துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

28.8.11

அறத்தின் வெற்றி!

அறத்தின் குரல் வென்றது...
அண்ணாவின் மன உரத்துக்கும்,மக்கள் நலனில் சமரசத்துக்கு இடமில்லை என அவர் கொண்ட விடாப்பிடியான உறுதிக்கும் வாழ்த்துக்கள்!


ஒவ்வொரு இந்தியனுக்கும் இது வெற்றித் தருணம் என்றார் அண்ணா ஹசாரே..
ஆம்..
ஊழல் குற்றச்சாட்டுக்களின் 
தாங்க முடியாத பாரம் சுமந்து ...
கூன் விழுந்த இந்திய முதுகைப் 
பெருமிதத்தோடு நிமிர்த்தியிருக்கிறது...
அண்ணாவின் அறப்போர்..!


இணைப்புக்கள்

புது தில்லி ராம் லீலா மைதானத்திலிருந்து..

உண்டால் அம்ம இவ்வுலகம்



25.8.11

புது தில்லி ராம் லீலா மைதானத்திலிருந்து....

’’கூலிக்காகவோ..கொடுக்கும் பணத்துக்காகவோ அத்தகைய உணர்வெழுச்சியை வருவித்து விட முடியாது என்பது உணர்வான அந்தக் கணத்தில் வரலாற்றின் மகத்தான திருப்பு முனை ஒன்றின் சாட்சியாக-அதில் பங்கேற்ற நிறைவும் பெருமிதமும் எங்கள் நெஞ்சை ஆட்கொண்டிருந்தது’’


புது தில்லியின் ராம்லீலா மைதானம்....

ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகையின்போது பத்துத் தலையோடு மிகப் பெரிய இராவண பொம்மை செய்து அதை அழித்து ஆரவாரிக்கும் அந்த இடத்தில்...
ஊழலின் ஆயிரமாயிரம் தலைகளை வேரறுக்கும் உள்ளுரத்தோடு எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியே உருவாகக் கடந்த ஒரு வார காலமாக உண்ணா நோன்பிருக்கிறார் அந்த முதியவர்.

மகாத்மாவுக்குப் பிறகு மாபெரும் எழுச்சி ஒன்று நாடு முழுவதும் தன்னிச்சையாகக் கொழுந்து விட்டெரியச் செய்திருக்கும் அண்ணா ஹசாரே என்ற அந்த மாமனிதரின் போராட்டம் இந்திய வரலாற்றின் பக்கங்களில் தவறாமல் பதிவாகப் போகிற ஒன்று;அந்தத் தருணத்தைத் தவற விடாமல் அங்கே சென்று அவரையும் கண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணம் நான்கைந்து நாட்களாகவே மனதைக் குடைந்து கொண்டிருந்தபோதும் தில்லியின் கூட்டங்கள்,போராட்டங்கள் ஆகியவை எனக்குப் பழகியிராதவை என்பதால் கூடவே சிறியதொரு தயக்கமும் இருந்து கொண்டிருந்தது.
தற்செயலாக நேற்று மதுரையிலிருந்து டேராடூன் சென்று திரும்பிக் கொண்டிருந்த நண்பர்கள் வர்த்தினி-ஆறுமுகம் இருவரும்(இரண்டு பேருமே சமூக,இலக்கிய ஆர்வலர்கள்) தங்கள் மகன் சஹாவுடன் வீட்டுக்கு வர,அண்ணா கூட்டம் செல்வதில் அவர்களும் ஆர்வம் காட்ட நேற்று நண்பகல் 12 மணிக்கு ராம் லீலா மைதானத்துக்குச் சென்றோம்.

தில்லியில் சில நாட்களாக விட்டு விட்டுப் பெய்து வரும் மழையால் சேறும்,சகதியுமாய்க் கிடந்த மைதானம்;குட்டை குட்டையாய்த் தேங்கி நிற்கும்  நீர்.அழுக்கேறி நசநசப்புடன் கிடக்கும் தார்ப்பாலின் விரிப்புகள்..
ஆனாலும் இவற்றைக் கண்டு கொள்ளாமல் கூடியிருந்த மக்கள் கூட்டம் என்னுள் ஒரு பரவசச் சிலிர்ப்பையே ஏற்படுத்தியது.

வர்த்தினி சஹாவுடன் நான்..
பண பலமும்,அதிகார பலமும் படைத்த அரசியல் கட்சிகளால் நூறு ரூபாய்ப் பணத்துக்கும்,பிரியாணிப் பொட்டலத்துக்கும் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் மந்தைக் கூட்டமாக அது இல்லை...
‘கூட்டப்பட்ட கூட்டம்’ அல்ல.அது...,...தானாகக்.’கூடும் கூட்டம்’என்பதைப் பார்த்த அளவிலேயே புரிந்து கொள்ள முடிந்தது.

எல்லா வர்க்கத்தினர், எல்லா வயதினர், பலவகையான அடையாளம் கொண்டோர்-இல்லாதோர் என அனைத்துத் தரப்பினரையும் அங்கே உண்மையான ஆர்வஎழுச்சியோடு காண முடிந்தது.
பகத்சிங் அடையாளம்...


வெவ்வேறு வண்ணக் கொடிகளின் உச்சியில் சூலாயுதம்
இன ,மொழி, வயது ,வர்க்க, பால் பேதமின்றி அங்கே கூடியிருந்த- மற்றும் அங்கே வந்து சென்று கொண்டிருந்த அந்த மக்களைப் பார்த்தபோது,அவர்கள் எல்லோரையுமே ஏதேனும் ஒரு ஊழலின் கொடிய நச்சுக் கரம் எப்போதாவது ஒரு முறையேனும் தீண்டி விட்டிருக்க வேண்டும் என்றே தோன்றியது.;அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடும் ,தங்கள் குரலை முன்னெடுத்துச் செல்ல காந்திய வழிமுறையில் அண்ணா முன் வந்திருப்பதுமே இத்தகைய மக்கள் திரளின் தன்னிச்சையான-புற நிர்ப்பந்தமற்ற ஆதரவுக்குக் காரணமாக இருக்கக் கூடும்.

தங்கள் கோபத்தை இயலாமையை ஆற்றாமையை ஆவேசத்தை அண்ணாவின் ஆதரவுக் குரலாக்கி ஒலித்துக் கொண்டிருக்கும் பாரதத்தின் ஒரு சிறு துண்டையே அங்கு பார்க்க முடிந்தது.

