துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

25.9.11

அசடன்:சில முன் குறிப்புகள் [2]



’’நாவலின் முதல் 50,60 பக்கங்களை மட்டும் கடந்து சென்று விட்டால்...பிறகு உணர்ச்சிமயமானதும்,இங்கே நமக்கு நன்கு பரிச்சயமானதுமான ஒரு உலகம்தான் அங்கேயும் காத்திருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.’’

தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புக்களை ரஷ்ய மூலத்திலிருந்து ஆங்கிலத்தில் பெயர்த்துள்ள பல மொழியாக்கங்களில் - மூலத்துக்கு மிக நெருக்கமாகவும் சிறப்பாகவும் CARNACE GARNETT இன் மொழிபெயர்ப்பே கருதப்பட்டு வருகிறது.
குற்றமும் தண்டனையும் நாவலை மொழிபெயர்க்க CARNACE GARNETT இன் ஆங்கில மொழிபெயர்ப்பே எனக்குத் துணை புரிந்தது.அசடனுக்கும் அவ்வாறே.
அந்த மொழிபெயர்ப்பில் எனக்குத் தெளிவு கிடைக்காத ஒரு சில இடங்களில்,மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ஆங்கில மொழிபெயர்ப்பையும்( JULIUS KATZER) ஆங்காங்கே ஒப்பு நோக்கிக் கொண்டேன்.வேர்ட்ஸ்வர்த் கிளாசிக் மொழியாக்கமும் ஓரளவு உதவியபோதும் அது முழு நாவலின் பெயர்ப்பாக இல்லை;பல இடங்கள் அதில் சுருக்கப்பட்டிருக்கின்றன.முழுமையான-சுருக்கப்படாத மொழி மாற்றம் செய்ய
CARNACE GARNETT இன் மொழிபெயர்ப்பே ஏற்றதாக இருந்தது.

பொதுவாகவே மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்களை அணுக நமக்குள் ஒரு தயக்கம் இருந்து கொண்டே இருப்பது உண்மைதான்...
மொழியாக்கங்களுக்குப் போதிய அங்கீகாரம் கிடைக்கப்படாமல் இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.

’’அயல்நாட்டுக் கதையைச் சொல்வதன் விசேஷ நோக்கம் என்ன?விசித்திர விபரீத உடையுடன்,பாஷையுடன் காணப்பட்டாலும் - அதற்கும் அப்புறத்திலிருந்து துடிக்கும் மனித இயற்கையைக் காண்பிக்க முயற்சிக்கிறான்’’(மணிக்கொடி,நவ.1937.)
என்கிறார் தமிழின் முதன்மைப் படைப்பாளியும் பிறமொழிக்கதைகள் பலவற்றைத் தானே மொழிபெயர்த்தளித்திருப்பவருமான புதுமைப்பித்தன்.

தல்ஸ்தோய்..தஸ்தயெவ்ஸ்கி ஆகியோரின் படைப்புக்களையும் ஆள்பெயர் மற்றும் இடப்பெயர்களைக் கண்டு மலைத்தபடியும்,அந்தக் கலாச்சாரப் பின்புலத்தைச் சற்று சிரத்தையோடு புரிந்து கொள்ள மனமின்றியும் சற்று தயங்கி நின்று விட்டால் சிறந்த உலக இலக்கியங்களைப் படிக்கும் வாய்ப்பை நாம் தவற விட்டதாகவே ஆகிப் போகும்.
‘பெயரில் என்ன இருக்கிறது..?’என்ற புகழ் பெற்ற வாசகத்தை நினைவுபடுத்திக் கொண்டபடி நாவலின் முதல் 50,60 பக்கங்களை மட்டும் கடந்து சென்று விட்டால்...பிறகு உணர்ச்சிமயமானதும்,இங்கே நமக்கு நன்கு பரிச்சயமானதுமான ஒரு உலகம்தான் அங்கேயும் காத்திருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இடியட்/அசடன் நாவலும் அப்படிப்பட்டதுதான்...
ரஷ்ய சிற்றரசப் பரம்பரை ஒன்றின் வாரிசான மிஷ்கின்(லேவ் நிகொலெவிச்)
பெற்றோரை இழந்து குடும்ப நண்பரின் பராமரிப்பில் விடப்பட்டவன்; இளமை முதலே சற்று மன நிலைப் பிறழ்வும் வலிப்பு நோயும் உள்ளவனாக இருந்த அவன் மன நல மருத்துவர் ஒருவரின் தனிப்பட்ட கண்காணிப்பில் சுவிட்சர்லாந்தில் நீண்ட காலத்தைக் கழித்த பிறகு - தான் இது வரை காண்டிராத தன் தாயகத்துக்கு-தனக்கு அறிமுகமாகியிருக்காத ஒரு மனித சமூகத்தை நோக்கி வருகிறான்.அங்கே அவன் எதிர்ப்படும் எதற்குமே இதுவரை அவன் பழகியிருக்கவில்லை என்பதால் அவை அவனுக்குப் புரியாத புதிர்களாகவே இருக்கின்றன.அவனது அறிதல் என்பது உலகியல் அளவுகோல்களுக்குள் அடங்காத ஒன்றாக அமைந்திருப்பதால்...உலகம் அவனை அசடனாக்கிப் பரிகசிக்கிறது;தனது முந்தைய நோய்வாய்ப்படலால் அவனுக்குமே தன்னைப் பற்றிய தாழ்வுணர்ச்சி இருந்து கொண்டே இருக்கிறது..அதே வேளையில் தான் அசடனில்லை என்பதையும் அவன் புரிந்தே வைத்திருக்கிறான்.


