துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
சங்கச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சங்கச்செய்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30.10.14

வேர்ப்பலா...கிளைப்பலா


[சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-தொடர்]

மலை சார்ந்த குறிஞ்சிநிலப்பகுதி , பலவகையான பலாக்களின் தாய்வீடு.
 மர உச்சியிலிருந்து மிகச் சிறிய கிளையில் தொங்கும் பலாப்பழங்களும் அங்கே உண்டு. மரத்தின் அடித் தூரில் மண்ணில் கிடந்தபடி பழுத்துக் கிடக்கும் வேர்ப்பலாக்களையும் அங்கே பார்க்க முடியும்.
பலாவின் வெவ்வேறு ரகங்களை வெறுமே உண்டு ரசிப்பதோடு ஒரு கவிஞனின் உள்ளம் நிறைவு பெற்று விடுவதில்லை. தன் கவிதையின் சாரத்தையே வேறுபட்ட அந்தப் பலாக் கனிகளுக்குள் பொருத்திப் பார்க்கத் துடிக்கிறது அவன் நெஞ்சம்.

தனது மலை நாட்டுக்குப் பக்கத்திலுள்ளமற்றொரு மலை நாட்டுக்காரனைக் காதலிக்கிறாள் ஒரு தலைவி.
இருவர் உள்ளங்களும் முழுமையாகக் கலந்து நெருங்கிய பிறகும் திருமணத்தை மட்டும் விரைவாகப் பேசி முடிக்காமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறான் தலைவன்.
அவனை விரைவுபடுத்துவதற்காக ஓர் உத்தியைக் கையாளுகிறாள் தோழி.

தலைவனின் நாடு,தலைவியின் ஊர் இரண்டிலுமே பலாக்கள் உண்டென்றபோதும், தலைவன் நாட்டிலுள்ள கனிகள் பெரும்பாலும் வேரில் பழுப்பவை ; மேலும் அந்தக் கனி மரங்களைச் சுற்றிலும் மூங்கிலால் செய்யப்பட்ட படல் /வேலி வேறு போடப்பட்டிருக்கிறது.

தலைவியின் ஊரில் பழுக்கும் பலவுகளோ கொம்பில் பழுப்பவை ; அந்த மரங்களுக்கு வேலிகளும் இல்லை.
சிறுகோட்டுப் பெரும்பழம்

இந்த வேறுபாட்டை எடுத்துக் காட்டி ஓர் உண்மையை அவனுக்குப் புரிய வைக்க முயல்கிறாள் தோழி.
தலைவியின் உள்ளம் ....உயிர் ஆகியவை , அவள் கொண்டிருக்கும் மிகப் பெரிய காதலின் பாரம் தாங்காமல்....சிறியதொரு கிளையில் தொங்கும் பெரும்பழம் போலத்துடித்துக் கொண்டிருக்கின்றன. எந்த வினாடியும் கிளை இற்றுப் போய்ப் பழம் விழுந்து விடலாம் என்பது போலக் காதலின் வேதனையும்  அவளை மாய்த்து விடக் கூடும்.
மேலும் அவள் நாட்டுப் பலவுக்கு வேலியில்லை என்பதால் வேறு எவராவது அவளைத் திருமணம் என்ற பெயரில் கவர்ந்து செல்லவும் வாய்ப்பிருக்கிறது என்ற குறிப்பான ஒரு பொருளையும் இதற்குள் பொதிந்து வைக்கிறாள் தோழி.


தலைவனோ வேர்ப்பலாவுக்கேபழகிப் போனவன் ; அது கிளையிலிருந்து விழும் சேதாரம் பற்றி அவனுக்கு அதிகம் தெரியாது.
அத்தோடு அவன் நாட்டுப் பலாவுக்கு மூங்கில் வேலியும் கூடவே இருப்பதால் அதைப் பிறர் கவர்ந்து செல்லும் அபாயம் பற்றியும் அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
இக்கருத்தை வைத்தே அவனைத் திருமணத்துக்கு விரைவில் ஆயத்தமாகும்படி தூண்டுகிறது கபிலரின் குறுந்தொகைப்பாடல்.
 ''மூங்கிலை வேலியாகக் கொண்ட வேர்ப் பலாக்கள் பழுக்கும் சாரல் நாடனே
  சற்று விழிப்பாய் இருந்து கொள் !
  நடக்கப் போவது என்னவென்று எவருக்குத் தெரியும் ?
  மலைச் சாரலிலுள்ள பலா மரங்களில்
  சின்னஞ்சிறு கொம்புகளில் பெரிய பெரிய பழங்கள் தொங்கியபடி
  எப்போது விழுமோ என ஊசலாடிக் கொண்டிருக்கின்றன
  அது போலத்தான் உன் தலைவியும்....
  சிறு கோட்டுப் பெரும்பழம் போல
  அவள் உயிர் மிகச் சிறியது...
  ஆனால் அவள் உன் மேல் கொண்டுள்ள அன்போ மிகப் பெரிது’


 ‘’வேரல் வேலி வேர்க்கோட்பலவின் 
    சாரல் நாட செவ்வியை ஆகுமதி
    யாரதறிந்திசினோரே சாரற்
    சிறுகோட்டுப் பெரும்பழம் தூங்கியாங்கு
    இவள் உயிர் தவச் சிறிது காமமோ பெரிதே’’
என்னும் இச் சிறிய பாடலுக்குள் இயற்கையோடு ஒருங்கிணைத்தபடி வாழ்வியலையே கற்பித்துவிடுகிறான் புலவன்.


