துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

1.12.11

தமிழ்மகனின் புதிய நாவல்

எனது மதிப்பிற்குரிய நண்பரும் தினமணி உதவி ஆசிரியருமான திரு தமிழ்மகனின் ’ஆண்பால் பெண்பால்’என்னும் நாவல்,வரும் டிசம்பர் மூன்றாம் தேதி சென்னை-ஸ்பென்ஸர் எதிரில் உள்ள புக் பாயிண்ட் அரங்கத்தில் மாலை ஆறு  மணிக்கு வெளியாகிறது. 
அந்தப் படைப்பின் அறிமுகமாக அவர் எனக்கு அனுப்பியுள்ள மின் அஞ்சல் கீழே..


மீண்டும் மூன்றாண்டு ழைப்புக்குப் பிறகு ஆண்பால் பெண்பால் நாவலை எழுதி முடித்திருக்கிறேன்.
 ஆணுலகத்தையும் பெண்ணுலகத்தையும் சற்று உளவியல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தொட்டுப் பார்க்கும் முயற்சி இது. இந்த எல்லா அம்சங்களிலும் அவர்களுக்குள் ஏராளமான முரண்பாடுகள் ஏற்படுகின்றன.
ஒரு சம்பவத்தை ஆண் சொல்லிச் செல்வதற்கும் அதை பெண் சொல்லிச் செல்வதற்கும் சில தன்மை வேறுபாடுகள் உண்டு. ஒரு நாவலையே பெண்ணும் ஆணும் சொல்லிச் செல்லும் விதமாக இந்த நாவலைப் படைத்திருக்கிறேன்.
திருமண பந்தம் மட்டுமே ஒரு ஆணையும் பெண்ணையும் இணைத்துவிட போதுமானதாக இருப்பதில்லை.  அதனால்தான் இணைந்து இருப்பதற்காகவோ, பிரிந்து போவதற்கோ தினந்தோறும்  இருவருமே முயற்சி செய்தபடியே இருக்கிறார்கள். அந்த முயற்சிக்கு புத்திசாலித்தனங்களும் முட்டாள்தனங்களும் தேவைப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சமயத்தில் பிரிவதற்கு புத்திசாலித்தனமும் இணைந்திருப்பதற்கு முட்டாள்தனமும் முக்கியமாகிவிடுகிறது.
கணவனால் பொருட்படுத்தப்படாத சில காரணங்கள், மனைவிக்கு எத்தனை பொருள் நிறைந்தததாக இருக்கிறது என்பதற்காக சில காரணங்களைச் சொல்லியிருக்கிறேன்.
முக்கியமாக இரண்டு காரணங்கள். ஒன்று, பெண்களின் அழகைக் கேள்விக் குறியாக்கும் ஓர் உடற்குறைபாடு... வெண்புள்ளி. இரண்டு,  பெண்களால் பெரிதும் ஆராதிக்கப்பட்ட ஒரு அரசியல் தலைவர்... எம்.ஜி.ஆர். ஒன்று நோய், இன்னொன்று அரசியல். இரண்டுமே நோய் என்பார் உளர்(பவர்). இரண்டுக்கும் பொது அம்சம் தோற்றக் கவர்ச்சி. இதில் பெரும்பாலும் மாற்றுக் கருத்து இல்லை.
கையெழுத்துப் பிரதியைப் பார்த்துவிட்டு இது பொம்பளை கையெழுத்து மாதிரி இருக்கிறதே என்றனர். பெண்களுக்கென்று விசேஷமாக கையெழுத்து இருக்க முடியுமா?
இருக்கும் என்கிறார்கள். பெண்கள் கையெழுத்தில் ஒரு கவனக் குவிப்பு இருப்பதைச் சுட்டிக் காட்டினர். கையெழுத்தில் அழுத்தம் அதிகம் இருக்கும் என்கிறார்கள்.
யாரோ போனில் பேசினார். அந்த ஆளோட குரல் பொம்பளை குரல் மாதிரி இருக்கிறது என்றார் ஒருவர்.
ஒருவன் நடந்து போனான். அவன் நடை பெண்ணோட நடை மாதிரி இருக்கிறது கருத்து சொன்னான் பக்கத்தில் இருந்தவன்.
