ஒரு முன்குறிப்பு;
சங்கத்தை அடுத்து நீண்டதொரு இடைவெளிக்குப்பின் பெண்குரல்,பெண் இலக்கியம் -ஆண்டாள் வழியாகவும்,
காரைக்கால் அம்மையார் வழியாகவும் ஒலித்தது. பக்தி என்ற ஒற்றைப்பரிமாணத்துடன் அவ்விருவர்தம் படைப்புக்களும் முற்றுப்பெற்று விடுவதில்லை.
ஆழ்ந்த சமூக,உளவியல் உள்ளடக்கங்களைக்கொண்டு விளங்கும் அவர்களின் வாழ்வும்,வாக்கும் பல வகையான மறு வாசிப்புக்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆண்டாளின் கவிதைகளில் பெண்மொழி நாடி, நான் செய்த மறு வாசிப்பு,
மதுரைகாமராஜர் பல்கலைக்கழகத்தின் தத்துவத்துறையில் நிகழ்ந்த கருத்தரங்கில்
கட்டுரையாக வாசிக்கப்பட்டது. ('தமிழ் இலக்கியவெளியில் பெண் மொழியும் பெண்ணும்' என்ற என் நூலிலும் அக்கட்டுரை இடம் பெற்றுள்ளது).
ஆண்டாளின் வாழ்க்கைக்கதையை நான் செய்த மீட்டுருவாக்கம், 'மானிடவர்க்கென்று பேச்சுப்படில்' என்ற தலைப்பில் சிறுகதையாக வெளிவந்திருக்கிறது.
ஆண்டாளின் தமிழிலும், அவளது கவிதை அழகிலும் நான் கொண்டுள்ள பற்றும்,பிடிப்பும், அவ்விரண்டு ஆக்கங்களையும் இணைய வாசகர்களுக்காக
இவ்வலைத்தளத்தில் முன் வைக்க என்னைத்தூண்டுகின்றன. படித்துக்கருத்தைப்பதிவு செய்ய வேண்டுகிறேன்.
ஆண்டாளின் பெண் மொழி;
சங்கப் பெண்பாற்புலவர்களை அடுத்து,நீண்டதொரு இடைவெளிக்குப்பின்
வலுவான சமயப்பின்புலத்தோடு கூடிய படைப்பாளிகளாக வெளிப்பட்டவர்கள்,
காரைக்கால் அம்மையாரும், ஆண்டாளும்.இவ்விருவருமே பெண்கள் மீது
சமூகம் திணித்த பல மரபுகளால் பாதிப்புக்களுக்கு ஆளானவர்கள். அவற்றுக்கு வடிகால் தேடும் முயற்சியாகத்தங்கள் வாழ்க்கை அனுபவங்களையும்,அவற்றால் உணர்ந்த மனக்காயங்களையும் தமது எழுத்துக்களில் இறக்கி வைத்திருப்பவர்கள்.
உடலையும்,பாலியலையும் வெறுத்து ஒதுக்கியதன் குறியீடாகப் பேய் வடிவு பூண்டு,தன் எதிர்ப்பைக்காட்டி, சமயம்,பக்தி-இவற்றினூடே மறை பொருளாகத் தன்
எதிர்ப்புக்குரலைப்பதிவு செய்தவர், காரைக்கால் அம்மை.
இதற்க்கு மாறாக- இது வரை உடல் சார்ந்ததாகவும்,பாலியல் சார்ந்ததாகவும்
சமூகத்தில் உருவாக்கப்பட்டிருந்த பால்பேதம் கொண்ட அனைத்துக்கலாச்சாரக்கட்டுமானங்களையும் தகர்த்து எறிந்து, தன் எதிர்ப்பைப்பதிவு செய்திருக்கிறாள் ஆண்டாள்.
மரபார்ந்த பக்தி இலக்கியப்பாடல்களின் பாதையிலிருந்து சற்றே விலகிப் பெண் மொழிக்கு அடித்தளம் அமைக்கும் போக்கில் ஆண்டாளின் பாடல்கள் அமைந்திருப்பதை, அப்பிரதிகளை மறுவாசிப்புக்கு உட்படுத்துகையில் விளங்கிக்கொள்ள முடிகிறது.
திருப்பாவை முப்பது பாடல்களாகவும்,நாச்சியார் திருமொழியின் பதினான்கு பத்துக்களாகவும் வெளிப்பட்டுள்ள ஆண்டாளின் கவிதைகளில் பொதிந்துள்ள பண்பாட்டு மாற்றத்திற்கான வேர்கள், அவளது பிறப்புப்பின் புலத்திலேயே பொதிந்து கிடப்பதை எளிதாக இனம் கண்டு விடலாம்.
