துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

11.1.11

'விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக....'


கண்ணதாசன் கவிதைகளின் மீது ஆயிரம் விமரிசனங்கள் இருந்தாலும்,'விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக..'என்பது போன்ற சில தொடர்களுக்காக அவரைக் கொஞ்சம் பொறுத்துக் கொண்டு விடலாமோ என்று சில வேளைகளில் தோன்றுவதுண்டு.
அவர் குறிப்பிடும் விடிந்தும் விடியாத காலைப்பொழுதைச்
’‘சிற்றஞ்சிறு காலை’’யாகத் தன் திருப்பாவையில் - புலர்த்திக் காட்டிக் கண்ணனை மட்டுமன்றி... இளங்காலையின் அழகையும் ஒலி ஒளிக் காட்சியாய் அகக்கண்ணில் தரிசனப்படுத்துபவள் ஆண்டாள்.

அவளது பாவைப்பாடலில் ....
காலை என்ற வேளை...சின்னதாய் அரும்பு கட்டி..மெல்ல மெல்ல மொட்டாகிப் படிப்படியாய் இதழ் விரித்துப் பின் கதிர் பரப்பி விடிகிறது.

திரு வில்லிபுத்தூர் சென்றிருந்தால் அங்கே ஓங்கி உயர்ந்து நிற்கும் பழமையான வடபத்ரசாயி கோயிலுக்கும் 
(அந்தக் கோபுரமே தமிழக அரசின் அதிகார இலச்சினை)
 பின்பு புதிதாய்க் கட்டப்பட்ட ஆண்டாள் கோயிலுக்கும் இடையே ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டதாய்ச்சொல்லப்படும் துளசிப் பாத்தியையும் நந்தவனத் தோட்டத்தையும் கண்டிருக்கலாம்;

ஒரு முறை அங்கே சென்றிருந்த மாலைப் பொழுதொன்றில்  கூடடையும் பறவைகளின் ஒலிக் கலவை கூட்டாய் எழுந்து மனதுக்குள் ஏற்படுத்திய கிளர்ச்சியும்,எழுச்சியும் இன்னும் கூட நெஞ்சுக்குள் மிச்சமிருக்கிறது.
என்றோ ஒரு நேரம் எழும் பறவைகளின் ஒலியே அத்தகைய மன எழுச்சியைத் தரக்கூடுமென்றால்...ஒவ்வொரு நாள் விடியலிலும் அந்தப் பறவைகளின் ஒசை கேட்டுத் துயில் கலையும் ஆண்டாளின் கவிமனம் அவற்றின் ஒலி பேதங்களை...எந்தெந்தப் பறவை எந்தெந்த நேரம் கண்விழித்து எவ்வாறு குரல் தரும் என்பதை எத்தனை நுணுக்கமாக உள்வாங்கிக் கொண்டிருக்கக்கூடும் என்பதை எளிதாக அனுமானித்து விடலாம்.

திருப்பாவையின் சிறு காலை..
புள் சிலம்பு’வதோடு தொடங்குகிறது. 
இது...பறவைகள் கண்விழித்து இலேசாகக் குரல் கொடுக்கும் முதல் நிலை.
அடுத்தது புள்ளுக்கே அரசனான கருடனை வாகனமாய்க் கொண்ட திருமாலின் கோயில் திறக்கப்பட்டு விட்டது என்பதன் அறிகுறியாக ஆலயத்தில் முழங்கும் வெள்ளை விளிச் சங்கின் பேரரவம்.
தொடர்ந்து அந்தத் திருமாலை மட்டுமே உள்ளத்தில் தாங்கி வாழும் முனிவர்களும் யோகியரும் தங்கள் அறிதுயிலை மெல்லக் கலைத்து
(உறக்கம் கலைந்து விழிப்பு நிலை வரும்போது தூக்கிவாரிப்போட்டதைப்போல அமைந்து விடாமல் நிதானமாக...படிப்படியாகவே அத் துயில் கலைதல் நிகழ வேண்டும் என்ற அறிவியல் உண்மையினையும் குறிப்பிட்ட இந்த இடத்தில் வெளிப்படுத்துகிறாள் ஆண்டாள்)
அரி..அரி..’என்ற பெயரைப் பெருமுழக்கம் செய்யத் தொடங்கும் அரவம்..

