துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

24.1.09

ஆண்டாளின் பெண்மொழி--2

''பெண் உடல் மீது இந்தச்மூகம் நிறைய வரையறைகளை வைத்திருக்கிறது.பெண்புழங்கும் வெளியையும்,பார்வையையும்,கனவுகளையும் கட்டுப்படுத்துகிறது.பெண் உடல்,பாவமானது,தீட்டானது என்று மதம் சொல்கிறது.....மதமும்,சமூகமும்விதிக்கும் இந்த வரையறைகளை மீற வேண்டும் என்பதற்காகத்தான் பெண் தன் உடலைக்கொண்டாட வேண்டுமென்று சொல்கிறேன்''என்று குறிப்பிடும் நவீன பெண் கவிஞர் மாலதி மைத்ரி,அத்தகைய சொல்லடுக்குகளை ஆன்டாள், அன்றேஉருவாக்கத்தொடங்கிவிட்டதாகக்குறிப்பிடுகிறார்.

ஆணின் எழுத்தை முன்மாதிரியாகக்கொண்டு,அவன் முன்வைத்த கருத்து நிலைகளையும்,மதிப்பீடுகளையும் வழிமொழியும் போக்கு-
ஆணை எதிர்ப்பதற்காகவென்றே பெண் எழுதிய போக்கு ஆகிய
இவ்விருவகைப்போக்குகளும் பின்னடைவு பெற்றுத்'தன் எழுத்தைப்பெண்தானே எழுதுதல்'
என்ற போக்கே இன்று முன்னுரிமை பெற்று வருவதைப்பெண்ணியத்திறனாய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

ஒடுக்கப்பட்ட உடலுக்குள்,சூழல் மாற்றத்தால் நேரும் கிளர்ச்சி,வேட்கை,வலி,கனவுஆகிய அக நிகழ்வுகள் சார்ந்ததாகவும்,பால் சார்ந்த தனி அடையாளங்களை உடையதாகவும் நவீன படைப்பிலக்கியத்திலும்,திறனாய்வுத்தளத்திலும் இனங்காட்டப்பட்டு வரும்'பெண்மொழி'பற்றிக்குறிப்பிடும் ஹெலன் சிக்சஸ்,பெண்,தன் உடம்பின் அதிர்வுகளை எந்த விதமான தணிக்கைக்கும் உட்ப்படுத்தாமல்,அப்படியே பொங்கி வழிந்து வெளிப்படுத்துவதே,'பெண் எழுத்து'என்கிறார்.இத்தகைய எழுத்துக்கள்,கலகத்தன்மை கொண்ட எதிர்வினைச்செயல்பாடுகளாகவும்,மொழி என்ற ஊடகத்தின் வழியே ஆண்-பெண் பால்பாகுபாட்டை நிலை நிறுத்தும் பண்பாட்டுக்கட்டமைப்பைச்சிதைத்துக்கட்டுடைப்பை நிகழ்த்துவனவாகவும் மதிப்பிடப்படுகின்றன.

மேற்குறித்த கோட்பாடுகள் எவற்றையும் சித்தாந்த ரீதியாக அறிந்திராதவள்,ஆண்டாள்.;ஆயினும் அவளது நனவிலி மனம்,இதுகாறும் பண்பாட்டு வரையறைகளுக்குள் சிறையிருந்த 'அக வெளி'யை விடுதலை செய்து,பெண்ணின் அக மொழியைத்தன் பாடல்களில் மடையுடைத்த வெள்ளமாகப்பெருக விட்டிருப்பதைக்காண முடிகிறது.
''தையொரு திங்களும் தரை விளக்கித்
தண்மண்டலமிட்டு...............
......அநங்க தேவா
உன்னையும் உம்பியையும் தொழுதேன்''
என்று,மன்மத வழிபாட்டுடன் நாச்சியார் திருமொழிப்பாடல்கள் தொடங்குவதே,பெண் சார்ந்த மரபுக்கட்டுடைப்பின் முதல் படியாக அமைந்து விடுகிறது.

எப்பொழுதுமே நுகரும் இடத்தில் தன்னையும்,நுகரப்படும் இடத்தில் பெண்ணையும் வைத்து அழகு பார்ப்பவன் ஆண். இத்தகைய ஆண் நோக்கிற்கு மாறாக,நுகரும் இடத்தில் தன்னை அமர்த்திக்கொள்ளும் ஆண்டாள்,
''கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவள வாய்தான் தித்தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமும்
விருப்புற்றுகேட்கின்றேன் சொல் ஆழி வெண்சங்கே''
என வெளிப்படையாக அறைகூவல் விடுக்கிறாள்.அவனோடு இணைய வேண்டும் என்று தான் கொண்ட தணியாத விரகத்தை,தன் உடல் படும் வேதனைகளை,தவிப்புக்களை சிறியமனத்தடை கூட இல்லாமல் கீழ்க்கண்டவாறு பதிவு செய்கிறாள்.
''காமத்தீயுள் புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே''
''உலங்குண்ட விளங்கனி போல் உள்மெலியப்புகுந்து என்
நலங்கொண்ட நாரணற்கு என் நடலை நோய் செப்புமினே''
''உடலுள் புகுந்து ஊறல் அறுக்கின்ற மாயற்கு''
''அவனொருவன் தழுவி முழுசிப்புகுந்தென்னைச்
சுற்றி சுழன்று போகானால்....''

