரங்களில் சில மனிதர்கள்) நமக்கு நினைவுபடுத்துவதில் வியப்பில்லை;
செல்வந்தர் வீட்டுச் சின்னப் பெண்ணாகக் குறும்பு கொப்பளிக்க ஏதாவது ஒரு சாகசம் செய்தே தீரும் ஆவலுடன் நாவலில் வளைய வரும் அக்லேயா.., தளபதி என்ற அதிகார மிடுக்கு ஒரு புறம் இருந்தாலும் குடும்பப் பாசமும் மிஷ்கின் மீது பிரியமும் கொண்டவராய் நாவலில் இடம் பெறும் இபான்சின்,வெள்ளை மனம் கொண்ட அவளது அன்னை,பாசம் காட்டும் சகோதரிகள் என நாவல் காட்டும் அந்தக் குடும்பத்தின் சூழல் நம்மைச் சுற்றி நாம் பார்க்க முடியாததா என்ன?
மரணத்தின் நாளை எதிர்நோக்கியபடி தன் இறுதி சாசனத்தை வாசிக்கும் நோயாளியான இப்போலிட்,வன்மத்தோடு வளைய வரும் கன்யா, கொலைவெறியோடு சுற்றிவரும் ரோகோஸின்,பணம் படைத்தவர்களிடம் வளைந்து நெளிந்தபடியே வாழ்வை நகர்த்தும் ஒட்டுண்ணி மனிதர்களின் பிரதிநிதியாகிய லெபதேவ் என நாவலில் இடம் பெறும் வேறுபட்ட பல பாத்திரங்களின் குண இயல்புகளை நாம் வாழும் சூழலிலும் கூட நாம் எதிர்ப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.ஆள் பெயர்,இடப்பெயர்,பழக்க வழக்கங்கள்..ஒரு சில கலாசார வேறுபாடுகள் ஆகியவற்றைச் சற்றே கவனத்தோடு உள் வாங்கிக் கொண்டபடி நாவலின் முதல் ஐம்பது அறுபது பக்கங்களை மட்டும் கடந்து விட்டால் உணர்ச்சிமயமானதும்,இங்கே நமக்கு நன்கு பரிச்சயமானதுமான ஒரு உலகம்தான் அங்கேயும் காத்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிவதோடு மகத்தான் ஓர் உலக இலக்கியத்தைத் தவற விட்டு விடவில்லை என்ற ஆத்ம திருப்தியும் நமக்குக் கிடைக்கும்.

குழந்தையைப் போன்ற அப்பாவித்தனத்துடனும்,களங்கமற்ற பரிசுத்தமான துறவியைப் போன்ற வாழ்க்கை முறையுடனும் இந்நாவல் முழுவதும் வியாபித்திருக்கும் மிஷ்கினுடனும்...அவன் எதிர்ப்பட்டு அன்பு செய்யும் சக மனிதர்களுடனும் ஊடாடுவதற்கும், தஸ்தயெவ்ஸ்கியின் அலைவரிசையில் அவர்களை அணுக்கமாக விளங்கிக் கொள்வதற்கும் இம் மொழியாக்கம் எனக்குப் பெரிதும் துணை புரிந்திருக்கிறது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுக் காலம் தொடர்ந்த இப் பணியில் மனித மனங்களின் ஆழங்காண முடியாத புள்ளிகளைத் தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்தின் வழி எட்டவும்,தரிசிக்கவும் முடிந்தபோது எனக்குள் ஏற்பட்ட பரவசச் சிலிர்ப்பு வார்த்தையில் விவரிக்க இயலாத மகத்துவம் கொண்டது.

’குற்றமும் தண்டனையும்’ நாவல் மொழியாக்கத்தைத் தொடர்ந்து என் எழுத்தின் மீது நம்பிக்கை வைத்து ஒப்பற்ற இப் பணியை என் வசம் ஒப்புவித்து, தஸ்தயெவ்ஸ்கியின் இரு உலகப்பேரிலக்கியங்களை அடுத்தடுத்து மொழிபெயர்க்கும் அரிய வாய்ப்பினை எனக்கு அளித்த மதுரை பாரதி புத்தக நிலைய உரிமையாளர் திரு துரைப்பாண்டி அவர்களுக்கு என் நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிஉணர்வை முதலில் உரித்தாக்குகிறேன். குற்றமும் தண்டனையும் நூலைப் போலவே உரிய பின்னிணைப்புக் கட்டுரைகளுடனும்,திரைப்படக் காட்சிப் படங்களுடனும் - ‘அசடன்’நாவலையும் மிகச் சிறப்பான பதிப்பாக வெளிக் கொணர - பல வகையான சிக்கல்களுக்கு நடுவிலும் அயராது அவர் மேற்கொண்ட முயற்சிகளை வணிகநோக்கம் என்ற ஒற்றைச் சொல்லுக்குள் அடக்கி விட முடியாது; இலக்கியத்தின் மீது ஆழ்ந்த ஈர்ப்பும்,அர்ப்பணிப்பு உணர்வும் கொண்டோருக்கு மட்டுமே சாத்தியமாகக் கூடிய இந்தச் சாதனையை மெய்யாக்கித் தமிழுக்கு வளம் சேர்த்த அவருக்கு என் பாராட்டுக்கள்.

