துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

27.8.12

ஒரு கடிதம்,ஒரு கதை

ஒரு முன் குறிப்பு;
1979 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத் தொடக்கம்.அப்போது கல்லூரிப்பணியில் இருந்த நான் ஒரு பணியிடைப்பயிற்சிக்காக மதுரையிலிருந்து கோவைக்குச் சென்றிருந்தேன்.
கைபேசிகளே இல்லாத காலகட்டம்;
சாதாரணத் தொலைபேசிகளும் கூடப் புழக்கத்தில் பரவலாக இல்லை.
அப்பொழுதெல்லாம் எங்கள் செய்தி ஊடகம்,அவசரத்துக்குத் தந்தி,அவசரமில்லையென்றால் கடிதம் அவ்வளவே...
பயிற்சியின் நடுவே எனக்கொரு தந்தி வந்திருப்பதாக செய்தி கிடைத்தது.
அம்மாதான்...!
 ''surprise.kalki short story competition''என்று அதில் காணப்பட்ட வாசகங்கள் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்தின.’கல்கி’வார இதழ் நடத்திய [இப்போதும் கூடத் தொடர்ந்து நடத்தி வரும்] அமரர்கல்கி நினைவுச் சிறுகதைப்போட்டிக்கு இரண்டு மூன்று மாதங்களுக்கு முன்பு ஒரு கதை அனுப்பியிருந்த நான் அது பற்றி அடியோடு மறந்து விட்டிருந்தேன்.இந்தத் தந்தி அது பற்றியது என்பது புரிந்தாலும் மேல்விவரங்கள் தெரியாத கிளர்ச்சி..தவிப்பு..

10 வயது முதல் கையில் எழுதுகோலைப் பிடித்தபடி ’கதை எழுதப்போறேன்’என்று பொழுதெல்லாம் வீட்டு மூலையில் ஒதுங்கிக் கொண்டு எதையோ கிறுக்கித் தள்ளியபடி  அதையே என் உயிரின் ஆசையாய் வளர்த்து வந்த எனக்கு இந்தக் கதை பிரசுரமாகப்போகிறது போலிருக்கிறது என்ற நம்பிக்கை,அந்தத் தந்தியிலிருந்து கிடைத்தாலும் சரியான தகவல் தெரியாததில் -தெரிந்து கொள்ள முடியாமல் இருப்பதில்-இந்த நேரம் பார்த்து மதுரையிலிருந்து தள்ளி இருக்க வேண்டிபடி நேர்ந்ததில் சலிப்பே மேலோங்கியது...பல கதைகளை எழுதிப் பல இதழ்களுக்கு அவ்வப்போது அனுப்பியிருந்தபோதும் அதுவரை எந்தப்படைப்பையுமே அச்சில் கண்டிராத நான் அந்தத் தருணத்தில் கொண்ட பரபரப்பு இப்போதும் என் நரம்புகளுக்குள் தங்கியிருக்கிறது.

தந்தியின் புதிர் மறுநாள் அம்மா எழுதிய இன்லாண்ட் கடிதத்தால் விடுபட்டபோது ஆனந்த அதிர்ச்சியின் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டிருந்தேன் நான்...ஆம்..! அந்தச் சிறுகதை பிரசுரத்துக்கு மட்டும் தேர்வாகி இருக்கவில்லை.’அறிமுக எழுத்தாளர்’என்னும் முத்திரையோடு முதல் பரிசுக்கும் தேர்வாகி இருந்தது[அகிலன் உள்ளிட்ட மூவர் சார்ந்த நடுவர் குழு அதைத் தெரிவு செய்திருந்தது]
''first prize.kalki short story competition''என்று கொடுக்கப்பட்ட தந்தி வாசகம்... ''surprise.kalki short story competition''என்று மாறிப்போயிருந்தது.அப்போதெல்லாம் ஃபோனோகிராம் என்ற ஒன்று வழக்கத்தில் இருந்து வந்தது.யார் செவியிலோ ஏற்பட்ட கோளாறு ஒரு நாள் இரவு முழுக்க என்னைத் தவிக்க விட்டு விட்டது.

அது ஒரு புறமிருக்க....அந்த நாளிலேதான் நானும் என் நெட்டைக்கனவு நிறைவேறப்பெற்றவளாய் உலகறிய - எழுத்தாளர் என்னும் ஒரு சிறிய அங்கீகாரத்தைப்பெற்றேன்.அதைப்பகிர நண்பர் துணை இல்லாத அந்தப்புதிய சூழலில் குளியலறைக்கதவை அடைத்துக் கொண்டு கிட்டத்தட்ட பத்து நிமிடம் அழுது தீர்த்தேன். இப்பொழுது அதை நினைக்கும்போது சிறுபிள்ளைத்தனமாகப்பட்டாலும் 29 வயது இளமையின் அற்புதமான,அபூர்வமான  கணங்களில் அதுவும் ஒன்று என்று எண்ணாமல் இருக்க முடிவதில்லை.

