துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

6.9.13

இந்தியாவில் ஒரு நெடிய பயணம்-6-ஆகாகான் மாளிகை

தில்லியிலிருந்து கோவை வரை மத்திய மற்றும் மேற்கிந்தியா வழி இந்தியாவுக்குள் ஒரு நெடிய சாலைப் பயணத்தை அண்மையில் மேற்கொண்டபோது பூனாவை நெருங்கும் நேரத்தில் ஒரு கைபேசி அழைப்பு. பூனாவில் எங்களுக்குத் தங்குமிடத்தை ஏற்பாடு செய்திருந்த நண்பரிடமிருந்துதான்! ’’பூனாவுக்குள் நுழையும் முன் நீங்கள் தவற விடக்கூடாத இடம் ஒன்று இருக்கிறது;அதை முதலில் பார்த்து முடித்து விட்டு வாருங்கள்’’என்றார்.

அவர் குறிப்பிட்டது, மகாத்மா காந்தியின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஓரிடத்தைப் பெற்றிருக்கும் ஆகாகான் மாளிகையைத்தான். நீண்ட நேரப்பயணக்களைப்பு, மதிய வேளையின் அனல் தாக்கம் இவற்றை மீறி அந்த நினைவிடத்தில் கழித்த சில பொழுதுகள் என்றும்மறக்கவியலாத சிலிர்ப்பைத் தருபவை.

ஆகாகான் மாளிகை
தற்போது அரசின் தொல்பொருள் துறையினரால் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடமாகப் பராமரிக்கப்பட்டு வரும் ஆகாகான் மாளிகை 1892ஆம் ஆண்டு சுல்தான் முகம்மது ஷா – மூன்றாம் ஆகாகானால் கட்டப்பட்டது. பூனாவைச் சுற்றியுள்ள பல பகுதிகள் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருந்தபோது இதை ஒரு தர்மசாலையாகவே பயன்படுத்தியிருக்கிறார் சுல்தான் .

வெள்ளையனே வெளியேறு போராட்டத்துக்குப்பிறகு -ஆகஸ்ட்9 / 1942 முதல்- மே/ 
6 / 1944 வரை காந்தி, கஸ்தூரிபா, மற்றும் காந்தியின் செயலர் மகாதேவ தேசாய் ஆகிய மூவரும் சிறை வைக்கப்பட்டிருந்தது இந்த மாளிகையின் அறைகளிலேதான். உடல் நலமில்லாதபோது கவிக்குயில் சரோஜினி நாயுடு தங்கியிருந்த அறையும் அங்கேதான்.

தற்போது காந்தி நினைவு நிதியால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்தப் பகுதியில் காந்தியோடு தொடர்புடைய ஒரு சில அறைகள் மட்டுமே பார்வையாளர்களுக்குத் திறந்து வைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் காந்தி, கஸ்தூரிபா, மகாதேவதேசாய் ஆகியோரின் உருவச் சிலைகளும் இந்திய விடுதலைப் போராட்டத்தைக் குறிக்கும் ஓவியங்கள், புகைப்படங்கள் ஆகியவைகளும் உள்ளன.


கஸ்தூரிபாவும், மகாதேவ தேசாயும் காலமானபின் அவர்களின் சமாதிகள் அமைந்திருப்பது, இந்த வளாகத்திலேதான் என்பது,இந்நினைவிடத்தின் முக்கியத்துவத்தைக்கூட்டும் மற்றொரு அம்சம்.மாளிகையின் பின்புறத் தோட்டத்தில் இருக்கும் அந்த இரண்டு சமாதிகளுக்கும் செல்லும் பாதையை காந்தி தன் கையாலேயே சீரமைத்து ஒழுங்குபடுத்தியிருக்கிறார் என்னும் குறிப்பு அங்கே காணப்படுகிறது.

கஸ்தூரிபா,மகாதேவதேசாய் சமாதிகள் 
வளாகத்தில் இருக்கும் - கஸ்தூரிபா காந்தி காலமான அறை மட்டும் மூடியே வைக்கப்பட்டிருக்கிறது. பக்கத்து அறையிலிருக்கும் கண்ணாடி ஜன்னல் வழியாக மட்டுமே அதைப் பார்க்க முடியும்.  அங்கே தென்படும் காந்தியின் பாதக்குறடுகள், ராட்டை மற்றும் அவரது அஸ்தியின் ஒரு பகுதி ஆகியவற்றோடு காந்தியின் மடியில் கஸ்தூரிபா தலைசாய்த்துப் படுத்திருக்கும் ஆளுயர ஓவியம் மனதை நெகிழ வைப்பது....தில்லியில் இருக்கும், காந்தி கொலைப்பட்ட தீஸ் ஜனவரி மார்க் பிர்லா மாளிகையில் கழித்த நேரங்களில் பெற்ற அனுபவத்துக்கு நிகரான சிலிர்ப்பை ஊட்டிய ஆகாகான் மாளிகை என் நினைவுச் சேமிப்பில் என்றும் நிரந்தரமாய்ச் சுவடு பதித்திருக்கும்.


கடையனுக்கும் கடைத்தேற்றம்- unto the last 

கஸ்தூரிபா

மகாதேவ தேசாய் உருவங்கள்

[பயணம் தொடரும்]

நன்றி;

ஆகாகான் மாளிகையில் அரை மணி நேரம்

என்ற தலைப்பில் இப்பதிவின் செய்திகளையும் படங்களையும் வெளியிட்ட காந்தி இன்று இணைய தளத்துக்கு....

இந்தியாவில் ஒரு நெடிய பயணம்-3
இந்தியாவில் ஒரு நெடிய பயணம்-2
இந்தியாவில் ஒரு நெடிய பயணம்-1


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....