துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.11.08

கருப்பையும்,ஏவாளும்...


கருப்பை என்பது,காலம் காலமாகப் பெண்ணின் வயிற்றில் இருந்தபோதும்,அவள்
வசத்தில் இருப்பதில்லை
.சுமப்பது,பெறுவது,கலைப்பது ஆகியவை,பல நேரங்களில் பிறரால் தீர்மானிக்கப்பட்டு,அவள் மீது திணிக்கப்படுவனவாகவே உள்ளன.அவள்
மீது செலுத்தப்படும் பாலியல் வன்முறைகள்,பண்பாட்டு ஒடுக்கு முறைகள் ஆகிய
அனைத்தும் கருப்பையாக மட்டுமே அவள் நோக்கப்படுவதன் விளைவுகளே.
இவ்வாறான ஒரு சமூக அமைப்பில்-கருத்தரிக்கவும்,சுமக்கவும் மறுக்கும் அதீதமான ஒரு நிலைப்பாட்டை ஒட்டு மொத்தப் பெண்இனமும் மேற்கொள்ளுமாயின்,
மறு உற்பத்தி முடங்கிப்போய்விடுவதால் ஏற்படும் பாதிப்பு,சமூகத்தில் ஏற்படுத்தும்
அதிர்வலைகள் எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை மாறுபட்ட கதையாடலின்வழி
முன்வைத்திருப்பதால்,பெண்ணிய வாசிப்பில் கவனம் பெறும் படைப்பு,பாவண்ணனின்'ஏவாளின் இரண்டாவது முடிவு' என்னும் குறிப்பிடத்தக்க சிறுகதை.
"நவீனத்துவம் வேறுவகையில் பரிணாமம் கொள்கையில்,....செவ்வியலோடும்,
நாட்டுப்புறவியலோடும் தன் உறவுகளை சீரமைத்துக்கொள்ளவேண்டும்;சீரமைத்துக்கொள்வதென்பது,அவற்றைக் கேள்விக்கு உட்படுத்தி விடை தேடுவதே"என்று கூறும் பாவண்ணன்,நாட்டுப்புறக் கதையாடல் உத்தியுடன் நவீன வாழ்வியலைப்
பிணைத்து,'அதி'தன்மை கொண்டதாக எழுதியுள்ள சற்றே நீண்ட புனைகதைதான் 'ஏவாளின் இரண்டாவது முடிவு'.
காட்டுவாசிப்பெண்கள் சிலர்,தங்கள் பேறு காலத்தைத்தாமதப்படுத்தவும்,தங்களுக்கு விருப்பமில்லாத கருக்களைக்கலைக்கவும் ஒரு மந்திரச்சொல்லைப்பயன்படுத்தி
வந்திருக்கின்றனர் என்பதும்,துஷ்யந்தனின் நிராகரிப்புக்கு ஆளான சகுந்தலையின் கருவை,மாதக்கணக்கில் வெளிவராமல் கருவறையில் அடைத்து வைக்க அவர்கள் உதவினார்கள் என்பதும் நாட்டுப்புறக்கதைப்போக்கிலான ஓர் அதீதப்புனைவு.இப்புனைவை அடித்தளமாகக்கொண்டு, யதார்த்த வாழ்வுத்தளத்தில் நேரும் சிக்கலைக்காட்சிப்படுத்துகிறது,அச்சிறுகதை.
காட்டில் வாழும் ஆதிவாசிப்பெண்களின் பரம்பரையைச்சேர்ந்த-அந்தத்தொடர்ச்சியில் வந்தவர்களான பெண்கள் சிலர்,ஏதோ ஒரு கண நேரச்சலிப்பில், தங்களுக்குத்தெரிந்த
அந்த மந்திரச்சொல்லைக்காற்றில் மிதக்க விட்டு விடுகிறார்கள்.அச்சொல்,நாட்டை
வந்தடைகிறது.அப்பொழுது தொடங்கி,நாற்பது ஆண்டுக்காலம்,அந்த
நாட்டில் குழந்தைப்பேறு என்பதே இல்லாமல் போய்விட,மறு உற்பத்தி தேங்கிப்போகிறது. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த கடைசிக்குழந்தைகளில் ஒருவனான ராஜ் என்பவனைத்தேடிக்கண்டுபிடித்து, அவன் உதவியை நாடுகிறார் பிரதமர்.அவன்,தன் தாயின் மூலமாகவும்,அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நாவலின்
வழியாகவும்-காட்டுவாசிகள் மிதக்கவிட்ட மந்திரச்சொல்லே அப்புதிரின் மூலம் என்பதைக் கண்டறிகிறான். அச்சொல்லுக்கு மாற்றுச்சொல் தேடிக்காட்டை நோக்கி
அவன் பயணப்படுகையில்,காட்டின் நடுவில் இருந்த அணு உலை வெடித்துச்சிதற,
காடே சாம்பல் மேடாகி விடுகிறது.ஆதிவாசிகள் அனைவரும் அழிந்துபோக,மாற்றுச்சொல் கிடைக்கும் வழியும் ஒரேயடியாக அடைபட்டுப்போய்விடுகிறது.
'அதி'புனைவுப்போக்கிலான இப்படைப்பு,பெண்ணிய அரசியலைத் தன் உள்ளீடாகச்செறித்திருப்பதை இதன் தலைப்பே வெளிப்படுத்திவிடுகிறது.
'ஏவாள்'எடுத்த முதல் முடிவு,குடும்பம் என்ற தளையில் அவளைப்பிணைத்தது.
இரண்டாவது முடிவோ,தாய்மையைக்கண்ணியாக்கி,அவளைச்சுரண்டும்
தந்திரத்திலிருந்து அவளைத்தப்புவிக்கிறது.மந்திரச்சொல்லுக்கு மாற்றுச்சொல் கிடைக்காமல் அணுக்கதிர் வீச்சால் காடு அழியும் கடைசி நிகழ்வு,ஆணாதிக்க
வன்முறைகள் கட்டற்றுப் பெருகும் நிலையில்,குடும்ப அமைப்பு என்ற ஒன்றே
தகர்ந்து போய்,மனித இனம் என்பதே பூண்டற்றுப்போக நேரலாம் என்ற
அபாய எச்சரிக்கையாக-அதன் குறியீடாகவே அமைந்திருக்கிறது.
(சிறுகதையை முழுமையாக வாசிக்க விரும்புவோருக்காக....
'ஏவாளின் இரண்டாவது முடிவு'சிறுகதைத்தொகுப்பு, பாவண்ணன்,தமிழினி வெளியீடு,2002 )


