துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

29.8.12

’’எம் குன்றும் பிறர் கொளார்...’’

’’என்னோடு நட்புக்கதை பேசி உறவாடிய அந்தக்குன்றுகளும் இப்போது இல்லை......பிறந்த மண்ணே அந்நியமாகிப் போய்விட..பிழைப்புக்கான இடமாற்ற அலைவுகளுடன் நான்...’’
மதுரையிலுள்ள பாத்திமாக்கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராக நான் பணியில் சேர்ந்த ஆண்டு 1970. 

முதல் இரண்டு ஆண்டுகள்[’70-’72]கல்லூரி விடுதியில் தங்கியிருந்ததால் எப்போது விடுமுறை வந்தாலும்,நீண்ட வார விடுமுறை குறுக்கிட்டாலும் சொந்த ஊரான காரைக்குடியை  நோக்கிய என் இனிய பேருந்துப்பயணம் தொடங்கிவிடும்.விமானத்தில் செல்கிற வாய்ப்புக்களும் கூட இன்று கிடைத்து விட்டாலும் அன்று மேற்கொண்டிருந்த அந்த மதுரை-காரைக்குடி பஸ் பயணத்துக்கு ஈடாக எதுவும் என் நெஞ்சில் பதிந்திருக்கவில்லை.

பேருந்தில் ஏறி அது நகரத் தொடங்கியதுமே கண்ணில் நீளமாக விரியும் யானை மலையின் அற்புத அழகும்,அதன் மடியில் பசுமை போர்த்திக்கொண்டு கிடக்கும் வேளாண் கல்லூரியும்[பின்புதான் அது பல்கலைக்கழகமாயிற்று],தொடர்ந்து நீண்டு கொண்டு செல்லும் பாதையில் இருக்கும் கீழவளவுக் கற்குன்றுகளும் தென்படத் தொடங்கியதுமே ஊருக்குச் செல்லும் பரவசத்தில் மனம் திளைக்கத் தொடங்கி விடும்.
.
பசுமையான தாவரங்கள் ஏதுமில்லாத...உயிரற்ற... வறண்ட மொட்டைப்பாறைகள்தானே அவை என்று புறமொதுக்க முடியாதபடிஎன்னோடும் என் உணர்வுகளோடும் அவை கதை பேசிக் கொண்டிருந்த இனிய நாட்கள் அவை...
அந்தக் கல்மலைகளில் பலவும் விளம்பரங்களுக்கும் பயன்படுவதுண்டு.மதுரைக்கு நெருக்கமான மலைகள் என்றால் மதுரையிலுள்ள கடைகள்...காரைக்குடியை நெருங்கும்போது அங்கே உள்ள கடைகளின் விளம்பரங்கள். ஊருக்கு எத்தனை தொலைவில் இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்ள மைல் கற்களை விடவும் மிகச் சிறந்த   இடுகுறிகளாக-indicatorகளாக அவை எனக்கு இருந்து கொண்டிருந்தன.அதிலும் மிகக் குறிப்பாக என் நினைவில் பதிந்திருப்பது ’பேக்கரி டிசோட்டா’என்று கொட்டை எழுத்துக்களால் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கும் ஒரு சிறிய மலைக்குன்று.

காரைக்குடியில் இன்றும் கூடப்புகழ் பெற்று விளங்கும் அந்த பேக்கரி தன் ‘மக்ரூன்’பிஸ்கட் தயாரிப்புக்கு மிகவும் புகழ் பெற்றது[மக்ரூன் என்பது முந்திரிப்பருப்பும் சீனியும் மட்டும் கலந்து செயப்படும் பொரபொரப்பான ஓர் இனிப்பு].பொதுவாக தூத்துக்குடி மக்ரூன்களையே மிகவும் சிறப்பாகச் சொல்லுவதுண்டு.ஆனால் தூத்துக்குடி மக்ரூன் சாப்பிட்டுப் பார்த்த பிறகும் கூட என் ஓட்டு எங்கள் ஊர் டிசோட்டா மக்ரூனுக்குத்தான்.என்னைப்பார்க்க விடுதிக்கு வரும்போதெல்லாம் அதை வாங்கிக் கொண்டு வர என் அம்மா தவறியதே இல்லை.பேக்கரி டிசோட்டா விளம்பரம் வரைந்திருக்கும் மலை வந்து விட்டால் போதும் ஊருக்கே வந்து சேர்ந்து விட்டதைப்போல மனம் உல்லாசத்தில் குதூகலிக்கத் தொடங்கி விடும்.

வருடங்கள் செல்லச்செல்ல வாழ்க்கையின் இடப்பெயர்வு முற்றிலுமாய் மதுரையை மையம் கொண்டதாக அமைந்து விட்ட பிறகு, என் மதுரை-காரைக்குடி பஸ் பயணங்களும்  குறையத் தொடங்கின.எப்போதாவது நண்பர்களைக் காணவோ பிள்ளையார்பட்டிக் கோயிலுக்குச் செல்லவோ மட்டுமே அந்தப் பாதையில் பயணம் செய்கையில் அந்தக் குன்றுகளும் கூடப் படிப்படியாக வீழ்ச்சியடையத் தொடங்கியிருந்ததைப்பார்க்கையில் அந்த இடத்தின் வெறுமைக் கோலம் உள்ளத்தைக் குடைந்தெடுக்கத் தொடங்கியது....

‘80களில் மிக இலேசாக ஆரம்பித்த அந்த வீழ்ச்சி ‘90,2000 எனக் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து பெருகி இன்று கோடிக்கணக்கான கிரானைட் கொள்ளையாக விசுவரூபமெடுத்து வளர்ந்திருக்கிறது;அது குறித்த செய்திகள்,படங்கள் இவற்றையெல்லாம் இப்போது பார்க்கும்போது மனித மனங்களின் பேராசை வெறி ஒரு புறம் அருவருப்பூட்டினாலும் உயிரில்லாததாகக் கருதப்படும் அந்தக் கற்பாறைகளோடு பல காலம் பிணைந்து கிடந்த என் கற்பனைகளும் கனவுகளும் கலைந்து சிதைந்து கிடக்கும் அவலமே பேரதிர்ச்சியோடு என் முகத்தில் அறைகிறது.

குழந்தைகளைக் கூறுபோடுவதைப்போலக் குன்றுகளைக் கூறு போட்டு அடுக்கி அந்த இடத்தையே வெட்டவெளிப்பொட்டலாக சூனியமாகச் செய்துவிட்ட அவலத்தில் நெஞ்சம் கையற்றுப் புலம்புகிறது.



அவ்வாறான தருணங்களில் ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவின்’என்னும் பாரிமகளிரின் புறப்பாடல் வரிகளே மனதுக்குள் ஓடுகின்றன...

’’அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவின்
எந்தையும் உடையேம் ; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவின்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே’’.
கடந்த மாதத்து நிலா நாளில் எங்கள் தந்தையும் உடனிருந்தார்;எங்கள் குன்றும் பிறர் வசமாகவில்லை...ஆனால்..இந்த மாதத்து முழுநிலாப் பொழுதிலோ நாங்கள் தந்தையையும் இழந்தோம்...எங்கள் குன்றும் எங்கள் வசமில்லை...என்ற அந்தப்பாடலைப்போலவே...
என்னோடு நட்புக்கதை பேசி உறவாடிய அந்தக்குன்றுகளும் இப்போது இல்லை...
அவற்றைத் தாண்டி யாரைப்பார்க்க நான் ஆவலுடன் விரைவேனோ அந்தத் தாயும் நாங்கள் வாழ்ந்த வீடும் இப்போது இல்லை..
பிறந்த மண்ணே அந்நியமாகிப் போய்விட..பிழைப்புக்கான இடமாற்ற அலைவுகளுடன் நான்...


27.8.12

ஒரு கடிதம்,ஒரு கதை

ஒரு முன் குறிப்பு;
1979 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத் தொடக்கம்.அப்போது கல்லூரிப்பணியில் இருந்த நான் ஒரு பணியிடைப்பயிற்சிக்காக மதுரையிலிருந்து கோவைக்குச் சென்றிருந்தேன்.
கைபேசிகளே இல்லாத காலகட்டம்;
சாதாரணத் தொலைபேசிகளும் கூடப் புழக்கத்தில் பரவலாக இல்லை.
அப்பொழுதெல்லாம் எங்கள் செய்தி ஊடகம்,அவசரத்துக்குத் தந்தி,அவசரமில்லையென்றால் கடிதம் அவ்வளவே...
பயிற்சியின் நடுவே எனக்கொரு தந்தி வந்திருப்பதாக செய்தி கிடைத்தது.
அம்மாதான்...!
 ''surprise.kalki short story competition''என்று அதில் காணப்பட்ட வாசகங்கள் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தின.’கல்கி’வார இதழ் நடத்திய [இப்போதும் கூடத் தொடர்ந்து நடத்தி வரும்] அமரர்கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டிக்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு கதை அனுப்பியிருந்த நான் அது பற்றி அடியோடு மறந்து விட்டிருந்தேன்.இந்தத் தந்தி அது பற்றியது என்பது புரிந்தாலும் மேல்விவரங்கள் தெரியாத கிளர்ச்சி..தவிப்பு..