21.7.14

ஆடிப் பாவை போல

சங்கச் சமூகத்தில் தலைவனின் பரத்தமை ஒழுக்கத்தைப் பற்றித் தலைவி உட்படப் பெரிதாக எவரும் அலட்டிக் கொள்வதில்லை; பரத்தமைஒழுக்கம் ன்பதாக- ஒழுக்கம் என்ற சொல்லாலேயே அதைக் குறிப்பிடும் அளவுக்கு மக்களின் அன்றாட வாழ்வில் .எந்த மனத்தடையும் இன்றி இயல்பாக.ஏற்கப்பட்ட ஒரு சமூக நிறுவனமாகவே அது இருந்து வந்திருக்கிறது.
இற்பரத்தை..சேரிப் பரத்தை என்றெல்லாம் சங்க இலக்கியங்களில் காணக் கிடைக்கும் குறிப்புக்கள்,பரத்தையர் வீதி பற்றிய செய்திகள் ஆகியவை இதற்கான சான்றுகள்.

இவையனைத்தும் ஒரு புறமிருக்க...
பரத்தையாக வாழ நேர்ந்த ஒரு பெண்ணின் மன நிலை எப்படி இருந்திருக்கிறது..,
அவளது அந்தரங்கம் இதை எப்படி உள் வாங்கிக் கொண்டிருக்கிறது,
என்னதான் அது ஒரு சமூக வழக்கமாகி நிலைபெற்றுப் போயிருந்தாலும் அவளது ஆன்மத் தவிப்பு எத்தகையதாக இருந்திருக்கிறது..
என்பது குறித்த உணர்வுகளையும் மிக நுட்பமாகச் சில சங்கப் பாடல்கள் தொட்டுச் செல்லாமல் இல்லை.

குறுந்தொகையில் இடம் பெறும் ஆலங்குடி வங்கனார் என்னும் புலவரின் கீழ்க் காணும் பாடல் அத்தகையது.
கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் 
  பழன வாளை கதூஉம் ஊரன் 
  எம்மிற் பெருமொழி கூறித் தம்மிற்
  கையும் காலும் தூக்கத் தூக்கும்
  ஆடிப் பாவை போல
  மேவன செய்யுந்தன் புதல்வன் தாய்க்கே
’ 
-ஆலங்குடி வங்கனார் (குறுந்தொகை-8)


’’கையும் காலும் தூக்கத் தூக்கும்
  ஆடிப் பாவை ’’
இது,மருதத் திணையில் அமையும் பாடல்.
மருதத்தின் உரிப் பொருள் ஊடலும் ஊடல் நிமித்தமும்.
(நிமித்தம் என்பது,சார்ந்தது-ஊடல் தொடர்பானது என்று பொருள்)
செல்வ வளம் மிகுந்த மருதநிலத்தில் பிற நிலங்களைக் காட்டிலும் பரத்தமை ஒழுக்கம் கூடுதலாக இருந்த காரணத்தாலேயே
(சங்கத்தைத் தொடர்ந்த சிலம்பின் காலத்தில் காவிரிக் கரையின் செழுமையிலேதான் கரை புரண்டு ஓடியிருக்கிறது பரத்தமை)
தலைவியின் ஊடலும் கூடுதலாகிறது.
அதனாலேயே மருத உரிப் பொருளாகவும் அது ஆகிறது.

குறிப்பிட்ட இந்தக் குறுந்தொகைப்பாடல் பரத்தையின் கூற்றாகச் சொல்லப்படுகிறது.
தலைவி தன்னைப் பழித்தாள் என்பதைக் கேட்ட பரத்தை தலைவனை எள்ளிநகையாடுவது போன்ற தொனியில் மறைந்தபடி..தன் ஆற்றாமையைச் சொற்களில் வடிக்கிறாள்.

மருதநில வயல் வரப்புகளில் உள்ள மாமரங்களில் இருந்து தானாய்க் கனிந்து கீழே விழுகிற மாங்கனிகளை,வயல்களின் அருகிலுள்ள பொய்கைகளிலுள்ள வாளை மீன்கள் கவ்வும் ஊரைச் சேர்ந்தவன் தலைவன் என்ற முன் குறிப்புடன் தொடங்குகிறது பாடல்.
’’கழனி மாஅத்து விளைந்துகு தீம்பழம் பழன வாளை கதூஉம் ஊரன்’’
ஊரன் என்பது மருதநிலத் தலைவனுக்கு அளிக்கப்படும் சுட்டுப் பெயர்.
இந்த வரிகளில் சங்கப் பாடல்களுக்கே உரிய உள்ளுறை பொதிந்து கிடக்கிறது.
வயல் வரப்பு என்பது நெறிப்படுத்தப்பட்ட இல் வாழ்வு.
அதிலிருந்து தானாக விலகி வழுவிப் போகும் தலைவனை- மாம்பழத்தைக் கவ்வும் வாளை மீன்களைப் போலத் தங்கள் பிடிக்குள் இறுக்கிக் கொள்கிறார்கள் பரத்தையர்கள்.
அவர்களாக அவனைத் தேடிச் செல்வதில்லை.
தானாய்க் கனிந்து கீழே உதிரும் பழத்தைப் போல அவனாகவே அவர்களிடம் வசப்படுகிறான் என்கிறது பாடல்.
அடுத்தாற்போல எம்மில்,தம்மில் என்று ஒரு முரணைச் சுட்டுகிறாள் பரத்தை.
எம் இல் என்பது, பரத்தையர் இல்லம்.
தம் இல் என்பது,தலைவன் தன் மனைவியோடு கூடி வாழும் வீடு.
எங்கள் வீட்டில் எங்களோடு கூடியிருக்கையில் தன் வாய் சாதுரியத்தால் எங்களைப் புகழ்ந்து பேசியும் தன்னைப் பற்றிய பெருமிதத்தை வெளிக் காட்டியும் ...
’’எம்மி(ல் )ற் பெருமொழி கூ’’றுபவனாக நடந்து கொள்கிறான் அவன்..
எங்களுடன் இருக்கையில் மேற்படி முகம் காட்டித் தன் ஆண்மையின் கம்பீரத்தை வெளிப்படுத்தும் தலைவன் தனது இல்லத்துக்குச் சென்றதும் அடியோடு மாறிப்போய் விடுகிறான்..
தன் மனைவி என்ன சொன்னாலும் அதை உடனடியாகச் செய்து முடிக்க ஆயத்தமாகி விடுகிறான் அவன்..
கண்ணாடியில் தெரியும் நமது பிம்பம் நாம் செய்வதையெல்லாம் செய்வதைப்போல அவள் சொன்னபடியெல்லாம் நடந்து கொண்டு-
அவள் ஆட்டுவிக்கும் ஒரு பொம்மையைப் போலவே ஆகி விடுகிறான் அவன்.
இதை,
’’தம்மி( ல்)ற் கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே’
என்னும் வரிகளின் மூலம் இகழ்ச்சியாக..முன் வைக்கிறாள் அவள்.
பொதுவாக இப்பாடலை மேற்கோள் காட்டும் கட்டுரைகள்,நூல்கள்(மற்றும் வகுப்பெடுக்கும் பேராசிரியர்களும் கூடத்தான்)இதிலுள்ள நகைச் சுவையைச் சுட்டிக் காட்டுவதோடு வேலை முடிந்து விட்டதாக நினைக்கிறார்களே தவிரப் பரத்தையாக வாழ நேர்ந்த ஒரு பெண்ணின் ஆழ்மனச் சோகமும்,அவளுக்குள் ஏற்பட்டுப் போயிருக்கும் உட்காயமும் இதில் பதிவாகியிருப்பதைப் பற்றி எவரும் அக்கறை கொள்வதில்லை.