காலை....இன்னும் சற்றுப் புலர ஆரம்பிக்கிறது.
அதன் அறிகுறியாக ‘ஆனைச் சாத்தன்’என்ற பறவையினம் தனக்குள் கலந்து பேசும் பேச்சரவம் கேட்கிறது.
முதலில் கேட்டது, பறவைகள் கண் விழித்ததும் எழுப்பிய மெல்லொலி;
இப்பொழுது கேட்பது, கரிக்குருவிகளாகிய ஆனைச்சாத்தன் என்னும் பறவைகள் தமக்குள் கீச்சு மூச்சென்று ஆரவாரமிட்டுக் கொண்டு உரையாடும் சற்று உரத்த ஓசை.
ஆண்டாளின் நுண்ணிய கவிமனம்...அந்தக் குருவிகளின் இரைச்சலையும் கூட அவற்றுக்கிடையே நடக்கும் ஓர் உரையாடலாகப் பார்க்கிறது.
பறவைகள் எழுப்பிய பலதரப்பட்ட ஓசைகள் ஆய்ச்சியரைக் கண்விழிக்கச் செய்ய...அவர்கள் தங்கள் காலைப் பணியைத் தயிர் கடையும் ஒலியோடு துவங்குகிறார்கள்.
பெருமளவில் தயாரிக்கப்பட்டாலும் கூட் மத்தினால் தயிர் கடையும் ஒலி பேரோசையாக இருக்க வாய்ப்பில்லை ; அதனாலேயே அத் தொழிலில் அவர்கள் மேற்கொள்ளும் அசைவினால்,அவர்கள் அணிந்துள்ள அணிகலன்கள் குலுங்கிச் சத்தமிடுவதையும் கூடவே இணைத்தபடி.. 
.’காசும் பிறப்பும் கலகலப்ப’என்கிறாள் ஆண்டாள்.
ஆயர் குலப் பெண்கள் கழுத்தில் அணியும் அச்சுத் தாலியும்,ஆமைத்தாலியுமே காசு,பிறப்பு என்று குறிக்கப்படும் அணிகலன்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும், நால்வகைப் பா இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்று விளங்கிய ஆண்டாள் வெண்பாவின் கூறுகளாகிய காசு,பிறப்பு ஆகியவற்றையும் உட் செரித்து உரிய இடத்தில் வெளிப்படுத்தும் நுட்பம் சிறப்பானது.

அடுத்த படிநிலையாகக் கீழ் வானம் வெளுக்க ஆரம்பிக்கிறது.
எருமைகள் பனி படர்ந்த புல்லில் மேய்வதற்காகச் சிறு தோட்டங்களை நாடி மென்னடை இடத் தொடங்குகின்றன.
 பரந்த மேய்ச்சல் வெளிகளுக்கு இட்டுச் செல்லப்படுவதற்கு முன்பு , அருகிலுள்ள சின்னத் தோட்டங்களில் கால்நடைகள் அப்போதைக்குச் சற்று மேய்ந்து திரிவதுண்டு ; இந்த நுணுக்கமான வேறுபாட்டையே உணர்த்திக் காட்டுகிறது ’சிறுவீடு மேய்வான்..’என்னும் தொடர்.

இறுதி நிலையாக வருவது....,வெள்ளி எழுந்து வியாழம் உறங்கும் அரிய வானியல் காட்சி.
புலரும் காலையில் வியாழக் கிரகம் கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்து கொள்வதும், சுக்கிரன் என்னும் விடி வெள்ளி பளிச்செனக் கண்ணில் படுவதும் இயற்கையோடு ஒன்றிக் கலந்து வாழ்பவர்களுக்கு அன்றாடம் அனுபவமாகியிருக்கும் ஒரு தினசரி நிகழ்வுதான் என்றாலும்..
‘’வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’’
என்ற பாவைப்பாட்டு வரிகள் அந்த அனுபத்தை அழியா ஓவியமாக்கி மனதில் நிலைநிறுத்தி விடுகின்றன.