10 வயது முதல் கையில் எழுதுகோலைப் பிடித்தபடி ’கதை எழுதப்போறேன்’என்று பொழுதெல்லாம் வீட்டு மூலையில் ஒதுங்கிக் கொண்டு எதையோ கிறுக்கித் தள்ளியபடி  அதையே என் உயிரின் ஆசையாய் வளர்த்து வந்த எனக்கு இந்தக் கதை பிரசுரமாகப்போகிறது போலிருக்கிறது என்ற நம்பிக்கை,அந்தத் தந்தியிலிருந்து கிடைத்தாலும் சரியான தகவல் தெரியாததில் -தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பதில்-இந்த நேரம் பார்த்து மதுரையிலிருந்து தள்ளி இருக்க வேண்டிபடி நேர்ந்ததில் சலிப்பே மேலோங்கியது...பல கதைகளை எழுதிப் பல இதழ்களுக்கு அவ்வப்போது அனுப்பியிருந்தபோதும் அதுவரை எந்தப்படைப்பையுமே அச்சில் கண்டிராத நான் அந்தத் தருணத்தில் கொண்ட பரபரப்பு இப்போதும் என் நரம்புகளுக்குள் தங்கியிருக்கிறது.

தந்தியின் புதிர் மறுநாள் அம்மா எழுதிய இன்லாண்ட் கடிதத்தால் விடுபட்டபோது ஆனந்த அதிர்ச்சியின் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன் நான்...ஆம்..! அந்தச் சிறுகதை பிரசுரத்துக்கு மட்டும் தேர்வாகி இருக்கவில்லை.’அறிமுக எழுத்தாளர்’என்னும் முத்திரையோடு முதல் பரிசுக்கும் தேர்வாகி இருந்தது[அகிலன் உள்ளிட்ட மூவர் சார்ந்த நடுவர் குழு அதைத் தெரிவு செய்திருந்தது]
''first prize.kalki short story competition''என்று கொடுக்கப்பட்ட தந்தி வாசகம்... ''surprise.kalki short story competition''என்று மாறிப்போயிருந்தது.அப்போதெல்லாம் ஃபோனோகிராம் என்ற ஒன்று வழக்கத்தில் இருந்து வந்தது.யார் செவியிலோ ஏற்பட்ட கோளாறு ஒரு நாள் இரவு முழுக்க என்னைத் தவிக்க விட்டு விட்டது.

அது ஒரு புறமிருக்க....அந்த நாளிலேதான் நானும் என் நெட்டைக்கனவு நிறைவேறப்பெற்றவளாய் உலகறிய - எழுத்தாளர் என்னும் ஒரு சிறிய அங்கீகாரத்தைப்பெற்றேன்.அதைப்பகிர நண்பர் துணை இல்லாத அந்தப்புதிய சூழலில் குளியலறைக்கதவை அடைத்துக் கொண்டு கிட்டத்தட்ட பத்து நிமிடம் அழுது தீர்த்தேன். இப்பொழுது அதை நினைக்கும்போது சிறுபிள்ளைத்தனமாகப்பட்டாலும் 29 வயது இளமையின் அற்புதமான,அபூர்வமான  கணங்களில் அதுவும் ஒன்று என்று எண்ணாமல் இருக்க முடிவதில்லை.

குறிப்பிட்ட அந்தச் சிறுகதை வெளிவந்த காலத்தில் மிக அதிகமான வாசகர் கடிதங்கள் அதற்கு வந்தன. [அம்மா அதற்கென்றே ஒரு ஃபைலில் எண் போட்டு அடுக்கி வைத்திருந்தார்கள்;இன்னும் கூட அதை நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன்;அச்சில் முதல் எழுத்து என்பது முதல் பிரசவம் அல்லவா?]

’பருவங்கள் மாறும்’என்ற என் முதல் சிறுகதைத் தொகுப்பில் அந்தக் கதை இடம் பெற்றது. சென்ற ஆண்டு வெளியிட்ட என் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் அடங்கிய ‘தேவந்தி’தொகுப்பிலும் அதைச் சேர்த்திருக்கிறேன்.அந்தத் தொகுப்பிலிருந்து அதைப்படித்த வாசகர் ஒருவர் எனக்கு மின் அஞ்சலில் எழுதிய கடிதத்தையும் அதற்கு நான் அளித்த மறுமொழியையும் கீழே தந்திருக்கிறேன்,

தொடர்ந்து இன்னும் கூட ஏதாவது எழுதிக் கொண்டே இருந்தாலும்,
’’இதையெல்லாம் இந்தக் காலத்தில் யார் போய்ப் படிக்கப்போகிறார்கள்....’’என்கிற ஆயாசமும் கூட அடிக்கடி என்னுள் தலை காட்டுவதுண்டு. ஆனால்...கதை வெளிவந்து கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் சென்ற பின்  இப்போது வந்திருக்கும் இந்தக் கடிதம் என்னை உற்சாகப்படுத்தியிருக்கிறது.. ஒவ்வொரு படைப்பும் அதற்கான வாசக நெஞ்சங்களைச் சென்றடைந்துகொண்டுதான் இருக்கிறது என்ற புத்துணர்வையும் புது நம்பிக்கையையும் ஊட்டியிருக்கிறது.அந்த நம்பிக்கையுடன்..இந்தக்கடிதத்தையும்,அதை ஒட்டிய பதிவாக ஓர் உயிர் விலை போகிறது’என்னும் அந்தக் கதையையும் இணைய வாசகர்களின் பார்வைக்கு முன் வைக்கிறேன்.

கடிதம்...
அன்பின் திருமதி சுசீலாம்மா,
வடக்கு வாசலில் வெளி வந்த "தேவந்தி" தொகுப்பை வாங்கி வாசித்து வருகிறேன். முதல் கதையாக வெளி வந்திருக்கும் "ஓர் உயிர் விலை போகிறது" என்ற இக்கதையை வாசித்தவுடன் என்னுடைய உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். இணையம் அதற்கு உதவியது.

ஒரு சிறுகதை எழுதப்பட்டு கிட்டத்தட்ட 33 வருடம் கழித்து அதற்கான வாசகர் கடிதம் ஒன்று வருவது ஒரு வித்தியாசமான நிகழ்வு என்றே எண்ணுகிறேன்.

கதை எழுதப்பட்ட காலகட்டத்திலிருந்து, இன்றுள்ள காலகட்டம் வரை எவ்வளவோ மாற்றங்களை இந்த சமுதாயம் கண்டிருப்பினும், கதைக் கருவாக எழுதப்பட்டிருக்கிற விஷயத்திலே எந்தவொரு முன்னேற்றமும் சமுதாயத்திலே ஏற்படவில்லையோ என்ற வருத்தம். சொல்லப் போனால் சமுதாயம் இந்த விஷயத்திலே இன்னும் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது.

இதில் ஒரு irony என்னவென்றால், சமூகத்தில் மிக உயர்ந்த சாதி என்று கருதப்படும் பிராமணர் குடும்பங்களில் இந்த இழி நிலை இருப்பது சமூக அவலத்தின் வேதனையான வெளிப்பாடு. படிப்பில் உயர்ந்து, கலை ஈடுபாட்டில் உயர்ந்து, செல்வமீட்டுவதிலும், அதிகார வர்க்கத்தின் முக்கியமான பதவிகளில் இருப்பதிலும் முன்னணியில் இருக்கும் ஒரு குலத்தை சேர்ந்தவர்களே (எண்ணிக்கையில் அப்படி செய்பவர்கள் எவ்வளவு குறைவாக இருப்பினும்) , இத்தகைய காரியங்களை செய்யத் துணியும் போது, பிறரைக் குறை சொல்வது எங்ஙனம்? நான் இங்கே சாதி உயர்வு, தாழ்வைப் பற்றிப் பேசவில்லை என்பதைத் தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

ஆக ஒன்று புலப்படுகிறது. படிப்பும், செல்வமும், சாதியும், இன்ன பிறவும் எந்த வகையிலும் பெண்ணை இழிவு படுத்துவதிலும், அவளை ஒரு போகப் பொருளாக மட்டுமே பார்ப்பதிலும் இருந்து இந்த சமூகத்தை மாற்ற உதவுவதில்லை.

சொல்ல வந்த செய்தியை, அனுபவத்தை மிக நேராக, உங்கள் கருத்தென்று எதையும் திணிக்காமல், சொல்லி இருக்கிறீர்கள். கொஞ்சம் கூட நாடகத்தன்மை கலக்காமல், மிகைப் படுத்தாமல். நிகழ்வை விட்டு அங்குமிங்கும் அலையாமல் மிக நேர்த்தியாக எழுதப் பட்டிருக்கிறது உங்கள் கதை.

கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் ஒருமுறையாவது பரிசு வெல்ல வேண்டும். அந்த அளவு ஒரு சிறந்த சிறுகதையைப் படைக்க வேண்டும் என்பது என்னுடைய அவா. முயற்சிகள் முழு அளவில் இல்லையென்பதே உண்மை.
1979 ல் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு வென்ற இந்த கதையை இவ்வளவு காலம் கழித்து படிக்க நேர்ந்தது என் பாக்கியம்.
நன்றி.
அன்புடன்
இளங்கோ
tnelango@gmail.com

என் மறுமொழி;
மிக்க நன்றி திரு இளங்கோ...
தொடர்ப்பயணத்தில் இருந்ததால் சற்றுத் தாமதமான பதில்.
33 ஆண்டுகள் கழித்தும் அதன் உண்மை ஒருவரை உலுப்புகிறது என்றால் அதன் காரணம் அதில் பொதிந்திருக்கும் சத்தியத்தின் வீரியம்தான்,உண்மையில் அது நான் எழுதிய இரண்டாம் கதை.ஆனால் வெளிவந்ததில் அதுதான் முதல் படைப்பு.
அது தெரிந்தவர்கள் வீட்டில் நடந்த உண்மைச் சம்பவம்.என் அம்மா அங்கு துக்கம் கேட்கப் போய் வந்து என்னிடம் அதை விவரித்தபோது என்னுள் அது அக்கினிக் குஞ்சாகப் பற்றிக் கொள்ள அதை சிறிது காலம் மனதுக்குள் ஆறப்போட்டுக் கற்பனையும் சேர்த்துக் கதையாக்கினேன்.அதுவே என்னை ஓர் எழுத்தாளராக உலகிற்கு அறிய வைத்த படைப்பு.
முதல் பரிசு பெற்றதால் அப்போதைய முகவரியும் உடன் வெளியாகக் கிட்டத்தட்ட 100க்கு மேற்பட்ட வாசகர் கடிதங்கள் அஞ்சலில் வந்தன;அவற்றுள் பல அதேஅனுபவத்தின் சாயல் தங்கள் வாழ்க்கையிலும் நடந்திருந்ததாகச் சொன்னவை.இதை நான் சுய பெருமைக்காகச் சொல்லவில்லை.வாழ்வின் உண்மையை அதே அலைவரிசைக்குள் சென்று படைப்பாக்குகையில் அது தானாகவே உள்ளத்தை அசைக்கும் வல்லமை பெற்று விடுகிறது என்பதைச் சுட்டத்தான் இந்தக் குறிப்பு.
// ஒரு சிறுகதை எழுதப்பட்டு கிட்டத்தட்ட 33 வருடம் கழித்து அதற்கான வாசகர் கடிதம் ஒன்று வருவது ஒரு வித்தியாசமான நிகழ்வு என்றே எண்ணுகிறேன். //
ஆமாம்....நீங்கள் சொல்வது நிஜம்தான்..அந்தக் கதை விஷயம் காலாவதிஆகி விட்டதோ..இனி அப்படிப்பட்ட கதைகளை எழுதுவது வீணோ என்று கூட எண்ணியிருக்கிறேன்,அது தவறென்பதை உங்கள் கடிதம் உணர வைத்து விட்டது;அதற்காக உங்களுக்கு நன்றி.இப்போதும் கூட அந்தப்படைப்பு அதற்கான வாசகரைச் சென்று சேர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பது ஒருபுறம் மகிழ்வளித்தாலும் இது போன்ற சமூகக்கொடுமைகள் இன்னும் தொடர்வது வேதனையும் அளிக்கிறது.அந்த நிலை நீடிக்கும் வரை எழுத்தால் போராட வேண்டியதுதான்.
சுசீலா

குறிப்பிட்ட சிறுகதை; ஓர் உயிர் விலை போகிறது’...

ஓர் உயிர் விலைபோகிறது..!

ஜன சந்தடி மிகுந்த நகர வீதி ஒன்றிலிருந்து நரம்பாய்க் கிளை பிரியும் ஒரு சந்து.அங்கே ஒன்றோடொன்று இடித்து நெருக்கிக்கொண்டு முன்னும் பின்னுமாய்த் தலையை நீட்டியபடி நிற்கும் பழங்காலத்து வீடுகள்.அவற்றுள் ஒன்றின் மாடிப்போர்ஷனில் நடுக்கூடத்திலுள்ள சுவரின் மத்தியில் ஆணி அடிக்கப்பட்டுத் தொங்கும் நான்கு சட்டங்களுக்கிடையில் சிறைப்பட்டுக் கிடக்கிறேன் நான்.புன்னகை என் முகத்தில் உறைந்து போயிருக்கிறது.என்னைச் சுற்றியுள்ள அவலங்களுக்கும் அழுகைகளுக்கும் அப்பாற்பட்ட மனுஷியாக,மூன்றாவது நபராக,அங்கே நடக்கிறவைகளை வேடிக்கை பார்ப்பதில் எனக்குக் கொஞ்ச நாட்களாக ஒரு சுவாரசியமே ஏற்பட்டிருக்கிறது.

‘’என்னைத் தனியாத் தவிக்கவிட்டுட்டுப் போயிட்டியேடீ பாவீ’’-
தன் நினைவற்று மயங்கிக் கிடக்கிற நேரங்களைத் தவிர மற்ற பொழுதெல்லாம் இப்படியே புலம்பிக் கொண்டிருக்கிறாள் அம்மா.வாயிலே துண்டை அழுந்தப்பொத்தியபடி அவளுக்கு ஆறுதல் சொல்லக் கூடத்துக்கு வருவதும் எங்கே தலையைக் கொஞ்சம் நிமிர்த்தினாலும் என் ‘முகம்’ கண்களில் தெறித்து அழுகையை வெளிப்படுத்தி விடுமோ என்று பயந்தபடி தலையைக் குனிந்து கொண்டு வெளியேறுவதுமாக அப்பா தவிக்கிறார்.தம்பிகள் இருவரும் ஆளுக்கொரு புத்தகத்தைக் கையில் ஏந்தியபடி ஜன்னல் வழியாகத் தெரியும் தெருவை வெறித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘’அம்மா..அம்மா...அங்கே பாரேன்...அத்திம்பேர் வந்திண்டிருக்கார்...ஆமாம்..அவரேதான் வந்திண்டிருக்கார்’’-அம்பிப் பயல் கத்துகிறான்.

‘’நம்மாத்துக்குத்தாம்மா..’’-இது முரளி.

அம்மாவின் சலனமற்ற முகத்தில் ஓர் இறுக்கம் படர்கிறது.அப்பா உணர்ச்சிகளைக் கல்லாக்கிக் கொண்டு மாடிப்படி ஓரமாக நின்று வரப்போகிற மாப்பிள்ளையை எதிர்கொள்ளத் தயாராகிறார்.அம்பியும் முரளியும் ஒரே பாய்ச்சலில் படிகளைக் கடக்கிறார்கள்.

நிமிடங்கள் யுகங்களாகின்றன.
சென்றவர்கள் மூச்சிரைக்கத் திரும்புகிறார்கள்.
‘’அத்திம்பேர்..அத்திம்பேர்னு கத்திண்டு ரோடிலே பின்னாடியே ஓடினோம்.அவர் திரும்பிக் கூடப் பாக்காம போய்ட்டார்ப்பா’’
‘’......................’’
‘’தாலி கட்டின பொண்டாட்டிக்கு ஒரு கொள்ளி போட வரக்கூட மனசில்லாதவர் இப்ப வருவார்னு எல்லாரும் என்ன நம்பிக்கையிலேதான் எதிர்பார்த்தேளோ..’’
அம்மாவின் விசும்பல் வலுக்கிறது.
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

‘’ட்டாயம் வைரத் தோடு போட்டுத்தான் ஆகணுமா ராஜம்...அவா ஒண்ணும் வற்புறுத்தறதாத் தெரியலியே..’’

‘’நமக்கு இருக்கிறேஅது ஒரே பொண்ணு...ஆயுசுக்கும் இனிமே வேற யாருக்குப் போட்டு அழகு பார்க்கப் போறோம்?அவா கேக்கறதுக்காகவா ஒண்ணொண்ணும் பண்றோம்..?’’

அம்மாவின் ஆசை மின்னும் வைரங்களாய்க் காதுகளில் ஜொலிக்க,மாலையும் கழுத்துமாய் மடிசார்ப்புடவையுடன் மாமியாரை நமஸ்காரம் பண்ணி எழுந்தபோது அவள் வாயெல்லாம் பல்லாய்....இனிமேல் தேக்கிக் கொள்வதற்குக் கொஞ்சங்கூட பாக்கியில்லை என்கிற மாதிரி அன்பை வார்த்தைகளாலேயே பொழிந்து தள்ள,இதுவே என்றைக்கும் சாஸ்வதமாகி விடலாகாதா என்ற பேராசையுடன் பொழுதுகளைப் பொன்னாய்க் கழித்த நாட்கள்....

வாழ்க்கையின் நிஜங்கள் அவற்றின் உண்மையான பரிமாணத்துடன் குரூரத்துடன் தாக்கிய பிற்பாடு...சூறாவளியில் சிக்கிய மரக்கலமாய்,சிறகுரிந்த கோழியாய்...மண்ணாய்,ஜடமாய்ப் பிறந்த வீட்டுக்குள் திரும்ப அடியெடுத்து வைத்த அவலம்...

‘’உங்காத்து மாட்டுப்பொண்ணுக்கு என்ன உடம்பு?ரெண்டு மாசமா ஆஃபீஸுக்குக் கூட வரலையாமே..என் பொண்ணு சொன்னா..’’

பரிவோடு கேட்பது போன்ற பாவனையில் அடுத்தவர் புண்ணைச் சொறிந்து ஆனந்தம் காண்பதைப் பொழுதுபோக்காகவே கொண்டிருக்கும் இத்தகைய ஜீவன்களுக்கு மாமியார் தரும் மறுமொழி செவிப்பறையில் மோதுகிறது.