அசடன் மொழிபெயர்ப்பின் தொடக்க நிலையிலிருந்து என்னை ஊக்குவித்து உத்வேகப்படுத்தியதோடன்றி ‘அசடனும் ஞானியும்’என்ற அற்புதமான முன்னுரைக் கட்டுரை ஒன்றையும் இந்நூலுக்காகவே வழங்கியிருக்கும் என் அன்பிற்குரிய எழுத்தாளர் திரு ஜெயமோகன் அவர்களுக்கு என் உள்ளம் நிறை நன்றி..

இந்நாவலின் இடையிடையே விரவி வந்திருக்கும் ஃபிரெஞ்சுப் பழமொழிகள்,தொடர்கள்,கலைச்சொற்கள் ஆகியவற்றைத் தமிழில் பிழையின்றிக் கொண்டு சேர்க்க எனக்கு உதவிய புது தில்லி ஜவஹர்லால் பல்கலைக் கழக ஃபிரெஞ்சுத் துறைப் பேராசிரியை திருமதி ஷோபாசேகர் அவர்களையும் இந்த வேளையில் நன்றியோடு நினைவு கூர்கிறேன்.

ரஷிய மூலத்திலிருந்து ஆங்கிலம் வழியாக இடியட்டை மொழி மாற்றம் செய்ய CARNACE GARNETT இன் மொழிபெயர்ப்பே எனக்குப் பெரிதும் துணை நின்றது; அதை அடியொற்றியே என் மொழியாக்கம் அமைந்திருக்கிறது என்பதையும்,கூடுதல் தெளிவுக்கு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் JULIUS KATZER இன் 
ஆங்கில
மொழிபெயர்ப்பையும் நான் ஒப்பு நோக்கிக் கொண்டேன் என்ற தகவலையும் இங்கே பதிவு செய்ய விழைகிறேன்.
உலகப் பேரிலக்கியங்கள் அளிக்கும் தரிசனங்கள் மானுடத்தின் உச்சமான நல்ல பக்கங்களைத் திறந்து காட்டும் நுழை வாயில்கள். அந்த உச்ச கட்ட கணங்களின்போது நான் பெற நேர்ந்த தரிசனங்களை - மூல நாவலிலிருந்து முரண்படாத உயிரோட்டத்துடன் எனது மொழி அளித்திருப்பதாக இதைப் படிக்கும் வாசகர்கள் சிலர் கருதினாலும் கூட அதுவே இம் மொழியாக்கப் படைப்பின் வெற்றியாக அமையும்.
எம்.ஏ.சுசீலா

அசடனும் ஞானியும்-அசடன் மொழியாக்க நாவலுக்கு எழுத்தாளர் ஜெயமோகன் அளித்துள்ள முன்னுரை

அறிவிப்பு;
அசடன் நாவலுக்காக உடுமலை.காம் வழியாகவும்,நேரடியாக பாரதி புத்தக நிலையம்,மதுரையில் முன் பதிவு செய்து கொண்டோரும்,இனிப் புதிதாய் நூலை வாங்க விரும்புவோரும் நவ.இரண்டாவது வாரத்திற்குள் நூலைப் பெற்றுக் கொள்ளலாம்.
நூல் விற்பனை-இணைய வழி உடுமலை.காம் 

நேரில்,அஞ்சலில்;பாரதி புத்தக நிலையம்,மதுரை
Bharathi Book House,
F-59 / 3 & 4 , Corporation Shopping Complex,
(Shopping Complex Bus Stand,)
Periyar Bus Stand,
Madurai-625001

பின் குறிப்பு;
கடந்த ஒரு மாத காலமாக மேற்குறித்த நூலின் இறுதிக் கட்ட வேலைகளில் மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தமையால் மனம் முழுவதையும் அந்த நாவல் மட்டுமே ஆட்கொண்டிருந்தது;எனவே அந்நாவல் சார்ந்த பதிவுகளே தொடர்ந்து வந்து கொண்டிருந்ததென்பதை இவ்வலைத் தளத்தைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசககர்கள் கவனித்திருக்கக் கூடும்.மேலும் பெரியதொரு நாவலில் உட்புகுந்து ஒன்றிக் கலக்க உதவும் சிறு முன்னோட்டமாகவும் என் பதிவுகள் அமையக் கூடும் என்பதாலும் அவற்றை இத் தளத்தில் வெளியிட்டிருக்கிறேன்.எனினும் இலக்கிய ஆர்வலர்கள்,வாசகர்கள் இந்நாவலை முழுமையாகப் படித்துக் கருத்துரை அனுப்பும் நாளே என் உள்ளம் முழுமையான நிறைவு பெறும்.
[அக்.28 முதல்,நவ.7 வரை நான் பயணத்தில் இருப்பதால் நவ 10க்குப் பின்பு புதிய பதிவுகள் வெளியாகும்]

காண்க இணைப்புக்கள்

அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி -2

அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி 3

மரணதண்டனையும்,தஸ்தயெவ்ஸ்கியும்-1
மரண தண்டனையும்,தஸ்தயெவ்ஸ்கியும்-2

அசடன்:சில முன் குறிப்புகள்-கதைச் சுருக்கம்-1

25.10.11

இடியட்(அசடன்)நாவலின் படைப்பாளி பற்றி...

உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவல் டால்ஸ்டாயின் ‘போரும் அமைதியும்’என்று கூறப்பட்டாலும் கூட உலக இலக்கியத்தில் தலை சிறந்த நாவலாசிரியர் யார் என்று கேட்டால் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கிதான் என்று விமர்சகர்கள் சந்தேகத்துக்கிடமின்றிச் சொல்லி விடுவார்கள்-  எம்.ஏ.அப்பாஸ்[என்றென்றும் வாழும் படைப்புகளும்,படைப்பாளர்களும்]
ரஷ்ய சமூகத்தில் 19ஆம் நூற்றாண்டில் நிலவிய சமூக பொருளாதார ஆன்மீகப் பின்புலச் சூழலை மனதில் கொண்டு மனித மன அமைப்பை அதன் வினோதங்களைக் கண்டறிய முயன்ற ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி உலக இலக்கியத் தளத்தில் மிகச் சிறந்த ஒரு மனோதத்துவ அறிஞர் என விமரிசகர்களால் அங்கீகரிக்கப்பட்ட பெருமை கொண்டவர். 


துன்பமயமான கதைப் பின்னல்களையே அவரது படைப்புக்கள் அதிகம் கொண்டிருந்ததால் அங்கதநயத்துடன் கூடிய மெல்லிய நகைச் சுவை உணர்வும் அதைக் கையாளும் திறனும் அவரிடம் இருந்ததைப் பலரும் சரிவர அறிந்து கொள்ளக் கூடவில்லை;அவரது பிற படைப்புக்களைக் காட்டிலும் இடியட் நாவலில் அது சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது.

ரஷ்ய இலக்கியத்தின் பொற்காலத்தைச் சேர்ந்ததாக மதிப்பிடப்படும் தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புக்களில் அவரது இடியட் நாவல் மிகவும் அற்புதமான ஒன்றாகவும் அவர் உருவாக்கிய மிகத் துணிச்சலான ஓர் ஆக்கம் என்றும் கணிக்கப்பட்டிருக்கிறது..

தஸ்தயெவ்ஸ்கியின் வாழ்க்கை பற்றிய சிறு குறிப்பு....
தாங்கள் எழுதும் நாவல்களை விடவும் விறுவிறுப்பும் சுவாரசியமும் நிறைந்த வாழ்க்கை வரலாறுகளை உள்ளடக்கியிருப்பவை சில நாவலாசிரியர்களின் வாழ்க்கைக் குறிப்புகள்.
ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கி[1821-1881]
வறுமையிலும் வாழ்க்கைப் போராட்டத்திலும் ஊடாடிய ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் வாழ்வும் கூட அவரது நாவல்களைப் போன்றே துயர் கப்பிய, திருப்பங்கள் மலிந்த தருணங்களைக் கொண்டிருப்பதுதான்.

லிதுவேனியாவைச் சேர்ந்த பிரபுக்கள் வம்சத்தில் ஓர் இராணுவ மருத்துவரின் மகனாக 1821ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதி அன்று பிறந்தவர் தஸ்தயெவ்ஸ்கி.அவருடன் உடன் பிறந்தோர் ஏழு பேர். காசநோயாளியான அன்னை,முன் கோபியான தந்தை என அமைந்த குடும்பச் சூழலில் இளம் வயதிலேயே ஏழ்மை துன்பம் மரணம் இவற்றோடு பரிச்சயம் கொண்டிருந்ததால் மகிழ்ச்சியும் உற்சாகமும் அற்ற இளமைப் பருவமே தஸ்தயெவ்ஸ்கிக்கு வாய்த்தது.

பதினாறு வயதில் தாயை இழந்தபின் இவரையும் இவரது சகோதரரையும் இராணுவப் பொறியியல் கல்லூரியில் சேர்த்து விட்டார் இவரது தந்தை.மதுவில் மூழ்கிய தந்தை தனது அன்றாடத் தேவைகளைக் கூடக் கண்டு கொள்ளாததால் வறுமை,கண்ணீர்,அச்சம் இவற்றில் ஊடாடியபடியே தஸ்தயெவ்ஸ்கியின் வாழ்வு நகர்ந்தது.தந்தையின் கொடூர நடவடிக்கைகளைப் பொறுத்துக் கொள்ள முடியாத அவரது சொந்த வேலையாட்களே அவரைக் கொன்றுவிட அன்று முதல் தஸ்தயெவ்ஸ்கியைக் காக்காய் வலிப்பு நோய் தாக்கத் தொடங்கியது.காலம் முழுவதும் அந்த வலிப்பு நோய் அவரை வாட்டியும் வதைத்தும் வந்தது.

பட்டம் பெற்ற பிறகு, இராணுவ வேலையைக் கை விட்டு - இளம் பருவம் முதலே தன் மனதை ஆக்கிரமித்திருந்த இலக்கியத் துறையில் ஈடுபடத் தொடங்கினார் தஸ்தயெவ்ஸ்கி.நெக்ரசோவ் என்னும் இலக்கிய விமர்சகரின் துணையால் அவரது முதல் நாவலான ‘ஏழை மக்கள்’[POOR FOLK ] THE CONTEMPORARY- இதழில்[1846 ஆம் ஆண்டு] வெளியானதுடன் நல்ல வரவேற்பையும் பெற்றது.