காலையின் மற்றொரு அடையாளமாகச் செங்கழுநீர்ப்பூக்கள் வாய்நெகிழ்த்தி விரியத் தொடங்க...ஆம்பல்கள் வாயடைத்துக் கூம்புகின்றன.

மீண்டும்....உரத்த குரலுடன்...புட்களின் சிலம்பல்.
ஆலயச் சங்கின் முழக்கம்....

இயற்கையாக நிகழும் இத்தனை பின்னணி ஒலிகளொடு குள்ளக் குளிரக் குடைந்து நீராடிப் பாவை நோன்பியற்றும் பெண்கள் , தங்கள் தோழியர் வீட்டு முற்றத்தில் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடும் ஒலிகளும் இறுதியாகப் பின்னிப் பிணைந்து கொள்கின்றன.
காலை விடியலைக் காணாமல் ‘கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருண’னைப் போல உறங்கும் சக தோழிக்குக் காலையின் ஒலி,ஒளிக் காட்சிகள்,
ஆண்டாளின் வாய்மொழியில் விரியும் வரிசை இது......
‘’புள்ளும் சிலம்பின காண்’’

‘’புள்ளரையன் கோயில் வெள்ளை விளிச்சங்கின் பேரரவம்’’

’’முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்’’

‘’கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
  பேசின பேச்சரவம்..’’

‘’காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
   வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
   ஓசைப்படுத்த தயிரரவம்..’’

‘’கீழ் வானம் வெள்ளென்று..’’

‘’எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன’’

‘’வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’’

‘’புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின..’’
இறுதியாகப்
’ 'பாவைக்களம் புக்க பிள்ளைகள்’’,மனதுக்கினியானைப்பா’’டும் பாட்டொலிகள்..

பதட்டமும்.. நெருக்கடிகளுமாய்ப் பிற புலன் மயக்கங்கள் அதிகம் கூடிப் போயிருக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாம் இழந்திருக்கும் இன்பங்களை வரிசைப்படுத்திப் பார்த்தால் அவற்றில் விடியலின் அழகைத் தவற விட்டிருப்பதும் தென்படக் கூடும்.
தற்செயலாகக் கண்ணில் தட்டுப்படுவதன்றி.
.’’நிலாப் பார்ப்பதற்கென்று நிலாப் பார்த்து நாளாயிற்று’’ என்கிறது கல்யாண்ஜி(வண்ணதாசன்)யின் ஒரு கவிதை.


விடியலின் அழகை நாம் வியந்து ரசித்த காலமும் கூடத் தொலைந்து கை நழுவிப் போய்க்கொண்டேதான் இருக்கிறது.
தொலைக்காட்சிகளும்...கணினிகளும்...பின்னிரவுப் பொழுதுபோக்குகளும் தின்று முடித்த இரவின் இன் துயிலைச் சூரியச் சூட்டின் எரிச்சலோடு கலைத்தபடி கண்விழிக்கிற தலைமுறைக்கு இளங்காலை இனிமைகளின் அருங்காட்சி சாலையாக....தொல் புராதனச் சின்னமாக விளங்கிக் கொண்டிருக்கப் போகும் திருப்பாவை.,.வெறும் விடிகாலை பஜனை மட்டுமல்ல.
சிற்றஞ்சிறு காலையை .....அது மெல்ல விடியும் பேரழகை , அந்த மோனப் பொழுதில் கேட்கும் பல்வகை ஒலிக் கூட்டுகளை அசை போட்டு ஆராதிக்க வைத்த ஒரு சிறுநடைப் பயணம்..அது



7 கருத்துகள் :

எம்.ஏ.சுசீலா சொன்னது…

ஜெயலட்சுமி அனுப்பிய செய்தி
எம்.ஏ.சுசீலாவால் உள்ளிடப்பட்டது.
Your writing gave me the reminiscence of my childhood days when we used to enjoy hearing Thiruppavai and hot delicious pongal from Perumal koil. From your viewpoint, I relived all the unforgettable moments.
Thanks and with regards,
Jaya

சுந்தரவடிவேலன் சொன்னது…

netru nan sinthinthukkondirantha 'chitran chirukalai' endra pathathaiyae ungal pathivai kandathu mikunthu viyappu.

markazhi paninalil andalaikkana chendra ella pular kalaikalam mika iniya ninaivukalai kanmun oru thiraipadam pola oodi chendrathu.

