துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி
வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்த்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

16.12.12

நாஞ்சிலுக்கு இயல்விருது


நாற்பது ஆண்டுக் காலமாக இடைவிடாமல் எழுதி வரும் நாவலாசிரியர்,சிறுகதையாசிரியர்,கட்டுரையாளர் என்ற பெருமைகளுக்குரியவர் நாஞ்சில் நாடன். அவரது முதல் நாவலான ‘தலைகீழ் விகிதங்க’ளைப் படித்தபோது நான் அடைந்த கொந்தளிப்பான உணர்வுகள் இன்னும் கூட என் நினைவில் எஞ்சியிருக்கின்றன.[சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமானது அந்த நாவலே]

அலுவல் காரணமாக மும்பையில் புலம்பெயர்ந்து வாழ்ந்ததால் விளைந்த மன உளைச்சல்களை..சொந்த மண்ணின் மீதான ஏக்கத்தைத் தனது ‘மிதவை’நாவலிலும்,சிறுகதைகளிலும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கும் இவரது புகழ் பெற பிற நாவல்கள்
சதுரங்கக்குதிரை,
என்பிலதனை,
எட்டுத்திக்கும் மதயானை
ஆகியன.
இவரது சிறுகதைகளும் இரு பெரும் பகுதிகளாக- முழுமையான தொகுப்பாக வெளிவந்திருக்கின்றன.’சூடிய பூ சூடற்க’என்னும் இவரது சிறுகதைத் தொகுப்பு 2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றது.சிறுகதைகளுக்கான இலக்கியச் சிந்தனை விருது (1975, 1977, 1979), தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான விருது (1993), கண்ணதாசன் விருது (2009), கலைமாமணி விருது (2009) எனப் பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றிருக்கிறார்.

நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கைத் தமது புனைவுகளில் பெரிதும் கையாண்டு வரும் ஜி.சுப்பிரமணியம் என்னும் புனைபெயர் கொண்ட நாஞ்சில் நாடன், கட்டுரைகளைக் கூடக் கதைக்குரிய புனைவுத் தன்மையோடு முன்வைத்து வருபவர்; சங்க இலக்கியத்திலும், கம்பனிலும் தேர்ந்த புலமை படைத்தவர். விரைவில் வெளிவரவிருக்கும் இயக்குநர் பாலாவின் பரதேசி படத்துக்கான உரையாடல்களையும் நாஞ்சில் நாடன் எழுதியிருக்கிறார்.

இந்த ஆண்டு கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கும் 2012ஆம் ஆண்டுக்கான இயல் விருது, நாஞ்சில் நாடனுக்கு வழங்கப்படவிருக்கிறது. கேடயமும் 2500 கனடிய டாலர்கள் மதிப்பும் கொண்ட இந்த விருது, சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லட்சுமி ஹோம்ஸ்ரோம், அம்பை, ஐராவதம் மகாதேவன், கோவை ஞானி, எஸ்.பொன்னுத்துரை, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரைத் தொடர்ந்து, இவ்வருடம் நாஞ்சில் நாடன் அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

நாஞ்சில் நாடனுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...!

இணைப்புக்கள்;

நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து (3)  

நாஞ்சில் நாடன் பாராட்டுவிழா-தில்லியிலிருந்து (2)



18.1.12

மகளாய்..மாணவியாய்.....

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சற்றும் எதிர்பாராத ஒரு தொலைபேசி அழைப்பு.!.
’’அம்மா..என்னை நினைவிருக்கிறதா. நான்தான் தேனம்மை..’’என்றது அந்தக் குரல்.  ஏதோ அந்நிய தேசத்தில் இருப்பது போன்ற உணர்வுடன் தில்லியில் இருந்து கொண்டிருக்கும் என்னைத் தமிழ்நாட்டிலிருந்துவரும் முகம் தெரியாத அழைப்புக்களும் கூட ஆனந்தப்படுத்தும்...அப்படியிருக்கையில் இருபது ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் படித்த ஒரு மாணவி - ..அதுவும் கல்லூரியை விட்டுப் போன பிறகு தொடர்பே இல்லாமல் இருந்து விட்டு இப்போது எதிர்பாராத ஒரு நேரத்தில் விளித்தது என்னை உண்மையாகவே பரவசப்படுத்தியது..

17.1.12

எஸ்.ராவுக்கு இயல்விருது


தமிழிலக்கியப் பரப்பைத் தங்கள் ஆழமான படைப்புக்களால் அர்த்தமுள்ளதாக்கி வரும் சமகால எழுத்தாளர்களில் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ஆத்மார்த்தமான பங்கு குறிப்பிட்டுச் சுட்டத்தக்க முக்கியத்துவம் கொண்டது. இலக்கிய இதழ்களில் எழுதினாலும்,வெகுஜன இதழ்கள் என்றாலும் நிறத்தை மாற்றிக் கொள்ளாமல் தரக் கட்டுப்பாட்டோடு எழுதக் கூடிய மிகச் சிலரில் எஸ்.ராவும் ஒருவர்.

2.1.12

இரு வண்ணங்களின் ‘சாரல்’

 
நெல்லைமண்ணின்  எழுத்தாளர்களாகியவண்ணதாசன்(கல்யாண்ஜி),வண்ணநிலவன் ஆகிய இருவரும் இவ்வாண்டுக்கான சாரல் விருதைப் பெறத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்கள்.

31.12.11

புத்தாண்டு வாழ்த்துக்கள்...



’’எனக்கு நீ வேண்டும்...
நீதான் வேண்டும்..
என்னுடைய இருதயம் விடாமல் சொல்லிக் கொண்டிருக்கட்டும் 
கடைசிவரையில்....
என்னுடைய மற்ற ஆசைகள் எல்லாம்
காலையிலும் மாலையிலும் அலைக்கழிப்பவை
வெறுமையானவை

23.12.11

விருதுகள்

இவ்வாண்டுக்கான தமிழ் இலக்கிய விருதுகள் பலதரப்புக்களிலிருந்தும் வரிசையாக அறிவிக்கப்பட்டு வருவது மகிழ்ச்சியளிக்கிறது.
சாகித்திய அகாதமி பரிசுக்குத் தேர்வாகியிருக்கும் திரு சு.வெங்கடேசன் மதுரை மண்ணின் மைந்தர்.
மதுரையின் கடந்தகால வரலாற்றை அடித்தளமாகக் கொண்டு மிகப் பெரும் முயற்சியையும் உழைப்பையும் செலவிட்டு அவர் உருவாக்கியுள்ள ‘காவல் கோட்டம்’என்னும் அவரது முதல் நாவலே சாகித்திய அகாதமி பரிசுக்கு உரியதாகத் தேர்வாகியிருப்பது பெருமைக்குரியது.

1.12.11

தமிழ்மகனின் புதிய நாவல்

எனது மதிப்பிற்குரிய நண்பரும் தினமணி உதவி ஆசிரியருமான திரு தமிழ்மகனின் ’ஆண்பால் பெண்பால்’என்னும் நாவல்,வரும் டிசம்பர் மூன்றாம் தேதி சென்னை-ஸ்பென்ஸர் எதிரில் உள்ள புக் பாயிண்ட் அரங்கத்தில் மாலை ஆறு  மணிக்கு வெளியாகிறது. 
அந்தப் படைப்பின் அறிமுகமாக அவர் எனக்கு அனுப்பியுள்ள மின் அஞ்சல் கீழே..


