துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

11.12.11

வீரிய வாசகம்

இன்று பாரதியின் பிறந்த நாள்!
தமிழர்கள் எல்லோருக்குமே பாரதி செல்லப் பிள்ளை.
எனக்கும் அப்படித்தான்...
பாரதியின் கண்ணன் பாட்டில் குருவாகவும் சீடனாகவும்,ஆண்டானாகவும் சேவகனாகவும் ஒரே வேளையில் கண்ணன் மாறி மாறிப் பாரதிக்குத் தோற்றம் தருவதைப் போலவே எனக்கும்
பிரியமான ஒரு மகனாகவும்,வழிநடத்தும் குருவைப் போலவும் மாறி மாறித் தோற்றம் காட்டுபவன் பாரதி..

தமிழறியத் தொடங்கிய நாள் தொட்டு அவன் கரம் பிடித்து அவன் எழுத்தின் வழிகாட்டுதலுடனேயே என் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
‘’எள்ளத்தனை பொழுதும் பயனின்றி இராதெந்தன் நாவினிலே 
  வெள்ளமெனப் பொழிவாள் அவள் பேர் சக்தி ஓம் சக்தி ஓம்..’’
என்ற வரிகளை உச்சரிக்கும்போதெல்லாம்
‘’விசையுறு பந்தினைப் போல் மனம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்’’என்ற வரிகள் மனதுக்குள் கிளர்ந்தெழும்போதெல்லாம்-
மற்றுமொரு கவிதையில் அவன் குறிப்பிட்டிருக்கும் ‘உயிர்த் தீ’ என்னுள் மகா ஜ்வாலையுடன் பாய்ந்து வந்து பற்றிக் கொள்வதை அனுபவ பூர்வமாக உணர்ந்து சிலிர்த்திருக்கிறேன்..அந்த வரிகளே என் வழிபாடாகவும் கூட அமைந்து போயிருக்கின்றன.

நாவிலிருந்து வரும் வார்த்தைகள்..எழுது கோல் வடிக்கும் சொற்கள் பயனின்றிப் போய்விடக் கூடாதென்ற சூத்திரத்தையும் -எந்த ஒரு கணமும்,எந்த ஒரு நொடிப்பொழுதும் பொருளற்றுக் கழிந்து விடக் கூடாதென்ற உண்மையையும் அவன் எழுத்துக்களே கற்பித்துக் கொடுத்திருக்கின்றன; இன்று வரை அவற்றையே கற்றும் வருகிறேன்..

வாழ்வில் சோர்வுகள் சலிப்புகள் துயரங்கள் வந்து தாக்கிய கணங்களிலெல்லாம் கூட இலக்கியத்தால் அவற்றைப் புறங்கண்டு விட முடியும் என்பதையும் கூட அவனது கவிதைகளே நாளும் உணர்த்தி எழுச்சியூட்டி வருகின்றன.
‘’நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ’’
என்று ஒரு கணம் சுய இரக்கம் கொள்வது போல முகம் காட்டினாலும் அடுத்த கணமே ஆக்ரோஷமாகப் பிடரி சிலிர்த்தெழும் சிங்கமாய் மூர்க்கமான வேகத்துடன் அந்தச் சலிப்பை உதறித் தள்ளிவிட்டு
‘’எத்தனை கோடி இன்பம் வைத்தாய்...’’என்றும்..
‘’அத்தனை உலகமும் வண்ண களஞ்சியம்..’’
என்றும் அந்த ரசனைக்குள் ஆழ்ந்து தன்னை -தன் மனநிலையை ஒரு நொடியில் வேறு அலை வரிசைக்கு மாற்றிக் கொண்டு விடும் குழந்தை உள்ளம் அவனுக்கு வாய்த்திருந்ததாலேயே தனக்கு நேர்ந்த துன்பச் சூடுகளின் தீண்டல்கள் தன் உள்ளத்தின் அடியாழம் வரை ஊடுருவித் தன்னை தன் கவியைப் பாதிக்கக் கூடியவரை அவன் இடம் தந்ததில்லை. தன் துன்பம் நினையாத காரணத்தாலேயே வையகம் பாலிக்கப் பாடவும் அவனால் முடிந்திருக்கிறது.

தன்னைக் கவலைகள் தின்னத் தகாதென்ற விழிப்பு நிலை அவனுள் எப்போதுமே இருந்து வந்திருக்கிறது. மனச் சோர்வுற்று அயர்ந்து போன தருணங்களிலும் கூட - தன்னைத் தானே மீட்டெடுத்துக் கொள்ளும் சக்தி அவனுள்ளிருந்தே பீறிட்டுப் பொங்கிவரக் காரணம் அவனது இந்த விழிப்பு நிலையே.

‘’வேடிக்கை மனிதர்களைப் போலே நானும் வீழ்வன் என்று நினைத்தாயோ..’’
என்று தன்னைத்தானே தட்டிக் கொடுத்துக் கொண்டு - கவலை வலைகளிலிருந்து தன்னை மீட்டெடுத்துக் கொண்டு..
‘’இன்று புதிதாய்ப் பிறந்தோம்’’என்று புத்தம் புதிதான பாதைகளில் முன்னடி வைத்து இன்னும் இன்னும் என நகர்ந்து செல்லும் துணிவை நெஞ்சுரத்தை தன்னம்பிக்கையை அவனுக்கு வழங்கியது அபாரமான அவனது தன்னறிதலும் அது சார்ந்த எச்சரிக்கை உணர்வுமே...

தன் கவிதைத் திறத்தை எந்தப் புயல்காற்றாலும்,சூறாவளியாலும் அணைந்து விடாத அக்கினிக் குஞ்சாக என்றென்றும் அடைகாத்து வரவேண்டுமென்றும் அந்தக் கவிதாக்கினியே சமூகத் தீமைகளை வெந்து சாம்பலாக்கும் வீரியம் பெற்றது என்பதையும் தெளிவுற உணர்ந்து தேர்ந்திருந்தான் பாரதி.
வறுமையிலும்,வாழ்க்கை ஓட்டத்தின் அவலமான எந்தக் கட்டத்திலும் தன் உயிரின் சுடர் ஓயும் வரை அவன் அதை மட்டும் ஒருபோதும் அணைய விட்டதில்லை...
படைப்புத் திறன் பெற்றோருக்குப் பாரதி இந்த வகையிலும் ஒரு பாடமாய் நிற்கிறான்...


1 கருத்து :

Unknown சொன்னது…

வாசகர்களுக்கு தன்னம்பிக்கையை ஊட்டக்கூடிய நல்ல பதிவு.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....