எம்.ஏ.சுசீலா சொன்னது…

மிக்க நன்றி ஜெயா,சுழியம்.
9 முதல் 13 வரையிலான பிராயத்தில் காலை நான்கு மணி தொடங்கிக் கோயிலின் நான்கு வீதிகளையும் சுற்றி வந்து,சூரிய ஒளி சுள்ளென்று அடிக்க ஆரம்பிக்கும்போது இலைத் தொன்னையில் நெய் வடிய வழுக்கிக் கொண்டு போகும் பொங்கல் பிரசாதம் தொண்டைக்குள் சூடாக இறங்குவதும் கூட மறந்து,தொலைந்தும் விட்ட மார்கழி நினைவுகளில் ஒன்றுதான்..

அப்பாதுரை சொன்னது…

விடியலைப் போலொரு புத்துணர்வில்லை.

தமிழக அரசு இலச்சு இந்தக் கோவில் தானா? ஸ்ரீவில்லிப்புத்தூர் ஒரு முறை போக வேண்டும் - அடுத்த இந்தியப்பயண லிஸ்ட் பெருகிக் கொண்டே வருகிறது (!).

கண்ணதாசனின் வரிகளை போகிற போக்கில் எட்டிவிட்டுப் போனது நியாயமா? கொஞ்சம் விவரமாகச் சொல்ல வேண்டாமா? கண்ணையும் காதையும் தீட்டிக் கொண்டிருக்கிறேன் உங்கள் எண்ணங்களை அறிய.

அப்பாதுரை சொன்னது…

மார்கழி மாதம் (மட்டும் :) திருப்பாவை பாடும் பழக்கம் எங்கிருந்து எப்போது ஏன் வந்தது என்ற விவரங்கள் தெரிந்தால் சொல்லுங்களேன்? குளிர் நாட்களில் கடவுளும் சற்று தூங்கட்டும் என்று விடக்கூடாதோ ஆண்டாள்? :)

எம்.ஏ.சுசீலா சொன்னது…

திரு அப்பாதுரை அவர்களுக்கு,
கண்ணதாசன் மீதான பாராட்டும் விமரிசனமும் தனிப் பதிவிற்கு உரியவை.அவற்றை இங்கே குறிப்பிடுவது கவனம் கலைத்தல் ஆகி விடும்.எனவே தற்போது அதை ஒத்தி வைக்கிறேன்.மார்கழிக் குளிர்(வெப்பமயமாதல் இல்லாத அன்றைய சூழலில்)இயல்பு வாழ்க்கையை முடக்கிப் போட்டு விடக்கூடாதென்ற நோக்கிலேயே(சூனிய மாதமென்றும் கூட ஒரு சொல் வழக்கு உண்டு) விடிகாலை துயிலெழுந்து கோலமிடுதல்,பாவை நோன்பு நோற்றல் ஆகிய வழக்கங்கள் பிறந்திருக்கக் கூடும்.அந்தப் பருவகாலச் சூழ்நிலையில் காற்றுமண்டலத்தில் அதிகம் கலந்து பரவிக் கிடக்கும் ஓசோன் வாயுவைச் சுவாசிக்கும் வாய்ப்பும் இவ்வழக்கத்தால் கிடைத்திருக்கிறது.
அது சரி...காக்கும் கடவுளாகக் கருதப்பட்ட திருமாலை அப்படித் தூங்க விட்டு விடுவார்களா என்ன?

அப்பாதுரை சொன்னது…

கண்ணதாசன் பதிவுக்கு வெயிடிங்க். நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....