அதன் அறிகுறியாக ‘ஆனைச் சாத்தன்’என்ற பறவையினம் தனக்குள் கலந்து பேசும் பேச்சரவம் கேட்கிறது.
முதலில் கேட்டது, பறவைகள் கண் விழித்ததும் எழுப்பிய மெல்லொலி;
இப்பொழுது கேட்பது, கரிக்குருவிகளாகிய ஆனைச்சாத்தன் என்னும் பறவைகள் தமக்குள் கீச்சு மூச்சென்று ஆரவாரமிட்டுக் கொண்டு உரையாடும் சற்று உரத்த ஓசை.
ஆண்டாளின் நுண்ணிய கவிமனம்...அந்தக் குருவிகளின் இரைச்சலையும் கூட அவற்றுக்கிடையே நடக்கும் ஓர் உரையாடலாகப் பார்க்கிறது.
பறவைகள் எழுப்பிய பலதரப்பட்ட ஓசைகள் ஆய்ச்சியரைக் கண்விழிக்கச் செய்ய...அவர்கள் தங்கள் காலைப் பணியைத் தயிர் கடையும் ஒலியோடு துவங்குகிறார்கள்.
பெருமளவில் தயாரிக்கப்பட்டாலும் கூட் மத்தினால் தயிர் கடையும் ஒலி பேரோசையாக இருக்க வாய்ப்பில்லை ; அதனாலேயே அத் தொழிலில் அவர்கள் மேற்கொள்ளும் அசைவினால்,அவர்கள் அணிந்துள்ள அணிகலன்கள் குலுங்கிச் சத்தமிடுவதையும் கூடவே இணைத்தபடி..
.’காசும் பிறப்பும் கலகலப்ப’என்கிறாள் ஆண்டாள்.
ஆயர் குலப் பெண்கள் கழுத்தில் அணியும் அச்சுத் தாலியும்,ஆமைத்தாலியுமே காசு,பிறப்பு என்று குறிக்கப்படும் அணிகலன்கள் என்பது ஒரு புறம் இருந்தாலும், நால்வகைப் பா இலக்கணங்களிலும் தேர்ச்சி பெற்று விளங்கிய ஆண்டாள் வெண்பாவின் கூறுகளாகிய காசு,பிறப்பு ஆகியவற்றையும் உட் செரித்து உரிய இடத்தில் வெளிப்படுத்தும் நுட்பம் சிறப்பானது.
அடுத்த படிநிலையாகக் கீழ் வானம் வெளுக்க ஆரம்பிக்கிறது.
எருமைகள் பனி படர்ந்த புல்லில் மேய்வதற்காகச் சிறு தோட்டங்களை நாடி மென்னடை இடத் தொடங்குகின்றன.
பரந்த மேய்ச்சல் வெளிகளுக்கு இட்டுச் செல்லப்படுவதற்கு முன்பு , அருகிலுள்ள சின்னத் தோட்டங்களில் கால்நடைகள் அப்போதைக்குச் சற்று மேய்ந்து திரிவதுண்டு ; இந்த நுணுக்கமான வேறுபாட்டையே உணர்த்திக் காட்டுகிறது ’சிறுவீடு மேய்வான்..’என்னும் தொடர்.
இறுதி நிலையாக வருவது....,வெள்ளி எழுந்து வியாழம் உறங்கும் அரிய வானியல் காட்சி.
புலரும் காலையில் வியாழக் கிரகம் கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்து கொள்வதும், சுக்கிரன் என்னும் விடி வெள்ளி பளிச்செனக் கண்ணில் படுவதும் இயற்கையோடு ஒன்றிக் கலந்து வாழ்பவர்களுக்கு அன்றாடம் அனுபவமாகியிருக்கும் ஒரு தினசரி நிகழ்வுதான் என்றாலும்..
‘’வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’’
என்ற பாவைப்பாட்டு வரிகள் அந்த அனுபத்தை அழியா ஓவியமாக்கி மனதில் நிலைநிறுத்தி விடுகின்றன.
காலையின் மற்றொரு அடையாளமாகச் செங்கழுநீர்ப்பூக்கள் வாய்நெகிழ்த்தி விரியத் தொடங்க...ஆம்பல்கள் வாயடைத்துக் கூம்புகின்றன.
மீண்டும்....உரத்த குரலுடன்...புட்களின் சிலம்பல்.
ஆலயச் சங்கின் முழக்கம்....
இயற்கையாக நிகழும் இத்தனை பின்னணி ஒலிகளொடு குள்ளக் குளிரக் குடைந்து நீராடிப் பாவை நோன்பியற்றும் பெண்கள் , தங்கள் தோழியர் வீட்டு முற்றத்தில் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடும் ஒலிகளும் இறுதியாகப் பின்னிப் பிணைந்து கொள்கின்றன.
காலை விடியலைக் காணாமல் ‘கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகருண’னைப் போல உறங்கும் சக தோழிக்குக் காலையின் ஒலி,ஒளிக் காட்சிகள்,
ஆண்டாளின் வாய்மொழியில் விரியும் வரிசை இது......
‘’புள்ளும் சிலம்பின காண்’’
‘’புள்ளரையன் கோயில் வெள்ளை விளிச்சங்கின் பேரரவம்’’
’’முனிவர்களும் யோகிகளும் மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்’’
‘’கீசு கீசென்று எங்கும் ஆனைச் சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம்..’’
‘’காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிரரவம்..’’
‘’கீழ் வானம் வெள்ளென்று..’’
‘’எருமை சிறுவீடு மேய்வான் பரந்தன’’
‘’வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’’
‘’புழக்கடைத் தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின..’’
இறுதியாகப்
’ 'பாவைக்களம் புக்க பிள்ளைகள்’’,மனதுக்கினியானைப்பா’’டும் பாட்டொலிகள்..
பதட்டமும்.. நெருக்கடிகளுமாய்ப் பிற புலன் மயக்கங்கள் அதிகம் கூடிப் போயிருக்கும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் நாம் இழந்திருக்கும் இன்பங்களை வரிசைப்படுத்திப் பார்த்தால் அவற்றில் விடியலின் அழகைத் தவற விட்டிருப்பதும் தென்படக் கூடும்.
தற்செயலாகக் கண்ணில் தட்டுப்படுவதன்றி.
.’’நிலாப் பார்ப்பதற்கென்று நிலாப் பார்த்து நாளாயிற்று’’ என்கிறது கல்யாண்ஜி(வண்ணதாசன்)யின் ஒரு கவிதை.
விடியலின் அழகை நாம் வியந்து ரசித்த காலமும் கூடத் தொலைந்து கை நழுவிப் போய்க்கொண்டேதான் இருக்கிறது.
தொலைக்காட்சிகளும்...கணினிகளும்...பின்னிரவுப் பொழுதுபோக்குகளும் தின்று முடித்த இரவின் இன் துயிலைச் சூரியச் சூட்டின் எரிச்சலோடு கலைத்தபடி கண்விழிக்கிற தலைமுறைக்கு இளங்காலை இனிமைகளின் அருங்காட்சி சாலையாக....தொல் புராதனச் சின்னமாக விளங்கிக் கொண்டிருக்கப் போகும் திருப்பாவை.,.வெறும் விடிகாலை பஜனை மட்டுமல்ல.
சிற்றஞ்சிறு காலையை .....அது மெல்ல விடியும் பேரழகை , அந்த மோனப் பொழுதில் கேட்கும் பல்வகை ஒலிக் கூட்டுகளை அசை போட்டு ஆராதிக்க வைத்த ஒரு சிறுநடைப் பயணம்..அது