கடிதம்:

உங்கள் வலைப்பதிவைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். புத்தகங்களைப்பற்றிய உங்கள் வாசிப்பனுபவங்கள், பெண்ணியநோக்கில் கட்டுரைகள் என நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக எழுதப்பட்டிருக்கும் பல கட்டுரைகளையும் படித்தேன். உங்கள் உழைப்புவேகம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. படித்ததைப்பற்றி மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று நினைக்கிற உங்கள் ஆர்வமும் எனக்குப் பிடித்திருக்கிறது. இனிமேல், உங்கள் படைப்புகளைத் தொடர்ந்து வாசிப்பேன். தொடர்ந்து உற்சாகத்தோடு எழுதுங்கள். . ஏவாளின் இரண்டாவது முடிவு தொகுதியையொட்டிய உங்கள் கருத்துகள் எனக்கு மிகவும் ஊக்கமளித்தன.. என் மகிழ்ச்சியை இங்கே நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.
பாவண்ணன்,(எழுத்தாளர்),5.12.08

23.11.08

"வியத்தலும் இலமே....."

Posted by Picasaபுறநானூற்றுப்பாடல்களின் அற்புதமான வரிகள் சில,திரும்பத்திரும்ப எடுத்தாளப்படுவதனாலேயே,அவற்றின் அர்த்தச்செறிவை இழந்து நீர்த்துப்போய் விடுகின்றன.வரிகளை மேலோட்டமாக மேற்கோள் காட்டுவதிலுள்ள ஆர்வம்,அவற்றுள் பொதிந்து கிடக்கும் ஆழமான உட்பொருளை நாடிச்சென்று கண்டடையும் தேட்டத்தை மட்டுப்படுத்தி விடுகிறது.தமிழ் ஆர்வலர்கள் தங்கள் இலக்கியவழக்கில்,அடிக்கடி பயன்படுத்துவதால்,சொற்கள் பழகிப்போயிருந்தாலும்கூடப் பொருள் புதிதாய்..., எந்தக்காலத்திற்கும் உரித்தான வாழ்வியல் கருத்தாக்கம் ஒன்றனை உள்ளடக்கி இலங்குவது,
"பெரியோரை வியத்தலும் இலமே ,சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"
என்னும் கணியன் பூங்குன்றனாரின் அரிய வாசகம்.


மனிதப்பண்புகளில்,வியப்புக்கு ஒரு தனி இடம் உண்டு.எண் வகைச்சுவைகளில் ஒன்றாக-"'மருட்கை''என்ற பெயரில் வியப்பைக்குறிப்பிடுகிறது தொல்காப்பியம்.முற்றும்புதியது,ஆகப்பெரியது,மிகவும் சிறியது,முன்பு இருந்திராமல் புதிதாக ஏற்பட்டுள்ள ஒரு வளர்ச்சி நிலை(ஆக்கம்)ஆகிய நான்கும் வியப்புக்கு நிலைக்களங்கள் என்று விளக்கம் தருகிறார் தொல்காப்பியர்.
மலர்ச்செடியில் அப்போதுதான் அரும்பியிருக்கும் ஒரு புது மொட்டு,பிரபஞ்ச பிரமாண்டத்தை உள்ளடக்கி ஆர்ப்பரிக்கும் அலைகடல்,நுணுக்கமான சிற்ப சித்திர வேலைப்பாடு,நேற்று வரை பொட்டல் காடாய் இருந்த பூமியில் இன்று முளைத்திருக்கும் விண் முட்டும் கட்டிடங்கள் என இவற்றைஎல்லாம் காண நேர்கையில் எவருக்கும் வியப்புத்தோன்றுவது இயற்கை.


இயற்கை எழிலில் உள்ளம் பறிகொடுக்கும் ரசனைகளும் கூட வியப்பைச்சார்ந்தவைதான்.
'புல்லைநகையுறுத்திப்பூவை வியப்பாக்கி' என்பான் பாரதி.
'அருவிகள் வயிரத்தொங்கல்
அடர்கொடி பச்சைப்பட்டே
குருவிகள் தங்கக்கட்டி
குளிர்மலர் மணியின் குப்பை'
என்று 'அழகின் சிரிப்பு'க்கண்டு விந்தை கொள்வான் பாரதிதாசன்.
இத்தகையவியப்புக்கள்,இயல்பானவை;ஆரோக்கியமானவை;தனிமனித ஆளுமைக்குக்குந்தகம் ஏற்படுத்தாதவை;அவர்களது அழகியல் ரசனைகளை மெருகேற்றி,அவர்களைச்செப்பனிடுபவை..அதனாலேயே அவற்றை விடுத்து,
சக மனிதர்கள் மீது சில நேரங்களில் விளையும் பிரமிப்பை..,ஆச்சரியத்தை..,அதிசயத்தை மட்டுமே விமரிசனம் செய்கிறது புறநானூறு.