இந்தச் சங்கப் பாடலுக்குள்- ’’மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே’’என்னும் உச்ச வரிகளுக்குள் தலைமுறை தலைமுறையாய்ச் சொல்லப்படாது போன பெண்ணின் சோகமல்லவா புதையுண்டு கிடக்கிறது?
இப் பாடலில் பரத்தை தலைவனை நையாண்டி செய்கிறாள் என்பது உண்மைதான்..
ஆனாலும் இதிலுள்ள எள்ளல் ஒரு புறம் இருக்க.,.இதன் பின்னணியிலுள்ள ஆற்றாமையே அவளது அடிமன ஆழத்தின் பதிவாக வெளிப்படுகிறது.
தலைவியிடம் கிடைக்காத தோழமையையும்,கலை ஆர்வத்துக்கான வடிகால்களையும் நுகர மட்டும் பரத்தையிடம் சென்றாலும்,தலைவன் தரும் முறையான அங்கீகாரம் தலைவிக்கு மட்டும்தான்!.
அதற்கான காரணம் அவள்,அவனது ’’புதல்வன் தாய்’’என்பதே!. .
அவனுக்குச் சட்ட பூர்வமான வாரிசைப் பெற்றுத் தரும் அவளே அவனுக்கு நிரந்தரமானவள்.
’பூத்த கரும்பில் காய்த்த நெல்லில் கழனி ஊரன்’
என மற்றொரு சங்க அகப்பாடலும் தலைவியைக் 
காய்த்த நெல்லாகவும்(குழந்தைப் பேற்றினால்)
பரத்தையைப் பூத்த கரும்பாகவும் சுட்டுவதைக் காண முடியும்.

ஏதோ ஒரு வகையில் இரு பெண்களையும் சுரண்டலுக்கு உள்ளாக்கித்தான் தலைவன் பொழுதை ஓட்டிக் கொண்டிருக்கிறான் என்றபோதும் 
புதல்வனுக்குத் தாயாகும் பேறும் அதனால் கிடைக்கக் கூடிய சமூக அங்கீகாரமும் தனக்குக் கிடைக்காமல் தவறிப் போய்விடுகிறதே என்ற பரத்தைப் பெண்ணின் அடிமனப் பொருமலே இப் பாடலில் வெளிப்பாடு கொண்டிருக்கிறது.


20.12.11

தேரும் யானையும்...

அதியமான் நெடுமான் அஞ்சிக்கும் ஔவைக்கும் இருந்த நட்பும் உறவும் பால் பேதம் வயது பேதம் ஆகியவை கடந்தவை.
அதியமானைப் பல பாடல்களில் பாடியிருக்கும் ஔவை அவனது வேறுபட்ட ஆளுமைகள் பற்றி முன் வைக்கும் இரு உவமைகள் அற்புதமானவை...

அதியனுக்கு எதிராகப் போர்க்களம் புகும் பகைவரை நோக்கி இவ்வாறு அறை கூவுகிறாள் ஔவை.
‘’ஒரே நாளில் எட்டுத் தேர் செய்யும் வல்லமை படைத்த ஒரு தச்சன் ஒரு மாதம் முழுவதும் முயன்று - அதே நேரத்தையும்,உழைப்பையும் செலவிட்டு- அந்தத் தேரின் ஒரு காலை மட்டும் செய்தால் அது எந்த அளவு வலிமையுடன் இருக்குமோ அந்த அளவு வலிமை பெற்றவன் அதியமான்.

18.5.11

’’குழவி இறப்பினும்..’’



சங்கச் சமூகம்,போர் முதன்மைப்பட்ட சமூகம்.
போரில் புறப் புண் பட்டதற்கு நாணி வடக்கிருந்து(உண்ணாநோன்பு)உயிர் விடும் சமூகம்.

13.2.11

காதல்...கசப்பதுண்டு !


’’காதலோ...பொருளோ...வேலையோ..பதவியோ எதுவானாலும் அடைந்து முடிந்தபின் அவற்றின் கவர்ச்சி குன்றித்தான் போய்விடுகிறது....’’