இடையே முடியாட்சிக்கு எதிரான புரட்சியில் பங்கேற்றதற்காக அரசாங்கம் இவரைக் கைது செய்து மரண தண்டனையும் விதித்தது.தண்டனை நிறைவேற்றத்தின் கடைசிக் கணத்தில் அதிலிருந்து விடுவிக்கப்பட்ட தஸ்தயெவ்ஸ்கி, கை விலங்குடன் சைபீரியப் பாலை வனச் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.அந்தக் கால கட்டத்தில் அவரது இலக்கியப் படைப்பில் சற்றுத் தேக்கம் ஏற்பட்டாலும் அவரது மனம் உறுதி பெற்றது அப்போதுதான்.பிராயச்சித்தம்,பாவம்,தவறு,மன்னிப்பு முதலிய மனிதாபிமானப் பண்புகள் அவரது உள்ளத்தில் மேலோங்கி எழுச்சி பெற்றது அந்தக் காலகட்டத்திலேதான்.

சிறையிலிருந்து மீண்ட பிறகு மேரியா டிமிட்ரிவ்னா இஸாயவா என்ற விதவையை மணந்து கொண்ட தஸ்தயெவ்ஸ்கிக்குத் திருமண வாழ்வும் மகிழ்ச்சியை அளிப்பதாயில்லை;கடனும் வறுமையும்,மனைவியின் காச நோயும்,தொடர்ந்து அவளது மரணமும் ,தனது சூதாடும் பழக்கமும் அவரை அலைக்கழித்தன.கடன் தொல்லையிலிருந்து காத்துக் கொள்ள அவருக்குக் கிடைத்த ஒரே ஆயுதம் எழுத்து மட்டுமே. குற்றமும் தண்டனையும் 1866,அசடன் 1868-69,கரமஸோவ் சகோதரர்கள் 1879-80ஆகிய உலகப் பேரிலக்கியங்களை உருவாக்கக் கடனாலும் சூதாட்டத்தாலும் விளைந்த வாழ்க்கை நெருக்குதல்களும் பணத் தேவையுமே அவருக்குக் காரணமாய் அமைந்தன.
சூதாடி நாவலை 26 நாட்களில் எழுதி முடித்த தஸ்தயெவ்ஸ்கி அதில் தனக்கு உதவிய அன்னா கொரிவ்னாவைத் தன் வாழ்க்கைத் துணைவியாக்கிக் கொண்டார்.

உலகின் சிறந்த எழுத்தாளர்களெல்லாம் தஸ்தயெவ்ஸ்கியை மதித்துப் போற்றத் தொடங்கி விட்டிருந்த நிலையில்-புகழின் உச்சத்தில் இருக்கும்போது நுரையீரல் பாதிப்பினால் மரணமடைந்த[1881] அவரது இறுதி ஊர்வலத்தில் வரலாறு கண்டிராத அளவுக்கு 50000க்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டு ஓர் ஒப்பற்ற எழுத்தாளனுக்குத் தங்கள் இறுதி அஞ்சலியைச் செலுத்தினர்.
ரஷிய இலக்கியத்தில் மட்டுமன்றி உலக இலக்கியத்தின் பக்கங்களிலும் அமரத்துவம் வாய்ந்த ஒரு சிருஷ்டிகர்த்தாவாக நிலைத்த புகழ் பெற்றார் தஸ்தயெவ்ஸ்கி.காண்க இணைப்புக்கள்

அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி -1

அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி -2

அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி 3

மரணதண்டனையும்,தஸ்தயெவ்ஸ்கியும்-1
மரண தண்டனையும்,தஸ்தயெவ்ஸ்கியும்-2

அசடன்:சில முன் குறிப்புகள்-கதைச் சுருக்கம்-1

24.10.11

நாவலும் சராசரி மனிதர்களும்


 ’’சராசரி மனிதர்களிடமிருந்தும் கூடச் சுவையான சாரமுள்ள தன்மைகளை ஒரு படைப்பாளி தேடிக் கண்டடைய வேண்டும்’’
-தஸ்தயெவ்ஸ்கி-அசடன் நாவலில்....

நம்மைக் கடந்து போகும் ஒரு சாதனை மனிதனை..வேறுபட்ட ஒரு ஆளுமையைக் கவனிப்பது போல அன்றாட வாழ்வில் நாம் எதிர்ப்பட நேரும் ஆயிரக்கணக்கான சராசரி மனிதர்களின் மீது நம் பார்வை குவிவதில்லை; அவர்களைப் பொருட்படுத்தாதபடி பெரும்பாலும் புறந்தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறோம் நாம்.ஆனால் படைப்பாளிகளின் பார்வை,கவனம்,அவதானிப்பு அவர்களின் மீதும் மையம் கொள்வதே ஒரு படைப்பை நம்பகத்தன்மையுடையதாக்கும் என்கிறார் தஸ்தயெவ்ஸ்கி..
அது பற்றி அவரது சொற்களில்....

