துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

11.9.11

’’படியாய்க் கிடந்து ..’’

’’வைணவ சரணாகதித் தத்துவத்தைக் குலசேகரர் போல எளிமையாக நெகிழ்வாகப் பிற எவரிடமும் உணர முடிந்ததில்லை.’’


குலசேகர ஆழ்வார் சேர மன்னராக இருந்தவர்.

அரச போகங்களிலும்,செல்வக் குவிப்பிலும் நாட்டம் செலுத்தாமல் 
திரு வேங்கட மலையில் (திருப்பதி)

செண்பக மரமாய்..
தம்பகமாய்...
காட்டாறாய்..
மலையேறும் படியாய்.
இப்படிப் பலவாக..
பலவற்றில் ஏதேனும் ஒன்றாகத் தான் இருக்க விரும்புவதாகச் சொல்லும் அவரது ‘ஊனேறு செல்வத்து ’என்னும் 
பெருமாள் திருமொழிப்பாசுரம் மிகவும் புகழ் பெற்றது;உருக்கமானது.

கம்பமத யானைக் கழுத்தகத்தின் மேலிருந்து   
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்
எம் பெருமான் ஈசன் எழில் வேங்கட மலை மேல்
தம்பகமாய் நிற்கும் தவமுடையேன் ஆவேனே’’
என்னும் பாடலும் அந்த வரிசையில் இடம் பெற்றிருப்பதே.


மதம் கொண்டதும் நடுக்கத்தை ஏற்படுத்துவதுமான யானையின் மேல் அமர்ந்து (கம்பம்; நடுக்கம்-இதற்குக் கட்டுத்தறி எனப் பொருள் கொள்வோரும் உண்டு)இன்ப நுகர்ச்சி தரும் செல்வத்தைத் துய்க்கும் பேறும்,இந்த மண்ணை ஆளும் அரசாட்சியும் எனக்கு வேண்டியதில்லை..
எம்பெருமானாகிய ஈசன் குடி கொண்டிருக்கும் எழிலார்ந்த திரு வேங்கட மலையில் கோயிலின் கொடிக்கம்பமாக -ஸ்தம்பித்து அசையாமல் நிற்பதால் தம்பகம்- நின்றால் போதும் என்கிறார் ஆழ்வார்...
(தம்பகம இந்தச் சொல்லைக் கொடிக்கம்பம் எனக் கொள்ளாமல் புதர் எனக் கொள்ளும் உரைகளும் உண்டு.)

குறிப்பிட்ட இந்தப் பாசுரப் பகுதியிலுள்ள 10 பாடல்களுக்கும் ஒரு தொடர்ச்சியை உரைகாரர்கள் சொல்வதுண்டு.
முதல் பாடலில் வேங்கட மலைத் தீர்த்தமாகிய கோனேரியில் வாழும் குருகாகப் பிறக்க வேண்டும் என்று கூறும் ஆழ்வார்,
அடுத்த பாடலிலேயே திருவேங்கடச் சுனையின் மீனாய்ப் பிறக்க வேண்டுகிறார்..காரணம்,பறவையாக இருந்தால் அங்கிருந்து பறந்து சென்றுவிட நேரலாம் என்பதால்.


அடுத்து ஏரி வற்றினால் மீன் இருக்க இடமில்லாது போகும் என்பதால், 
இறைவன் திருஉலா வந்து சொர்க்கவாசல் புகும்போது பொன் வட்டில் ஏந்துபவனாக இருந்தால் இன்னும் அண்மையில் அவனைப் பார்க்க முடியுமே என்கிறார்.


தொடர்ந்து,அம் மலையிலுள்ள செண்பகமாக இருந்தால் மலர் வடிவில் தினமும் அவன் பாதங்களில் அர்ச்சிக்கப்படலாமே என்கிறார்.
அதற்கும் பிறகு மேற்சொன்ன தம்பகமாய்-கொடிக் கம்பமாய் நின்றால் எப்போதும் இடையீடின்றி அவனது தரிசனத்தைக் கண்டுகொண்டே இருக்கலாமே என்கிறார்.