மீண்டும் மூன்றாண்டு ழைப்புக்குப் பிறகு ஆண்பால் பெண்பால் நாவலை எழுதி முடித்திருக்கிறேன்.
 ஆணுலகத்தையும் பெண்ணுலகத்தையும் சற்று உளவியல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தொட்டுப் பார்க்கும் முயற்சி இது. இந்த எல்லா அம்சங்களிலும் அவர்களுக்குள் ஏராளமான முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
ஒரு சம்பவத்தை ஆண் சொல்லிச் செல்வதற்கும் அதை பெண் சொல்லிச் செல்வதற்கும் சில தன்மை வேறுபாடுகள் உண்டு. ஒரு நாவலையே பெண்ணும் ஆணும் சொல்லிச் செல்லும் விதமாக இந்த நாவலைப் படைத்திருக்கிறேன்.
திருமண பந்தம் மட்டுமே ஒரு ஆணையும் பெண்ணையும் இணைத்துவிட போதுமானதாக இருப்பதில்லை.  அதனால்தான் இணைந்து இருப்பதற்காகவோ, பிரிந்து போவதற்கோ தினந்தோறும்  இருவருமே முயற்சி செய்தபடியே இருக்கிறார்கள். அந்த முயற்சிக்கு புத்திசாலித்தனங்களும் முட்டாள்தனங்களும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சமயத்தில் பிரிவதற்கு புத்திசாலித்தனமும் இணைந்திருப்பதற்கு முட்டாள்தனமும் முக்கியமாகிவிடுகிறது.
கணவனால் பொருட்படுத்தப்படாத சில காரணங்கள், மனைவிக்கு எத்தனை பொருள் நிறைந்தததாக இருக்கிறது என்பதற்காக சில காரணங்களைச் சொல்லியிருக்கிறேன்.
முக்கியமாக இரண்டு காரணங்கள். ஒன்று, பெண்களின் அழகைக் கேள்விக் குறியாக்கும் ஓர் உடற்குறைபாடு... வெண்புள்ளி. இரண்டு,  பெண்களால் பெரிதும் ஆராதிக்கப்பட்ட ஒரு அரசியல் தலைவர்... எம்.ஜி.ஆர். ஒன்று நோய், இன்னொன்று அரசியல். இரண்டுமே நோய் என்பார் உளர்(பவர்). இரண்டுக்கும் பொது அம்சம் தோற்றக் கவர்ச்சி. இதில் பெரும்பாலும் மாற்றுக் கருத்து இல்லை.
கையெழுத்துப் பிரதியைப் பார்த்துவிட்டு இது பொம்பளை கையெழுத்து மாதிரி இருக்கிறதே என்றனர். பெண்களுக்கென்று விசேஷமாக கையெழுத்து இருக்க முடியுமா?
இருக்கும் என்கிறார்கள். பெண்கள் கையெழுத்தில் ஒரு கவனக் குவிப்பு இருப்பதைச் சுட்டிக் காட்டினர். கையெழுத்தில் அழுத்தம் அதிகம் இருக்கும் என்கிறார்கள்.
யாரோ போனில் பேசினார். அந்த ஆளோட குரல் பொம்பளை குரல் மாதிரி இருக்கிறது என்றார் ஒருவர்.
ஒருவன் நடந்து போனான். அவன் நடை பெண்ணோட நடை மாதிரி இருக்கிறது கருத்து சொன்னான் பக்கத்தில் இருந்தவன்.
எதுக்குடா பொம்பளை மாதிரி பயப்படறே என்று தைரியமூட்டுகிறான் ஒருவன்.
இந்த வழக்கமான பேச்சுகளின் பின்னணியை ஆராய, மனிதகுல வரலாற்றின் தொன்மையான காலந்தொட்டு ஏற்பட்ட சமூக மாற்றங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.
பெண்ணுக்கும் ஆணுக்குமான சிந்தனை, பயம், ஏதிர்பார்ப்பு, ஆர்வம், அலட்சியம், தன்னலம், பாசம், பக்தி, தேவை, அணுகுமுறை எல்லாவற்றிலும் மெல்லிய வேறுபாடுகள் இருப்பதைப் பார்க்கிறேன். இத்தகைய விஷயங்களில்தான் தினமும் அவர்களுக்குள் வாக்குவாதங்கள் ஆரம்பிக்கின்றன.
அதே விஷயங்களில் மெல்லிய வேறுபாடுகள் ஆண்களுக்குள் இல்லையா, பெண்களுக்குள் இல்லையா என்று கேட்கலாம்.
கணவன், மனைவியாக மாறும்போது இந்த பிரச்னைகள் சில நேரங்களில் சேர்ந்து வாழ்வதையே கேள்விக்குறியாக்கிவிடுவதைப் பார்க்கிறோம். அதனால் குடும்பம் பாதிப்புக்குள்ளாவதும் வாரிசுகள் பாதிக்கப்படுவதையும் பார்க்கிறோம். கணவன், மனைவி பிரிவது உறவுச் சங்கலித் தொடரின் பாதிப்பாக இருக்கிறது. அதுதான் இதன் தீவிரம்.
நாவலில் இந்தப் பிரச்னைகளை ஒருவித அமானுஷ்யத் தன்மையுடன் சொல்ல முயன்று இருக்கிறேன். சொல்லும் உத்தியிலும் சில முயற்சிகள் செய்திருக்கிறேன். கதையின் முடிவை கதையின் நடுவிலேயே... ஐன் இரம்பத்திலேயே சொல்லுவதாகவும் பின்னால் நடக்கப் போவதை முன்னரேயும் முன்னால் நடந்ததைப் பின்னரும் சொல்லியிருக்கிறேன்.
கதையை கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் சொல்லிச் செல்கின்றன. அந்தக் கதாபாத்திரங்கள் எழுத்தாளர்கள் இல்லை என்பதால் அவர்கள் அப்படித்தானே சொல்ல முடியும் என்பது போன்ற உத்தி.
இந்த நாவலை நான் எழுதவில்லை என்பதை ஆதாரபூர்வமாக விளக்குவதே  நாவலின் ஆரம்பம்... வாசகர்களுக்குப் புதிய அனுபவ வாசலைத் திறந்து வைக்கும் என்று நம்புகிறேன்.


அறிவியல் சிறுகதைகள் உட்படச் சிறந்த பல சிறுகதைகளையும்,நாவல்களையும் உருவாக்கியுள்ளவர் திரு தமிழ்மகன். 
அவரது வெட்டுப்புலி நாவல்,திராவிட இயக்க வரலாற்றுப் பின்னணியின் தாக்கம் தமிழகத்தின் மனநிலையில் ஏற்படுத்திய பல மாற்றங்களை விரிவாகப் பதிவு செய்திருக்கிறது.மிகுதியும் பேசபட்ட அந்த நாவலத் தந்த தமிழ்மகன் தனது புதிய நாவலான ஆண்பால்-பெண்பால் வழி அடுத்த உயரத்தையும் எட்டியிருப்பார் என எண்ணுகிறேன்.அப் படைப்பை விரைவில் படிக்கத் தூண்டும் ஆவலை அவரது அழுத்தமான முன்னுரை கிளர்த்தியிருக்கிறது.
தமிழ்மகனுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
காண்க;
வெட்டுப்புலியின் வீச்சுக்கள் 

16.6.11

தென்மேற்கின் சாரல்...

எளிமையான , குழப்பமில்லாத - ஓரிரு வரிகளில் முடிந்து விடும் மிகச் சாதாரணமான கதை.
தொழில்நுட்ப சாகசங்களோ..,பிற நாட்டுப் பின்புல வண்ண ஜோடனைகளோ சிறிதுமில்லை.
ஆனாலும் ஒரு தமிழ்ப்படம் தேசிய விருது பெற்றிருக்கிறது.
அதில் தாய் வேடம் தாங்கிய சரண்யா சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற வழி செய்து தந்திருக்கிறது.

26.1.11

தேன் குரலுக்கு விருது

தேன் தடவிய குரலில் இசையைக் கசிய விட்டு, உணர்வு பூர்வமான தனது உட்கலப்பால் உரிய ‘பாவ’ பேதங்கள் காட்டிக் கேட்போரை வசீகரிக்கும் மாயத்தைச் செய்பவர் எஸ்.பி.பி.
 குடியரசு நாளான இன்று (26/01/11) அவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கும்
பத்மபூஷண் விருதைக் கொண்டாடுவதற்காக....
அவரது பாடல்களில் என்னை உருகிக் கரைய வைக்கும் பலவற்றுள்.
தேனே தென்பாண்டி மீனே என்ற பாடல் மட்டும் பகிர்வுக்கு இங்கே....

ராஜாவின் இசையும் பாலுவின் குரலும் காதுக்குள் இசைத் தேனாய்ப் பாய்ந்து நம்மை மூழ்கடிக்கும் இந்தப் பாடல் இரவின் மோனத்தையும் , தனிமையின் சோகத்தையும் ஒரு சேரச் சுமந்து வருவது.
பத்மபூஷண் எஸ்பி.பி அவர்களுக்கு அன்பு வாழ்த்துக்கள்.


பி.கு; இந்தப் பாடலை விடவும் பாலச்சந்தரின் அக்கினி சாட்சி (சிவகுமார்,சரிதா நடிப்பில்)படத்தில் அவர் பாடும்‘கனாக் காணும் கண்கள் மெல்ல’ பாடலே எனது எஸ்.பி.பி பட்டியலில் முதலிடம் பெறுவது.
என்னைக் கசிந்து உருகிக் கண்ணீர் மல்க வைப்பது..
ஒரு முறை எஸ்.பி.பி தந்திருந்த பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட அந்தப்பாடலைக் கேட்ட பிறகே , தான் உறங்கச் செல்வது வழக்கம் என்று கூடக் குறிப்பிட்டிருந்தார்.
யூ டியூபில் தேடிப் பார்த்தபோது அது கிடைக்கவில்லை..
நண்பர் எல்.கே அவர்கள் அனுப்பி வைத்த இணைப்பால் அந்தப் பாடலும் கூடவே...



