துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

27.1.10

பத்மஸ்ரீ இந்திராபார்த்தசாரதிதமிழ்ப்பேராசிரியர்கள் நவீன இலக்கியத்திற்கும், படைப்பாக்கத்திற்கும் அந்நியமானவர்கள் என்ற பிம்பத்தைத் தகர்த்தெறிந்து, அவ் வசை கழித்த முன்னோடிகளில் குறிப்பிடத்தக்கவர், ‘இந்திரா பார்த்தசாரதி’ என்ற புனைபெயரைக் கொண்டிருக்கும் டாக்டர் ரங்கனாதன் பார்த்தசாரதி.

தில்லி பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்த  திரு இ.பா அவர்கள், போலந்தின் வார்ஸா பல்கலையிலும் ‘வருகை தரு’(Visiting Professor  ) பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். இறுதியாகப் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் சுவாமி சங்கரதாஸ் நாடகப் பள்ளியை நிறுவி,அதன்  இயக்குநராகச் செயலாற்றி,  நாடக நிகழ்கலையில் ஆர்வம் கொண்ட பலரின் உருவாக்கத்துக்குத் தூண்டுகோலாக விளங்கியிருக்கிறார்.

பேராசிரியப் பணிக்கிடையே படைப்பிலக்கியத் துறையின் பல தளங்களிலும் இடையறாத முனைப்போடு இயங்கித் தமிழின் குறிப்பிடத்தக்க நாவல்கள் பலவற்றையும்,நாடகங்களையும்,சிறுகதைகளையும் உருவாக்கியிருப்பது...இ.பாவின் மற்றொரு பரிமாணம்.

கீழவெண்மணியில் நிகழ்ந்த கலவரத்தைப் பின் புலமாகக் கொண்ட ‘குருதிப் புனல்’  நாவலுக்காக சாகித்திய அகாதமி பரிசையும், 
வேதபுரத்து வியாபாரிகள்’ என்னும் (சமகாலஅரசியல் அங்கத) நாவலுக்காக பாரதீய பாஷா பரிஷத் விருதையும்,
‘ராமானுஜர்’ நாடகத்திற்காக ஞான பீட பரிசுக்கு நிகரான- இந்தியாவின்  சரஸ்வதிசம்மான் விருதையும் வென்றிருக்கும் திரு இ.பாவுக்கு.....
இந்தக் குடியரசு நாளில் ‘பத்மஸ்ரீ’ விருதை அறிவித்திருப்பதன் மூலம் மைய அரசு , தன்னைக் கௌவரவப்படுத்திக் கொண்டிருக்கிறது.

மெல்லிய எள்ளலோடு கூடிய பாணியைக் கையாளும் இ.பாவின் படைப்புக்கள் பெரும்பாலும் நகர்சார் வாழ்வின் நடப்பியலை ஒட்டி அமைந்திருப்பவை.
’கால வெள்ளம்’,’தந்திர பூமி’,’திரைகளுக்கு அப்பால்’’மாயமான் வேட்டை’,’ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன’...மேலும்
வார்ஸாவில் பெற்ற அனுபவப் பதிவால் உருப் பெற்ற ’ஏசுவின் தோழர்கள்’ ஆகியவை தவற விடாமல் படித்தாக வேண்டிய இ.பாவின் ஒரு சில நாவல்கள்.

நவீன நாடகத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ள இ.பா உருவாக்கிய குறிப்பிடத்தக்க நாடகப் பிரதிகள்,
’மழை’, ’ஔரங்கசீப்’, போர்வை போர்த்திய உடல்கள்’, ’கால இயந்திரம்’ ஆகியன. 
புராணம் ,மற்றும் காப்பிய மறுவாசிப்பால் எழுதிய நாடக ஆக்கங்கள் என்று அவரது  ‘நந்தன் கதை’ , ‘கொங்கைத் தீ’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம்..
இ.பாவின் நாடக முயற்சிகள் பற்றிய ஒரு குறும்படத்தையும் சாகித்திய அகாதமி வெளியிட்டுச் சிறப்பித்திருக்கிறது.

சேதுமாதவனின் இயக்கத்தில் ‘மறுபக்க’ மாய்த் திரைப்பட உருவெடுத்துத் தேசிய விருதை வென்றிருப்பது,‘உச்சிவெயில்’என்னும் இ.பாவின் குறுநாவலேயாகும்.

சிலப்பதிகாரத்தின் மறு பார்வையாக அமைந்த ‘கொங்கைத் தீ’ நாடகமும், ‘வெந்து தணிந்த காடுகள்’ நாவலும் பெண்ணியத்துக்கான இ.பாவின் பங்களிப்புக்கள்.

கண்ணனை எந்தக் காலத்துக்கும் ஏற்றவனாக அர்த்தப்படுத்துகிற ’கிருஷ்ணா...கிருஷ்ணா....’ ,2003ஆம் ஆண்டில் வெளிவந்திருக்கும் இ.பாவின் வித்தியாசமான ஒரு நாவல் முயற்சி.

முன்பொரு தருணத்தில் தனக்கு வழங்கப்படவிருந்த  ‘கலைமாமணி’ பட்டத்தைத் துணிவோடு மறுதலித்த திரு இ.பா அவர்கள், ’பத்மஸ்ரீ’ விருதை மகிழ்வோடு ஏற்று , வளரும் தலைமுறைத் தமிழ்ப்படைப்பாளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊக்கமளிக்கும் உந்துசக்தியாகத் திகழ வேண்டுமென்பதே நம் அவா.

பத்மஸ்ரீ இந்திராபார்த்தசாரதி அவர்களுக்கு வணக்கத்தோடு கூடிய வாழ்த்துக்கள்.

விருதுக்கு வாழ்த்துதமிழகம் தந்த உலக மெல்லிசையின் இருவேறு அடையாளங்கள் இளையராஜாவும்,ஏ.ஆர்.ரஹ்மானும்.

இருவரின் அணுகுமுறையிலும் பேதங்கள் இருக்கலாம்;ஆனால் இருவரின் இசையையும் பேதமின்றி ஏற்றுச் செவிக்கு விருந்தாக்கும் இலட்சக்கணக்கான ரசிகர் கூட்டம் உலகின் பல மூலைகளிலும் சிதறிக் கிடக்கிறது.
இந்தியக் குடியரசு நாளன்று 'பத்மபூஷண்' விருதுக்கு உரியவர்களாக அறிவிக்கப்பட்டுள்ள இவ்விரு இசை மேதைகளுக்கும் பாராட்டுக்கள்..வாழ்த்துக்கள்.

எழுத்தாளர் திரு ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' நாவலின் சில கூறுகளை உட்செறித்து-அவரது வசனத்துடன் வெளிவந்த 'நான் கடவுள்' திரைப்படத்தைத் தனக்கே உரித்தான பாணியில் இயக்கிய பாலா,சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.தன் முதல் படம் தொடங்கித் தன் ஒவ்வொரு ஆக்கத்திலும் தனி முத்திரையைப் பதித்து வரும் பாலாவால் தமிழ்த் திரை உலகம் தலை நிமிர்ந்து பெருமை கொள்கிறது.பாலாவுக்கும்,அவருடன் இணைந்து செயல்பட்ட படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.காண்க:
ஏழாம் உலகமும்,நான் கடவுளும்
http://masusila.blogspot.com/2009/02/blog-post_28.html

22.1.10

தரிசனம்


அன்றோடு அப்பாவை ஆஸ்பத்திரியில் சேர்த்து ஒரு வாரம் ஆகியிருந்தது.இதுவரையில் எந்த முன்னேற்றமும் தெரியவில்லை என்பதோடு இனிமேலும் பிரமாதமாக அவரது உடல் தேறி விடுமென்றோ ..முந்தைய நிலைக்கு வந்து விடுமென்றோ எந்த நம்பிக்கையும் கன்னையாவுக்கு இல்லை. அதைப் பற்றிய வருத்தமும் அவனுக்கு இருந்ததாகச் சொல்லிவிட முடியாது. ஏதோ...மனசு ஒட்டாமல் ,கிராமத்துக்கும் டவுன் ஆஸ்பத்திரிக்கும் அலைந்து கொண்டிருந்தானே தவிர ..அவனுடைய உள்ளம் என்னவோ அப்பாவின் உபாதைகளிலிருந்து விலகியே இருந்தது.