18.1.11

சங்கப் பெண் எழுத்து-ஒரு சிறிய அறிமுகம்-1(புறம்)

தாய்வழிச் சமூக அமைப்புக்கு முதன்மை தரும் இனக் குழுவாழ்க்கை சென்று,தேய்ந்து,மறைந்து சிற்றரசுகளும்,பேரரசுகளும் படிப்படியே தலையெடுக்கத் தொடங்கித் தனிச் சொத்துரிமைநோக்கிய மதிப்பீடுகள் வலுப்பெற ஆரம்பித்திருந்த சங்கக்களத்தில் பெண்ணின் குரல் அன்றைய சமூக நிறுவனங்கள் ஏற்படுத்தியிருந்த சட்டகங்களுக்குள் (frame work) எந்த முரண்பாடுகளும் இன்றிப் பொருந்திப் போனதாகவே பெரும்பாலும் ஒலிக்கிறது.

‘’எவ்வழி நல்லவர் ஆடவர்
   அவ்வழி நல்லை வாழிய நிலனே..’’
என்றபடி ஆணுக்கு முன்னுரிமை வழங்கியுள்ள சமூக அமைப்பை மறுப்பின்றி ஏற்கும் ஔவையின் எழுத்தும்,
(ஆடவர் ஒழுக்கமானவர்களாக இருந்தால்தான் உலகம் அறவழிப்பட்டதாக இருக்க முடியும் என்பதாலேயே ஔவை ஆடவரை மட்டும் முன்னிறுத்திப் பேசுவதாக இன்றைய மாறிய கண்ணோட்டத்தில் இதற்கு விளக்கம் தருவோரும் உண்டு)
குடும்ப நிறுவனத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பாகப் பிரிவினை போல ஒதுக்கப்பட்டிருந்த பங்கு நிலைகளை
‘’ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே
   சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’’
என அமைதியாக ஒத்துக் கொண்டு வழி மொழிந்த பொன்முடியார் பாடலும் இதற்குச் சான்றுகள்.

காதலுக்கும்,வீரத்துக்கும் மட்டுமே முதன்மை தரப்பட்ட சங்க காலச் சமூக அமைப்பில் தனது தந்தை,கணவன்,மகன் ஆகியோரின் வீர வெளிப்பாடுகள் கண்டு விம்மிதம் அடைபவளாய்...
புறப்புண் படாமல் இறந்த மகனின் உடலைக் கண்டு
‘’ஈன்ற ஞான்றினும் பெரிது உவப்ப’’வளாய்
ஒரு மகனைத் தவிர வேறு எவருமற்ற நிலையிலும் அவனைச்
‘’செருமுகம் நோக்கிச் செல்’’கென விடுப்பவளாய்..
‘உன் மகன் எங்கே’எனக் கேட்பவர்களிடம்
‘’தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே’’
என்றும்,
‘’இந்த வயிறு அந்த வீரப்புலி சிறிது காலம் தங்கியிருந்த ஒரு கற்குகை மட்டுமே’’
என்றும் கூறித் தன்னிறைவு பெற்றுக் கொள்பவளாய்...
இவ்வாறு மட்டுமே பெரும்பாலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள்சங்கப் பெண்.
குறிப்பிட்ட அந்தக் காலகட்டத் தகுதிப்பாட்டின் உயர் இலக்கை எட்டும் ஓர் அடையாளமாகப் புறங்கொடாத மகனை உருவாக்குவதே சிறந்த தாய்ப் படிமம் என்ற சிந்தனையை மாற்றுக் கருத்தின்றிச் சங்கப் பெண் எழுத்து ஏற்றுப் போற்றியிருக்கிறது.

காலப் போக்கில் பரவலாகத் தொடங்கியிருந்த சமயம் சார்ந்த சில மரபுகளின் தாக்கம் பெண்கள் மீதுசுமத்திய சில கொடுமைகளைப் புறநானூற்றுப் பெண் பாடல்கள் சில பதிவு செய்திருக்கின்றன.
ஆயினும் அம் மரபுகளுக்கு எதிரான தங்கள் உணர்வுகளை வெளிப்படையாகப் பதிவு செய்யும் சூழல் இல்லையென்பதாலோ..
அல்லது அவற்றை ஏற்றுப் பணிதலே பெண்மையின் இலக்கணம் எனக்காலங்காலமாகக் கற்பிக்கப்பட்டதாலோ
குறிப்பிட்ட கொடுமைகளுக்கு எதிரான விமரிசனங்களை அவை முன் வைக்கவில்லை.
விதவை நிலைக்கு ஆளான பெண்கள் உடன்கட்டை ஏறத் துணிவதாகக் காட்டும் மாறோக்கத்து நப்பசலையும்,பெருங்கோப் பெண்டும் இத்தகைய மரபுகளையோ அவற்றுக்குக் காரணமான அமைப்புக்களையோ பழிக்காமல் , பழைய சோற்றையும்,எள்ளுத் துவையலையும் உண்டு கட்டாந்தரையில் பாயின்றி உறங்கும் விதவை மகளிரையே
‘’கழி கல மகளிர்’’
 ‘’உயவற்பெண்டிர்’
என்றும் பழிக்கின்றனர்.
ஒரு வகையில் இந்தச் சொற்கள் ஆழ்ந்த தன்னிரக்கத்தின் எதிர்மறை வெளிப்பாடுகள் எனக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.
கணவனை இழந்த பெண்ணின் கற்பு அவனது இறப்பைத் தொடர்ந்த அவளது செயல்பாட்டின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுத்
தலைக்கற்பு-கணவன் இறந்ததும் தானாகவே மனைவியின் உயிர் நீங்குதல்
இடைக்கற்பு-கணவனை இழந்ததும் மனைவி உடன்கட்டைஏறியோ,தீப்பாய்ந்தோ பிற வழிகளிலோ வலிந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளல்.
கடைக்கற்பு-கணவனைப் பறி கொடுத்த பெண் தொடர்ந்து உயிர் வாழ்ந்தபடி கைம்மை நோன்பு நோற்றல்
எனத் தர நிர்ணயம் செய்யப்படும் ஒரு சமூக அமைப்பில் , கைம்மையால் நேரும் சமூக அவமதிப்புக்களைச் சுமந்து வாழ்வதை விடவும் உடன்கட்டை ஏறி ஒரு கணத்தில் உயிர்நீத்தலே மேலானது என்னும் ஆழ்மன உந்துதலும் கூட இப் பாடல்களின் அடிநாதமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.