24.12.10

விருதுக்கு வாழ்த்து


ஒரு வார இடைவெளியில் தில்லியிலும்,கோவையிலுமாக இலக்கிய நிகழ்ச்சிகளில் அடுத்தடுத்துச் சந்திக்க நேர்ந்த 
திரு நாஞ்சில் நாடன் அவர்களுக்குச் ‘சூடிய பூ சூடற்க’ என்ற அவரது சிறுகதைத் தொகுப்புக்காக இவ்வாண்டுக்கான சாகித்திய அகாதமி விருது
அறிவிக்கப்பட்டிருப்பது பெருத்த மகிழ்ச்சியையும்,மிகுந்த மன நிறைவையும் ஆறுதலையும் அளிக்கிறது.

28.11.10

மீனாட்சியின் பொன் விழா

’’கனத்த காகித அட்டை போடப்பட்டுக் கையால் அச்சுக் கோர்ப்புச் செய்யப்பட்ட அந்தப் பழுப்பேறிப் போன காகிதங்களில்தான் சில நேரங்களில் சில மனிதர்களையும்,நாடகம் பார்க்கும் நடிகையையும்,சினிமாவுக்குப் போகும் சித்தாளையும்,உயிர்த்தேனையும்,லா ச ரா கதைகளையும் இன்னமும் ரசிக்க முடிகிறது...
நெஞ்சுக்குப் பக்கமாகக் குறிப்பிட்ட ஒரு காலத்தின் சாட்சியாக இருந்து கொண்டிருப்பவை.... மட்கத் தொடங்கியிருக்கும் அந்தப் பக்கங்கள்தான்...’


தன் எழுத்தின் வழி மனித நேயத்தின் சிகரம் தொட்ட கதை ஆசான்
 பத்மபூஷண் திரு ஜெயகாந்தனை முன்னிலைப்படுத்தி-
பாரம்பரியப் பெருமை மிக்க மதுரை மீனாட்சி புத்தக நிலையம் தன் பொன்விழாவை டிச.12ஆம் தேதியன்று மதுரையில் கொண்டாடவிருக்கிறது..
விழா அழைப்பிதழும்,பொன்விழா மலருக்கு நான் எழுதி அனுப்பிய கட்டுரையும்..கீழே...



இரு மீனாட்சிகள்......
எம்.ஏ.சுசீலா

மதுரையில் நான் தொழும் மீனாட்சிகள் இருவர்.
மதுரையம்பதியின் அணியாகத் திகழும் ஆலயத்தில் குடிகொண்ட அன்னை மீனாட்சியோடு...,புத்தக அடுக்குகளுக்குள் குடியிருந்து கோலோச்சும் மீனாட்சியையும் (மீனாட்சி புத்தக நிலையத்தில் )
சேர்த்து...மதுரையில் நான் தொழும் மீனாட்சிகள் இருவர்.

1970ஆம் ஆண்டு பாத்திமாக் கல்லூரித் தமிழ்த் துறையின் இளம் விரிவுரையாளராக மதுரையில் கால் பதித்தது முதல்...பல காவதங்கள் தாண்டி வடமாநிலத்தில்..இந்தியத் தலைநகரில் வசித்து வரும் இன்றைய சூழ்நிலையிலும் கூட இரண்டு மீனாட்சிகளுக்கும் ஒரே மாதிரியான இடத்தையே என் உள்ளத்தில் வழங்கி வருகிறேன்..
மீனாட்சி புத்தக நிலையத்தோடான என் பிணைப்பும்,நட்பும் மதுரையில் நான் வசிக்கத் தொடங்கிய காலம் தொட்டு நீண்டு,இன்று நாற்பது ஆண்டுகளைத் தொட்டிருக்கின்றன.

நான் பணி புரிந்த கல்லூரி நூலகத்துக்கும்,ஆண்டு விழாவுக்கும் பரிசுப் புத்தகங்கள் வாங்குவதற்கான பொறுப்புக்கள் வழங்கப்படும்போது - இளமைக் காலம் தொட்டே புத்தக விரும்பியாக இருந்த நான் , அந்தப் பணியை ஆர்வத்தோடு வலிந்து ஏற்றுக் கொண்டதனாலேயே மீனாட்சி புத்தக நிலையத்தாரோடான என் உறவுப் பாலம் , தலைமுறைகள் தாண்டியும் தளராமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தானப்ப முதலி தெருவில் மயூரி வளாகத்தில் தற்போது இருக்கும் மீனாட்சி புத்தக நிலையம் ,  '70,மற்றும் '80களில் மேலக் கோபுர வாசலில்,செண்ட்ரல் திரையரங்கிற்குச் சற்றுத் தள்ளி மிகச் சிறிய இண்டு இடுக்கான பெட்டிக் கடை போன்ற ஓர் இடத்திலேதான் இருந்தது.
மூர்த்தி சிறிதானாலும்...அதன் கீர்த்தி பெரிது;
காரணம் அது வெறும் புத்தக விற்பனை நிலையமாக மட்டும் இல்லாமல் தமிழின் தலை சிறந்த பதிப்பகங்களில் ஒன்றாகவும் விளங்கியதுதான்.
அப்போதைய எழுத்துலக ஜாம்பவான்களாகிய ஜெயகாந்தன்,தி.ஜானகிராமன்,லா.ச.ராமாமிருதம் போன்றோரின் நூல்கள் பலவும்(குறிப்பாக ஜெயகாந்தனின் நூல்கள் அனைத்துமே) மேலக் கோபுர வாசல் முகவரியைத் தாங்கியபடிதான் வெளிவந்து கொண்டிருந்தன

அந்தப் பருவத்தில் அக்கினிப் பொறியாகத் தெறித்துக் கொண்டிருந்த திரு ஜெயகாந்தனின் எழுத்துக்களையே ஆதர்சமாகக் கொண்டு எழுதுகோல் பிடிக்க ஆரம்பித்திருந்த எனக்கு அவரது நூல்களைப் பதிப்பிக்கும் அந்தக்குறிப்பிட்ட இடமும் கூட மனக் கிளர்ச்சியும்,உத்வேகமும் ஊட்டும் ஒன்றாகத்தான் தோன்றிக் கொண்டிருந்தது; தொடர்ந்து...அதே பதிப்பகக் கடைக்குள் வைத்து நான் ஆராதித்து வந்த எழுத்தாளர்களை-ஜே.கே முதல் லா.ச.ரா வரை எதிர்ப்பட நேர்ந்ததும்,அவர்களில் ஒரு சிலரை மீனாட்சி புத்தக நிலையத்தின் நிறுவனரும்,உரிமையாளருமான திரு செல்லப்பன் அவர்களின் உதவியோடு கல்லூரியில் உரையாற்ற அழைத்துச் சென்றதும் என் வாழ்க்கைப் பேரேட்டில் மறக்க முடியாத சில பக்கங்கள்.

 பதிப்பகத்தின் இன்றைய உரிமையாளர் திரு செ.முருகப்பனின் தந்தையும், நிறுவனருமான திரு செல்லப்பன் ,முக மதிப்புக்காக ,ஜோடனையாக எதுவுமே பேச அறியாதவர்;ஆனால் கருமமே கண்ணாக...உரிய நேரத்தில்,உரியதைச் செய்து-மிகத் துல்லியமான தரமான படைப்பாளிகளை மட்டுமே தெரிவு செய்து அவர்களது நூல்களை மட்டுமே பதிப்பித்து மிகச் சிறந்த தரக் கட்டுப்பாட்டைத் தன் பதிப்புப் பணியில் பேணி வந்தவர் அவர்;


சென்னையிலிருந்த பல பதிப்பகங்கள் கூடச் செய்யாத தலை சிறந்த பதிப்புக்களை அளித்து மதுரையின் முகவரியை உலகறியச் செய்து கொண்டிருந்த அவர் எண்ணியிருந்தால் அந்தத் துறையைக் கொண்டே பணம் பண்ணக்கூடிய எழுத்துக்களைப் பதிப்பித்துக் கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கலாம்.அவ்வாறு செய்யத் துணியாத தேர்ந்த ரசனையோடு கூடிய கறாரான பதிப்புக் கொள்கை கொண்டிருந்தவர் திரு செல்லப்பன்.

நான் சற்றும் எதிர்பார்த்திராத நிலையில்...திரு செல்லப்பன் அவர்கள் எனக்கு வழங்கிய இரு பெரும் வாய்ப்புக்கள் , வாழ்வின் எந்தத் தருணத்தில் நினைவுகூர்கையிலும் என்னை நெகிழ வைப்பவை. 
ஒன்று....,சிறந்த சிறுகதைகளின் வரிசையான தொகுப்புக்களாக அவர் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்த மணிக்கதைகள் ஐந்தாம் தொகுப்பில் என் சிறுகதை ஒன்றையும் இணைக்கப் போவதாக அவர் எழுதிய கடிதம்..
(மணிக்கதைகள் 5 இல் கலைமகள் மாத இதழில் வெளியான
புதிய பிரவேசங்கள்’என்னும் என் சிறுகதையும் இடம் பெற்றிருக்கிறது.)மீனாட்சியின் அரிதான அந்தத் தொகுப்புக்கள் ஒன்றில் என் படைப்பும் இடம் பெற்றிருப்பதைப் பெருமைக்குரிய ஓர் அங்கீகாரமாக இன்றளவும் நன்றியின் நெகிழ்வோடு நான் போற்றிக் கொண்டிருக்கிறேன்.

