11.9.10
பாரதியின் விநாயகர் நான்மணிமாலை
பாரதியின் நினைவு நாளில்....
பாரதியின் விநாயகர் நான்மணிமாலை ,தோத்திரப் பாடல் வரிசையில் சேர்க்கப்பட்டிருந்தாலும்.....தோத்திரப் பாக்களின் சில கூறுகள் அதில் தென்பட்டாலும் முழுக்க முழுக்கத் தோத்திரத் தன்மை கொண்டதென்று அதைக் கூறிவிட முடியாது.
கணபதிராயனின் காலைப் பிடித்தாலும்,கண்ணனை உச்சி மீது வைத்துக் கொண்டாடினாலும்,காளியின் காலடியில் தவமாய்த் தவம் கிடந்தாலும் ’ஒன்றே பரம்பொருள்’ என்ற தீர்க்கமும் தெளிவும் பெற்றவன் பாரதி
.
அந்த அக ஒளி.., விநாயகர் நான்மணிமாலை பாடும்போதும் அவனுக்குச் சித்தியாவதாலேயே விநாயகக் கடவுள் என்ற ஒற்றை உருவத்துக்குள் பன்முகத் தன்மை வாய்ந்த பற்பல தெய்வங்களையும்
‘’விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்
நாராயணனாய் நதிச்சடை முடியனாய்
பிற நாட்டிருப்போர் பெயர் பல கூறி
அல்லா!யெஹோவா!எனத் தொழுதன்புறும்
தேவருந்தானாய் திருமகள் பாரதி
உமையெனும் தேவியர் உகந்த வான் பொருளாய்
உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்’’
என அவனால் ஒருசேரத் தரிசிக்க முடிகிறது.
தனக்குத்தானே ஊக்கம் தந்து கொள்ளும் auto suggestion பாணியிலும் இதிலுள்ள பாக்களை வடிவமைத்திருக்கிறான் பாரதி.
‘’மேவி மேவித் துயரில் வீழ்வாய்
எத்தனை கூறியும் விடுதலைக்கிசையாய்
பாவி நெஞ்சே..’’
‘’மூட நெஞ்சே முப்பது கோடி
முறை உனக்குரைத்தேன் இன்னும் மொழிவேன்
தலையில் இடி விழுந்தால் சஞ்சலப்படாதே
ஏது நிகழினும் நமக்கென் என்றிரு
பராசக்தி உளத்தின்படி உலகம் நிகழும்’’
.ஆகிய பல வரிகளில் அவனது ஆத்மாவின் அலைக்கழிவுகளும் அதிலிருந்து மீட்சி பெற அவன் படும் பாடுகளும் மிக வெளிப்படையாகவே பதிவாகி இருக்கின்றன.
தான் வாழ்ந்த ஒவ்வொரு கணத்திலும் ஒரு சமூக மனிதனாக மட்டுமே வாழ்ந்து தன் வாழ்வை அர்த்தப்படுத்திக்கொண்ட பாரதி , இந்தக் கவிதையிலும் பிறர் பேசாப் பொருளைப் பேசவும்,பிறர் கேட்கா வரத்தைக் கேட்கவுமே துணிகிறான்.
மண் மீது வாழும் மக்கள்,பறவைகள்,விலங்குகள்,பூச்சிகள்,புற்பூண்டு,மரங்கள் இவை அனைத்தும் துன்பமின்றி அன்புடன் இணங்கி வாழவேண்டுமென்ற வரத்தோடு மட்டும் அவன் நிறைவுறவில்லை.
ஆகாயத்தின் நடுவிலே நின்றபடி....
’’பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக! துன்பமும் மிடிமையும் நோவும்
சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
இன்புற்று வாழ்க’’
தான் அறை கூவ வேண்டுமென்றும்
அதைக் கேட்கும் எங்குமுள்ள பரம்பொருள்
‘’திரு உளம் இரங்கி
அங்ஙனே ஆகுக’’
என்று வழி மொழிய வேண்டுமென்றும் பேராவல் கொள்கிறது மண் பயனுற விழையும் அந்த மாகவியின் உள்ளம்.
‘’நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்
இமைப்பொழுதும் சோராதிருத்தல்’’
என்ற பாரதியின் வரிகள் மிகவும் பிரபலமானவை; பரவலாக அனைவரையும் சென்று சேர்ந்திருப்பவை.
அந்த வரிகளும் கூட உள்ளடங்கியிருப்பது
விநாயகர் நான்மணிமாலையிலேதான் என்பது பலருக்கும் ஒரு புதுத் தகவலாகக் கூட இருக்க வாய்ப்பிருகிறது.
இலக்கிய..தத்துவ தளங்களில் பல ஆழமான அர்த்தப் பரிமாணங்களைக் கண்டடைவதற்கான வாயிலைத் தனது விநாயகர் நான்மணிமாலையின் வழி திறந்து வைத்துவிட்டுப் போயிருக்கிறான் பாரதி. வெறும் தோத்திரமாக மட்டும் முணுமுணுத்துவிட்டுப் போகாமல் ஆழமாக அசைபோட்டு உள் வாங்கினால் மட்டுமே நம்மால் அதை இனங்காண இயலும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)
1 கருத்து :
பல தகவல்களும், சிறந்த இலக்கிய விமர்சனமும் கொண்டுள்ள இந்த அருமையான கட்டுரை தந்தமைக்கு மிக்க நன்றி. தேடல் தான் சிறந்த கவிதைகளின் குணமே தவிர a system of fossilised beliefs அல்ல. விநாயகர் பற்றிய கவிதையில்கூட பாரதியின் 'உண்மைத் தேடல்' எவ்வாறு தொடர்கிறது என்பதனை அருமையாகக் காட்டியுள்ளீர். வாழ்த்துக்கள்
கருத்துரையிடுக