துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

25.8.11

புது தில்லி ராம் லீலா மைதானத்திலிருந்து....

’’கூலிக்காகவோ..கொடுக்கும் பணத்துக்காகவோ அத்தகைய உணர்வெழுச்சியை வருவித்து விட முடியாது என்பது உணர்வான அந்தக் கணத்தில் வரலாற்றின் மகத்தான திருப்பு முனை ஒன்றின் சாட்சியாக-அதில் பங்கேற்ற நிறைவும் பெருமிதமும் எங்கள் நெஞ்சை ஆட்கொண்டிருந்தது’’


புது தில்லியின் ராம்லீலா மைதானம்....

ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகையின்போது பத்துத் தலையோடு மிகப் பெரிய இராவண பொம்மை செய்து அதை அழித்து ஆரவாரிக்கும் அந்த இடத்தில்...
ஊழலின் ஆயிரமாயிரம் தலைகளை வேரறுக்கும் உள்ளுரத்தோடு எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி அமைதியே உருவாகக் கடந்த ஒரு வார காலமாக உண்ணா நோன்பிருக்கிறார் அந்த முதியவர்.

மகாத்மாவுக்குப் பிறகு மாபெரும் எழுச்சி ஒன்று நாடு முழுவதும் தன்னிச்சையாகக் கொழுந்து விட்டெரியச் செய்திருக்கும் அண்ணா ஹசாரே என்ற அந்த மாமனிதரின் போராட்டம் இந்திய வரலாற்றின் பக்கங்களில் தவறாமல் பதிவாகப் போகிற ஒன்று;அந்தத் தருணத்தைத் தவற விடாமல் அங்கே சென்று அவரையும் கண்டு வந்து விட வேண்டும் என்ற எண்ணம் நான்கைந்து நாட்களாகவே மனதைக் குடைந்து கொண்டிருந்தபோதும் தில்லியின் கூட்டங்கள்,போராட்டங்கள் ஆகியவை எனக்குப் பழகியிராதவை என்பதால் கூடவே சிறியதொரு தயக்கமும் இருந்து கொண்டிருந்தது.
தற்செயலாக நேற்று மதுரையிலிருந்து டேராடூன் சென்று திரும்பிக் கொண்டிருந்த நண்பர்கள் வர்த்தினி-ஆறுமுகம் இருவரும்(இரண்டு பேருமே சமூக,இலக்கிய ஆர்வலர்கள்) தங்கள் மகன் சஹாவுடன் வீட்டுக்கு வர,அண்ணா கூட்டம் செல்வதில் அவர்களும் ஆர்வம் காட்ட நேற்று நண்பகல் 12 மணிக்கு ராம் லீலா மைதானத்துக்குச் சென்றோம்.

தில்லியில் சில நாட்களாக விட்டு விட்டுப் பெய்து வரும் மழையால் சேறும்,சகதியுமாய்க் கிடந்த மைதானம்;குட்டை குட்டையாய்த் தேங்கி நிற்கும்  நீர்.அழுக்கேறி நசநசப்புடன் கிடக்கும் தார்ப்பாலின் விரிப்புகள்..
ஆனாலும் இவற்றைக் கண்டு கொள்ளாமல் கூடியிருந்த மக்கள் கூட்டம் என்னுள் ஒரு பரவசச் சிலிர்ப்பையே ஏற்படுத்தியது.

வர்த்தினி சஹாவுடன் நான்..
பண பலமும்,அதிகார பலமும் படைத்த அரசியல் கட்சிகளால் நூறு ரூபாய்ப் பணத்துக்கும்,பிரியாணிப் பொட்டலத்துக்கும் லாரிகளில் கொண்டு வந்து கொட்டப்படும் மந்தைக் கூட்டமாக அது இல்லை...
‘கூட்டப்பட்ட கூட்டம்’ அல்ல.அது...,...தானாகக்.’கூடும் கூட்டம்’என்பதைப் பார்த்த அளவிலேயே புரிந்து கொள்ள முடிந்தது.

எல்லா வர்க்கத்தினர், எல்லா வயதினர், பலவகையான அடையாளம் கொண்டோர்-இல்லாதோர் என அனைத்துத் தரப்பினரையும் அங்கே உண்மையான ஆர்வஎழுச்சியோடு காண முடிந்தது.
பகத்சிங் அடையாளம்...