நாங்கள் சென்றிருந்த வேளியில்,அண்ணா ஹசாரே சிறிது நேரம் மட்டுமே மேடையில் நின்றுகொண்டிருந்தார்..
அவரை வெகு தொலைவில் இருந்தே பார்க்க முடிகிறது.கிட்டத்தட்ட 200 அடிக்கு மேல் பாதுகாப்பு வளையமாகத் தொண்டர்கள்.மேலும் எல்லாத் தொலைக்காட்சிகளின் வாகனஅணி வகுப்பு;அவற்றில் மழைநீர் விழாதபடி தடுக்க இராட்சதக் குடைகள் - இவை எல்லாவற்றையும் தாண்டிச் சிறிது நேரம் அண்ணாவைப் பார்க்க முடிந்ததே பெரிய காரியமாக இருந்தது.
மிகவும் களைத்துச் சோர்ந்து தெரிந்த அண்ணா சிறிது நேரம் படுத்த நிலையில் இருந்தபின் தொண்டர் ஒருவர் அவரைக் கைத்தாங்கலாக மேடைக்கு உள்ளே அழைத்துச் செல்வதைக் காண முடிந்தது.



மேடையை மறைக்கும் தொலைக்காட்சித் துணைக் கருவிகள்
கல்லூரி பள்ளி மாணவர்கள்,தன்னார்வத் தொண்டர்கள் என அங்கே சுற்றிலும் தெரிந்த இளைஞர் சக்தி ஒரு புறம் வியப்பில் ஆழ்த்த,..
குறிப்பாகப் பெண்கள் தரப்பு பற்றி ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும்.
பொதுவாக இவ்வாறான போராட்டக் களங்களுக்கு வரத் தயங்கும் தன்மை கொண்ட நடுத்தர,மேல்மட்டப்பெண்களும் கூட[அடித்தட்டினரும் உண்டு] மெய்யான ஈடுபாட்டோடு - ஒரு கடவுளைத் தரிசிக்கும் பக்தைகளைப் போல அங்கே குழுமியிருந்ததோடு,அழுக்கும் சகதியுமாய்க் கிடந்த தரை விரிப்புக்களையும் கூடச் சட்டை செய்யாதவர்களாய் அங்கே அமர்ந்து பாடல்களை இசைத்துக் கொண்டிருந்தனர்;அந்த மோன நிலைக்குக் குறுக்கீடாக வெறுமே வேடிக்கை மட்டுமே பார்க்க வரும் நபர்களைச் சற்று வெறுப்போடு கூட அவர்கள் துரத்திக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது..
அலுவலகம் செல்லும் பெண்கள்,கல்லூரிப் பெண்கள் எனப்பலரும் தங்களுக்குக் கிடைக்கும் சிறிது நேரத்தில் கூட அங்கு வந்துவிட்டுப் போகிறார்கள்.நேரத்தைச் செலவிடக் கூடிய பெண்கள் தொடர்ச்சியாக அங்கேயே அமர்ந்திருக்கிறார்கள்.
பெண்கள் கூட்டத்தின் நடுவே நான்..
இந்தியாவைப் பொறுத்தவரை அரசியல் களத்துக்குப் பெண்கள் ஈர்க்கப்பட காந்தியும்,அவர் கைக்கொண்ட வன்முறை கலவாத உப்பு சத்தியாக்கிரகம் போன்ற போராட்ட வழிமுறைகளுமே காரணமாக இருந்தன.மகாத்மாவின் அத்தகைய போராட்டங்களுக்குப் பிறகு - கட்சி சார்பில்லாத பலதரப்பட்ட பெண்களும் தாங்களாகவே முன் வந்து தங்களை இணைத்துக் கொண்டிருப்பது (செயற்கையாய் உருவாக்கப்படும் மகளிர் அணிப் பம்மாத்துக்கள் பல கட்சிகளில் இருந்தாலும்..  )அண்ணாவின் அறப் போரில் மட்டும்தான்.அண்ணாவின் போராட்டம் பெண்களைத் தன்னிச்சையாகவே இந்தப் போராட்டக் களத்துக்கு இட்டு வந்திருக்கிறது.

குழந்தைகளுக்கு அண்ணா தொப்பி போட்டு விட்டு வெண்ணிற பைஜாமா,குர்தா அணிவித்துச் சில தாய்மார்கள் பந்தலுக்கு அழைத்து வருகிறார்கள்.



அண்ணா தொப்பி அணிந்து வரும் பாலகர்கள்
ஆனாலும் சில போலி அறிவு ஜீவிகள் எடை போடுவது போல அது ஒரு ஃபேஷன் ஷோ போன்ற செயற்கையான செயலாக எனக்குத் தோன்றவில்லை.
அந்த உடை அணிவித்து ,தேசியக் கொடி ஏந்தி அண்ணாவைக் காண வரும்போதே அந்த நிகழ்வு குறித்த ஒரு சிறிய அறிமுகம்..ஒரு அரிச்சுவடியாவது அந்தக் குழந்தையின் மனதுக்குள் பதிவாகியிருக்கும். அண்ணா யார்,அவரது உண்ணா விரதம் ஏன் போன்ற கேள்விகள் அதற்குள்ளும் எழும்ப அது தன் பெற்றோரிடம் விடை தேடும்.அது கூட இன்றைய சூழலுக்கு - வருங்காலத் தலை முறைக்கு நன்மை பயப்பதுதான்!


பந்தலை விட்டு வெளியேறி நெடுஞ்சாலையில் நடக்கும்போதும் கூட அங்கிருந்து வெளியேறி வரும் மக்களின் உதடுகள் அண்ணாவின் போராட்டம் வெல்லட்டும் என்னும் வாசகத்தையே உச்சரித்தபடி இருந்தன.
கூலிக்காகவோ..கொடுக்கும் பணத்துக்காகவோ அத்தகைய உணர்வெழுச்சியை வருவித்து விட முடியாது என்பது உணர்வான அந்தக் கணத்தில் வரலாற்றின் மகத்தான திருப்பு முனை ஒன்றின் சாட்சியாக-அதில் பங்கேற்ற நிறைவும் பெருமிதமும் எங்கள் நெஞ்சை ஆட்கொண்டிருந்தது.


பி.கு;
மேடைக்கு மிகத் தொலைவிலிருந்து எடுத்த புகைப்படங்கள்-
பதிவர் மற்றும் உடன் வந்த நண்பர்கள் எடுத்தவை.


இணைப்பு:
’’உண்டாலம்ம இவ்வுலகம்..’

22.8.11

’உண்டால் அம்ம இவ்வுலகம்...’