தான் அடைய விரும்பியதும்,தன்னிடம் இல்லாமல் போனதுமான ஆற்றல்கள்,அழகுகள் ஆகியவற்றை அடுத்தவரிடம் காணும்போது வியப்பு மேலிடுவது இயல்புதான்.சக மனிதர்களின் ஆளுமையை,அழகை,அவர்களின் பாணியை,கலைத்திறனை ,படைப்பாக்க ஆற்றல்களை,செயல் வேகத்தை....இன்னும் இது போல் பிறவற்றை ஒரு எல்லைக்குள் நின்று ரசித்துவிட்டுப்போவதிலும் கூடப்பெரிய பிழை எதுவும் இல்லைதான்.ஆனால் ரசனையின் எல்லைக்கோடுகள் தகர்ந்துபோய்,ரசனை என்பது வியப்பாய்ப்பரிணமித்து ...,பிறகு,அந்த வியப்பும் கூடக்கட்டுத்தறிக்குள் அடங்க மறுக்கும் மதயானையைப்போல மூர்க்கம் காட்டி மிகையாகப்பெருகும்போதுதான் விரும்பத்தகாத விளைவுகள் சம்பவித்து விடுகின்றன.அதிலும் குறிப்பாக வியப்புக்கு இலக்காகும் அந்த நபர்,பிரபலமான ஒரு பீடத்தில்,புகழின் கண் கூச வைக்கும் வெளிச்சத்தில் இருப்பவராக அமைந்து விடும்போது,மலிவான வியப்புக்கு இரையாகி மருண்டு போகும் சாமானிய
மனிதர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக்கூடிவிடுகிறது.

வெள்ளித்திரை நாயகர்களின் 'கட் அவுட்'களுக்குப்பால்அபிஷேகம் (பீரபிஷேகமும்கூடத்தான்!)செய்து ஆனந்தித்தபடி,குறிப்பிட்ட கதாநாயகனின் படம் வெளியாகும் நாளில்விடிந்தது முதல்,அடரிருள் பரவும் நேரம் வரை திரை அரங்க வாயிலிலேயே கூடி இருந்து கூக்குரலும் கோஷமும் எழுப்பியபடி விரயமாகும் மனித சக்திகள்.......
தான் வழிபடும் அரசியல் தலைவன்,நியாயமான காரணத்திற்காகக்கைது செய்யப்படும்பொழுதோ அல்லது இயற்கையான மரணம் அடையும்போதோ கூட -
ஆவேசமான உக்கிரத்துடன் தங்களையேகளபலியாக்கி-அக்கினிக்கு இரையாய் ஆக்கி மடிந்துபோகும் மனித சக்திகள்......
இனிய வாழ்க்கைத்துணை என்பதை நெஞ்சறிய உணர்ந்திருந்தபோதும்,அழகாலும்,பிற கவர்ச்சிகளாலும் தூண்டப்பட்டுப் பிறன் மனை(பிறள்மனையும் கூடத்தான்)நயக்க முந்தும் தவறான உந்துதல்கள்.....
இவை அனைத்துமே ஒரு வகையில் வியப்பின் அழிவு பூர்வமான விளைவுகள்தான். வழிபாடாகப்பரிணமித்து விடும் வியப்பு, மனிதனின் ஆககத்திறனுக்குச் சேதாரம் விளைவித்து,அவனது தனிமனித மேம்பாட்டை,வளர்ச்சியை முடக்கிப்போட்டு விடுகிறது.தான் வியக்கும் ஒருவனுக்குப்பூப்போடுவதிலேயே அவனது காலம் முழுவதும் கழிந்து போய் விடுகிறது.


வியத்தல், மற்றொரு மோசமான விளைவை எதிர்காணும் சந்தர்ப்பத்தையும் கூட சில நேரங்களில் உருவாக்கி விடுவதுண்டு.மாதக்கணக்கில் ..,ஆண்டுக்கணக்கில் தான்வழிபட்டுவந்த ஒருவரைச்சற்று அண்மையில் நெருங்கிப்பார்க்கும் வாய்ப்பு எதிர்பாராமல் கிட்டுகையில்-.பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவரது குரூரமான மற்றொரு பக்கத்தை ஒளிவு மறைவுகள் இன்றி நிதரிசனமாக எதிர்கொள்ள வேண்டியதாகி விடுகிறது.தன் ஆயுளை,கல்வியை,செல்வத்தை,செயல்திறனை-எல்லாவற்றையும் இப்படி அடுத்தவனுக்குப்பூப்போட மட்டுமே செலவழித்துப்பழகிப்போன அந்த மனிதனின் வழிபாட்டு பிம்பம் சிதைவுண்டு போக,கசப்பான நிஜங்களின் கோரத்தாக்குதலுக்கு ஆட்பட்டுத்தத்தளித்துப்போகிறான் அவன்;வியப்புக்கு நேர்மாறான வெறுப்புணர்ச்சி அப்பொழுது அவனை ஆட்கொள்ளத்துவங்க அவன்,சமநிலை இழந்தவனாகிறான்

