துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

31.12.11

’’காக்கை குருவி..’’



’’காற்றடித்ததிலே மரங்கள்
        கணக்கிடத் தகுமோ
நாற்றினைப் போலே சிதறி
        நாடெங்கும் வீழ்ந்தனவே..’’

-பாரதியின் ’பிழைத்த தென்னந்தோப்பு’பாடலிலிருந்து....

’’நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே-இந்த
நேரமிருருந்தால் என் படுவோம்..’’

- பாரதியின்  ’புயற்காற்று'
புதுவையையும் புயலையும் பார்த்ததும்... கொஞ்சம் பாரதியின் ஞாபகம்...
பாரதி வாழ்ந்த காலத்தில் ஒரு முறை கடும்புயல் புதுவையைத் தாக்கத் தாங்க முடியாத உயிர்ச்சேதங்கள்.பொருட்சேதங்கள்....


மரங்களெல்லாம் வேரோடு சாய்ந்து வீழ,மக்களெல்லாம் ஆங்காங்கே அடைக்கலம் தேடியபடி.....! பொதுச் சேவை செய்வோர் பல இடங்களில் கஞ்சித் தொட்டி அமைத்து வீடிழந்து உடைமையிழந்து தவிக்கும் மனிதர்களுக்குச் சோறிட முனைந்த அந்த வேளையில் பாரதியின் கரிசனம் பறவைகளை நோக்கிக் குவிந்தது.

புயலின் கோர வீச்சில் கொத்துக் கொத்தாய் மடிந்து கிடந்த காக்கை குருவிகளும் பிற புள்ளினங்களும் அவனுள் சோகத்தைக் கிளர்த்தத் தன் உற்ற நண்பர்களின் துணையுடன் பலப்பல இடங்களிலும் இரைந்து கிடந்த பறவைகளின் சடலங்களை நாய் நரிகள் கொத்தி விடாமல் சாலை வாகனங்கள் சிதைத்து விடாமல் சேகரித்து அவற்றுக்குக் கௌரவமான சவ அடக்கம் செய்யும் பணியில் மும்முரமாக முனைந்திருந்தான் அந்த மாகவிஞன்.
‘’காக்கை குருவி எங்கள் ஜாதி’’
என்பது வாய்ச் சொல்லில் மட்டும் அவன் காட்டிய வீரமில்லை;மனிதர்களுக்குச் சரிநிகர் சமானமாக அவற்றையும் அவன் எண்ணியதனாலேயே அந்த நேரத்தில் எவருமே செய்ய எண்ணாத-எவருக்குமே செய்யத் தோன்றாத ஒரு செயலை அவனால் செய்ய முடிந்தது.
ஆம்..
‘’காக்கை குருவி எங்கள் ஜாதி’’
என்று பாடும் தகுதி உண்மையில் அவனுக்கு மட்டுமே இருக்கிறது...


கருத்துகள் இல்லை :

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....