துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

12.8.12

’இடியட்’-இந்தி திரைப்படம்

’’பொன்னியின் செல்வனைப் படமாக்குவது எப்படிக் கடினமோ அது போல தஸ்தயெவ்ஸ்கியைப் படமாக்குவதும் கடினம்தான்...’’

நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தரும் நாவல்கள் பலவும் திரைப்படமாக்கப்படுகையில் அந்த அனுபவத்தைத் தரத் தவறி விடுவதையோ அல்லது அவ்வாறான ஓர் அனுபவத்தை நாம் பெற முடியாமல் போவதையோ நான் பல முறை உணர்ந்திருக்கிறேன்
[அதற்குச் சிறந்த உதாரணம் தி ஜானகிராமனின்’மோக முள்’;
விதி விலக்கு ஜெயகாந்தனின்  ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’மற்றும்’ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்’]

பெரும்பாலும் இவ்வாறு நேரக் காரணம் நாவல் வாசிக்கும்போது நம் கற்பனையில் - அந்தத் தருணத்தில் உருவான உலகைத் திரையில் நாம் விரும்பியபடி காண முடியாமல் போவதுதான். இயக்குநர் மற்றும் நடிகர்கள் நாவலின் ஜீவனைச் சரிவர உள் வாங்காமல்,சரியான திரைக்கதை அமையாமல் போகும்போதும் இதே வகையான  ஏமாற்றம் நேர்கிறது.
 பிரபல இந்தி இயக்குநர் மணிகவுலின் இயக்கத்தில் 1992இல் வெளிவந்த இந்தி திரைப்படம் ‘இடியட்’டை அண்மையில் 12ஆவது ஆசிய அரேபிய திரைப்பட விழாவில் கண்டபோது எனக்கு நேர்ந்ததும் அதுவே.


ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் ‘இடியட்’ நாவலை ஆங்கில வழி மொழியாக்கமாக அண்மையில்  நான் செய்திருப்பதால் அது இந்தியில் திரைப்படமாக எப்படிக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ளும் ஆவல் எனக்குச் சற்றுக் கூடுதலாகவே இருந்தது. முன்பே வெளிவந்திருக்கும் ஒரு படத்தை இத்தனை நாள் தவற விட்டு விட்டோமே என்ற ஆதங்கமும் கூடவே....
மணிகவுல்
சிறந்த இந்தி இயக்குநர்களில் ஒருவராக அறியப்படுயும் மணிகவுல், ‘90களில்  3 மணிநேரப்படமாக தூர்தர்ஷனுக்குத் தயாரித்துக் கொடுத்திருக்கும் இந்த இந்தி ‘இடியட்’,ஃபிலிம்ஃபேர் விருது பெற்றிருக்கிறது; அயல்நாட்டுப் பட விழாக்களிலும் இடம் பெற்றிருக்கிறது. இதைப்பார்ப்பதென்பது பட விழாக்களில் மட்டுமே சாத்தியம் என்பதால் ரக்‌ஷாபந்தன் நாளன்றும் கூடக் குறிப்பிட்ட அந்த அரங்கில் இருக்கைகள் நிரம்பியிருக்க,பலரும் தரையில் உட்காருவதில் கூடத் தயக்கம் காட்டாதது என் ஆர்வத்தை மேலும் அதிகரித்துக் கொண்டே சென்றது;  ஆனால் படம் தொடங்கிய அரை மணி நேரத்திலேயே என் எதிர்பார்ப்புக்கள் பொய்த்துப் போகத் தொடங்கின.

இடியட் போன்ற மிக நீண்ட [4 பாகங்கள்]அகமுகச் சிக்கல்கள் கொண்ட மிக விரிவான ஒரு படைப்பைத் திரையில் அப்படியே கொண்டு வருவது எந்தக் கலைஞனுக்கும் அசாத்தியமானதே, ஆனாலும் இந்தப் பட ஆக்கம் நாவலின் ஜீவனில் 25,30 சதம் கூட வெளிப்படுத்தாததே  மிகுந்த ஏமாற்றமளிப்பதாக இருந்தது.

ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் மும்பை ஆவதையும்,மாஸ்கோ தில்லி ஆவதையும்,ரஷியாவின் கோடை வாசத்தலமாகிய  பாவ்லோஸ்க், கோவா ஆவதையும்   நஸ்டாஸ்யா ஃபிலிப்போவ்னா நஸ்டாஸ்யா முகோபாத்யாயா ஆவதையும் ஏற்கலாமென்றால் படத்தை முழுக்க முழுக்க ஒரு தழுவல் பாணியில் - வட இந்தியக் கலாச்சாரப்பின்புலத்தில் மட்டுமே அமைத்திருந்தால் மட்டுமே அது சாத்தியம்; ஆனால் இங்கோ வட இந்திய நகரங்களில் கதை நடக்கிறது; பாத்திரப்பெயர்களும் அந்தச் சூழலுக்கேற்றவை. ஆனால் மூலத்தை மாற்றாமல் தர வேண்டும் என்ற ஆர்வக் கோளாறு காரணமாக பிரின்ஸ் மிஸ்கின் என்ற பெயர் மட்டும் அப்படியே தக்க வைக்கப்பட்டிருப்பதும், வட நாட்டுப் பின்புலத்துக்குப் பொருந்தாத காட்சி அமைப்புக்களும் சேர்ந்து படத்தை  இரு வகைக் கலாசாரங்களின்  அவியலாக ஆக்கி விட்டிருக்கிறது.- இதன் விளைவு....சமோசாவுக்குத் தொட்டுக் கொள்ளும் இனிப்பு கார சட்னிகளையும் ரசபூரித் தண்ணீரையும் தொட்டுக் கொண்டு மசாலா தோசையைச் சுவைப்பது போன்ற அனுபவத்தைப்  படம் அளித்து விடுகிறது..

நாவலின் ஆதாரமான காட்சிகளைத் தவற விடக்கூடாதென்ற முயற்சி படத்தில் மேற்கொள்ளப்படாமல் இல்லை; எனினும் அந்தக் காட்சிகளுக்கு இடையிலான இயைபு பொருத்தமாகக் கோர்க்கப்படாததால் - முன்பே இந்த நாவலைப் படித்து விட்டுப் படம் பார்க்க வந்திருப்பவர்களைத் தவிரப் பிறருக்கு விளங்காத வகையில் அவை துண்டு துண்டாய் நின்று விடுகின்றன.

தஸ்தயெவ்ஸ்கியின் ‘இடியட்’அற்புதமான ஒரு கதாபாத்திரம்.
அந்தப் பாத்திரத்தின் முழுமையான ஆளுமையும் இனிய பண்புகளும் படத்தில் வெளிப்படுத்தப்படவில்லை என்பது ஒரு பெரும் குறை அந்தப்பாத்திரத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட நடிகரின் [ பாகிஸ்தானிய நடிகர் அயூப்கான் தின்] உடலமைப்பும் முகத் தோற்றமும் மிஷ்கின் பாத்திரத்துக்கு ஏற்றவைதான்...ஆனாலும் அந்தப் பாத்திரத்தை உள்வாங்கிக் கொண்டு அதன் தன்மைகளை வெளிக்காட்டும் காட்சி அமைப்புக்கள் இல்லாததால் அவர் நடிப்பு மொண்ணையாகவே நின்று விடுகிறது.எதிலும் எவரிடமும் குறை காணாத குழந்தை போன்ற பரிசுத்தமும் களங்கமின்மையும் கொண்டவன் மிஷ்கின்; அப்பாவித்தனமும் அறிவும் சம விகிதத்தில் இணைந்த வினோதமான அந்தப் பாத்திரத்தை உரிய வகையில் நடிகர் கான்தின்  வெளிப்படுத்தாததால் அருமையான -அற்புதமான இயல்புகள் படைத்த அந்த அசடன் சராசரித்தனமான ஒரு கோமாளி அசடனைப் போலவே திரையில் காட்சிப்படுத்தப்பட்டது, படத்தின் மிகப்பெரும் குறை என்று எனக்குப் பட்டது.

மற்றுமொரு தவறான தேர்வு, எதிர்நிலைப்பாத்திரமான ரோகோஸின் [இந்தப்படத்தில் ரகுசன்] பாத்திரத்துக்கு ஷாருக்கானின் தேர்வு.