அடுத்தாற்போலத் திரு செல்லப்பன் அவர்கள் அளித்த இன்ப அதிர்ச்சி, நான் கற்பனையிலும் எண்ணிப் பாராதது.
மதுரை ஒய் எம் சி ஏ அரங்கை ஒட்டிய குஜராத்தி சமாஜத்தில் மீனாட்சி புத்தக நிலையத்தின் சார்பில் நடைபெற்ற ஜெயகாந்தனின் மணிவிழா நிகழ்வில் - சிறப்புப் பேச்சாளர்களில் ஒருவராக என்னையும் இணைத்துச் சொற்பொழிவாற்றுமாறு அவர் பணித்ததை எனக்கு வழங்கப்பட்ட உச்சபட்ச கௌரவமாக நான் எண்ணுகிறேன்.ஜே கே பற்றிய என் எண்ண ஓட்டங்களை உரையாய் ஆக்கி அவர் முன்னிலையிலேயே சமர்ப்பிக்கவும், அவருடன் உரையாடவும் வழி அமைத்துத் தந்த அந்த மணிவிழா மேடை... என்னுள்ளத்தில் என்றென்றும் கல்வெட்டாய்ப் பதிந்திருக்கிறது.

திரு செல்லப்பனைத் தொடர்ந்து , தானும் நயத்தக்க நாகரிகத்தோடு பழகி எனது நூல்களையும் 
(தடை ஓட்டங்கள்,சிறுகதைத் தொகுப்பு-2001    ,
 பெண் - இலக்கியம் - வாசிப்பு-2001,
 இலக்கிய இலக்குகள்,-2004,      
 தமிழிலக்கிய வெளியில் பெண்மொழியும்,பெண்ணும்- 2006)
செம்மையான முறையில் அச்சிட்டு வெளியிட்ட பண்பாளர் ,அவரது மகன் திரு முருகப்பன் அவர்கள்.
எத்தனை முறை ’படி’ திருத்த வேண்டுமென்று சொன்னாலும் - நூல் வடிவம்,அட்டை ஆகியன எப்படி அமைய வேண்டுமென்று நான் விரும்பினாலும்,முகம் சற்றும்கோணாமல் அதற்கெல்லாம் ஒத்துழைப்பு நல்கி.,நானும் சக பேராசிரியை ஒருவரும் இணைந்து நடத்திய-அவரது பதிப்பக வாயிலாக வெளியிடப்பட்ட -புத்தக வெளியீட்டு விழாவிற்கு இயன்ற உதவிகளையெல்லாம் செய்து தந்து அவர் துணை நின்றதை எந்நாளும் மறக்க இயலாது.


நூல் ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பளித்து,அவர்களுக்குச் சேர வேண்டிய ராயல்டி - சன்மானம் போன்றவற்றை அவர்களே மறந்து விட்டாலும் - மறவாமல் குறித்து வைத்துத் தவறாமல் கொடுத்துவிடும் மிகச் சிறந்த நெறியைத் தந்தையின் வழியில் தனயனும் பின் தொடர்ந்து வருகிறார்.இன்றைய பதிப்புலகில் மிகவும் அருகிப் போய்விட்ட பண்பு இது.

என் முனைவர் பட்ட ஆய்வின்போதும்,தொடர்ந்து மாணவர்களுக்குத் தேவையான நூல்களை நாடி வரும்போதும்,இன்று தில்லியில் இருக்கும் நிலையிலும் எந்த நூல் எப்போது வேண்டுமென்று கூறினாலும் முகம் கோணாமல் உதவிக் கரம் நீட்டும் திரு முருகப்பன்,இன்று எங்கள் குடும்பத்தில் ஓர் உறுப்பினராகவே ஆகிப் போயிருக்கிறார்.

இன்று அச்சுத் தொழிலில் பல வியத்தகு தொழில்நுட்பங்கள் கை கூடியிருக்கலாம்..பல்வேறு பதிப்பகங்கள் பல்கிப் பெருகியிருக்கலாம்.விதம் விதமான செய்நேர்த்தியுடன் கூடிய நூல்கள் வெளிவரலாம்.ஆனாலும் கூட எனக்கென்னவோ மீனாட்சி புத்தக நிலையத்தின் பழைய பதிப்புக்களில்...(ஜெயகாந்தனின் குறு நாவல்கள் மற்றும் நாவல்கள் அனைத்தையும் தொகுத்து அவர்களே இன்றைய நவீன பதிப்புக்களாக வெளியிட்டிருந்தாலும்) -  கனத்த காகித அட்டை போடப்பட்டுக் கையால் அச்சுக் கோர்ப்புச் செய்யப்பட்ட அந்தப் பழுப்பேறிப் போன காகிதங்களில்தான் சில நேரங்களில் சில மனிதர்களையும்,நாடகம் பார்க்கும் நடிகையையும்,சினிமாவுக்குப் போகும் சித்தாளையும்,உயிர்த்தேனையும்,லா ச ரா கதைகளையும் இன்னமும் ரசிக்க முடிகிறது...
நெஞ்சுக்குப் பக்கமாகக் குறிப்பிட்ட ஒரு காலத்தின் சாட்சியாக இருந்து கொண்டிருப்பவை.... மட்கத் தொடங்கியிருக்கும் அந்தப் பக்கங்கள்தான்...

பொன்விழாக் காணும் மீனாட்சி புத்தக நிலையம் ,தன் பாரம்பரிய உயர் நெறிகளைத் தக்கவைத்துக் கொண்டபடி பதிப்புத் துறையில் உன்னதமான பல சாதனைகளைப் படைக்க வேண்டும்...எல்லாம் வல்ல மதுரை மீனாட்சியின் ஆசி அதற்குத் துணை நிற்க வேண்டும் என இந்த இனிய தருணத்தில் மனம் கனிந்து வாழ்த்துகிறேன்.


பதிவு பற்றிய உங்கள் கருத்துக்களை மின் அஞ்சலிட..susila27@gmail.com





















22.3.10

பரிசுக்கு வாழ்த்து

மூத்த எழுத்தாளரும் , வங்க இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க படைப்புக்களைத் தமிழாக்கம் செய்து(மஹா ஸ்வேதா தேவி,ஆஷா பூர்ணாதேவி) தமிழ்மொழிக்கு வளம் சேர்த்திருப்பவருமான கொல்கத்தா திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள்,
’நான் கடந்து வந்த பாதை’
என்ற தனது தன் வரலாற்று நூலுக்காக
இவ்வாண்டின் ‘இலக்கியச் சிந்தனை’ப்பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
(அந்நூல் குறித்த மதிப்புரையை இவ் வலைத் தளத்தில்
உழைப்பின் தன் வரலாறு’- http://masusila.blogspot.com/2009/11/blog-post_19.html
என்ற தலைப்பில் காணலாம்)
மிகச் சிறந்த எழுத்து உழைப்பாளியும்,நான்காவது முறையாக இலக்கியச் சிந்தனை பரிசு பெறுபவருமான திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.

27.1.10

பத்மஸ்ரீ இந்திராபார்த்தசாரதி



தமிழ்ப்பேராசிரியர்கள் நவீன இலக்கியத்திற்கும், படைப்பாக்கத்திற்கும் அந்நியமானவர்கள் என்ற பிம்பத்தைத் தகர்த்தெறிந்து, அவ் வசை கழித்த முன்னோடிகளில் குறிப்பிடத்தக்கவர், ‘இந்திரா பார்த்தசாரதி’ என்ற புனைபெயரைக் கொண்டிருக்கும் டாக்டர் ரங்கனாதன் பார்த்தசாரதி.

தில்லி பல்கலைக்கழகத்தில் பல ஆண்டுகள் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிந்த  திரு இ.பா அவர்கள், போலந்தின் வார்ஸா பல்கலையிலும் ‘வருகை தரு’(Visiting Professor  ) பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். இறுதியாகப் புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் சுவாமி சங்கரதாஸ் நாடகப் பள்ளியை நிறுவி,அதன்  இயக்குநராகச் செயலாற்றி,  நாடக நிகழ்கலையில் ஆர்வம் கொண்ட பலரின் உருவாக்கத்துக்குத் தூண்டுகோலாக விளங்கியிருக்கிறார்.