நெடுநெடுவென்ற உயரமும்,அதற்கேற்ற பருமனுமாய்க் கண்ணில் அறைகிற கருப்பு நிறத்தோடு கூடிய முரட்டுத்தனமான தோற்றமும், தணிவான குரலில் பேசியே அறியாத மூர்க்கமான குரலும் கண்டு பயந்தவனாய்ப் பிள்ளைப் பிராயத்தில் அப்பாவிடமிருந்து சற்று எச்சரிக்கையான தொலைவில் நின்றிருந்ததைப் போலவே ...இப்போதும் வேறு காரணங்களால் அவன்,அவரிடமிருந்து விலகியே நின்றிருந்தான். அன்றைக்கு விவரம் புரியாத சிறு வயதில்,அம்மாவின் சேலைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு , பயம் கப்பிய மிரட்சியோடு அரைப் பார்வையாக அவரைப் பார்த்துக் கொண்டிருந்ததைப் போலத்தான் ...இன்று, இருதய நோயின் கடுமையால் கண் செருகி,வீரியமான மருந்துகளின் துணையோடு அவர் உறங்கும் நிலையிலும்.....சலிப்போடு அவன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

‘’ஐயாவைப் பார்த்தியாடா?’’
- நாள் தவறாமல் சாப்பாட்டுக் கூடையுடன் உள்ளே நுழைந்த மறு நிமிடம், அம்மா அவனிடம் கேட்கும் வினாவுக்கு, அவரது கட்டில் இருக்கும் திசையை நோக்கி ,ஒரு பார்வை வீச்சை மட்டும் அனுப்பிவிட்டு அவன் மௌனமாகிப் போவான்.நோயாளியாய்ப் படுத்துக் கிடக்கிற அப்பாவைப் பார்ப்பதை விடவும், வார்டின் அந்தத் தனியறையில் ஒரு கர்ம யோகியைப்போலக் காரியமாற்றிக் கொண்டிருக்கிற அம்மாவைப் பார்ப்பதிலேதான் அவன் கணங்கள் கழியும்!

கண்ணில் தளும்பி வழியும் கருணையும்....அத்தனை அழகில்லாத முகத்தையும் கூடப் பொலிவாக்கும் அருளுமாய்ச் சிறுகூடான உடல்வாகு கொண்டு...சற்றே அழுத்திப் பிடித்தாலும் கூட முறிந்து விடுபவளைப்போலத் தோற்றமளிக்கிற அம்மா!
முற்றாக மாறுபட்டுப்போன இரண்டு மனிதப் பிறவிகளுக்கு முடிச்சுப் போட்டு வைப்பதிலேதான் இந்த இயற்கைக்கு எத்தனை வேகம் !

தோற்றமும்,குணங்களும் மாறுபட்டிருந்தாலும் கூடப் பரவாயில்லை!
சண்டைச் சேவலின் வாகான பிடியில் வசமாக மாட்டிக் கொண்ட சோகை பிடித்த பெட்டைக் கோழியாய்....அப்பாவின் மூர்த்தண்யமான ஆளுமையில் மனசும்,உடலும் நசுங்கிப் போய் அம்மா குப்பையாய்க் கிடந்த சந்தர்ப்பங்கள்...,எத்தனைதான் முயற்சி செய்தாலும்,அவனது நினைவுச் சேமிப்பிலிருந்து நீங்குவதாக இல்லையே?

‘’ஸார்! கொஞ்சம் எழுந்திரிச்சு அந்தப் பக்கம் போறீங்களா? டாக்டர் ‘ரவுண்ட்ஸ்’வர்றதுக்குள்ளே வார்டைத் துடைச்சு சுத்தம் பண்ணணும்..’’

அறையின் மூச்சு முட்டலுக்குள் அடைந்திருக்கப் பிடிக்காமல் ....பார்வையாளர் கூடத்தில் அமர்ந்திருந்த கன்னையா, ஊழியரின் குரலால் சிந்தனை கலைந்து எழுந்தவனாய்,அருகிலிருந்த டீக்கடையை நோக்கி நடந்தான்.

‘’என்ன தம்பி! அப்பா உடம்பு எப்படி இருக்கு ? அவரைப் பாக்கத்தான் போய்க்கிட்டிருக்கேன்’’-ஆஸ்பத்திரி முகப்பில் எதிர்ப்பட்ட ஊர்க்காரர் ஒருவர் நலம் விசாரித்தார்.

‘’இப்பக் கொஞ்சம் பரவாயில்லீங்க...உள்ளே போய்ப் பாருங்க ! அம்மா கூட இருக்காங்க!’’

சுருக்கமாகப் பேச்சை முடித்துக் கொள்ள அவன் நினைத்தாலும் அவர் விடுவதாக இல்லை.

‘’ஹ்ம்! அந்தக் காலத்திலே ...யாருக்குமே இல்லைன்னு சொல்லாமே கர்ண மகாராசா மாதிரி வாரிக் கொடுத்தவர் உங்கப்பா!உங்க வீட்டுக்கு வந்திட்டுப் பசிச்ச வயத்தோட யாருமே போனதில்லை!...அந்தப் புண்ணியமெல்லாம் அவர் உசிரக் காப்பாத்தாம போயிடுமா என்ன?''

பேசிக் கொண்டே அவர் நகர்ந்து போனதும் கன்னையா தனக்குள் சிரித்துக் கொண்டான்.

’இந்தக் கர்ண மகாராசா கை வைத்ததெல்லாம் யாருடைய கஜானாவில் என்பது....அவருக்கெப்படித் தெரிந்திருக்கப் போகிறது..?’

கர்ப்பக்கிரகத்திலே அலங்கரம் செய்து வைத்த அம்மன் சிலையாய்த் தகதகத்துக் கொண்டிருந்த அம்மாவை...எங்கோ மியூசியத்தின் மூலையில் மூளியாகிக் கிடக்கிற சிற்பத்தைப் போல உருவிப்போட்டுவிட்டுத் தன்னுடைய அப்பன் பாட்டன் தேடி வைத்த சொத்தையும் கோட்டை விட்டவரல்லவா அவனுடைய அருமைத் தந்தை!

இரவு, பகலென்ற கால பேதங்களின்றி,அவர்களது வீட்டுத் திண்ணையில் ஒரு தொடர் ஓட்டம் போல நடத்தப்படும் அந்தச் சீட்டுக் கச்சேரியில் அவர் ஜெயித்ததாகச் சரித்திரமே இல்லையே...? அவர் தோற்பதற்காகவே விடிய விடிய நடக்கும் அந்தத் திண்ணைக் கூத்திற்கு...மணிக்கொரு தரம் தேநீரும், வெற்றிலை வகையறாக்களும் ,குடிதண்ணீரும் கொடுத்து ஓய்ந்து போய் ...அம்மா சற்றே தலையைச் சாய்ப்பதற்குள், கோழி கூவி, வெள்ளி முளைத்துப் போன நாட்கள்தான் எத்தனை?

