துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம்,
அன்பில் அழியுமடீ! அன்புக் கழிவில்லை காண்
-பாரதி

24.9.12

புலம்பெயர் இலக்கியக்குரல்கள்

புலம் பெயர்ந்து வாழும் ஈழத் தமிழ் எழுத்தாளர்களாகிய
வவுனியூர் உதயணன்[லண்டன்,இங்கிலாந்து],
கலாநிதி ஜீவகுமாரன்[ஹோல்பெக்,டென்மார்க்],
வி.ரி.இளங்கோவன்[பாரீஸ்,ஃப்ரான்ஸ்]ஆகியோரின் படைப்புக்களை தில்லியில் வாழும் இந்திப்பேராசிரியரும்,சாகித்திய அகாதமி பரிசு பெற்ற மொழிபெயர்ப்பாளருமாகிய டாக்டர் ஹெச்.பாலசுப்பிரமணியம் அவர்கள் இந்தியில் மொழியாக்கம் செய்துள்ளார்.

20.9.12

தடை ஓட்டங்கள்

மெரிக்காவிலிருக்கும் மகன் பிரசாதிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது.சம்பிரதாயமான நலம் விசாரிப்புகள்...செய்திகள் முடிந்தபின் கடிதத்தின் ஒரு பகுதி என்னைக் கட்டிப் போடுகிறது.

‘’சமீபத்தில் இங்கிருக்கும் தமிழ்ச்சங்கத்திற்குப் போயிருந்தேன்.அங்கே அறிமுகமான ஒரு தமிழர், நான் உங்கள் மகன் என்பதை அறிந்ததும் ரொம்பவே ஒட்டிக் கொண்டார்.உங்கள் ஒவ்வொரு கதையையும் அணு அணுவாக ரசித்து நுட்பமாக அவர் அலசிய விதத்தைப் பார்த்து எனக்கே கொஞ்சம் வெட்கமாகப்போய்விட்டது...உங்களோடு கூட இருந்த நாட்களில் நீங்கள் எழுதுவதைக் கிண்டல் செய்வதைத் தவிர நான் என்ன செய்திருக்கிறேன்?

19.9.12

’’மேன்மைத் தொழிலில்..’’

விநாயகர் நான்மணிமாலையில் பாரதி வேண்டுவதே இன்று
நம் வேண்டுதலும்....

‘’பக்தி உடையார் காரியத்தில்
  பதறார் மிகுந்த பொறுமையுடன்
  வித்து முளைக்கும் தன்மை போல்
  மெல்லச் செய்து பயன் அடைவர்
  சக்தி தொழிலே அனைத்தும் எனில்
  சார்ந்த நமக்கு சஞ்சலம் ஏன்...
  வித்தைக்கு இறைவா கணநாதா
  மேன்மைத் தொழிலில் பணி எனையே’’

‘’நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்
  இமைப்பொழுதும் சோராதிருத்தல்
  மைந்தன் கணநாதன் நம் குடியை வாழ்விப்பான்
  சிந்தையே இம்மூன்றும் செய்’’


காண்க,இணைப்பு;

பாரதியின் விநாயகர் நான்மணிமாலை...16.9.12

’’யாண்டு பலவாக நரையில ...’’

நன்றி;
பயணம் இதழ்-கட்டுரைத்தொடர்,சங்கப்பாடல்களுக்குள் ஒரு பயணம்-7

பழக்கம் அதிகமின்றிப் பார்த்ததுமே  ஒட்டிக்கொள்ளும் நட்புக்கள் சிலவற்றை உலகியலில் அவ்வப்போது காண முடியும். நம் ரசனையோடும் நம் அலைவரிசையோடும் அவர்கள் ஒத்துப் போகிறார்கள் என்பதை மனம் தானாகவே இனம் கண்டு கொள்வதால் நேர்வதே அது.
மனங்கள் ஒட்டிக் கொள்வதற்கு நெடுநாள் பழக்கம் தேவையில்லை..ஒத்த உணர்வுகள் போதும் என்பதையே‘’புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான் நட்பாங்கிழமை தரும்’’என்கிறது குறள்.ஒருவரை ஒருவர் பார்க்காத நிலையிலும் கொள்ளும் அபூர்வ நட்புக்கள் உண்டு.அவற்றில் ஒன்று சங்கப்புலவர் பிசிராந்தையாருக்கும் கோப்பெஞ்சோழனுக்கும் இடையிலானது. அவன் வடக்கிருந்து[உண்ணா நோன்பிருந்து] உயிர்விடத் துணிந்திருக்கும் நிலையிலும் அவரைக் காண ஏங்குகிறது அவன் மனம்;