’’ஒரு கேள்வி மட்டும் இருந்துகொண்டேதான் இருக்கிறது.சராசரியான மனிதர்களை ஒரு படைப்பாளி எப்படிக் கையாளுவது?.தன் வாசகர்களிடம் அவர்களையும்கூடச் சுவாரசியமாகக் கொண்டு சேர்க்க அவன் என்ன செய்ய வேண்டும் என்பதுதான் அது.அப்படிப்பட்ட சராசரிமனிதர்களின் பாத்திரங்கள் ஒரு புனைகதையில் இடம் பெறாமல் தவிர்ப்பதும் இயலாத ஒன்றுதான்.காரணம்,மனிதர்களின் அன்றாட நடப்பியல் செயல்பாடுகளில் ஒவ்வொரு கணமும் மிகவும் முக்கியமான மிகவும் அவசியமான கண்ணிகளாக விளங்கி அவறை ஒருங்கிணைத்துக் கொண்டிருப்பவர்கள் 
சராசரி மனிதர்கள்தான்...அவர்களை ஒட்டுமொத்தமாக விட்டு விட்டால் கதை தன் நம்பகத் தன்மையை இழந்து விட நேரிடும்.தனிப்பட்ட குணாதிசயங்கள் கொண்ட பாத்திரங்களால் மட்டுமே ஒரு நாவலை நிரப்புவதோ அல்லது அந்தக் கதையைச் சுவாரசியமாக ஆக்குவதற்காகவே வினோதமான நம்ப முடியாத பாத்திரங்களை அதிகமாகச் சித்தரித்துக் கொண்டிருப்பதோ அந்தப் படைப்பை மேலும் கூட நம்ப முடியாததாகவும் சுவையற்றதாகவும் ஆக்கி விடும்

இந்த நோக்கில் பார்க்கப்போனால்...காலம் காலமாக எந்த மாற்றமும் இல்லாமல் அப்படிச் சராசரி மனிதர்களாக மட்டும் இருக்க நேர்வதே சில மனிதர்களின் சாரமான குணமாய்ப் போயிருப்பதைக் காண முடியும்.சராசரி வாழ்விலிருந்து மேலெழுந்து வருவதற்கு எவ்வளவு கடுமையான முயற்சிகளை மேற்கொண்டாலும் கடைசியில்-வேறு வழியே இல்லாமல்- அதே பழக்கப்பட்ட சாதாரணமான சூழ்நிலையிலேயே அவர்கள் விடப்படுகையில் அவர்களுக்கும்கூட ஒரு தனிப்பட்ட குணாதிசயம் ஏற்பட்டு விடுகிறது.தாங்கள் சராசரிகளே என்ற நிதரிசனமான உண்மையை மறுத்தபடி தங்களுக்கென்று ஒரு தனித்துவமும் சுதந்திர மனோபாவ்மும் வேண்டுமென்று தீவிரமாக ஆசைப்பட ஆரம்பித்து விடுகிறார்கள் அவர்கள்.ஆனால் அவற்றை அடைவதற்கான சாத்தியக் கூறுகள் அவர்களுக்குச் சிறிதும் கிட்டுவதில்லை.

இவ்வாறான சராசரி மனிதர்களிடமிருந்தும் கூடச் சுவையான சாரமுள்ள தன்மைகளை ஒரு படைப்பாளி தேடிக் கண்டடைய வேண்டும்’’


அசடனில் சில துணைப் பாத்திரங்கள்;
பாவ்லிஷ்ட்சேவ்-[நிகொலாய் ஆண்ட்ரியேவ் பாவ்லிஷ்ட்சேவ்]-
பெற்றோரை இழந்த மிஷ்கினுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டு வளர்த்தவர்.மருத்துவரின் கண்காணிப்பில் அவன் ஒப்படைக்கப்படும் வரை அவனுக்குப் பாதுகாவலராக இருந்தவர்.

ஷ்னீடர்-/ஷெனிடர்-மிஷ்கினின் மன நலமருத்துவர். 
டாட்ஸ்கி-[அஃபனாஸி இவானோவிச் டாட்ஸ்கி]-
பெரும் செல்வந்தர்; தன்னிடம் பணி புரிந்து இறந்து போன அலுவலரின் மகள் நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னாவை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு பிறகு அவளைத் தன் ஆசை நாயகியாக்கி அவளது வாழ்வு சீரழியக் காரணமானவர்.
இபான்சின்[இவான் ஃபியோதரவிச் இபான்சின்] -
லிசவெதாவின் கணவர்; இராணுவத்தில் உயர்பதவி வகிக்கும் தளபதி.

லிசவெதா ப்ரகோஃபியேவ்னா-
இளவரசன் மிஷ்கினின் பரம்பரையைச் சேர்ந்த தூரத்து உறவினள்; தளபதி இபான்சினின் மனைவி.அலெக்ஸாண்ட்ரா,அடிலெய்டா,அக்லேயா ஆகிய மூன்று பெண்களின் அன்னை.கள்ளமற்ற வெள்ளை மனமும் வெளிப்படையான குணமும் கொண்டவள்.
அலெக்ஸாண்ட்ரா,அடிலெய்டா