மகாலட்சுமியின் அவதாரமாகத் தெய்வத்தன்மைகள் ஆண்டாளின் மேல் ஏற்றப்பட்டபோதும்,திருமகள் போல அவள் வளர்க்கப்பட்டபோதும்,பெரியாழ்வாரால்
துளசிச்செடியின் அடியில் கண்டெடுக்கப்பட்ட அனாதைக்குழந்தையாகவே
குருபரம்பரை நூல், ஆண்டாளின் பிறப்பைக் குறிப்பிடுகிறது.அவளது காலகட்டத்தில் வாழ்ந்த பிற பெண்களுக்கு எளிதாகக்கைகூடக்கூடிய மணவாழ்க்கை- சாதி,குலம் ஆகியவற்றுக்கு முதன்மை அளிக்கக்கூடிய ஒரு சமூக அமைப்பில்,பிறப்புப்பின்னணி இன்னதென்று தெரியாத பெரியாழ்வாரின் வளர்ர்ப்பு மகளான அவளுக்கு
மறுக்கப்பட்டிருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை நிராகரிப்பதற்கில்லை.
தாய்,தந்தையுடன் கூடி வாழும் இயல்பானதொரு குடும்பச்சூழலில் வளர்க்கப்படாத ஆண்டாள், 'உண்ணும் சோறும்,பருகும் நீரும்' கண்ணன் மட்டுமே என்று கருதும் பெரியாழ்வாரின் மரபுச்சூழலிலேயே பிறந்தது முதல் வளர்ந்து ஆளாகிறாள்.நினைவு தெரிந்த நாள் முதல் ,ஆண்டாளின் மனதில் வளர்த்தெடுக்கப்பட்ட கண்ணபிம்பம்,விளையாட்டுத்தோழனாய், குறும்புக்கார சிறுவனாய் ,மாயங்கள் பல புரியும் சாகசக்காரனாய் என்று பல வடிவங்கள் எடுத்துக்கொண்டே சென்று, அவளின் இளமை உணர்வுகள்விழித்துக்கொண்ட நிலையில்,'காதலன்',மணாளன்' என்ற உச்சங்களை எட்டுகிறது.
''ஆண்டாள், இளமைப்பருவம் வந்து தலைகாட்டியபோது, பாடியது, திருப்பாவை......
நன்கு வளர்ந்த நிலையில்,கண்ணனைத்தன் காதலனாக எண்ணிப்பாடிய பாடல்கள்,
நாச்சியார் திருமொழி'' என 'தமிழ்ப்பெரும் கவிஞர்' என்ற தமது நூலில் முனைவர்,பேராசிரியர் சு.வேங்கடராமன் அவர்கள் வெளியிட்டுள்ள அனுமானம்
மிகப்பொருத்தமானது.
வழிபாடுகளும்,நோன்பும் செய்தால் கண்ணனே தன் கணவனாகலாம் என்று
அந்தப்பேதைச்சிறுமியின் மனம் எண்ணியதன் வெளிப்பாடே திருப்பாவை.
காலப்போக்கில்,நனவுநிலையில் அது கைகூடாதபோது, கனவில் அவன் கைத்தலம் பற்றி கணவனாக்கிக்கொண்டு , ஊடலும்,கூடலுமான அவனோடான ஒளிவு மறைவற்ற உறவுகளை வெளிப்படுத்தி , அவள் பாடியவவை நாச்சியார் திருமொழிப்பாடல்கள் .
பக்தி மேலீட்டால் ஆண்டவனுக்கு அடிமை செய்தல், அவனையே கணவனாக எண்ணுதல் என்பவை ஒருபுறமிருக்க -ஆண்டாளின் பாடல்களில் வெளிப்படும் தீவிர மானுட வெறுப்பிற்கு முறையான திருமண பந்தத்தை அவளுக்கு அளிக்க மறுத்த அக்கால சமூக அமைப்பும் வலுவான காரணமாதல் கூடும்.பிறப்பின் மர்மத்தால் திருமணச்சந்தையில் தான் புறந்தள்ளப்பட்ட ஆழமான ஆவேசம், பக்திப்பின்னணியுடன் ஒருங்கிணைந்து இயங்கியதன் விளைவே மனித ஆணுக்கு எதிர்ப்புக்குரல் எழுப்பும் எழுச்சிகளை அவள் பாடல்களில் எதிர்வினையாக வெளிப்படுத்தியிருக்கின்றன. தன் உடலை அவள் பெரிதும் மையப்படுத்துவதும், 'சிறுமானிடவர்க்கு' அதை உரியதாக்கமாட்டேன் என முழங்குவதும் இதனோடு தொடர்புடைய சிந்தனைகளாகவே அமைந்திருக்கின்றன.
தேவர்களுக்குக்காணிக்கையாகப் படைப்பதற்காக வைத்திருக்கும் அவிர்பாக உணவை, கானில் திரியும் சிறுநரிகள் சீரழிக்க விடமாட்டேன் என
''உன்னித்து எழுந்த என் தடமுலைகள் ,
மானிடவர்க்குஎன்றுபேச்சுப்படில்
வாழகில்லேன் கண்டாய்''
என்று உரத்துப்பிரகடனம்செய்கிறாள்அவள்.