12.9.12

இழப்புகள்..எதிர்பார்ப்புகள்...ஸ்கூல் விடுகிற நேரம் இந்த மழைக்கு எப்படித்தான் இவ்வளவு கணக்காகத் தெரிகிறதோ?தினமும் நாலரைக்கு ‘பெல்’அடிக்க வேண்டியதுதான்! என்னவோ தனக்காகவே அது அடிக்கப்படுகிற மாதிரியல்லவா நினைத்துக் கொள்கிறது?

எப்படியோ..கடந்த மூன்று நாட்களாக உமா ஒரு மாதிரி தப்பி விடுகிறாள்.ஒரு நாள் கிருஷ்ண ஜெயந்தியை சாக்குக் காட்டி மூன்று மணிக்கெல்லாம் பர்மிஷன் போட்டாயிற்று.சென்ற இரு நாட்களும் இன்னொரு ஸ்கூலில் ஆசிரியர் கூட்டம் இருந்ததால் இரண்டு மணிகுப் போய்விட்டு நாலு மணிக்கே அங்கிருந்து விடுபட்டு பஸ்ஸ்டாண்டுக்கு வந்து விட முடிந்தது.

10.9.12

தப்பவிடக்கூடாத தமிழ்ச்சிறுகதைகள்-3

                                               பாரதியின் ‘அர்ஜுன சந்தேகம்’’தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’-
 பஞ்ச தந்திரக்கதைப்பாணியில் அமைந்த ‘நவதந்திரக்கதைகள்’, ’சில வேடிக்கைக் கதைகள்’ஆகிய குறுங்கதைகளை எழுதியிருக்கும் மகாகவி பாரதி ஒரு அருமையான கதை சொல்லியும் கூட. தனது முற்றுப்பெறாத  நாவலான ‘சந்திரிகையின் கதை’யில் பெண்ணினத்தின் மீதான ஆவேசக் கரிசனத்தையும்,முழுமை பெறாத தன்வரலாற்றுக்கதை[autobiography]யான ‘சின்னச் சங்கரன் கதை’யில் தன் அங்கதப்புலமையையும் காட்டியிருப்பவன். தாகூரின் வங்கமொழிக்கதைகள் சிலவற்றை பாரதி மொழியாக்கம் செய்ததும் உண்டு. தமிழ்ச்சிறுகதை அரும்பு விடத் தொடங்கிய காலகட்டத்தில் அதன் முன்னோடி முயற்சிகளில் அவனும் பங்கு பெற்றிருக்கிறான் என்பதை எவரும் மறுத்துவிட முடியாது.

11/9/12 பாரதியின் நினைவு நாள் என்பதால் அதை ஒட்டி அவனது கதை ஒன்று...

6.9.12

’தில்லிகை’-செப்டம்பர் நிகழ்வு

                                                         செப்டம்பர் மாதக் கூட்டம் ,
8- 9-2012, இரண்டாம் சனிக்கிழமை, மாலை சரியாக 3 மணிக்கு நிகழவிருக்கிறது.


இடம்;தில்லித் தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புது தில்லி. [பாரதிஅரங்கம்]

தமிழ்ச்சிறுகதைகளைப் பொருளாகக் கொண்டு நிகழும் இந்த இலக்கிய 

அரங்கிற்கு வருகை தரவும், தொடர்ந்து நிகழும் கலந்துரையாடலில் 

பங்கேற்கவும் 

தில்லி தமிழ் ஆர்வலர்களை தில்லிகை இலக்கிய வட்டம் அன்புடன் 

வரவேற்கிறது.


5.9.12

என் ஆசிரியர்கள்..


மூன்றுதலைமுறைகளாக ஆசிரியப்பணியில் ஊறியது எங்கள் குடும்பம்.
என் தாய் வழித் தாத்தா சென்னை பச்சையப்பன் கல்லூரியின் வேதியல்துறைப்பேராசிரியராக 1915 காலகட்டத்தில் பணியாற்றியவர்.என் தாய் காரைக்குடி எம்.எஸ்.எம்.எம்.மீனாட்சி பெண்கள் பள்ளியில் 30 ஆண்டுகளுக்கும் மேல் தலைமை ஆசிரியையாக இருந்தவர்.நான் மதுரை பாத்திமாவில் தமிழ்த்துறைப்பேராசிரியராக இருந்தது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.என் மகள் மட்டும் அரசு அதிகாரியாகிக் குடும்பப்பாரம்பரியத்தைச் சற்று திசை மாற்றி விட்டாள்.ஆனால் அவளும் கூட ஒரு குறுகிய கால இடைவெளியில் கல்லூரி ஆசிரியராகப்பணி புரிந்ததுண்டு.