ஏமாற்றம்,வஞ்சனை,சூது,பொய்மை,புரட்டு ,ஊழல்,உள்குத்து என்று பல சறுக்கல்கள் நிரம்பிய மானுட வாழ்வின் மீதான நம்பிக்கை நம்முள் இன்னமும் கூடச் சிதைந்து போகாமல் இருக்கிறதென்றால்
இன்னமும் கூடப் பெருமிதத்தோடும் தன்மதிப்போடும் நம்மால் நடை போட முடிகிறதென்றால் 
அது...
தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர்கள் சிலரால்தான் என்கிறது கடலுள் மாய்ந்த இளம்பெரு வழுதி பாடியுள்ள புறநானூற்றுப் பாடல்...
‘’உண்டால் அம்ம இவ்வுலகம் இந்திரர் 
  அமிழ்தம் இயைவதாயினும் இனிது 
  எனத் தமியர் உண்டலும் இலரே 
  முனிவு இலர் துஞ்சலும் இலர் 
  பிறர் அஞ்சுவது அஞ்சிப்
  புகழ் எனின் உயிரும் கொடுக்குவர் பழியெனின்உலகொடு பெறினும் கொள்ளலர் அயர்வு இலர்
அன்ன மாட்சி அனையராகித்
 தமக்கென முயலா நோன்தாள் 
 பிறர்க்கென முயலுநர் உண்மையானே’
தன்னலம் துறந்து வாழ்பவர்கள் இந்திரனின் தேவாமுதம் போன்ற கிடைப்பதற்கரிய பொருள் கிடைத்தாலும் கூடத் தனக்கென மட்டுமே பதுக்கி,ஒதுக்கி வைத்துக் கொள்ளாதவர்களாகப் பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பண்பாளர்களாக மட்டுமே இருப்பார்கள்.
யாரையும் அவர்களால் வெறுக்கவோ,பகையாளிகளாக ஆக்கிக் கொள்ளவோ முடியாது.
எவருமே செய்ய அஞ்சக் கூடிய பழிச் செயல்களுக்கு அஞ்சி அவற்றைச் செய்யாமல் இருப்பதோடு,
அவற்றுக்குத் தீர்வு காணக் கூடிய செயல்களில் மனச் சோர்வும் சலிப்பும் கொள்ளாமல் தொடர்ந்து இயங்குவர்.
புகழுக்காகத் தங்கள் உயிரையையும் கொடுக்கத் துணியும் அவர்கள் பழி வருமெனின் உலகையே பரிசாகத் தந்தாலும் அப்படி ஒரு செயலைச் செய்யத் துணியாதவர்கள்.
மனதை எந்த வகையான சஞ்சலங்களுக்கும்,உளைச்சல்களுக்கும் ஆட்படுத்திக் கொள்ளாதவர்களாக-எடுத்த காரியம் வெற்றியுடன் முடிய வேண்டுமென்ற ஒற்றை இலக்குடன் மட்டுமே உறுதியுடன் இயங்குவர்.
தனது முயற்சிகளை,சக்திகளைப் பிறருக்காகவே அர்ப்பணித்து வாழும் அத்தகைய மாண்பிற்குரியாளர்களால்தான் உலகம் சுழல்கிறது என்கிறது பாடல்.
‘’உண்டால் அம்ம இவ்வுலகம்....
  தமக்கென முயலா நோன்தாள் 
    பிறர்க்கென முயலுநர் உண்மையானே’’
என்னும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய இந்த சங்கப் பாடலின் இன்றைய வாழும் இலக்கணம் திரு அண்ணா ஹசாரே..

அவரது அறப் போர் வெல்லக் குறைந்த பட்சம் நம் குரலையாவது அவருடன் இணைந்து ஒலிக்கச் செய்வதே உலகக் குடிமக்கள் அனைவரின் தார்மீகக் கடமையாக இருக்க முடியும்!



17.8.11

இரு பாடல்கள் ....



கம்பனின் அயோத்தியா காண்டத்தில் ஒரு உணர்ச்சிகரமான கட்டம்.
வனம் செல்லும் இராமனோடு இலக்குவனும் கிளம்பத் தயாராகிறான்.
இருவரும் இலக்குவனின் அன்னை சுமித்திரையிடம் விடை பெறச் செல்லுகையில் அவள் கூற்றாக வரும் இரு பாடல்கள் எப்போது படித்தாலும் உன்னதமான மனச் சிலிர்ப்பை ஏற்படுத்துபவை.

''  'ஆகாதது அன்றால் உனக்கு அவ் வனம் இவ்வயோத்தி,
  மாகாதல் இராமன் நம் மன்னவன்,வையம் ஈந்தும்
  போகா உயிர்த்தாயர் நம் பூங்குழல் சீதை,
  ஏகாய் ! இனி இவ்வயின் நிற்றலும் ஏதம் 'என்றாள்.’’

(இராமன் செல்லும் அந்தக் காடு உனக்கும் ஏற்றதே; அதுவே இனி உன் அயோத்தி;
இராமனே உன் அரசன்; 
தசரதன் வையக ஆட்சியை வேறொருவனுக்கு அளித்த பிறகும் கூட அதைத் தாங்கியபடி உயிர் துறக்காமல் இருக்கும் கொடிய உள்ளம் படைத்த நாங்கள் இனி உன் தாயர் அல்ல; 
இனிமேல், சீதையே உன் தாய்..
உடனே செல்! இனி ஒரு நொடி நேரம் நீ இங்கு நிற்பதும் தவறு)

இதனை அடுத்து வரும் பாடல் இன்னும் கூடப் பரவசம் ஏற்படுத்துவது.

‘’பின்னும் பகர்வாள் ‘மகனே இவன்பின் செல்; தம்பி
  என்னும்படியன்று; அடியாரின் ஏவல் செய்தி
  மன்னும் நகர்க்கே இவன் வந்திடில் வா அன்றேல்
  முன்னம் முடி’என்றாள் வார் விழி சோர நின்றாள்’’

(மகனே,இராமனைத் தொடர்ந்து செல்கையில் உன்னை ஒரு அரசகுமாரன் என்று நினைத்துக் கொண்டு செல்லாதே..;ஒரு அடியவனைப் போலக் குற்றேவல் செய்; இந்த அயோத்தி நகருக்கு அவனால் திரும்பி வர முடிந்தால் நீயும் வா..இல்லையென்றால் அவனுக்கு முன்பு நீ இறந்து போய் உன்னை முடித்துக் கொள்’’)

ஒரு தாய் இப்படிச் சொல்ல நேர்ந்து விட்டதே என்ற தவிப்பு,அதைத் தாங்கும் மன உரம்,தியாகம்,அதே வேளையில் தாய்மைப் பாசத்தால் தானாய்ப் பெருகும் கண்ணீர் என இந்த இரண்டு பாடல்களிலேயே நம் உள்ளத்துக்குள் சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடுகிறாள் சுமித்திரை.