குறிப்பிட்ட அந்தச் சிறுகதை வெளிவந்த காலத்தில் மிக அதிகமான வாசகர் கடிதங்கள் அதற்கு வந்தன. [அம்மா அதற்கென்றே ஒரு ஃபைலில் எண் போட்டு அடுக்கி வைத்திருந்தார்கள்;இன்னும் கூட அதை நான் பாதுகாத்து வைத்திருக்கிறேன்;அச்சில் முதல் எழுத்து என்பது முதல் பிரசவம் அல்லவா?]

’பருவங்கள் மாறும்’என்ற என் முதல் சிறுகதைத் தொகுப்பில் அந்தக் கதை இடம் பெற்றது. சென்ற ஆண்டு வெளியிட்ட என் தேர்ந்தெடுத்த சிறுகதைகள் அடங்கிய ‘தேவந்தி’தொகுப்பிலும் அதைச் சேர்த்திருக்கிறேன்.அந்தத் தொகுப்பிலிருந்து அதைப்படித்த வாசகர் ஒருவர் எனக்கு மின் அஞ்சலில் எழுதிய கடிதத்தையும் அதற்கு நான் அளித்த மறுமொழியையும் கீழே தந்திருக்கிறேன்,

தொடர்ந்து இன்னும் கூட ஏதாவது எழுதிக் கொண்டே இருந்தாலும்,
’’இதையெல்லாம் இந்தக் காலத்தில் யார் போய்ப் படிக்கப்போகிறார்கள்....’’என்கிற ஆயாசமும் கூட அடிக்கடி என்னுள் தலை காட்டுவதுண்டு. ஆனால்...கதை வெளிவந்து கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் சென்ற பின்  இப்போது வந்திருக்கும் இந்தக் கடிதம் என்னை உற்சாகப்படுத்தியிருக்கிறது.. ஒவ்வொரு படைப்பும் அதற்கான வாசக நெஞ்சங்களைச் சென்றடைந்துகொண்டுதான் இருக்கிறது என்ற புத்துணர்வையும் புது நம்பிக்கையையும் ஊட்டியிருக்கிறது.அந்த நம்பிக்கையுடன்..இந்தக்கடிதத்தையும்,அதை ஒட்டிய பதிவாக ஓர் உயிர் விலை போகிறது’என்னும் அந்தக் கதையையும் இணைய வாசகர்களின் பார்வைக்கு முன் வைக்கிறேன்.

கடிதம்...
அன்பின் திருமதி சுசீலாம்மா,
வடக்கு வாசலில் வெளி வந்த "தேவந்தி" தொகுப்பை வாங்கி வாசித்து வருகிறேன். முதல் கதையாக வெளி வந்திருக்கும் "ஓர் உயிர் விலை போகிறது" என்ற இக்கதையை வாசித்தவுடன் என்னுடைய உணர்வுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று எண்ணினேன். இணையம் அதற்கு உதவியது.

ஒரு சிறுகதை எழுதப்பட்டு கிட்டத்தட்ட 33 வருடம் கழித்து அதற்கான வாசகர் கடிதம் ஒன்று வருவது ஒரு வித்தியாசமான நிகழ்வு என்றே எண்ணுகிறேன்.

கதை எழுதப்பட்ட காலகட்டத்திலிருந்து, இன்றுள்ள காலகட்டம் வரை எவ்வளவோ மாற்றங்களை இந்த சமுதாயம் கண்டிருப்பினும், கதைக் கருவாக எழுதப்பட்டிருக்கிற விஷயத்திலே எந்தவொரு முன்னேற்றமும் சமுதாயத்திலே ஏற்படவில்லையோ என்ற வருத்தம். சொல்லப் போனால் சமுதாயம் இந்த விஷயத்திலே இன்னும் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறதோ என்று கூடத் தோன்றுகிறது.

இதில் ஒரு irony என்னவென்றால், சமூகத்தில் மிக உயர்ந்த சாதி என்று கருதப்படும் பிராமணர் குடும்பங்களில் இந்த இழி நிலை இருப்பது சமூக அவலத்தின் வேதனையான வெளிப்பாடு. படிப்பில் உயர்ந்து, கலை ஈடுபாட்டில் உயர்ந்து, செல்வமீட்டுவதிலும், அதிகார வர்க்கத்தின் முக்கியமான பதவிகளில் இருப்பதிலும் முன்னணியில் இருக்கும் ஒரு குலத்தை சேர்ந்தவர்களே (எண்ணிக்கையில் அப்படி செய்பவர்கள் எவ்வளவு குறைவாக இருப்பினும்) , இத்தகைய காரியங்களை செய்யத் துணியும் போது, பிறரைக் குறை சொல்வது எங்ஙனம்? நான் இங்கே சாதி உயர்வு, தாழ்வைப் பற்றிப் பேசவில்லை என்பதைத் தாங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

ஆக ஒன்று புலப்படுகிறது. படிப்பும், செல்வமும், சாதியும், இன்ன பிறவும் எந்த வகையிலும் பெண்ணை இழிவு படுத்துவதிலும், அவளை ஒரு போகப் பொருளாக மட்டுமே பார்ப்பதிலும் இருந்து இந்த சமூகத்தை மாற்ற உதவுவதில்லை.

