துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

30.5.11

தில்லியிலிருந்து ’தினமணி..’

’தினமணி’ நாளிதழ் ஜூன் மாதத்திலிருந்து புதுதில்லிப் பதிப்பாகவும் வெளிவரவிருக்கிறது.
தில்லி வாழ் தமிழர்கள் அனைவரும் வரவேற்றுப் போற்றவேண்டிய நற்செய்தி இது.
ஜூன் 3ஆம் தேதி நிகழவிருக்கும் வெளியீட்டு விழாவில்
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு குரேஷி அவர்கள் முதல் இதழை வெளியிட்டுச் சிறப்பிக்கவிருக்கிறார்.


பி.கு;
தில்லிப் பதிப்பை ஒட்டி வெளிவரவிருக்கும் தினமணி-சிறப்பு மலரில்
‘வைகையிலிருந்து யமுனைக்கு’என்ற என் கட்டுரையும் இடம் பெற்றிருக்கிறது.
மலர் வெளியான பின் என் வலைத் தளத்திலும் அது வெளியாகும்.

18.5.11

’’குழவி இறப்பினும்..’’



சங்கச் சமூகம்,போர் முதன்மைப்பட்ட சமூகம்.
போரில் புறப் புண் பட்டதற்கு நாணி வடக்கிருந்து(உண்ணாநோன்பு)உயிர் விடும் சமூகம்.

16.5.11

’செல்வத்தைத் தேய்க்கும் படை..’

அறிவை அறிவால் அறிந்த அருளாளர் ,
தவத்திரு வேதாத்திரி மகரிஷி அவர்கள் ,
செயல் விளைவு தத்துவம் பற்றியும்
ஒரு நாளும் பிழைக்காத இறை நீதி பற்றியும் எழுதியுள்ள அற்புதமான இரு கவிதைகள் இன்றைய காலச் சூழலுக்கு மிகப் பொருத்தமாகப் தோன்றுவதால்..அவை, இங்கே பகிர்வுக்கு..
தீர்க்க தரிசனம் என்பது இதுதானோ...
.
’’தப்புக் கணக்கிட்டுத் தான் ஒன்றை எதிர்பார்த்தால்
  ஒப்புமோ இறை நீதி..ஒழுங்கமைப்பிற்கு ஒத்தபடி
  அப்போதைக்கப்போது அளிக்கும் சரி விளைவு
  எப்போதும் கவலையுற்று இடர்ப்படுவர் இதை உணரார்’’


 ‘’இயற்கையென்னும் போராட்டக்காரனுக்கு என்றும்
    எல்லாச் சீவன்களுமே எடுத்தாடும் காய்கள்
    பெயர்த்து இடம் மாற்றி வைப்பான் பிய்த்தெறிவான் அருள்வான்
    பிழையென்று தீர்ப்பளிக்கப் பிறந்தோர் யார் பேருலகில்’’
    -ஞானக் களஞ்சியம்
பி.கு;
தமிழகத்தின் நிலையை உள்ளார்ந்து உணர்ந்து - தொடர்ந்து அவதானித்து வருபவர்கள் மட்டுமே இதன் உட் பொருள் எத்துணை சாரம் பொதிந்தது என்பதை உணர முடியும்.
அடுத்து வருவோரும் , ஒவ்வோர் அடியையும் எச்சரிக்கையாக வைக்கத் தவறினால்...
இறைநீதி , மக்கள் சக்தி வடிவில் தன் தீர்ப்பைத் தரத் தயங்காது...
‘’அல்லல் பட்டு ஆற்றாது அழுத கண்ணீரன்றே
   செல்வத்தைத் தேய்க்கும் படை’
என்பது வள்ளுவன் வாக்கல்லவா...



14.5.11

’விலை போட்டு வாங்கவா முடியும்..?’


