துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

12.10.11

மரண தண்டனையும்,தஸ்தயெவ்ஸ்கியும்-1

1849 ஆம் ஆண்டு,டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி..
நேரம் அதிகாலை.
இருபது அரசியல் கைதிகள் ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கிலுள்ள ஸெமனோவ் சதுக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்த தூக்கு மரங்களைச் சுற்றிலும் நிறுத்தப்பட்டிருந்தனர்.அவர்களில் முதல் மூன்று பேரின் கண்களைக் கறுப்புத் துணியால் கட்டித் தூக்கு மேடையில் நிறுத்திச் சுற்றிலும் துப்பாக்கி வீரர்கள் சுடுவதற்குத் தயாராக நின்றனர்..அந்த பயங்கரமான காட்சியைப் பிற பதினேழு கைதிகளும் குலைநடுங்கப் பார்த்தபடி இருந்தனர்.அடுத்து வரவிருப்பது அவர்களின் முறை.

’’சுடுங்கள்’’என ஓர் அதிகாரி ஆணையிட வாய் திறந்த மிகச் சரியான அந்தத் தருணத்தில்,மற்றுமொரு அதிகாரி வெள்ளை நிறக் கைக்குட்டை ஒன்றை வெள்ளைக் கொடி போல ஆட்டிக் கொண்டே அங்கே ஓடோடி வந்தார்.ரஷியச் சக்கரவர்த்தியான முதலாம் நிக்கலஸ் அந்த மரண தண்டனையை ரத்து செய்து சிறைத் தண்டனையாக மாற்றி விட்ட மகிழ்ச்சியான செய்தியைச் சுமந்தபடி வந்திருந்தார் அவர்...
மரணத்தின் வாயிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிப்பிழைத்த அந்த இருபது அரசியல் கைதிகளில்...உலகப் புகழ்பெற்ற இலக்கிய மாமேதையும்,
குற்றமும் தண்டனையும்,இடியட்,கரமஸோவ் சகோதரர்கள் முதலிய அழியாப் புகழ் பெற்ற அமரத்துவப் படைப்புக்களைத் தந்தவருமான நாவலாசிரியர் ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியும் ஒருவர்.மரணதண்டனை பற்றிய விவாதங்கள் பல முனைகளிலும் வலுப் பெற்று வரும் இன்றையசூழலில் தானே அனுபவிக்க நேர்ந்த கோரமான அந்த நிகழ்வைத் தன் படைப்புக்களில் முன் வைத்து-தார்மீக அறத்துடன்,சமூகப் பொறுப்புணர்வுடன் அவ்வகையான தண்டனைகள் மீதான தனது கண்டனங்களை கடுமையான விமரிசனங்களைப் பதிவு செய்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி என்பது இங்கே நினைவுகூரத்தக்கதும் முக்கியத்துவம் வாய்ந்ததுமான ஒன்று .


ஒரு சமூகப் போராளி போராட்டத்தைத் தன் ஆயுதமாக முன்னெடுக்கிறான்.ஓர் எழுத்தாளனுக்கு அவனது எழுதுகோலே அந்த ஆயுதமாகிறது.

மரணத்தின் விளிம்பைத் தான் எதிர்கொண்ட அந்தத் தருணத்தில் தன்னுள் ஓடிய உணர்வுகள்..எண்ண ஓட்டங்கள் ஆகியவற்றைத்
தனது இடியட்/அசடன் நாவலில் இளவரசன் மிஷ்கினின் கூற்றாகப் பல இடங்களில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் தஸ்தயெவ்ஸ்கி.
விரைவில் என் மொழியாக்கத்தில் வெளிவரவிருக்கும் அந்தப் படைப்பிலிருந்து ஒரு சிலபகுதிகள் ...தனது தூரத்து உறவினர்களான இபான்சின் குடும்பத்தாரிடம் முதல் முறையாக உரையாடும் கட்டத்திலேயே தான் நேரில் பார்த்திருக்கும் கோரமான மரண தண்டனைக் காட்சிகள் சிலவற்றைப்பகிர்ந்து கொள்கிறான் மிஷ்கின் .
தஸ்தயெவ்ஸ்கியின் வாழ்வில் நடந்ததாகத் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட உண்மையான அனுபவத்தின் வெளிப்பாடாகவே அது இருப்பதைக் காண முடிகிறது.


மிஷ்கினின் அந்த விவரிப்பு.கீழே......