ஒரு புறம் வஞ்சமும் வன்மமுமாய் வெறி பிடித்துத் திரியும் அவனின் இன்னொரு பக்கம் மிஷ்கினை உள்ளார்ந்து நேசிக்கவும் செய்வது. நஸ்டாஸ்யா மீது பைத்தியக்காரத்தனமான மோகம் கொண்டு அலைவது.  இவற்றில் எதையுமே வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புக்களை இயக்குநர்  உரியபடி அமைத்துத் தராததால் அருமையான நடிப்புத் திறனைக் காட்டும் திறன் பெற்ற நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான்அசட்டுத்தனமான சிரிப்புடன் மட்டுமே சஞ்சரிக்கும் மிகச் சாதாரணமான ஒரு பாத்திரமாக மோசமான முறையில் வீணடிக்கப்பட்டிருக்கிறார்...

இந்திப்படப் பின்புலத்தோடு ஒட்டாத உடையமைப்பு நஸ்டாஸ்யாவுடையது.மூன்று மணிநேரக்காட்சிப்படுத்தலில் அவள் பாத்திரமும் அவளது அவலத்துக்கான காரணமும் தெளிவாக்கப்படாததால் மலிவான வில்லி போன்றதொரு தோற்றமே அவள் பாத்திரத்துக்குக் கிடைத்து விடுகிறது.[நஸ்டாஸ்யா பாத்திரம் ஏற்றிருந்த நடிகை அன்றைய திரையிடலின்போது நேரில் வந்திருந்தார்;தன் அனுபவங்ககள் சிலவற்றையும் பகிர்ந்து கொண்டார்;ஆனால் ‘இடியட்’பட நினைவுகள் அவர் மனதில் தங்கவில்லை என்றார்.அதற்குரிய  காரணம் என்னவாக இருந்தாலும், படத்தில் அந்தப் பாத்திரத்துக்குத் தர வேண்டிய முறையான அழுத்தம் தரப்படாததும் கூட-அது அவர் நினைவில் மங்கலாகிப் போனதற்குக் காரணமாக இருக்கலாம் என்று தோன்றியது.]

அக்லேயாவும்[படத்தில் அம்பா] நஸ்டாஸ்யாவும் எதிர்ப்பட்டு மோதும் இறுதிக்கட்டக் காட்சியும்,நஸ்டாஸ்யா இறந்த பிறகு அவளைக் கொலைசெய்த ரோகோஸினுடன் மிஷ்கின் ஒன்றாகப் படுத்துறங்குவதும், கொலையாளிக்கே ஆதுரம் நல்குவதுமான நாவலின் ஜீவனுள்ள கட்டங்கள் படத்தில் உயிரோட்டமாகக் காட்சிப்படுத்தப்படவில்லை.

பொன்னியின் செல்வனைப் படமாக்குவது எப்படிக் கடினமோ அது போல தஸ்தயெவ்ஸ்கியைப் படமாக்குவதும் கடினம்தான்...ஆனாலும் இன்னும் சற்று வேறுவகையான யோசிப்பும்,உழைப்பும்,அணுகுமுறையும் இருந்திருந்தால் நாவலின் ஒரு சிறு நுனியையாவது திரைப்படம் தொட்டிருக்க முடியும்.

பி.கு;
2ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் தொலைக்காட்சியில் தொடர்ந்து ஒளிபரப்பான
ரஷிய‘இடியட்’திரைப்படம் [சப் டைட்டில்களோடு கூடியது] நாவலின் மூலத்துக்கு நெருக்கமாக அமைந்திருந்தது.
திரையுலக மேதை அகிரா குரோஸாவா ஜப்பானிய மொழியில் இதைத் திரைக்குத் தந்திருக்கிறார்.


அசடன்:சில முன் குறிப்புகள்-கதைச் சுருக்கம்-1

1 கருத்து :

இளங்கோ சொன்னது…

நீங்கள் சொன்னது போல இடியட்டை திரையில் கொண்டு வருவதென்பது மிகக் கடினமே. அகிரா குரசேவா அவர்களின் படத்தைப் பார்க்க வேண்டும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....