3.9.12

’’கங்கையின் முழக்கம்..’’


பழகியவர்களைத் தவிர மற்றவர்களுக்கு அதிகம் அறிமுகம் ஆகியிராத குறிப்பிடத்தகுந்த ஆளுமை கொண்ட ஒரு பெண்மணியின் வாழ்க்கையை - வரலாறாக அல்லாமல்-நாவலாக ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.அது சார்ந்த தொடர் சிந்தனைகளுக்கான தனிமை நாடிக் கடந்த வார விடுமுறையில் இரு நாட்கள் ரிஷிகேசம் சென்றிருந்தேன்.

இதற்கு முன்பே நான்கு ஐந்து முறை ரிஷிகேசம் சென்றிருப்பதால் சுற்றிப்பார்ப்பது இப்போது நோக்கமாக இல்லை.
முற்றிலும் தனிமை....கவனச் சிதறலில்லாத தனிமை மட்டுமே தேவையாக இருந்ததால் மடிக்கணினியோ,புகைப்படக் கருவியோ கூடக் கொண்டு செல்லவில்லை.ஊருக்குள் சென்று கூட்டத்துக்குள் கலக்கவும் விருப்பமில்லை.

தயானந்த ஆசிரமத்துக்கு அருகே காரைக்குடி நகரத்தாரால் நடத்தப்படும் கோவிலூர் வேதாந்த மடம் ஒன்று இருக்கிறது;அதை நிர்வகிக்கும் பெண்மணி முன்பு காரைக்குடியில் என் அம்மாவின் மாணவியாக இருந்தவர் என்பதால் அவர் உதவியுடன் அறை ஒழுங்கு செய்து கொண்டேன்...வேளா வேளைக்கு எளிமையான உணவு, கங்கைக்கரையில் அமர்ந்தபடி தூய காற்றை நுகர்ந்தபடி மனதுக்குள் நாவலைத் துழாவுதல் ,கரையோரமாகவே நீண்ட நடை என்று பொழுது கழிந்தது.

மடத்தில் தங்கியிருந்த பயணிகள் சிலர், கால்போன போக்கில் திரியும் சில ‘பண்டா’[சந்நியாசி]களை அழைத்து வந்து பூஜை செய்வித்து அவர்களுக்குத் தங்கள் செலவில் உணவு படைத்ததோடு உடைமைகளையே துறந்த அவர்களுக்குச் சாப்பிடும் தட்டு,குடிக்க ஒரு டம்ளர்,குளிர்காலம் நெருங்கி வருவதால் ஒரு ஜமக்காளம்,போர்வையாகச் சிறிய மெத்தை ஆகியவற்றைக் கொடுத்து அவர்களை வணங்கி ஆசி பெறுவதைக் காண முடிந்தது.அந்தப்பகுதியில் நிலவி வரும் ஒரு மரபாக இது இருந்து கொண்டிருக்கிறது...என்னதான் அனைத்தையும் துறந்து விட்டாலும் வடநாட்டுக் கடுங்குளிரைத் தாக்குப்பிடிக்க வேண்டுமல்லவா..?

கோவிலூர் மடத்துக்கு மிக அருகிலேயே -சிறு கோயிலுடன் [சுவாமி நாராயண்] கூடிய குஜராத்தி ஆசிரமம் ஒன்றை ஒட்டினாற்போலக் கூட்டம் அதிகம் இல்லாத நீண்ட கங்கைப்படித்துறை ஒன்றைக் கண்டு கொண்டேன்... காலை எழுந்து காபி அருந்தியதும் அங்கே போய் உட்கார்ந்து விடுவேன். இம்முறை கங்கை பிரவாகமாகப்பெருக்கெடுத்து நுங்கும் நுரையுமாய்ச் சுழித்தபடி பேரிரைச்சலோடு ஓடிக்கொண்டிருந்தது. கங்கையின் காட்சியழகு...பல பயணங்களில் பலமுறை என்னைக் கவர்ந்து கட்டிப்போட்ட ஒன்றுதான்...ஆனால்,அதன் குரல்  கேட்க என் செவிப்புலன்கள்...கூர்மை கொண்டது இந்தப்பயணத்திலேதான்...கையில் கேமரா இல்லாதது கூட அதற்கு ஒரு காரணமாயிருக்கலாம். மேலே உள்ள படி ஒன்றில் உட்கார்ந்து நாவலுக்கான குறிப்பெடுத்துக் கொண்டே அந்தக் காட்சியிலும்  அந்த ஓசையிலும்  மட்டுமே லயித்தபடி...இருந்தது அற்புதமான பேரனுபவமாக இருந்தது. தொடர்ந்து இரண்டு நாட்கள் கங்கையில் நீராடியதும்தான்.