பொன்முடியார் எழுதியுள்ள புறப் பாடல் ஒன்று, மாதவிலக்கில் தீண்டத் தாகாதவளாக ஒதுக்கப்பட்டிருக்கும் பெண்களைப் போலத் தோற்றுப் போன மன்னனின் குதிரைப்படைகள் கூச்சம் கொண்டு நின்றதாகக் காட்டுகிறது.
’தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குடை முருகன் கோட்டத்துக் 
கலம் தொடா மகளிரின் இகந்து நின்றவ்வே’’-புறம்;299
பகை நாட்டுப் படைகளின் தயக்கத்தைவெளிக்காட்ட இப்படிப்பட்ட ஓர் உவமையை ஒரு பெண்பாற்புலவர் இயல்பாகக் கையாண்டிருப்பது , மிக அரிதான ஒரு நிகழ்வாகவே இருந்தபோதும் அப்படிப்பட்ட ஒதுக்கம் ஒரு பெண்ண்ணின் உள்ளத்தில் எத்தகையதொரு தாழ்வுணர்ச்சியை விதைத்திருக்கும் என்பதை எடுத்துக்காட்டும் ஆவணமாக இந்தப் பாடல் அமைந்திருப்பது இதைக் குறிப்பிடத்தக்கதாக்குகிறது.

சங்கப் பெண் எழுத்துக்களின் சொல்லாடல்கள் நிறுவன மரபுகளின் பாதிப்புக்களால் தனித்த ஆளுமை சிதைக்கப்பட்ட நிலையில் விளையும் ஆழ்ந்த சோகத்தின் அழுத்தமான சுவடுகளையே நனவு நிலையிலோ,நனவிலி நிலையிலோ பதிவு செய்திருக்கின்றன என்பதை மட்டும் எளிதில் ஒதுக்கி விடுவதற்கில்லை..



7.1.11

’கூதிர்ப் பானா’ளும்,குளிரும் தலைநகரும்...

நக்கீரரின் நெடுநல் வாடையில் வரும் குளிரும் பனியும் கூதிரும் வாடையும் அனுபவித்துப் படிக்கும்போது ரசனைக்குரியவையாக இருந்தவைதான்...!.

5.12.10

’உன்னை விட்டால் யாருமில்லை..’

சங்க இலக்கியத்தைப் பொறுத்த வரை தோழியின் பாத்திரம் என்பது ,
ஒரு இலக்கிய மரபாக...
தலைவியால் வெளியிட முடியாத உணர்வுகளை வெளிப்படுத்த உதவும் ஒரு வடிகாலைப் போலவே

17.9.10

உலைக்களமாகும் உள்ளம்...

சங்கப் பாடல்களிலுள்ள பல உவமைகள் அரிதானவை;அபூர்வமானவை.
கவிஞனின் வலிந்த முயற்சி எதுவுமின்றி இயல்பான வாழ்க்கைத் தளத்திலிருந்து தன்னிச்சையாக ஜனித்து வருபவை.


கச்சிப்பேட்டு நன்னாகையாரின் குறுந்தொகைப் பாடல் ஒன்று.
திருமணத்துக்காகப் பொருள் தேடப் பிரிந்திருக்கிறான் தலைவன்.
(அவனது பிரிவுக்குப் பிற காரணங்களும் இருக்கக் கூடும்;இது உரையாசிரியர்கள் கூறும் காரணம் மட்டுமே)
’காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலரும் காதல்’துயரமும் அதன் தனிமை ஏக்கமும் தலைவியை வாட்டியெடுக்கின்றன.

2.6.10

சங்கப்பெண்ணெழுத்தில் தாய்மை

பெண்ணால் மட்டுமே அனுபவித்து உள் வாங்கி வெளிப்படுத்தக்கூடிய அபூர்வமான ஒரு உணர்வு தாய்மை.

ஆண் கவிஞர்கள் தாய்மையின் சிறப்பைப் பாடலாம்;
ஆனால் அந்த உணர்வைக் கருப்பொருளாக்கிப் பெண்கள் கவி புனைகையில் உண்மையில் தோய்ந்து வருவதால் அது ஆழமும்,அழுத்தமும் பெற்றுவிடுகிறது.

கடல் நீரைச் சுமந்து வானில் மெள்ள அசைந்து செல்லும் கார்காலத்துக் கரிய மேகத்தைக் காண்கிறார் நன்னாகையார் என்னும் சங்கப் பெண்புலவர்.
நிறைமாதக் கருப்பிணி ஒருத்தி மெள்ள அசைந்தபடி நடந்து செல்லும் காட்சியை அது அவருக்கு நினைவுபடுத்துகிறது.

புளிப்புச் சுவையின் மீது வேட்கை கொண்ட கருவுற்ற பெண்கள்,வயிற்றுச் சூலின் சுமையைப் பொறுத்துக் கொண்டபடி தள்ளாடி நடப்பதைப் போல நீர்கொண்ட மேகங்கள் வானில் ஏறமாட்டாமல் தத்தளித்துத் தவிப்பதாக அதைக் காட்சிப் படுத்துகிறார் அவர்.