இபான்சின் தம்பதியரின் மகள்கள். அக்லேயாவின் சகோதரிகள்.
கன்யா[கேவ்ரிலா ஆர்டலியோனோவிச் கன்யா]- 
குறுக்கு வழியில் வாழ்வில் முன்னேறத் துடிக்கும் இளைஞன்; அக்லேயா மீது விருப்பம் கொண்டிருந்தாலும் பணத் தேவையால் நஸ்டாஸ்யாவை மணக்க முன் வருபவன்;இபான்சினின் உதவியாளனாக இருந்த இவன்,ஒரு கட்டத்தில் மிஷ்கினின் உதவியாளனாக மாறிப் போகிறான்.
இவோல்ஜின்[கேவ்ரிலா ஆர்டலியோனோவிச் இவோல்ஜின்]-
முன்னாள் இராணுவத் தளபதி;கன்யா,வார்வரா,கோல்யா ஆகியோரின் தந்தை; பிறரிடம் கடன் வாங்கிக் குடிப்பதையே வழக்கமாகக் கொண்டிருந்ததால் இவர் நல்ல பல சமூகத் தொடர்புகளை இழக்கவும் கடன்காரர்களுக்கான சிறையில் பல நாட்களைக் கழிக்கவும் நேர்கிறது.பழைய நினைவுகளில் சஞ்சரிப்பதே இவரது வாடிக்கையான பொழுது போக்கு; இறந்து போன கேப்டன் ஒருவரின் விதவை மனைவியோடு தொடர்பு கொண்டிருப்பவர்.
நீனா அலெக்ஸாண்ட்ரோவ்னா-கன்யாவின் தாய்; தளபதி இவோல்ஜினின் மனைவி.
வார்வரா அலெக்ஸாண்ட்ரோவ்னா-
இவோல்ஜின் தம்பதியரின் மகள்;கன்யாவின் சகோதரி.
கோல்யா-கன்யாவின் இளைய சகோதரன்; மிஷ்கின் மீது எதிர்பார்ப்புக்களற்ற உண்மையான அன்பு கொண்டிருப்பவன்.
ப்டித்சின்[இவான் பெத்ரோவிச் ப்டித்சின்];
மிகவும் நாகரிகமும் கண்ணியமும் வாய்ந்த 30 வயது வாலிபன்.வட்டிக்கு விடும் தொழிலை மேற்கொண்டிருந்தாலும் பேராசையின் பிடியில் சிக்காதவன்.கன்யாவின் தங்கை வார்வராவை விரும்பி மணந்து கொள்பவன்.
லெபதேவ்[லுகியான் திமோஃபெயீச் லெபதேவ்]- பணம் படைத்தவர்களை அடி வருடிப் பிழைக்கும் ஒட்டுண்ணி போன்ற குணம் கொண்டவன்; முதலில் ரோகோஸினுடனும் பிறகு மிஷ்கினோடும் ஒட்டிக் கொண்டு வாழ்க்கை நடத்துபவன்.

வெரா லெபதேவ்-


லெபதேவின் மகள்;இனிமையான குணம் படைத்தவள்.நாவலின் இறுதியில் 

யெவ்கெனி பேவ்லோவிச்சை மணப்பவள்.
இளவரசி பைலாகான்ஸ்கி-
லிசவெதாப்ரகோஃபியேவ்னாவின் தோழி; ஆலோசகி; உயர்மட்டத்துக்கே உரிய செருக்குடன் இருப்பவள்.


காண்க இணைப்புக்கள்


அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி -1

அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி -2

அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி 3

அசடன்:சில முன் குறிப்புகள்-கதைச் சுருக்கம்-1

23.10.11

அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி 3 குறைகளும்,தன்னலமும்,வஞ்சக மாசுகளும் மண்டிக் கிடக்கும் மானுடர்களுக்கு நடுவே தான் காண விரும்பிய நவீன ஏசுவின் வடிவமாகவே அசடனாகிய மிஷ்கினின் பாத்திரத்தை தஸ்தயெவ்ஸ்கி சித்தரித்திரிக்கிறார்.
’’மிஷ்கினுக்கு இருக்கும் கிறிஸ்துவின் சாயலைப்பற்றி மேலைநாட்டு இலக்கியவிமர்சகர்கள் நிறையவே எழுதியிருக்கிறார்கள். சகமனிதர்களின் துயரங்களுக்கும்,தன் சொந்தத் துயரங்களுக்கும் வேறுபாடு தெரியாதவன் அவன். அந்த இயல்பே அவனை அனைத்து மானுடத் துயரங்களுக்கும் மேலானவனாக, அவற்றில் இருந்து மீட்பளிப்பவனாக ஆக்கிவிட்டிருக்கிறது’’என்று தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார் ஜெயமோகன்.
விமரிசகர்கள் இவ்வாறு கூறுவதற்கான ஆதாரங்களை நாவலின் ஓட்டத்தில் பல கட்டங்களில் காண முடிந்தாலும் அதன் உச்சமாக அமைவது நஸ்டாஸ்யா கொலப்பட்டுக் கிடக்கும் இறுதிக் கட்டம்.

நாவல் முழுவதும் யார் மீது செலுத்திய கருணைக்காகத் தன் காதலையும் வாழ்வையுமே கூடத் தொலைத்துக் கொண்டானோ அந்த நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னா,ரோகோஸினால் கொலையுண்டு கிடக்கிறாள்.ஏதோ ஒரு பொறாமை உணர்ச்சியின் மூர்க்கமான ஆவேசத்தால் அவளைக் கத்தியால் குத்திச் சாகடித்த ரோகோஸின் ஜுர வேகத்தில் சித்தப் பிரமை பிடித்தவனைப் போல இருக்கிறான். இது இப்படித்தான் நடக்கப் போகிறது என்பதை வழக்கமான தன் உள்ளுணர்வின் தூண்டுதலால் ஓரளவு ஊகிக்க முடிந்து விட்டிருந்தபோதும் அந்த எழில் வடிவம்...வாழ்வில் நிம்மதி என்பதையே சற்றும் நுகர்ந்திராத பாவப்பட்ட அந்தப் பெண் அவ்வாறு இறந்து கிடப்பது அவனுள் பெரும் துயரத்தைக் கிளர்த்துகிறது.