எதுக்குடா பொம்பளை மாதிரி பயப்படறே என்று தைரியமூட்டுகிறான் ஒருவன்.
இந்த வழக்கமான பேச்சுகளின் பின்னணியை ஆராய, மனிதகுல வரலாற்றின் தொன்மையான காலந்தொட்டு ஏற்பட்ட சமூக மாற்றங்களுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.
பெண்ணுக்கும் ஆணுக்குமான சிந்தனை, பயம், ஏதிர்பார்ப்பு, ஆர்வம், அலட்சியம், தன்னலம், பாசம், பக்தி, தேவை, அணுகுமுறை எல்லாவற்றிலும் மெல்லிய வேறுபாடுகள் இருப்பதைப் பார்க்கிறேன். இத்தகைய விஷயங்களில்தான் தினமும் அவர்களுக்குள் வாக்குவாதங்கள் ஆரம்பிக்கின்றன.
அதே விஷயங்களில் மெல்லிய வேறுபாடுகள் ஆண்களுக்குள் இல்லையா, பெண்களுக்குள் இல்லையா என்று கேட்கலாம்.
கணவன், மனைவியாக மாறும்போது இந்த பிரச்னைகள் சில நேரங்களில் சேர்ந்து வாழ்வதையே கேள்விக்குறியாக்கிவிடுவதைப் பார்க்கிறோம். அதனால் குடும்பம் பாதிப்புக்குள்ளாவதும் வாரிசுகள் பாதிக்கப்படுவதையும் பார்க்கிறோம். கணவன், மனைவி பிரிவது உறவுச் சங்கலித் தொடரின் பாதிப்பாக இருக்கிறது. அதுதான் இதன் தீவிரம்.
நாவலில் இந்தப் பிரச்னைகளை ஒருவித அமானுஷ்யத் தன்மையுடன் சொல்ல முயன்று இருக்கிறேன். சொல்லும் உத்தியிலும் சில முயற்சிகள் செய்திருக்கிறேன். கதையின் முடிவை கதையின் நடுவிலேயே... ஐன் இரம்பத்திலேயே சொல்லுவதாகவும் பின்னால் நடக்கப் போவதை முன்னரேயும் முன்னால் நடந்ததைப் பின்னரும் சொல்லியிருக்கிறேன்.
கதையை கதையில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் சொல்லிச் செல்கின்றன. அந்தக் கதாபாத்திரங்கள் எழுத்தாளர்கள் இல்லை என்பதால் அவர்கள் அப்படித்தானே சொல்ல முடியும் என்பது போன்ற உத்தி.
இந்த நாவலை நான் எழுதவில்லை என்பதை ஆதாரபூர்வமாக விளக்குவதே  நாவலின் ஆரம்பம்... வாசகர்களுக்குப் புதிய அனுபவ வாசலைத் திறந்து வைக்கும் என்று நம்புகிறேன்.


அறிவியல் சிறுகதைகள் உட்படச் சிறந்த பல சிறுகதைகளையும்,நாவல்களையும் உருவாக்கியுள்ளவர் திரு தமிழ்மகன். 
அவரது வெட்டுப்புலி நாவல்,திராவிட இயக்க வரலாற்றுப் பின்னணியின் தாக்கம் தமிழகத்தின் மனநிலையில் ஏற்படுத்திய பல மாற்றங்களை விரிவாகப் பதிவு செய்திருக்கிறது.மிகுதியும் பேசபட்ட அந்த நாவலத் தந்த தமிழ்மகன் தனது புதிய நாவலான ஆண்பால்-பெண்பால் வழி அடுத்த உயரத்தையும் எட்டியிருப்பார் என எண்ணுகிறேன்.அப் படைப்பை விரைவில் படிக்கத் தூண்டும் ஆவலை அவரது அழுத்தமான முன்னுரை கிளர்த்தியிருக்கிறது.
தமிழ்மகனுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
காண்க;
வெட்டுப்புலியின் வீச்சுக்கள் 

கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....