‘’.........பசும்புளி வேட்கைக்
  கடுஞ்சூல் மகளிர் போல நீர் கொண்டு’’
தடுமாறும் மேகம் பற்றி அவர் தீட்டும் கவிச் சித்திரம் பெண்ணெழுத்தில் மட்டுமே காணக் கூடிய தனித்துவம் பெற்றதாய்ச் சிறக்கிறது.

ஒக்கூர் மாசாத்தியார் என்ற இன்னுமொரு சங்கப் பெண்புலவர், மழையால் தழைத்துச் செழித்திருக்கும் முல்லைநிலக் காட்டுக்கு உவமை கூற வரும்போது மென்மையான தாய்க்கிளி அருமையாக வளர்த்த முதிர்ச்சியடையாத கிளிக் குஞ்சின் இறகைப் போல அந்தக் காட்டில் பயிர்கள் வளர்ந்திருப்பதாக வருணிக்கிறார்.

‘’தளிரியல் கிள்ளை இனிதின் எடுத்த
   வளராப் பிள்ளைத் தூவி அன்ன
   வளர்பெயல் வளர்ந்த பைம் பயிர்ப் புறவு’’
(இலையின் தளிர் போன்ற மென்மையான தாய்க் கிளி அன்புடன் பெற்ற்றெடுத்த வளர்ச்சியடையாத கிளிப் பிள்ளைகளின் மெல்லிய இறக்கையைப் போல மழையால் தழைத்திருக்கும் பசுமையான முல்லைநிலப்பயிர்கள்)

தலைவியைக் காண்பதற்காக அடிக்கடி தலைவன்  ஊருக்கு வந்து செல்வதால் எழும் வம்புப் பேச்சுக்களைத் தனது மற்றுமொரு குறுந்தொகைப்பாடலில் வருணிக்க முற்படும்போதும் அதே தாய்மை உணர்வு ஒக்கூர் மாசாத்தியாரை ஆக்கிரமிக்கிறது.
காட்டுப் பூனை ஒன்றின் வருகையைக் கண்ட பெட்டைக் கோழி தன் குஞ்சுகளை அதன் பிடியிலிருந்து காக்க முயலும்போது எழுப்பும் சத்தத்தை ஊரார் பேச்சுக்கு உவமையாக்குகிறார் அவர்.

சேயின் பராமரிப்பு என்பது இன்றைய சூழலிலும் கூடத் தாயின் கடமையாகவே அமைந்து போயிருக்கும் நிலையில்
‘ஈன்று புறந்தருதல்’ தாயின் தலையாய கடனாகக் கருதப்பட்ட சங்கச் சமுதாயத்தில் கவிதை படைக்கும் தருணங்களிலும் கூடப் பெண்ணின்  தாய்மை சார்ந்த சொந்த அனுபவங்களே கவிதைகளாகவும்,வேறு வகையிலும் வெளிப்பாடு கொண்டிருப்பதில் வியப்பில்லை.

23.11.08

"வியத்தலும் இலமே....."

Posted by Picasa



புறநானூற்றுப்பாடல்களின் அற்புதமான வரிகள் சில,திரும்பத்திரும்ப எடுத்தாளப்படுவதனாலேயே,அவற்றின் அர்த்தச்செறிவை இழந்து நீர்த்துப்போய் விடுகின்றன.வரிகளை மேலோட்டமாக மேற்கோள் காட்டுவதிலுள்ள ஆர்வம்,அவற்றுள் பொதிந்து கிடக்கும் ஆழமான உட்பொருளை நாடிச்சென்று கண்டடையும் தேட்டத்தை மட்டுப்படுத்தி விடுகிறது.தமிழ் ஆர்வலர்கள் தங்கள் இலக்கியவழக்கில்,அடிக்கடி பயன்படுத்துவதால்,சொற்கள் பழகிப்போயிருந்தாலும்கூடப் பொருள் புதிதாய்..., எந்தக்காலத்திற்கும் உரித்தான வாழ்வியல் கருத்தாக்கம் ஒன்றனை உள்ளடக்கி இலங்குவது,
"பெரியோரை வியத்தலும் இலமே ,சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"
என்னும் கணியன் பூங்குன்றனாரின் அரிய வாசகம்.


மனிதப்பண்புகளில்,வியப்புக்கு ஒரு தனி இடம் உண்டு.எண் வகைச்சுவைகளில் ஒன்றாக-"'மருட்கை''என்ற பெயரில் வியப்பைக்குறிப்பிடுகிறது தொல்காப்பியம்.முற்றும்புதியது,ஆகப்பெரியது,மிகவும் சிறியது,முன்பு இருந்திராமல் புதிதாக ஏற்பட்டுள்ள ஒரு வளர்ச்சி நிலை(ஆக்கம்)ஆகிய நான்கும் வியப்புக்கு நிலைக்களங்கள் என்று விளக்கம் தருகிறார் தொல்காப்பியர்.
மலர்ச்செடியில் அப்போதுதான் அரும்பியிருக்கும் ஒரு புது மொட்டு,பிரபஞ்ச பிரமாண்டத்தை உள்ளடக்கி ஆர்ப்பரிக்கும் அலைகடல்,நுணுக்கமான சிற்ப சித்திர வேலைப்பாடு,நேற்று வரை பொட்டல் காடாய் இருந்த பூமியில் இன்று முளைத்திருக்கும் விண் முட்டும் கட்டிடங்கள் என இவற்றைஎல்லாம் காண நேர்கையில் எவருக்கும் வியப்புத்தோன்றுவது இயற்கை.


