வடபத்ரசாயி ஆலயம் |
இலக்கியத்தில் அல்ல.
அவளது சிலா வடிவத்தையும் அவள் பிறந்த பூமியையும் காண்பதில்தான்...
ஒரு புறம் ஓங்கி நிற்கும் பழமையான வடபத்ரசாயி ஆலயம்,மறுபுறம் பின்னாளில் உருவாக்கப்பட்ட ஆண்டாள் கோயில்..இரண்டுக்கும் இடையே அவள் ஜனித்த அல்லது கிடந்து கண்டெடுக்கப்பட்ட துளசிவனம்.என் ஆர்வம்...இடையிலிருந்த இடத்துக்குத்தான்...
இசையிலும் இலக்கியத்திலும் வைணவத்திலும் ஆர்வம் கொண்ட தோழியர் உடனிருக்க..அந்தி மயங்கும் வேளையில் பெரியாழ்வார் மலர் கொய்த அந்த வனத்துக்குள் அடியெடுத்து வைத்ததும் இனம் புரியாத ஒரு பரவசச் சிலிர்ப்பு...அதைக் கூட்டுவது போலக் கூடையும் பறவைகள் கூட்டாக எழுப்பிய வினோதமான-இன்னதென இனம் பிரித்துச் சொல்ல முடியாத ஓசைக் குவியல் காதை நிறைத்து அமானுஷ்யமானதொரு சூழலை உருவாக்க நான் நிலை மறந்தேன்...
ஆண்டாளின் பாடல்களுக்கெல்லாம் அர்த்தம் புரிந்தது அந்தக் கணத்திலேதான்...அங்கேயே வாழ்ந்து அங்கே ஜீவிக்கும் ஒவ்வொரு புள்ளின் ஓசையையும் கேட்டுக் கேட்டுக் கண் வளர்ந்து,காலையில் அவற்றைக் கேட்டபடியே கண் மலர்ந்து அவை இரை தேடித் திரும்பியபின் அவற்றோடு ஒன்றிணைந்து குதூகலித்து வளர்ந்த அவளது உள்ளப் பதிவுகள்தான் அவள் பாட்டிலும் பதிவாகியிருக்கின்றன.
சலீம் அலி போன்ற பறவை நிபுணர்களின் தேவை இல்லாமலே எந்தப் பறவை எது எனச் சுட்டவும் அவை ஒவ்வொன்றும் எழுப்பும் ஓசையை இனம் பிரித்து அறியவும் - ஒருக்கால் அவற்றின் உரையாடலைக் கூட விளங்கிக் கொண்டிருக்கவும்.
‘’வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்..’’
எனப் பறவையோடு பறவையாய்ச் சிறகடித்துத் திரிந்த அவளது பாலியப் பருவமே காரணமாக இருக்கும் என அந்த மனநிலையின் பூரணத்துவம் என்னுள்ளே உணர்த்தியது.
‘’கீசு கீசென்று ஆனைச் சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ..?’’
என்று பலகாலம் தன் பாட்டின் வழி என்னிடம் கேட்டுக் கொண்டே இருந்தாள் ஆண்டாள்...!அன்றுதான் ...அந்த நிமிடம்தான்...பறவைகள் கலந்துரையாடும் அந்தப் பேச்சரவத்துக்குச் செவி கொடுத்து அவளை,அவள் கேட்ட வினாவின் பொருளை ஓரளவு அறிந்தேன் நான்...
‘’புள்ளும் சிலம்பின காண்..’’
எனத் திருப்பாவை இரண்டு பாடல்களில் அவள் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்த சிலம்பல் என்ற சொல்லின் பொருள் ஆன்மாவின் அடியாழம் வரை முழுமையாக ஊடுருவிக் கலந்த கணமும் அதுவேதான்..
மனம் பொங்கித் ததும்பிக் கொண்டிருந்த அந்த வேளையின் உணர்ச்சிகரமான பித்து நிலையுடன் ஆண்டாளின் பாசுரங்களைத் தோழிகள் இனிமையாக இசைக்க...
சங்கப் பெண்கவிகளை அடுத்து நீண்ட இடைவெளிக்குப் பின் பெண் எழுத்தைத் தந்த ஆண்டாள் பிறந்ததாகச் சொல்லப்பட்ட துளசிப் பாத்தியின் அடிமண்ணை எடுத்து நீறு போல நெற்றியில் இட்டுக் கொள்கையில் பிறந்த நிறைவு பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் எண்ணிப் பார்க்கையில் இன்னமும் அதே மன எழுச்சியை அளித்தபடி உள்ளத்தின் ஓரத்தில் உறைந்து நிற்கிறது.
காண்க;
'விடிந்தும் விடியாத காலைப்பொழுதாக....'
3 கருத்துகள் :
தாங்கள் கண்டதிலிருந்து நான் தாமதமாக தெரிந்து கொண்ட கோவில் இது...
உணர்வு பூர்வமான நல்ல பதிவு... வாழ்த்துகள்.. த.ம. 1
http://jayarajanpr.blogspot.com/2011/12/34.html
உங்கள் பரவசம் உங்கள் எழுத்தின் வாயிலாக என்னையும் வந்தடைந்தது. நன்றி! ஒரு சொல்லுக்கான முழுமையான அர்த்தத்தை உணரும்போது அதில் உண்டாகும் பரவச நிலையே அலாதிதான். இதை நானும் அனுபவித்து இருக்கிறேன்.
'விடிந்தும் விடியாத காலை பொழுதாக' இந்த வரியை படித்ததும் இந்த பாடலின் முதல் வரியான 'மலர்ந்தும் மலராத பாதி மலர் போல வளரும் விழி வண்ணமே' வரிகள் என் மனதை ஆக்கிரமித்தது. கண்ணதாசனின் இந்த வரிகள் என் மனதை அப்படியே உறைய வைத்து விடும். எப்பேற்பட்ட வரிகள்! எப்படி எழுதி இருக்கிறார் என்று மாய்ந்து மாய்ந்து போய்விடுவேன். உங்களுக்கு சமயம் கிடைக்கும்போது கண்ணதாசன் வரிகளில் உங்களுக்கு மிகவும் பிடித்ததை பற்றி ஒரு பதிவு எழுதுங்களேன். அவர் வரிகளை பற்றிய உங்கள் கருத்தை உங்கள் எழுத்தில் படிக்க ஆவலாக இருக்கிறது. நன்றி!
கோதை ஆண்டாள், தமிழை ஆண்டாள்! -அல்லவா? பெண் கவி என்றாலே அமுதத் தமிழை அள்ளி வழங்கிய ஆண்டாளுக்கல்லவா முதலிடம்! உங்களின் சிலிர்ப்பு படித்த என்னையும் தொற்றிக் கொண்டது. நன்றிம்மா!
கருத்துரையிடுக