விமரிசையான ஒரு
விழா முடிந்ததும் வெறிச்சிட்டுக் கிடக்கும் களம் பற்றிச் சொன்ன சங்கப் புலவனின் வருணனையை
அசை போட்டபடி இரண்டு நாள் விஷ்ணுபுர வட்ட நினைவுகளோடு வெறிச்சோடிக் கிடக்கிறது மனம்.
விஷ்ணுபுரம் விருது
விழாவைப்பொறுத்த மட்டில் விழாவை விட முதன்மை பெறுவது சக இருதயர்களின் கூடுகையும் பகிர்வுகளுமே.
தனது விழாச் சிறப்புரையிலும் கூட இது பற்றிக் குறிப்பிட்ட மூத்த எழுத்தாளர் இ பா,,சம்பிரதாயத்துக்காக மட்டுமே
வழங்கப்படும் பிற விருதுகளிலிருந்து விஷ்ணுபுரம் விருது மாறுபட்டிருப்பதன் காரணம் வாசகர்கள்
குறிப்பிட்ட விருதாளரின் படைப்புக்களைப் படித்து,விவாதித்து அவரோடு கலந்துரையாடலும்
நிகழ்த்துவதனால் மட்டுமே என்று மிகுந்த மனநிறைவோடு குறிப்பிட்டார்.
21/12/13 காலை
தொடங்கியே இலக்கிய நண்பர்கள் மற்றும் ஜெயமோகன், கவிஞர் தேவதேவன் போன்ற எழுத்தாளுமைகளின்
கூடுகையோடும் இ பாவின் வருகையோடும், தொடர்ந்து நாஞ்சில் நாடன்,யுவன் சந்திரசேகர்,சுரேஷ்குமார்
இந்திரஜித்,விழா நாயகர் தெளிவத்தை ஜோசஃப் முதலியோருடனான உரையாடல்களோடும் களை கட்டத் தொடங்கி
விட்ட விஷ்ணுபுரம் விழா மிகக்கச்சிதமான – நெருடல்களற்ற திட்டமிடல்களோடு கோவை நானி கலையரங்கில்
திரளாகக் கூடியிருந்த இலக்கிய ஆர்வலர்கள் மற்றும் பார்வையாளர்கள் நடுவே மிகச்சிறப்பாக
நடந்து முடிந்தது.
இரண்டு நாட்களும்
நிகழ்ந்த அனுபவப்பகிர்வுகளும், கலந்துரையாடல்களும் வாழ்வின் தவற விடக்கூடாத முக்கியமான
அனுபவக் கணங்கள்…
அவை குறித்துத்
தனித் தனிப் பதிவுகளாக விரிவாக எழுதுவதற்கு முன்பு… சுருக்கமாக ஒரு விழாப்பதிவு…..
சாகித்திய அகாதமி
தொடங்கி சம்ஸ்கிருதி சம்மான்,பாஷா பரிஷத் ஆகிய பல இலக்கிய விருதுகளை வென்று பத்மஸ்ரீ
அங்கீகாரத்தையும் பெற்றிருக்கும் மூத்த எழுத்தாளர்
திரு இந்திரா பார்த்தசாரதி அவர்கள் 21/12 காலை கோவை மண்ணில் வந்து இறங்கி விஷ்ணுபுரம்
இலக்கிய நண்பர்களைச் சந்தித்த கணத்திலிருந்தே நெகிழ்வான உணர்ச்சிவசப்பட்ட மனநிலையுடன்
இருந்தார். இ பா போன்ற அறிவு ஜீவிகளால் அத்தனை
எளிதாக இறங்கி விட முடியாத ஒரு மனநிலை அது. அந்த உணர்ச்சி பூர்வமான மனநிலை வெளிப்பாட்டை விழாவின் தொடக்க உரையாக அவர்
ஆற்றிய சிறப்புரையிலும் காண முடிந்தது. வாசிப்புப்பழக்கம் வெகுவாகக் குறைந்து வரும்
இன்றைய காலகட்டத்தில் இவ்வாறான இலக்கிய தாகம் கொண்ட இளைய தலைமுறையைக் காண முடிந்ததும்
அவர்களோடு தொடர்ந்து இரண்டு நாட்கள் இலக்கியம் மற்றும் அது சார்ந்த பிற செய்திகளை விவாதிக்க
முடிந்ததும் தனக்குக் கிளர்ச்சியூட்டியதாகக் கூறிய அவர், தனது உடல்நிலையைக் காரணம்
காட்டி நிகழ்ச்சிக்கு வருவதைத் தவிர்த்திருந்தால் இந்த அற்புதமான வாய்ப்பைத் தான் இழந்திருக்கக்கூடும் என்றார்.
