தாய்வழிச் சமூக அமைப்புக்கு முதன்மை தரும் இனக் குழுவாழ்க்கை சென்று,தேய்ந்து,மறைந்து சிற்றரசுகளும்,பேரரசுகளும் படிப்படியே தலையெடுக்கத் தொடங்கித் தனிச் சொத்துரிமைநோக்கிய மதிப்பீடுகள் வலுப்பெற ஆரம்பித்திருந்த சங்கக்களத்தில் பெண்ணின் குரல் அன்றைய சமூக நிறுவனங்கள் ஏற்படுத்தியிருந்த சட்டகங்களுக்குள் (frame work) எந்த முரண்பாடுகளும் இன்றிப் பொருந்திப் போனதாகவே பெரும்பாலும் ஒலிக்கிறது.
‘’எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே..’’
என்றபடி ஆணுக்கு முன்னுரிமை வழங்கியுள்ள சமூக அமைப்பை மறுப்பின்றி ஏற்கும் ஔவையின் எழுத்தும்,
(ஆடவர் ஒழுக்கமானவர்களாக இருந்தால்தான் உலகம் அறவழிப்பட்டதாக இருக்க முடியும் என்பதாலேயே ஔவை ஆடவரை மட்டும் முன்னிறுத்திப் பேசுவதாக இன்றைய மாறிய கண்ணோட்டத்தில் இதற்கு விளக்கம் தருவோரும் உண்டு)
குடும்ப நிறுவனத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் பாகப் பிரிவினை போல ஒதுக்கப்பட்டிருந்த பங்கு நிலைகளை
‘’ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே
சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’’
என அமைதியாக ஒத்துக் கொண்டு வழி மொழிந்த பொன்முடியார் பாடலும் இதற்குச் சான்றுகள்.
காதலுக்கும்,வீரத்துக்கும் மட்டுமே முதன்மை தரப்பட்ட சங்க காலச் சமூக அமைப்பில் தனது தந்தை,கணவன்,மகன் ஆகியோரின் வீர வெளிப்பாடுகள் கண்டு விம்மிதம் அடைபவளாய்...
புறப்புண் படாமல் இறந்த மகனின் உடலைக் கண்டு
‘’ஈன்ற ஞான்றினும் பெரிது உவப்ப’’வளாய்
ஒரு மகனைத் தவிர வேறு எவருமற்ற நிலையிலும் அவனைச்
‘’செருமுகம் நோக்கிச் செல்’’கென விடுப்பவளாய்..
‘உன் மகன் எங்கே’எனக் கேட்பவர்களிடம்
‘’தோன்றுவன் மாதோ போர்க்களத்தானே’’
என்றும்,
‘’இந்த வயிறு அந்த வீரப்புலி சிறிது காலம் தங்கியிருந்த ஒரு கற்குகை மட்டுமே’’
என்றும் கூறித் தன்னிறைவு பெற்றுக் கொள்பவளாய்...
இவ்வாறு மட்டுமே பெரும்பாலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறாள்சங்கப் பெண்.
குறிப்பிட்ட அந்தக் காலகட்டத் தகுதிப்பாட்டின் உயர் இலக்கை எட்டும் ஓர் அடையாளமாகப் புறங்கொடாத மகனை உருவாக்குவதே சிறந்த தாய்ப் படிமம் என்ற சிந்தனையை மாற்றுக் கருத்தின்றிச் சங்கப் பெண் எழுத்து ஏற்றுப் போற்றியிருக்கிறது.
காலப் போக்கில் பரவலாகத் தொடங்கியிருந்த சமயம் சார்ந்த சில மரபுகளின் தாக்கம் பெண்கள் மீதுசுமத்திய சில கொடுமைகளைப் புறநானூற்றுப் பெண் பாடல்கள் சில பதிவு செய்திருக்கின்றன.
ஆயினும் அம் மரபுகளுக்கு எதிரான தங்கள் உணர்வுகளை வெளிப்படையாகப் பதிவு செய்யும் சூழல் இல்லையென்பதாலோ..
அல்லது அவற்றை ஏற்றுப் பணிதலே பெண்மையின் இலக்கணம் எனக்காலங்காலமாகக் கற்பிக்கப்பட்டதாலோ
குறிப்பிட்ட கொடுமைகளுக்கு எதிரான விமரிசனங்களை அவை முன் வைக்கவில்லை.
விதவை நிலைக்கு ஆளான பெண்கள் உடன்கட்டை ஏறத் துணிவதாகக் காட்டும் மாறோக்கத்து நப்பசலையும்,பெருங்கோப் பெண்டும் இத்தகைய மரபுகளையோ அவற்றுக்குக் காரணமான அமைப்புக்களையோ பழிக்காமல் , பழைய சோற்றையும்,எள்ளுத் துவையலையும் உண்டு கட்டாந்தரையில் பாயின்றி உறங்கும் விதவை மகளிரையே
‘’கழி கல மகளிர்’’
‘’உயவற்பெண்டிர்’’
என்றும் பழிக்கின்றனர்.