மடல் ஏறுவது பெண்ணுக்குரிய மரபில்லை என்பது போன்ற மரபுகளை உடைக்கும் ஆண்டாள்,,கண்ணன் காளியமர்த்தனம் செய்த பொய்கைக்கரைக்கும்,அவன் தந்தை நந்தகோபனின் வீட்டு வாசலுக்கும்,கோவர்த்தன மலைக்கும்,வடமதுரைக்கும்,துவாரகைக்கும்,ஆயர்பாடிக்கும்,பிருந்தாவனத்திற்கும் தன்னை உய்த்துச்செல்லுமாறு ஓலமிடுகிறாள்.
பெண் என்பவள்,எப்படியாவது காதலனின் பிரிவைப்பொறுத்துக்கொண்டு வீட்டிலேதான் இருந்தாக வேண்டும் ,மனம் தேறித்தான் ஆக வேண்டும் என்பது போன்ற மரபுச்சட்டகங்களையும்,
''அச்சமும் நாணும் மடனும் முந்துறுத்த
நிச்சமும் பெண்பாற்கு உரிய என்ப''
என்ற இலக்கண வரையறைகளையும் மீறிக்கொண்டு,'மிக்க காமத்து மிடலாய்'வெளிப்பட்டிருப்பவை,ஆண்டாளின் நாச்சியார் திருமொழிப்பாடல்கள்.
அயலார் அறிந்தபின் காதலனோடு உடன்போக்காகச்செல்லும் சங்க மரபுக்கு மாறாகப்பெண்,தானே தன் காதலனைத்தேடிச்செல்லும் துணிவையும் அப்பாடல்கள் புலப்படுத்துகின்றன.
''தந்தையும் தாயும் உற்றாரும் நிற்கத்
தனிவழி போயினள் என்னும் சொல்லு
வந்த பின்னைப்பழி காப்பதரிது...''
பக்தி இலக்கிய மரபு வகுத்துள்ள நாயகநாயகி பாவனையிலான பாடல்களாகவே ஆண்டாளின் பாடல்களும் கருதப்பட்டபோதும்-தான் ஒரு ஆண் என்ற பிரக்ஞையுடன் நாயகி பாவனையை வலிந்து புனைந்து கொண்டு,நனவு நிலையில் பாடும் ஆண் அடியார்களின் பாடல்களுக்கும்,ஆண்டாள் என்ற பெண்ணின் நனவிலி மன வெளிப்பாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருப்பதைக்காண முடிகிறது.

''புருஷன்,புருஷனைக்கண்டு ஸ்னேகிப்பதைக்காட்டிலும் ஸ்திரீ புஷனைக்கண்டு ஸ்னேகிக்கை பள்ளமடை(பள்ளத்தை நோக்கி நீர் ஓடுவது போல் இயல்பானது )''என்றுதிருப்பாவை அவதாரிகை உரையில் பெரியவாச்சான் பிள்ளையும் குறிப்பிடுகிறார்.நம்மாழ்வார், குலசேகர ஆழ்வார்,திருமங்கை ஆழ்வார், பெரியாழ்வார் ஆகியோர் பாடியுள்ள நாயகி பாவனைப்பாடல்களை விட ஆண்டாளின் பாடல்கள்,அசலானவை.பெரியாழ்வாராகிய தன் தந்தை எப்படியாவ்து கண்ணனுடன் தன்னைச்சேர்த்து விடுவார் என்ற நம்பிக்கையினை,
''வில்லி புதுவை விட்டுசித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே''
என ஆண்டாள் வெளிப்படுத்தியிருப்பதும்,பாசுரங்களின் முடிவில்,
''விட்டுசித்தன் வியன்கோதை .....
வேட்கையுற்று மிக விரும்பும் சொல்''
என நாயகியின் உணர்வுகள்,ஆண்டாளின் சொந்த உணர்வுகளாகவே கூறப்பட்டிருப்பதும் எளிதில் ஒதுக்கிவிட இயலாதவை.நாயகநாயகி பாவனை என்ற கவசங்களும் ,முகமூடிகளும் கழன்றுபோய், ஆண்டாள் என்ற ஒரு பெண்ணின் தனிப்பட்ட-அந்தரங்க உணர்வாக-உண்மைக்கு மிகப்பக்கத்தில் வந்துவிடுபவை அவள் கவிதைகள்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....