கம்பனில் நிறையப் பாட பேதங்கள் இருப்பது அனைவரும் அறிந்ததுதான்
இதிலுள்ள் இரண்டாவது பாடலிலும் ஒரு சுவையான பாட பேதம் உண்டு.
வார் விழி சோர நின்றாள்’என்ற தொடருக்குப் பதிலாகச் சில பதிப்புக்களில்
‘’பால்முலை சோர நின்றாள்’’
என்ற தொடர் இடம் பெற்றிருக்கும்.

 பெற்றுப் பல ஆண்டுக் காலமாகியும் மகனைப் பிரிய நேருகையில் பதட்டமும் பரிதவிப்பும் மேலிடப் பால்சுரக்கும் தாய் எனக் கூறும் 
அந்தத் தொடர்,தாய்மையின் தவிப்பை இன்னும் கூட அடுத்த தளத்துக்கு எடுத்துச் சென்று விடுகிறது.




13.8.11

நஞ்சும் அமுதும்

ஒரு முன் குறிப்பு
ஆகஸ்ட் மாதம் என்றாலே நினைவுக்கு வருபவைகளில்...
ஹிரோஷிமா,நாகசாகி ஆகிய ஜப்பான் நகரங்களின் மீது நிகழ்த்தப்பட்ட அணுகுண்டு வீச்சுக்குக் குறிப்பிட்ட ஓரிடம் உண்டு.
அணுக் கதிர் வீச்சுக்கும்,.அணு உலைகளுக்கும் எதிப்பான இயக்கங்கள் மிகப் பெரும் வீச்சுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் இன்றைய சூழலில்,
மகான் வேதாத்திரி மகரிஷி அவர்கள் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்கும் முன்பாகவே இத்தகைய சிந்தனையை முன் வைத்திருக்கிறார் என்பதைக் காணுகையில் தீர்க்கதரிசிகளின் தொலைநோக்குப் பார்வை நமக்கு வியப்பூட்டுகிறது.

ஆகஸ்ட் 14ஆம் தேதி,வேதாத்திரி மகரிஷி அவர்களின் 101ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுவதை ஒட்டி 
1957ஆம் ஆண்டில் அவர் எழுதிய ‘அணு விஷம்’என்னும் சிறு நாடகம் குறித்து நான் எழுதிய கட்டுரை இங்கே.....
அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ‘தமிழ்த் தென்றல்’என்னும் இதழில் இக் கட்டுரை வெளியாகியுள்ளது.
அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு என்னையும் கட்டுரை எழுதுமாறு ஊக்குவித்த புதுதில்லி வேதாத்திரி யோக மையத்தின் இயக்குநர் திரு பாலச்சந்திரன் அவர்களுக்கு என் நன்றி...
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


''போரில்லா நல்லுலகம்'' - இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தத்துவ ஞானியும்,அறிவை அறிவால் அறிந்த அருளாளருமான வேதாத்திரி மகான் அவர்கள் அளவற்ற மனித நேயத்தோடு அகிலத்துக்கு வழங்கியிருக்கும் கருணை வாசகம் இது.
எவ்வுயிருக்கும் துன்பம் தராமலிருப்பதும், துன்பப்படும் உயிர்களுக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வதும் மனிதப் பண்பாட்டின் முக்கியமான இரு கூறுகள் என்பதை உணர்ந்து,அவற்றை இரண்டொழுக்கப் பண்பாடாகவே வகுத்தளித்திருப்பவர் அம் மகான்.
மேற்குறித்த நெறிமுறைகளுக்கு நேர்மாறானதும்,மனித குலத்துக்குப் பேரழிவை உண்டாக்குவதுமான அணு ஆயுதப் பரவல்,அணு உலைக் கட்டமைப்பு ஆகியவற்றைச் சென்ற நூற்றாண்டின் இடைப்பகுதியிலிருந்தே மகரிஷி அவர்கள் கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறார்;அவற்றுக்கு எதிரான தமது கருத்துக்களை அழுத்தமாகப் பதிவு செய்தும் இருக்கிறார் என்பது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

 கடந்த கால அனுபவங்கள்,நிகழ்கால நடப்புக்கள்,எதிர்கால விளைவுகள் ஆகிய மூன்றையும் சீர்துக்கிப் பார்க்கும் முக்கால ஞானம் வாய்க்கப் பெற்ற தீர்க்கதரிசிகளே மகான்கள்.
வேதாத்திரி மகரிஷி அவர்களின் துல்லியமான தொலை நோக்குப் பார்வையும் அவ்வாறானதுதான்.

இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டத்தில் ஜப்பானின் ஹிரோஷிமா,நாகசாகி நகரங்களின் மீது நிகழ்ந்த குண்டு வீச்சுத் தாக்குதலும்,அதனால் நேர்ந்த அளப்பரிய தாக்குதல்களும் மகரிஷியின் உள்ளத்தில் ஆழமான பல அதிர்வுகளை உண்டாக்கின;  சில அனுதாபச் சொற்களை உதிர்த்து விட்டுப் போவதிலும்,பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு சிலஉதவிகளைச் செய்ய முன் வருவதிலும் மட்டும் அமைதி காண முடியாத மகரிஷியின் உள்ளம் ,
காலம் கடந்து , கண்டம் கடந்து தன் சிந்தனை வேர்களை விழுதாய்ப் பரப்பியது; அதன் விளைவாக உருவானதே 1957ல் எழுதப்பட்ட ’அணு விஷம்’என்னும் அவரது அற்புதமான தத்துவ நாடகம்.

மனித குல வரலாற்றில் அணுவிஞ்ஞானத்தின் அழிவுபூர்வமான பயன்பாட்டால் முதன் முதலாக நிகழ்ந்த பேரழிவைக் கண்டும் , அதன் தாக்கங்கள் எதிர்காலச் சந்ததியினரையும் சீரழித்து முடமாக்கும் அவலம் கண்டும் அத் தருணத்தில் அகிலமே நடுநடுங்கிப் போனது உண்மைதான் என்றபோதும் அணுஅறிவியலுக்கு எதிர்ப்பான வலுவான குரல்கள் அரசியல் , அறிவியல், ஆன்மிகம் எனச் சமூகத்தின் எந்தத் தரப்பிலிருந்தும் கடுமையாகப் பதிவாகவில்லை என்பதை வேதனையோடு உணர்ந்த வேதாத்திரி மகான் அவர்கள் - அணுப் போர் ,அணு ஆயுத உற்பத்தி மற்றும் அணு உலைகளால் நேரும் மிகப் பயங்கரமான விளைவுகளைத் தனது எழுத்தின் வழி முன் வைக்க முனைந்தார்;அதன் பயனாக உருப் பெற்றதே அவரது அந் நாடகம்.

