துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

23.12.11

விருதுகள்

இவ்வாண்டுக்கான தமிழ் இலக்கிய விருதுகள் பலதரப்புக்களிலிருந்தும் வரிசையாக அறிவிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
சாகித்திய அகாதமி பரிசுக்குத் தேர்வாகியிருக்கும் திரு சு.வெங்கடேசன் மதுரை மண்ணின் மைந்தர்.
மதுரையின் கடந்தகால வரலாற்றை அடித்தளமாகக் கொண்டு மிகப் பெரும் முயற்சியையும் உழைப்பையும் செலவிட்டு அவர் உருவாக்கியுள்ள ‘காவல் கோட்டம்’என்னும் அவரது முதல் நாவலே சாகித்திய அகாதமி பரிசுக்கு உரியதாகத் தேர்வாகியிருப்பது பெருமைக்குரியது.
பொதுவாக வயதில் மூத்த படைப்பாளிகளுக்குத்தான் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது என்ற வசை ஜெயகாந்தனுக்குப் பிறகு இவரால் கழிகிறது;ஜெயகாந்தனுக்கும் மிகச்சரியான தருணத்தில் மிகப் பொருத்தமான ஒரு நாவலுக்கு[சிலநேரங்களில் சில மனிதர்கள்]அந்த விருது வாய்த்தது.அவரைத் தொடர்ந்தும் அவருக்கு முன்பும்  பலரும் இவ் விருது பெற்றபோதும் தங்கள் சிறந்த படைப்புக்கு-உரிய பருவத்தில் அந்தப் பரிசைப் பெறும் வாய்ப்பு அவர்களுக்கு வாய்த்ததில்லை.அந்த வகையில் சு.வெங்கடேசன் அவர்கள் தன் உழைப்பின் பலனை உடன் அறுவடை செய்ய முடிந்து தகுந்த அங்கீகாரத்தைத் தாமதமின்றிப் பெற்றிருக்கிறார்.அவருக்கு வாழ்த்துக்கள்.

இவ்வாண்டு பாரதீய பாஷா பரிஷத் விருதுக்குத் தேர்வாகியுள்ள
 திரு சு.வேணுகோபாலும் அமெரிக்கன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராக- மதுரையில் எனக்கு அறிமுகமானவரே.[தற்போது அக் கல்லூரிப் பணியில் அவர் இல்லையென அறிகிறேன்].

அவரது ’வெண்ணிலை’என்னும் சிறுகதைத் தொகுப்புக்கு இவ்விருது கிடைத்துள்ளது.நுண்வெளிக்கிரணங்கள்,கூந்தப்பனை,களவு போகும் குதிரைகள் ஆகிய சிறுகதைத் தொகுப்புக்களையும் இவர் வெளியிட்டிருக்கிறார்.வேணுகோபாலுக்கும் நம் வாழ்த்துக்கள் உரித்தாகின்றன.

பரிசுக்குத் தேர்வாகியுள்ள இரு படைப்புக்களுமே ‘தமிழினி’பதிப்பக வெளியீடுகள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு செய்தி.தமிழினிக்கும் வாழ்த்துக்கள்.



4 கருத்துகள் :

ராம்ஜி_யாஹூ சொன்னது…

காவல் கோட்டம் குறித்து இரு வேறு கருத்துக்கள் நிலவுகின்றனவே.

குறிப்பாக மாலிக் கபூர் படை எடுப்பு குறித்து.

ஒரு சாரார் அவர் சண்டை இட வர வில்லை என்கின்றனர்.

ஆனால் இன்னொரு புறம், இன்றும் திருப்பதி கோவிலில், மாலிக் கப்பூர் ஸ்ரீ ரங்கத்தை படை எடுத்த பொழுது, அங்கு உள்ள பெருமாள் விக்ரகத்தை , பாதுகாப்பு கருதி திருப்பதி கோவிலில் வைத்து வழி பட்டனர், என்று ஒரு அறை/சன்னதி இருக்கிறது.

தங்கள் கருத்து என்ன

எம்.ஏ.சுசீலா சொன்னது…

அந்த நாவல் மீது வித்தியாசமான பல விமரிசனங்கள் இருப்பது உண்மையே..அவற்றை வைத்து மட்டும் அந்த நாவலை எடை போடுவது சரியில்லை;அதற்குள் நாமாக வாசகப் பயணம் செய்து நாம் பெறும் உணர்வு நிலைகளைக் கொண்டு அதைக் கணிப்பதே முறை.எப்படி இருந்தபோதும் மிகப் பெரிய சமகால வரலாற்று நாவல் என்ற வகையில் காவல் கோட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததே.
அடுத்தகேள்விக்கு...
சரித்திரத்தை நாவலாசிரியன் உள் வாங்கிக் கொள்ளும் வகையில் வெளிப்படுத்த-உறுதியாக்கப்பட்ட உண்மை நிகழ்வை மாற்றாமல்-தன் புனைவுகளைக் கொஞ்சம் சேர்க்க சுதந்திரம் உண்டு;அதுவே படைப்புச் சுதந்திரம்.ஆதாரபூர்வமாக நிறுவப்படாதவற்றில் மட்டுமே அவன் தன் புனைவுகளைக் கலக்கிறான்.அதில் தவறு இல்லை.

பெயரில்லா சொன்னது…

இவர்களுக்கு என் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
வேணுகோபால் அவர்களின் 'களவு போகும் குதிரைகள்' - தலைப்பே மனதை ஈர்க்கிறது. படிக்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.
உங்கள் பதிவுகளை படிப்பதன் மூலம் நான் படித்தே ஆகவேண்டும் என்று குறித்து வைத்திருக்கும் புத்தக பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. :) நன்றி!

Advocate P.R.Jayarajan சொன்னது…

வாழ்த்துகளும் மகிழ்ச்சியும்

http://sattaparvai.blogspot.com/

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....