அறிவிப்பே கொடுக்காமல், அகால நேரங்களில் நண்பர்கள் என்ற பெயரில் பெரியதொரு பட்டாளத்தையே அழைத்து வந்தபடி, வாசலிலிருந்தபடியே ஆர்ப்பாட்டமாகக் குரல் கொடுப்பார் அப்பா. பார்வதி என்ற அம்மாவின் அழகான பெயர், அவர் வாயிலிருந்து....,செல்லமாக வேண்டாம்...- முழுசாக உதிர்ந்து கூட ஒரு நாளும் அவன் கண்டதில்லை.

‘’ஏய்..’’என்ற விளி ஒன்றுதான் பத்து வீடு கேட்க அவர் கண்டத்திலிருந்து ஒலிபெருக்கியைப்போல உரத்து முழங்கும்.

‘’த பாரு ! கூட்டாளிங்க ஒரு பத்துப்பேரு வந்திருக்காங்க! இன்னும் அஞ்சு நிமிசத்திலே பருப்புப் பாயாசத்தோடே இலை போட்டாகணும்..’’

முகத்தைக் கூடப் பார்க்காமல் அதிகாரத் தொனியில் ஆணையிட்டுவிட்டு அவர் அகன்று போவார். விடிந்தது முதல் தொழுவத்திலும், வயற்காட்டிலும் ,அடுப்படியிலுமாய் மாறி மாறி இடுப்பொடிந்து ...உழைக்கிற இயந்திரமாகவே அம்மா ஆகி விட்டிருக்கிற விஷயமோ...,பெருங்காயம் வைத்த பாண்டமாய் இரும்புப் பெட்டியிலும், அஞ்சறைப் பெட்டியிலும் குடும்பத்தின் பரம்பரைப் பெயர் ஒன்று மட்டுமே பாக்கி இருந்த யதார்த்த நிஜமோ...எதுவுமே பிரக்ஞையில் உறைக்காது அவருக்கு! கையிலே பிடித்திருந்த சீட்டுக் கட்டின் மீது காட்டிய கவனத்தையும்,கரிசனத்தையும் கூட அம்மாவின் மீது எப்போதாவது அவர் காட்டியிருந்ததாக அவனுக்கு நினைவில்லை.

’’என்னண்ணே இங்க நின்னுகிட்டிருக்கே?’’- கன்னையாவின் ஒரே தங்கை திலகா பெட்டியும், கையுமாக எதிரே நின்று கொண்டிருந்தாள்.

‘’அடேடே..வா திலகா வா! ஊரிலேயிருந்து நேரே வர்றியா ?வா..உள்ளே போய்ப் பேசலாம்’’

‘’எப்படி இருக்காரு அப்பா?’’

-உணர்ச்சியோ,உருக்கமோ இல்லாமல் தான் உதிர்த்த கேள்விக்கு விடையையும் எதிர்பாராதவளாய் அவளே தொடர்ந்தாள்.

‘’ஆமாம்!  இருந்துங் கெடுத்தான்..செத்துங் கெடுத்தான்கிற மாதிரி..அப்பா நல்லா இருந்தப்பவும் அம்மா சுகப்படலை. ஏதோ நிறைஞ்ச மனுஷியாய்ப் பூவோடேயும், பொட்டோடேயும் நடமாடிக்கிட்டாவது இருந்தா ! இப்ப அதையும் பிடுங்கிக்கப் பார்க்கிறாராக்கும்...?’’

ஆங்காரத்தோடு பேசிய திலகாவின் கோபத்திலிருந்த நியாயம், கன்னையாவுக்குப் புரியாமல் இல்லை.

தன் உயிரின் வார்ப்பாக...உதிரத்தின் பங்காக,....மணியான இரண்டு குழந்தைகள் வீட்டுக்குள் வளைய வருவதைப் பற்றியோ...அவர்களை வளர்த்து ஆளாக்கும் பொறுப்பைப் பற்றியோ அப்பா கவலைப்பட்டதே இல்லை.வீட்டில் வெந்நீர் போடுகிற தாமிரத் தவலையை விலைக்கு விற்றுவிட்டுக் கன்னையாவின் கடைசிப் பரீட்சைக்குப் பணம் கட்டுவதற்காக அம்மா பதுக்கி வைத்திருந்த பணத்தை எப்படியோ மோப்பம் பிடித்து எடுத்துக்கொண்டுபோய்....என்றைக்கோ உறவு விட்டுப் போன தூரத்துப் பங்காளியின் கொழுந்தியாள் கல்யாணத்திற்கு மொய் எழுதி விட்டு வந்தவரல்லவா அவர்?அதற்கப்புறம்,கன்னையா எப்படிப் பணம் கட்டிப் பரீட்சை எழுதினான் என்பதைப் பற்றியோ, அதற்கு அம்மா செய்ய வேண்டியிருந்த தியாகங்களைப் பற்றியோ ...அவர் கேட்டுக் கொண்டதுமில்லை.

ஒரே மகளான திலகத்தின் திருமணத்திலும் கூடக் கல்யாணப் பெண்ணின் தந்தையாய்ப் பெயரளவுக்கு அவரை மணவறையிலே அரை மணி நேரம் நிறுத்தி வைப்பதற்கு.......,சீட்டாட்டக் கோஷ்டியிடமிருந்து அவரைப் பிய்த்துக் கொண்டு வருவதற்கு அம்மாதான் போராட வேண்டியிருந்தது.

தனி ஒருத்தியாகவே வடம் பிடித்து,ஒரு வழியாகக் குடும்பத் தேரை அம்மா நிலைக்குக் கொண்டு வந்து சேர்ப்பதற்கும்.....உல்லாச சல்லாபங்களில் குலுங்கியபடி நகர்ந்து கொண்டிருந்த அப்பாவின் வாழ்க்கைத் தேர் ...வயோதிகத் தள்ளாமையால் நொடித்துப்போய்த் தானாகவே பழுதுபட்டு நிற்பதற்கும் சரியாக இருந்தது.

அண்ணனும்,தங்கையுமாய் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தபோது
,,இங்கே கன்னையாங்கிறது யாரு?''
என்று ஒரு நர்ஸ் விசாரித்துக் கொண்டிருந்தாள்.

வேகமாகச் சென்று,தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவனிடம்,
’’பெரிய டாக்டர் உங்க கிட்டே ஏதோ பேசணுமாம்..உடனே போய்ப்ப் பாருங்க,,,
என்றாள் அவள்.

அண்ணனும்,தங்கையுமாய் ஆஸ்பத்திரிக்குள் நுழைந்தபோது
,,இங்கே கன்னையாங்கிறது யாரு?''
என்று ஒரு நர்ஸ் விசாரித்துக் கொண்டிருந்தாள்.வேகமாகச் சென்று,தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டவனிடம்,
’’பெரிய டாக்டர் உங்க கிட்டே ஏதோ பேசணுமாம்..உடனே போய்ப்ப் பாருங்க’’
என்றாள் அவள்.

வீண் படாடோபங்களைத் தவிர்த்ததாய்....ஒவ்வொரு அங்குலத்திலும் சுத்தத்தைப் பறைசாற்றிக் கொண்டிருந்த அந்த அறையில், சாந்தம் தவழும் கண்களுடனும், இனிய புன்னகையுடனும் டாக்டர் அவனை எதிர் கொண்டார்.

"வாங்க மிஸ்டர் கன்னையா!..இப்படி உக்காருங்க'

அவர் சொல்லப்போவதை முன் கூட்டியே அனுமானிக்க முடிந்தவனாய்.....

"என்ன டாக்டர்....சீரியஸா ஏதாச்சும்..."

