’’வேண்டியபொழுது திறக்கவும்,தேவையில்லாத நேரங்களில் அடைத்துக் கொள்ளவும் மனித மனம் ஒரு இயந்திரமில்லை ..’’
’பெருமையின் முடிவில்.’...ஆர்.சூடாமணி
தமிழ்ப்பெண் எழுத்தாளர்களில் வணிக நோக்கமற்ற இலக்கியத்தரம் வாய்ந்த தன் எழுத்துக்களால் -ஆழமான உளவியல் நோக்கால்- தேர்ந்த ரசனை கொண்ட வாசகர்களின் மதிப்பைப் பெற்றிருப்பவர் அமரர் ஆர்.சூடாமணி.
முந்நூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளை உருவாக்கியுள்ள சூடாமணி, தமது படைப்புக்களுக்காகக் கலைமகள்,கல்கி முதலிய இதழ்களிலிருந்தும்,இலக்கியச்சி
முந்நூறுக்கு மேற்பட்ட சிறுகதைகளை உருவாக்கியுள்ள சூடாமணி, தமது படைப்புக்களுக்காகக் கலைமகள்,கல்கி முதலிய இதழ்களிலிருந்தும்,இலக்கியச்சி
கணவன் மனைவிக்கிடையிலான மௌனப்போராட்டம் ஒன்றை ஆர்ப்பாட்டமின்றி அழுத்தமாக முன் வைக்கும் அக்கதை பற்றி.....
கதிரேசனின் மனைவி விமலை,ஒரு பள்ளி ஆசிரியை.விமலையின் தந்தையோடு கதிரேசனுக்கு ஏற்பட்ட ஒரு பிணக்கில் பிறந்த வீட்டு உறவையே முறித்துக் கொண்டு,அவள் தன்னுடன் வர வேண்டுமென்று அவர் ஆணையிட,அவளும் அவ்வாறே செய்கிறாள்;அதன் பிறகும் தொடர்ந்து அவ்வாறே வாழ்ந்து வருகிறாள்.
தன் சொல்லுக்குக் கட்டுப்பட்டவளாகத் தன் மனைவி நடந்து வருவதில் மிகவும் பெருமை கொண்டிருக்கிறார் கதிரேசன்.பதினேழு ஆண்டுகளுக்குப் பிறகு,கதிரேசனின் நண்பர் வழியாக விமலையின் தம்பி வேல்முருகன் இராணுவத்தில் பணியாற்றும் செய்தி கிடைக்கிறது.அந்தச் செய்தி அவளிடம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாதது கண்டு அவர் மகிழ்கிறார்.சிறிது காலம்சென்றபின் வேல்முருகன் போரில் இறந்துவிட்ட செய்தியும் அதே நண்பர் வழி கிடைக்கிறது.இம் முறை மனம் நெகிழ்ந்து போன கதிரேசன்,மனைவியின் துன்பத்தை அவளுடன் பகிர்ந்து கொண்டு அவளுக்கு ஆறுதல் அளிக்க வேண்டும் என்ற உண்மையான தவிப்புடன் அவளை நாடி வருகிறார்.
ஆனால்..விமலையின் உள்ளமோ இப்போது இறுகிப் போய்க் கிடக்கிறது.தம்பியின் சாவில் அவளுக்கு வருத்தமிருந்தபோதும்,அதைப் பற்றி எதுவும் அறியாதவளைப் போலவே அவள் அவரிடம் நடந்து கொள்கிறாள்.
தனது ஆதிக்கத்தை மனைவி மீறியிராதது தனக்குக் கிடைத்த வெற்றி என இதுவரை இறுமாந்திருந்த கதிரேசன்,தான் பாராட்டி வந்த போலிப் பெருமையால் மனைவியின் உள்ள உணர்வுகளை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமல் போனது உண்மையில் தனக்கு ஓர் பேரிழப்பே என்பதை இறுதியில் புரிந்து கொள்கிறார்.
மனைவியின் பணிந்து போதலில் கதிரேசன் கொண்டிருந்த பெருமித உணர்வே கதையின் மையப் புள்ளி. முழுக்கதையும் அதை நோக்கிய விவரிப்பும்... சம்பவப்பின்னல்களும் மட்டுமே.