ஆனால் அதையும் மீறியதாய் அவனது இயல்பான பரிவுணர்வு அவனில் தலை காட்டத் தொடங்க,ரோகோஸினின் நிலைக்காக வருத்தம் கொண்டவனாய்...மிகுந்த ஆதங்கத்துடன் அந்தக் கொலைகாரனை கொன்றவனை அணைத்து ஆறுதலளிக்கத் தொடங்குகிறான் அவன். 
’’அவ்வப்போது தனது உரத்த முரட்டுக் குரலில் சம்பந்தமே இல்லாதபடி எதையாவது திடீர் திடீரென்று முணுமுணுத்துக் கொண்டும் கத்திக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தான் ரோகோஸின்.அவ்வாறான தருணங்களில் மிஷ்கின் தன் நடுங்கும் விரல்களால் அவனது தலையையும் தலை முடியையும் தொட்டு அவற்றைத் தன் விரல்களால் கோதி விடுவான்;கன்னங்களில் பரிவுடன் தட்டிக் கொடுப்பான்.கையற்ற நிலையில் பரிதவிப்புடன் தன் முகத்தை எந்த விதத் தயக்கமும் இன்றி ரோகோஸின் முகத்தோடு மிக நெருக்கமாக வைத்துக் கொண்ட மிஷ்கினின் கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீர்,ரோகோஸினின் கன்னங்களின் மீது விழுந்து கொண்டிருந்தது.ஜன்னி கண்ட அந்த மனிதன் ஒவ்வொரு முறை கூச்சலிடும்போதும் பிதற்றத் தொடங்கும்போதும் தனது நடுங்கும் கரத்தை மென்மையாக அவனது தலையிலும் கன்னத்திலும் வைத்து வருடிக் கொடுத்தபடிஅவனுக்கு ஆறுதலளித்துக் கொண்டிருந்தான் மிஷ்கின்’’
என்று அந்தக் கட்டத்தை விவரித்துக் கொண்டு போகிறது நாவல்..
உலகப் பேரிலக்கியங்கள் அளிக்கும் தரிசனங்கள் மானுடத்தின் உச்சமான நல்ல பக்கங்களைத் திறந்து காட்டும் நுழை வாயில்கள் என்பதை நிறுவும் அந்தக் கட்டம்தான் எப்படிப்பட்ட ஒரு மகத்தான காட்சி? மானுட மன்னிப்பின்- சகிப்புத் தன்மையின் உச்சமான அற்புதமான ஒரு முரண் கணமல்லவா அது?

ஏசுவின் குறிப்பிட்ட ஒரு ஓவியம் பற்றிய குறிப்பும் நாவலின் மூன்று நான்கு கட்டங்களில் இடம் பெற்றிருக்கிறது. இருள் மண்டிக் கிடக்கும் ரோகோஸின் வீட்டு வரவேற்பறையில் மிக வினோதமான வடிவத்தில் - வழக்கத்தில் அதிகமாகக் காண முடியாத வித்தியாசமான அளவுடன் ஆறடி நீளமும் ஓரடி உயரமும் கொண்டதாக இருக்கும் அந்தப் படத்தைப் புகழ்பெற்ற ஜெர்மானிய ஓவியர் ஹேன்ஸ் ஹோல்பெயின் வரைந்த ஓவியத்தின் நகலாகக் குறிப்பிடுகிறான் மிஷ்கின்.அவன் அந்தப் படத்தைக் கண்டவுடன் சற்றுத் துணுக்குற்றாலும் தொடர்ந்த அவனது சிந்தனை ஓட்டம் வேறு ஏதேதோ எண்ணங்களால் தடைப்பட்டுப் போய்விடுகிறது. கதைப் போக்கில் தொடர்ந்து அதே ஓவியத்தைக் காண நேரும் இப்போலிட் என்னும் இளைஞனும் நஸ்டாஸ்யாவும் அந்த ஓவியம் தங்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர்.

குறிப்பாகக் காச நோயின் பிடியில் சிக்கி ஒவ்வொரு நிமிடமும் மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் இப்போலிட்டின் மீது அதன் தாக்கம் மிகக் கூடுதலாகவே இருப்பதால் அவன் சொற்களின் வழியாகவே அந்த ஓவியத்தை இவ்வாறு வருணிக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.


’’கலைக் கண்ணோட்டத்தோடு பார்க்கும்போது எந்தச் சிறப்பான அம்சமும் இல்லையென்றபோதிலும் மிக வினோதமான ஒரு பதட்டத்தை இருப்புக் கொள்ளாத தவிப்பை அது என்னுள் கிளர்த்தியது.பொதுவாக ஏசுவை வரையும் ஓவியர்கள் சிலுவையில் இருக்கும் நிலையிலும் அதிலிருந்து அகற்றப்பட்ட பிறகும் அவரது முகம் அதீதமான அழகுடனும் பொலிவுடனும் இருப்பதாக வரைவதே வழக்கம்.அவர் மிகக் கடுமையான வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்த நேரத்திலும் கூட அவரது முகத்தின் பொலிவையும் எழிலையும் தக்க வைப்பதற்கே அவர்கள் முயற்சித்திருக்கிறார்கள்.ஆனால் ரோகோஸின் வீட்டில் இருந்த படத்தில் அந்த எழிலில் சாயலே கொஞ்சமும் இல்லை.சிலுவையில் அறைபட்டு இறந்து போவதற்கு முன் அளவற்ற வேதனைகளை எதிர்ப்பட நேர்ந்த ஒரு மனிதனின் பிணத்தைப் போலத்தான் எல்லா வகையிலும் இருந்தது அது.