’’கடந்த ஆண்டு நான் சந்தித்த மனிதனைப் பற்றி இப்போது சொல்கிறேன்.
அந்த மனிதன் ஒரு முறை வேறு சிலருடன் சேர்த்துத் தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
அவன் மீது குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனைக்கான தீர்ப்பும் வாசிக்கப்படு விட்டது.
ஒரு அரசியல் குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு அன்று அவன் சுட்டுக் கொல்லப்பட இருந்தான்.
தண்டனை நிறைவேற்றத்துக்காக அவர்கள் காத்து நின்ற இருபது நிமிடங்கள் கழிந்த பின் அவர்களுக்கு மரணதண்டனையை நிறுத்தி வைக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டு வேறொரு தண்டனை விதிக்கப்பட்டது.


மரணத்திலிருந்து அவர்கள் தப்பினாலும்....அந்த இரண்டு உத்தரவுகளுக்கும் இடைப்பட்ட நேரமான அந்த 20 நிமிட்ங்கள் எப்படிக் கழிந்திருக்கும்...?
இன்னும் ஒரு சில நிமிடங்களில் தான் இறக்கப்போவது உறுதி என்ற திகிலான நினைப்பில் மட்டுமே அந்த மணித்துளி கடந்திருக்குமல்லவா...?
அந்தக் குறிப்பிட்ட தருணத்தில் அவன் அனுபவிக்க நேர்ந்த உணர்ச்சிகளை மீண்டும் நினைவுபடுத்திப் பார்த்து அவன் விவரிக்கும்போதெல்லாம் நான் அதை மிகவும் ஆர்வத்தோடு கேட்பதுண்டு.அவற்றையெல்லம் அவன் மிகத் துல்லியமாகத் தன் நினைவில் வைத்திருந்தான்.


அவன் உயிரோடு வாழ்வதற்குக் கிடைத்த 5 நிமிடங்களும் முடிவற்று நீண்டு கொண்டே போவதைப் போல அவனுக்குத் தோன்றியது...தனக்கு முன் பாக்கியிருந்த அந்த ஐந்து நிமிடங்களை அவன் மிகச் சரிவரப் பங்கிட்டுக் கொண்டான்.
தன் சக தோழர்களிடமிருந்து விடைபெற 2 நிமிடங்கள்......
தனது கடைசித் தருணத்தில் நினைத்துப் பார்ப்பதற்காக 2 நிமிடங்கள்.......
தன்னைச் சுற்றி இருப்பவைகளை இறுதியாகப் பார்ப்பதற்காக 1 நிமிடம்.......


இவற்றுள் தனக்குத்தானே சிந்தித்துக் கொள்வதற்காக ஒதுக்கியிருந்த 2 நிமிடங்களில் தான் சிந்திக்கப் போவது எதைப் பற்றி என்று கூட அவன் முன்னரே அறிந்து வைத்திருந்தான்.
இதோ..இப்போது அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்...ஆனால் இன்னும் மூன்றே நிமிடங்களில் அவன் வேறு ஏதோ ஒன்றாக வேறு என்னவோ ஒன்றாக மாறி விடப் போகிறான்.அதையெல்லாம் தெளிவாய்த் தெரிந்து கொண்டு விட வேண்டுமென அவன் நினைத்தான்.


அங்கிருந்து சிறிதுதொலைவில் ஒரு மாதா கோவில் இருந்தது.பிரகாசமான சூரிய ஒளியில் மாதா கோவிலின் மெருகிட்ட பொற்கூரை ஜ்லித்துக் கொண்டிருந்தது.அந்தக் கூரையையும் அதன் வெளிச்சத்தையும் தான் தொடர்ந்து வெறித்துக் கொண்டிருந்தது அவனுக்கு நினைவிருக்கிறது.அந்த ஒளிக் கற்றைகளோடு இன்னும் மூன்று நிமிடங்களில் தான் ஒன்றிக் கலந்து விடப் போவது போலவும் அவனுக்குத் தோன்றியது..நிச்சயமில்லாத அந்தக் கணம் அவனுக்கு மிகவும் வெறுப்பூட்டுவதாகவும்,கொடூரமானதாகவும் இருந்தது.இப்படிப்பட்ட தொடர்ச்சியான சிந்தனைகள் அவனை மிக அதிகமாக மிரட்டியபடி மூர்க்கமான ஒரு ஆவேசத்தைத் தன்னில் கிளர்த்தி விட...இறுதியில் ஒரு கட்டத்தில் தன்னைச் சீக்கிரமாகச் சுட்டு விட்டால் போதும் என்று அவன் ஏங்கத் தொடங்கி விட்டான்..
கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....