வெவ்வேறு வண்ணக் கொடிகளின் உச்சியில் சூலாயுதம்
இன ,மொழி, வயது ,வர்க்க, பால் பேதமின்றி அங்கே கூடியிருந்த- மற்றும் அங்கே வந்து சென்று கொண்டிருந்த அந்த மக்களைப் பார்த்தபோது,அவர்கள் எல்லோரையுமே ஏதேனும் ஒரு ஊழலின் கொடிய நச்சுக் கரம் எப்போதாவது ஒரு முறையேனும் தீண்டி விட்டிருக்க வேண்டும் என்றே தோன்றியது.;அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடும் ,தங்கள் குரலை முன்னெடுத்துச் செல்ல காந்திய வழிமுறையில் அண்ணா முன் வந்திருப்பதுமே இத்தகைய மக்கள் திரளின் தன்னிச்சையான-புற நிர்ப்பந்தமற்ற ஆதரவுக்குக் காரணமாக இருக்கக் கூடும்.

தங்கள் கோபத்தை இயலாமையை ஆற்றாமையை ஆவேசத்தை அண்ணாவின் ஆதரவுக் குரலாக்கி ஒலித்துக் கொண்டிருக்கும் பாரதத்தின் ஒரு சிறு துண்டையே அங்கு பார்க்க முடிந்தது.

நாங்கள் சென்றிருந்த வேளியில்,அண்ணா ஹசாரே சிறிது நேரம் மட்டுமே மேடையில் நின்றுகொண்டிருந்தார்..
அவரை வெகு தொலைவில் இருந்தே பார்க்க முடிகிறது.கிட்டத்தட்ட 200 அடிக்கு மேல் பாதுகாப்பு வளையமாகத் தொண்டர்கள்.மேலும் எல்லாத் தொலைக்காட்சிகளின் வாகனஅணி வகுப்பு;அவற்றில் மழைநீர் விழாதபடி தடுக்க இராட்சதக் குடைகள் - இவை எல்லாவற்றையும் தாண்டிச் சிறிது நேரம் அண்ணாவைப் பார்க்க முடிந்ததே பெரிய காரியமாக இருந்தது.
மிகவும் களைத்துச் சோர்ந்து தெரிந்த அண்ணா சிறிது நேரம் படுத்த நிலையில் இருந்தபின் தொண்டர் ஒருவர் அவரைக் கைத்தாங்கலாக மேடைக்கு உள்ளே அழைத்துச் செல்வதைக் காண முடிந்தது.



மேடையை மறைக்கும் தொலைக்காட்சித் துணைக் கருவிகள்
கல்லூரி பள்ளி மாணவர்கள்,தன்னார்வத் தொண்டர்கள் என அங்கே சுற்றிலும் தெரிந்த இளைஞர் சக்தி ஒரு புறம் வியப்பில் ஆழ்த்த,..
குறிப்பாகப் பெண்கள் தரப்பு பற்றி ஒன்றைச் சொல்லியே ஆக வேண்டும்.
பொதுவாக இவ்வாறான போராட்டக் களங்களுக்கு வரத் தயங்கும் தன்மை கொண்ட நடுத்தர,மேல்மட்டப்பெண்களும் கூட[அடித்தட்டினரும் உண்டு] மெய்யான ஈடுபாட்டோடு - ஒரு கடவுளைத் தரிசிக்கும் பக்தைகளைப் போல அங்கே குழுமியிருந்ததோடு,அழுக்கும் சகதியுமாய்க் கிடந்த தரை விரிப்புக்களையும் கூடச் சட்டை செய்யாதவர்களாய் அங்கே அமர்ந்து பாடல்களை இசைத்துக் கொண்டிருந்தனர்;அந்த மோன நிலைக்குக் குறுக்கீடாக வெறுமே வேடிக்கை மட்டுமே பார்க்க வரும் நபர்களைச் சற்று வெறுப்போடு கூட அவர்கள் துரத்திக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது..
அலுவலகம் செல்லும் பெண்கள்,கல்லூரிப் பெண்கள் எனப்பலரும் தங்களுக்குக் கிடைக்கும் சிறிது நேரத்தில் கூட அங்கு வந்துவிட்டுப் போகிறார்கள்.நேரத்தைச் செலவிடக் கூடிய பெண்கள் தொடர்ச்சியாக அங்கேயே அமர்ந்திருக்கிறார்கள்.
பெண்கள் கூட்டத்தின் நடுவே நான்..
இந்தியாவைப் பொறுத்தவரை அரசியல் களத்துக்குப் பெண்கள் ஈர்க்கப்பட காந்தியும்,அவர் கைக்கொண்ட வன்முறை கலவாத உப்பு சத்தியாக்கிரகம் போன்ற போராட்ட வழிமுறைகளுமே காரணமாக இருந்தன.மகாத்மாவின் அத்தகைய போராட்டங்களுக்குப் பிறகு - கட்சி சார்பில்லாத பலதரப்பட்ட பெண்களும் தாங்களாகவே முன் வந்து தங்களை இணைத்துக் கொண்டிருப்பது (செயற்கையாய் உருவாக்கப்படும் மகளிர் அணிப் பம்மாத்துக்கள் பல கட்சிகளில் இருந்தாலும்..  )அண்ணாவின் அறப் போரில் மட்டும்தான்.அண்ணாவின் போராட்டம் பெண்களைத் தன்னிச்சையாகவே இந்தப் போராட்டக் களத்துக்கு இட்டு வந்திருக்கிறது.