’’ஒரு காலத்தில் நான் மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தபோது - உண்மையிலேயே கிட்டத்தட்ட ஒரு அசடு போலத்தான் இருந்தேன்.ஆனால் அதன்பின் வந்த கொஞ்ச நாட்களிலேயே அந்தக் கட்டத்தைத் தாண்டி வந்து விட்டேன்.அதனால் என் முகத்துக்கு நேராக என்னை அசடன் என்று எவராவது சொன்னால் அதை நான் விரும்புவதில்லை’’-
என்கிறான் அவன்..


அசடனோ அறிவாளியோ அவனது உள்ளம் ஒரு குழந்தையைப் போலப் பரிசுத்தமானது...கபடற்றது; உலகின் சூது வாது பொய் புரட்டல்களுக்கு அப்பால் சஞ்சரித்துக் கொண்டிருப்பது. எதையும் யாரையும் - எவரது எந்தச் செயலையும் தவறாக எண்ணத் தயங்குவது .
தன்னைக் கொலை செய்ய வருபவனையும்,தன்னிடமுள்ள பணத்தைச் சுரண்ட வருபவனையும்,தன்னை வன்மத்தோடு அணுகுபவனையும் கூட அவனால் வெறுத்து ஒதுக்க முடிவதில்லை.
தன்னைப் பைத்தியமாக்கி அலைக்கழித்தாலும் அவ்வாறு செய்யும் இரண்டு பெண்களிடத்திலும் அவன் கொண்டிருக்கும் நேசமும் கருணையும் எள்ளளவும் 
குறைவதில்லை.
கருணையை முன்னிறுத்திக் காதலையே துறக்கும் எல்லை வரை அந்தக் குணம் அவனை இட்டுச் சென்றாலும் கூட அவன் அதிலிருந்து தன்னை மாற்றிக் கொள்ள ஆயத்தமாக இல்லை என்பதோடு அந்தக் கட்டத்தில் தன்னையே அதற்குக் கள பலியாக்கவும் அவன் துணிந்து விடுகிறான்.
அதனாலேயே உலகத்தின் பார்வையில் அவன் அசடன்..
ஆனால்...நாவலின் அனைத்துக் கதைப் பாத்திரங்களும்-அவனுக்கு எதிரான நிலைப்பாடு எடுக்கும் நபர் உட்பட
அவன் ஒரு பரிசுத்தமான ஆத்மா
என்பதை ஆமோதிக்கவும் அங்கீகரிக்கவும் தவறுவதே இல்லை..


’’நான் உங்களை மிகவும் உண்மையான..மிகவும் நேர்மையான ஒரு மனிதராகக் கருதி வருகிறேன்...
உங்கள் மனத்தைப் பற்றி...மன ரீதியாக நீங்கள் பாதிக்கப்படுகிறீர்கள் என்று அவர்களெல்லாம் சொவது கொஞ்சமும் நியாயமற்றது...
நீங்கள் உண்மையிலேயே மனதளவில் பாதிக்கப்பட்டவராக இருந்தாலும் கூட உங்களுடைய மனத்தின் ஒரு பகுதி அவர்களுடையதை விட உயர்ந்தது என்றே நான் நினைக்கிறேன்...
உண்மையில் அப்படிப்பட்ட ஒரு மனத்தை அவர்களால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.’’
என்கிறாள் அவனை நேசிக்கும் அக்லேயா...

’’ஐயோ இளவரசே நீங்கள்தான் எவ்வளவு இனிமையாகவும் குழந்தையைப் போல ஒரு அப்பாவியாகவும் இருக்கிறீர்கள்...எப்படிப்பட்ட களங்கமற்ற பரிசுத்தமான துறவியைப் போன்ற வாழ்க்கை முறை உங்களுடையது’’
என்கிறான் முரட்டுத்தனமே வாழ்வாகக் கொண்ட கெல்லர்.
[அடுத்த பதிவில் மேலும்...]

காண்க;



3 கருத்துகள் :

R. Gopi சொன்னது…

\\ஐயோ இளவரசே நீங்கள்தான் எவ்வளவு இனிமையாகவும் குழந்தையைப் போல ஒரு அப்பாவியாகவும் இருக்கிறீர்கள்...\\

கரமசாவ் சகோதரர்கள் நாவலிலும் இதுபோல ஒரு இடத்தில் வரும். இவான் அலெக்ஸியிடம், "தன் முன் நீளும் துப்பாக்கியைக் கூடத் தாயின் இடுப்பில் இருக்கும் குழந்தை துப்பாக்கி வைத்திருப்பவர் தனக்கு ஏதோ விளையாடும் பொருள் ஒன்றைத் தருகிறார் என்றெண்ணி ஆர்வமுடனும் புன்சிரிப்புடனும் கைநீட்டி அந்தத் துப்பாக்கியைத் தொடவும் பெறவும் எத்தனிக்கும்".

'பரிவை' சே.குமார் சொன்னது…

அசடன் முன் குறிப்பு அருமை.

முனைவர் ச.இரமேஷ் சொன்னது…

உண்மையில் மொழிபெயர்ப்பு நூல்கள் அதிகம் படிக்கப்படாமைக்கு அதன் அயல்தன்மை காரணமல்ல.அதன்விலையும் வாங்கும் பொருளாதாரம் இன்மையும்தான்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....