‘’அது என்னதான் உடம்போ போங்கோ..கல்யாணம் ஆகி இந்த ஒரு வருஷத்திலே அவ படுத்துக்காம இருந்த நாளை விரல் விட்டு எண்ணிடலாம்.என்னவோ சம்பாதிக்கிற பொண்ணா இருக்காளேன்னு பார்த்தா இப்ப லாஸ் ஆஃப் பேயிலே வேற லீவு போட்டாறது! அதை விட்டுத் தள்ளுங்கோ..காசு இன்னிக்கு வரும்;நாளைக்குப் போகும்.ராஜா மாதிரி இருக்கிற எங்க பாபு தலையிலே இப்படி ஒரு நோஞ்சானைக் கட்டிண்டு அவஸ்தைப்படணும்னு எழுதிட்டானே பகவான்...அதை நெனச்சாத்தான் எனக்கு ஆறவே மாட்டேங்கிறது..இப்பன்னா தெரியறது அவா வலிய வந்து வைரத்தோடு போட்டதோட மர்மம்.என்ன சீர் செஞ்சு என்ன பிரயோஜனம்..எல்லாத்தையும்தான் வைத்தியம்ங்கிற பேரிலே அவ வட்டி போட்டு வாங்கிண்டிருக்காளே’’

இன்னும்..இன்னும்..இன்னும்....

தேள்கொடுக்காகக் கொட்டுகிற அந்த வார்த்தைகளைக் கேட்க மனசுக்குத் தெம்பில்லை.

அம்மாவின் அரவணைப்பில் இல்லாமல், சென்னை ஹாஸ்டலில் இருந்தபோதுகூடக் கல்லுக் குண்டாக இருந்த உடம்புக்கு இப்போது என்ன கேடு வந்து விட்டது...வலது மார்பில் பருப்பளவுக்குச் சிறிதாக முளைத்த கட்டியைப் பற்றி முதலில் கூச்சத்தினாலும் பிறகு அச்சத்தினாலும் சொல்லாமல் விட்டது எவ்வளவு பெரிய தப்பு?யானைப்பசி கொண்ட அரக்கனைப்போல அது ஒரு மார்பைப் பூராவாக அரித்து உளுத்து விட்டு அடுத்ததிலும் கால் கொள்ள ஆரம்பித்திருக்கும் இந்த நிலையில்.....
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ந்த ஜெனரல் வார்டின் முனகல்களோ வெண்புறாக்களாய்ப் பரபரக்கும் நர்ஸுகளின் சுறுசுறுப்போ டெட்டாலும்,மருந்தும் கலந்து வரும் நெடியோ ....எதுவும்..எதுவும்...என் மோனத்தை ஈர்க்க முடியாத நிலையில் கண்களை உத்தரத்தில் பதித்தபடி படுத்திருக்கிறேன்.ஆப்பரேஷன் முடிந்து ஒரு மாதமாக இதேமாதிரித்தான்! நான்கு நாட்களுக்கு ஒரு முறை வந்து கடனைக் கழித்து விட்டுப் போகும் மாமியார்,ஆப்பரேஷனன்று மட்டும் கூடவே நின்று விட்டு அதன் பிறகு ஒப்புக்குக் கூட வந்து எட்டிப் பார்க்காத கணவர்....இவர்களெல்லாம் போகட்டும்!அம்மா..நீ எப்படி?’

மனதில் ஒரு சிறு நெருடல்.
‘’சிஸ்டர் ஒரு போஸ்ட்கார்டும் பேனாவும் கிடைக்குமா?’’

‘’நன்னாத்தான் காரியத்தைக் கெடுத்தே போ.டாக்டர் உன்னை உட்காரவே கூடாதுன்னு சொல்லியிருக்கார்.நீ என்னடான்னா படுக்கையிலே எழுது உக்காந்து கடிதாசி வேற எழுத ஆரம்பிச்சுட்டியே....உங்காத்து மனுஷாளுக்குத் தெரிவிக்கணும்னு எங்களுக்குத் தெரியாதா என்ன? அவா மனசு கஷ்டப்படப்போறதே..பக்குவமா விஷ்யத்தை எடுத்துச் சொல்லணுமேன்னுதான் காத்துண்டு இருக்கோம்!’’

தேன் தடவிய விஷத் துளிகள்!
இன்று மாமியாரின் ‘விஸிட்டிங் டே’என்பது எப்படி மறந்தது எனக்கு?

‘பரவாயில்லே... உனக்குத் தெரிவிக்காம இருக்கிறதே நல்லதுதான் அம்மா! எனக்கு ஒரு தலைவலி வந்தாக் கூடத் துடிச்சுப் போற நீ...ஒரு ஜலதோஷம் பிடிச்சிட்டாக் கூடத் தலையிலே பத்துப் போட்டுக் கஷாயம் வச்சுக் கொடுத்து...ராப்பூரா முழிச்சிருக்கிற நீ...உன் பொண்ணுக்குக் ‘கான்ஸர்’ங்கிற அதிர்ச்சியை எப்படித் தாங்குவே....அதுவும் ஆபரேஷனுக்கு அப்பறம் அவ மென்மையான தன்னோட பெண்மைச் சின்னங்களை இழந்திட்டுக் கிழிச்ச நாரா ஒரு ஜெனரல் வார்டிலே கிடக்கறதை உன்னாலே எப்படிப் பொறுத்துக்க முடியும்..’’

ஆஸ்பத்திரியிலிருந்து ‘டிஸ்சார்ஜ்’ஆகி வீட்டுக்கு வந்தது முதல் எனக்குப் புகல்,நட்பு,சொந்தம் எல்லாம் இந்தக் காமரா உள் ஒன்றுதான்.சாப்பாடு கூட என்னைத் தேடி வந்து விடுகிறது.

கதவு ஓசைப்படும் சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறேன்.அவர்தான்! நான் இங்கே வந்த பிற்கு எண்ணி இரண்டு முறை என்னைப் பார்க்க வந்திருக்கிறார்.ஏதோ ஆஃபீஸ் தொடர்பான பேப்பர்களில் என்னிடம் கையெழுத்து வாங்குவதற்காக. அதுதான் டாக்டர்கள் என் ஆயுளுக்குத் திட்ட வட்டமாக இன்னும் இரண்டு ஆண்டுகள்தான் என்று கெடு வைத்து விட்டார்களே..எத்தனை நாட்களுக்குத்தான் லீவை நீட்டித்துக் கொண்டு போவது? இருந்தாலும் ஆஃபீஸில் கறக்க முடியும் வரை கறக்கலாமே என்று இவர்களுக்கு ஒரு சபலம் இருக்கும்போது ..எந்த வகையாலும் உடம்பால் ஒத்துழைப்புத் தர முடியாத நிலையில் இருக்கும் நான் இதையும் ஏன் மறுக்க வேண்டும்?

எப்பொழுது உள்ளே வந்தாலும் காரியத்தை முடித்துக்கொண்டு வெளியேறுவதிலேயே கவனமாக இருக்கும் அவர்..இன்றென்னவோ நாற்காலியை இழுத்துப்போட்டுக்கொண்டு உட்காருகிறார்...தொட்டால் கூட ஒட்டிக் கொண்டு விடுமோ என்ற பயத்தில் கட்டிலிலிருந்து நாலடி விலகித்தான்..!

வார்த்தைகளை மென்று விழுங்கியபடி பேச ஆரம்பிக்கிறார்.
‘’கஸ்தூரி..!இதைச் சொல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது என்னவோ கஷ்டமாத்தான் இருக்கு.ஆனா..சொல்லாம இருக்கவும் முடியலை.உன்னைப் பார்த்தா எனக்கு ரொம்பப் பரிதாபமாத்தான் இருக்கு.ஆனா..இதுக்கு மேலே என்னாலே என்ன செய்ய முடியும்னு தெரியலை..’’
‘’..................................’’
’’என்னைப்பத்தியும் நீ கொஞ்சம் நெனச்சுப் பாக்கணும்.நான் ஆசாபாசங்களோட இருக்கிற ஒரு சராசரி மனுஷன்.எனக்கு இன்னும் உணர்ச்சிகள் மரத்துப் போயிடலே.இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்படி உப்புச்சப்பில்லாம ஒரு வாழ்க்கையை ஓட்டிண்டிருக்கறதுன்னு....அம்மா..இங்கேயே மாதுங்காவிலே ஒரு பொண்ணப்பாத்துப் பேசி வச்சிருக்கா.நீ இந்தப் பேப்பர்லே கையெழுத்து மட்டும் போட்டியானா...’’

பணமாற்றுப் பேப்பர்களில் கையெழுத்துப்போடுவது,எனக்குக் கஷ்டமாக இருக்கவில்லை.ஒரு வகையில் சொல்லப்போனால்,ஏதோ கடன்பட்டுப்போனதைப்போன்ற மனச்சுமையைக் குறைக்கக்கூட அவை உதவியிருக்கின்றன.

ஆனால்..வாழ்க்கை கூட ஒரு பண்ட மாற்றுத்தான் என்று உணர்ந்த அந்த வினாடியில் என்னுள் உடைந்து நொறுங்கிப்போன ஏதோ ஒன்று சிரிப்பாய்ப் பீறிட்டுக் கொண்டு வந்து அலை அலையாய்த் தெறிக்கிறது...முகத்தில்..கண்களில்...நரம்புகளின் அசைவில்...!ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் வெடித்துக் கிளம்பிய மனம்’விட்ட’ஒரு சிரிப்பு.