நுட்பமான - ஆழமான ஆன்மீகத் தத்துவங்களையும் - கடுமையான உடற்பயிற்சிகளையும்- குண்டலினி யோக முறைகளையும் சாமானிய மக்களுக்குப் போய்ச் சேரும் வகையில் மிக இலகுவான முறையில் எளிமைப் படுத்தித் தந்திருக்கும் மகரிஷி அவர்கள்,தனது வழக்கமான போக்கை ஒட்டி இப் படைப்பிலும் மிகக் கடுமையானதொரு சமூகச் சிக்கலை நாடகம் என்ற ஊடகத்தின் வழி சித்தரித்திருப்பதால் இக் கருத்துக்கள் பாமர மக்களையும் மிக எளிதாகச் சென்றடைய வழி ஏற்படுத்தித் தந்திருக்கிறது.

''அணு உலைகளை அமைப்பதற்கும்,அணு குண்டுகளைத் தயாரிப்பதற்குமிடையில் உள்ள உறவை’’த் தெளிவுபடுத்தி,அவற்றால் ‘’மனித குலத்திற்கு ஏற்படும் அதீத விளைவுகளை முன் வை’’க்கும் இந்நூல், தான் அறிந்தவரையில் ‘’அணுசக்தி குறித்துத் தமிழில் வெளி வந்தமுதல் நூல் ஆகும்’’என்று இதன் அணிந்துரையில் குறிப்பிடுகிறார் காந்திகிராம கிராமியப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் திரு மார்க்கண்டன்.
பிளவுபடாத சோவியத் யூனியனுக்கும்,அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கும் இடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தைப் பின்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாடகம்,கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு-இன்றுள்ள சூழலுக்கும் மிகப் பொருத்தமாகவே அமைந்திருக்கிறது .
மகரிஷியின் தொலைநோக்குப் பார்வையைப் பாராட்டும் அதே வேளையில்,
அவரைப் போன்ற சிந்தனையாளர்கள் முன் வைத்த கருத்துக்கள் ,உலக அரங்கில் தீவிர கவனத்தோடும்- கடந்த நாட்களில் பெற்ற அனுபவங்களிலிருந்து படிப்பினை கொள்ள வேண்டும் என்ற உணர்வோடும் செயல்படுத்தப்பட்டிருந்தால் கொடுமையான பேரழிவுகளிலிருந்து உலகை ஓரளவாவது காப்பாற்றியிருக்கலாமே என்ற ஆதங்கமும் மிகுதியாகவே மேலிடுகிறது.

அயல்நாட்டு அணுகுண்டுத் தாக்குதலிலிருந்து விடா முயற்சியோடு மீண்டு - உலக அரங்கில் கம்பீரமாகத் தலை உயர்த்தி நின்ற ஜப்பான்,தானே அமைத்துக் கொண்ட அணு உலைச் சீரழிவுகளால் தனக்குத் தானே பெருங்கேட்டை வருவித்துக் கொண்டிருப்பதற்கும் கூடக் கடந்தகால அனுபவங்களிலிருந்து தக்க பாடம் பெறாததுதானே காரணம்?

ஓருலக ஆட்சி என்பது , எப்பொழுது அகிலத்தில் நிலைப்படுகிறதோ - மக்கள் அனைவரும் ஒரே உலகின் குடிமக்கள் என்னும் உணர்வு எப்போது தழைக்கிறதோ அப்போது , சாதி,மதம்,மொழி,இனம் முதலிய குறுகிய எல்லைக்கோடுகள் தாமாகவே தகர்ந்து போகும் என்பது மகரிஷி கொண்டிருந்த அசைக்க இயலாத கருத்து.

அந்தக் காரணம் பற்றியே தன்னை உலகப் பிரஜையாகக் கருதிக் கொண்டிருக்கும் ஒரு பாத்திரத்தை இந்நாடகத்தில் அன்பொளியாராக உருவாக்கும் மகரிஷி, நடுநிலைப் போக்கும் உலகப்பொதுநலனில் நாட்டமும் கொண்ட அறிவானந்தரைத் தன்னைப் போன்ற சாயல் படைத்த பாத்திரமாகப் படைத்து நீதி வழங்கும் பொறுப்பையும் உடனளிக்கிறார்.
இந்தியா, பிரிட்டன், ரஷியா, அமெரிக்கா ஆகிய நான்கு நாடுகளும்(அன்றைய காலப் பின்னணியில்)அணுவிஷ உற்பத்தியைக் கையில் எடுத்திருப்பதால் உலகின் சுகாதாரம் கெடுவதோடு பொருளாதார ,அரசியல் துறைகளிலும் குழப்பம் ஏற்படுகிறது;மேலும் அழிவுக்குப் பயன்படும் விஞ்ஞானம் பயனற்றதாய்ப் போய்விடுவதன் வழி எதிர்கால வாழ்வையே பாழாக்கி விடுமோ என்றும் மனித வர்க்கமே நடுநடுங்கிக் கொண்டிருக்கிறது என வாதிட்டபடி,குறிப்பிட்ட நான்கு நாட்டுத் தலைவர்கள் மீதும்,அந் நிகழ்வுகளுக்கு மௌன சாட்சியாக இருந்து வரும் ஐ.நா.அமைப்பின் தலைவர் மீதும் வழக்குத் தொடுக்கிறார் அன்பொளியார்.
அமெரிக்க ரஷிய விஞ்ஞானிகளும் , உலக சுகாதார நிறுவனத்தின் தலைவரும் வழக்கின் சாட்சிகளாக அழைக்கப்பட ,தத்துவ அறிஞர் அறிவானந்தர் நீதிபதியாகிறார்.

வேதாத்திரி மகான் அவர்கள் குறிப்பிட்ட இந்நாடகத்தை எழுதிய காலகட்டத்தில் அந்தந்த நாடுகளில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேருவும்,மாக்மில்லனும்,புல்கானினும்,ஐசன்ஹோவரும் வழக்கின் பிரதிவாதிகளாக அமைந்திருப்பது, கடந்த கால வரலாறு ஒன்றைப் படிக்கும் உணர்வைத் தோற்றுவித்தபோதும் - அந்தத் தலைவர்களின் வழியே வெளியாகும் ஒரு சில கருத்துக்களும்,இன்றைய சூழலின் அடிப்படையில் அவை தூண்டும் பல சிந்தனைகளும் காலம் கடந்து நிற்கக் கூடியவை;எந்தக் காலத்துக்கும் ஏற்புடையவை.