'' ....ம்..வெளிப்படையாச் சொல்லணும்னா,உங்க அப்பாவுடைய உடல்நிலை கொஞ்சம் மோசமாத்தான் இருக்கு.....நிலைமை,எந்த நேரத்திலேயும்,எப்படி வேணுமானாலும் மாறலாம்.ஆனா....இப்ப அதைப் பத்திப் பேச நான் உங்களைக் கூப்பிடலை!..இப்படி ஒரு ஆபத்தான நிலையிலே படுத்திருக்கிறப்பவும்...உங்க அப்பாவோட ஞாபக சக்தி...ரொம்ப ஆச்சரியமானதா இருக்கு.! கொஞ்சம் கூடத் தடுமாற்றம் இல்லாம...நினைவு பிசகாம தன்னோட அனுபவங்களை எங்க கிட்ட வாய் ஓயாம எப்படிப் பேசறார் தெரியுமா?"

ஒரு நொடியில்...விஷயம்,கன்னையாவுக்குச் சப்பிட்டுப் போனது.!

'ஆமாம்!..இதுதான் இப்ப ரொம்ப அவசியம்!குடும்பத்தைத் தவிர வேறு இடங்களிலே ...நல்ல மனுஷன் மாதிரிப் பாசாங்கு பண்றதுதான் அவரோட கூடப் பொறந்த குணமாச்சே...'

அவனது நினைவோட்டத்தை டாக்டரின் பேச்சு இடைமறித்தது.

''சரி....அதிருக்கட்டும்.! நாளைக்கு என்ன 'நாள்'ங்கிறது  உங்களுக்கு நினைவிருக்கா?''

விடை தெரியாமல் அவன் விழிப்பதைப் பார்த்துவிட்டு அவரே தொடர்ந்தார்.

''நளைக்கு உங்க அப்பாவோட பிறந்த நாள்..!ஹிஸ் சிக்ஸ்டியத் பர்த்டே''

கன்னையாவின் சலிப்பு மேலும் கூடிப் போனது.
ஏதோ நாகரிகம் கருதி, வெளிநடப்புச் செய்வதற்கு அவன் முயற்சி செய்யாவிட்டாலும் கூட...,அமர்ந்திருந்த இருக்கை அவனுக்கு முள்ளாக உறுத்தத் தொடங்கியது.

''பொதுவா..கணவன்,மனைவி இரண்டு பேரும் உயிரோட இருந்தா...உங்க குடும்பங்களிலே இந்த நாளை அறுபதாம் கல்யாணமாக் கொண்டாடுவீங்க இல்லே...?''

''அதுக்கு இப்ப என்ன டாக்டர் ? உடம்பு சரியாகி ஊருக்குப் போனாப் பார்த்துக்கலாம்!''என்றான் அவன்.

''''நோ..நோ..பேஷண்ட்ஸோட உடம்பை விட மனசுதான் எங்களுக்கு ரொம்ப முக்கியம்! நீங்க அதைப் பத்தியெல்லாம் கவலையே படவேண்டாம்! வீட்டுச் செலவும்,ஆஸ்பத்திரிச் செலவுமா நீங்க கஷ்டப்படறது எனக்குத் தெரியாதா என்ன...?நாளைக்கு வழக்கமா எங்க பிரார்த்தனைக் கூட்டம் நடக்கிற அதே வேளையில ...சிம்பிளா எங்க மருத்துவ மனையோட சார்பா ...நானே ஒரு கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு பண்ணிடறேன்''

''எதுக்கு டாக்டர் அனாவசியமா....?''

''இதோ பாருங்க கன்னையா...எது அவசியம்...எது அனாவசியம்கிறதெல்லாம் தனிப்பட்ட மனுஷங்களைப் பொறுத்து மாறுபடற விஷயம்! ரைட்..நாம நாளைக்குப் பார்க்கலாம்''

ஏ.சி.குளிரின் இதத்தை விட்டு வெளியே வந்த கன்னையாவின் முகத்தில் பளீரென்று அறைந்த வெயிலின் எரிச்சலைப் போலவே அவன் மனமும் எரிந்தது.
'கருமாதி பண்ணுகிற நாள் நெருங்கிக் கொண்டிருக்கையில் ...கல்யாணம் கேட்கிறதோ கிழவனுக்கு...?'

சர்வநாடியும் ஒடுங்கிப் போய்...வாழ்க்கையே தன்னிடமிருந்து விடைபெற்றுப் போய்க்கொண்டிருக்கிற சந்தர்ப்பத்திலும் கூடப் போலிக் கௌரவமும்....பொய்யான வாழ்க்கை முறைகளும் அவரிடமிருந்து விடைபெறுவதாக இல்லையே என்று மனம் நொந்தான் அவன்.

மறு நாள் காலையில் அந்த மருத்துவ மனையின் முகமே மாறியிருக்க...,வரவேற்புக் கூடமே ஒரு திருமண மண்டபமாக உரு மாற்றம் பெற்றிருந்தது.
புறநோயாளிகளும்,உள்ளே தங்கிச் செல்லும் சிகிச்சை பெறுபவர்களும்,டாக்டர்களும்,நர்ஸுகளும்,ஊழியர்களுமாய்...மொத்த மருத்துவமனையும் அங்கே கூடியிருக்க...,நடுநாயகமாக நாற்காலி போட்டுக் கன்னையாவின் பெற்றோரை உட்கார வைத்திருந்தார்கள்.கவலை தோய்ந்த முகத்துடன்,தன் தாயையே பார்த்தபடி...ஓர் ஓரமாக உட்கார்ந்திருந்தான் கன்னையா.

ஏற்கனவே ஒடுங்கிப் போயிருந்த அம்மாவின் தேகம்....அத்தனை பெரிய சபையில் உட்கார நேர்ந்த கூச்சத்தால்...நத்தையாய்ச் சுருண்டு,நாற்காலியோடு ஒட்டிக் கிடந்த தோற்றம்,அவன் மனதைப் பிசைந்தது.

'இத்தனை நாள் பண்ணின அக்கிரமம் பத்தாதுன்னு...வெளியிலே,வாசல்லே வந்து கூடப் பழகாத ஒரு கிராமத்துப் பொம்பளையைக் கோமாளி வேஷம் போட்டுப் படிச்சவங்களுக்கு முன்னாலே நிறுத்தி வச்சுக் கேவலப்படுத்தணுமாக்கும்''
ஏனோ...அப்பாவின் இந்த விபரீதமான இந்த ஆசை..,அம்மாவை அகௌரவப்படுத்திவிடக் கூடுமென்றே தோன்றிக் கொண்டிருந்தது அவனுக்கு.

கூடியிருந்தவர்களுக்கு நர்ஸுகள் இனிப்பு வழங்கிக் கொண்டிருக்க...,பெரியதொரு புகைப்படக் கருவியைச் சுமந்தபடி சுறுசுறுப்புடனும்,சுவாரசியத்துடனும் போட்டோக்களை எடுத்துத் தள்ளிக் கொண்டிருந்தார் டாக்டர்.

தம்பதிகளைப் பாராட்டிப் பேசித் தன் கையால் பெரிய சைஸ் ரோஜாப் பூ மாலைகளை அவர் எடுத்துத் தர ..அவர்களும் மாலை மாற்றிக் கொண்டபின் ...தணிந்த குரலில் டாக்டரின் காதில் அப்பா ஏதோ பேசுவது அவனுக்குத் தெரிந்தது.சம்மதத்திற்கு அடையாளமாகத் தலையை ஆட்டிவிட்டு அவர் நகர்ந்து செல்ல...,கம்மிப் போன குரலில் மெள்ளப் பேச ஆரம்பித்தார் அப்பா.