‘கோபால்ட் ட்ரீட்மெண்ட்’என்ற பெயரில் பெண்மை வடிவிழந்து,வனப்பிழந்து நிற்கும் நான்...கண்ணாடியில் பார்த்தால் எனக்கே அச்சத்தை உண்டாக்கும் என் பாங்கரத் தோற்றம்...அத்துடன் இணைந்து கொண்ட அந்தப்பேய்ச்சிரிப்பு அவருக்குத் திகிலூட்டியிருக்க வேண்டும்.எழுந்து போய் விடுகிறார்.

‘இத்தனை நாள் என்னோட வாழ்ந்ததுக்கு இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கப் பொறுமை இல்லையா..’
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

ஸ்ரீரங்கம் வந்து சேர்ந்து எத்தனை நாளாயிற்று என்பது கூடத் தெரியவில்லை எனக்கு.அவர் கொண்டு வந்து விட்டதும்,அப்பொழுது நடந்த பேச்சு வார்த்தைகளும் மட்டும் கனவில் நடந்தவை போல நினைவில் மின்னி மறைகின்றன.

‘’என்ன இருந்தாலும் இவ்வளவு நடந்திருக்கும்போது நீங்க எங்களுக்கு எதையுமே தெரிவிக்காம விட்டதை எங்களால ஏத்துக்கவே முடியலை மாப்பிள்ளை..உங்களால முடியாமப் போனாலும் ஏதோ எங்களாலே முடிஞ்ச வைத்தியத்தை செஞ்சிருப்போமே..?’’

‘’மாமா நீங்க புரியாமப் பேசிண்டிருக்கீங்க.இந்த வியாதிக்கு அங்கே கிடைச்ச மாதிரி ட்ரீட்மெண்ட் இங்கெல்லாம் கெடைக்கறது கஷ்டம்.எனக்கு இருக்கிற எத்தனையோ ‘கமிட்மெண்ட்ஸ்’லே இவளுக்கு நான் ராஜ வைத்தியம் செஞ்சிருக்கேன்னு சொல்லணும்.நீங்க போட்ட நகையெல்லாம் மருந்துச்செலவிலே கரைஞ்சு போய் அதுக்கு மேலே இன்னிக்குத் தேதியிலே இரண்டாயிரம் ரூபா கடனும் இருக்கு எனக்கு’’

அம்மா செய்து போட்ட நகைகள் எல்லாம்-ஒரு திருகாணி உட்படப் பத்திரமாக மாமியாரின் டிரங்குப்பெட்டியில் தூங்குவதும்,என் மருத்துவச் செலவுகள் எல்லாம் எனக்கு நானே என் ஆஃபீஸ் மூலம் இலவசமாக சம்பாதித்துக் கொண்ட தர்மக்கொள்ளி என்பதும் என் மனது மட்டுமே அறிந்த உண்மை இல்லையா?

‘’தங்கம் போனாப் போகட்டும்னா..! தங்க விக்கிரகமாத்தாரை வாத்துக் கொடுத்தோமே இப்படி அரூபமா ஆகி அழகழிஞ்சு நிக்கிறாளே..ஏண்டி..நீ படிச்சவதானே..எங்களுக்கு ஒரு வார்த்தை சொல்லணும்னு உனக்குத் தோணலையாடி...இந்த சொத்துப் பூராப் போனாலும் பரவாயில்லேன்னு சீமைக்குக் கூடப்போய் வைத்தியம் செஞ்சிருப்போமேடி..’’
அம்மா புலம்பிப் புலம்பியே மாய்ந்து போகிறாள்.அத்தனைக்கும் ஒரு புன்னகைதான் என் பதில்.

‘அம்மா..உன் மடியில் விழுந்து என் தாபங்களைச் சொல்லிக் கதற வேண்டும் போல என் நெஞ்சு துடிக்காமல் இல்லை.ஆனால் என் இழப்பு என்கிற ஒரு சோகச்சுமையையே தாங்கிக் கொள்ள முடியாமல் துடிக்கப்போகிற உன் பலவீனமான இதயத்தில் இன்னும் எத்தனை பாரங்களைத்தான் ஏற்றுவது..’’

இப்பொழுது அம்மா எதுவுமே கேட்பதில்லை.வாய்ச் சொற்களை விட,கை விரல்களில் வழிந்து நெஞ்சையே நீவி விடுகிற பரிவு கலந்த இந்த ஸ்பரிசம்தான் எத்தனை இதமாயிருக்கிறது! எலும்புக் கூடாகி விட்ட இந்த உடம்பை ஏந்திப் பாசமுடன் பரிவதில் அம்மா..நீ என்ன சுகம் காண்கிறாய்?தன்னலக் கலப்பற்றுப் பொழியும் அந்த அன்புப்புனலில் ஆழ்ந்திருந்த ஒரு வேளையில் ...கூட்டை விட்டுப் பறக்கும் ஆன்மப்பறவை ஆகிறேன்.

துக்கம் விசாரிக்க வருவோரின் உண்மையான துக்க விசாரணை..
‘’அவாத்திலேஇருந்து யாருமே வரலை போலிருக்கே’
என்பதுதான். புண்பட்டுக் கசியும் மனத்தின் ரணங்களைச் சூட்டுக் கோலால் கிளறிப்பார்க்கும் சொற்கள்.

கஸ்தூரி என்றொரு பெண் வாழ்ந்ததும்,மலர்ந்ததும்,கருகிப் போனதும்...எல்லாம் பொய்யாய்ப் பழங்கதையாய்க் கனவாய்ப் போய் வெறும் நினைவாய் மட்டுமே நிலைத்து விட்ட இந்த வேளையிலேதான் அவரது திடீர் வருகை ,ஒரு சலனத்தைக் கிளப்பிப் பழைய தூசுப்படலங்களை மீண்டும் எழுப்பியிருக்கிறது.

உள்ளே புயலாய்நுழைகிறார் அப்பா.அவர் முகம் கறுத்துச் சிறுத்திருக்கிறது.நிதானமின்றி வார்த்தைகள் கொட்டுகின்றன.
‘’அந்த ராஸ்கல் இங்கே ஏன் வந்திருக்கான்னு தெரிஞ்சு போச்சு ராஜம்..’’
‘’..................................’’
‘’அந்த ராமநாதனோட வீட்டிலேதான் தங்கியிருக்கானாம்.அவா மட்டும் அப்ப என்னை வற்புறுத்தாம இருந்திருந்தா இந்த சம்பந்தத்துக்கே ஒத்திண்டிருக்க மாட்டேன்..’’

இப்பொழுது இதைப்பேசி என்ன பயன் என்ற பாவனையில் அம்மாவின் முகம் அவரை வெறிக்கிறது.
குரல் கம்ம அவர் தொடர்கிறார்.
‘’நம்ம கஸ்தூரி வேலை பார்த்திண்டிருந்த பம்பாய் ஆஃபீஸிலேயிருந்து அவளுக்குச் சேர வேண்டிய பி.எஃப்,கிராச்சுவிடி எல்லாத்தையும் தான் கிளெய்ம் பண்ணிக்கிறதுக்காக அவளோட ‘டெத் சர்டிஃபிகேட்’வாங்க வந்திருக்காண்டீ...‘டெத் சர்டிஃபிகேட்’வாங்க வந்திருக்கான்...’’

மலை போன்ற அப்பாவின் பொறுமை ஆட்டம் காணுவதைப்போல அவர் உடல் குலுங்குகிறது.

விம்மல்கள் அணை கடந்த வெள்ளமாய்ச் சங்கமிக்கும் அந்த நடுக்கூடத்தில் உறைந்து போன புன்னகையால் அவர்களை அரவணைக்கிறேன் நான்.

[’கல்கி’இதழ் நடத்திய 1979-அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டியில் முதற்பரிசு பெற்று அச்சில் வந்த என் முதல் கதை]

24.8.12

’’வாடல கொல்லோ..’’

நன்றி;'
பயணம் இதழ்-கட்டுரைத்தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-6
இயற்கைச் சமன்பாட்டைப் பேணிக்காத்து,இயல்பாக அமைந்திருக்கும் நிலவியலின் அடிப்படையில்
குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை
என ஐந்திணைக்கோட்பாட்டை வகுத்தளித்த சங்க இலக்கியம்- காதல் உணர்வுகளை நுண்மையாக முன் வைப்பதில் உலக இலக்கியங்களை விஞ்சும் திறத்தில் அமைந்திருக்கும் சங்க இலக்கியம் - மனித மனத்தின் ஆழங்காண முடியாத நுட்பங்களையும் கூட- இயற்கைப் பொருட்களின் துணை கொண்டு அவற்றின் பின்னணியிலேயே வாசக நெஞ்சங்களில் அழுத்தமாகப் பதிக்கிறது.


அவ் வரிசையில் குறிஞ்சிக் கபிலனின் நற்றிணைப் பாடல் ஒன்று....