.
’விலை போட்டு வாங்கவா முடியும்..?’என்று கல்வியைப் பற்றிப் பாடினார் பாரதிதாசன்.
தங்கள் வாக்குகளையும் அப்படி ஒன்றும் சாமானியமாக விலை போட்டு வாங்கி விட முடியாது என்பதை 
விரலின் சிறு துளி மையால் மெய்ப்பித்து விட்டுக் கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்களாக...உலக அரங்கில் தலை நிமிர்ந்து நிற்கும் தமிழ் மக்களுக்கு வாழ்த்துக்கள் !!


குற்றம் செய்யாத கோவலனைக் கொன்ற தவறுக்காகத் தன் உயிரையே விலையாய்த் தந்தான் பாண்டியன் நெடுஞ்செழியன்.
‘’வல்வினை வளைத்த கோலை
மன்னவன் செல்லுயிர் நிமிர்த்திச் செங்கோலாக்கியது’’
என்பார் இளங்கோ.
17600 இலட்சம் கோடி ஊழலால் தமிழன் என்று சொல்லிக் கொள்ளவே கூசிக் குறுகிக் கொண்டிருந்த 
கேவலத்தை..
சிறுமையை...
வலுவில் நாடிவந்த பணக் கற்றைகளை மறுதலித்ததன் வழி மாற்றித் தமிழ் இனத்தின் மீதே படிந்து போன தீராத களங்கத்தைத் துடைத்தெறிந்திருக்கிறார்கள் தமிழ் மக்கள்.


 தாய் வரம் கேட்டுத் தந்தை அதை ஏற்ற நிலையிலும் 
இராமனுக்கு வர வேண்டிய அரசப் பதவி தனக்கு வேண்டாம் ..
அது ,‘’தீவினையால் வந்த செல்வம்’’
என்று புறங்கையால் விலக்கித் தள்ளியதால் உயர்ந்தான் பரதன்.
‘’ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ’’
என்று குகன் அவனைப் பாராட்டுவது அதன் பொருட்டே.
இன்று எம் தமிழரும்...தீவினையால் வந்த செல்வத்தை - 
ஓட்டுப் போடுவதற்காகக் கொடுக்க வந்த கையூட்டுப் பணத்தைப் புறந்தள்ளிக் குன்றென உயர்ந்து நிற்பதைக் காணுகையில் நெஞ்சு விம்மிதமடைகிறது.


நேரிய முறையில் செயல்பட்ட தேர்தல் ஆணையமும்,
நெஞ்சு நிமிர்த்தி ‘எம் வாக்கு விற்பனைக்கல்ல’என முழங்கிய தமிழகச் சாமானியர்களுமே நம் முதல் வணக்கத்திற்குரியவர்கள்.

ஊழலும் பணநாயகமும் வெகுநாள் விலை போகாது என்பதை 
வருங்கால ஆட்சியாளர்களாவது உணர்ந்து பாடம் பெறுவார்களா...?
பாடம் பெறாவிட்டால் தக்க பாடத்தைப் புகட்ட ....இருக்கவே இருக்கிறது அடுத்த வாக்குச் சீட்டு!
அவ்வாறு நிகழாமல்..
கடந்த காலத் தவறுகளிலிருந்து தான் பெற்ற படிப்பினைகள் வழியே..
மாறி வரும் மக்களின் அரசியல்சமூக விழிப்புணர்வுப் போக்குகளை உணர்ந்தவராய்...,
தான் குடிமக்களின் ஓர் ஊழியை மட்டுமே என்ற புரிதலோடு....
தன் புதிய ஆட்சியை நல்லாட்சியாக செல்வி ஜெயலலிதா அமைத்திட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு,விழைவு!
அந்தக் கனவு பலித்திடட்டும்!
வாழ்த்துக்கள்!


14/5/11 தேதியிட்ட தினமணி தலையங்கத்திலிருந்து சில பகுதிகள்...