 |
இந்திரா பார்த்தசாரதி |
பல்வேறு துறைகளில்
முத்திரை பதித்திருக்கும் இந்தியர்கள் இருபத்தைந்து பேரை வெளிச்சமிட்டுக் காட்டிய ஒரு
தனியார் தொலைக்காட்சி, இலக்கியத் துறை என்று வரும்போது மட்டும் இந்திய மொழிகளில் எழுதும்
எழுத்தாளர்களைத் தவிர்த்து ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளரை முன்னிலைப்படுத்துவது
குறித்த ஆதங்கத்தை நண்பர்களோடான பகிர்விலும் விழாக்கூட்டத்திலும் இ பா அவர்கள் வேதனையோடு
பகிர்ந்து கொண்டது எழுத்தாளர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப்பெறாமல் இருப்பது பற்றிய
அவரது மெய்யான ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே அமைந்தது. எங்கேயோ மலையகத்தில் இருந்து கொண்டு
எழுதும் தெளிவத்தை ஜோசஃப் என்னும் எழுத்தாளரை இனம் கண்டு இவ்விருது அளிக்கப்படாமல்
போயிருந்தால் அவரது எழுத்துக்களைத் தானும் கூடத் தவற விட்டிருக்கக்கூடும் என்ற இ.பாவின்
கூற்றிலிருந்த நேர்மையைத் தனது ஏற்புரையிலும் சுட்டிக்காட்டினார் தெளிவத்தை.
 |
ஜெயமோகன் |
எழுத்தாளர் ஜெயமோகனின்
வாழ்த்துரை வீரியத்தோடும் செறிவான தகவல்களோடும் அற்புதமாக அமைந்திருந்தது. யானைப்பாகர்களான
தன் பாட்டனும் தந்தையும் யானையின் காலால் மிதிப்புண்டு இறந்ததால் யானையைக் கொல்ல நவசார
விஷம் வைக்கும் எண்ணத்துடன் யானைப் பாகனாகச்சேரும் ஒருவன் ஒரே வாரத்தில் அந்த எண்ணத்தை
மாற்றிக்கொண்டு அதை ‘ஸ்னேகிக்க’த் தொடங்கி விடும் புல்லரிக்க வைக்கும் கதையான ‘கொலைச்சோற்’றை
விவரித்தபடி ஜெயின் உரை தொடங்கியது; தான் உண்பது கொலைச்சோறுதான் என்ற பிரக்ஞையுடன்
தினம் தினம் ஒரு வகைச் சாவு பயத்திலேயே யானைப்பாகன் இருந்தாலும் அதை விட்டு விலக அவனால்
சாத்தியப்படுவதில்லை; அதே போல எழுத்தென்னும் யானையின் காலில் மிதிப்புண்டு நாளும் நாளும்
செத்துக்கொண்டிருந்தாலும் அதை மோகிப்பதை எழுத்தாளனால் விட்டு விட முடிவதில்லை என்பதை
உணர்ச்சிகரமாக விவரித்த ஜெயமோகன் காலம்காலமாக
அந்த யானையின் காலில் மிதிபட்டுச் செத்த பாகன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில்
சம காலத்தால் தோற்கடிக்கப்பட்டு- ஆனால்….காலத்தால் தோற்காத படைப்பாளிகளை கௌரவிப்பதே
விஷ்ணுபுரம் விருதின் நோக்கம் என்றார்.
 |
சுரேஷ்குமார் இந்திரஜித் |
எழுத்தாளர் சுரேஷ்குமார்
இந்திரஜித், ஈழ மலையகத் தமிழர் குறித்த நடப்பியல் புள்ளிவிவரங்களயும் தாயகம் திரும்பும்
அவர்களில் சிலருக்கு அரசால் மேற்கொள்ளப்பட்டு அரைகுறையாய் முடிந்து போன மறுவாழ்வு முயற்சிகளையும்
முன் வைத்ததோடு தெளிவத்தையின் நான்கு சிறுகதைகள் குறித்த விரிவான கண்ணோட்டத்தையும்
அளித்தார். இலங்கையின் பிறபகுதிகளில் வசிக்கும் தமிழர்கள்,சிங்களர்கள் என்னும் இரு
சாராராலும் அவதிக்காளாகும் மலையகத் தமிழர்கள் வாழ்வியல் பற்றிய பார்வையையும் அவரது
உரை தெளிவாக்கியது.