வியப்பு,ஓர் அழிவு சக்தி மட்டுமல்ல;அது ஒரு ஆக்கசக்தியும்கூடத்தான்.
'அகலாது,அணுகாது தீக்காய்பவர்'போல நம் வியப்புக்குரிய எல்லா நபர்களையும்,சற்றே விலகி நின்று-உணர்ச்சியை ஒதுக்கி வைத்து-அறிவு பூர்வமாக அலசிப்பார்த்து,ஒவ்வொருவரிடமும் நாம் வியக்கும் பண்புகளை மட்டும்பட்டியலிட்டு,.அவற்றுள் நம்மால் இயலக்கூடிய நல்லவற்றை மட்டும் சுவீகரித்தபடி,நம்மை நாமே உருவாக்கிக்கொள்ளலாம்;ஒரு குறிப்பிட்ட ஆளுமையின் புகைப்பட நகலாக மட்டும் அல்லாமல்,பலரின் சிறப்பியல்புகளை உள்வாங்கிக்கொண்டு-அதே நேரத்தில் தன்னுடைய சுயத்தை,தனித்தன்மையை இழந்து விடாத-ஒரு
மனிதனை அப்போது நம்மிலிருந்து பிறப்பித்துவிட முடியும்.

.

மனித முயற்சிகள் தேங்கிப்போய் விடாமல் தடுப்பதற்கும்,இவ்வுலகில்நிறை மனிதன் என எவருமே இல்லை என்பதைப்புரிய வைப்பதற்கும்
"பெரியோரை வியத்தலும் இலமே"
என்று சொல்லி வைத்த புறநானூற்றுப்புலவன்,
"சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"
என்று கூடவே இன்னொரு வரியையும் இணைத்துக்கொள்கிறான்.வயதில்,வாழ்க்கை நிலையில்,அறிவில்,அனுபவத்தில் சிறியவர்கள் என நாம் அற்பமாக எண்ணும் எத்தனையோபேரிடம் நாம் கண்டடைவதற்கானபல செய்திகள்,கருவூலமாகச்செறிந்து கிடக்கின்றன.
மணிக்கொடி முன்னோடிகளில்குறிப்பிடத்தக்கவரான பி.எஸ்.ராமையாவின் 'நட்சத்திரக்குழந்தைகள்' ,புகழ் பெற்ற ஒரு சிறுகதை.அப்படைப்பில் இடம்பெறும்ஒரு சிறுமி -'நட்சத்திரம் எப்படிப்பிறக்கிறது?'என்று கேட்க அவளது வினாவுக்கு,"ஒவ்வொரு தடவை உண்மை பேசும்போதும் ஒரு நட்சத்திரம் பிறக்கிறது"என்று பதிலளிக்கிறார் அவள் தந்தை.ஒரு நாள் இரவு வானத்தை நோக்கியிருக்கும் அவள் கண்களுக்கு ஒரு நட்சத்திரம்(அல்லது,எரிகல்)வீழ்வது,கண்ணில் பட ''யாரோ பொய் சொல்லி விட்டதால்தான் நட்சத்திரம் விழுந்து விட்டது"என்று விளக்கமளிப்பதன்வழி,தன் தந்தையையே திகைக்கவும்,வியக்கவும் செய்து விடுகிறாள் அந்தக்குட்டிப்பெண்.

ஒரு நாள் கீரை விற்கும் பெண்ணிடம் பொத்தல் கீரைகளைக்குறை கூறி,நான்அவற்றைஒதுக்கிக்கொண்டிருந்த நேரத்தில், அந்தப்பெண் அனாயாசமாக இப்படி பதில் அளித்தாள்
'ஆமா...வீட்டுக்குள்ளே நல்லாப்போத்திப்படுக்கிற நமக்கே கொசு பிடுங்கி எடுக்குது. இது..பாவம் அத்துவானக்காட்டிலே அனாதையாய்க்கெடக்கிற களுததானே?'
'வாடிய பயிரை..'முதலிய வரிகளையெல்லாம்படிக்காமலே அவள் வாயிலிருந்து உதிர்ந்த அந்தச்சொற்கள், ஆன்மநேயத்தை வாழ்ந்து மட்டுமே காட்டும் அவளது எளிமை,
என் நெஞ்சுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தி அக தரிசனம் அளிக்க அங்கிருந்து அகன்று சென்றேன்

பெருமை,சிறுமை என்ற அளவுகோல்கள்,மனிதன்,தானாக ஏற்படுத்திக்கொள்பவை மட்டுமே."நீர் வழிப்படூஉம் புணை போல"-நீரோட்டத்தின் வழியே அடித்துச்செல்லப்படுகிற மரக்கட்டைகளைப்போல, உயிர்களும் கூட இயற்கையின் விதிப்படி இயங்குவது மட்டுமே உண்மை என்பதைப்புரிய வைப்பதற்காகவே
'வியத்தலும்,இகழ்தலும் தவிர்க்க' என்ற செய்தியை முன் வைக்கிறது சங்கஇலக்கியம்.கருத்துரைகள்:
மிகவும் அருமையான பதிவு.ரசித்துப்படித்தேன்.
விஜய்(lablaeruken). 27.11.08

11.11.08

மெல்லத் தமிழினி நீர்க்கு(ம்)மோ?

