குவாலியர் நகர விஜயத்தை அரண்மனையோடு முடித்துக்கொண்டு அங்கிருந்து சிறிது தொலைவிலிருந்த சிவபுரி தேசிய வனவிலங்குப் பூங்காவை நோக்கிய எங்கள் பயணத்தை அன்று மதியமே [26/5] தொடங்கினோம்.
சிவபுரி சென்று சேர்ந்ததும் விருந்தினர் விடுதியில் பொருட்களை வைத்து விட்டு அங்குள்ள வனக்காவலர் உதவியுடன் காரிலேயே காட்டுக்குள் ஒரு கான் உலாவுக்குச் சென்றோம். மருமகன் வனத்துறை சார்ந்தவர் என்பதால் கண்ணில் பட்ட பறவைகளையெல்லாம் குழந்தைகளுக்கு இனம் காட்டிக் கொண்டே வந்தார்; பறவைகளைச் சுட்டுவதில் [bird watching]பழகிப்போய் ஆர்வம் கொண்டிருக்கும் என் பேத்தியும் சளைக்காமல் அவருக்குச் சரிசமமாகப் பல வகையான பறவைகளைமிக நுணுக்கமாக இனம் காட்டிக் கொண்டே வந்தாள்.
ராஜஸ்தானத்தை ஒட்டியிருந்த மத்தியப்பிரதேசப்பகுதி என்பதால் குவாலியரில் காணப்பட்ட மயில்களை இங்கும் காண முடிந்தது.கோடைக் காலத்தில் வடநாட்டுப் பகுதிகளில் சூரிய அஸ்தமனம் தாமதமாவதால் கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கும் மேல் - மாலை ஆறே முக்கால் மணி வரை எங்களால் காட்டுக்குள் சுற்றிவர முடிந்தது. வரையாடுகள், துள்ளி ஓடும் புள்ளிமான்கள், காட்டுப்பன்றிகள்,கீரிப்பிள்ளைகள், வவ்வால்கள், லங்கூர் இனக்குரங்குகள் எனப்பல வகையான விலங்குகளும் பறவை இனங்களும் மரங்களில் தொங்கும் வவ்வால்களின் கூட்டத்தோடு எங்கள் கண்ணில் பட்டன.
சிந்தியா வம்சத்து அரசர்கள் விலங்குகளை வேட்டையாட வசதியாக உயர்ந்த மதில்களின் மீது கதவுகளோடு கூடிய பதுங்கறைகளை அமைத்துப் பாதுகாப்போடு வேட்டையை நடத்தியிருக்கிறார்கள்; அந்த உயரமான ஜன்னல்களிலிருந்துதான் அவர்களது துப்பாக்கி வேட்டை தொடர்ந்திருக்கிறது.
சிவபுரிக் காடுகள் மட்டுமன்றி சிவபுரி என்னும் சிற்றூருமே வறட்சியின் பிடியில் சிக்கித் தவிப்பதால் மிகப்பெரிய செயற்கை ஏரி ஒன்று -சாக்யா சாகர்,மாதவ் சாகர்- நீர்ப்பிடிப்புப் பகுதியாகவே அந்தக்காடுகளுக்கு நடுவே உருவாக்கப்பட்டிருக்கிறது; கானுயிர்களுக்கு மட்டுமல்லாமல் சிவபுரி மக்களுக்கான குடிநீரும் அங்கிருந்தே கிடைக்கிறது.
இரு நீக்ரோ வாலிபர்கள் கையில் ஒரு உருண்டையை ஏந்தியபடி காட்சியளிக்கும் சிற்பங்களோடு கூடிய ஏரியின் முன் மண்டபம் மிக விசாலமானது; ஏரியின் அழகை ரசிக்க வசதியான ஆசனங்களோடு கூடியது. அதற்கு மிக அண்மையிலேயே அதை ஒட்டியதாகவே எங்கள் தங்கும் விடுதியும் அமைந்திருந்ததால் இரவு படரும் வரை - மறுநாள் காலை விடியலிலும் கூட- ஏரியின் வனப்பை...காட்டின் அழகைக்கண்குளிரக்காணும் வாய்ப்பு எங்களுக்குக்கிட்டியது.