தமிழனை நினைத்தால் பெருமிதமாக இருக்கிறது. தமிழன் இந்தியாவையும், மக்களாட்சியையும் காப்பாற்றி இருக்கிறான். அதற்காக அவனுக்குத் தலைவணங்க வேண்டும் போலிருக்கிறது. நடந்து முடிந்த தேர்தலில், நாங்கள் முறையாகப் பணம் விநியோகம் செய்திருப்பதால் வெற்றிபெற்று விடுவோம் என்றும், எங்களது இலவசத் திட்டங்கள் சென்றடையாத வீடுகளே இல்லை அதனால் வெற்றி பெற்று விடுவோம் என்றும் எத்தனை திமிராகத் திமுகவினர் பேசினார்கள்.
யோசித்துப் பாருங்கள். இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், திருமங்கலம் ஃபார்முலா, இந்தியாவிலுள்ள எல்லா மாநிலங்களிலும் அந்தந்த ஆளும் கட்சியினராலோ, எதிர்க்கட்சியினராலோ, அரங்கேற்றப்பட்டிருக்காதா? மக்களின் நியாயமான உணர்வுகள் தேர்தலில் பிரதிபலிக்காமல் போனால், வாக்குகள் விலைக்கு வாங்கப்படும் அவலம் இந்தியா முழுவதும் அரங்கேறினால், அதன் தொடர்விளைவு அராஜகத்திலும், தீவிரவாதத்திலும் அல்லவா முடிந்திருக்கும்? இந்தியா தமிழனுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறதா, இல்லையா?

முன்னாள் அமைச்சர் ஒருவரின் தொகுதியில் ஏறத்தாழ 10,000 வாக்காளர்களுக்கு, அதுவும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை வாக்காளர்களுக்கு, டோக்கன் வழங்கப்பட்டு மாவட்டத் தலைநகரிலுள்ள ஷோரூமிலிருந்து டிவிஎஸ் 50 இலவசமாக எடுத்துச் செல்லும்படி பணித்தார்கள். எட்டே எட்டுபேர் மட்டும்தான், டிவிஎஸ் 50 எடுத்துச் சென்றார்கள். ஏனையோர் அந்த டோக்கனைக் கிழித்துப் போட்டுவிட்டு வாக்களித்திருக்கிறார்கள். பல இடங்களில் நரிக்குறவர்களின் காலனியில் பண விநியோகம் செய்தவர்களை விரட்டி அடித்திருக்கிறார்கள்.
பட்டணத்தில் படித்தவர்கள் காரில் வந்து இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை வெட்கமில்லாமல் கேட்டுச் செல்லும்போது, பல கிராமத்து ஏழைத் தமிழர்கள் தங்களை விலைபேச வந்தவர்களை விரட்டி அடித்திருப்பதைப் பற்றிக் கேள்விப்படும்போது மேனி சிலிர்க்கிறது. இனிமேல், அரசியல்வாதிகள் பணம் கொடுத்து வாக்குகளைப் பெற முயற்சிக்க மாட்டார்கள். பண விநியோகத்தால் மட்டுமே வெற்றி உறுதி செய்யப்படாது என்பதால், தங்கள் கைப்பணத்தை விரயமாக்கத் தயாராக மாட்டார்கள்.
பணத்துக்கு ஆசைப்பட்டும், இலவசங்களில் மயங்கியும் தனது வாக்குகளை விலைபேசத் தயாராக இல்லை என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்த்தி விட்டிருக்கிறான் தன்மானத் தமிழன். ஆட்சியாளர்கள் என்னதான் இலவசங்களை அள்ளிக் கொடுத்தாலும், அடிப்படை நிர்வாகம் இல்லாமல் போனால், மின் தட்டுப்பாடு, விலைவாசி உயர்வு போன்ற மக்கள் பிரச்னைகளைத் தீர்க்காமல் போனால், வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தாவிட்டால், அந்த ஆட்சியைத் தூக்கி எறியத் தயங்க மாட்டோம் என்பதை அழுத்தம்திருத்தமாகத் தெளிவாக்கி இருக்கிறார்கள் தமிழக வாக்காளப் பெருமக்கள். என்னவொரு அரசியல் முதிர்ச்சி, பெருமிதமாக இருக்கிறது!
நன்றி; தினமணி.காம்
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Editorial&artid=417954&SectionID=132&MainSectionID=132&SEO=&Title=

காண்க;
வழிகாட்டும் மதுரை..


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....