இலக்கியக் கல்வியிலும், இலக்கிய ஆய்வுகளிலும் வாழ்வின் செம்பாதிக்கு மேல் செலவிட்டு, அதிலேயே ஊறி உட்கலந்து போனவர்களுக்கு, இன்றைய கல்விச் சூழலில் தமிழ் இலக்கியக் கல்வியும், இலக்கிய ஆய்வுகளும் சிரிப்பாகச் சிரிக்கும் அவலம் கண்டு சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்' என்று புலம்பத் தோன்றுவதில் வியப்பில்லை. செய்யும் தொழிலில் ஈடுபாடும், கொஞ்ச நஞ்சம் மனச்சாட்சியும் எஞ்சியிருக்கக் கூடிய எவருக்கும் இன்று நேர்ந்திருப்பது இந்த வேதனைதான்!
60களில் நிலவிய தமிழ் எழுச்சிச் சூழலில், மொழியின் மீதும், அதன் இலக்கிய மரபுகளின் மீதும் தீரா வேட்கை கொண்டு, கல்லூரியின் இளநிலைப் படிப்பை (பி.ஏ., பி.எஸ்.சி.,) வேதியல், இயற்பியல், பொருளாதாரம், வரலாறு என வேறுபட்ட துறைகளில் மேற் கொண்டிருந்தாலும் _ அத்துறைகளிலிருந்து விலகி வந்து தமிழ் முதுகலைப் படிப்பை (எம்.ஏ.) ஆராக்காதலுடன் அணைத்துக் கொண்ட தலைமுறை ஒன்று இருந்தது. சங்க இலக்கியத்திலும், காப்பியங்களிலும் கவனம் செலுத்திய சென்ற தலைமுறைத் தமிழறிஞர்களின் (தெ.பொ.மீ., அ.ச.ஞா. போன்றோர்) தொடர்ச்சியாக இன்றைய நவீன இலக்கியத்தின்பால் இத்தலைமுறையின் ஆர்வம் பெரிதும் குவிந்தது. உண்மையான மன எழுச்சியுடன் தேர்ந்து கொண்ட துறை என்பதால் _ கவிதை, நாடகம், பிற படைப்பிலக்கியத் துறைகள், ஆய்வியல் எனத் தமிழின் பல இலக்கியக் களங்களிலும் இத்தலைமுறையைச் சார்ந்தவர்கள் குறிப்பிடத் தக்க முத்திரைகளைப் பதித்தனர்.
தமிழின் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தெளிய வேண்டுமென்ற மெய்யான ஆர்வத்துடன், இளங்கலை (பி.ஏ.) நிலையிலிருந்தே தமிழை விருப்பப் பாடமாக _ விரும்பித் தேர்ந்து கொண்டவர்களும் கூட மேற்குறித்த முதல் சாராரைப் போன்றவர்களே!
70களின் இறுதியிலும் 80களின் தொடக்கத்திலும், தொழிற் கல்விப் படிப்புக்களின் மீது மக்கள் மனங்களில் மோக அலை வீசத் தொடங்கிச் சூறாவளியாய்ச் சுழன்றடித்தது. இக் கடுஞ்சுழல், உண்மையான இலக்கிய ஆர்வமும், தேடலும் கொண்ட இளம் தலை முறையினரையும் கூடப் பொறியியல், மருத்துவம் ஆகிய (வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிப்பதன் வழி பெற்றோரின் மனப்பதட்டத்தைத் தணிக்கக் கூடியதாக எண்ணப்பட்ட) துறைகளின் பால் ஈர்த்துச் சென்றது.
தொழிற் படிப்புக்கள் கிடைக்காத சூழலில் _ கலை, அறிவியல் பட்ட வகுப்புக்களை நாடிவரும் மாணவர்கள், இரண்டாம் நிலை'க் குடிமக்களாக மதிப்பிடப்பட்ட நிலையில், தமிழிலக்கியம் பயில வரும் மாணவர்கள் கடையரிலும் கடைய'ராகக் கருதப்பட்டதில் வியப்பில்லை. இலக்கியப் பிரிவுக்காக ஐம்பது இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தால், அதில் விருப்பத்தோடு சேர வருபவர்கள் என்று 10 சதவிகிதம் பேரைக் கூடக் குறிப்பிட முடியாது.
இத்தகைய சூழலில், தங்களுக்கு விதிக்கப்பட்டதை' விருப்பத்தோடு ஏற்றுக் கொள்ள இயலாமல் விதியே' என்று ஊக்கமும், உற்சாகமும் இல்லாதவர்களாகவே அவர்களில் பெரும்பாலோர் மூன்று ஆண்டுகளையும் கழித்துவிட்டுப் போய் விடுகிறார்கள். இந்நிலையைக் காணுகையில், இலக்கியக் கல்வியின் எதிர்காலத்தைப் பற்றி ஒருவகையான அவநம்பிக்கை உணர்வே மேலோங்குவதைத் தவிர்த்துக் கொள்ள முடியவில்லை.