குழந்தைகளுக்கு அண்ணா தொப்பி போட்டு விட்டு வெண்ணிற பைஜாமா,குர்தா அணிவித்துச் சில தாய்மார்கள் பந்தலுக்கு அழைத்து வருகிறார்கள்.



அண்ணா தொப்பி அணிந்து வரும் பாலகர்கள்
ஆனாலும் சில போலி அறிவு ஜீவிகள் எடை போடுவது போல அது ஒரு ஃபேஷன் ஷோ போன்ற செயற்கையான செயலாக எனக்குத் தோன்றவில்லை.
அந்த உடை அணிவித்து ,தேசியக் கொடி ஏந்தி அண்ணாவைக் காண வரும்போதே அந்த நிகழ்வு குறித்த ஒரு சிறிய அறிமுகம்..ஒரு அரிச்சுவடியாவது அந்தக் குழந்தையின் மனதுக்குள் பதிவாகியிருக்கும். அண்ணா யார்,அவரது உண்ணா விரதம் ஏன் போன்ற கேள்விகள் அதற்குள்ளும் எழும்ப அது தன் பெற்றோரிடம் விடை தேடும்.அது கூட இன்றைய சூழலுக்கு - வருங்காலத் தலை முறைக்கு நன்மை பயப்பதுதான்!


பந்தலை விட்டு வெளியேறி நெடுஞ்சாலையில் நடக்கும்போதும் கூட அங்கிருந்து வெளியேறி வரும் மக்களின் உதடுகள் அண்ணாவின் போராட்டம் வெல்லட்டும் என்னும் வாசகத்தையே உச்சரித்தபடி இருந்தன.
கூலிக்காகவோ..கொடுக்கும் பணத்துக்காகவோ அத்தகைய உணர்வெழுச்சியை வருவித்து விட முடியாது என்பது உணர்வான அந்தக் கணத்தில் வரலாற்றின் மகத்தான திருப்பு முனை ஒன்றின் சாட்சியாக-அதில் பங்கேற்ற நிறைவும் பெருமிதமும் எங்கள் நெஞ்சை ஆட்கொண்டிருந்தது.


பி.கு;
மேடைக்கு மிகத் தொலைவிலிருந்து எடுத்த புகைப்படங்கள்-
பதிவர் மற்றும் உடன் வந்த நண்பர்கள் எடுத்தவை.


இணைப்பு:
’’உண்டாலம்ம இவ்வுலகம்..’

1 கருத்து :

அப்பாதுரை சொன்னது…

உண்ணாவிரதம் போன்ற முறைகள் இந்தக் காலத்துக்கு ஏற்ற விழிப்புணர்ச்சி தூண்டலாகத் தோன்றவில்லை. எனினும், விழுப்புணர்ச்சி எப்படி வந்தால் என்ன? வரவேற்க வேண்டியது தான்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....