‘’கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது..’’என்ற எனக்கு மிகவும் பிடித்தமான கண்ணதாசனின் வரிகள்[’அவர்கள்’]எஸ்.ஜானகியின் குரலில்...தொடர்ந்து மனதுக்குள் ஓடிக்கொண்டே இருந்தன...ஆம்...கட்டற்றுப் பெருகி வரும் அந்த நீர்ப்பாய்ச்சலை எந்தச் சிமிழுக்குள்ளும் அடக்கிவிட முடியாதுதான்...
வடநாட்டுப் பெண்களுக்கு கங்கா மாதாவின் மீதுள்ள வெறித்தனமான பக்தியும் பற்றும் பிடிப்பும் சொல்லுக்கு அடங்காதவை. அந்தப் பகுதிகளில் அவர்கள் செய்யும் வழிபாடுகளில் பிற தெய்வங்களுக்கான இடம் மிகக்குறைவானதே..அவர்களின் முதன்மையான பூஜை கங்கா மாதாவை நோக்கியதே. அடை மழை பெய்து கொண்டிருக்கும்போதும் கூட தவம் போன்ற தன் வழிபாட்டைக் கலைத்துக் கொள்ளாமல் கங்கைப்படித்துறையில் அசையாமல் உட்கார்ந்திருந்த ஒரு வடநாட்டுப் பெண்பயணி என்னை வியப்பில் ஆழ்த்தினார்.விளக்கு ஆரத்தி எடுத்து மலர்கள் தூவியபடி தங்கள் அன்பை... ஒட்டுதலை இயன்ற வழிகளிலெல்லாம் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள் அந்தப்பெண்கள்.

கல்லும் கசடுமாய் எதைஎதையோ அடித்துச் சுமந்து கொண்டு வந்தாலும் கங்கையின் தூய்மையும் புனிதமும் கெடாதது போலவே நெஞ்சில் எத்தனையோ பாரங்களைச் சுமந்து கொண்டிருந்தாலும் அவற்றைக் கண்டுகொள்ளாமல்... வாழ்க்கை ஓட்டத்தில் தொடர்ந்து ஓடியபடி -பிறரையும் ஓட வைத்துக் கொண்டிருக்கும் தங்களைப்போலவே இந்த கங்கையும் இருப்பதனால்தான் அந்தப் பெண்களுக்கு அதன் மீது இத்தனை  ஒட்டுதலோ என்று கூடத் தோன்றியது.....

பிரிய மனமே வராமல் கங்கையிடமிருந்து நான் விடை பெற்றுப்பிரிந்து பேருந்துப்பயணத்தைத் தொடங்கியபோது ....தொலைவில் தெரிந்த ஆற்றங்கரை மணலுக்குள் காந்தம் வைத்துக் காசு தேடிக்கொண்டிருந்த  சில சிறுவர்கள் மங்கலாகத் தென்பட்டுக் கொண்டிருக்க...காதுகளுக்குள் கங்கையின் முழக்கம் மட்டுமே தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

பி.கு.;நான் புகைப்படம் எடுக்காத குறை போக்க கூகிளின் உபயத்தால் சிலவற்றைச் சேர்த்திருக்கிறேன்.

தொடர்புள்ள இணைப்பு;
2006இல் நான் ஹரித்துவார்-ரிஷிகேசம் சென்றபோது பெற்ற அனுபவத்தை ஒட்டி எழுதிய சிறுகதை
காசு...

2.9.12

முதல் சபதம்

’’வானப்பிரஸ்த நிலை...அதையும் மீறிய சமூகப்பணி எனக் குடும்ப அமைப்பைத் துறந்து பெண் வெளியேறும் முதல் கலகக் குரலாய் -18,19ஆம் நூற்றாண்டின் காலச் சூழலில் ஒலித்திருப்பது சத்தியவதியின் குரல் என்பதால் இதை முதல் சபதமாக்கியிருக்கிறார் ஆஷாபூர்ணாதேவி.’’