சிலுவையைத் தன் முதுகில் தாங்கிக் கொண்டு அதன் பாரம் தாங்க முடியாமல் விழுந்தபோது உடன் வந்த காவலர்களாலும் மக்களாலும் அடி உதை சித்திரவதைகளுக்கு ஆளாகி வேதனையை வெளிப்படுத்தும் முகம் அந்த ஓவியத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது.


இப்போதுதான் சிலுவையிலிருந்து இறக்கி வைக்கப்பட்ட மனிதனின் முகம் அது.இன்னும் கூட அந்த முகத்தில் உடற்சூடும் உயிர்த்துடிப்பும் இருக்கத்தான் செய்தது.இறந்து போன மனிதனின் முகத்தில் அவன் அனுபவித்த துன்பத்தின் நிழல் இப்போதும் கூடத் தேங்கித்தான் இருந்தது.இன்னமும் கூட அந்தத் துன்பம் தரும் வாதனைகளை அனுபவித்துக் கொண்டிருப்பது போலவே அந்த முகத் தோற்றம் இருந்தது.ஒரு மனிதன் அனுபவிக்கக் கூடிய கடுமையான வேதனைகளும் துன்பங்களும் அந்த ஓவியத்தில் சிறிது கூட விட்டு வைக்கப்படவில்லை.இதுதான் இயற்கையின் நியதி,யாராக இருந்தாலும் இப்படிப்பட்ட துன்பங்களை அனுபவித்தபின் ஒரு மனிதப்பிணம்-அதன் முகம் இப்படித்தான் இருக்கமுடியும் என்பதை எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தது அந்த ஓவியம்.அந்த உணர்வுகளை மிக அருமையாக வெளிப்படுத்தியிருந்தான் ஓவியன்.
ஹேன்ஸ் ஹோல்பெயின் வரைந்த ஓவியம்
அந்தப் படத்திலிருந்த முகம் அடிகளாலும் குத்துக்களாலும் சிதைக்கப்பட்டு அச்சமூட்டும் வகையில் வீங்கிப் போயிருந்தது.சவுக்கடிகளால் விளாறப்பட்ட -இரத்தம் உறைந்துபோன திட்டுத் திட்டான இரத்தக் காயங்கள் அந்த உடலெங்கும் முகமெங்கும் பரவிக் கிட்ந்தன.கண்கள் திறந்த நிலையில் காணப்பட்டன.விரியத் திறந்திருந்த அந்த விழிகளின் வெண்படலத்தில் மரண ஒளியின் ரேகைகள் நிழலாகப் படர்ந்திருந்தன.

இறப்பு என்பது இத்தனை கொடூரமானதாகவும் இயற்கையின் விதிகள் இந்த அளவு வலிமை வாய்ந்தவையாகவுமிருக்கும்போது அவற்றை வெற்றி கொள்வது எவ்வாறு சாத்தியமாகும்...இயற்கையையே தன் வசப்படுத்தியிருந்தவரும்,இறந்து போன தன் நண்பரையே உயிர்ப்பித்தவருமான அவராலேயே - கடவுளை ஒத்த அவராலேயே மேற்கூறியவற்றை வெற்றி கொள்வது சாத்தியமாகவில்லையே...அந்தப் படத்தைப் பார்க்கும்போது இயற்கை என்பதே ஒரு கருணையற்ற பூதாகரமான ஊமையான ஒரு மிருகத்தைப் போலத்தான் தோன்றுகிறது’’

ஒழுக்கநியதிகளின்படி வாழும் மனிதர்களை விடப் பாவத்திலும் புறக்கணிப்பிலும் துன்பப்பட்டு அவற்றில் அழுந்திப்போனவர்கள்,ஏசுவின் இந்தக் கோலத்தில் தங்கள் மன ஆறுதலைப் பெறுவதும அவரை அணுகிப் புரிந்து கொள்வதும் எளிதாக இருக்கிறது;குற்றமும் தண்டனையும் நாலிலும் கூட மர்மலேதோவ்,சோனியா ஆகியோரின் பாத்திரங்கள் வழி இதே கருத்தை வலியுறுத்துகிறார் தஸ்தயெவ்ஸ்கி. அதே போல இங்கும் ஏசு பட்ட துன்பங்களும்,காயங்களும் மரணத்தின் நிழலில் இருக்கும் இப்போலிட்டுக்கு ஒருவகை ஆறுதலை அளிக்கின்றன;அதே போலப் பிறரின் பழிச் சொற்களுக்கும் ஏளனத்துக்கும் பரிகாசத்துக்கும் மட்டுமே காலம் முழுவதும் ஆட்பட்ட நஸ்டாஸ்யாவுக்கும் அந்த ஓவியம் இனம் புரியா ஆறுதலை ஏற்படுத்துகிறது.
பிறரின் துயரங்களுக்காகத் தன்னை ஒப்புக் கொடுத்து அவற்றை வலிந்து ஏற்கும் மிஷ்கினோ நவீன ஏசுவின் மறுவார்ப்பாகவே ஆகி விடுகிறான்...


காண்க இணைப்புக்கள்


அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி -1

அசடனில் சில பாத்திரங்கள்-பகுதி -2

அசடன்:சில முன் குறிப்புகள்-கதைச் சுருக்கம்-1

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....