பிறகு அந்த மலையின் சிகரமாகவும்,
அதில் பாயும் காட்டாறாகவும் ஆகும் விழைவைப் புலப்படுத்துகிறார்.
காட்டாறும் வற்றிப்போகலாம்..
மலைச் சிகரம் தகர்க்கப்படலாம்..
எனவே மலைக்கு வரும் மக்கள் சஞ்சரிக்கும் பாதையாக-நெறியாக ஆக வேண்டுமென்கிறார்.
அதனினும் நெருக்கமாக-முற்றிலும் பணிவாக வேங்கடவன் கோயிலின்படியாகக் கிடந்து திருமாலின் பவள வாய் காண வேண்டும் என்கிறார்.
(இன்றும் எல்லாப் பெருமாள் கோயில்களிலும் இறைவன் திரு முன் உள்ள படி- குலசேகரர் படி என்றே சொல்லப்படுகிறது.)

இறுதி முத்தாய்ப்பாக..
இவ்வாறு தேர்ந்தெடுக்கக் கூடத் தனக்கு உரிமையில்லை,அதை நிர்ணயம் செய்ய வேண்டியவனும் அவனே என நினைத்தவராய்..
’’எம் பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே’’
என்று சொல்லி முடிக்கிறார்.

தவற விடக் கூடாத ஆழ்வார் பாடல்களில் குலசேகரரின் இந்தப் பத்துப் பாடல்களுக்கும் தனி இடம் உண்டு.
வைணவ சரணாகதித் தத்துவத்தைக் குலசேகரர் போல எளிமையாக நெகிழ்வாகப் பிற எவரிடமும் உணர முடிந்ததில்லை.


சுவைப்பதற்காக..ஒரு சில மட்டும் கீழே
’’ஊனேறு செல்வத்து உடற்பிறவி யான் வேண்டேன்
  ஆனேறு ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால்
  கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்துக்
  கோனேரி வாழும் குருகாய்ப் பிறப்பேனே’’
(உடம்பை வளர்க்கும் செல்வமும் அதைத் துய்க்கும் மனிதப் பிறவியும் எனக்கு வேண்டாதவை;நப்பின்னையை மணப்பதற்காக ஏழு எருதுகளை வென்றவனும்,கூன் போல வளைந்த சங்கை இடப்புறம் ஏந்தியவனுமான திருமால் வாழும் வேங்கட மலையிலுள்ள கோனேரி என்னும் தீர்த்தத்தில் குருகாக நான் பிறக்க வேண்டும்)

‘’ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ
  வான் ஆளும் செல்வமும் மண் அரசும் யான் வேண்டேன்
  தேனார் பூஞ்சோலைத் திரு வேங்கடச் சுனையில்
  மீனாய்ப் பிறக்கும் விதி உடையேன் ஆவேனே’’
(ஆனாத செல்வம்-வற்றாத-குறையாத செல்வம்)

‘’செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே
  நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்
  அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்து இயங்கும்
  படியாய்க் கிடந்து உன் பவள வாய் காண்பேனே’’
சரணாகதியின் மகா உச்சத்தைத் தொடுவது இப் பாடல்..


முழுவதும் படித்துப் பாருங்கள்.
சீர்காழி கோவிந்தராஜனின் வெண்கலக் குரலில் உருக்கமான குழைவுடன் இப் பாசுரத்தின் 4,5 பாடகள் மட்டும் குறுந்தகட்டிலும் கேசட்டிலும் உண்டு(திருமால் கீதங்கள் -ஆல்பம்)
முடிந்தவர்கள் இணையத்தில் யூ ட்யூபில் தேடித் தந்தால் மிக்க நன்றி...

1 கருத்து :

இராஜராஜேஸ்வரி சொன்னது…

வைணவ சரணாகதித் தத்துவத்தைக் குலசேகரர் போல எளிமையாக நெகிழ்வாகப் பிற எவரிடமும் உணர முடிந்ததில்லை.’’

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....