பாற்கடலைக் கடைந்தால் விஷமும் வெளியாக வாய்ப்புண்டு என்பதை நன்றாக உணர்ந்து கொண்டே தேவர்களும் அசுரர்களும் புராண காலத்தில் பாற்கடலைக் கடைய முற்பட்டனர்.அது போலவே அணு என்பது ஒரு நச்சாற்றல்,நாசகார சக்தி என்பதைத் தெளிவாகப் புரிந்து கொண்டே வெவ்வேறு காரணம் காட்டியபடி அதை உற்பத்தி செய்யவும் சேமித்து வைக்கவும் முனையும்  உலகத் தலைவர்களின் மனப் போக்குகளை - அவர்கள் எடுக்கும் நிலைப்பாடுகளை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது இந்நாடகம்.

ஒவ்வொரு தலைவரும் தங்கள் நிலைப்பாட்டுக்கான காரணங்களை நியாயப்படுத்த முனைகிறார்களேயன்றி அவற்றால் மனிதகுலத்துக்கு நேரக் கூடிய அபாயத்தை உணர்ந்து முற்றாக நிராகரிக்க முன் வருபவர்களாக இல்லை.
ஆன்மீகத் தொன்மையும்,பஞ்சசீல நெறிகளில் பிடிப்பும் கொண்ட பாரதம் அணு சக்தியை மனிதகுல முன்னேற்றத்துக்கு மட்டுமே பயன்படுத்துமேயன்றி அணுகுண்டு உற்பத்தியில் ஈடுபடாது என உறுதிபடக் கூறுகிறார் நேரு.பிரிட்டிஷ் தலைவர் மாக்மில்லனோ பிற நாடுகளின் அணுகுண்டுத் தாக்குதல்களிலிருந்து தங்கள் நாட்டைப் பாதுகாப்பதற்காகவே ’அணுகுண்டைச் செய்கிறோம்,பரீட்சிக்கிறோம்,வைத்திருக்கிறோம்’ என்றும் உலகில் போரில்லா நிலை உருவாகி விட்டால் அந்தக் கணமே தங்களிடமுள்ள அணுஆயுதங்களை அழித்து விடுவோம் என்றும் உறுதியளிக்கிறார்.ரஷியத் தலைவர் புல்கானினும் தங்கள் பாதுகாப்புக்காகவே அணுகுண்டுப் பரிசோதனையில் இறங்கியிருப்பதாகவும் எதிரிகளை விடவும் எண்ணிக்கையில் கூடுதலான குண்டுகளைக் கையிருப்பில் வைத்திருப்பதே தங்கள் இலக்கு என்றும் கூறி அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறார்.பொதுவுடைமைக் கொள்கையை அடியோடு குலைத்துப் போட்டுத் தனி மனித சுதந்திரத்தை நிலை நாட்டும் இலக்குடனேயே அணுகுண்டுசோதனையில் ஈடுபட்டிருப்பதாகக் கூறும் அமெரிக்க அதிபர் ஐசன் ஹோவர்,’எளிய முறையில் யுத்தத்தைச் செய்து முடிவு காண அணுகுண்டே சிறந்தது’என வாதிடுகிறார்.

அனைத்துத் தலைவர்களுமே அணுசக்தி என்பது அபாயகரமானது என்றும் அதன் நச்சுத் தன்மை காற்று மண்டலத்தில் பரவிச் சுற்றுச் சூழலுக்கும் மானுட குலத்துக்கும் அழிவை ஏற்படுத்தும் என்பதையும் தெளிவாக உணர்ந்திருக்கிறார்கள்;என்றாலும் அவரவரின் தன்முனைப்பும் - உலக அரங்கில் தனது நாடே முன்னணியில் இருக்க வேண்டுமென்னும் பேராசையுமே அணுவிஷத்தை நோக்கி அவர்களை ஈர்த்துச் செல்கின்றன என்பதைத் தமது நாடகத்தில் நயம்படப் பதிவு செய்கிறார் மகரிஷி.

உலகத் தலைவர்களோடு சேர்த்து ஐ.நா.சபைத் தலைவரும் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்.ஐந்து வல்லரசுகளின் கைப்பாவையாக-அவர்களின் பிடியில் இயங்கும் ஐ.நா அமைப்பு அந்நாட்டுத் தலைவர்களை மீறிக் கொண்டு, ‘’அணுகுண்டு வெடிக்காதீர்கள்,வைத்திருக்காதீர்கள்’என்று உத்தரவு போட முடியாது ’’என்கிறார் அவர்.
மேலும் ஐ.நா என்ற உலகப் பொது அமைப்பு ஏற்பட்ட மறுகணமே எல்லா நாட்டு இராணுவங்களும் அவற்றின் கட்டுப்பாடும் அதன் வசம் ஒப்புவிக்கப்பட்டிருந்தால் இந்த வினா எழுந்திருக்கவே வாய்ப்பில்லை என்கிறார் அவர்.குறிப்பிட்ட இந்த வாதம் ஐ.நா அமைப்பின் செயல்பாடு பற்றிய மகரிஷியின் சொந்தக் குரலாகவே ஒலித்திருப்பதைக் காண முடிகிறது.

இவ் வழக்கில் சாட்சிகளாக விசாரிக்கப்படும் மூவரில் அமெரிக்க,மற்றும் ரஷிய விஞ்ஞானிகள் இருவரும் அணுசக்தியின் அனைத்துத் தீமைகளையும் மிகத் துல்லியமாக உணர்ந்திருப்பதாகவே கருத்துரைக்கிறார்கள்;எனினும் தன்னிச்சையாகச் செயல்படமுடியாதபடி அவரவர் நாட்டு அரசியவாதிகளின் விருப்பங்களைச் சார்ந்து மட்டுமே தாங்கள் இயங்க வேண்டிய நிலையில் இருப்பதை நீதி மன்றத்தில் முன்னெடுத்து மொழிகிறார்கள் அவர்கள்.
மூன்றாவது சாட்சியாக இடம் பெறும் உலக சுகாதாரநிறுவனத் தலைவர் ஒருவர் மட்டும் வழக்குத் தொடுத்திருக்கும் அன்பொளியாரின் தரப்பிலுள்ள நியாயத்தை முழுமையாக உணந்து ஆதரிக்க முன்வருகிறார்;
‘’அணுகுண்டு செய்வதை எல்லாநாடுகளும் நிறுத்தி விட வேண்டும்;மேலும் கைவசமிருக்கும் எல்லாக் குண்டுகளையும் அழித்துவிட வேண்டும்;விஞ்ஞானிகள் அனைவரையும் அகிலஉலகப்பிரஜைகளாக்கி.....உலக மக்களின் நலத்துக்காகவே அவர்களின் அறிவுத் திறமையைப் பயன்படுத்த வேண்டும்’’என்று துணிவோடு தன் கருத்தையும் முன் வைக்கிறார்.
அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட அறிவானந்தர் , வேதாத்திரி மகரிஷியின் குரலாகத் தன் தீர்ப்பை ஒலிக்கிறார்.
போரற்ற உலகம் காணவும்,ஐ.நா அமைப்பின் வசம் உலகநாடுகளின் பாதுகாப்பை ஒப்புவிக்கவும் பரிந்துரைக்கும் அத் தீர்ப்பு,அணுவிஷம் குறித்த கீழ்க்காணும் முடிவான உத்தரவுகளை இட்டு நாடகத்தை நிறைவு செய்கிறது.