பேராசிரியப் பணிக்கிடையே படைப்பிலக்கியத் துறையின் பல தளங்களிலும் இடையறாத முனைப்போடு இயங்கித் தமிழின் குறிப்பிடத்தக்க நாவல்கள் பலவற்றையும்,நாடகங்களையும்,சிறுகதைகளையும் உருவாக்கியிருப்பது...இ.பாவின் மற்றொரு பரிமாணம்.

கீழவெண்மணியில் நிகழ்ந்த கலவரத்தைப் பின் புலமாகக் கொண்ட ‘குருதிப் புனல்’  நாவலுக்காக சாகித்திய அகாதமி பரிசையும், 
வேதபுரத்து வியாபாரிகள்’ என்னும் (சமகாலஅரசியல் அங்கத) நாவலுக்காக பாரதீய பாஷா பரிஷத் விருதையும்,
‘ராமானுஜர்’ நாடகத்திற்காக ஞான பீட பரிசுக்கு நிகரான- இந்தியாவின்  சரஸ்வதிசம்மான் விருதையும் வென்றிருக்கும் திரு இ.பாவுக்கு.....
இந்தக் குடியரசு நாளில் ‘பத்மஸ்ரீ’ விருதை அறிவித்திருப்பதன் மூலம் மைய அரசு , தன்னைக் கௌவரவப்படுத்திக் கொண்டிருக்கிறது.

மெல்லிய எள்ளலோடு கூடிய பாணியைக் கையாளும் இ.பாவின் படைப்புக்கள் பெரும்பாலும் நகர்சார் வாழ்வின் நடப்பியலை ஒட்டி அமைந்திருப்பவை.
’கால வெள்ளம்’,’தந்திர பூமி’,’திரைகளுக்கு அப்பால்’’மாயமான் வேட்டை’,’ஹெலிகாப்டர்கள் கீழே இறங்கி விட்டன’...மேலும்
வார்ஸாவில் பெற்ற அனுபவப் பதிவால் உருப் பெற்ற ’ஏசுவின் தோழர்கள்’ ஆகியவை தவற விடாமல் படித்தாக வேண்டிய இ.பாவின் ஒரு சில நாவல்கள்.

நவீன நாடகத் துறையில் ஈடுபாடு கொண்டுள்ள இ.பா உருவாக்கிய குறிப்பிடத்தக்க நாடகப் பிரதிகள்,
’மழை’, ’ஔரங்கசீப்’, போர்வை போர்த்திய உடல்கள்’, ’கால இயந்திரம்’ ஆகியன. 
புராணம் ,மற்றும் காப்பிய மறுவாசிப்பால் எழுதிய நாடக ஆக்கங்கள் என்று அவரது  ‘நந்தன் கதை’ , ‘கொங்கைத் தீ’ ஆகியவற்றைக் குறிப்பிடலாம்..
இ.பாவின் நாடக முயற்சிகள் பற்றிய ஒரு குறும்படத்தையும் சாகித்திய அகாதமி வெளியிட்டுச் சிறப்பித்திருக்கிறது.

சேதுமாதவனின் இயக்கத்தில் ‘மறுபக்க’ மாய்த் திரைப்பட உருவெடுத்துத் தேசிய விருதை வென்றிருப்பது,‘உச்சிவெயில்’என்னும் இ.பாவின் குறுநாவலேயாகும்.

சிலப்பதிகாரத்தின் மறு பார்வையாக அமைந்த ‘கொங்கைத் தீ’ நாடகமும், ‘வெந்து தணிந்த காடுகள்’ நாவலும் பெண்ணியத்துக்கான இ.பாவின் பங்களிப்புக்கள்.

கண்ணனை எந்தக் காலத்துக்கும் ஏற்றவனாக அர்த்தப்படுத்துகிற ’கிருஷ்ணா...கிருஷ்ணா....’ ,2003ஆம் ஆண்டில் வெளிவந்திருக்கும் இ.பாவின் வித்தியாசமான ஒரு நாவல் முயற்சி.

முன்பொரு தருணத்தில் தனக்கு வழங்கப்படவிருந்த  ‘கலைமாமணி’ பட்டத்தைத் துணிவோடு மறுதலித்த திரு இ.பா அவர்கள், ’பத்மஸ்ரீ’ விருதை மகிழ்வோடு ஏற்று , வளரும் தலைமுறைத் தமிழ்ப்படைப்பாளிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் ஊக்கமளிக்கும் உந்துசக்தியாகத் திகழ வேண்டுமென்பதே நம் அவா.

பத்மஸ்ரீ இந்திராபார்த்தசாரதி அவர்களுக்கு வணக்கத்தோடு கூடிய வாழ்த்துக்கள்.

விருதுக்கு வாழ்த்து



தமிழகம் தந்த உலக மெல்லிசையின் இருவேறு அடையாளங்கள் இளையராஜாவும்,ஏ.ஆர்.ரஹ்மானும்.

இருவரின் அணுகுமுறையிலும் பேதங்கள் இருக்கலாம்;ஆனால் இருவரின் இசையையும் பேதமின்றி ஏற்றுச் செவிக்கு விருந்தாக்கும் இலட்சக்கணக்கான ரசிகர் கூட்டம் உலகின் பல மூலைகளிலும் சிதறிக் கிடக்கிறது.
இந்தியக் குடியரசு நாளன்று 'பத்மபூஷண்' விருதுக்கு உரியவர்களாக அறிவிக்கப்பட்டுள்ள இவ்விரு இசை மேதைகளுக்கும் பாராட்டுக்கள்..வாழ்த்துக்கள்.

எழுத்தாளர் திரு ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' நாவலின் சில கூறுகளை உட்செறித்து-அவரது வசனத்துடன் வெளிவந்த 'நான் கடவுள்' திரைப்படத்தைத் தனக்கே உரித்தான பாணியில் இயக்கிய பாலா,சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.தன் முதல் படம் தொடங்கித் தன் ஒவ்வொரு ஆக்கத்திலும் தனி முத்திரையைப் பதித்து வரும் பாலாவால் தமிழ்த் திரை உலகம் தலை நிமிர்ந்து பெருமை கொள்கிறது.பாலாவுக்கும்,அவருடன் இணைந்து செயல்பட்ட படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்.



காண்க:
ஏழாம் உலகமும்,நான் கடவுளும்
http://masusila.blogspot.com/2009/02/blog-post_28.html

8.1.10

விருதுகள்,பரிசுகள்

மூத்த எழுத்தாளரும்,திறனாய்வாளரும்,சமூக இலக்கிய அக்கறை கொண்டிருப்பவரும்,’தமிழ் நேயம்’இதழைத் தளரா முயற்சியுடன் நடத்தி வருபவருமான திரு கோவை ஞானி அவர்களுக்கு 2009 ஆம் ஆண்டிற்கான கானடா இயல் விருது அறிவிக்கப்பட்டிருப்பது,அவரது அயரா உழைப்பிற்கும்,தமிழ் இலக்கிய வளர்ச்சியின் மீது அவர் கொண்டிருக்கும் மெய்யான அக்கறைக்கும் கிட்டியுள்ள அங்கீகாரம் என்றே கூறலாம்.

பொதுவான இலக்கிய முயற்சிகளோடு,பெண் எழுத்துக்களை வெளிக் கொணரத் திரு ஞானி அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் மிகச் சிறப்பானவை.கடந்த பல ஆண்டுகளாகத் தொடர்ந்து பெண் எழுத்தாளர்களுக்குச் சிறுகதைப் போட்டி அறிவித்து ஒவ்வொரு ஆண்டும் அவற்றில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துத் தொகுப்பாக்கி,இதுவரை எதுவுமே எழுதாதவர்களையும் கூட வெளிச்சத்துக்குக் கொணர்ந்திருப்பவர் அவர்.

வாசிப்பையும் எழுத்தையும் வாழ்வின் எந்தக் கட்டத்திலும் நிறுத்திவிடாமல் தமிழியம்,மார்க்ஸியம்,பெரியாரியம்,மெய்யியல் எனப் பல தளங்களிலும் தன் கருத்துக்களைத் தொடர்ந்து பதிவு செய்து வரும் திரு கோவை ஞானி அவர்களுக்கு வணக்கமும்,வாழ்த்துக்களும்.