இயற்கை எழிலில் உள்ளம் பறிகொடுக்கும் ரசனைகளும் கூட வியப்பைச்சார்ந்தவைதான்.
'புல்லைநகையுறுத்திப்பூவை வியப்பாக்கி' என்பான் பாரதி.
'அருவிகள் வயிரத்தொங்கல்
அடர்கொடி பச்சைப்பட்டே
குருவிகள் தங்கக்கட்டி
குளிர்மலர் மணியின் குப்பை'
என்று 'அழகின் சிரிப்பு'க்கண்டு விந்தை கொள்வான் பாரதிதாசன்.
இத்தகையவியப்புக்கள்,இயல்பானவை;ஆரோக்கியமானவை;தனிமனித ஆளுமைக்குக்குந்தகம் ஏற்படுத்தாதவை;அவர்களது அழகியல் ரசனைகளை மெருகேற்றி,அவர்களைச்செப்பனிடுபவை..அதனாலேயே அவற்றை விடுத்து,
சக மனிதர்கள் மீது சில நேரங்களில் விளையும் பிரமிப்பை..,ஆச்சரியத்தை..,அதிசயத்தை மட்டுமே விமரிசனம் செய்கிறது புறநானூறு.

தான் அடைய விரும்பியதும்,தன்னிடம் இல்லாமல் போனதுமான ஆற்றல்கள்,அழகுகள் ஆகியவற்றை அடுத்தவரிடம் காணும்போது வியப்பு மேலிடுவது இயல்புதான்.சக மனிதர்களின் ஆளுமையை,அழகை,அவர்களின் பாணியை,கலைத்திறனை ,படைப்பாக்க ஆற்றல்களை,செயல் வேகத்தை....இன்னும் இது போல் பிறவற்றை ஒரு எல்லைக்குள் நின்று ரசித்துவிட்டுப்போவதிலும் கூடப்பெரிய பிழை எதுவும் இல்லைதான்.ஆனால் ரசனையின் எல்லைக்கோடுகள் தகர்ந்துபோய்,ரசனை என்பது வியப்பாய்ப்பரிணமித்து ...,பிறகு,அந்த வியப்பும் கூடக்கட்டுத்தறிக்குள் அடங்க மறுக்கும் மதயானையைப்போல மூர்க்கம் காட்டி மிகையாகப்பெருகும்போதுதான் விரும்பத்தகாத விளைவுகள் சம்பவித்து விடுகின்றன.அதிலும் குறிப்பாக வியப்புக்கு இலக்காகும் அந்த நபர்,பிரபலமான ஒரு பீடத்தில்,புகழின் கண் கூச வைக்கும் வெளிச்சத்தில் இருப்பவராக அமைந்து விடும்போது,மலிவான வியப்புக்கு இரையாகி மருண்டு போகும் சாமானிய
மனிதர்களின் எண்ணிக்கையும் வெகுவாகக்கூடிவிடுகிறது.

வெள்ளித்திரை நாயகர்களின் 'கட் அவுட்'களுக்குப்பால்அபிஷேகம் (பீரபிஷேகமும்கூடத்தான்!)செய்து ஆனந்தித்தபடி,குறிப்பிட்ட கதாநாயகனின் படம் வெளியாகும் நாளில்விடிந்தது முதல்,அடரிருள் பரவும் நேரம் வரை திரை அரங்க வாயிலிலேயே கூடி இருந்து கூக்குரலும் கோஷமும் எழுப்பியபடி விரயமாகும் மனித சக்திகள்.......
தான் வழிபடும் அரசியல் தலைவன்,நியாயமான காரணத்திற்காகக்கைது செய்யப்படும்பொழுதோ அல்லது இயற்கையான மரணம் அடையும்போதோ கூட -
ஆவேசமான உக்கிரத்துடன் தங்களையேகளபலியாக்கி-அக்கினிக்கு இரையாய் ஆக்கி மடிந்துபோகும் மனித சக்திகள்......
இனிய வாழ்க்கைத்துணை என்பதை நெஞ்சறிய உணர்ந்திருந்தபோதும்,அழகாலும்,பிற கவர்ச்சிகளாலும் தூண்டப்பட்டுப் பிறன் மனை(பிறள்மனையும் கூடத்தான்)நயக்க முந்தும் தவறான உந்துதல்கள்.....
இவை அனைத்துமே ஒரு வகையில் வியப்பின் அழிவு பூர்வமான விளைவுகள்தான். வழிபாடாகப்பரிணமித்து விடும் வியப்பு, மனிதனின் ஆககத்திறனுக்குச் சேதாரம் விளைவித்து,அவனது தனிமனித மேம்பாட்டை,வளர்ச்சியை முடக்கிப்போட்டு விடுகிறது.தான் வியக்கும் ஒருவனுக்குப்பூப்போடுவதிலேயே அவனது காலம் முழுவதும் கழிந்து போய் விடுகிறது.


வியத்தல், மற்றொரு மோசமான விளைவை எதிர்காணும் சந்தர்ப்பத்தையும் கூட சில நேரங்களில் உருவாக்கி விடுவதுண்டு.மாதக்கணக்கில் ..,ஆண்டுக்கணக்கில் தான்வழிபட்டுவந்த ஒருவரைச்சற்று அண்மையில் நெருங்கிப்பார்க்கும் வாய்ப்பு எதிர்பாராமல் கிட்டுகையில்-.பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவரது குரூரமான மற்றொரு பக்கத்தை ஒளிவு மறைவுகள் இன்றி நிதரிசனமாக எதிர்கொள்ள வேண்டியதாகி விடுகிறது.தன் ஆயுளை,கல்வியை,செல்வத்தை,செயல்திறனை-எல்லாவற்றையும் இப்படி அடுத்தவனுக்குப்பூப்போட மட்டுமே செலவழித்துப்பழகிப்போன அந்த மனிதனின் வழிபாட்டு பிம்பம் சிதைவுண்டு போக,கசப்பான நிஜங்களின் கோரத்தாக்குதலுக்கு ஆட்பட்டுத்தத்தளித்துப்போகிறான் அவன்;வியப்புக்கு நேர்மாறான வெறுப்புணர்ச்சி அப்பொழுது அவனை ஆட்கொள்ளத்துவங்க அவன்,சமநிலை இழந்தவனாகிறான்