‘’நாள் கணக்கா..நிமிசக்கணக்கான்னு நிச்சயமில்லாத இந்த நிலைமையிலே ...,மணவறையிலே உட்கார்ந்து மாலை போட்டுக்கணும்னு நான் ஆசைப்பட்டது எனக்காக இல்லே! எனக்குக் கழுத்தை நீட்டின ஒரே பாவத்துக்காக...நாப்பது வருசமா...எங்க குடும்ப பாரத்தைப் பொதியாய்ச் சுமந்து களுத்தொடிஞ்சு நிக்கிறாளே இந்தப் புண்ணியவதி...இவளுக்குப் பதில்மரியாதை பண்ணணும்னு கொஞ்ச நாளாவே ஒரு தவிப்பு! எங்களோட வாழ்க்கைக்கு முட்டுக் கொடுத்து முட்டுக் கொடுத்தே முதுகு முறிஞ்சு போய்க் கிடக்கிற இவளைப் பலரறியச் சபை கூட்டிப் பாராட்டணும்னு மனசுக்குள்ளே ஒரு பதைப்பு! இத்தனை வருச தாம்பத்தியத்திலே எனக்குச் சமதையா அவளை நான் நெனச்சது கூட இல்லை! ஆனா ...உண்மையிலே அவளுக்குச் சமமா நிக்கிற தகுதி கூட இல்லாதவனாத்தான் என்னோட வாழ்க்கையை நான் நடத்தி இருக்கேன்! இப்பக் கூட என் கையால மாலை போடறதாலே புதுசா எந்தக் கௌரவமும் அவளுக்குக் கிடச்சுடப் போறதில்லே!ஆனா...அவளை நான் பெருமைப் படுத்தினாத்தான்,கண்ணை மூடறதுக்குள்ளே ஒரு மனுசன்கிற கௌரவமாவது எனக்குக் கிடைக்கும்! அதனாலேதான் ...வலிஞ்சு இப்படி ஒரு சந்தர்ப்பத்தை நானாவே ஏற்படுத்திக்கிட்டேன்!”

தொடர்ந்து அவர் பேசிக் கொண்டே போனாலும்...அதெல்லாம் கன்னையாவின் மனதில் பதிவாகவில்லை.கொஞ்சம் கூட எதிர்பார்த்திராத ஒரு தருணத்தில் ...திரை தூக்கிக் கிடைத்த தரிசனமாய்...எந்த ஒரு மனுஷப் பிறவிக்குள்ளும் ...மென்மையான மறுபக்கம் ஒன்று ...சாம்பல் போர்த்திய நெருப்பாக உள்ளடங்கிக் கிடப்பது அவனுக்கு அர்த்தமாகத் தொடங்கிய அதே வேளையில்....வாழ்க்கையில் முதல் தடவையாக...அப்பா என்ற ஆதுரத்தோடு அவரைப் பரிவாகப் பார்க்கவும் தோன்றியது அவனுக்கு.

(நன்றி:
சிறுகதை வெளியீடு-சங்கச் சுடர்,
தில்லித் தமிழ்ச்சங்கம்,ஜன,2010)

13.1.10

யாருக்கும் வெட்கமில்லை!


ஊழல் குற்றச்சாட்டுக்களில் சிக்கிப் போலீசாரின் கூண்டு வண்டியில் செல்லும் அரசியல்வாதிகள் பல்லெல்லாம் பரக்கக் காட்டும் வெட்கங்கெட்ட சிரிப்பு.....

பணங்கொழுத்த அண்ணாச்சிகள் பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு ஏதுமறியாத பாப்பாவைப் போலப் பாவனை காட்டியபடி உதட்டில் தவழவிடுகிற ரெடிமேட் புன்னகை.......

போலி வேஷதாரிப் பிரேமானந்தாக்களின் முற்றும் துறந்தது போன்ற ஞானச்(?!)சிரிப்பு....

இவையெல்லாம் நாம் அன்றாடம் பார்த்துப் பழகி.....மரத்தும்...மறந்தும் போய் விட்டவைதான்.

இப்பொழுது சில நாட்களாக ஒரு ’அதிகாரியின் ஆணவச் சிரிப்பை' (நன்றி;கலைவாணர் என்.எஸ்.கே.) அன்றாடம் தரிசிக்கும் அரும்பெரும் பேறு ...நாளிதழ்களாலும்,பிற ஊடகங்களாலும் நமக்கு வாய்த்துக் கொண்டிருக்கிறது.

மிருகத்தை விடக் கீழான அந்த மனிதர் எப்படி வேண்டுமானாலும் ...எதற்காக வேண்டுமானாலும் சிரித்துத் தொலைத்துவிட்டுப் போகட்டும்.அதைப் பற்றி நமக்குக் கவலையில்லை.

1.ஒரு வேளை தன் தரப்பு வாதங்களைத் தன் சார்பாக எடுத்து வைக்கிற வக்கீலாகத் தன் மனைவியே வாய்த்திருப்பதில்(கல்லானாலும் கணவன் என்பது இப்படியா நிரூபணமாக வேண்டும்!?)ஏற்பட்ட எக்களிப்பாக அது இருக்கலாம்.
2.ருச்சிகா என்ற இளம் தளிர் ஒன்றை அரும்பிலேயே கசக்கிப்போட்ட பிறகும் குறைந்த பட்ச தண்டனையோடு தான் தப்பிக்க முடிந்ததில் விளைந்த கொக்கரிப்பாகவும் அது இருக்கலாம்.
(காண்க;இரண்டு பெண்கள் என்ற என் பதிவு)

இவற்றுள் காரணம் எதுவாக இருந்தாலும்,
இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்ட காரணங்கள் அந்தச் சிரிப்புக்குள் புதைந்து கிடந்தாலும் நமக்கு அக்கறையில்லை.ஆனால் இன்றைய செய்தித் தாளில்....THE TIMES OF INDIA வின் முதல் பக்கத்தில்
''I learnt from the greatest son of India Jawaharlal Nehru to smile when you are in adversity''
என்று அவர் திருவாய் மலர்ந்தருளியிருப்பதுதான் நம்மை மிகவும் கலவரப்படுத்துகிறது.
அடிப்படை அறம் சார்ந்த விஷயங்களை இவ்வளவு இலகுவாக எடுத்துக் கொண்டதுமல்லாமல் தனது நாணமற்ற சிரிப்புக்கு நேருவைத் துணைக்கழைக்கும் இவது நேர்மையின்மை கண்டனத்துக்குரியது;இந்தியக் குடியரசின் உருவாக்கத்தில் அச்சாணியாக விளங்கிய பெருமகனைத் தன் சிறுமதியால் விளைந்த கேவலத்தோடு ஒப்பிடும் அவரது வார்த்தைகள் இந்திய நாட்டின் இறையாண்மையையே எள்ளி நகையாடிக் கொண்டிருக்கின்றன.

அரசியல் பொருளாதாரக் காரணங்களுக்காக நேருவின் மீதும் கூட விமரிசனங்கள் வைக்கப்படாமலில்லை;ஆனாலும் மழலைப் பிஞ்சுகளின் மீது....எதிர்காலத்தை உருவாக்கப் போகும் சிற்பிகளாகிய சிறுவர்களின் மீது அவர் கொண்டிருந்த ஆத்மார்த்த நேசம் உன்னதமானது; சொல்லில் அடங்காதது.
வளர வேண்டிய இளம் மொட்டான ருச்சிகாவின் வருங்காலமே மண் மூடிப் போகுமாறு செய்த மனித மிருகம் சொல்கிறது....சிக்கலில் சிரிக்கும் பண்பை....நேருவிடமிருந்து கற்றேன் என்று!!இதை விடச் சிறந்த நகை முரண் irony வேறு என்னவாகத்தான் இருந்துவிட முடியும்?

ஒருக்கால் அந்த நபருக்குத் தமிழும்,வள்ளுவரும் தெரிந்திருந்தால்
‘’இடுக்கண் வருங்கால் நகுக’’வை வள்ளுவரிடமிருந்து கற்றுக் கொண்டேன் என்று கூடச் சொல்லியிருக்கலாம்!
தமிழும் வள்ளுவரும் நல்ல காலமாய்த் தப்பியாயிற்று!


