துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

16.8.12

வழக்கு எண்18/9-ஒரு விமரிசனக் காணொளி

கடந்த சில மாதங்களில் நான் பார்த்த தமிழ்த் திரைப்படங்களில் எனக்கு நம்பிக்கையூட்டிய இரண்டு படங்கள் ’வாகை சூட வா’ மற்றும் ’வழக்கு எண்18/9’.

அதிலும்  குறிப்பாக என்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கித் தூக்கத்தைத் தொலைக்க வைத்த ஒரு மறக்க முடியாத படம் இயக்குநர் பாலாஜி சக்திவேலின் ’வழக்கு எண்18/9’.


இரண்டே பாத்திரங்களின் வாக்குமூலத்தை மட்டுமே வைத்துக் கொண்டு கதையைச் சொல்லியிருக்கும் உத்தி,
கந்து வட்டிக் கொடுமையால் கல்வியைத் துறந்து வட நாட்டு முறுக்குக் கம்பெனிக்குக் கொத்தடிமையாய்ச் செல்லும் சிறுவர்கள்,வீட்டு வேலை பார்க்கும் தாயும் ,மகளும்,மனிதக் காருண்யம் வற்றி விடாத பெண் பாலியல் தொழிலாளி என விளிம்பு நிலை மனிதர்களின் சித்திரங்கள்,

தெருவுக்குத் தெரு மலிந்து கிடக்கும் கைபேசிகளின் தாக்கம் பதின்பருவவாழ்வையே புரட்டிப்போடும் அவலம்...

பாவப்பட்டவர்களுக்குச் சார்பாகப் பேசுவது போலவே இறுதி வரை நடித்துக் கொண்டிருந்து விட்டுக் கடைசி நிமிடத்தில் கழுத்தை அறுக்கும் காவல் அதிகாரி

என இந்தப்படம் விரித்துக் கொண்டே செல்லும் யதார்த்தமான வாழ்க்கைச் சித்திரங்கள் ஏராளம்.

இந்தத் திரைப்படம் குறித்து வலையில் எழுத வேண்டுமென எண்ணிக் கொண்டிருந்த தருணத்தில் அதற்கு முற்றிலும் தகுதியான மனிதரிடமிருந்து பெறப்பட்ட மிக அருமையான விமரிசனம் ஒன்று காணொளியாக மின் அஞ்சலில் எனக்குக் கிடைத்தது.
மதுரை நிஜநாடக இயக்க நிறுவனரும் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் நாடகத் துறைப்பேராசிரியருமான மதிப்பிற்குரிய திரு மு.ராமசுவாமி அவர்களே அந்த விமர்சகர்.

திரு மு.ராமசுவாமி எங்கள் குடும்ப  நண்பர்.மிகச் சிறந்த ஒரு மனிதர்.
இலக்கிய ,திறனாய்வுத் தளங்களில் என் முன்மாதிரியாக இருந்து மறைந்த எங்கள் துறைத் தலைவரும் நவீன இலக்கியத்தில் மிகவும் பிடிப்புக் கொண்டு பல சிறுகதைகளையும்,ஆய்வுப்படைப்புக்களையும் உருவாக்கியிருப்பவருமான அமரர் செண்பகம் ராமசுவாமியின் துணைவர்.
திரு மு.ராமசுவாமி அவர்களின் ‘இருள்யுகம்’நாடகத்தில் நானும் கூடக் காந்தாரி வேடம் ஏற்று நடித்ததுண்டு.

தமிழ் நாடகத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றதில் கணிசமான பங்காற்றியிருக்கும் ராமசுவாமி அவர்களுக்காக அண்மையில் கீழ்க்காணும் இரு வலைத்தளங்களை நண்பர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
muramaswamy.com அவரைப்பற்றிய ஆவணத் தொகுப்பு.

dramaswamy.com யில் தன் கருத்துக்களையும் அனுபவங்களையும் பகிர்ந்து வரும் ராமசுவாமி கணையாழி இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவிலும் இடம் பெற்றிருக்கிறார். பிதாமகன்,பருத்தி வீரன்,சண்டைக்கோழி,கன்னத்தில் முத்தமிட்டால் முதலிய சில திரைப்படங்களிலும் நண்பர் முராவை வாசகர்கள் பார்த்திருக்கலாம்.

வழக்கு எண்18/9 பற்றித் தான் வழங்கியுள்ள விமரிசனக் காணொளியை என் தளத்தில் பகிர விரும்பி அவரிடம் ஒப்புதல் கேட்டபோது மகிழ்வோடு  அனுமதியளித்த திரு மு.ரா.,வுக்கு என் மனமார்ந்த நன்றிகள்..
இனி அந்தக் காணொளி வழி வழக்கு எண்18/9 




1 கருத்து :

பெயரில்லா சொன்னது…

சிறந்த படம் வழக்கு எண்...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....