-’இன்று முதல் எந்த நாடும் அணுகுண்டு பரீட்சை நடத்தவே கூடாது.
எல்லா அணுகுண்டுகளையும் அபாயமின்றி அழிப்பதற்காக ஐ.நா.ஸ்தாபனத்திடம் ஒப்புவித்து விட வேண்டும்.
-எந்த நாட்டிலிருந்தாலும் அணு உலைக் களம்,சர்வதேச உலகப் பொதுச் சொத்தாக இருக்க வேண்டும்.
-ஆக்க வேலைக்காக அணுசக்தியை உபயோகிக்கும் நிலையங்களில் அணுச் சாம்பல் உலக மக்கள் சுவாசிக்கும் காற்றை விஷமாக்காமல் பாதுகாக்கத் தக்க நடவடிக்கைகளை ஐ.நா. ஏற்க வேண்டும்.

வேதாத்திரி மகானின் இச் சிறுநூல் எழுதபட்ட காலத்துக்கும் தற்காலத்துக்கும் இடையே அணுவியல் துறையில் அளவிறந்த மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன.
இன்றைய அணு ஆயுதங்கள் ஹிரோஷிமா தாக்குதலுக்குப் பயன்பட்டதை விடவும் பலமடங்கு வீரியம் வாய்ந்தவை.
1942ஆம் ஆண்டுக்கு முன் புளூட்டோனியம் எங்கும் சேமித்து வைக்கப்பட்டிருக்கவில்லை;இன்று மிக அதிக அளவு எடை கொண்ட புளூட்ட்டோனியம் உலக நாடுகள் பலவற்றில் சேமிக்கப்பட்டு வருகிறது.இலேசாக நுகர்ந்த மாத்திரத்திலேயே நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாக்கி விடும் நச்சுத் தன்மை இப் பொருளுக்கு உண்டு.
அணு குண்டுப் பயன்பாடுகள் ஒரு புறமிருக்க..., ஆக்கப் பணிகளுக்காக உருவாக்கப் படுவதாகக் கூறப்படும் அணு உலைகள் சந்தர்ப்ப வசத்தினால் பாதிப்புக்கு ஆளாகும்போது அவற்றிலிருந்து வெளியாகும் கதிர்வீச்சு எத்தகைய கொடிய விளைவுகளை உண்டாக்கும் என்பதற்கு அன்றைய எடுத்துக்க்காட்டு செர்நோபிள்;இன்றைய உதாரணம் ஜப்பான்.

‘’அணு உலைக் களத்திலும் அணுக்கள் மோதிச் சூடேறி அதன் சக்தியை மின் சக்தியாக மாற்றி வெளியிட்டு விடுவதால் சக்தியை இழந்துவிட்ட அணுச் சாம்பல்,காற்றில் பரவி மக்களுக்குத் தீமை பயக்காது என்று எப்படிச் சொல்ல முடியும்?’’என்று இந்நாடகத்தில் ஒரு கேள்வியை எழுப்புகிறார் அன்பொளியார்.
அந்தக் கேள்விக்கு விடை காணும் பொறுப்பு மனித குலம் முழுமைக்குமானது;என்றைக்குமானது.

‘’அணுவிஷம் மக்கள் சுவாசிக்கும் காற்றிலும் உண்ணும் உணவிலும் ஓடும் ரத்தத்திலும் கலந்து நீண்ட நாட்களுக்குப் பலவிதமான வியாதிகளைத் தோற்றுவித்துத் துன்பங்களைத் தரும்’’என்னும் மகரிஷியின் கூற்றே இன்றைய நிதரிசன நிஜமாகியிருப்பதைக் குடிநீரும் கூட மாசுபடுத்தப்பட்ட நிலையில் ஜப்பானிய மக்கள் தவிக்கும் தவிப்பில் நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம்.

சூரிய ஒளியே மண்ணுக்குள் புகாத வண்ணம் வான மண்டலத்தை மாசுபடுத்தி ‘அணுமழைக்கால’த்தை ஏற்படுத்தும் ஆற்றல் அணு ஆயுதங்களுக்கு உண்டென்கிறார் மகரிஷி.
‘’அணு விஷம்,உடல் ரசாயனத்தைப் பாதித்து நோயையும் மரணத்தையும் உண்டாக்குகிறது;விந்து அணுக்களையும்,விந்து பக்குவமாகும் இடமாகிய மூளையையும் பாதிக்கிறது’’என்னும் அவரது தொலைநோக்குப் பார்வைக்கேற்பக் கருவிலுள்ள குழந்தைகளும் கூட அணுக் கதிர்வீச்சின் கோரத் தாக்குதலுக்கு ஆட்பட்டு நிற்கும் அவலத்தையும் நாளும் நாம் கண்டு வருகிறோம்.
பருவநிலை மாற்றங்கள்,புவி வெப்பமடைதல் முதலிய தடுமாற்றங்களுக்கும் கூட அணுவிஷமே காரணமாவது கண்கூடு.

அணுகுண்டுகளை அழித்தால் மட்டுமே அதன் விஷக் கதிர்வீச்சிலிருந்து காத்துக் கொள்ளமுடியாது என்பதை உணர்ந்த வேதாத்திரி மகான்,அவற்றைச்செயலற்றுப் போகச் செய்ய வேண்டும் ,அதற்கான ஆய்விலேயே விஞ்ஞானிகள் முனைய வேண்டும் என்ற குரலை அன்றே எழுப்பியிருக்கிறார்.குறிப்பிட்ட இச் செயலில் நேரும் தாமதம் மனிதகுல வாழ்வில் அச்சத்தையும் அழிவையும் மட்டுமே ஏற்படுத்தக் கூடியது என அவர் சொல்லிச் சென்றது போலவே - அந்தத் தாமதத்தின் பலனை அகிலம் தினந்தோறும் சந்தித்து வருகிறது.

