துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

24.8.12

’’வாடல கொல்லோ..’’

நன்றி;'
பயணம் இதழ்-கட்டுரைத்தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-6
இயற்கைச் சமன்பாட்டைப் பேணிக்காத்து,இயல்பாக அமைந்திருக்கும் நிலவியலின் அடிப்படையில்
குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை
என ஐந்திணைக்கோட்பாட்டை வகுத்தளித்த சங்க இலக்கியம்- காதல் உணர்வுகளை நுண்மையாக முன் வைப்பதில் உலக இலக்கியங்களை விஞ்சும் திறத்தில் அமைந்திருக்கும் சங்க இலக்கியம் - மனித மனத்தின் ஆழங்காண முடியாத நுட்பங்களையும் கூட- இயற்கைப் பொருட்களின் துணை கொண்டு அவற்றின் பின்னணியிலேயே வாசக நெஞ்சங்களில் அழுத்தமாகப் பதிக்கிறது.


அவ் வரிசையில் குறிஞ்சிக் கபிலனின் நற்றிணைப் பாடல் ஒன்று....

சங்க காலத்தில் ‘களவு’ என்ற பெயரால் அழைக்கப்பட்ட மனம் ஒன்றிய காதல் வாழ்வில் தலைவனைச் சந்திக்கத் தடை பல கடந்து இரகசியமாக வருகிறாள் ஒரு தலைவி.
அவளுக்குத் தருவதற்காகக் காதற்பரிசு ஒன்றை ஏந்தியபடி காத்து நிற்கிறான் தலைவன்.
கண் கலந்து,மனம் கலந்து...பிரிவுத் துன்பத்தின் வேதனை முழுவதையும் பேச்சால் தொலைத்தபின் மெள்ளத் தன் பரிசை எடுத்து அவளிடம் நீட்டுகிறான் அவன்.
ஆவலோடு நீண்ட அவள் கரங்கள் அந்தப் பரிசைக் கண்டதும் பாம்பைக் கண்டதைப்போலப் பதறிப் பின் வாங்குகின்றன.
காதலனுக்கோ அதைக் கண்டு ஒரே வியப்பு! ஐயம் !
மிகவும் எளிதான இந்தப் பரிசை ஏற்றுக் கொள்வதில் அவளுக்கு அப்படி என்ன தயக்கம்?
காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் இந்தக் காதலுக்காகக் காலையில் தளிர்த்து மாலையில் வாடும் தழைகளைத்தானே அவன் ஆடையாக நெய்து வந்திருக்கிறான்!
ஒரு வேளை இதைக் காட்டிலும் விலை மதிப்பில்லாத வேறு ஏதேனும் ஒரு பரிசை அவள் எதிர்பார்த்து ஏமாந்திருக்கக் கூடுமோ?
அவன் தந்ததென்னவோ வெறும் தழையாடைதான்!ஆனாலும் அது சாதாரணமான வெறும் தழை அல்ல!
காதலிக்கு அன்புப் பரிசாகக் கொடுக்கும்போது கண்ணில் பட்ட இலை,தழைகளையெல்லாம் கண்டபடி தொடுத்துத் தர அவன் மனம் ஒப்புமா என்ன?
தனது ஊரிலேயே உயரமான மலைத் தொடர் ஒன்றில் - ஆவேசமாக முட்டி மோதும் மலைஆடுகள் கூடச் சஞ்சரிக்க அஞ்சும் மலைக்காட்டில்..அபூர்வமாக விளைந்த தழைகளையல்லவா அவன் தேடித் தேடி ஆடையாக்கி எடுத்து வந்திருக்கிறான்?
ஆனால்....பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மலரும் குறிஞ்சிப்பூ போன்ற அந்தத் தழையை அவன் தேர்வு செய்ததுதான் சிக்கலுக்கே காரணம் என்பதை உணர்ச்சி வசப்பட்ட அவனது காதல் மனம் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறது.

