காவலும்,களவும்
‘’காவலும் களவும் மிக நெருக்கமான இணை கோடுகள்;எந்த நேரத்திலும் ஒன்றை இன்னொன்றாக மாற்ற முடியும்’’என்று கூறும் ’காவல் கோட்டம்’நாவல், காவல்-களவு என்னும் இருமைகளுக்கிடையே விரியும் வரலாற்றுப் புனைவாகவே உருப்பெற்றிருக்கிறது. காவலரே கள்வராகவும் கள்வரே காவலராகவும் உருமாறும் மாயத்தையும் இப் படைப்பு நிகழ்த்துகிறது.
மதுரையின் காவல் பொறுப்பை ஏற்றிருக்கும் குறிப்பிட்ட பிரிவினர் மாலிக் காபூர் படையெடுப்பிற்குப் பிறகு அந்த உரிமையை இழந்து கள்வர்களாக மாறித் தாதனூர் என்னும் சிற்றூரில் குடியேறும் கள்ளர்களாகிறார்கள். கால ஓட்டத்தில் மதுரை விஜயநகரப் பேரரசுக்கு உரியதாகிப் பிறகு அங்கே நாயக்கர் ஆட்சியும் நிலைபெற்றுச் சில காலம் கழிந்த பிறகு அந்த உரிமை அவர்களுக்குக் கிடைப்பதைக் கீழ்க்காணும் சம்பவத்தின் வழி விவரிக்கிறது நாவல்.
தாதனூரைச் சேர்ந்த கழுவன், கட்டுக்காவல் மிகுந்த திருமலை நாயக்கர் அரண்மனையில் கன்னம் வைத்து நுழைந்து மன்னரின் அரசமுத்திரையைத் திருடிக் கொண்டுசென்று விடுகிறான். அரசன் அப்போது அடைந்த பேரதிர்ச்சியை..
’’திகைப்பின் உச்சிக்கும்,ஆச்சரியத்தின் விளிம்புக்கும் இடையில் கட்டப்பட்டிருந்த பெரும் கயிற்றின் மேல் கால்கள் நடுங்க மன்னன் நடந்து கொண்டிருந்தான்’’ என்று விவரிக்கிறார் ஆசிரியர்.
.
 |
திருமலை நாயக்கர்... |
அரச முத்திரையைத் திரும்பக் கொண்டு வருபவனுக்குச் சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட, தாதனூர்க்காரர்களே துப்புப் பேசிக் கழுவனைக் கொண்டு வந்து சேர்க்கிறார்கள். காவல் கட்டுப்பாடு மிகுந்த அரண்மனைக்குள் தான் புகுந்து திருடிய சூட்சுமத்தை அவையில் கதையாக விரிக்கிறான் கள்வன்.
‘’கள்வன் பிடிபட்டதும் சபை மையத்தில் தனது இடுப்பில் வைத்திருந்த களவின் மந்திரப்பொடியைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தூவ ஆரம்பித்தான்….உன்னிப்பாகக் கேட்ட அவர்கள் இருள் மடிப்புக்களின் உள்ளே இழுக்கப்பட்டனர்.அந்த ராஜசபையைக் கம்பளி போலச் சுருட்டிக் கன்னம் போட்ட ஓட்டை வழியே உருவி எடுத்துக் கொண்டான்’’
செய்தது களவுதான் என்றபோதும் அவனது அசாத்திய சாமர்த்தியம் கண்டு வியந்து போகும் திருமலை மன்னர், திருடிய குற்றத்துக்காகக் கழுவனுக்கு மூன்று சவுக்கடி விதித்து விட்டுக் கோட்டைக் காவலன் பொறுப்பை அவனுக்கே அளித்து விடுகிறார்.[தான் ஓட்டை போட்டு உள்ளே நுழைந்த கன்ன வாசலைத் தன் நினைவாக மூடாமல் வைத்திருக்குமாறு அவன் கோரிக்கை விடுக்க நாயக்க மன்னரும் மென்னகையோடு அவனது வேண்டுகோளை ஏற்றுக் கொள்கிறார்]
சுல்தானின் படையெடுப்பில் இழந்த காவல் உரிமையை தாதனூர்க்காரர்கள் மீண்டும் பெறும் இந்தக் கட்டமே நாவலின் மையத்தை நோக்கிக் கதையை நகர்த்தும் தொடக்கப் புள்ளி. எனினும் இந்த மக்களின் வரலாறு ஒவ்வொரு காலகட்டத்திலும் அரசர்களாய் நாட்டை ஆண்ட காவலர்களின் வரலாற்றோடு பின்னிப் பிணைந்தபடியே தொடர்ந்து கொண்டிருப்பதால் ராஜ வம்சங்களின் தொடர்ச்சியை..அவர்கள் நிகழ்த்திய போர்களை அழிவுகளை விரிவாகச் சொல்ல வேண்டிய அவசியமும், அந்தந்தச் சூழலுக்கு ஏற்பக் கள்ளர் இனத்தவரின் தொழில் முறைகளில் ஏற்படும் மாற்றங்களை விரிவாகக் காட்ட வேண்டிய தேவையும் நாவலுக்கு நேர்கிறது.
.காவல்காப்பவனின் கையிலிருப்பது காவல் தடியா,களவுக்கான கன்னக் கோலா என்பதை ஆட்சியாளர்களே முடிவு செய்கிறார்கள்.