மைய அரசின் சாகித்திய அகாதமி விருது பெறும் கவிஞர் திரு புவியரசு அவர்கள் வானம்பாடிக் குழுவைச் சேர்ந்த முன்னோடிப் புதுக் கவிஞர்களில் ஒருவர்.பல மொழியாக்க நூல்களையும் உருவாக்கி அளித்திருப்பவர்.கிரண்பேடியின் வாழ்க்கை வரலாற்று நூலை ‘நான் துணிந்தவள்’என்ற தலைப்பில் தமிழுக்கு அளித்தவர்.
திரு புவியரசு அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

தினமணியில் முதுநிலை உதவி ஆசிரியராகப் பணியாற்றும் தமிழ்மகன் அவர்கள்,இளம் தலைமுறைப் படைப்பாளிகளில் ஒருவர். அண்மையில் நடைபெற்ற எழுத்தாளர் சுஜாதா நினைவு அறிவியல் சிறுகதைப்போட்டியிலும் பரிசு பெற்றிருப்பவர்.அவருடைய "எட்டாயிரம் தலைமுறை' என்ற நூல், இந்த ஆண்டு தமிழக அரசின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான பரிசைப் பெற்றிருக்கிறது.
திரு தமிழ்மகன் அவர்களின் இலக்கியப்பணி மேன்மேலும் வளர்ந்து சிறக்க வாழ்த்துக்கள்.

(திரு கோவை ஞானி பற்றிய விரிவும்,ஆழமும் கூடிய பதிவு...ஜெயமோகனின் வலையில் காண்க..)
இணைப்பு;http://www.jeyamohan.in/?p=6123

31.12.09

புத்தாண்டுச் சிந்தனைகள்



உலக நலவேட்பு

’’உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம்
உயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும்
உலகனைத்து நாடுகளின் எல்லை காக்க
ஓருலகக் கூட்டாட்சி வலுவாய் வேண்டும்

உலகில் போர்பகை அச்சமின்றி மக்கள்
உழைத்துண்டு வளம் காத்து வாழ வேண்டும்
உலகெங்கும் மனிதகுலம் அமைதி என்னும்
ஒரு வற்றாத நன்னிதி பெற்றுய்ய வேண்டும்’’


உலக நலவாழ்த்து

‘’உலகமெலாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும்!
உழவரெலாம் தானியத்தை உவப்புடனே பெருக்கட்டும்!
பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும்!
பகுத்துணர்வில் தொகுத்துணர்வு பண்பாட்டைப் பெருக்கட்டும்!

கலகங்கள் போட்டிபகை கடந்தாட்சி நடக்கட்டும்!
கல்லாமை,கடன்,வறுமை களங்கங்கள் மறையட்டும்!
நல வாழ்வை அளிக்கும் மெய்ஞ்ஞான ஒளி வீசட்டும்!
நம் கடமை அற வாழ்வின் நாட்டத்தே சிறக்கட்டும்!
’’

1955ஆம் ஆண்டில் தத்துவ ஞானி திரு வேதாத்திரி மகரிஷிகள் அருளிய இக் கவிதை வரிகள் , போரும், பகைமையும் ,பூசலும்,போட்டியும் உலகெங்கும் தலை விரித்தாடும் இன்றைய சூழலுக்கும் பொருத்தமாக இருப்பது அந்த மகானின் தீர்க்க தரிசனத்தை ஒரு புறம் எடுத்துக் காட்டி நம்மை வியப்பில் ஆழ்த்தினாலும்,50 ஆண்டுகளுக்கு மேலாகியும் அந்த நிலைமையில் மாற்றம் எதுவுமில்லை என்பதும், நாளுக்கு நாள் மனித மனதின் வன்மங்களும்,குரூரங்களும் இன்னும் கூடக் கூடுதலாகிக் கொண்டே செல்கின்றன என்பதும் மனச்சாட்சி கொண்டோரை முள்ளாக வதைக்கும் ரணங்கள்.

ஒரு பகல்...ஓரிரவில் மாற்றங்கள் - அதிலும் முழுமையான நன் மாற்றங்கள் சாத்தியமில்லாமல் இருக்கலாம்.ஆனால் மனித குலத்தின் நூற்றாண்டுத் துயில்கள் என்றுதான் கலையும்?

அந்த விடியலின் வெளிச்ச ரேகைகள், புலரும் இந்தப் புத்தாண்டிலாவது ஒளியைக் கூட்டுமென்ற
நம்பிக்கையோடு புத்தாண்டின் வரவை எதிர் கொள்வோம்.

‘’போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாக’’ட்டும்!

23.9.09

’எடுத்த காரியம் யாவினும் வெற்றி’



’அசைவறு மதி கேட்டேன்’’என்பது சிவசக்தியிடம் பாரதி விடுக்கும் வேண்டுகோள்.

ஒருபோதும் சோம்பிக் கிடக்காத...எதைக் கண்டும் தளர்ந்து போய்விடாத...எந்த முயற்சியிலும் சலித்துப் போய்விடாத மனமே ‘அசைவறு மனம்’;
அதற்கு அடிப்படையாவது அசைவறு மதி.

‘’தனம் தரும் கல்வி தரும்....ஒரு நாளும் தளர்வறியா மனம் தரும்’’
என்று அபிராமி அந்தாதியும்,
‘கலையாத கல்வியும்.......’சலியாத மனமும்...’’என்று அபிராமி அம்மை பதிகமும் குறிப்பிடுவதும் கூட இதைத்தான்.

‘’அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்’’ என்றும்,
ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை’’
என்றும் வள்ளுவமும் அசைவின்மை பற்றிய செய்திகளை முன் வைக்கிறது.

மக்கள் வழக்கில் ’‘அசந்து போயிட்டான்யா’’ என்று அடிக்கடி புழங்கும் தொடரும் இதோடு தொடர்பு கொண்டிருப்பதுதான்.

அசதி,அசைவு ஆகியவை வெறும் உடற்சோர்வு காரணமாக மட்டும் நேர்ந்து விடுவதில்லை;
சோம்பல்...முயற்சியின்மை என மனிதனின் ஆக்க சக்திக்குத் தடைபோடும்சில குணங்களே இதற்குக் காரணமாகி, இடையறாத அவனது செயலூக்கத்தை ,ஆர்வத்துடன் செயல்படும் எழுச்சியை ,அவனது உற்சாகமான இயக்கங்களை முடக்கிப் போடுகின்றன.மேலும் அடுத்தடுத்து எதிர்ப்பட நேரும் தோல்விகள்,சரிவுகள் முதலியனவும் கூட அவனது சலிப்புக்கும்,அவனுக்கு விளையும் மனத் தளர்ச்சிக்கும் காரணங்களாகி விடுகின்றன.இவற்றால் மனச் சோர்வுக்கு ஆளாகும் அவன் ‘அசைவு’க்கு ஆட்பட்டு எதுவுமே செய்யாமல் ‘சும்மா’இருக்கக்கற்றுக் கொண்டு, ஓட்டுக்குள் ஒடுங்கும் நத்தையைப்போல ஒரு மூலையில் முடங்கிக் கொண்டு விடுகிறான்.

வட மொழியில் ‘தாமச’குணமாகச் சொல்லப்படுவதும் இதுவே.
‘தாமச’குணத்தின் உருவகமாகச் சொல்லப்படுவது எருமை.
எருமைமுகம் உடையவனாகப் புராணத் தொன்மங்களில் சித்திரிக்கப்படும் ‘மகிஷாசுரன்’ ,உண்மையில் வெளியிலிருப்பவன் அல்ல;
நமக்குள் இருந்து கொண்டே நம்மை இம்சிக்கும் அந்தத் ‘தாமச’குணத்தின் மொத்த அடையாளமே மகிஷாசுரன்.
அந்தத் தாமச குணத்தை...மந்தமான அந்த நிலைப்பாட்டை...சோம்பலை..மனச்சலிப்பை..தளர்ச்சியை
அசைக்க முடியாத பாறை போன்ற மன உறுதியால் நமக்குள் நாமே வெற்றி கொள்வதே மகிஷ வதம்.

மகிடனின் தலை மீது ஏறி நடக்கும் எழிற்கொடியாகிய துர்க்கை,நம் மன உரத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ள உருவகம்.
துர்க்கை என்றால் ‘அசைக்க இயலாதது’ என்று பொருள்.
மன வலிமையாகிய துர்க்கையின் துணையால் சோம்பலாகிய எருமையை...அந்த இராக்கதப் பண்பை அழித்துத் தொலைப்பதே..அவ்வாறு தொலைப்பதற்கான முயற்சியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் நாளே... வெற்றியின் விளைச்சலுக்கு வழிவகுக்கும் விஜய தசமி.
துப்பாக்கியிலிருந்து வெளிவரத் தயாராக...ஆயத்தமாக இருக்கும் தோட்டாவைப்போல நம் மனத்தைத் தயார் செய்துகொண்டு, எதையும் எதிர்கொள்ளவும்...தோல்விகளைப் புறந்தள்ளி நமக்கு நாமே ஊக்கத்தை வருவித்துக் கொள்ளவும் நமக்குள் நாமே ஒத்திகை பார்த்துக் கொள்ளும் நன்னாளே இந்நாள்.