தலைவனது காதல் பரிசைப் பெற்று அதை உடுத்திக் கொள்ளும் ஆசை தலைவிக்கும் இல்லாமல் இல்லை.
ஆனாலும் அதை உடுத்திக் கொண்டு வீடு சென்றால் அவள் அடுக்கடுக்காக ஆயிரம் கேள்விகளை எதிர் கொள்ள வேண்டியதாகிவிடும்.
அந்த இலை..அவள் வீட்டுக் கொல்லையிலோ,தோட்டத்திலோ இயல்பாக வளரக் கூடியதுதான் என்றால் பிரச்சினையில்லை!
சற்றே தள்ளிச் சமதரையில் விளைவதென்றாலும் கூடச் சமாளித்து விடலாம்.
ஆனால்...இதுவோ அவன் மலையைச் சார்ந்த தழை!
ஏறிப் பிடுங்குவதற்கு அரிதான மலை உச்சியில்..அதுவும் இன்னொரு ஊரைச் சார்ந்த மலையில் விளையும் தழை!
பெண்ணின் இயங்குதளம் வீடு மட்டுமே என்று ஆகிப் போயிருந்த ஒரு சமூக அமைப்பில் அயலூரில்...அதுவும் எவரும் எளிதில் செல்லத் துணியாத மலை ஒன்றில் விளைந்த அந்தத் தழையைத் தலைவியோ,அவளது தோழியோ அத்தனை சுலபமாகப் பறித்துவிட முடியாது என்பதை வீட்டிலுள்ளவர்கள்  மிக எளிதாக விளங்கிக் கொண்டுவிடுவார்கள். அதிலும் குறிப்பாக அவள் காதல் வயப்பட்டது முதல் அவளது ஒவ்வொரு அசைவையும் நுணுக்கமாகக் கண்காணித்துவரும் அவளது தாய் அதை மிகவும் இலகுவாக  அனுமானித்து விடுவாள்.
அதை மனதில் கொண்ட தலைவி,
‘இதை உடுத்திச் சென்றால் தாய் என்ன நினைப்பாளோ என அஞ்சுகிறேன் ‘என்ற பொருள்பட,
’உடுப்பின் யாய் அஞ்சுதுமே’’
என்கிறாள்.

உடுத்திக் கொள்ள முடியாத அந்த ஆடையை அவனிடம் உடனே திருப்பித் தந்து விடவும் அவளுக்கு மனம் வரவில்லை.
அவன் அவள்து நண்பன்..இனிய காதலன்!
அவளுக்காக ஆசையோடு மலை முகடு வரை சென்று அதைக் கொண்டு வந்து தந்திருப்பவன்.
அதை மறுதலித்தால் அவன் முகம் வாடிப் போகும்; அதையும் அவளால் தாங்கிக் கொள்ள முடியாது.
‘திருப்பித் தந்தால் அதனால் என் நண்பன் துயர் கொள்வானே’
என்பதை
’கொடுப்பிற் கேளுடைக் கேடு அஞ்சுதுமே’’
என வார்த்தையில் வடிக்கிறாள் அவள்.

இருதலைக் கொள்ளி எறும்பு போன்ற இந்த மனப் போராட்டம் தொடர்ந்து கொண்டே போகும் நிலையில்...அந்தத் தழை யாருக்கும் பயன்படாமல் வாடத் தொடங்கி விடுகிறது.
’ஆயிடை வாடல கொல்லோ தாமே’’
என அவன் அரிய முயற்சியால் பேராவலுடன் கொணர்ந்த அந்தத் தழை வாடத் தொடங்குவதைக் காட்டி,இனம் விளங்காத சோக உணர்வொன்றை எதிர்பாராத தருணம் ஒன்றில் நம் இதயத்தில் செருகிய வண்ணம் நிறைவு பெறுகிறது அப் பாடல்.

அடுத்து என்ன ஆகுமோ என்ற பரபரப்பும்,பதட்டமும் நம்மை ஆட்டி வைக்க..பாத்திரங்களின் பதட்டமான மன நிலை நமக்கும் தொற்றிக் கொண்டு விடுமாறு செய்து விடும் இப் பாடல்,
உணர்ச்சிப் போராட்டத்தின் உச்ச கட்ட நிலையாக விரியும் இந்தக் காட்சி....உலகச் சிறுகதைகளின் உயர்ந்த உத்திகளை...உன்னதக் கட்டங்களை நம் சங்க இலக்கியங்கள் என்றோ எட்டிவிட்டிருக்கின்றன என்பற்குச் சாட்சி பகர்கிறது.