‘’களவுக்குப் போய்த் திரிந்தவன் காவல்காரனாக மாறினால் மொண்டிக் கம்பாகவும் நிலையாள் கம்பாகவும் இருந்த கம்பு காவல் கம்பாக மாறி விடும். அவனே காவல் முழுவதும் பார்த்து வயோதிகத்துக்கு உயிரோடு இருந்தால் அவன் கையிலிருக்கும் கம்பு ஊண்டு கம்பாகிறது.’’
தங்களின் தனி உரிமை எனத் தாதனூர்க்காரர்கள் கருதும் ஊர்க்காவல் மற்றும் குடிக் காவல் பொறுப்பு எப்போதெல்லாம் தங்களிடமிருந்து கை நழுவிப் போகிறதோ அப்போதெல்லாம் அவர்கள் கள்வர்களாக உரு மாறிக் கொண்டே இருப்பதைப் பல நிகழ்வுகள் மற்றும் கிளைக் கதைகளின் வழி உறுதிப்படுத்தியபடியே நகர்ந்து செல்கிறது நாவல்.
‘’காவலும் களவும் தாதனூரின் ரெட்டைப் பிள்ளைகள்;கஞ்சியை உறுதிப்படுத்தக் காவலும்,காவலை உறுதிப்படுத்தக் களவும் என்று விதி செய்து கொண்டார்கள்’’
நாவலில் இடம் பெறும் மதுரைக் கோட்டையின் நிர்மாணமும் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அதன் தகர்ப்பும் கூடக் குறியீட்டுப் பொருள் கொண்டதாகக் கள்ளர் இனத்தவரின் எழுச்சி மற்றும் வீழ்ச்சியைச் சுட்டுவதாகவே தொனிக்கிறது.
விசுவநாதநாயக்கர் காலத்தில் கோட்டை விரிவாக்கிக் கட்டப்படுகிறது; அது போலவே நாயக்கர் காலத்தில் கள்ளர் இனத்தவரும் முன்பு தாங்கள் இழந்த காவல் உரிமையைப் பெறுகிறார்கள். மதுரை, கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுகைக்கு உட்பட்டு, பிரிட்டிஷாரின் யூனியன் ஜாக் கொடியும் அங்கே பறக்கத் தொடங்கியதும் மதுரை நகரின் விரிவாக்கம் கருதிக் கோட்டையை இடிக்க உத்தரவிடுகிறார் கலெக்டர் பிளாக்பெர்ன். அதன் பிறகு தொடர்ந்து நடக்கும் பல நவீன நிர்வாகச் சீரமைப்புக்களில் காவல் துறை.,காவல் நிலையங்கள் போன்ற அமைப்புக்கள் முகிழ்க்கத் தொடங்குகையில் கள்ளர்கள் தங்கள் அதிகாரத்தைப் பறி கொடுக்க நேருகிறது.
கோட்டை இடிபடும்போது, “கண்ணீர் கசிந்து இறங்குவது போலக் கருங்கல் சுவரில் இருந்து சாமிகள் இறங்கின. ...இருள் பரப்பி நிற்கும் மதுரையின் வீதிகளில் ஆங்கார ஓசையும் உடுக்கைச் சத்தமும் கதறலும் கேட்க ஆரம்பித்தது…எட்டுப்பேர் இழுத்துப்பிடிக்க சங்கிலிக் கருப்பன் இறங்கியபோது கோட்டையே பிய்த்துக் கொண்டு வருவதுபோல் இருந்தது. அவன் இறங்கிய வேகத்தில் முதுகில் இருந்த கோட்டையை உலுக்கிவிட்டு இருளில் சுருண்டு கிடந்த வீதிகளை வாரிச் சுருட்டியபடி போனான்.” என்று நரபலி கொடுத்துக் கோட்டையில் அமரச் செய்யப்பட்ட காவல் தெய்வங்களான தெற்கு வாசல் ஜடாமுனி, கிழக்கு வாசல் வண்டியூர் மாரியம்மாள் மேற்கு வாசல் கொத்தளத்து முனி என ஒவ்வொரு தெய்வமும் அலறிக் கதறியபடி வெளியேறுவதான உச்சமான காட்சி அதுவரை மதுரையின் காவல் பொறுப்பாளர்களாக இருந்த ஓர் இனத்தின் வீழ்ச்சியையே குறியீடாக முன் வைத்திருக்கிறது என்று கூறலாம்.
‘’இந்தக் காட்சியை நுட்பமான குறியீட்டுத் தன்மையுடன் எழுதியிருக்கிறார் சு.வெங்கடேசன்.’’என்று எழுத்தாளர் ஜெயமோகனும் தன் கட்டுரையில் குறிப்பிடுகிறார். காவல் தெய்வங்களாகிய குலசாமிகளின் கதையைக் குலப் பாடகர்கள் பாடக் கேட்கும் கலெக்டர் பிளாக்பெர்னுமே கூட நீண்டு செல்லும் அவர்களின் பாரம்பரியத் தொடர்ச்சி கண்டு சற்றே பிரமித்துப் போய் விடுகிறார்.
தாதனூர்க்காரர்களின் காவல் உரிமை பிரிட்டிஷாரால் ரத்து செய்யப்படும் சூழல் ஏற்படுகையில்,அதை எதிர்த்தவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் அல்லது சிறை பிடிக்கப்படுகிறார்கள்.குற்றப் பரம்பரைச் சட்டம் கொண்டுவரப்பட்டுத் தாதனூர்க்காரர்களின் கைரேகைகள் பதிவாகின்றன; அவர்கள் மீது நிகழும்[பெருங்காமநல்லூர்]துப்பாக்கிச் சூட்டோடு நிறைவு பெறுகிறது நாவல்.
(மேலும்-அடுத்த தொடர்ப்பதிவில்.)