கணவரின் ஆணைக்காகத் தன் பிறந்த வீட்டு உறவுகளைத் துறந்து வந்திருந்தாலும் எண்ணங்களால் அவர்களைத் துறக்க முடியாமல் தவிக்கிறாள் விமலை.’’இன்பமும் துன்பமும் பாசமும் ஞாபகமுமாகப் பதினேழு ஆண்டுகளாய்க் குமுறும் நினைவுகள்..’’அவளை அலைக்கழிக்காமலில்லை.ஆனால்..அவ்
வாறான தருணங்களில் தன் கணவர் குறுக்கிடும்போது அவரிடம் தன் சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்ள அவள் விரும்புவதில்லை.‘’என்ன யோசிச்சுக்கிட்டிருக்கே..’’என்ற அவரது கேள்விக்கு ‘’ஒண்ணுமில்லையே’’என்னும் ஒற்றைச் சொல் மாத்திரமே அவளது சாசுவதமான பதிலாக இருந்துகொண்டிருக்கிறது.அவளது பதிலில் இருக்கும் பொய்மையை உணர்ந்திருந்தாலும் -பொய்யான அந்தப் பதிலைத் தனது தன்முனைப்புக்கு-’ஈகோ’வுக்குக் கிட்டிய வெற்றியாகவே நினைத்துக் கொள்கிறார் அவர்.
‘’அந்த ‘ஒண்ணுமில்லே’ அவருடைய வெற்றி. அவள் தன் உணர்ச்சி எதையுமே அவரிடம் காட்டிக் குறுக்கிடாமல் தனக்கு ஒரு தனித்துவம் இருப்பதாகவே இல்லாமல், எதிலும் அவர் பேச்சையும்,மன நிலையையுமே அனுசரித்துப் போவது அவருடைய வெற்றி அல்லாமல் வேறென்ன..?அவருள் சுய திருப்தியின் வெதுவெதுப்பு இதமாக ஓடியது’’
பிறந்தக பந்தங்களிலிருந்து வேர் பறிக்கப்பட்டதால் பொசுங்கிப் புண்ணான மன உணர்வுகளைக் கணவரிடம் காட்டாமல் மறைத்து வைப்பதைத் தன் ஆதிக்கத்தின் வெற்றி என்று அவர் நினைத்துக் கொண்டிருக்க..அவளோ தனக்கு எஞ்சியிருக்கும் தன்மானம் அது ஒன்றுமட்டும்தான் என்று எண்ணியவளாக அதில் உறுதியாய் இருக்கிறாள்.வீட்டில் செலாவணியாகக் கூடியது கணவரின் விருப்பம் மட்டுமே..தனக்கென்று எதுவும் தேவையில்லை என அவரது பெருமைக்குத் தீனி போடுவதைப்போல வெளித் தோற்றத்தில் நடந்து கொண்டாலும் - தனக்கே உரிய ஒரு அந்தரங்கமாகத் தன் உள்ளத்தின் ஒரு மூலையில் தன் சோகத்தை அவள் அடை காத்து வராமல் இல்லை. ஆனால்....அவராலேயே மூடப்பட்டு விட்ட அந்த இருட்டறையை அவருடன் பகிர்ந்து கொள்ள அவளுக்கு விருப்பமில்லை.
‘’அவள் தன் வாழ்வின் ஒரு பகுதியை நிரந்தரமாகத் தவிர்த்து விட வேண்டுமென்று அவர் ஆணையிட்டார்.அதன்படி கட்டுக்குள் அடங்கிக் கொண்ட அவள் மரணத்தின் முன்னிலையில் கூட அந்தக் கட்டைத் தளர்த்தப்போவதில்லை.அவர் இல்லாமற் செய்து விட்ட ஓர் உறவுக்கு அவள் தன் பேச்சினால் அவர் முன் மீண்டும் இருப்புத் தரப்போவதில்லை’’
என்று எண்ணியபடி இறுகிப் போய்க் கிடக்கிறது விமலையின் மனம்.
கதையின் இறுதிப் பகுதியில்,தன் தம்பியின் சாவுச் செய்தி கேட்டு மனம் கசிந்து தன்னைத் தேற்ற வரும் கணவரின் ஆறுதலில் இளைப்பாற மனமின்றி அவள் ஒடுங்கிக் கொள்வது இதனாலேதான். இராணுவ வீரனான தம்பிக்கு நேர்ந்து விட்ட சோக முடிவை அறியாதவளைப் போலவும்,அறிந்தாலும் அதனால் பாதிக்கப்படாதது போலவும் தன் முன்னிலையில் அவள் நடந்து கொள்வதைக் கண்டு உண்மையாகவே பெரிதும் அதிர்ந்து போகிறார் கதிரேசன்.அந்த மரணத்தைப் பற்றிய உரையாடலை அவர் தொடங்கும் தருணங்களிலெல்லாம் அவள் அதை மட்டும் கவனமாகத் தவிர்த்து விட்டுப் பிற விஷயங்களையே பேசுகிறாள்.
‘என் மனிதர்களைத்தான் ஒதுக்கி விடச் சொன்னாயே,இப்போது இந்த துக்கத்தில் உனக்கு என்ன சம்பந்தம்’என்பது போன்ற பாவனையுடன் -எதுவுமே நடக்காதது போல அவள் நடந்து கொள்ளும் போக்கு இதுவரை அறிந்திராத ஒரு உண்மையை அவருக்குப் புரிய வைக்கிறது. இத்தனை நாட்களாகத் தான் பெருமை எனக் கொண்டாடியதும்,வெற்றியெனப் பூரித்ததும் மடமை என்பது அவருக்கு இந்தக் கணத்திலேயே உணர்வாகிறது.