ஒரு வகையில் இந்தச் சொற்கள் ஆழ்ந்த தன்னிரக்கத்தின் எதிர்மறை வெளிப்பாடுகள் எனக் கொள்ளவும் வாய்ப்பிருக்கிறது.
கணவனை இழந்த பெண்ணின் கற்பு அவனது இறப்பைத் தொடர்ந்த அவளது செயல்பாட்டின் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுத்
தலைக்கற்பு-கணவன் இறந்ததும் தானாகவே மனைவியின் உயிர் நீங்குதல்
இடைக்கற்பு-கணவனை இழந்ததும் மனைவி உடன்கட்டைஏறியோ,தீப்பாய்ந்தோ பிற வழிகளிலோ வலிந்து தன் உயிரை மாய்த்துக் கொள்ளல்.
கடைக்கற்பு-கணவனைப் பறி கொடுத்த பெண் தொடர்ந்து உயிர் வாழ்ந்தபடி கைம்மை நோன்பு நோற்றல்
எனத் தர நிர்ணயம் செய்யப்படும் ஒரு சமூக அமைப்பில் , கைம்மையால் நேரும் சமூக அவமதிப்புக்களைச் சுமந்து வாழ்வதை விடவும் உடன்கட்டை ஏறி ஒரு கணத்தில் உயிர்நீத்தலே மேலானது என்னும் ஆழ்மன உந்துதலும் கூட இப் பாடல்களின் அடிநாதமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.
பொன்முடியார் எழுதியுள்ள புறப் பாடல் ஒன்று, மாதவிலக்கில் தீண்டத் தாகாதவளாக ஒதுக்கப்பட்டிருக்கும் பெண்களைப் போலத் தோற்றுப் போன மன்னனின் குதிரைப்படைகள் கூச்சம் கொண்டு நின்றதாகக் காட்டுகிறது.
‘’தண்ணடை மன்னர் தாருடைப் புரவி
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலம் தொடா மகளிரின் இகந்து நின்றவ்வே’’-புறம்;299
அணங்குடை முருகன் கோட்டத்துக்
கலம் தொடா மகளிரின் இகந்து நின்றவ்வே’’-புறம்;299
பகை நாட்டுப் படைகளின் தயக்கத்தைவெளிக்காட்ட இப்படிப்பட்ட ஓர் உவமையை ஒரு பெண்பாற்புலவர் இயல்பாகக் கையாண்டிருப்பது , மிக அரிதான ஒரு நிகழ்வாகவே இருந்தபோதும் அப்படிப்பட்ட ஒதுக்கம் ஒரு பெண்ண்ணின் உள்ளத்தில் எத்தகையதொரு தாழ்வுணர்ச்சியை விதைத்திருக்கும் என்பதை எடுத்துக்காட்டும் ஆவணமாக இந்தப் பாடல் அமைந்திருப்பது இதைக் குறிப்பிடத்தக்கதாக்குகிறது.
சங்கப் பெண் எழுத்துக்களின் சொல்லாடல்கள் நிறுவன மரபுகளின் பாதிப்புக்களால் தனித்த ஆளுமை சிதைக்கப்பட்ட நிலையில் விளையும் ஆழ்ந்த சோகத்தின் அழுத்தமான சுவடுகளையே நனவு நிலையிலோ,நனவிலி நிலையிலோ பதிவு செய்திருக்கின்றன என்பதை மட்டும் எளிதில் ஒதுக்கி விடுவதற்கில்லை..
6 கருத்துகள் :
ஔவையின் கூற்றின் இன்றைய மாறியக்கண்ணோட்டம் கூட மிகப்பொருத்தமானதாக இருக்கும் போல சுசீலாம்மா..
அறிந்துகொள்ளவிரும்பும் தலைப்பு ..
தொடரை விரும்பித்தொடர்வேன்..
நன்றி முத்து.இளைய தலைமுறையிடம் அந்த மாறிய கண்ணோட்டத்தை முன் நிறுத்துவதுதான் என் வழக்கம்.
ஒரு பிரதி வாசகக் கைக்கு வந்ததும் அது வாசகப் புரிதல்,நிலைப்பாடு ஆகியவை சார்ந்ததாக ஆகிவிடுகிறதுதானே?
'கலம் தொடா' கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. புலவரின் துணிச்சல் ஆச்சரியப்பட வைக்கிறது. முன்னிறுத்தலுக்கு நன்றி. நீங்கள் சொல்லவில்லையென்றால் இதை அறிய வாய்ப்பே இல்லை.