இந்தியமொழி நாவல்களில் மராத்தியின் காண்டேகர்,மலையாளத்தின்தகழி,மற்றும் எம்.டி.வாசுதேவன் நாயர்,கன்னடத்தின் சிவராம் காரந்த் ஆகியோரின் படைப்புக்கள் சிறப்பிடம் பெறுவது போலவே வங்க எழுத்தாளர்களின் பலப்பல ஆக்கங்களும் தவற விடாமல் படித்தாக வேண்டிய பட்டியலில் இடம்பெறக்கூடியவை. அதீன் பந்தோபாத்யாயாவின் ’நீலகண்டப்பறவையைத் தேடி...’,மஹாஸ்வேதா தேவியின் ’1084இன் அம்மா’ என்று வளரும் அந்த  வரிசையில் ஆஷாபூர்ணாதேவியின் ஞான பீட பரிசு பெற்ற நாவலான  ’பிரதமபிரதி சுருதி’என்னும் நாவலுக்கும் தனித்த ஓரிடம் உண்டு. தமிழில் புவனா நடராசனின் மொழியாக்கத்தில் ’முதல் சபதம்’ என்ற பெயருடன் சந்தியா பதிப்பக வெளியீடாகக் கிடைக்கும் இந்த நாவலைக் கட்டாயம் படித்தாக வேண்டும் என்ற என் நெடுநாள் விருப்பத்தை அண்மையில் நிறைவு செய்து கொண்டேன்.


வங்காள கிராமங்களிலுள்ள அந்தணக் கூட்டுக்குடும்ப வாழ்க்கைப் பின்னணியில் அதன் இறுக்கமான ஆசாரங்கள்,விசாலமான உலகப்பார்வையின்மை ஆகியவற்றை சத்தியவதி என்னும் சிறுமியின் நோக்கில் விரிவாக முன் வைக்கும் இந்தப்படைப்பின் காலமும் களமும் பழையவை என்றாலும் அது முன் வைக்கும் கேள்விகள் பலவும் இன்றைக்கும் செல்லுபடியாகக் கூடியவையே....எதிர்க்கேள்வி கேட்காமலே பழகிப்போய் விட்ட அடிமைப்புத்தியின் அறியாமையால் ஆண்களையும் பெண்களையும் பிணைத்திருக்கும் மூடக்கட்டுகளிலிருந்து தான் வெளியேறுவதோடு தான் அன்பு செய்யும் -தன்னைச் சார்ந்த அனைவரையும் வெளியேற்ற சத்தியவதி மேற்கொள்ளும் முயற்சிகளும்,அதில் அவள் எதிர்ப்பட நேரும் தடைகளுமே இந்த 870 பக்க நாவலாக உருப்பெற்றிருக்கின்றன.

பாலியமணமும்,அதன் விளைவான விதவைக்கொடுமைகளும் இன்று நமக்குப் பழங்கதைகளாக இருக்கலாம்.ஆனால் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் அதன் கடுமையான தாக்கங்கள் பெண் வாழ்வைச்சூனியமாக்கி இருட்டறையில் அவளை முடக்கி வைத்திருந்த கொடுமையை ராமகிருஷ்ண பரமஹம்ஸர்,ராஜாராம் மோகன்ராய் ஆகியோர் வாழ்ந்த காலச்சூழலைப் பின்புலமாக்கி விளக்கமான தகவல்களுடன் முன் வைக்கிறது நாவல்.

தன் துறையில் மட்டுமல்லாமல் பரந்த உலகியல் அறிவும் அனுபவமும் பெற்று,ஊர் மக்களின் மதிப்பைப்பெற்றிருக்கும் பண்டிதரும் மருத்துவருமான  ராம்காளி  சாட்டர்ஜியின் மிகப்பெரிய கூட்டுக்குடும்பம் ; அங்கே திரும்பிய திசைகளிலெல்லாம் அத்தைகளாக பாட்டிகளாக இன்னும் பல உறவுப் பெண்களாக நிறைந்து வழியும் விதவைகள். அவர்களில் மரண வாயிலில் நிற்கும் மூத்த பெண்கள்,தற்கொலைக்கும்,பிற வகை உறவுக்கும் முயலும் பதின்பருவத்துப் பெண்கள், உடல் என்ற பூதத்துக்கு வேலை தரா விட்டால் அது வேறுவகையாகத் திசை திரும்பி விடும்  என்பதற்காகவே  ‘மாவடு சீஸன்’,’மாம்பழ ஜாம் சீஸன்’,’துர்க்கா பூஜை’க்கான பலவகைப் பலகாரங்கள் செய்யும் சீஸன்,வடகம்,வற்றல் செய்யும் சீஸன் [அம்பையின் வீட்டின் மூலையில் ஒரு சமையலறையை நினைவுபடுத்துவது இது] என்று ‘வருடம் முழுவதும் வெயிலில் காய்ந்து செத்துக் கொண்டிருக்கும் மோக்‌ஷதா அத்தையைப் போன்ற நடுவயதுப் பெண்கள்...எனப் பல வயதினரும் உண்டு.

