திரு ஒய்.எஸ்.ராஜன்,சி.டி.சனத்குமார்,தமிழ்ச்சங்கத் தலைவர்
ஆகியோருடன் மேதகு அப்துல் கலாம்
வாழ்வின் சில கணங்கள் ..என்றென்றும் நினைவுகூரத்தக்க அபூர்வமான வினாடிகளாக வாய்த்து மனதுக்குள் நிலைத்து விடுகின்றன.
அவ்வாறான ஒரு தருணம்...வெள்ளி( 29/7/11) மாலை மேதகு அப்துல் கலாம் அவர்கள் ‘தேவந்தி’ நூலை வெளியிட்ட கணம்...!
சுப்புடு நினைவாய் வடக்கு வாசல் நிகழ்த்திய இசை விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இசை விமரிசகர் சுப்புடு பற்றிய தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட திரு அப்துல் கலாம் அவர்கள்,அதே அரங்கில் வடக்கு வாசல் பதிப்பக நூல்களை வெளியிட்டதோடு ஒவ்வொரு நூல் குறித்தும் சில குறிப்புக்களைத் தன் உரையில் சேர்த்துப் பேசியது, ஒவ்வொரு நிகழ்வுக்கும் முக்கியத்துவம் அளித்துக் குறிப்பிட்ட நபர்களைக் கௌரவிக்க வேண்டும் என எண்ணும் அந்த அந்த மாமனிதரின் பெருந்தன்மைக்கு ஒரு சான்றாக அமைந்தது.
எனது ‘தேவந்தி’தொகுப்பை வெளியிட்ட அவரிடம் அருகில் சென்று பிரதியைப் பெற்றபோது...
‘இராமனைப் பத்தி ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்கம்மா...’
என்று இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே இருந்தார் அவர்..
தேவந்தி நூல் பற்றி என்னிடம் பகிர்ந்து கொள்ளும் திரு அப்துல் கலாம் . அருகில் வடக்கு வாசல் ஆசிரியர் திரு பென்னேஸ்வரன் |
தொகுப்பில் இரு கதைகள் இராமன் சார்ந்தவை என்பதால் எந்தக் கதை பற்றி அவர் குறிப்பிடுகிறார் என்பதில் எனக்கு ஏற்பட்ட குழப்பம்,
அவர் உரை நிகழ்த்தியபோதுதான் தீர்ந்தது..
அரச பதவி கையில் இருந்தும் சமூகச்சமநீதி வழங்க அதைப் பயன்படுத்தத் தவறிய இராமனைக் குறித்து
‘சாத்திரம் அன்று சதி!’’(செம்மலர் இதழில் வெளிவந்த சிறுகதை)
என்ற கதையில் நான் சுட்டிக் காட்டியிருந்தேன்..
நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்த திரு கலாம் குறிப்பாக அதை மேற்கோள் காட்டிச் சற்று விரிவாகவே பேசியபோது...
’அந்தத் தொகுப்பில் எத்தனையோ கதைகள் இருக்கும்போது மிகச் சரியாக அந்தக் குறிப்பிட்ட கதை அவர் கண்ணில் பட்டது எப்படி ’என்ற வியப்பு என்னில் ஒட்டிக் கொண்டது.
மனம் எந்த திசையில் செல்கிறதோ..அதை ஒட்டிய பார்வைதானே முதன்மை பெற முடியும்!
அவரது கவனம் நாட்டு நலன்..சமூக மேன்மை...!
அதைச் சார்ந்த கதைக்கு அவர் சிறப்பிடம் தந்து பேசியது நான் பெற்ற பெரும்பேறு.
(விரைவில் அந்தக் கதையை வலையேற்றம் செய்கிறேன்)
தமிழை எழுதப் படிக்கத் தொடங்கிய நாள் தொடங்கி என் கதைகளை முதன்முதலாகப் படித்து ,விமரித்து,விவாதித்து அதை மேலும் செழுமையாக்க-செம்மையாக்க ஆலோசனைகளைத் தந்து ஊக்குவித்து வரும் வரும் முதல் வாசகியான என் மகள் மீனு பிரமோதுக்கு இந்நூலை சமர்ப்பணம் செய்திருக்கிறேன்.
ஆனால்...தற்செயலாக விழாவன்று காலையில் வடக்கு வாசல் ஆசிரியர் என்னைத் தொலைபேசியில் அழைத்து என் நூலின் முதல் பிரதியைத்
திரு அப்துல் கலாமின் கரங்களிலிருந்து என் மகளே பெற வேண்டும் எனக் கூறியபோது இன்னுமொரு இனிய அதிர்ச்சி..மகிழ்ச்சி..
நூலின் முதல் பிரதியைப் பெறும் என் மகள் மீனு பிரமோத் |
நூலின் பிரதியைப் பெறும் திரு தேவராஜ் விட்டலன் |
(என் மாணவி மீனாஷி அனுப்பி வைத்த புகைப்படம்) |