 |
சுரேஷ் |
விஷ்ணுபுரம் இலக்கிய
வட்டத்தைச் சேர்ந்த மிகச்சிறந்த இலக்கிய வாசிப்புக்கொண்ட சுரேஷ் அவர்கள் தெளிவத்தையின்
படைப்புக்களை ஆய்வு நோக்கில் அணுகித் தன் முதல் சொற்பொழிவை விஷ்ணுபுரம் மேடையில் அரங்கேற்றினார்;
அது, முதல் பொழிவு போலவே தோன்றவில்லை என்ற கருத்தை கோவை ஞானி தொடங்கி அவையிலிருந்த
பலரும் வெளிப்படுத்தத் தவறவில்லை.
 |
ரவிசுப்பிரமணியம் |
உடல்நலக்குறைபாடு
காரணமாக மலையாளக்கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு அவர்கள் விழாவில் கலந்து கொள்ள
முடியாமல் போனாலும் அவர் எழுதிய கவிதைகளை ஜெயமோகனின் தமிழ் மொழிபெயர்ப்பில் திரு ரவிசுப்பிரமணியம்
அவர்கள் தனது காத்திரமான குரலில் பாடியதும் அந்த வரிகளுக்குள் பொதிந்து கிடந்த ஆழமான
சோகத் தொனியும் அதற்கேற்ப அவர் அமைத்திருந்த மெட்டுக்களும் ரவியின் குரலும் கண்டறியாத
ஏதோ ஒரு உலகத்துக்குள் சஞ்சரித்து வந்த உணர்வை ஏற்படுத்தின என்றே சொல்ல வேண்டும்.
 |
பாலா |
திரை இயக்குநர்
பாலா தன் ஒவ்வொரு திரைப்படத்திலும் இலக்கியவாதிகளோடும் எழுத்தாளர்களோடும் தான் கொண்டிருந்த
தொடர்பை சுட்டிக்காட்டியதோடு திரைத் துறையைத் தீண்டத் தகாத ஒரு துறையாக எண்ணி ஒதுங்கி
விடாமல் பல படைப்பாளிகளும் அதில் பங்களிப்புச் செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.
 |
தெளிவத்தை ஜோசஃப் |
தெளிவத்தை ஜோசஃபின்
ஏற்புரை சற்று நீண்டாலும் அவரது செழுமையான இலக்கிய, வாழ்வியல் அனுபவங்களை எடுத்துரைப்பதாக
இருந்தது. தந்திர பூமி நாவலின் மூலம் தான் ஆதர்சமாக வரித்துக் கொண்ட இ பா அவர்கள் கையால்
இவ்விருதைப் பெற நேர்ந்தது தனக்கு மகிழ்வூட்டுவதாகக் குறிப்பிட்ட தெளிவத்தை, விருதை
விடவும் தன் எழுத்துக்கள் மீள் வாசிப்புக்கும் மீள் பதிப்புக்கும் உட்படுத்தப்பட்டிருப்பதே தனக்கு மகிழ்வூட்டுவது என்றார்.
அவரது ‘மீன்கள்’ சிறுகதைத் தொகுப்பு நற்றிணை வெளியீடாகவும் ‘குடைநிழல்’நாவல் எழுத்து
பிரசுரம் வழியாகவும் விழா அரங்கில் வெளியிடப்பட்டு விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன.
 |
அரங்கசாமி |
இலக்கிய ஆர்வம்
கொண்ட நண்பர்களை ஒருங்கிணைத்து அவரவருக்கு உகந்த வேலைகளை அவரவருக்குப் பணித்து விழாவை
முழுமைப்படுத்திய விஷ்ணுபுர வட்ட ஒருங்கிணப்பாளர் திரு அரங்கசாமி, தனது வரவேற்புரையில்
விருதுத் தொகை ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டதை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டபோது இலக்கிய
ஆர்வலர்களின் மனம் பெருமிதத்தால் நிறைந்திருக்க வேண்டும்.
விழாவை மிகக் கச்சிதமான
துல்லியத்துடன் செம்மையாகத் தொகுத்து வழங்கிய திரு செல்வேந்திரன் விஷ்ணுபுரம் இலக்கிய
வட்டத்தின் சிறப்புக்கு மற்றுமொரு சாட்சி.
உறக்கம் கலைத்த விழாவின் அடுத்த ஆண்டு நிகழ்வையும்,கூடுகையையும் எதிர்பார்த்தபடி இருக்கிறது உள்ளம்....
 |
இறைவாழ்த்து
சுரேஷின் புதல்வியர் |
 |
தெளிவத்தையின் மனைவிக்குப் பொன்னாடை
சுதா சீனிவாசன் விஷ்ணுபுர வட்டம் |