விதவையல்லாத பிற பெண்களும் வீடே வாழ்க்கையாய்க் கொண்டு பழகிப்போனவர்கள்.கல்வி பெற வேண்டுமென்ற வேட்கையைத் தூண்டும் சுய சிந்தனை மழுங்கடிக்கப்பட்டு மரபின் தடத்தில் மட்டுமே நடை போடப்பழகியவர்கள்;அதற்குச் சற்று மாறான மிக இலேசான எதிர்க்குரலையும் கூடத் தாங்க முடியாதவர்கள்.

ஆனால்...அந்தப்பெண்களின் அவர்களின் உணர்வுகள்,ஆழ்மன விருப்பங்கள் ஆகியவற்றைக் கணக்கிலெடுக்க எவருக்குமே நேரமில்லை;யாருக்கும் அது பற்றித் தோன்றுவதுமில்லை. ஆனால்...வாய்ப்புக் கிடைக்கும் நேரத்திலெல்லாம் மிகப்பெரும் மேதையான தன் தந்தைக்கு-அவரது மனச்சாட்சியைப் போல இதை உணர்த்திக் கொண்டே இருக்கிறாள் எட்டு வயதில் இளமை மணம் செய்விக்கப்பட்ட அவரது ஒரே மகள் சத்தியவதி.

தன் பெயருக்கேற்றபடியே உண்மையைத் தவிர அவளிடம் வேறு ஏதுமில்லை. அங்கு பின்பற்றப்படும் மரபுகள் சார்ந்த ஏராளமான கேள்விகள்,ஐயங்கள் அவளுக்குள் மண்டிக்கிடந்தபோதும் அவற்றோடு கூடவே பெரியவர்களை மதிப்பது,மரபு வழிக் கடமைகளையும் நியமங்களையும் தவறாமல் செய்வது என்று இன்னொரு பக்கம் அவள் இயங்கிக்கொண்டே இருக்கிறாள்.
இருந்தபோதும் தன் மனதுக்கு நியாயம் என்று பட்டதைச் செய்ய அவளிடம் தயக்கம் எதுவும் இல்லை;அது பற்றிய எவர் அனுமதியும் அவளுக்குத்தேவைப்படவும் இல்லை. கல்வியின் கடவுளாய்ச் சரஸ்வதியைச் சொல்லி விட்டுக் கையில் ஏட்டைத் தொட்டாலே பாவம் எனச் சொல்லும் முரண்பாட்டை மதிக்காமல் இரகசியமாகத் தானே படித்துக் கொண்டு,பாட்டுக்கள் இட்டுக்கட்டுவதோடு, பிறருக்குப் படிப்பிக்கும் திறனையும் பெறுகிறாள் சத்தியவதி.

தன் புகுந்த வீடு சென்றபின்,மாமனார் மாமியாருக்குச் செய்ய வேண்டிய பணிகளில் மரியாதை காட்டினாலும் மாமனாரின் தவறான சில நடத்தைகளை அறிந்த பின் அவரை வணங்க உறுதியாக மறுத்து விடுகிறது அவள் மனம்.கடுமையான சுரத்தோடு போராடும் கணவனின் உயிரைக் காக்க முடியாமல் நாட்டுப்புற மருத்துவம் தடுமாறும் கட்டத்தில், ஆங்கில மருத்துவரைக் கூட்டி வருவதற்கு அந்தக்கூட்டுக் குடும்பச்சூழலில் யார் அனுமதியும் அவளுக்குத் தேவையாக இருக்கவில்லை.’உட்கார்ந்து சாப்பிடலாம்’என்ற மேட்டிமையான எண்ணத்தைப் போக்கி சுய அறிவு பெற்ற ‘மனிதர்களாக’ஆக்குவதற்காகவே ஓரளவு படித்திருக்கும் தன் கணவனையும்,குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு கல்கத்தாவுக்குக் குடிபெயர்கிறாள் அவள்.அந்தக் காலச் சூழலில்-தனிக்குடித்தனம் என்பதே ஒரு அத்து மீறலென்று கருதப்பட்ட காலகட்டத்தில் தான் செய்வது சரியானதே என்ற திடமான நம்பிக்கை அவளிடம் இருக்கிறது.