வெட்கமில்லை...வெட்கமில்லை...இங்கே யாருக்கும் வெட்கமில்லை!

அடிக் குறிப்பு;
பாலியல் தாக்குதல்களும்,பருத்தி வீரன்களும் என்ற என் போன இடுகையில் அதனுடன் தொடர்பு கொண்ட வீடியோ பதிவையும் சேர்த்திருக்கிறேன்.
ஆர்வமுடையோர் காண்க.
இரண்டு பெண்கள்,இப் பதிவுடன் தொடர்புடையது. அதையும் காணலாம்.

11.1.10

பாலியல் தாக்குதல்களும்,பருத்தி வீரன்களும்

பெண்ணுக்கு இழைக்கப்படும் உச்சபட்ச அநீதி,உடல் ரீதியாக,பாலியல் ரீதியாக அவள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்;
அவளது ஒப்புதலின்றி அவள் உடலைப் பலவந்தமாக...மூர்க்கத்தனமாகக் கையாளும் கொடூரமான,காட்டுமிராண்டித்தனமான வன்முறை.
இந்த வன்முறைக்கு இரையாகி வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் நெகிழ்வான சோகக் கதையைச் சொல்லி நெக்குருக வைக்கிறது..இத்துடன் இணைத்துள்ள வீடியோ இணைப்பு.

Sunitha Krishnan's fight against sex slavery
http://www.youtube.com/watch?v=jeOumyTMCI8இதன் உள்ளர்ந்த நோக்கம் அனுதாபத்தை மட்டும் கிளர்த்திவிட்டு ,அங்கலாய்ப்புக்களைச் சம்பாதித்துக் கொள்வதல்ல.
பாரதி சொல்வதைப் போன்ற வெற்றுப் புலம்பல்களும்,பரிதாபப் பெருமூச்சுக்களும், உச்சுக் கொட்டல்களும்,இரங்கல் தீர்மானங்களும் இவர்களுக்குத் தேவையில்லை.சமூக விலக்கம்,மனித ஜீவிகளாகவே மதிக்கக் கூசும் மனத்தடைகள் இவற்றிலிருந்து சமூகம் விடுபட்டாக வேண்டும் என்பதே இந்த உரைவழி சுனிதா கிருஷ்ணன் விடுக்கும் செய்தி.

வலியின் கடுமை...அதன் வீரியம் இவற்றின் நிஜமான தாக்கம் அது உணர்வாகும்போதே உறைக்கும்.அத்தகைய வலிக்கும்,வேதனைக்கும் ஆட்பட்டவர் சுனிதாகிருஷ்ணன்.
தனது பதின் பருவத்தில் -15 வயதில்- எட்டு மூர்க்கர்களால் gang rape எனப்படும் ஒட்டுமொத்தமான பாலியல் வன்முறைக்குத் தான் ஆட்பட நேர்ந்ததை எந்த மனத்தடையும்
இன்றி முன் வைக்கும் சுனிதா கிருஷ்ணன்,அந்தச் சம்பவத்தின் வலியும்,அதனால் விளைந்த கோபமும் மட்டுமே தன்னிடம் இன்னமும் கூடக் கனன்று கொண்டிருப்பதை ஆக்ரோஷமாக வெளியிடுகிறார்.அதனால் தான் பட்ட உடல் காயங்கள் ஒரு புறமிருக்க அதற்காகவே பெண்ணைப் புறக்கணிப்புச் செய்யும் ‘நாகரிக சமூக’த்தின் மீதே அவரது சினம் பொங்கி வெடிக்கிறது.

சுனிதாகிருஷ்ணனின் கோபம் எரிக்கும் சினமல்ல;இது போன்ற குற்றங்களுக்கு மாற்றுத் தேடி அவற்றைத் தணிக்கும் சினமாகத் தன் ரௌத்திரத்தை மடை மாற்றிக்கொண்டதிலேதான் சுனிதாவின் வாழ்க்கை,முத்திரையைப் பதிக்கிறது;தன் சமூக அக்கறையைப் பதிவு செய்கிறது;கழிவிரக்கத்தால் தன் வாழ்வையும் வீணடித்து சமூகத்துக்கும் பயன்படாமல் போவதில் அவருக்குச் சம்மதமில்லை; தனக்கு ஏற்பட்ட இழப்புக்குள் முடங்கிப் போய்விடாமல்... தன் பார்வையை விசாலமாக விரித்துத் தன்னைப் போன்ற பாதிப்புக்களுக்கு ஆளானவர்களைத் தேடித்தேடி,அவர்களின் நோய்க்கு மருந்திடும் அற்புதமான பணியில் தன்னை தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டதன் வழி தன் வாழ்க்கையைப் பொருள் பொதிந்ததாக மாற்றிக் கொண்டிருக்கும் இந்தப் பெண்மணிக்கு வெற்றுப் புகழ்ச்சிகள் தேவையில்லை;அவற்றை அவர் நாடுவதும் இல்லை.

பாலியல் தாக்குதல்களுக்கு ஆளான 3200 பெண்கள், அவரவர்க்கு ஏற்ற வழியில் மறுவாழ்வு பெற வழி காட்டி உதவியிருக்கிறார் இவர்.குறிப்பாக ஆணாதிக்கம் மிகுந்த சமூக அமைப்பில்-ஆண் செய்யும் கடினமான பணிகளையே துணிந்து மேற்கொண்டு (வெல்டிங்,தச்சு,மேஸ்திரி)தங்கள் உடல் வலுவைக் காட்டுவதன் வழி தாங்கள் உடலால் வீழ்த்தப்பட்ட நிலையைக் கடந்து போகும் இந்தப் பெண்கள்,இவ்வாறான பணிகளையே தங்கள் எதிர்ப்பின் குறியீடாக வெளிப்படுத்தும் துணிவை இப் பதிவில் காண முடியும்.

3,4,5 வயதிலுள்ள பச்சிளம் குழந்தைகளின் பாலியல் பலியோடு தன் உரையைத் தொடங்கும்
சுனிதா,தன் உரையின் நிறைவில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது மகாகனம் பொருந்திய ...மேன்மை தங்கிய இந்தச் சமூக அமைப்பைத்தான்.
நாய்க்கு எலும்புத் துண்டை வீசுவது போல இத்தகைய உதவி அமைப்புக்களுக்குத் தானம் தர முன் வரும் மனிதர்களும் கூட வீட்டு உதவிக்காக என்று வரும்போது இந்தப் பெண்களைச் சேர்த்துக் கொள்ளத் துணியாத இரட்டை மனப்போக்கைப் பிட்டுப் பிட்டு வைத்து’’இவர்களுக்கு வேண்டியது உங்கள் தான தருமமோ பிச்சையோ அல்ல, அவர்களையும் தன்மதிப்புமிக்க மனிதஜீவிகளாக ஏற்க முன் வரும் மாண்பு மட்டுமே’’என்பதை அழுத்தமாக முழக்கமிட்டுச் சமூகச் சுயத்தைத் தோலுரிப்புச் செய்கிறர் சுனிதா.