மேற்குறித்த உள்ளார்ந்த தத்துவங்களை ஒதுக்கிவிட்டு ..... உருவக உள்ளர்த்தங்களைத் தொலைத்துவிட்டு.....ஆழ்ந்த அகமுகத் தேடல்களைப் புறந்தள்ளி வைத்துவிட்டு வெறுமே காளி உருவத்தை...துர்க்கை வடிவத்தை மட்டும் மேலோட்டமாகக் கொண்டாடிக் கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டிருககிறோம் நாம்.
’’நன்று புராணங்கள் செய்தார்-அதில்
நல்ல கவிதை பலபல தந்தார்.....
உண்மைகள் தெய்வங்கள் என்போம்-பிறிது
உள்ள மறைகள் கதையெனக் கண்டோம்..’’

என்று,
புராணங்களிலுள்ள புறக் கதைகளை விடவும் அவற்றுள் ஆழ்ந்திருக்கும் உண்மையின் தரிசனங்களே வாழ்வை முன்னெடுத்துச் செல்ல முக்கியமானவை
என்பான் பாரதி.

’எடுத்த காரியம் யாவினும் வெற்றி
எங்கு நோக்கினும் வெற்றி மற்றாங்கே
விடுத்த வாய்மொழிக்கெங்கணும் வெற்றி......
எண்ணும் எண்ணங்கள் யாவினும் வெற்றி
எங்கும் வெற்றி எதனிலும் வெற்றி’’


என்ற பாரதியின் இந்த வரிகளைச் சோர்வு தலையெடுக்கும் தருணங்களிலெல்லாம் (auto suggestion போல)நம்முள் ஓடவிட்டால்.....

’எண்ணத்திருக்கும் எரியே சக்தி....
சோம்பர் கெடுக்கும் துணிவே சக்தி..’’


என்பதை நம் வாழ்நாளின் வேதமாக்கிக் கொண்டால்....அதுவே நம்மைப் புதிய உயிராக்கும்;நித்தம் நவமெனச் சுடர் தரும் உயிர்த்தீயை உள்ளத்தில் மூண்டெழச் செய்யும்.

புதிய புதிய வெற்றிப்பாதைகளின் வழிகள் அப்போது தானாகவே திறந்து கொள்ளும்.
அனைவருக்கும் வெற்றித் திரு நாளின் வாழ்த்துக்கள்.

23.2.09

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஸ்கார்



எளிமை,அர்ப்பணிப்புடன் கூடிய கடுமையான உழைப்பு, இசைத்துறை தவிர வேறு எதிலும் கவனத்தைச்சிதற விடாத ஆழமான லயிப்பு....இவற்றால் இரண்டு ஆஸ்கார் விருதுகளைப்பெற்று தமிழத்தின் -இந்தியத்தின் பெருமையை உலக அரங்கில் உயர்த்தி இசைக்கொடி நாட்டியுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள்.

27.1.09

ஐராவதம் மகாதேவனுக்கு வாழ்த்து....

தமிழ் செம்மொழியாக்கப்பட வேண்டும் எனக்கோரிக்கை விடுத்த அரசியல்வாதிகளின் முகங்கள் முன்னிலைப்படுத்தப்படும் அளவுக்கு ,தமிழைச்செம்மொழியென்று நிறுவுவதற்காகவே நேரடியாகக்களத்தில் இறங்கி உழைத்த பெருமக்கள் பரவலான மக்களின் கவனத்திற்குப்பொதுவாகக் கொண்டு வரப்படுவதில்லை. குடியரசு நாளை ஒட்டி மைய அரசு அறிவித்துள்ள ''பத்மஸ்ரீ''விருது,அவ்வாறான ஒரு பெருமகனை-பண்டிதர்கள்,படிப்பாளிகள் மட்டத்திலேயே பெரும்பாலும் அறிமுகமாகியிருந்த தமிழ்த்தாயின் தலைமகன் ஒருவரை இந்தியத்திருக்கண்டம் முழுவதுமே ஏறெடுத்துப்பார்க்குமாறு செய்திருக்கிறது. கல்வெட்டுத்துறையில் கரை காணாப்புலமை கொண்டவரும்,'தினமணி நாளிதழின் முன்னாள் ஆசிரியரும்,இந்திய ஆட்சிப்பணியாளராக உயர் பதவி வகித்து ஓய்வு

பெற்றிருப்பவருமான திரு ஐராவதம் மகாதேவன் அவர்களே அந்த மாமனிதர்.
தனது வாழ் நாளின் பெரும்பகுதியைக்கல்வெட்டியல் துறைக்கே அர்ப்பணித்துத் தொல்லியல் ஆய்வுகளில்புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியவர் திரு ஐராவதம் மகாதேவன் அவர்கள்.மிகத்தொன்மையான பிராமி எழுத்துக்களை முழுமையாக ஆய்வு செய்து,அரியதொரு ஆய்வு நூலை உருவாக்கியவர்.
வரலாற்று மொழியியல் கண்ணோட்டங்களையும்,புள்ளியியல் கூறுகளையும்அடிப்படைகளாகக்கொண்டு வேத கால சமஸ்கிருத மொழியில் திராவிடமொழிக்கூறுகள் பொதிந்திருப்பதை இனம் காட்டி,அவற்றின் துணையோடு சிந்துசமவெளி கால எழுத்துக்களை-அகழ்வாய்வில் கிடைத்த எழுத்துருக்களை- விளக்க வழி உண்டா எனத்தேடிஅந்த ஆய்வில் முழு மூச்சுடன்,முனைப்பாக இயங்கியவர்.சிந்து சமவெளி எழுத்துக்களுக்கும் , தொன்மையான தமிழ் பிராமி எழுத்துக்களுக்கும் உள்ள வியக்கத்தக்க ஒற்றுமைக்கூறுகளை விளக்க முயன்ற அவரது ஆய்வுகளே தமிழின் பழமையைத்தமிழர்கள் மட்டுமன்றி,அயல் நாட்டவரும் அறிந்து கொள்ள வழி வகுத்தன.'பிற நாட்டார் நல்வணக்கம்' செய்யும் வகையில் 'திறமான புலமை பெற்றிருந்தபோதும், எந்த ஒரு கருத்தையுமே முடிந்த முடிவாகக்கூறக்கூடாதென்ற நிலைப்பாட்டைக்கொண்டிருந்தவர்ஐராவதம் மகாதேவன் அவர்கள்.உண்மையான ஆய்வாளனின் இலக்கணம் அதுவே.
ஏதேனும் ஒரு களத்தையோ, ஒருசில நூல்களை மட்டுமோ எடுத்துக்கொண்டு அதற்கு ஆய்வென்று பெயர் சூட்டி,முனைவர் பட்டத்தை வெகு சுலபமாகத்தட்டிக்கொண்டுபோகும் இன்றைய நீர்த்துப்போன தமிழ் ஆய்வுகளைப்போன்றவை அல்ல மகாதேவனுடையவை.புற அங்கீகாரங்களின் தூண்டுதலுக்காகவோ, பிற நெருக்குதல்களுக்காகவோ ஆய்வை மேற்கொள்ளாமல் ஆய்வை ஆய்வுக்காக மட்டுமே செய்து வந்தவர் அவர் என்பதை இன்றைய வளரும் தமிழ் ஆய்வு மாணவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.




தனக்குக்கிடைத்த விருதைக் கல்வெட்டியல் துறைக்குக்கிட்டிய வெற்றியாகக்குறிப்பிடும் அளவுக்கு அந்தத்துறையோடு தோய்ந்து உட்கலந்து போய்விட்ட ஐராவதம் மகாதேவனைப்பாராட்டி வணங்கி வாழ்த்தும் இத்தருணத்தில்,உதட்டளவில் தமிழ் வாழ்த்தைப்பாடுவதோடு நின்றுவிடாமல் ,உன்னத உச்சங்களை நோக்கி நம் மொழியை நகர்த்தியாக வேண்டிய கடப்பாட்டையும் கருத்தில் கொண்டால் மட்டுமே தமிழின் செம்மொழித்தகுதி என்றும் நின்று நிலைக்கும்.

கடிதங்கள்
1.ஐராவதம் மகாதேவன் பற்றிய உங்கள் பதிவு உண்மையிலேயே அற்புதம். பத்மஸ்ரீ விருது என்பது அவருக்கு ஒன்றுமே இல்லை. அவர் அந்த விருதினை விட மேன்மையானவர். உண்மையாகவே இவருக்கு விருது வழங்கியதால் மைய அரசு தன்னை சிறப்பித்துக் கொண்டிருக்கிறது.
இது வெறும் புகழ்ச்சி இல்லை -
முழுதும் கற்றறிந்த உங்களைப் போன்றவர்கள் பதிவிடும்போது அதன் சிறப்பே தனியாக இருக்கிறது.
YADARTHA பென்னேஸ்வரன்,ஆசிரியர்,வடக்குவாசல்
http://www.sanimoolai.blogspot.com/
http://www.vadakkuvaasal.in/










Posted by Picasa

26.1.09

''பத்ம பூஷண்''ஜே.கே.