கல்கத்தா சென்றதும் அவள் பார்வை குடும்ப எல்லையைத் தாண்டி மேலும் விரிவு பெறுகிறது.தன் ஓய்வு நேரத்தில் அங்குள்ள பெண்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கத் தொடங்குகிறாள்.பிரம்ம சமாஜ நடவடிக்கைகளோடு தொடர்பு வைத்துக் கொள்கிறாள்.முதலில்,அவள் கணவன்சற்று எதிர்த்தாலும் அவள் செயல்களிலுள்ள நியாயங்கள்  அவற்றுக்கு மறுப்புச் சொல்ல முடியாதபடி செய்து விடுகின்றன.

நாளுக்கு நாள் அவள் மனம் சமூகத்தை நோக்கி விரிவாகிக் கொண்டே வருகிறது.பாலியமணம் செய்து வைக்கப்பட்ட ஒரு குழந்தை மாமனார் மாமியாரால் நசுக்கிக் கொல்லப்பட்டது என்ற உண்மையைக் கேள்விப்பட்டதும் அவள் உள்ளம் அந்தக் குழந்தைக்காக மட்டுமன்றி ஊரிலுள்ள அத்தனை பெண் குழந்தைகளுக்காகவும் துடிக்கிறது.அதிர்ச்சியில் உறைந்து போய்க் காய்ச்சலின் பிடியில் சிக்கும் நிலையில் தன் ஒரே பெண் குழந்தையைப் பதினாறு வயது வருவதற்கு முன் திருமணம் செய்து விடக்கூடாது என்ற ஒரே ஒரு சத்தியத்தை மட்டும் உறுதியாகத் தருமாறு கணவனிடம் யாசிக்கிறாள்;அன்றைய சூழலில் அது பிறரின் பரிகாசத்துக்குரியதாகவே இருக்கிறது.அவள் ஏதோ ஜுர வேகத்தில் பிதற்றுவதாக எண்ணி அப்போதைக்கு அரை மனதாக அதற்கு சம்மதமளிக்கிறாண் அவள் கணவன்.

ஆனால்...அந்த எல்லையையும் தாண்டிச் சென்று நசுக்கிக்கொலை செய்யப்பட்ட குழந்தையின் சார்பில் காவல் துறையிடம் புகார் தரும் அளவு அவள் துணிந்து விடுவதில் அவளால் மனிதர்களாக்கப்பட்ட அவளது மகன்களுக்கே ஒப்புதலில்லை; தங்கள் குடும்பம் வீண் வம்பில் சிக்கிக் கொள்ளத் தேவையில்லை என நினைக்கும் அவர்களை-அந்தக் கட்டம் முதல் சத்தியவதி அந்நியர்களாக உணரத் தொடங்குகிறாள்.

தன் கடமைகளையெல்லாம் நிறைவு செய்து விட்டுக் காசியில் போய்த் தங்கியிருக்கும் தந்தையுடன் சில நாட்கள் தங்கி வரும் விருப்பம் அவளுக்கு ஏற்பட்டாலும் மகள் ஸ்வர்ணத்தின் படிப்பு பாதிக்கப்படலாகாது என்று அந்த எண்ணத்தை அவள் விலக்கிக் கொண்டு விடுகிறாள்.

மூத்த மகனின் திருமணம் முடிவாகிறது;அதற்கான ஏற்பாடு செய்ய விடுப்பில் செல்லும் கணவன் கோடை விடுமுறையில் இருக்கும் மகளையும் உடனழைத்துச் செல்கிறான்....