எந்த ஓர் உயிரினத்தின் வாழ்வுரிமையினையும் பறிக்கவோ அழிக்கவோ கூடாது என்ற மகத்தான அன்பும் கருணையும் வெள்ளமாய்ச் சுரக்க மகரிஷி அருளிய ஆழ்ந்ததொலைநோக்குப் பார்வைகளை அகிலமெங்கும் முன்னெடுத்துச் செல்லும் அன்பர் கூட்டம் பல்கிப் பெருகும் நிலையில் ,  அவர்களின் வழியே வேதாத்திரியச் சிந்தனைகள் பரவலாக்கப்படுகையில் ‘அணுவிஷம்; குறித்த அவரது தீர்க்கதரிசனங்களும் எச்சரிக்கையாகக் கொள்ளப்படவும்,அவற்றுக்கான தீர்வு நோக்கிய பாதையில் மனிதகுலம் பயணப்படவும் வழி பிறக்கும்.

அந்த விடியல்,அணுவிஷம் என்னும் நஞ்சை அகற்றிச் சகோதரத்துவம் என்னும் அமுதைப் புகட்டுவதாக அமையும் என நம்பிக்கையோடு காத்திருப்போம்.




6.8.11

’சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரி...’



’’புவியினுக்கு அணியாய்,ஆன்ற பொருள்தந்து,புலத்திற்றாகி
  அவி அகத் துறைகள் தாங்கி,ஐந்திணை நெறி அளாவி
  சவி உறத் தெளிந்து ,தண்ணென்று,ஒழுக்கமும் தழுவிச்
  சான்றோர் கவி எனக் கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்’’
என்னும் அற்புதமான இந்தக் கவிதையில் சான்றோர் படைப்பில்-கவிதையில்- இருக்க வேண்டிய ஏழு சிறப்பான குண நலன்களைக் கோதாவரி நதியின் வருணனை மூலம் புரிய வைக்கிறான் கம்பன்.


புவியினுக்கு அணியாய்,-
இயற்கையை அப்படியே நகலெடுக்காமல்,அதற்கு மேலும் அழகு கூட்டுவதே  சான்றோரின் கவிதை.
அது இயற்கையை உள் வாங்கிக் கொண்டு தன் புனைவுத் திறத்தால்-கற்பனையால் மேலும் மெருகூட்டி,அழகுபடுத்துவதால், பொங்கிப் பெருகி ஓடும் ஆற்றைப் போலப் புவி மேலும் அணி பெறுமாறு செய்கிறது.


ஆன்ற பொருள்தந்து,
காப்பியங்கள் ‘பாவிகம்’எனப்படும் உட்சாரம் பொதிந்தவை;
காப்பியங்களின் உள்ளடக்கமே பாவிகம் எனப்படும்.
சிலம்பில் ‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’,’ஊழ்வினை உறுத்து வந்தூட்டும் ‘என்பவை பாவிகமாக வருவது போல போல இராமாயண பாவிகமாகச் சொல்லப்படுவது;தந்தை சொல் தட்டாமை,ஒருவனுக்கு ஒருத்தி ஆகியன.
ஆழமான நதி தன்னுள் அடக்கிச் செறித்திருக்கும் கணக்கற்ற பொருள்களைப் போல் ஆழ்ந்த ஒரு பொருள்நுட்பத்தை உள்ளடக்கியிருப்பதே கவிதையின் பண்பு.

.புலத்திற்றாகி;
 புலத்து-இற்று- ஆகி- கவிதை வெறும் புலன் இன்பம் ஊட்டுவதோடு நின்று விடாமல்-அப்போதைக்கு ஒரு கிளர்ச்சி ஊட்டுவதோடு முடிந்து விடாமல்,அவற்றுக்கெல்லாம் அப்பாலான தளத்தில், ஒரு ஆன்ம திருப்தியை அளிப்பதாகவும் இருக்க வேண்டும்.


அவி அகத் துறைகள் தாங்கி,
அகத் துறை என்பது காதல்-சிருங்கார ரசம் ஆகியவை மட்டுமல்ல.
மனித மனதை ஊடுருவித் துளைத்து அதிலுள்ள உணர்வுகள் -அழுக்குகள்,அழகுகள் உட்பட-அனைத்தையும் வெளிக்கொணர வேண்டும்.பேரிலக்கியங்களின் சிறப்பு இதுவே.
ஆற்றுத் துறைகள் பலவாக இருப்பது போலக் கவிதையும் பல துறை சார்ந்து அமைதல் வேண்டும்.


ஐந்திணை நெறி அளாவி;
குறிஞ்சி,மருதம்,நெய்தல்,முல்லை,பாலை எனப் பல நிலங்களிலும் ஓடும் ஆற்றைப் போல அந்தந்த நிலப் பின்னணிகளை மட்டும் கொண்டிருக்காமல்,அவற்றின் வாழ்வியல் பின்னணியும் சேர்ந்தமைவதே ஆழ்கவி.
அதையே’நெறி’ என்னும் சொல்லால் சுட்டுகிறான் கம்பன்.


சவி உறத் தெளிந்து ,_(சவி-ஒளி)
நல்ல கவிதையின் இலக்கணம் தெளிவுற மொழிதலாகிறது.
கதிரொளியில் பளிச்சிடும் நதியின் நீர்த்துளி போன்ற ஒளி மிக்க சொற்களால்,தான் கூற வந்த பொருளைப் பளிச்சென உரைத்தலே நற்கவிதையின் அழகு...


தண்ணென்று,ஒழுக்கமும் தழுவி..
இது காவிய நடை பற்றியது.தெளிந்த நீரொழுக்குப் போல-தெளிந்த ஆற்று நீரோட்டம் போல அமைய வேண்டுவது காவிய நடை என்கிறான் கம்பன்.

இப் பாடலில் 
ஐந்திணை நெறி அளாவி;
அவி அகத் துறைகள் தாங்கி
என்ற இரண்டு வரிகளின் வேறுபாட்டைக் கூர்ந்து நோக்கினால் மனிதனின் அகத்தைத் தாங்கிப் பிடிக்க,நிலக் காட்சிகள் பின்புலமே என்ற நுட்பத்தை உணரலாம்.
மனிதனின் அகத்தை
-உள்ளத்தின் ஏக்கத்தை,தாகத்தை,பாசத்தை,பரிதவிப்பை-படம் பிடிப்பதே கவிதையில் முதலிடம் பெறுவது.
அதனாலேயே அகத்துறை தாங்கி என்கிறது பாடல்.

அவ்வகையான அகச் சிக்கல்கள் நிகழ ஒரு களமாக-பின்னணியாக அமைபவை மட்டுமே ஐவகை நிலங்கள்.
எனவே அவற்றை அளாவிக் கொண்டு சென்றால் போதும் என்ற பொருள்பட  ஐந்திணை அளாவி என்கிறான் கம்பன்.
ஆறும் கூட ஐந்து நிலங்களையும் தழுவிக் கொண்டு சென்றாலும் தனக்கென்று உள்ள தனித்துவமான இயல்புடன் ஓடிக் கொண்டிருப்பது போலத்தான் கவிதையும்!



LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....