தனது அன்பு வாசகர்களால் ஜே.கே. என்று பாசத்தோடும்,மரியாதைகலந்த பிரமிப்பு உணர்வோடும்,(சற்று பயத்தோடும் கூடத்தான்) அழைக்கப்படும் நவீன இலக்கியத்தின் நிராகரிக்கப்பட முடியாத ஆளுமைகளில் ஒருவர் திரு ஜெயகாந்தன்.
இந்திய நாட்டின் 60ஆம் ஆண்டுக்குடியரசு தினமான இன்று --26.01.09--அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள ''பத்ம பூஷண்''விருது,ஜே.கேயை விடவும், அவரை நேசிக்கும் ஆயிரக்கணக்கான வாசகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கும் என்பது நிச்சயம். காரணம்,ஜே.கே.,என்றுமே விருதுக்காக எழுதியது இல்லை; அவற்றைப் பொருட்படுத்தியதும் இல்லை; அவை மட்டுமே அங்கீகாரம் என்று கருதியதும் இல்லை; அதே நேரத்தில் அவை தன்னை நாடி வருகையில் முரட்டுப்பிடிவாதம் காட்டி அவற்றை ஒதுக்கி விடவும் இல்லை. ''மெய்த்திருப்பதம் மேவென்ற போதினும் இத்திருத்துறந்து ஏகென்றபோதினும் சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை.....''போல இராமனின் முகம் இருந்ததாகக்காட்டும் கம்பரின் வாக்கைப்போன்ற மன நிலை வாய்க்கப்பெற்று விட்ட இலக்கிய ஞானி அவர்.

தான் உணர்ந்து தெளிந்தவற்றை...,தான் கொட்ட நினைத்ததைக்கொட்டிவிட்டு ஒரு கட்டத்திற்குப்பிறகு எழுதுவதை நிறுத்தியும்,குறைத்தும் கொண்டவர் அவர்.சுய தூண்டுதலும் ,உண்மையான அக எழுச்சியும் இல்லாத எழுத்துக்களை வாசகர்களின் வற்புறுத்தலுக்காகவோ,பிற எந்தப்புறக்காரணத்துக்காகவோ, படைப்புக்களின் எண்ணிக்கையைக்கூட்டுவதற்காகவோ என்றுமே அவர் கைக்கொண்டதில்லை; எந்தச்சீண்டல்களுக்கும் பணிந்து போய் விடாமல், அகத்தின் கட்டளைக்கு மட்டுமே செவிகொடுக்கும் அரியதொரு படைப்பாளியான ஜே.கேயைப்போன்ற எழுத்தாளரை அபூர்வமாகத்தான் இந்த மண்ணும்,மனிதர்களும் எதிர்ப்படுகிறார்கள்.அவர் காலத்தில் வாழ நேர்ந்ததில் நாம்தான் பெருமை கொள்ள வேண்டும்.

இன்றைய பின் நவீனத்துவ இஸங்களின் அளவுகோல்களால் ஜே.கேயை அளக்க முற்படுவதைப்போன்ற பேதமை வேறெதுவுமில்லை. 'என் எழுத்துக்களை வைத்துத் தங்கள் அளவுகோல்களை அமைத்துக்கொள்ளுங்கள்'என்று விமரிசகர்களிடம் துணிச்சலாகக்குறிப்பிட்ட புதுமைப்பித்தனைப்போல-சுயம்புவாக- எந்த இலக்கண வரையறைக்கும் கட்டுப்படாத காட்டாற்று வெள்ளமாகப்பொங்கிப்பெருகியவை ஜே.கேயின் எழுத்துக்கள்.ஆனால்- சிறுகதை பற்றியும், குறு நாவல் பற்றியும் ஆயிரம் இலக்கணங்களைப்படித்தாலும் தெரிந்து கொண்டுவிட முடியாத சூட்சுமங்களை,அவரது படைப்புக்கள் புதிய எழுத்தாளர்களுக்குப் படிப்பித்துக்கொடுத்தன. 60 களுக்குப்பிறகு எழுதுகோல் பிடித்த எவருமே--குறைவாகவோ,கூடுதலாகவோ ஜே.கேயின் பாதிப்பை- தாக்கத்தைப்பெற்றிருப்பவர்களே. அதன்பிறகு ஏற்பட்ட புதிய தரிசனங்களும்,அக ஒளிகளும் ,அவர்களுக்கு அறிமுகமான நவீன,பின் நவீன இலக்கியக்கோட்பாடுகளும் அவர்களை வேறு,வேறு பாதைகளுக்கு இட்டுச்சென்றாலும்-- ஜே.கேயின் எழுத்துக்கள் 'உரக்க'ப்பேசுவதாக அவர்கள் விமரிசனம் செய்யும் சூழலும் கூட ஒரு கட்டத்தில் நேர்ந்த போதும்- தங்கள் ஆரம்ப ஆசான் ஜே.கே என்பது,அவர்களது மனங்களின் இடுக்குகளில் நிச்சயம் எங்காவது ஒட்டிக்கொண்டுதான் இருக்கும்.





பிரகடனம் செய்வதுபோலவே இருந்தாலும் கூட-ஜே.கேயின் எழுத்துக்கள், சக மனித நேயத்தை..,மானுட அன்பை...,அறச்சீற்றத்தையே சத்தமாக முழங்கின. அழுக்கும்,அசிங்கமுமான களங்களைத்தேர்ந்து கொண்டாலும் அவற்றுக்குள் உறைந்து,உட்பொதிந்து கிடக்கும் உன்னதச்செய்தியை உலகுக்குப்பறை சாற்றின.நாசகாரி ஏவுகணைகளைப்போன்ற நச்சு இலக்கியங்களை-படிக்கக்கூசும் விரசங்களை,சமூகக்கட்டமைவுக்கு இன்றியமையாத அடிப்படைகளைமீறுவதை நியாயப்படுத்தும் நிலைப்பாடுகளை அவை ஒருபோதும் கொண்டிருந்ததில்லை.எதற்காகவும் எவற்றோடும் சமரசம் செய்துகொள்ள முயலாத ஜே.கேயைப்போன்றவையே அவரது எழுத்துக்கள்.

''நான், எவ்வளவு கேவலமான விஷயங்களை மிகப்பரந்த அளவுக்குள் சித்தரிக்க முயன்றாலும்,அதில்பொதிந்துள்ள சிறப்பானதும்,உயர்வானதும்,வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுப்பதுமான ஒரு மகத்தான மனிதப்பண்புக்கு வலுமிக்க அழுத்தம் கொடுத்து வாழ்க்கையின் புகழையே பாடுகிறேன்......ஆழ்ந்து ஆழ்ந்து பார்க்கின்ற ஒரு பக்குவம்வந்து விட்டால் எல்லாவற்றுக்குள்ளும் ஒரு மகத்துவம் துயில்வதை தரிசிக்க முடியும்''என்று தனது நூல் முன்னுரை ஒன்றில் குறிப்பிடுவார் ஜே.கே.
மகத்துவங்களை மட்டுமே தரிசித்துப்பழகி, அவற்றை மட்டுமே தன் வாசகர்களும் காணுமாறு பழக்கிய ஜே.கே அவர்களுக்கு இந்திய நாட்டின் மகத்துவமான விருது ,அவரது கழுத்தில் விழுந்த மாலையாக-பத்ம பூஷணாக அவரைத்தேடி வந்திருக்கிறது.தன்னைத்துரத்திக்கொண்டு வராதவனை செல்வம் தானே துரத்திக்கொண்டு வரும் என்பார் குலசேகர ஆழ்வார். ''தன்னையே தான் வேண்டி நீள் செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம் போல் '''இவ்விருதும் அது பற்றிக்கொஞ்சமும் கவலை கொள்ளாத-அலட்டிக்கொள்ளாத அவரை நாடி வந்திருக்கிறது.ஜே.கேயை வந்து அடைவதால் விருதுகளுக்குத்தான் பெருமை என்பது சம்பிரதாயமான வாசகமாயினும் இந்த மாமனிதருக்கு மிகப்பொருத்தமானது.
காலம் தாழ்த்தாமல் பரிசளித்த சாகித்திய அகாதமியைப்போலவும், ஞான பீடத்தைப்போலவும் இந்திய அரசு அளிக்கும் இந்த விருதும் உரிய தருணத்தில் ஜே.கேயை வந்தடைவது தமிழ் இலக்கிய ஆர்வலர்களுக்கு மகிழ்வளிக்கிறது.உச்சங்களை என்றோ எட்டிவிட்ட ஜே.கே அவர்களுக்கு இது உச்சமல்ல; இது தமிழ் மொழியின் உச்சம்,தமிழ் இலக்கியத்தின் உச்சம் என்றே கொண்டாடத்தோன்றுகிறது.


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....