பருவமுறைக் கல்வித் திட்டத்தில் (Semester System) நிலவும் அக மதிப்பீட்டுத் தேர்வு (Internal Evaluation) நீளமாக _ தொடர்ச்சியாக எழுத வேண்டிய கட்டுரை வினக்களில் மதிப்பெண் குறைந்தாலும் ஓரிரு தொடரில் எழுதும் பதில்கள், பத்தி வினக்களுக்கான விடைகள் ஆகியவற்றில் ஈடுகட்டிக் கொண்டுவிடக் கூடிய வினத்தாள் அமைப்பு, குறிப்பிட்ட சில தன்னட்சிக் கல்லூரிகளில் தமிழ் இலக்கியக் கல்வியை மிகமிக எளிமைப்படுத்தித் தரும் பாடத் திட்டம் _ இவற்றால் பிழையில்லாத ஒரு வாக்கியத்தை உருவாக்கத் தெரியாதவர்களும் கூடத் தப்பி'ப் பிழைத்து விடுகிறார்கள்; மேலும் அவர்கள் இளங்கலை, முதுகலைத் தமிழ் பட்டதாரிகளாகத் (சில சமயம் முதல் வகுப்பிலும் கூடத்) தேர்ச்சி பெற்று விடுகிறார்கள். இப்படி ஒரு கேவலம், மாநிலத்திலுள்ள பல கல்வி நிறுவனங்களிலும் வெற்றிகரமாக நடந்தேறி வருவதை எவராலும் மறுக்க இயலாது.
மேலே குறிப்பிட்ட இலக்கியப் பட்டதாரிகள், கல்வியாளர்களாகவும், ஆய்வாளர்களாகவும் வளர்ச்சி பெறும் நிலையில் அவர்கள் வழங்கும் கல்வியும், அவர்கள் மேற்கொள்ளும் ஆய்வும் அரைவேக்காட்டுத் தனமாகவும், தேவைக்குத் தீனிபோடுவதற்காக வலிந்து செய்'யப்படுவதாகவும் மட்டுமே அமைந்து போகிறது.
"தமிழ் எம்ஃபில், பி.எச்.டி ஆய்வுகளைச் சில ஆண்டுக் காலத்திற்காவது நிறுத்தி வைக்க வேண்டும்'' என்று தமிழகத்தின் புகழ் பெற்ற தென்னகப் பல்கலைக்கழகம் ஒன்றின் மூத்த தமிழ்ப் பேராசிரியர் ஒருவர் குறிப்பிட்டதில் பிழையில்லை! ஆய்வுத் தலைப்புக்கள் பலவும் அபத்தத்தின் உச்சங்களாக அமைந்திருப்பவை; உள்ளார்ந்த ஆர்வத்தின் காரணமாக அல்லாமல், வலிந்து செயற்கையாக வருவித்துக் கொள்பவை. ஆய்வேட்டில் உள்ளடக்கம் என்ற பெயரில் இடம் பெறும் கருத்துக்கள், செய்திகளின் பொருத்தமின்மையாலும், வரிசையாக அடுக்கப்பட்டிருக்கும் மேற்கோள் குவியல்களாலும் உண்மையான அறிவுத்தேடல் கொண்டோரைக் கூசிக் குறுக வைப்பவை.
நூற்றாண்டு விழாக் கொண்டாடி விட்ட ஒரு தமிழ்க் கவிஞரைப் பற்றிய எம்.ஃபில் ஆய்வில், அவர் பிறந்த ஆண்டு, 1960களை ஒட்டியதாகக் குறிப்பிடப் பட்டிருந்ததென்பது உண்மையான ஒரு நிகழ்வாகும் (கட்டுரையாளர், அவ்வாய்வேட்டை மதிப்பீடு செய்யும் பொறுப்பை ஏற்றிருந்ததால், அது சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட உண்மை,). பானைச் சோற்றில் பதச் சோறாக உள்ள இந்த ஆய்வேட்டைப் போன்ற பிழை மலிந்த பல ஆய்வேடுகளும் கூட அறிவுச் சந்தையில் விலை போய்விடும் அக்கிரமங்கள், அன்றாட நிகழ்வுகளாகப் பல பல்கலைக் கழகங்களிலும், தன்னட்சிக் கல்லூரிகளிலும் நடந்தேறி வருவதைக் காணும் நடுநிலையாளர்கள் அறச் சீற்றம் கொண்டு குமுறாமல் இருக்க முடியாது.
"படிச்சவன் சூதும், வாதும் பண்ணினல் போவான், போவான் ஐயோவென்று போவான்'' என்று தன் புதிய கோணங்கி'யில் அன்றே சுட்டிக் காட்டினன் பாரதி! அவனது வழித் தோன்றலாகத் தங்களைப் பிரகடனப்படுத்திக் கொள்ளும் இன்றைய நவீன முனைவர்களின் (Ph.D. பட்டம் பெற்றவர்கள்) சூதுவாதுகள் சொல்லில் அடங்காதவை. குதிரை பேரம் நடக்கும் அரசியல் சீரழிவுகளைப் போல, அறிவுலகச் சீரழிவின் அசிங்கமான வெளிப்பாட்டை முனைவர்பட்ட பேர'த்தில் காண முடியும். முனைவர் பட்டப் படிப்புக்கு வழிகாட்டும் நெறியாளர்களிடம் (guides) நிலவும் நெறியற்ற போக்குகள்! மாணவர்களிடமிருந்து வழிகாட்டிகள் எதிர்பார்க்கும் உச்சபட்ச அன்பளிப்புகள் (வைரமாலையைப் பரிசாகக் கேட்கும் அளவு இந்த வெறி முற்றிப் போயிருக்கிறது!), அடித்தொண்டு ஊழியங்கள், தன் பணிகளில் மாணவர்கள் உதவ வேண்டுமென்ற எதிர்பார்ப்பு (வகுப்பெடுத்தல், தாள் திருத்தல் போன்றன), பெண்ணாக இருந்தால் பாலியல் சீண்டல்களுக்கு ஆட்படுத்தல் என்று இவற்றை அடுக்கிக் கொண்டே போக முடியும்.