வியப்பு,ஓர் அழிவு சக்தி மட்டுமல்ல;அது ஒரு ஆக்கசக்தியும்கூடத்தான்.
'அகலாது,அணுகாது தீக்காய்பவர்'போல நம் வியப்புக்குரிய எல்லா நபர்களையும்,சற்றே விலகி நின்று-உணர்ச்சியை ஒதுக்கி வைத்து-அறிவு பூர்வமாக அலசிப்பார்த்து,ஒவ்வொருவரிடமும் நாம் வியக்கும் பண்புகளை மட்டும்பட்டியலிட்டு,.அவற்றுள் நம்மால் இயலக்கூடிய நல்லவற்றை மட்டும் சுவீகரித்தபடி,நம்மை நாமே உருவாக்கிக்கொள்ளலாம்;ஒரு குறிப்பிட்ட ஆளுமையின் புகைப்பட நகலாக மட்டும் அல்லாமல்,பலரின் சிறப்பியல்புகளை உள்வாங்கிக்கொண்டு-அதே நேரத்தில் தன்னுடைய சுயத்தை,தனித்தன்மையை இழந்து விடாத-ஒரு
மனிதனை அப்போது நம்மிலிருந்து பிறப்பித்துவிட முடியும்.

.

மனித முயற்சிகள் தேங்கிப்போய் விடாமல் தடுப்பதற்கும்,இவ்வுலகில்நிறை மனிதன் என எவருமே இல்லை என்பதைப்புரிய வைப்பதற்கும்
"பெரியோரை வியத்தலும் இலமே"
என்று சொல்லி வைத்த புறநானூற்றுப்புலவன்,
"சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே"
என்று கூடவே இன்னொரு வரியையும் இணைத்துக்கொள்கிறான்.



வயதில்,வாழ்க்கை நிலையில்,அறிவில்,அனுபவத்தில் சிறியவர்கள் என நாம் அற்பமாக எண்ணும் எத்தனையோபேரிடம் நாம் கண்டடைவதற்கானபல செய்திகள்,கருவூலமாகச்செறிந்து கிடக்கின்றன.
மணிக்கொடி முன்னோடிகளில்குறிப்பிடத்தக்கவரான பி.எஸ்.ராமையாவின் 'நட்சத்திரக்குழந்தைகள்' ,புகழ் பெற்ற ஒரு சிறுகதை.அப்படைப்பில் இடம்பெறும்ஒரு சிறுமி -'நட்சத்திரம் எப்படிப்பிறக்கிறது?'என்று கேட்க அவளது வினாவுக்கு,"ஒவ்வொரு தடவை உண்மை பேசும்போதும் ஒரு நட்சத்திரம் பிறக்கிறது"என்று பதிலளிக்கிறார் அவள் தந்தை.ஒரு நாள் இரவு வானத்தை நோக்கியிருக்கும் அவள் கண்களுக்கு ஒரு நட்சத்திரம்(அல்லது,எரிகல்)வீழ்வது,கண்ணில் பட ''யாரோ பொய் சொல்லி விட்டதால்தான் நட்சத்திரம் விழுந்து விட்டது"என்று விளக்கமளிப்பதன்வழி,தன் தந்தையையே திகைக்கவும்,வியக்கவும் செய்து விடுகிறாள் அந்தக்குட்டிப்பெண்.

ஒரு நாள் கீரை விற்கும் பெண்ணிடம் பொத்தல் கீரைகளைக்குறை கூறி,நான்அவற்றைஒதுக்கிக்கொண்டிருந்த நேரத்தில், அந்தப்பெண் அனாயாசமாக இப்படி பதில் அளித்தாள்
'ஆமா...வீட்டுக்குள்ளே நல்லாப்போத்திப்படுக்கிற நமக்கே கொசு பிடுங்கி எடுக்குது. இது..பாவம் அத்துவானக்காட்டிலே அனாதையாய்க்கெடக்கிற களுததானே?'
'வாடிய பயிரை..'முதலிய வரிகளையெல்லாம்படிக்காமலே அவள் வாயிலிருந்து உதிர்ந்த அந்தச்சொற்கள், ஆன்மநேயத்தை வாழ்ந்து மட்டுமே காட்டும் அவளது எளிமை,
என் நெஞ்சுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்தி அக தரிசனம் அளிக்க அங்கிருந்து அகன்று சென்றேன்

பெருமை,சிறுமை என்ற அளவுகோல்கள்,மனிதன்,தானாக ஏற்படுத்திக்கொள்பவை மட்டுமே."நீர் வழிப்படூஉம் புணை போல"-நீரோட்டத்தின் வழியே அடித்துச்செல்லப்படுகிற மரக்கட்டைகளைப்போல, உயிர்களும் கூட இயற்கையின் விதிப்படி இயங்குவது மட்டுமே உண்மை என்பதைப்புரிய வைப்பதற்காகவே
'வியத்தலும்,இகழ்தலும் தவிர்க்க' என்ற செய்தியை முன் வைக்கிறது சங்கஇலக்கியம்.



கருத்துரைகள்:
மிகவும் அருமையான பதிவு.ரசித்துப்படித்தேன்.
விஜய்(lablaeruken). 27.11.08

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....