சங்க காலத்தில் ‘களவு’ என்ற பெயரால் அழைக்கப்பட்ட மனம் ஒன்றிய காதல் வாழ்வில் தலைவனைச் சந்திக்கத் தடை பல கடந்து இரகசியமாக வருகிறாள் ஒரு தலைவி.
அவளுக்குத் தருவதற்காகக் காதற்பரிசு ஒன்றை ஏந்தியபடி காத்து நிற்கிறான் தலைவன்.
கண் கலந்து,மனம் கலந்து...பிரிவுத் துன்பத்தின் வேதனை முழுவதையும் பேச்சால் தொலைத்தபின் மெள்ளத் தன் பரிசை எடுத்து அவளிடம் நீட்டுகிறான் அவன்.
ஆவலோடு நீண்ட அவள் கரங்கள் அந்தப் பரிசைக் கண்டதும் பாம்பைக் கண்டதைப்போலப் பதறிப் பின் வாங்குகின்றன.
காதலனுக்கோ அதைக் கண்டு ஒரே வியப்பு! ஐயம் !
மிகவும் எளிதான இந்தப் பரிசை ஏற்றுக் கொள்வதில் அவளுக்கு அப்படி என்ன தயக்கம்?
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்தக் காதலுக்காகக் காலையில் தளிர்த்து மாலையில் வாடும் தழைகளைத்தானே அவன் ஆடையாக நெய்து வந்திருக்கிறான்!
ஒரு வேளை இதைக் காட்டிலும் விலை மதிப்பில்லாத வேறு ஏதேனும் ஒரு பரிசை அவள் எதிர்பார்த்து ஏமாந்திருக்கக் கூடுமோ?
அவன் தந்ததென்னவோ வெறும் தழையாடைதான்!ஆனாலும் அது சாதாரணமான வெறும் தழை அல்ல!
காதலிக்கு அன்புப் பரிசாகக் கொடுக்கும்போது கண்ணில் பட்ட இலை,தழைகளையெல்லாம் கண்டபடி தொடுத்துத் தர அவன் மனம் ஒப்புமா என்ன?
தனது ஊரிலேயே உயரமான மலைத் தொடர் ஒன்றில் - ஆவேசமாக முட்டி மோதும் மலைஆடுகள் கூடச் சஞ்சரிக்க அஞ்சும் மலைக்காட்டில்..அபூர்வமாக விளைந்த தழைகளையல்லவா அவன் தேடித் தேடி ஆடையாக்கி எடுத்து வந்திருக்கிறான்?
ஆனால்....பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சிப்பூ போன்ற அந்தத் தழையை அவன் தேர்வு செய்ததுதான் சிக்கலுக்கே காரணம் என்பதை உணர்ச்சி வசப்பட்ட அவனது காதல் மனம் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறது.

தலைவனது காதல் பரிசைப் பெற்று அதை உடுத்திக் கொள்ளும் ஆசை தலைவிக்கும் இல்லாமல் இல்லை.
ஆனாலும் அதை உடுத்திக் கொண்டு வீடு சென்றால் அவள் அடுக்கடுக்காக ஆயிரம் கேள்விகளை எதிர் கொள்ள வேண்டியதாகிவிடும்.
அந்த இலை..அவள் வீட்டுக் கொல்லையிலோ,தோட்டத்திலோ இயல்பாக வளரக் கூடியதுதான் என்றால் பிரச்சினையில்லை!
சற்றே தள்ளிச் சமதரையில் விளைவதென்றாலும் கூடச் சமாளித்து விடலாம்.
ஆனால்...இதுவோ அவன் மலையைச் சார்ந்த தழை!
ஏறிப் பிடுங்குவதற்கு அரிதான மலை உச்சியில்..அதுவும் இன்னொரு ஊரைச் சார்ந்த மலையில் விளையும் தழை!
பெண்ணின் இயங்குதளம் வீடு மட்டுமே என்று ஆகிப் போயிருந்த ஒரு சமூக அமைப்பில் அயலூரில்...அதுவும் எவரும் எளிதில் செல்லத் துணியாத மலை ஒன்றில் விளைந்த அந்தத் தழையைத் தலைவியோ,அவளது தோழியோ அத்தனை சுலபமாகப் பறித்துவிட முடியாது என்பதை வீட்டிலுள்ளவர்கள்  மிக எளிதாக விளங்கிக் கொண்டுவிடுவார்கள். அதிலும் குறிப்பாக அவள் காதல் வயப்பட்டது முதல் அவளது ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாகக் கண்காணித்துவரும் அவளது தாய் அதை மிகவும் இலகுவாக  அனுமானித்து விடுவாள்.
அதை மனதில் கொண்ட தலைவி,
‘இதை உடுத்திச் சென்றால் தாய் என்ன நினைப்பாளோ என அஞ்சுகிறேன் ‘என்ற பொருள்பட,
’உடுப்பின் யாய் அஞ்சுதுமே’’
என்கிறாள்.

உடுத்திக் கொள்ள முடியாத அந்த ஆடையை அவனிடம் உடனே திருப்பித் தந்து விடவும் அவளுக்கு மனம் வரவில்லை.
அவன் அவள்து நண்பன்..இனிய காதலன்!
அவளுக்காக ஆசையோடு மலை முகடு வரை சென்று அதைக் கொண்டு வந்து தந்திருப்பவன்.
அதை மறுதலித்தால் அவன் முகம் வாடிப் போகும்; அதையும் அவளால் தாங்கிக் கொள்ள முடியாது.
‘திருப்பித் தந்தால் அதனால் என் நண்பன் துயர் கொள்வானே’
என்பதை
’கொடுப்பிற் கேளுடைக் கேடு அஞ்சுதுமே’’
என வார்த்தையில் வடிக்கிறாள் அவள்.

இருதலைக் கொள்ளி எறும்பு போன்ற இந்த மனப் போராட்டம் தொடர்ந்து கொண்டே போகும் நிலையில்...அந்தத் தழை யாருக்கும் பயன்படாமல் வாடத் தொடங்கி விடுகிறது.
’ஆயிடை வாடல கொல்லோ தாமே’’
என அவன் அரிய முயற்சியால் பேராவலுடன் கொணர்ந்த அந்தத் தழை வாடத் தொடங்குவதைக் காட்டி,இனம் விளங்காத சோக உணர்வொன்றை எதிர்பாராத தருணம் ஒன்றில் நம் இதயத்தில் செருகிய வண்ணம் நிறைவு பெறுகிறது அப் பாடல்.

அடுத்து என்ன ஆகுமோ என்ற பரபரப்பும்,பதட்டமும் நம்மை ஆட்டி வைக்க..பாத்திரங்களின் பதட்டமான மன நிலை நமக்கும் தொற்றிக் கொண்டு விடுமாறு செய்து விடும் இப் பாடல்,
உணர்ச்சிப் போராட்டத்தின் உச்ச கட்ட நிலையாக விரியும் இந்தக் காட்சி....உலகச் சிறுகதைகளின் உயர்ந்த உத்திகளை...உன்னதக் கட்டங்களை நம் சங்க இலக்கியங்கள் என்றோ எட்டிவிட்டிருக்கின்றன என்பற்குச் சாட்சி பகர்கிறது.

’சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா
  அலங்குகுலைக் காந்தள் தீண்டித் தாதுகக்
  கன்றுதாய் மருளும் குன்ற நாடன்
  உடுக்கும் தழை தந்தனனே யாமது
  உடுப்பின் யாய் அஞ்சுதுமே கொடுப்பிற்
  கேளுடைக் கேடு அஞ்சுதுமே ஆயிடை
  வாடல கொல்லோ தாமே அவன்மலைப்
  போருடை வருடையும் பாயாச்
  சூருடை அடுக்கத்த கொயற்கரும் தழையே’’-நற்றிணை(கபிலர்)
தலைவி கூற்றாக அமையும் இப் பாடலின் முதற்பகுதி அற்புதமான உள்ளுறைக் கருத்தைச் செறித்திருக்கிறது.
மலைப் பகுதியில்(சிலம்பு-மலை)மேயும் பசு ஒன்று,குலைகுலையாகப் பூத்திருக்கும் காந்தள் மலர்களில் மோதிக்கொள்ள, அந்தப் பூவின் மகரந்தம் ஒட்டியிருக்கும் உடலோடு அது வீடு செல்கிறது;அதைப் பார்த்து அதன் கன்று மருண்டு போகிறது.
இத்தகைய மலை நாட்டின் தலைவனாக இப் பாடல்’குன்ற நாட’னைக் கூறுகிறது.
தலைவனின் மலை நாட்டுக்கு இப்படிப்பட்ட பீடிகை ஏன்?
சங்கக் கவிதைகளில் பொருளற்ற வெற்றுச் சொற்களுக்கோ..வெற்றுக் காட்சிகளுக்கோ இடமே இல்லை.
பசுவின் மீது அறியாமல் படிந்துவிட்ட பூந்துகள் அதன் உருவத்தையே மாற்றிக் காட்டிக் கன்றை மிரள வைப்பது போல் மலைச் சாரலில் தலைவனைச் சந்தித்துவிட்டுச் செல்லும் தலைவி வித்தியாசமான ஒரு தழை ஆடையை உடுத்திச் சென்றால் அவளது தாயும் மிரண்டு போவாள்;
அங்கே கன்று...,இங்கே தாய்!
பாடலின் சாரமான உட் பொருளையே இப் புனைவின் வழி உள்ளுறையாக்கி அதன் உயிரோட்டத்தை மேலும் கூர்மைப் படுத்துகிறார் கபிலர் என்ற மாபெரும் கவிஞர்.