வழிகாட்டிகளின் போக்குகள் இவ்வாறு இருக்க, ஆய்வேட்டைத் திருத்துபவர்களின் திருவிளையாடல்களோ.... வரம்பு மீறிய அராஜகத்தின் மோசமான வெளிப்பாடுகள். ஆய்வேட்டை மதிப்பீடு செய்வதற்காக முதல் வகுப்புப் பயணப் படியும், ஊதியமும் பெற்றுக் கொண்ட பின்னும் _ விள்ளாமல், விரியாமல் அதைக் கையகப்படுத்திக் கொள்வதற்காக ஆய்வு மாணவரிடமிருந்தே அத்தொகையைத் தண்டல்' செய்யும் சிறுமையின் உச்சம்! அதற்கும் ஆய்வு வழிகாட்டியே வழிகாட்டும் அவலம்! இவற்றுக்கெல்லாம் முத்தாய்ப்பாக முனைவர் பட்டத்திற்கான வாய்மொழித் தேர்வு வெற்றிகரமாக முடிந்தபின், அதற்காக அந்த மாணவர் மகிழ்வோடு (!?) அளிக்கும் அன்பளிப்புக்கள்! (தஞ்சாவூரென்றால் கிலோக் கணக்கில் முந்திரிப் பருப்பு... மதுரையென்றால் சுங்குடிச் சேலைகள் என்று இந்த அன்பளிப்பு, இடத்திற்கேற்ப மாறுபடும்!). தனக்கு வழங்கப்பட்டுள்ள படிச் செலவுக்கு ஏற்றதான ஒரு விடுதியில் தங்கி விட்டுப் போகாமல், ஆய்வு மாணவரின் செலவில் நட்சத்திர விடுதிகளில் தங்குதல்... உணவு மற்றும் பிறஉல்லாசக் கேளிக்கைகள்! இந்த அளவுக்குத் தரத்தைத் தாழ்த்திக் கொண்ட பிறகு, அந்தத் தேர்வாளரின் (Examiner) நம்பகத் தன்மை (Credilility) எப்படிப்பட்டதாக இருக்க முடியும் என்பதை எவராலும் எளிதில் ஊகித்து விட முடியும்!
எல்லா நெறியாளர்களும், தேர்வாளர்களும் இப்படித்தான் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது என்றபோதும் மேற்குறித்த மோசமான மாதிரி'கள் (Samples) கல்விப் பணியின் புனிதத் தன்மைக்குக் களங்கம் சேர்க்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடம் இருக்க முடியாது.
பதவி உயர்வுக்காகவும், சம்பள உயர்வுக்காகவும் கல்யாணச் செலவு' செய்து (அண்மையில் ஓர் ஆய்வாளர், இதே தொடரைப் பயன்படுத்தியதைக் கேட்க நேர்ந்தது) _ படிப்பதைத் தவிர பிற எல்லாவற்றையும் செய்து முனைவர் பட்டத்திற்காகப் போராடும்' ஆசிரியர்கள் ஒருபுறம் என்றால், ரூ.25,000/_ கொடுத்து ஆய்வுத் தலைப்பையும், அதற்குரிய முதன்மைச் சான்றுகளையும் (Binary Sources) கொடுத்து விட்டால், சுடச்சுட ரெடிமேட்' ஆய்வேட்டைத் தயாரித்துக் கொடுக்கும் பினமிக் கூட்டமும் இன்று தலையெடுக்க ஆரம்பித்திருக்கிறது.
பட்டம் பெறுவதற்காகச் செய்யப்படும் ஆய்வுகளின் நிலை இப்படி இருக்கிறதென்றால், அண்மைக்காலமாக, ஆய்வு முயற்சிகளுக்குக் கல்வி நிறுவனங்களால் ஏற்பட்டுவரும் நெருக்கடிகளும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவை. சுயநிதிக் கல்வி நிறுவனங்கள் தெருவுக்கு ஒன்றாய்ப் பெருகிவரும் இன்றைய உலகமயக்' கல்விச் சூழலில், தங்களை நிலைநிறுத்திக் கொள்ளும் போட்டியில் முனைப்பாக இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் அவற்றுக்கு ஏற்பட்டுள்ளது. நாக்' (NAAC) எனப்படும் தேசிய தரமதிப்பீட்டுக் குழுவிடம் தர நிர்ணயம்' பெற்ற நட்சத்திரக் கல்லூரிகளாகவும், ஏ+' கல்லூரிகளாகவும் தங்களைக் காட்டிக் கொள்ளவும், ஐ.எஸ்.ஓ. (ISO) எனப்படும் உலகத்தரச் சான்றினைப் பெறவும், இந்நிறுவனங்களுக்குள் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இப்போட்டி, ஆரோக்கிய மானதாகவும், நல்லதொரு கல்விச் சூழலை உருவாக்க உதவுவதாகவும் அமைந்தால் அது நல்லதுதான்! ஆனல் அப்போட்டிகளின் மோசமான சில பக்கங்கள், இலக்கிய ஆய்வுகளைக் கேலிக் கூத்தாக்கி விடுவதால் அது குறித்த விமரிசனத்தையும் இங்கே முன் வைக்க வேண்டியதாகிறது.