சொல்ல வந்த செய்தியை, அனுபவத்தை மிக நேராக, உங்கள் கருத்தென்று எதையும் திணிக்காமல், சொல்லி இருக்கிறீர்கள். கொஞ்சம் கூட நாடகத்தன்மை கலக்காமல், மிகைப் படுத்தாமல். நிகழ்வை விட்டு அங்குமிங்கும் அலையாமல் மிக நேர்த்தியாக எழுதப் பட்டிருக்கிறது உங்கள் கதை.

கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் ஒருமுறையாவது பரிசு வெல்ல வேண்டும். அந்த அளவு ஒரு சிறந்த சிறுகதையைப் படைக்க வேண்டும் என்பது என்னுடைய அவா. முயற்சிகள் முழு அளவில் இல்லையென்பதே உண்மை.
1979 ல் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு வென்ற இந்த கதையை இவ்வளவு காலம் கழித்து படிக்க நேர்ந்தது என் பாக்கியம்.
நன்றி.
அன்புடன்
இளங்கோ
tnelango@gmail.com

என் மறுமொழி;
மிக்க நன்றி திரு இளங்கோ...
தொடர்ப்பயணத்தில் இருந்ததால் சற்றுத் தாமதமான பதில்.
33 ஆண்டுகள் கழித்தும் அதன் உண்மை ஒருவரை உலுப்புகிறது என்றால் அதன் காரணம் அதில் பொதிந்திருக்கும் சத்தியத்தின் வீரியம்தான்,உண்மையில் அது நான் எழுதிய இரண்டாம் கதை.ஆனால் வெளிவந்ததில் அதுதான் முதல் படைப்பு.
அது தெரிந்தவர்கள் வீட்டில் நடந்த உண்மைச் சம்பவம்.என் அம்மா அங்கு துக்கம் கேட்கப் போய் வந்து என்னிடம் அதை விவரித்தபோது என்னுள் அது அக்கினிக் குஞ்சாகப் பற்றிக் கொள்ள அதை சிறிது காலம் மனதுக்குள் ஆறப்போட்டுக் கற்பனையும் சேர்த்துக் கதையாக்கினேன்.அதுவே என்னை ஓர் எழுத்தாளராக உலகிற்கு அறிய வைத்த படைப்பு.
முதல் பரிசு பெற்றதால் அப்போதைய முகவரியும் உடன் வெளியாகக் கிட்டத்தட்ட 100க்கு மேற்பட்ட வாசகர் கடிதங்கள் அஞ்சலில் வந்தன;அவற்றுள் பல அதேஅனுபவத்தின் சாயல் தங்கள் வாழ்க்கையிலும் நடந்திருந்ததாகச் சொன்னவை.இதை நான் சுய பெருமைக்காகச் சொல்லவில்லை.வாழ்வின் உண்மையை அதே அலைவரிசைக்குள் சென்று படைப்பாக்குகையில் அது தானாகவே உள்ளத்தை அசைக்கும் வல்லமை பெற்று விடுகிறது என்பதைச் சுட்டத்தான் இந்தக் குறிப்பு.
// ஒரு சிறுகதை எழுதப்பட்டு கிட்டத்தட்ட 33 வருடம் கழித்து அதற்கான வாசகர் கடிதம் ஒன்று வருவது ஒரு வித்தியாசமான நிகழ்வு என்றே எண்ணுகிறேன். //
ஆமாம்....நீங்கள் சொல்வது நிஜம்தான்..அந்தக் கதை விஷயம் காலாவதிஆகி விட்டதோ..இனி அப்படிப்பட்ட கதைகளை எழுதுவது வீணோ என்று கூட எண்ணியிருக்கிறேன்,அது தவறென்பதை உங்கள் கடிதம் உணர வைத்து விட்டது;அதற்காக உங்களுக்கு நன்றி.இப்போதும் கூட அந்தப்படைப்பு அதற்கான வாசகரைச் சென்று சேர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்பது ஒருபுறம் மகிழ்வளித்தாலும் இது போன்ற சமூகக்கொடுமைகள் இன்னும் தொடர்வது வேதனையும் அளிக்கிறது.அந்த நிலை நீடிக்கும் வரை எழுத்தால் போராட வேண்டியதுதான்.
சுசீலா

குறிப்பிட்ட சிறுகதை; ஓர் உயிர் விலை போகிறது’...

1 கருத்து :

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வீரியமான வித்து --
காலம் கடந்தும் திறனோடு திகழ்கிறது.. பாராட்டுக்கள் !

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....