உடன்கட்டையேறும் வழக்கம் தமிழ் மரபே அல்ல என்றும் படித்திருக்கிறேன். அலெக்சேந்தர் முதல் சீசர் வரை மன்னர்கள் போரில் வெற்றி பெற்றதும் முதல் வேலையாக வென்ற தலைநகரைச் சூறையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்களாம்; அந்த வகையில் தோற்ற நாட்டு/நகர முக்கிய பிரஜைகளைக் கொல்லும் பொழுது அவர்களின் மனைவிகளுக்கு தங்கள் அந்தப்புரத்தில் சேரவோ அல்லது இறந்தவருடன் 'உடன் கட்டை ஏறும் சலுகை'யையோ வழங்கினார்களாம். அங்கிருந்து வந்த கலாசார இறக்குமதி என்கிறார்கள். நம் இதிகாசங்களிலும் 'உடன் கட்டை' ஏறியதற்கான சான்றுகள் நிறைய இல்லை (பாண்டுவின் மனைவி மாத்ரியைத் தவிர) என்று நினைக்கிறேன். அதற்கு மேல் சில சமூகங்களில் விதவைகளுக்கான அடையாளங்களும் ஏற்படச் செய்த கொடுமையெல்லாம் எங்கிருந்து வந்தது என்று பல சமயம் அதிர்ச்சியில் ஆழ்ந்திருக்கிறேன்.
பெண்ணை முன்னிறுத்தி கிழக்கத்திய இலக்கியங்களில் எழுதப்பட்டிருக்கும் அளவுக்கு மேற்கத்திய இலக்கியங்களில் இல்லை. (உதாரணமாக, சக்தி). அப்படியே இருந்தாலும் நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல் 'எம் கடன் பணி செய்து கிடப்பதே' போன்ற மன நிலையை ஒட்டியே பெரும்பாலும் எழுதப்பட்டிருக்கிறது. ஒன்றிரண்டு கிரேக்கக் கடவுள் தொட்ட புராணங்கள் தவிர, எல்லாமே ஆணை மையமாக வைத்து எழுதப்பட்டவையாக இருக்கின்றன. மேற்கத்திய கலாசாரம் கிழக்கே பரவியதும் ஏற்பட்ட இழிவா இது?
ஆனால் என்ன ஒரு ஆச்சரியம் என்றால், இப்பவும் கலம் தொடாத நாட்களில் இருக்கும் மகளிரை இன்னும் இந்த சமுதாயம், அவர்களை முழுவதுமாக தூய்மை நிறைந்தவர்கள் என ஏற்றுக் கொள்ளுவதில்லை. சகப் பெண்கள் உட்பட செய்யக் கூடாத தப்பை செய்து விட்டது போலவே நோக்குகின்றனர். என்று மாறுமோ?
பகிர்வுக்கு நன்றி அம்மா..
அருமையான பகிர்வு எம்.ஏ. சுசீலாம்மா.
வணக்கம்.
பெண்கள் உடன்கட்டை ஏறினது வடநாட்டிற்போல் கட்டாயம் இல்லை என்பதை நினைவிற் கொள்ளவும்.
பெயர்தெரிந்தவர்கள் அப்படியாகும்பொழுதெல்லாம் மற்றவர்கள் தடுத்தனர்:
பூதப்பாண்டியன் மனைவி, சோழர்காலக் கல்வெட்டிலே தான் உடன்கட்டையெறலைத் தடுப்போர்களைச் சபிக்கும் ஒருபெண்மணி என்று பார்க்கலாம்.
மற்றபடிச் சங்க இலக்கியத்தில் நண்பன் இறந்ததற்கு உடன் உயிர்விட்ட ஆண்கள் எண்ணிக்கையே மிகுதி என்பதை மறக்கக்கூடாது.
கோப்பெருஞ்சோழனோடு ஆந்தையார், பூதநாதனார், பொத்தியார் இன்னும் பெயர்தெரியாத பலர் வடக்கிருந்தனர்.
பொத்தியார் பச்சைக்குழந்தை பிறந்தவுடன் செத்தார். கரிகால்வளவனோடு போரிலே புறப்புண் நாணிய பெருஞ்சேரலாதனோடு வடக்கிருந்து செத்தவர் பலர் என்று அகநானூறு சொல்கிறது.
கபிலர் பாரி மகளிரை ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்தோ தீக்குளித்தோ செத்ததை மறக்கவேண்டா.
பிறகும் சேரமான் பெருமாள்நாயனார் தம் ஆருயிர்நண்பர் சுந்தரர் இறந்தவுடன் தாமும் இறப்பதைக் கவனிக்கவும்.
மேலும் சங்கப் பாடல்களில் அகப்பாடல்களில் பெண்ணின் குரலே 80 விழுக்காடு. தலைவன் குரல் சிறுபான்மையே.
எனவே சங்கக்காலத்தை முழுதாக ஆராய்ந்தால் சிலபொழுதுகளில் ஆண்களுக்கே பெரும்பாடாகவும், பெண்களுக்குச் சற்றுத் துன்பம் குறைத்தென்றே சொல்லவேண்டும்!
பெரியண்ணன் சந்திரசேகரன்
அற்றலான்றா.
கருத்துரையிடுக