காதல் என்ற இயற்கையான...நுண்மையான...அந்தரங்கமான உணர்வைத் திரைப்படங்களும்,பிற ஊடகங்களும்,இன்றைய நவீன வாழ்க்கை முறைகளும் எந்த அளவுக்குக் கொச்சைப் படுத்திக் குலைத்துப் போட்டிருக்கின்றன என்பதைக் கண்கூடாப் பார்க்கும்போதுதான், சங்க அகப் பாடல்களின் சிறப்பையும், காதலின் நயத்தக்க நாகரிகத்தை அவை எந்த அளவுக்கு நாசூக்காக உணர்த்தியிருக்கின்றன என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
 

20.8.12

இவன்தான் மனிதன்...

சென்ற ஆண்டின் ஆஸ்கார் விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்டு  நடிப்புக்கான[ஆடுகளத்தில் நடித்த தனுஷுடன் பகிர்வு]தேசிய விருதை,
சலீம் குமாருக்குப் பெற்றுத்தந்த மலையாளத் திரைப்படம் ஆதாமிண்ட மகன் அபு’.58வது தேசியத் திரைப்படவிழாவில் நான்கு தேசிய விருதுகளை,சிறந்த திரைப்படம்சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய துறைகளில் பெற்றுள்ளஇப் படம்,கேரள மாநில திரைப்பட விருதுகளிலும் சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த திரைக்கதை மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய விருதுகளைப் பெற்றது. இந்தியாவின் சார்பில் 2011ஆம் ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான ஆஸ்கார் விருதுக்கான போட்டியிலும் கலந்துகொள்ளத் தேர்ந்தெடுக்கப்பட்டது.[நன்றி;விக்கிபீடியா]


தமிழைப்பொறுத்தவரை 
எத்தனைஅறிவுஜீவிகள் படமெடுத்தாலும் இசுலாமிய சமூகத்தினரைக் கடத்தல்காரர்களாகவும்பயங்கரமான தீவிரவாதிகளாகவும் மட்டுமே சித்தரிப்பதென்பது 
தமிழ்த் திரையுலகின் ஒரு தொடர்ந்த போக்காக இருந்து வரும் வேளையில்,இந்தப்படத்தின் வழி ஒரு நல்ல இஸ்லாமியனை மட்டுமல்லாமல், ஒரு மிகச்சிறந்த மனிதனை இஸ்லாமியப்பின்னணியில் மனம் கசிந்துருகும்படி காட்டியிருக்கிறது மலையாளத்திரையுலகம்.



விரிவானநிலக்காட்சிகள்இல்லை,
அயல்நாட்டுப்படப்பிடிப்புக்களில்லைகாதல்என்றகருப்பொருளில்லை;
அதனால்டூயட்பாடல்களும்,நடனங்களும் இல்லை. 

கதைத் தலைவனும் தலைவியும் கூட இளமையானவர்கள் இல்லை
ஆனாலும் கூட,இந்தப்படம் சாதித்துக் காட்டியிருக்கிறது....
எளிமையான ஆழமான கதையால்,நுட்பமான மிகையற்ற நடிப்பால்.

ஹஜ் பயணம் செய்தாக வேண்டும் என்ற தீராத தவிப்புடன் வாழும் ஒரு முதிய தம்பதியரும் அவர்களின் கனவு நிராசையாவதும் என ஒற்றை வரிக்குள் படத்தின்கதையை அடக்கி விட முடியுமென்றாலும்.... 
அந்த ஒரு வரிக்கு மிகுந்த ஆழத்தையும் அர்த்தத்தையும் தந்திருக்கிறது படம்.

தீவிர மத நம்பிக்கையுடன் வாழும் ஒவ்வொருமுஸ்லிமும் வளர்த்துக் கொள்ளும்கனவு,தன்வாழ்நாளில்,ஹஜ்புனிதப்பயணத்தைஒரு முறையாவது..மேற்கொள்வது.அத்தர்விற்கும்சில்லறைவியாபாரியான அபு என்னும் முதியவருக்கும் அது மட்டுமே வாழ்வின் இலக்காக இருக்கிறது;அவரின் மனைவியின் இலட்சியமும் அதுதான்.

மனைவி மக்களோடு துபாயில் இருக்கும் அவர்களது ஒரே மகனும் அவர்களைப் புறக்கணித்து விட்ட பிறகு, வாழ்வின் பிடிப்பு அந்த ஒற்றை இலக்கில் மட்டுமே அவர்களுக்குக்குவிந்திருக்கிறது.

சிறுகச்சிறுகப்பணம் சேர்த்துத் தன்கட்டிலின் அடியில் உள்ள இரும்புப் பெட்டியில்,வெல்வெட்துணி போர்த்தப்பட்டிருக்கும் உண்டியலில் சேமித்து வைக்கிறார் அபு.மாடுகன்றுகளைப் பராமரித்துப் பால்விற்கும் காசை அவரது மனைவியும் அவ்வாறே சேமிக்கிறாள்.

மிக எளிமையான அவர்களது வாழ்வில்,பிறதேவைகளுக்கோ,தேடல்களுக்கோ இடமில்லைகந்தையான நோட்டுக்களையே மிகுதியாகக் கொண்ட அந்த உண்டியல் பணத்தையெல்லாம் திரட்டி எடுத்துக் கொண்டு போய் ஹஜ் யாத்திரைக்குரிய முன்பணமாக ‘அக்பர் ட்ராவெல்ஸில் சற்றுக் கூச்சத்துடன் தருகிறார் அபுசிறுகச்சிறுகச் சேர்த்தபணம் அப்படிச் சில்லறையாகத்தான்  இருக்கிறது என்று அவர் சொல்ல ‘எந்த வடிவில் இருந்தாலும் பணம் பணம்தானேஎன்கிறார் பயணக்கம்பெனி உரிமையாளர்.வெளிநாடு செல்ல பாஸ்போர்ட் வாங்கவேண்டுமென்று கூடத் தெரியாத அந்த அப்பாவி தம்பதிக்கு அந்தவகையிலும் உதவி செய்கிறார் அவர்

பயணத்துக்கு,மேலதிகமாகத்தேவைப்படும் பணத்துக்காக வீட்டிலுள்ள மாடு கன்றுகள் மன வலியோடு விற்கப்படுகின்றன;முன்பு கொடுக்க மறுத்தவீட்டு முற்றத்தில் நிற்கும் பலாமரத்தைக்கூட மரக்கடைக்காரரிடம் 60,000க்கு விற்று தந்து முன்பணமாகப் பத்தாயிரம் பெறுகிறார் அபு.மீதம் 50,000த்தைப் பயணத்தின்இறுதிக்கட்டத்தில் பெற்றுக்கொள்ள எண்ணியிருக்கிறார் அவர்.

பயண நாள் நெருங்கி வருகிறது.தன்னிடம் நெருங்கிப் பழகிய ஒவ்வொருவரிடமும் சென்று பயண விடை பெறுகிறார் அபுஒரு புனித யாத்திரையை எவர் மனதையும் புண்படுத்தி விட்டுத் தொடங்கக்கூடாது என்பதால் பழகிய அனைவரிடமும் தான் தெரிந்தோ தெரியாமலோ செய்த குற்றங்களை மன்னிக்க வேண்டுகிறார் அபு. பல ஆண்டுகளுக்கு முன்பு தன் வீட்டை ஒட்டிய பகுதியில் தன்னோடு எல்லைத் தகராறு செய்து வலுச் சண்டைக்கு வந்த சுலைமான் மனதிலும் கூடத் தன்னைப் பற்றிய தவறான குரோதமான சுவடுகள் இருக்க வேண்டாமென எண்ணும் அவர்  தற்போது எங்கோ தொலைவில் வசிக்கும் அவனை,நேந்திரம் பழமும்,பிஸ்கட்டும் வாங்கிக் கொண்டு,தன் மனைவியோடு தேடிச் சென்று பார்க்கிறார்.ஒரு விபத்தில் அகப்பட்டு மரணத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் அவனை அவரது பெருந்தன்மை நெகிழ வைக்கிறது.


கணவனும் மனைவியுமாய்ச் சிறு குழந்தைகளின் குதூகலத்தோடு,பயண ஆயத்த வகுப்புக்குச் சென்று வந்து அங்கு சொன்னபடி குறைந்த எடையில்பயணப்பை,மற்றும் உடைகள் ஆகியவற்றைவாங்கியபடி,பயணத்துக்கான இறுதி ஆயத்தங்களைச் செய்கிறார்கள்.

இனி,எஞ்சியிருப்பது ஒன்றே ஒன்றுதான்.அது,பயணக்கம்பெனியின் இறுதித் தவணையைக் கட்டிவிடுவதுமட்டுமே.

மரக்கடைக்காரரிடமிருந்து தான் பெற வேண்டிய மீதப்பணத்தைப் பெற வேண்டி அவரை நாடிச் செல்கிறார் அபு.மரக்கடைக்காரர் ஒன்றும் பேசாமல் 50,000த்தை மேசையில்  எடுத்து வைத்து விட்டு  ‘அந்த மரத்தைப் பார்த்தீர்களா..’என்று மட்டும் கேட்கிறார்.தன் பயணப் பரபரப்பில் அபு அதைப் பார்க்கத் தவறி விட்டிருக்கிறார்.