கல்லூரி ஆசிரியர்களிடமிருந்து தேசிய தரமதிப்பீட்டுக் குழு (NAAC) வால் எதிர்பார்க்கப்படும் முக்கியமான தகுதி, அவர்கள் தேசிய, சர்வதேசக் கருத்தரங்குகளில் பங்கேற்றுக் கட்டுரை வழங்கியிருக்க வேண்டும் என்பதுதான்! கொள்கை அளவில் சிறப்பானதாகத் தோற்றமளிக்கும் இத்தகுதி, அது நடைமுறைப்படுத்தப் படுகையில் மலினமாக்கப்பட்டுக் கொச்சையாகிப் போனதைச் சொல்லவும் நாக்கூசுகிறது. தேசிய தர நிர்ணயக் குழுவின் தகுதிப்பாட்டை எட்ட வேண்டுமென்பதற்காகச் சரியான திட்டமிடல் எதுவுமின்றித் தேசிய', சர்வதேசக் கருத்தரங்கம் என்றபெயரில் _ கல்லூரிகளிலும், பல்கலைக் கழகங்களிலும் சராசரியான தரத்துக்கும் கீழாக நடத்தப்படும் ஆய்வு அரங்கங்கள்! மிக அண்மையில் தொடங்கப்பட்டு, அனுபவ முதிர்ச்சி கூட அதிகம் இல்லாத இளம் ஆசிரியர்களைக் கொண்டிருக்கும் கல்லூரிகளிலும் கூடப் பன்னட்டுக் கருத்தரங்கம்' என்ற பதாகையின் கீழ் நடத்தப்படும் அமர்வுகள்! அவற்றில் பங்கேற்றுக் கட்டுரை வாசிக்கப் பேராளர் கட்டணமாக ரூ.300 முதல் ரூ.500 வரை வசூல் செய்து அக்கட்டுரைகளையோ, கட்டுரைச் சுருக்கங்களையோ எவ்விதமான தணிக்கைக்கும், தரக் கட்டுப்பாட்டுக்கும் உட்படுத்தாமல் நூல் வடிவமாக்கி, அந்த ஆய்வுத் தொகுப்பு நூல்', தமிழ் கூறும் நல்லுலகில் உலா வந்துவிடும் அவலம்!
ஆய்வாளரின் கடும் உழைப்பையும், தேடலையும், புதிய சிந்தனைகளையும் வெளிக்காட்டும் சில கட்டுரைகள், சிப்பிக்குள் முத்தாக _ சில வேளைகளில் அந்த நூல்களிலும் இடம் பெற்று விடுவதுண்டு; ஆயினும் அவற்றின் எண்ணிக்கை, விரல் விட்டு எண்ணக் கூடியதாக மட்டுமே இருக்கும் என்ற உண்மையை எவராலும் மறுக்க முடியாது. முதுகலை நிலையில் தரப்படும் பயிற்சிக் கட்டுரைகளைவிட மோசமான தரம் கொண்ட கட்டுரைகளே மிகுதியாக நிரம்பியுள்ள அத்தகைய ஆய்வு நூல்களைப் புரட்டும் தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ப் பேராசிரியர்களைப் பற்றி எத்தனை மோசமான மதிப்பீடுகளை மனதில் கொள்வார்கள் என்பதை எளிதாக அனுமானித்து விடலாம்!
எந்தக் குப்பையாக இருந்தாலும், அச்சில் வெளியிடப்பட்டு விட்டால் அந்தக் கட்டுரைகளின் எண்ணிக்கையை வைத்து ஆசிரியரின் தகுதி! எத்தனை கருத்தரங்கங்கள் நடைபெற்றன என்பதை வைத்துக் குறிப்பிட்ட கல்வி நிறுவனத்தின் தகுதி! ஆனல்.... உண்மையான தகுதி' என்பது, எங்கோ ஒளிந்து கொண்டு கண்ணாமூச்சியாடிக் கொண்டிருக்கிறது என்பது மனச்சாட்சிக்குத் தெரிந்த போதும், அதை வெளிப்படையாக ஏற்றுக் கொள்ள மறுக்கும் இலக்கியப் போலிகளின் கையில் இன்றைய இலக்கியக் கல்வி சிக்கியுள்ள சோகத்தை விண்டுரைக்க வார்த்தையில்லை.
நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்று முழங்கிய நக்கீரனை மேன்மைப்படுத்திப் பழம்புராணம் பாடிக் கொண்டிருப்பதும்.... சங்கப் பலகையின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காகத் திருவள்ளுவரும் கூடப் பாடுபட வேண்டியிருந்ததை விளக்கிக் கொண்டிருப்பதும், இராமாயண அரங்கேற்றம் எதிர்கொள்ள வேண்டியிருந்த கேள்விக் கணைகளைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருப்பதும் மட்டுமே இன்றைய தமிழ் இலக்கிய ஆசிரியர்களின் பணி இல்லை. உள்ளதன் நுணுக்க'மாய்த் தமிழாய்வைக் கொண்டு செல்வதும், அதற்கான ஊக்க விதைகளை இளம் உள்ளங்களில் தூவுவதுமே வருங்கால இலக்கிய ஆய்வுகள் மேலும் கேலிக்கூத்தாகாமல் தடுக்க உதவும்.
அதனை நோக்கிய முன்னகர்தலின் முதல் கட்டம்..., தன் நெஞ்சறிவது பொய்'யாகி விடாமல் உண்மையான தகுதியை இலக்கிய ஆசிரியர்கள் வளர்த்தெடுப்பதேயாகும். மெய்யான இலக்கிய ஆர்வலர்களின் எதிர்பார்ப்பும் அதை நோக்கியே குவிந்திருக்கிறது. நன்றி :வடக்குவாசல்,ஜூலை,08- இணைப்பு-http://www.vadakkuvaasal.com/

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....