ஆணாதிக்க சமூகஅமைப்பு,பெண் மீது சுமத்திய 'கற்பு நிலை'என்ற கருத்தாக்கமும்
ஆண்டாளின் இத்தகைய பாடல்களுக்குத்தூண்டுகோலாக இருந்திருக்க வாய்ப்புண்டு.
பிறந்தது முதல் கண்ணனையே கணவனாக வரித்து விட்டதால்- அவனுடனான திருமண வாழ்வும், உடல் ரீதியான உறவும் கை கூடாதவை என்பதை உள்மனத்தில் உறுதியாக அறிந்து கொண்ட பின்னும், பிற மானிடவருக்குத்தன்னை
அளிப்பதென்பது, மரபுக்கட்டுக்களில் ஊன்றிப்பழகிப்போன ஆண்டாளின் நனவு
மனத்துக்கு இயலாத ஒன்றாகவும் இருந்திருக்கலாம்.
கண்ணனே கணவனாக வேண்டும் என்ற ஆழ்மன ஆவல்,அதனால்விளைந்த கற்புக்கோட்பாட்டின் வலுவான தாக்கம், நடப்பியல் வாழ்வில் சிறு மானுடரால்
நிராகரிக்கப்பட்ட காயம்ஆகிய மும்முனைத்தாக்குதல்களுக்கு ஆண்டாள் உட்பட
நேர்ந்திருக்கிறது என்பதே அவள் பாடல்களை உளப்பகுப்பாய்வு செய்கையில் வெளிப்படும் உண்மையாகும்.
காலம் காலமாகப்பெண் மீது ஆதிக்கம் செலுத்தி, அடக்கு முறைகளுக்கு ஆளாக்கி,அதிகார மையமாகச்செயல்பட்ட ஆணை நிராகரிக்கும் ஆண்டாளின் நனவிலி மனத்தில்,தன் உடலும் ,மனமும் தனக்குச்சொந்தமானவை என்ற எண்ணமும்,அவற்றை யாருக்கு சொந்தமாக்குவது என்பது, தான் எடுத்தாக வேண்டிய முடிவு மட்டுமே என்பதும் உறுதிப்பட்டு விடுகின்றன.பக்தியால் விளைந்த காதலாகவே இருப்பினும், தன் மணாளனைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைத்தன்னுடையதாகவே அவள் நிலை நாட்டிக்கொள்கிறாள்.
மனித ஆண் அவளால் புறந்தள்ளப்பட்டபோதும், இயல்பான மன வாழ்க்கையினையும், உடல் வேட்கையையும் பிழையாகவும்,பாவமாகவும் கருதும் போக்குகள் அவளிடம் இல்லை.தன் மனதின் அலைவரிசைக்கு ஏற்றவனாக
அமைந்துபோன கண்ணன் என்ற ஆண் பிம்பத்தைக்கற்பனையில் புனைந்துகொண்டு, அந்த பிம்பத்தோடு தானாகக் கற்பிதம் செய்து கொண்ட வாழ்வில் தன் பாலியல் உணர்வுகளுக்கு வடிகாலைத்தேடிக் கொள்வதில் அவளுக்கு எந்த மனத்தடையும் இல்லை.
தன் கவிதைவெளியில் தன்னுடயவனாக அவள் உருவாக்கி உலவவிட்ட ஆண் ,
அவளது சீண்டல் பேச்சுக்கும், ,பரிகசிப்பிற்கும், குத்தலுக்கும்,கண்டனத்துக்கும் ,பொறாமைக்கும் ஆளாகும் சமநிலைத்தோழன்.
அவன், அவளது சிற்றிலை சிதைத்து விளையாடுபவன். யமுனையில் அவள் நீராடுகையில் உடைகளைக்கவர்ந்து ஓடும் குறும்புக்காரன்.
உள்ளம் கவர்ந்த காதலனுடன் உடலும் சங்கமிக்க வேண்டும் என ஆசைப்படுவதையும், அது குறித்த வேட்கையினை வெளிப்படுத்துவதையும்,
இயற்கைக்கு மாறானதாகவோ,நாணமற்ற செயலாகவோ ஆண்டாள் கருதவில்லை.
கணவனாகவே வரித்துக்கொண்டுவிட்ட ஒருவன் பொருட்டுத்தன் அக உணர்வுகளைத்திறந்து காட்ட அவளுக்கு எந்தத்தடையும் இல்லை.
இக்காரணத்தினாலேயே ஆண்டாளின் நாச்சியார் திருமொழிப்பாடல்களில் பெண்ணின் அகமொழியும், அகவெளியும் சமூகப்பொதுப்புத்தியில் படிந்துள்ள பெண் சார்ந்த எந்த வரையறைகளுக்கும் ,ஒழுக்க நியதிகளுக்கும் உட்படாமல்
கட்டற்றுப்பீறிட்டிருப்பதைக்காணமுடிகிறது.
(
ஆண்டாளின் பெண்மொழி - தொடர்ச்சி அடுத்த பகுதியில்)