அந்த மரம் உள்ளீடு அற்றதாக வெறும்விறகாகப்பயன்படக்கூடியதாகமட்டுமேஇருக்கிறது என்பதைக் கடைக்காரர் வழி அறிந்ததும் அபுவின் முகம் சாம்பிப் போகிறது.அந்தப் பணத்தைப்பெறுவது தவறு என்று அவரது மனச்சாட்சி இடித்துரைக்க,அதை  எடுத்துக் கொள்ளாமல் அப்படியே திருப்பித் தந்து விடுகிறார் அபு.

‘’வியாபாரம் என்பதே லாபமும் நஷ்டமும் சேர்ந்ததுதான்..அதற்காக உங்கள் பயணம் முடங்க வேண்டாம்’’
என்று பதறுகிறார்,மரக்கடைக்காரர்[கலாபவன் மணி].
ஒருவரை ஏமாற்றிக் கிடைத்த பணத்தில் என் பயணம் தொடங்க வேண்டாம் என்று சொல்லியபடி தன் நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கும் அபு அதை நிராகரித்து விட்டு வெளியேறுகிறார்.

பயணக்கம்பெனியில் சென்று தாங்கள் ஹஜ் பயணத்திலிருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவிக்கிறார் அபு.அந்தப்பயணக்கம்பெனி அதிபரும்[முகேஷ்] கூட 50,000என்பது ஒன்றும் தனக்குப் பெரும் தொகையில்லை என்றும் அபு திரும்ப வந்து கூட அதைத் தரலாம் என்றும் கேட்டுக் கொள்ள,

கடன் வைத்து விட்டு யாத்திரை கிளம்புவதையும் அபு உறுதியாக மறுத்து விடுகிறார்.

பயணம் தடைப்பட்ட செய்தி அந்தச் சிற்றூரில் பரவுகிறது.அபு மீது அன்பு கொண்டிருப்பவர்கள் அதற்காக ஆத்மார்த்தமாக வருந்துகிறார்கள்.அந்த ஊர்ப்பள்ளி ஆசிரியரான இந்து நண்பர் ஒருவர்[நெடுமுடி வேணு]தன் சேமிப்புப் பணத்தைத் தர முன் வருகிறார்;தன்னை ஒரு சகோதரனாகக் கருதி அதை அவர் ஏற்றே ஆக வேண்டுமென மன்றாடுகிறார்.அவரது மனதைப் புண்படுத்த விரும்பவில்லைஎன்றாலும்,அவர் பணத்தில் செல்வதென்பது தனது ஹஜ் ஆகாது என திடமாக அதையும் மறுத்து விடுகிறார் அபு.

இறுதியாக எஞ்சியிருக்கும் அந்த வீட்டை விற்றால் பயணம் சென்றுவிட முடியும்;அந்த எண்ணம் கணவன்,மனைவி இருவருள்ளுமே எழுந்தாலும் திரும்பி வரும்போது தங்க ஒரு நிழல் வேண்டுமே என்ற யதார்த்தம் அவர்களை அதைச் செய்ய விடாமல் தடுத்து விடுகிறது.தன்னை மட்டும் சென்று வருமாறு மனைவி சொல்லும் யோசனையும் அபுவுக்கு உகப்பாக இல்லை;இத்தனை நாள் தன் காரியம் யாவினும் கைகொடுத்த அவளை விட்டு விட்டுத் தான் மட்டும் ஹஜ் செல்வதைப் பாதகமென நினைக்கிறார் அவர்.

இறுதிக்காட்சி.பள்ளிவாசலின் பாங்கோசை கேட்கிறது.
கணவனும் மனைவியும் உறக்கமின்றிப்படுத்துக் கிடக்கிறார்கள்.
‘’உலகின் பல பாகத்திலுள்ள மக்களும் இப்போது ஹஜ் தொழுகையில் ஒரே மனதுடன் இணைந்திருப்பார்கள்...எல்லா உதடுகளும் ஒரே சொல்லை மட்டுமே உச்சரித்துக் கொண்டிருக்கும்’’
என்று அவர்கள் கற்பனை விரிகிறது.

அபு எழுந்து சென்று தன் வீட்டு முற்றத்தில் இன்னொரு பலாச்செடியை நட்டு வைத்து நீரூற்றுகிறார்....தன் நம்பிக்கை இன்னும் மட்கிப் போய்விடவில்லை என்பதை உணர்த்துவதைப்போல்....



பாஸ்போர்ட் விசாரணைக்காக போலீஸார் வீட்டுக்கு வர அதன் காரணம் புரியாமல் இருவரும் கலங்கிப் போய் ஸ்கூல் மாஸ்டரைத் துணைக்கழைத்துக் கொண்டு காவல் நிலையம் செல்வதும்,பாஸ்போர்ட் வந்து விட்டது எனத் தெரிந்ததும் காலை விடிந்தது முதல் கள்ளிப்பெட்டிகளால் அடுக்கப்பட்ட கதவுகளை உடைய அந்தச் சிற்றூரின் அஞ்சலகத்தில் காத்துக் கிடப்பதும்
'எனக்குரியதை நான் பெற்றுக்கொள்ள ஏன் இந்த அவதி’என அபு கோபம் கொள்கையில் ஒரு குழந்தையின் கோபம் கண்டு தாய் கொள்ளும் செல்லப்பெருமையுடன் மனைவி அவரை சமாதானம் செய்வதும், எவருமற்ற இரவின் தனிமையில் பாஸ்போர்ட்டிலுள்ள தங்கள் புகைப்படங்களை அவர்கள் மாறி மாறி ரசித்துக் கொள்வதுமான காட்சிகள்,


அவர்களது எளிய வாழ்வில் அரிதான சில கணங்கள்.

நெடுமுடி வேணு,கலாபவன் மணி,முகேஷ் முதலிய மிகப்பெரிய நடிகர்களும் கூட,மிகச் சிறிதுநேரமே வந்து போகும் துணைப்பாத்திரங்களாக நடித்திருக்க அபு மட்டுமே படத்தில் முழுமையாக வியாபித்து நிற்கிறார்.இயக்குநர் வழங்கிய பொறுப்பைச் சரியாகச் சுமந்து இறுக்கம்,நெகிழ்வு,மன உரம் என அனைத்தையும் மிகை கொஞ்சமுமற்ற உடல்மொழியாலும்,மிக நுட்பமாக மாறும் முக பாவனைகளாலும் மட்டுமே வெளிப்படுத்தியிருக்கும்
சலீம்குமார்,தேசிய விருதுக்குத் தான் தகுதியானவர் என்பதை ஆட்ட பாட்டங்களின்றியே மெய்ப்பித்து விடுகிறார்.

அபுவின் மனைவியாக வரும்
சரீனா வகாபும் ஆரவாரமற்ற அமைதியான நடிப்பால் கணவர் மீது கொண்டிருக்கும் கரைகடந்த அன்பு,இறை விசுவாசம் இவற்றை  மட்டுமன்றித் தான் வளர்த்த வாயில்லாத ஜீவன்களைப் பிரிய நேரும் வருத்தத்தையும் மாடுகளை விற்க நேரும் தருணத்தில் அனாயாசமாக வெளிப்படுத்தி விடுகிறார்.

வில்லன் என்று சொல்லக்கூடிய எதிர்நிலைப்பாத்திரம் எதுவுமே இல்லாமல் அபு எதிர்ப்படும் அத்தனை மனிதர்களுமே நல்லவர்களாக அன்மைந்தும் இந்து[ஸ்கூல்மாஸ்டர்],கிறித்தவர்[மரக்கடைக்காரர்],இஸ்லாமியர்[பயணநிறுவனர்]என மூன்று மதத்தினருமே அலட்டிக் கொள்ளாமல் உதவ முன் வந்தும்,அபுவின் ஆசை நிறைவேறாமல் போவதே படத்தின் அங்கதம்.

கேரளத்தின் மண்வாசனை மழை வாசனை ,கண்ணுக்கு இதம் தரும் பச்சைப்பசேலென்ற குளுமை இவற்றையெல்லாம் படம் பிடித்திருக்கும் மதுஅம்பாட்டின் அற்புதமான காமரா, செயற்கையான நாடக பாணித் திருப்பங்கள் இல்லாமல் சாமானியர்களின் கதையை,யதார்த்தமாகச் சொல்லிக் கொண்டு போவது ,முதிர்ச்சியான நடிப்பு,முதல் படம் என்று சற்றும் நம்ப முடியாதபடி நேர்த்தியோடு இதை எழுதி இயக்கியிருக்கும் சலீம் அகமதுவின் தேர்ச்சி என்று பல சிறப்புக்களைக் கொண்டிருந்தாலும் கூட- படம் முடியும் தருவாயில் இவற்றையெல்லாம் மீறிக் கொண்டு நம் மனதில் விசுவரூபமெடுத்து நிற்பது ஆதாமின் மகன் அபு கொண்டிருக்கும் குன்றாத கொள்கைப்பிடிப்பு மாத்திரமே...
அதுவே இதன் உயிர்ச்சாரம்...
‘’ஆதாமுடைய மகன் அபு..’’என்பது,பாஸ்போர்ட் விசாரணையில் சம்பிரதாயமாக இடம் பெறும் ஒரு சாதாரண வசனம்.தன் தந்தை ஆதாமுக்குப் பெருமை சேர்த்துக் கொள்கை என்னும் குன்றேறி நிற்கும் உயர் மானுடன்..அபுவைப்பற்றிய கதைக்கு அந்தத் தலைப்பு பொருத்தமானதாகவே இருக்கிறது..


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....