ஒரு காலத்தில் வேட்டையாடுவதற்காகவே உருவாக்கப்பட்ட அந்தப் பகுதி இன்று கானுயிர்களின் பாதுகாப்புக்கு உரியதாக - காட்டுயிர்களின் அழிவைத் தடுப்பதற்காகான வனப்பூங்காவாக மாறிப்போயிருக்கும் விந்தையை அசை போட்டுக் கொண்டே மறுநாள் காலை சிவபுரியிலிருந்து உஜ்ஜயினி நோக்கிய எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.
புதருக்குள் ஒளிந்து மாயம் காட்டும் புள்ளிமான்.... |
மரங்களில் தொங்கும் வவ்வால்கள் |
கானுலாவின்போது காட்டின் நடுமையத்திலிருந்த கம்பீரமான வடிவமைப்போடு கூடிய ஒரு கட்டிடம் எங்கள் கருத்தை ஈர்த்தது; ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் விஜயத்தை ஒட்டிக் கட்டப்பட்டது அந்த மாளிகை ; புலி வேட்டைக்காக அங்கே வந்து கொண்டிருந்த அவர், அங்கு வந்து சேர்வதற்கு முன்பே அவரது வேட்டை ஆர்வத்துக்கு இரையாக ஒரு புலி சிக்கி விட்டதால் அங்கு வராமலேயே -அந்த மாளிகையில் தங்காமலேயே சென்று விட்டார் என்பதை அறிந்தபோது சுவாரசியம் இன்னும் கூடச் சற்றுக் கூடிப்போனது. அந்த நினைவின் எச்சமாக - அரிய கட்டிடக்கலையின் ஒரு சாட்சியாக ஜார்ஜ் கேஸில் எனப்படும் அந்த மாளிகை வன அலுவல்களுக்குப் பயன்படும் ஒரு கட்டிடமாகக் காட்டுக்கு நடுவே நின்று கொண்டிருக்கிறது.
’’ஜார்ஜ் கேஸில்’’ |
சிந்தியா வம்சத்து அரசர்கள் விலங்குகளை வேட்டையாட வசதியாக உயர்ந்த மதில்களின் மீது கதவுகளோடு கூடிய பதுங்கறைகளை அமைத்துப் பாதுகாப்போடு வேட்டையை நடத்தியிருக்கிறார்கள்; அந்த உயரமான ஜன்னல்களிலிருந்துதான் அவர்களது துப்பாக்கி வேட்டை தொடர்ந்திருக்கிறது.
வேட்டைக்குக் குறி வைக்கும் பதுங்கறைகள் |
இரு நீக்ரோ வாலிபர்கள் கையில் ஒரு உருண்டையை ஏந்தியபடி காட்சியளிக்கும் சிற்பங்களோடு கூடிய ஏரியின் முன் மண்டபம் மிக விசாலமானது; ஏரியின் அழகை ரசிக்க வசதியான ஆசனங்களோடு கூடியது. அதற்கு மிக அண்மையிலேயே அதை ஒட்டியதாகவே எங்கள் தங்கும் விடுதியும் அமைந்திருந்ததால் இரவு படரும் வரை - மறுநாள் காலை விடியலிலும் கூட- ஏரியின் வனப்பை...காட்டின் அழகைக்கண்குளிரக்காணும் வாய்ப்பு எங்களுக்குக்கிட்டியது.
ஒரு காலத்தில் வேட்டையாடுவதற்காகவே உருவாக்கப்பட்ட அந்தப் பகுதி இன்று கானுயிர்களின் பாதுகாப்புக்கு உரியதாக - காட்டுயிர்களின் அழிவைத் தடுப்பதற்காகான வனப்பூங்காவாக மாறிப்போயிருக்கும் விந்தையை அசை போட்டுக் கொண்டே மறுநாள் காலை சிவபுரியிலிருந்து உஜ்ஜயினி நோக்கிய எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.
[பயணம் தொடரும்..]
கருத்துகள் இல்லை :
கருத்துரையிடுக