’சிலம்பின் மேய்ந்த சிறுகோட்டுச் சேதா
  அலங்குகுலைக் காந்தள் தீண்டித் தாதுகக்
  கன்றுதாய் மருளும் குன்ற நாடன்
  உடுக்கும் தழை தந்தனனே யாமது
  உடுப்பின் யாய் அஞ்சுதுமே கொடுப்பிற்
  கேளுடைக் கேடு அஞ்சுதுமே ஆயிடை
  வாடல கொல்லோ தாமே அவன்மலைப்
  போருடை வருடையும் பாயாச்
  சூருடை அடுக்கத்த கொயற்கரும் தழையே’’-நற்றிணை(கபிலர்)
தலைவி கூற்றாக அமையும் இப் பாடலின் முதற்பகுதி அற்புதமான உள்ளுறைக் கருத்தைச் செறித்திருக்கிறது.
மலைப் பகுதியில்(சிலம்பு-மலை)மேயும் பசு ஒன்று,குலைகுலையாகப் பூத்திருக்கும் காந்தள் மலர்களில் மோதிக்கொள்ள, அந்தப் பூவின் மகரந்தம் ஒட்டியிருக்கும் உடலோடு அது வீடு செல்கிறது;அதைப் பார்த்து அதன் கன்று மருண்டு போகிறது.
இத்தகைய மலை நாட்டின் தலைவனாக இப் பாடல்’குன்ற நாட’னைக் கூறுகிறது.
தலைவனின் மலை நாட்டுக்கு இப்படிப்பட்ட பீடிகை ஏன்?
சங்கக் கவிதைகளில் பொருளற்ற வெற்றுச் சொற்களுக்கோ..வெற்றுக் காட்சிகளுக்கோ இடமே இல்லை.
பசுவின் மீது அறியாமல் படிந்துவிட்ட பூந்துகள் அதன் உருவத்தையே மாற்றிக் காட்டிக் கன்றை மிரள வைப்பது போல் மலைச் சாரலில் தலைவனைச் சந்தித்துவிட்டுச் செல்லும் தலைவி வித்தியாசமான ஒரு தழை ஆடையை உடுத்திச் சென்றால் அவளது தாயும் மிரண்டு போவாள்;
அங்கே கன்று...,இங்கே தாய்!
பாடலின் சாரமான உட் பொருளையே இப் புனைவின் வழி உள்ளுறையாக்கி அதன் உயிரோட்டத்தை மேலும் கூர்மைப் படுத்துகிறார் கபிலர் என்ற மாபெரும் கவிஞர்.

காதல் என்ற இயற்கையான...நுண்மையான...அந்தரங்கமான உணர்வைத் திரைப்படங்களும்,பிற ஊடகங்களும்,இன்றைய நவீன வாழ்க்கை முறைகளும் எந்த அளவுக்குக் கொச்சைப் படுத்திக் குலைத்துப் போட்டிருக்கின்றன என்பதைக் கண்கூடாப் பார்க்கும்போதுதான், சங்க அகப் பாடல்களின் சிறப்பையும், காதலின் நயத்தக்க நாகரிகத்தை அவை எந்த அளவுக்கு நாசூக்காக உணர்த்தியிருக்கின்றன என்பதையும் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
 

2 கருத்துகள் :

அப்பாதுரை சொன்னது…

அற்புதமான விளக்கம். கன்றைத் தாய்க்கும் பசுவைப் மகளுக்கும் உவமையாகச் சொல்வது புதுமை.
வெற்றுச்சொல்லுக்கு இடமில்லை என்று நீங்கள் சொல்லியிருப்பது எத்தனை பொருத்தம்!
எத்தனை இழந்திருக்கிறோம்!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அருமையான கருத்துக்கள்... விரிவான விளக்கங்கள்...

அனைவரும் சிந்திங்க வேண்டும்...

அருமையாக முடித்துள்ளது சிறப்பு...

தொடர வாழ்த்துக்கள்... நன்றி அம்மா...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....