தான் தர முனையும் ஆறுதல் தேவையில்லை என்று மனைவி புறந்தள்ளி ஒதுக்கி விட்டதால், தண்டனை அளித்தவரே இப்போது தண்டிக்கப்பட்டவராய் மாற்றம் பெற்று விடுகிறார்;மனைவியின் முழுமையான அன்பைப் பெறத் தகுதியற்ற ஏழையாக.....மாபெரும் இழப்புக்கு ஆளானவராகத் தன்னை அவர் உணர்கிறார்.
இரண்டு பேரும் பொய்யாக நடித்துக் கொண்டிருக்கிறோம் என்பது,இருவருக்குமே தெரிந்தாலும் ஓர் எல்லையைத் தாண்டிச் சென்று அந்தப் பொய்மைச் சுவரை உடைக்க முடியாதபடி அவ்விருவரின் தன்முனைப்பே அவர்களைத் தடுத்து விடுகிறது.பிரச்சினை குறித்து இருவரும் மனம் விட்டு விவாதிக்காத அந்தக் கட்டத்திலேயே கதை முடிந்தும் விடுகிறது;அதுவே கதையின் வெற்றியுமாகிறது.
கணவன் - மனைவிக்கிடையிலுள்ள பூசலை வெளிப்படையான ஏசல்களாலோ கடுமையான வார்த்தைகள் மூலமோ முன் வைக்காமல் அக மனப் போராட்டமாக மட்டுமே ஆக்கியிருப்பது சூடாமணியின் கலை நுட்பநேர்த்திக்குச் சான்று.
அவள் மனம் விட்டு நாலு வார்த்தை திட்டித் தீர்த்திருந்தால் கூட அவர் ஆறுதல் அடைந்திருக்கக் கூடும்.
‘என்னை வாயில் வந்தபடி திட்டி மனப் பாரத்தைக் குறைத்துக் கொள்ளேன்’
என்று அவர் நெஞ்சம் புலம்புகிறது.ஆனால் அப்படி எதுவும் செய்யாமல் சற்றும் சலனமற்றிருப்பதன் மூலமே அவரது கொடுமையின் ஆழத்தை அவருக்குப் புரிய வைத்து விடுகிறாள் அந்த மனைவி.
வேண்டியபொழுது திறக்கவும்,தேவையில்லாத நேரங்களில் அடைத்துக் கொள்ளவும் மனித மனம் ஒரு இயந்திரமில்லை என்பதே இக் கதை வாசகர் முன் வைக்கும் தரிசனமாக அமைந்திருக்கிறது.முழுமையான மனப் பகிர்தல் இருக்கும் நிலையிலேயே கணவன் - மனைவி உறவு என்பது,பொருளுடையதாகிறது;மாறாக ஒருவரின் ஆதிக்கத்தில் ஒருவர் அடங்கிப் போவதென்பது,அந்தக் கணத்தில் ஒரு பெருமித உணர்வை அளித்தாலும் அந்தப் போலிப் பெருமையின் முடிவில் கிடைப்பது முழுமையான அன்பின் இழப்பே என்பதை நயமாக உணர்த்தும் இந்தச் சிறுகதையைச் சூடாமணியின் சிறந்த படைப்புக்களில் ஒன்றாகக் கூற முடியும்.
இணைப்புக்கள்;
4 கருத்துகள் :
நல்ல சிறுகதையை படித்த மனநிறவைத் தந்தது பெருமையின் முடிவில் சிறுகதை... பகிர்வுக்கு நன்றி...
சூடாமணி அவர்களைப் பற்றி ‘திண்ணை’ அல்லது ‘மரத்தடி’யில் படித்த ஞாபகம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அவர் எழுதிய கதை எதுவும் படிக்கவில்லை. தங்களின் கதைச் சுருக்கமே அதன் தரத்தை நேர்த்தியாகச் சுட்டுகிறது.
நல்ல அறிமுகத்திற்கு நன்றிகள்.
நன்றி நண்பர்களே..
’அழியாச்சுடர்’தளத்தில் சூடாமணி கதைகள் கிடைக்கின்றன.இப்போது சிறுகதைகளைத் தொகுப்பதற்காகவே ஒரு தனித் தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
http://www.sirukathaigal.com/
அதிலும் சூடாமணியின் படைப்புக்கள் கிடைக்கும்.
தங்களது இந்த தொடர் .. என்னைப் போன்று சிறுகதை எழத நினைக்கும் நபர்களுக்கு ஒரு முக்கியமான பதிவாகும்
தொடர்ந்து வாசித்து, தாங்கள் முன் வைக்கும் எழுத்தாளுமைகளை வாசித்து புரிந்து கொள்கிறேன்
கருத்துரையிடுக