அவர் வைக்கும் குற்றச் சாட்டில் என்ன பிழை இருக்கிறது? விஸ்தாரமாக....விவரணைகளோடு gang rape ஐ முன் வைத்த ’பருத்தி வீர’னைக் கொண்டாடி விழா எடுத்து அதுவே உலகத் தரம் என்று கொண்டாடுபவர்கள்தானே நாம்? பாதிப்பைத் துல்லியமாகக் காட்டியாக வேண்டும் என்பதில் எடுத்துக் கொண்ட முயற்சி-அப்படிப்பட்ட செயல்பாடுகள் தவறு என்பதை இம்மியளவு கூட உணர்த்துவதாக இல்லையே?
அவ்வாறான தாக்குதலுக்கு ஆளான பெண் என்பது வெளிப்பட்டு விட்டால் கூட ஊரும்,சுற்றமும் இழிவுபடுத்தும் என்பதற்காகத்தானே அவளைக் காதலனின் கையால் கண்ட துண்டமாகக் கூறு போட விடுகிறார் இயக்குநர்?
பழகிப் போன மதிப்பீடுகளுடன் அதைப் பார்க்கும் சராசரிப் பார்வையாளனின் பொதுப் புத்தியிலும் அது நியாயம் என்ற எண்ணம்தான் ஆழமாகப் படியுமே ஒழிய,அவளும் வாழ்வதற்குத் தகுதி படைத்தவள் என்ற சிந்தனை எப்படி உதிக்கும்?
கலைப் படைப்புக்கள் என்ற பெயர் சுமந்து இத்தகைய படங்கள் வந்தாலும்
பார்வையாளர்களின் இரக்கத்தைத் தூண்டுவதைத் தவிர இவை வேறு எதைச் சாதித்திருக்கின்றன?
எந்தப் போர்வையில்- எந்த முகமூடியுடன் சொன்னாலும், இவ்வாறான தாக்குதல்களுக்கு ஆட்பட்ட பெண்கள் வாழத் தகுதியற்றவர்கள் என்பதுதானே இவைகளெல்லாம் வலியுறுத்த விரும்பும் கருத்து?அதுதானே அவை முன் வைக்கும் நிஜம்?

இந்தச் சந்தை இரைச்சல்களுக்கிடையே ....
இப்படிப்பட்ட மூளைச் சலவைகளுக்கு ஆட்பட்டுக் கிடக்கும் நமக்கு ஆயிரம் சுனிதா கிருஷ்ணன்கள் கூடப் போதாது என்பதுதான் கசக்கும் உண்மை.

இந்தப் பதிவைப் படிக்கும் வாசக நண்பர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.
இதன் இணைப்பான வீடியோ பதிவைப் பாருங்கள்;சுனிதா கிருஷ்ணனின் உரையைக் கேளுங்கள்.......
உங்களால் முடிந்த எல்லை வரை இந்தச் செய்தியைக் கொண்டு சென்று சமூக மனச் சாட்சியை உலுக்கி எழுப்புங்கள்.
சுனிதா போன்றவர்கள் செய்யும் தொண்டின் மகத்துவத்தை மனங்கொள்ளச் செய்யுங்கள்.

நாம் நல்ல மனிதர்கள் என்று காட்டுவதற்காக அல்ல,
நாம் மனிதர்கள் என்பதே அப்போதுதான் நிரூபணமாகும்
.

எதிர்வினைக் கடிதங்களையும் அன்புடன் வரவேற்கிறேன்.

பின் இணைப்பு;
இந்த வீடியோ பதிவைப் பார்த்த என் இணையத் தோழியின் சத்திய ஆவேசவரிகள்...
கீழே,

யாருக்காக .
எதற்காக ,
ஏன்
எப்படி இந்த மழலைகள் பாலியல் வன்முறைகளுக்குள்ளாகிறார்கள் ?
சகோதரி சுனிதாவை வணங்குகிறேன்
தாயே உன் கரங்களின் , இதயத்தின் , வார்த்தைகளின் ,

கண்களின் வலிமை மேலும் மேலும் வளரட்டும்
உன் கனிந்த இதயம் ஊற்றும் நெருப்பில்
அனாதைகளின் காயங்கள் ஆறி விடுவதைப் போல
சமூகத்தின் கலாச்சார மௌனமும் உருகி அகலட்டும் ,
போலிக் கலாச்சாரம் எரிந்து சாம்பலாகட்டும் ......
தாயே உன் புண்பட்ட ,பெண்மையின் ,ஆளுமையின் வலி
சமூக மனசாட்சிக்குள்ளும் கொழுந்து விட்டெரியட்டும்...
பொழுதுபோக்கு உச்சங்களின் பலிப் பீடங்களில் ,
அலறி வீழும் குழந்தைகளின் ,பெண்களின்
இயலாமையின் கதிர்வீச்சுக்கள்
மனிதர்கள் மீதும் நெருப்பை உமிழட்டும் ......

பூஷணாதேவி

8.1.10

விருதுகள்,பரிசுகள்

மூத்த எழுத்தாளரும்,திறனாய்வாளரும்,சமூக இலக்கிய அக்கறை கொண்டிருப்பவரும்,’தமிழ் நேயம்’இதழைத் தளரா முயற்சியுடன் நடத்தி வருபவருமான திரு கோவை ஞானி அவர்களுக்கு 2009 ஆம் ஆண்டிற்கான கானடா இயல் விருது அறிவிக்கப்பட்டிருப்பது,அவரது அயரா உழைப்பிற்கும்,தமிழ் இலக்கிய வளர்ச்சியின் மீது அவர் கொண்டிருக்கும் மெய்யான அக்கறைக்கும் கிட்டியுள்ள அங்கீகாரம் என்றே கூறலாம்.

பொதுவான இலக்கிய முயற்சிகளோடு,பெண் எழுத்துக்களை வெளிக் கொணரத் திரு ஞானி அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் மிகச் சிறப்பானவை.கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பெண் எழுத்தாளர்களுக்குச் சிறுகதைப் போட்டி அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் அவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பாக்கி,இதுவரை எதுவுமே எழுதாதவர்களையும் கூட வெளிச்சத்துக்குக் கொணர்ந்திருப்பவர் அவர்.

வாசிப்பையும் எழுத்தையும் வாழ்வின் எந்தக் கட்டத்திலும் நிறுத்திவிடாமல் தமிழியம்,மார்க்ஸியம்,பெரியாரியம்,மெய்யியல் எனப் பல தளங்களிலும் தன் கருத்துக்களைத் தொடர்ந்து பதிவு செய்து வரும் திரு கோவை ஞானி அவர்களுக்கு வணக்கமும்,வாழ்த்துக்களும்.

மைய அரசின் சாகித்திய அகாதமி விருது பெறும் கவிஞர் திரு புவியரசு அவர்கள் வானம்பாடிக் குழுவைச் சேர்ந்த முன்னோடிப் புதுக் கவிஞர்களில் ஒருவர்.பல மொழியாக்க நூல்களையும் உருவாக்கி அளித்திருப்பவர்.கிரண்பேடியின் வாழ்க்கை வரலாற்று நூலை ‘நான் துணிந்தவள்’என்ற தலைப்பில் தமிழுக்கு அளித்தவர்.
திரு புவியரசு அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றும் தமிழ்மகன் அவர்கள்,இளம் தலைமுறைப் படைப்பாளிகளில் ஒருவர். அண்மையில் நடைபெற்ற எழுத்தாளர் சுஜாதா நினைவு அறிவியல் சிறுகதைப்போட்டியிலும் பரிசு பெற்றிருப்பவர்.அவருடைய "எட்டாயிரம் தலைமுறை' என்ற நூல், இந்த ஆண்டு தமிழக அரசின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான பரிசைப் பெற்றிருக்கிறது.
திரு தமிழ்மகன் அவர்களின் இலக்கியப்பணி மேன்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.