காலமெல்லாம் எந்தக் கொடுமைக்கு எதிரான கொந்தளிப்பு சத்தியவதியிடம் இருந்ததோ....அந்தக் கொடுமை அந்தக் கட்டத்தில் அவள் வீட்டிலேயே நடந்து விடுகிறது. இத்தனை காலமாய்த் தன் சொல் கேட்காமல் தன்னிச்சையாக நடந்து வந்த சத்தியவதியை எந்த வகையிலாவது புண்படுத்தத் துடிக்கும் தன் தாயின் தூண்டுதலுக்கு ஆளாகும்  சத்தியவதியின்கணவன், மனைவிக்குக் கொடுத்த வாக்கையும் மீறிக் கொண்டு தன் மகளுக்கு பாலியமணம் செய்து வைத்து விடுகிறான்.சத்தியவதியின் அனுமதியில்லாமல்....அவளுக்குச் செய்தி கூடத் தெரிவிக்காமல் நடந்து முடிந்து விடும் இந்தத் திருமணத்துக்குக் காலம் தாழ்ந்து வரும் சத்தியவதியால் அந்தத் தோல்வியைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.எதிலும் தோற்றுப்போவதில் விருப்பமில்லாத ...எந்த விஷயத்திலும் தோல்வியை ஒப்புக்கொள்ளாத அவளுக்கு இது பலத்த அடியாகிறது.

தன் குடும்பமும் தன்னால் மனிதனாக்கப்பட்ட தன் கணவனுமே இழைத்து விட்ட அநீதியைப் பொறுக்கும் மனநிலை அவளிடம் இல்லை...அந்த வீட்டுக்குள் நுழைந்து கல்யாணக் கோலத்திலிருக்கும் தன் செல்ல மகளுக்கு ஆசிகள் கூட வழங்காமல்- தான் ஊன்றி நின்ற குடும்ப அமைப்பை அந்த நொடியிலேயே துறந்து, தான் வந்த வண்டியிலேயே திரும்பிச் செல்கிறாள் அவள்..பெண்களுக்குக் கல்வி கற்பிக்கும் பணி செய்து அந்த வருமானத்தில் தன் காலில் சுயமாக நின்று கொள்வதென்ற இறுதிமுடிவொன்றையும் எடுக்கிறாள்..

 செய்த தவறுக்காக கணவன்..மாமியார் என எல்லோரும் அவளிடம் இறைஞ்சியும் அவள் முடிவில்- அவள் செய்திருக்கும் சபதத்தில் எந்த மாற்றமுமில்லை.ஆனாலும்..தன் வேலையைத் தொடங்குவதற்கு முன்னால் தந்தையிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டிய சந்தேகங்கள்..கேள்விகள் அவளிடம் நிறைய எஞ்சியிருக்கின்றன.
ஒரு முறை தந்தையிடம் கேட்டபோது,
‘’வாழ்க்கையைப்பற்றி இந்த நிமிடத்தில்  இப்பொழுதே பேசி முடித்து விட முடியுமா சத்தி...வாழ்க்கை என்பது குகையின் அந்தகாரம் போல’’
என்கிறார் அவர்.அவற்றை மீண்டும் சுமந்தபடி முதலில் காசியை நோக்கிப் பயணமாகிறாள் அவள்.

வானப்பிரஸ்த நிலை...அதையும் மீறிய சமூகப்பணி எனக் குடும்ப அமைப்பைத் துறந்து பெண் வெளியேறும் முதல் கலகக் குரலாய் -18,19ஆம் நூற்றாண்டின் காலச் சூழலில் ஒலித்திருப்பது சத்தியவதியின் குரல் என்பதால் இதை முதல் சபதமாக்கியிருக்கிறார் ஆஷாபூர்ணாதேவி. நாவலின் முடிவு ராஜம் கிருஷ்ணனின் ‘வீடு’நாவலை நினைவூட்டினாலும் குறிப்பிட்ட இந்த நாவல் பின்புலத்தின் காலகட்டத்தில் இவ்வாறான ஒரு முடிவு நம்மை பிரமிக்க வைக்கிறது.
இந்த நாவலைத் தொடர்ந்து சத்தியவதியின் மகள் ஸ்வர்ணத்தின் கதை,பின்பு அவள் மகள் பகுளின் கதை என இதைத் தொடர்ந்து 2 நாவல்களும் வந்திருப்பதை அறிய முடிந்தாலும்[பதேர் பாஞ்சாலியின் தொடர்ச்சியாக மேலும் இரு கதைகள் தொடர்ந்தது போல] தமிழில் இப்போதைக்குக் கிடைப்பது இந்த ஒரு நாவல் மட்டுமே...

தொடர்புள்ள இணைப்புகள்;
ரீபில் தீர்ந்து போன பால் பேனா

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழில் மறுமொழி பதிக்க உதவிக்கு....