(திரு கோவை ஞானி பற்றிய விரிவும்,ஆழமும் கூடிய பதிவு...ஜெயமோகனின் வலையில் காண்க..)
இணைப்பு;http://www.jeyamohan.in/?p=6123

4.1.10

இரண்டு பெண்கள்

அண்மையில் படிக்க நேர்ந்த இரண்டு பெண்களைப் பற்றிய நாளிதழ்ச் செய்திகள், நெஞ்சை நெகிழ வைப்பவை;அவை வெறும் பரபரப்புச் செய்திகளாக- இன்று பேசி நாளை மறக்கப்பட்டு விடாமல் - சமூக மனச்சாட்சியின் பிடரியைப் பிடித்து உலுக்கவும் பயன்படுமானால் குறிப்பிட்ட அந்தப் பெண்களின் சோக முடிவுகளாலும் கூடச் சற்றே பயன் விளைந்திருப்பதாக ஆறுதல் கொள்ள முடியும்.

இருவரில் ஒருவர் 14 வயதேயான இளம் பெண் ருச்சிகா.டென்னிஸில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளோடு சண்டிகர் டென்னிஸ் சங்கத்துக்குக் கள்ளம் கபடமின்றிச் சென்ற ருச்சிகா, தன்னை ருசி பார்க்கவென்றே மனித மிருகம் ஒன்று காவல்துறை அதிகாரியின் உருவத்தில் அங்கே ஒளிந்து கொண்டிருப்பதைக் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க முடியாதுதான்;அதன் பிறகு,அந்த அதிகாரி தன்னிடம் முறைகேடாக நடந்து கொண்டதைக் காவல்துறை நேர்மையாக விசாரிக்கும் என்று நம்பி ஏமாந்ததும் அந்தப் பெண்ணின் அப்பாவித்தனம்தான்.

புகார் கொடுத்த காரணத்தினாலேயே பள்ளியிலிருந்து நீக்கம்,குடும்பத்தார்க்கு மன உடல் ரீதியான பலவகை அச்சுறுத்தல்கள் என்று திரைப்படக் காட்சிகள் போலச் சம்பவங்கள் அடுத்தடுத்துத் தொடர , இறுதியில் தற்கொலை செய்து கொண்டு மாண்டு போனார் ருச்சிகா.அவரது குடும்பத்தாரே பயந்து வழக்கிலிருந்து பின் வாங்கிவிட்டபோதும் ருச்சிகாவுக்கு நடந்த அவலத்தை நேரடியாகக் கண்ட ஒரே சாட்சியான அவரது தோழி ஆராதனாவும் அவர் குடும்பமும் அடுத்தடுத்து ஆண்டுக் கணக்காகச் செய்து வந்த தொடர் முயற்சிகளின் பயனாய் -
(400 முறை அவர்கள் நீதிமன்றப் படிகளில் ஏற வேண்டியிருந்ததாக ஆராதனாவின் தாய் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்)-
1993இல் நிகழ்ந்த மரணத்துக்கான ஓரளவு நியாயம், கடந்த டிசம்பரில் கிடைத்திருக்கிறது. 2002இல் எல்லாப் பொருளாதாரப் பலன்களையும் ஜாம் ஜாமென்று பெற்று ஓய்வும் பெற்று விட்ட ரத்தோர் என்ற அந்தக் கொடுமனக்காரக் காவல் அதிகாரி பெற்ற தண்டனை....வெறும் ஆறுமாதச் சிறையும்,1000- ரூபாய் அபராதமும்தான்!அதிலும் தண்டனை அறிவிக்கப்பட்ட பத்தாவது நிமிடமே ஜாமீன் பெற்றுச் சிரித்தபடி செல்ல அவரால் முடிகிறது;நம் சட்டமும் அதற்கு இடமளிக்கிறது.

ஓர் உயிரின் விலை, ஒரு பெண்ணின் தன்மதிப்பு இந்த அளவு மலினமாகிவிட்டிருப்பது நெஞ்சுக்குள் ஒரு நெருடலை ஏற்படுத்தினாலும் சரியான நீதி கிடைக்கும்வரை ஓயப்போவதில்லை என்றும்,தொடர் போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என்றும் ஆராதனாவின் குடும்பம் அறிவித்திருப்பது சிறிது ஆறுதலளிக்கிறது.

மற்றொரு மனித மிருகத்தின் அடுத்த இரை அருணா ராமச்சந்திர ஷண்பக்.
36 ஆண்டுகளுக்கு முன்பு, 25 வயது இளம்பெண்ணாக மும்பை மருத்துவ மனை ஒன்றில் மருத்துவத் தாதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்தவர்;
அதே மருத்துவமனையின் வார்டுபையனாக இருந்த சோகன்லால் ,நாய்கட்டும் சங்கிலியால் இவரது கழுத்தைப் பிணைத்துப் பாலியல் வன்முறைக்கு முயல அதைத் தடுக்கும் முயற்சியில் சங்கிலி அறுபட,கழுத்து நெரிந்து ரத்த நாளங்கள் உடைந்து ஆண்டுக் கணக்காகக் ‘கோமா’வில் ஆழ்ந்தபடி தாவரமாய்க் கிடக்கிறார் அருணா.
தன் தோழி படும் துன்பத்தைப் பொறாமல் கருணைக் கொலைக்கு அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தின் அனுமதியை நாடியிருக்கிறார் பிங்கி விரானி.
கருணைக் கொலைக்கு இன்னும் சட்ட சம்மதம் கிடைக்காதது ஒரு புறமிருக்க..
இங்கும் குற்றம் செய்தவருக்குச் சேதாரம் அதிகமில்லை;
7 ஆண்டுக்காலச் சிறைவாசம் மட்டுமே;
இப்போது அந்த நபர் தில்லி மருத்துவமனையில் அதே(!?)பணியைத் தொடர்வதாகத் தகவல்.

முதல் வழக்கில் அதிகார மையம்;அடுத்த வழக்கிலோ கடை நிலை ஊழியம்.
ஆனால் இரு வழக்குகளிலுமே காணக்கிடைப்பது,பெண்ணை ஒரு நுகர்வுப் பொருளாகவே பார்க்கும் அசுரப் பார்வை மட்டுமே .
விளைவு.....எதிர்கால வாழ்வை,சாதனைகளை இழந்துவிட்டுப் பிணமாகவும்,நடைபிணமாகவும் மாறிப்போன இரண்டு பெண்கள்.
இரு செய்திகளிலும் ஒரே ஆறுதல்,சாவுக்குப் பின்னும்,சக்கையாகிப்போன பின்னும் தொடரும்...அவர்தம் தோழியரின் நட்பும் ,அவர்கள் நடத்தும் துணிவான போராட்டமுமே.

(செய்தி ஆதாரம்-
தினமலர்-3.1.10
ஜூனியர்விகடன் -30.12.09
குமுதம்-30.12.09 )

1.1.10

அறிவிப்பு

இன்றைய தினமணி நாளிதழில் (1.1.2010)-திரு மணிகண்டன் அவர்கள் எழுதியுள்ள
வலையுலகப் படைப்பாளிகள்!
என்னும் கட்டுரையில் இந்த வலைத் தளம் பற்றிய குறிப்பும் இடம் பெற்றிருக்கிறது.

''தமிழ் இலக்கியங்களையும் மரபுவழி தமிழ் ஆராய்ச்சிகளையும் அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் சில வலைப்பூக்கள் செயல்படுகின்றன. மு.இளங்கோவன், இரா.குணசீலன், கல்பனா சேக்கிழார், எம்.ஏ.சுசீலா, நா.கணேசன், சுப்ரபாரதி மணியன், அழகியசிங்கர் போன்றவர்கள் வலைப்பூக்களில் இலக்கியப்பணி செய்கின்றனர். கவிதைகள், இலக்கியக் கூடல்கள், புத்தக வெளியீட்டு விழாக்கள் போன்றவை இவர்களின் வலைப்பூக்களை ஆக்கிரமித்திருக்கின்றன.''

முழுக்கட்டுரையையும் படிப்பதற்கான இணைப்பு

http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Editorial+Articles&artid=176715&SectionID=133&MainSectionID=133&SEO=&Title=

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....